இளையர் அறிவியல் களஞ்சியம்/விமான தளம்
பேருந்துகள் வந்து செல்ல பேருந்து நிலையம் இருப்பதுபோன்று, ரயில்கள் வந்து செல்ல ரயில் நிலையம் உள்ளது போல் விமானங்கள் வந்து செல்ல விமான நிலையங்கள் அமைந்துள்ளன. ஆனால், மற்ற வாகன நிலையங்களுக்கும் விமான நிலையங்களுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. பேருந்துகளும், ரயில்களும் தரையில் மட்டுமே ஊர்வனவாகும். ஆனால், விமானங்கள் வானில் பறந்து செல்வனவாகும். எனவே, விமான தளங்கள், விமானங்கள் தரையில் இறங்கியவுடன் நீண்டதுாரம் ஓடி நிற்கும் தன்மையுடையன. அவ்வாறே, ஏறும்போது நீண்டதூரம் தரையில் ஓடி வானில் பறக்கும் இயல்புடையன. எனவே, மற்ற நிலையங்களைவிட விமான தளங்கள் நீண்ட நிலப் பரப்புடையனவாக உள்ளன.
விமான தளங்கள் பலவகை அளவுள்ள சிறிய பெரிய விமானங்கள் எளிதாக இறங்கி ஏறிச் செல்ல வசதியாக நகரங்களுக்குச் சற்று வெளியே அமைக்கப்படுகின்றன. அங்கு எல்லா வசதிகளும் அமைந்திருக்கும். உலகிலுள்ள நகரங்கள் அனைத்திலும் விமான தளங்கள் அமைந்துள்ளன. சில பெரிய நகரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட விமான தளங்கள் அமைந்திருக்கும். இவைகளின் வழியாக உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்லும்.
சாதாரணமாக விமான தளங்கள் சமதளமான சமவெளிப் பகுதிகளிலேயே அமைந்திருக்கும். மலைகளோ குன்றுகளோ அருகில் இருக்கக் கூடாது; சாதாரணமாக காற்று வீசும் திசைக்கு எதிர்த்திசையில் விமானம் இறங்கவோ அல்லது ஏறவோ வேண்டியிருப்பதால் காற்று வீசும் போக்கை அனுசரித்து விமான தளங்கள் அமைக்கப்படுகின்றன.
விமானங்கள் இறங்கும்போது நீண்டதுாரம் ஓடியே வானில் எழும்பிப் பறக்க வேண்டியிருப்பதாலும் இதற்கென தனித்தன்மையுடையனவாக ஓடுபாதைகள் (Runway) அமைக்கப்படுகின்றன. ஏராளமான விமானங்கள் ஓட வேண்டியிருப்பதால் இவ்வோடு பாதைகள் மிகவும் கெட்டியாக அமைக்கப்படுகின்றன. அதுவும் காற்றடிக்கும் திசைக்கு எதிர்த்திசையை நோக்கி அமைக்கப்படுகின்றன. நீளமாக இருப்பதோடு அகலமாகவும் இவ்வோடு பாதைகள் பெரும்பாலும் கான்கிரீட்டினாலேயே அமைக்கப்படுகின்றன. சில விமானதளங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட விமான ஓடு பாதைகள் இருக்கும்.
விமானங்கள் பகலிலும் இரவிலும் வந்து செல்கின்றன. இரவில் இறங்கி, ஏறும் விமானங்கள் எளிதாக ஓடு பாதையை அறியும் வகையில் ஓடுபாதை நெடுகிலும் இரு மருங்குகளிலும் பளிச்சிடும் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும். எனினும் ஓடு பாதை முழுவதிலும் ஒரேவித வண்ண விளக்குகள் எரிவதில்லை. எந்த இடத்தில் எவ்வகை வண்ண விளக்கு ஒளிர வேண்டும் என்பதற்கு தனி விதிமுறைகள் உண்டு. இவ்விதிமுறைகள் சர்வதேச அளவில் அமைந்துள்ளன.
இதேபோன்று தரை இறங்கவரும் விமானம் தளம் எங்கே உள்ளது என்பதை எளிதாக அறியும்வண்ணம் விமான தளத்தில் உள்ள உயரமான கட்டிடத்தின் உச்சிப் பகுதியில் சுழலும் ஒளி மிகுந்த விளக்கொன்று பொருத் தப்பட்டிருக்கும். கடலில் மிதக்கும் கப்பல்களுக்குக் கரைகாட்டும் கலங்கரை விளக்கம் போன்று, இச்சுழல் விளக்குகள் விமான தளத்தைக் காட்டுகின்றன.
காற்றின் போக்கும் வானிலையும் விமான இயக்கத்திற்கு இன்றியமையாதனவாதலின் ஒவ்வொரு விமான தளத்திலும் வானிலை ஆய்வு மையம் ஒன்று அமைந்திருக்கும். இறங்க அல்லது ஏற முனையும் விமானிகளுக்கு வானிலையைமுன்கூட்டியே அறிவிப்பதால் எதிர்பாராத விபத்துக்கள் மோசமான வானிலையால் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.
சாதாரணமாகச் சாலைப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் காவலர் இயங்குவதை சாலைச் சந்திப்புகளில் பார்த்திருக்கலாம். இதே போன்று விமான தளங்களில் வந்து இறங்க விழையும் விமானிகளையும் ஏற முனையும் விமானிகளையும் முன்னதாக செய்தி தந்து, எப்போது இறங்க வேண்டும். எப்போது ஏற வேண்டும், என்பதை அறிவுறுத்தும் அமைப்பு ஒன்று உண்டு. இது 'போக்குவரத்துக் கட்டுப்பாட்டு’ அமைப்பாகும் (Control Tower). இதனை விமான தளத்தின் உயிர் மூச்சு என்று கூடக் கூறலாம். இங்குள்ள அலுவலர்கள் விமானிகளோடு வானொலி மூலம் தொடர்புகொண்டு அறிவுறுத்துவார்கள். எந்த ஓடு பாதையில் இறங்குவது அல்லது ஓடி மேலே ஏறுவது என்பதையும் ஓடுபாதை பிற விமானங்களால் பயன்படுத்தப்படும்போது எவ்வளவு நேரம் வானில் வட்டமிட வேண்டும் என்பதையும் இக்கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் விமானிகளுக்கு அறிவுறுத்துவார்கள். அதற்கேற்ப விமானிகளுக்கு விமானத்தை இறக்கவோ ஏற்றவோ செய்வார்கள்.
மேலும், பொது மக்கள் தொடர்பான பல அலுவலகங்கள் விமான தளங்களில் அமைந்திருக்கும். அவற்றுள் முக்கியமானவை விமானங்களின் வருகை, புறப்பாடு பற்றிய தகவல்களைத் தரும் தகவல் மையம், விமான தரை நிர்வாக அலுவலகம், கங்கத் துறை அலுவலகம். சிற்றுண்டிச் சாலை, அஞ்சல், தந்தி, தொலைபேசி அலுவலகங்கள், வங்கி மற்றும் பல்வேறு பொருட்களை விற்கும் கடைகள் உள்ளன. வெளிநாடு செல்லும் பயணிகளுக்கென சுங்கத் தீர்வையற்ற பொருட்கள் விற்கும் தனிப் பிரிவும் விமான தளத்தின் புறப்பாட்டுப் பகுதியில் அமைந்திருக்கும்.
விமானம் மூலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு உதவும் வகையில் சுற்றுலா தகவல் மையம் முதலுதவி போன்ற மருத்துவ வசதி தரும் நிலையங்களும், எதிர்பாராது ஏற்படும் தீ விபத்துக்களை சமாளிக்க தீயணைப்புப் பிரிவும் விமான தளத்தில் அமைந்துள்ளன.
சில முக்கிய நகரங்களில் வெளியே செல்லும் அல்லது வரும் பயணிகளுக்கென தனியாக பன்னாட்டு விமான தளமும் உள் நாட்டுப் பயணிகளுக்கென உள்நாட்டு விமான தளமும் தனித் தனியே தனியிடங்களில் அமைந்திருக்கும். இவற்றைத் தவிர ராணுவ விமானப் படைக்கென தனி விமான தளங்கள் தக்கப் பாதுகாப்புக்களோடு அமைந்திருக்கும். இப்போர்ப்படை தளங்களின் அமைப்பு முதலான தகவல்கள் விமானப் படையினரைத் தவிர வேறு யாருக்கும் தெரியா. இவை இரகசிய பாதுகாப்பு இடங்களாகும். இங்கு வேறு யாரும் செல்ல முடியாது.