இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்/முன்னுரை

ஓம்

முன்னுரை


மிழ் மொழியில் கதை யென்று சொன்னவுடனேயே, “இது என்ன மொழி பெயர்ப்பா? எந்த ஆங்கில நாவலைத் தழுவியது! அந்த நவீனத்தின் ஆசிரியர் யார்?” என நம்மவரில் பெரும்பாலார் கேட்க ஆரம்பித்து விடுகின்றனர். தமிழில் ஒரு கதை வெளி வந்ததென்றால், அது ஆங்கில மொழியிலோ, பிற மொழிகளிலோ உள்ள ஏதாவது ஒரு நாவலின் மொழிபெயர்ப் பாகத்தான் அல்லது ஒரு நவீனத்தைத் தழுவி எழுகப்பட்டதாகத்தான் இருக்குமென்று தீர்மானித்து விடுகின்றனர். இவர்கள் இவ்விதத் தப்பபிப்பிராயங் கொண்டிருப்பதற்குக் காரணமு மில்லாமலில்லை.

இப்போது நம் நாட்டில் உலவும் தமிழ்க் கதைகளில் நூற்றுக்குத் தொண்ணுற்றொன்பது நவீனங்கள் ஆங்கில நாவல்களின் மொழி பெயர்ப்பு நூல்களாகவே இருக்கின்றன. தமிழ்க் கதாசிரியர்களில் பெரும்பாலோர், ஜியார்ஜ் ரெயினால்ட்ஸ், மேரி கோர்லி, எட்கார் வாலெஸ்ஸ்ர் வால்டர் ஸ்காட் போன்ற ஆங்கில ஆசிரியர்களால் எழுதப்பட்ட நாவல்களை மொழி பெயர்த்தோ அல்லது தழுவியோ கதை யெழுதுவதை ஆரம்பத்திலிருந்தே வழக்கமாகக் லியோ டால்ஸ்டாய், அலெக்ஸாண்டர் டூமாஸ், சார்லஸ் டிக்கின்ஸ் போன்ற பேராசிரியர்களது சிறந்த கதைகளைத் தமிழில் மொழி பெயர்த்துத் தரலாம். ஆனaல், அப்பேரறிஞர்கள் என்ன நோக்கோடு, எந்த தத்துவத்தைப் புகுத்திக் கதைகளை எழுதி இருக்கிறார்களென, அவர்களது உட்கிடக்கையை முதலில் நன்கு தெரிந்து கொண்டு, கதைக்கு ஜீவனாக உள்ள சிறந்த கருத்துகள் போகாதபடி தமிழில் மொழி பெயர்க்க வேண்டுவது இன்றியமையாததாகும். இம்முறையைச் சரியாகக் கவனியாது வெறும் வார்த்தையைப் பிடித்துக் கொண்டு வார்த்தைக்கு வார்த்தை கண்டு பிடித்துப் போட்டு எழுதுவது ஜீவனில்லாத சடத்தையலங்கரிப்பது போலாகும்.

தமிழில் புதுக்கதை எழுத முற்படுவோர், ‘கதை என்றால் என்ன? அதன் தத்துவம் என்ன?’ என்பதை முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும். கதை கற்பனை, உண்மை என இருவகைப் பட்டதாயினும், உண்மையை ஜீவனாகக் கொண்டு, எழுதப்படுவதே சிறந்ததாகும். மனித வாழ்க்கையின் படலத்தைப் படம் பிடித்துக் காண்பிப்பதே கதையாகும். மக்கள் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, அவசியமான இடத்தில் கற்பனையைக் கலந்து எழுதுங் கதை, மொழி. வளர்ச்சிக்கும், படிக்கும் மக்களின் அறிவு வளர்ச்சிக்கும் துணை. செய்வதாகும். கதை எழுதுவோர்க்குக் கூடுமானவரை மானத தத்துவமும் (Psychology) தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் எழுதுங் கதைகளில் சிருஷ்டிக்கும் பாத்திரங்களின் குணஞ் செயல்களை உள்ளபடி வருணிக்கமுடியும். இம்முறையையும், தத்துவத்தையும் ஒட்டியே, யான் சில புதுக் கதைகளைப் புனைந்திருக்கிறேன். “இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்” என்னும் இக்கற்பனைக் கதையும் இம்முறையை யொட்டியதேயாகும். இம் முயற்சியில் நான் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியாது. ஆயினும் உண்மைச் சம்பவங்களை யடிப்படையாகக் கொண்டு யான் வரைந்த “யான் ஏன் பெண்ணாய்ப் பிறந்தேன்?” “காதலனா? காதகனா?” முதலிய புதுக் கதைகள் தமிழ் மக்கள் பேராதரவைப் பெற்றதிலிருந்து, எனக்கு இம் முயற்சியில் உற்சாகமும், ஊக்கமும் மேலும் உண்டாகி யிருக்கிறது. ஆகையினால்தான், நான் இக்கதையை, தமிழ் நாட்டிலேயே, தமிழ் மொழியின் மறு மலர்ச்சிக்காகப் பாடுபட்டு வரும் சிறந்த பத்திரிகைகளில் ஒன்றான பிரசண்ட விகடன் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதி வந்தேன். “விகட”னில் இக்கதையைத் தொடர்ந்து வாசித்து வந்த அன்பர்கள் இது புத்தக உருவில் வெளிவர வேண்டுமென்று விரும்பியமையால் அவ்வாறே இப்போது வெளியிடப்பட்டது.

செல்வத்திலேயே பிறந்து செல்வத்திலேயே வளர்ந்த புவன சுந்தரி என்னும் பெண்மணி, நம் மகளிர்க்குச் சிறிதும் பொருத்தமில்லாத ஆங்கிலக் கல்வியைக் கற்று, மேனாட்டுப் போலி நாகரிகத்தை மேற்கொண்டு நடப்பதினால் வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவிப்பதும், முடிவில் தன்னைக் காதலித்த காதலனால் ஏமாற்றப்பட்டுத் தாங்க முடியாக இன்னல்களை யெல்லாம் அனுபவித்து ஜன சமூகத்தை வெறுத்து நீங்குவதுமே இக்கதையின் உட்கிடக்கையாகும்.

ஸ்ரீராமன் இலங்கையைக் கடக்க அணை கட்டுகையில் ஒரு சிறு அணிலும் மணலில் புரண்டு தன் முதுகில் ஒட்டிய மணலை உதறித் தொண்டு செய்ததுபோல், தமிழ் மொழியின் மறுமலர்ச்சிக்காக அறிஞர்கள் செய்துவரும் சிறந்த கொண்டைப் பின்பற்றி, யானும் என் சிற்றறிவின் துணைக் கொண்டு இயற்றிய இக் கதையைத் தமிழ்த் தாயின் திருவடிகளுக்கு அணியாக்குகிறேன். ஆகவே, எனது இச்சிறு முயற்சிக்குத் தமிழ் மக்கள் ஆதரவளித்து என்னை மேன்மேலும் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடும்படி ஊக்க வேண்டுகிறேன்.

ஆசிரியன்.