ஈசாப் கதைப் பாடல்கள்/கழுகும் காக்கையும்

காட்டு வயலில் செம்மறி
ஆட்டு மந்தை ஒன்றுமே
கூட்ட மாகத் திரிந்தது;
குறையில் லாமல் மேய்ந்தது.

வட்ட மிட்டு அவ்விடம்
வந்த கழுகு, மந்தையில்
குட்டி ஆடு ஒன்றினைக்
கூர்ந்து பார்க்க லானது.

பார்த்துக் கொண்டே வேகமாய்ப்
பாய்ந்தே அதனைக் கால்களால்
சேர்த்து நன்கு தூக்கியே
சிறக டித்துப் பறந்தது.


அருகில் இருந்த குன்றிலே
அமர்ந்தி ருந்த காகமும்,
பறந்து சென்ற கழுகினைப்
பார்த்து நினைக்க லானது:

‘கழுகு சிறிய ஆட்டினைக்
கவர்ந்து செல்லு கின்றது.
கொழுத்த பெரிய ஆட்டையே
கொண்டு நானும் செல்லுவேன்.’

என்றே எண்ணிக் காகமும்
எழுந்து பறந்து சென்றது.
நன்கு கொழுத்த ஆட்டினை
நாடி முதுகில் அமர்ந்தது.

முறுக்கி முறுக்கிக் கால்களால்
முதுகி லுள்ள மயிர்களை
இறுக்கிப் பிடித்துத் தூக்கவே
எத்த னங்கள் செய்தது.

கனம் மிகுந்த ஆட்டினைக்
காகம் தூக்க முடியுமோ?
மனத்தி லிருந்த ஆசையும்
மாய்ந்து மறைய லானது.


ஆசை மறைந்த தாயினும்
ஐயோ, கால்கள் சிக்கின!
வீசிச் சிறகை அடித்தது.
வீண்தான். தப்ப முடியுமோ?

மாட்டிக் கொண்டு தவித்திடும்
மடமை மிக்க காக்கையை
ஆட்டுக் காரன் பார்த்தனன்;
ஆவ லோடு நெருங்கினன்.

பறக்க வழியும் இன்றியே
பரித விக்கும் காக்கையை,
இறக்கை தன்னை வெட்டியே
எடுத்து வீடு சென்றனன்.

‘அப்பா, இதுபோல் பறவையை
அடியேன் பார்த்த தில்லையே
எப்போ தப்பா பிடித்தனை?
என்ன பறவை சொல்லுவாய்?’

என்று கேட்ட மகனிடம்
இடையன் கூற லாயினன்:
‘அன்பு மிக்க மைந்தனே,
அதிச யம்போல் பார்ப்பதேன்?

கொழுத்த ஆட்டைத் தூக்கியே
கொண்டு செல்லும் ஆசையில்
கழுகு என்று தன்னையே
கருதிக் கெட்ட காக்கைதான்!’