ஈசாப் கதைப் பாடல்கள்/காரணம்?

வேடன் ஒருவன் காட்டிலே
வேட்டை யாடக் கருதினன்,
கூட அழைத்துச் சென்றனன்,
கிழட்டு வேட்டை நாயையும்,

காட்டில் அலைந்து கடைசியில்
கண்டான் பன்றி ஒன்றினை.
வேட்டை நாயை ஏவினன்.
விரைந்தே அதுவும் பாய்ந்தது.

காட்டுப் பன்றி வேகமாய்க்
காற்றைப் போலச் சென்றது.
வேட்டை நாய்தான் இளைத்ததா?
விடவே இல்லை; தொடர்ந்தது.

ஓய்ந்து போன பன்றியின்
ஓட்டம் குறைய லானது.
பாய்ந்து நாயும் உடனேயே
பன்றி காதைப் பிடித்தது.

பன்றி அங்கே துடிப்பதைப்
பார்த்து வேடன் மகிழ்ந்தனன்
‘நன்று, நன்று’ என்றனன்;
நாடி ஓடி வந்தனன்.


அருகில் வேடன் வருவதை
அறிந்து பன்றி, காதினை
உருவிக் கொண்டு வேகமாய்
ஓடி மறைய லானது.

வேடன் இதனைக் கண்டனன்;
மிகவும் கோபம் கொண்டனன்;
ஓடி வந்து நாயிடம்
உள்ளம் வெம்பி உரைத்தனன்.

‘காடு முழுதும் சுற்றியே
கண்டோம் இந்தப் பன்றியை.
கேடு கெட்ட மிருகமே,
கிடைத்த பொருளை விட்டனை.’

இந்த வார்த்தை தன்னையே
இடித்து வேடன் கூறவே,
அந்த நாயும் சோகமாய்
அவனைப் பார்த்தே உரைத்தது:

‘என்னைச் சிறிய வயதிலே
இருந்து வளர்க்கும் ஐயனே,
என்னை யாரும் இதுவரை
ஏய்த்து ஓட முடிந்ததா?


என்றும் உள்ள உணர்ச்சியில்
இம்மி கூடக் குறைந்திலேன்.
இன்று மட்டும் தோற்றது
என்ன கார ணத்தினால்?

வயது அதிகம் ஆனது.
வலிமை குறைந்து போனது.
அயர்ந்து போனேன். பற்களும்
ஆட்டம் காண லாயின.

முன்னர் எனது திறமையை
முற்றும் உணர்ந்த தாங்களே,
இன்று நானும் தோற்றதை
இகழ்ந்து பேச லாகுமோ?

என்னை ஏனோ இகழ்கிறீர்?
இதற்கெல் லாமே காரணம்,
என்னைக் கிழடு ஆக்கிய
இயற்கை தானே!’ என்றது.