ஈசாப் கதைப் பாடல்கள்/தந்திர மகிமை

காட்டின் நடுவே வயலிலே
கழுதை மேயக் கண்டதும்,
ஓட்டம் ஓட்ட மாகவே
ஓநாய் ஓடி வந்தது.

கண்ட வுடனே கழுதையும்
காலில் ஒன்றைத் தூக்கியே
நொண்டிக் கழுதை போலவே
நொண்டி, நொண்டி நடந்தது.

ஓநாய் அருகே வந்தது;
உற்றுக் காலைப் பார்த்தது.
“ஏனோ நொண்டி நடக்கிறீர்
என்றன் அருமை நண்பரே?”

என்று கேட்கக் கழுதையும்
எடுத்துக் கூற லானது
“அன்பு கொண்ட நண்பரே,
அந்தக் கதையைக் கேட்டிடும்.

வேலி ஒன்றைத் தாண்டியே
வேக மாக வருகையில்,
காலில் நீண்ட முள்ளுமே
கத்தி போலப் பாய்ந்தது.


பாய்ந்த முள்ளும் என்னையே
படுத்தும் பாடு கொஞ்சமோ?
ஓய்ந்து போனேன். இன்னமும்,
உயிர்பி ழைத்து வாழ்வதோ?

கொன்று என்னைத் தின்னுவீர்.
கோடி கோடிப் புண்ணியம்.
ஒன்று மட்டும் முன்னரே
உரைத்து விட்டுச் சாகிறேன்.

தின்னும் போது தொண்டையில்
சிக்கி டாதி ருக்கவே,
முன்ன தாக எனதுகால்
முள்ளை நீக்கும் நண்பரே!”

உண்மை என்று நம்பியே
ஓநாய் மகிழ்ச்சி கொண்டது;
பின்னங் காலில் முள்ளையே
பிடுங்கி எடுக்கப் பார்த்தது.

உற்று ஓநாய் பார்க்கையில்
ஓங்கிக் கழுதை கால்களால்
‘பட்பட்’ டென்று உதைத்தது;
பற்கள் உதிரச் செய்தது!


56

முன்னம் பற்கள் போனதும்.
மூர்ச்சை யான எதிரியைத்
தன்னந் தனியே விட்டுமே
தாவிக் கழுதை சென்றது!

தந்தி ரத்தின் மகிமையால்
தப்பிப் பிழைத்த கதைதனை
சொந்தக் காரர் கேட்டிடச்
சொல்லிச் சொல்லிச் சிரித்ததே!