ஈசாப் கதைப் பாடல்கள்/பசுவின் கேள்வி

மாலை நேரம் நாய் ஒன்று
வைக்கோல் போரின் மீதினிலே

ஏறி அமர்ந்து கொண்டதுவே;
இங்கும் அங்கும் பார்த்ததுவே.

மிக்க பசியுடன் ஒருபசுவும்
விரைவாய் அங்கு வந்ததுவே.

வந்ததும், அதனை நாய்பார்த்து,
‘வள்வள்’ என்று குலைத்ததுவே.

குலைத்திடும் நாயைக் கண்டதுமே
கொஞ்சம் பின்னால் போனபசு,

வைக்கோல் தின்னும் ஆசையிலே
மறுபடி நெருங்கிச் சென்றதுவே.


திரும்பத் திரும்ப அந்நாயும்
திசைகள் அதிரக் குலைத்திடவே

கோபம் கொண்ட பசுஉடனே,
கூறிட லானது இப்படியே:

‘தானும் உண்ணான்; பிறருக்கும்
தருமம் செய்யான் அவன்போல

என்னைப் பார்த்துக் குலைக்கின்றாய்.
ஏனோ துரத்தி யடிக்கின்றாய்?

வைக்கோல் தின்பது உன்னுடைய
வழக்கம் இல்லை; உலகறியும்.

அப்படி யிருந்தும் வைக்கோலை
அனுதினம் தின்றே உடல்வளர்க்கும்

என்னைத் துரத்துதல் சரியாமோ
எண்ணிப் பார்ப்பாய், மடநாயே!’