உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்/பாடப்பொருளும்
கற்பிக்கும் கலை
கல்வியைக் கற்பிப்பது என்பது ஒரு கலை.
கற்பிக்கும் காரியத்தை மேற்கொள்கின்ற ஆசிரியர், அதனை புனிதமான பணியாகவே, கருதி பெருமிதம் பொங்கப், பணியாற்றுகிறார்.
கல்வியைக் கலையாகக் கற்பிக்கும் ஆசிரியரை, கலைஞன் எனவும், புகழ்ந்து பேசுகின்றார்கள்.
கல்லைச் செதுக்கி, தன் கற்பனையுடன் சிலையாக வடித்துக் காட்டுகிற சிற்பியைப்போல, மனித உள்ளங்களை கல்வியின் மூலம், செப்பனிட்டு. சீர்மைபடுத்தி, சிறப்பு நிலைக்கு உயர்த்துகிறார் ஆசிரியர்.
ஆகவே தான், நல்ல ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நிலைக் கண்ணாடியாக விளங்குகின்றார்கள். அவர்கள் மனதிலே ஆழமாய் பதிந்து, கோபுரமாய் உயர்ந்து, குன்றிலிட்ட தீபம் போல வழி காட்டி வாழ்விக்கின்றார்கள்.எனவே தான், குருவாக திருவாக, மாணவர்கள் மனதிலே ஆசிரியர்கள் மாறாத ஓரிடத்தை வகித்து, பெருமையடைகின்றார்கள். பூரிப்படைகின்றார்கள்.
இவ்வாறு சிறப்பிடத்தைப் பெற்றிட, ஆசிரியர்கள் தங்களுக்குள்ளாக, பல வழி முறைகளை வகுத்துக்கொண்டு, குறைவறக் கற்றுத் தந்து, தாங்கள் எதிர்பார்க்கும் சிறந்த குணங்களை, நலன்களை மாணவர்களிடம் வளர்த்து விடுகின்றனர்.
இப்படியாக மேற்கொள்கின்ற வழிமுறைகளைத்தான் கற்பிக்கும் முறைகள் என்று குறித்துக் காட்டுகின்றனர் வல்லுநர்கள்.
கற்பிக்கும் கலையும் நிலையும்
கற்பிக்கும் முறை என்பது அசைந்து கொடுக்காத குன்று போன்றது அல்ல. நிலைமைக்கேற்ப நெகிழ்ந்து கொடுத்து, தேவைக்கேற்ப வளைந்து தந்து, விளைவுக்கேற்ப மாறிக் கொண்டும், மாற்றிக் கொண்டும், உதவுகிற உன்னத முறையாகும்.
வகுப்பறைக் கல்வியான பொதுக்கல்வி, சொல் விளக்கத்தின் மூலம் கற்பிக்கப்படுகிறது. விளையாட்டுத் திடலில் கற்பிக்கப்படும் உடற்கல்வியானது, சொல்விளக்கம், செயல்விளக்கம், பங்கு பெறும் உடல் இயக்கம் என்பதாகக் கற்பிக்கப்படுகிறது.
இந்த முறைகளில் ஈடுபடும் ஆசிரியரின் நோக்கம். எப்படி அமையவேண்டும் என்று முதலில் காண்போம்.ஆசிரியரின் கற்பிக்கும் நோக்கம்
1. மாணவர்களுக்குக் கற்கும் சூழ்நிலையை உருவாக்கித் தருதல்.
2. மாணவர்கள் கற்க உற்சாகப்படுத்துதல்.
3. மாணவர்களின் உடலும் மனமும் உறுதியுடன் வளர பயிற்சி தந்து உதவுதல்.
4. மாணவர்களின் ஆர்வத்தை அறிந்து, அதற்கேற்ப கற்பித்தல்.
5. மாணவர்கள் கற்பனைச் செறிவுடன் பணியாற்றத் துண்டுதல்.
6. நற்குணங்கள், நல்லுணர்வுகள், நற்செயல்கள் ஆற்ற உற்சாகப்படுத்துதல்.
7. தன்னம்பிக்கையுடன் செயல்படும் துணிவை ஊக்குவித்தல்.
8. தங்களால் என்ன செய்ய முடியும் என்பதை உணரச் செய்து, அவர்களை அந்தத் துறையில் செலுத்தி, உதவுதல்.
இத்தகைய சிறப்புக்களை வளர்க்கும் முனைப்புடன் பணியாற்றும் ஆசிரியர்கள், தாங்கள் கற்பிக்கின்ற பாடப் பொருளை, எவ்விதம் கற்பிக்க வேண்டும் என்பதற்கு, சில வழிமுறைகள் உள்ளன. அப்படிப்பட்ட கற்பிக்கும் முறைகள் பற்றி இங்கே காண்போம்.
1. பாடப்பொருளும் பாடமுறையும்
ஆசிரியர் தான் கற்பிக்கப்போகின்ற பாடத்திற்கு ஏற்பவே, பாடமுறையைப் பகுத்துக் கொள்ள வேண்டும்.வரலாற்றுப் பாடம் என்கிற போது வாய்ச் சொல் விளக்கம். கணக்குப் பாடம் என்கிற போது, கரும்பலகை எழுத்து இயக்கம். உடற்பயிற்சி என்கிற போது, நடைமுறை செயல் இயக்கம்.
இப்படியாக, எடுத்துக் கொள்கிற பாடத்திற்கு ஏற்ப, மேற்கொள்கிற முறையை, முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
2. மாணவர்கள் தரம் அறிதல்
வகுப்பறைக்குச் செல்வதற்கு முன்னதாகவே, ஆசிரியரின் பொறுப்பு ஆரம்பமாகிவிடுகிறது
மாணவர்களின் கற்கும் திறன், ஏற்கனவே கற்றிருக்கும் அளவு; அந்தக் குறிப்பிட்டப் பாடத்தில் அவர்களின் அனுபவ அறிவு ஆர்வம் பொதுவாக அந்த வகுப்பின் நடத்தை, கல்வியில் மேம்பாடு, நிகழ்த்திய சாதனை; ஏதாவது, பிரச்சினை உண்டா என்பனவற்றை அறிந்து, அதற்கேற்ப தனது கற்பிக்கும் காரியத்தை ஆசிரியர் தொடங்க வேண்டும். தொடர வேண்டும்.
3. படிப்பிக்கும் சூழ்நிலை
மாணவர்களுக்குக் கற்பிக்கின்ற சூழ்நிலை, எப்பொழுதும் ஒன்று போலவேஅமைந்து விடுவதில்லை.
இடத்திற்கு இடம், நேரத்திற்கு நேரம், மாணவர்க்கு மாணவர் சூழ்நிலை மாறியே அமைந்துவிடும்.
கற்பிக்க உதவும் உதவிப் பொருட்கள் சமயத்தில் இல்லாமல் போகலாம். வகுப்புக்கு மாணவர்கள், எதிர்பாராத எண்ணிக்கையில் அதிகமாக வரலாம். பள்ளிச் சூழ்நிலையில் பாடம் நடத்தக் கூடிய அமைதி கூட. இல்லாமல் இருக்கலாம்.
இவற்றையெல்லாம் அனுசரித்துக் கொண்டு, கற்பித்தலைத் தளராமல், இனிமை சூழ தொடர வேண்டும்.
4. பாடமும் நேரமும்
பாடத்தை நடத்துவதற்கேற்றவாறு நிறைய குறிப்புக்கள் எடுத்து வைத்திருந்தாலும்; தயாரித்ததைக் கற்பிக்க, அதிக ஆர்வம் கொண்டிருந்தாலும், போதிய நேரம் கிடைக்காமல் போகும் சூழ்நிலை ஏற்படும்.
அதனால் அதைரியமோ ஆத்திரமோ அடையாமல், பக்குவமாக நேரம் அறிந்து, நினைத்ததைக் கற்பிக்கும். சாதுர்யம் வேண்டும்.
5. மாணவர்களின் பெயர்கள்
தங்கள் பெயர்களை ஆசிரியர் கூறி அழைக்கும்பொழுது, மாணவர்களுக்கு மகிழ்ச்சியும். பெருமையும் ஏற்படும். அப்பொழுது அவர்கள் ஆசிரியர் மேல் மதிப்பும் மரியாதையும் பெருகிட, அவர் கூறுகிற கருத்துக்களைக் கூர்ந்து கேட்டு கற்றிடுவார்கள். அதுவே ஆசிரியரின் வெற்றியாக அமைந்து விடுகிறது.
6. பொறுமையும் திறமையும்
ஆசிரியர் அடிக்கடி கோபப்படுவது, வகுப்புச் சூழ்நிலை யையே மாற்றி விடும் ஓர் அசாதாரண சூழ்நிலையையும் ஏற்படுத்திவிடும். கோபப்படுகிறபோது, புத்திசாலித் தனமாக, கருத்தோடு போதிக்கிற கவனம் கட்டுக் குலைந்து போகிறது. எனவே, பொறுமையைக் கடைபிடிக்கும்போது. திறமையும் கூடும். தேர்ச்சியும் பெருகும்.
7. மாணவர்களின் தன்மையறிந்து!
உடற்கல்வியை போதிக்கிறபோது, மாணவர்களின் கூட்டத்தை மட்டும் மதிப்பிட்டு விடக்கூடாது. அவர்கள் தோற்றத்தையும், உடல் அமைப்பையும், உள்ளத்தின் இயல்புகளையும் உணர்ந்து, அவற்றிற்கு ஏற்ப, கற்பித்து விடவேண்டும்.
(அ) உடலமைப்பு கருத்துக்கள் (Anatomy & Physiology)
1. வயதுக்கேற்ப பயிற்சிகளை அளிக்க வேண்டும்.
2. ஆண் பெண் வேறுபாடுக்கு ஏற்ப, பயிற்சியின் அளவு வேண்டும்.
3. எந்தப் பயிற்சிக்கும் முன்னதாக, உடலைப் பதப்படுத்தும் பயிற்சிகளை செய்திட, கட்டாயப்படுத்த வேண்டும்.
4. களைப்பு உண்டாவதற்கு முன், பயிற்சிகளை முடித்து விடவேண்டும்.
(ஆ) உளவியல் கருத்துக்கள் (Psychology)
1. பயிற்சியில் ஈடுபட, ஆர்வத்தை முதலில் ஊட்ட வேண்டும்.
2. ஒரு காரியத்தைக் கற்றுக் கொள்ள, செயல்படுகிற போது தான் சிறப்பாகப் பெற முடியும்.3. திரும்பத் திரும்ப பயிற்சி செய்கிற போது, அதில் தேர்ச்சியும் வளர்ச்சியும் நிறைய ஏற்படும்.
4. மாணவர்கள் விரும்பாததை வற்புறுத்தாமல், ஏற்றுக் கொள்ளச் செய்திட முயன்று, வெற்றி பெற்ற பிறகு, கடினப் பயிற்சிகளை செய்ய வைக்கவும்.
5. காரியமாற்றும் ஆர்வம், விருப்பம், முயற்சி, முனைப்பு எல்லாம் வயதுக்கேற்ப மாறுபடும் என்பதால், அதனையும் நன்றாக அறிந்து கற்பிக்கவும்.
சமூகவியல் கருத்துக்கள் (Sociology)
1. மனிதன் கூடி வாழும் சமூக அமைப்பைச் சேர்ந்தவன்.
2. சமூகத்தில் அவன் வாழ்ந்தாலும், தனது தனித் தன்மையை இழக்காமல் வாழ்கிறான்.
3. தனது உரிமையை இழக்காமல், மற்றவர்கள் உரிமையையும் பறிக்காமல், தனக்கும் உள்ள பொறுப்புக்களை உணர்ந்து, பங்கிட்டுக் கொண்டு, பக்குவமாக வாழ்கிறான்.
4. சமூகத்தில் ஒற்றுமையும் உண்டு. போட்டிகளும் உண்டு. இரண்டுமே முன்னேற்றத்திற்கு இரு கண்கள் போன்றவையாகும்.
5. ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை அமைக்க, விளையாட்டும் ஆடுகளங்களும் உதவுகின்றன.
இப்படிப்பட்ட கருத்துக்களை புரிந்து கொண்டு, ஆசிரியர்கள் கற்பிக்கும் போது, எதிர்பார்த்த நன்மைகள் எல்லாமே கிடைக்கின்றன.