உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்/புறவெளிப்போட்டிகள்

14. புற வெளிப் போட்டிகள்

(EXTRAMURAL COMPETITIONS)


பள்ளிகளுக்கிடையே அல்லது (கல்வி மற்றும் தொழில், நிறுவனங்களுக்கிடையே நடைபெறுகின்ற விளையாட்டுப் போட்டிகளை புற வெளிப் போட்டிகள் என்று அழைக்கின்றனர்.

போட்டிகளில் பங்கு பெறுபவர்கள், தங்கள் திறமை களை மற்றவர்களுடன் போட்டியிட்டு, வெளிப்படுத்திக் காட்டி, தங்களுடைய நிறுவனங்களுக்குப் பெயரும் புகழும் ஈட்டித் தருகின்ற வாய்ப்புகளை, புறவெளிப் போட்டிகள் வழங்குகின்றன.

நிறைகள் 1. புறவெளிப் போட்டிகளில் பங்கு பெறுபவர்களின் திறமையும் வலிமையும் தேர்ச்சி பெறுகின்றன.

2. தாங்கள் சார்ந்திருக்கும் நிறுவனத்தின்மேல் தனியாத பற்றும் பக்தியும் பெருகும் நிலை, எழுச்சியடைகின்றன.

3. குழுத்தலைவர் மேல் மரியாதை, அவர் சொல்லுக்குப்பணிதல், பண்பான விளையாட்டுக்குணங்கள் வளர்தல், போன்ற சிறந்த பண்பாடுகள் வளர்ச்சி பெறுகின்றன.

4. வெளியாருடன் பழகும் வாய்ப்பு ஏற்படுவதால், புதிய புதிய நட்பும், உறவும் கிடைக்கின்றன.

5. போட்டிக்காகப் பல இடங்களுக்கும். போவதால், பல புதிய இடங்கள் பற்றிய அறிவும் தெளிவும் ஏற்படுகின்றன.

6. போட்டிகளின் மூலம், மகிழ்ச்சி, திருப்தி, உற்சாகம் எல்லாம் நிறையவே கிடைக்கின்றன.

குறைகள் 1. போட்டி என்று வந்து விட்டாலே, வெற்றிபெற வேண்டும் என்ற வெறியும் வேகமும் வந்து விடுகிறது. அதனால் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, குறுக்கு முறைகளைப் பின்பற்றி, தவறிழைத்தாவது பெற்றாக வேண்டும் என்று செல்கின்ற மனப்பாங்கு வளர வாய்ப்பிருக்கிறது.

2. சுகாதாரமற்ற போட்டியும், பொறாமை உணர்ச்சியும் ஏற்பட்டு விடுகின்றது.

3. அதிக நேரம் வீண் ; அதிக பணச் செலவு ; அதிக உடல் சக்தி இழப்பு என்றும் ஏற்பட்டு விடுகிறது.

4. மாணவர்களுக்குத் தேவையற்ற மனப் பதட்டம், மனச் சோர்வு, மனக்களைப்பு ஏற்படுகிறது.

5. சிலர், தங்கள் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாமல், பிறரிடம் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு பொய் பேசி, பெருமையடித்துக் கொள்ளுகிற பேதமைக் குணமும் வளர, வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

மேற்கூறிய குறைகள் எல்லாம் தற்காலிகமானது தான். தகர்த்தெறியப்பட்டு, சரி செய்து விடக் கூடியவைகள்தான்.

தகுதியான தலைமையுடன் கட்டுப்பாடு, மன உறுதி, ஊக்கம் உள்ளவர்களாக மாணவர்களை வழி நடத்துகிற போது, குறைகள் களைந்தெறியப்பட்டு விடும்.

நல்ல விளையாட்டு வீரர்களாக இருந்தால் கூட, தினந்தோறும் பயிற்சிக்கும் கூட்டு முயற்சிக்கும் வந்தால் தான், அவர்களை குழுவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி வருகிற போது, தான், ஒழுக்கமும் உயர்ந்த பண்பு களும் வளரும். மேலே கூறிய குறைகள் வராமலும் இருக்கும்.

அதற்கும் மேலாக, நல்ல தலைமை வேண்டும். அந்தத் தலைமை தவறின்றி வழிகாட்டும் தக்காராகவும் விளங்க வேண்டும்.

புறவெளிப் போட்டிகளை நடத்தும் முறைகள் புறவெளிப் போட்டிகளை நாம் மூன்று வகையில் தடத்தலாம். 1. பயிர்சி போட்டிகள் (Practice matches) 2. ஒரு துறைப் போட்டிகள் (Closed competitions) 3. பொது நிலைப் போட்டிகள் (Open competitions)

1. பயிற்சிப் போட்டிகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட குமுவின் தேர்ச்சிக்கும், திறமை வளர்ச்சிக்கும் உதவ, அண்டை நிறுவனங்களில் உள்ள குழுக்களை அழைத்து, போட்டி ஆட்டங்களை ஆடச் செய்து, பழகும் முறையே இது.

இதற்கு முன் கூட்டியே பேசி, தேதி, நேரம், இடம் முதலியவற்றைக் குறித்துக்கொண்டு, தீர்மானித்து நடத்திக் கொள்ள வேண்டும்.

2. ஒரு துறைப் போட்டிகள் (Closed Competitions). ஒரு குறிப்பிட்ட துறையைச் சேர்ந்த, பிரிவைச் சார்ந்த கல்வி நிறுவனங்களுக்கிடையே நடைபெறுகின்ற போட்டிகள். (உ.ம்) கல்லூரிகளுக்கிடையே (Inter Collegiate) பள்ளிகளுக்கிடையே (Inter School) மட்டும் நடத்தப்படுதல். கல்லூரிகளுக்கிடையே பள்ளிகளுக்கிடையே என்கிறபோது, வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் வந்து பங்கேற்க முடியாது. அதுவும் கட்டுப்படுத்தும் பொறுப்பேற்றுள்ள சங்கங்கள் மூலமாக நடத்தப்படும்.

ஒரு மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும், அந்த மாவட்டப்பள்ளிகள் உயர்கல்விக் கழகத்தின் கட்டுப் பாட்டில் இருக்கின்றன. ஒவ்வொரு பள்ளியும் அந்தக் கழகத்தின் உறுப்பினர்கள்.

அதன் நிர்வாகக்குழு, ஒரு தலைவர், செயலர் பொருளாளர், துணைச் செயலர், செயற்குழு என்பதாக அமைந்திருக்கும்.

ஒரு மாவட்டம் பல தொகுதிகளாக (zones) பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தொகுதியைச் சேர்ந்த பள்ளிகள், அவற்றிற்கிடையே போட்டிகளை நடத்தும். பிறகு, தொகுதி: வெற்றிக் குழுக்களிடையே போட்டிகளை நடத்தும். பிறகே, அது மாவட்டப் போட்டியாக நடத்தும்.

நேரமும், பண வசதியும் கிடைத்தால், மாவட்டங்களுக்கிடையேயும் போட்டிகளை நடத்தும்.



இதுபோலவே கல்லூரிகளுக்கு இடையே, வங்கிகளுக்கு இடையே, அரசு துறை நிறுவனங்களுக்கிடையே, தொழிலகத் துறையினருக்கு இடையே போட்டிகள் நடத்தப்படும்.

3. பொது நிலை போட்டிகள் (Open Competitions) யார் வேண்டுமானாலும் வந்து போட்டியில் கலந்து கொள்ளலாம் என்பதைத் தான், பொது நிலைப் போட்டிகள் என்கிறோம். ஒரு மாநில விளையாட்டுக் கழகம் என்பது தனது விளையாட்டுக்கான போட்டிகளை நடத்துகிறபோது, அந்த மாநிலத்தைச் சேர்ந்த எந்தக் குழுவும் வந்து போட்டியிடலாம்.

இதுவே பொது நிலைப் போட்டியாகும்,