உடற்கல்வி என்றால் என்ன/கல்வி என்றால் என்ன?

2. கல்வி என்றால் என்ன?

(Education)

கல்வி - ஒரு விளக்கம்

கற்றுக் கொள்வதைக் கல்வி என்றும், அறிந்து தெளிவதை அறிவு என்றும் இயற்கையிலே எழுந்து பெருகி வரும் அறிவை ஞானம் என்றும் கூறுவார்கள்.

கல்வி என்பதை கல்+வி என்று நாம் பிரிக்கலாம். கல்வி என்று நாம் கூறும்போது கல்வி என்று ஏகாரம் கொடுத்துத்தான் நாம் அழைக்கிறோம்.

அப்படி அழைப்பதுதான் நியாயமாக இருக்குமோ என்று எனக்குத் தோன்றுகிறது. அதற்கும் அர்த்தமுள்ள ஒரு காரணம் அமைந்திருக்கிறது.

வீ என்றால் மலரின் முதிர்ந்த, விளைந்த பருவத்தைக் குறிப்பார்கள்.அதாவது மலரின் பல பருவங்கள் மொட்டு, அரும்பு, போது, மலர், வீ என்பனவாகும்.

செடி கொடியில் முட்டிக் கொண்டு முதலில் தோன்றுவதை மொட்டு என்றும் கண்ணுக்குத் தெரிந்து அரும்பி நிற்பதை அரும்பு என்றும் நான் மலரப் போகிறேன் என்று அது பொழுதை எதிர்பார்த்து இருக்கும் நேரத்தை போது என்றும், மலர்ந்து விடுகிற பொழுது அதற்கு மலர் என்றும் மலர்ந்து செழித்து மணந்து நிற்பதை வீ என்றும் விளக்கமாக அறிஞர்கள் கூறுவார்கள்.

கல்வியும் அப்படித்தான் நமக்குக் கைகொடுக்கிறது, முதிர்ந்த, விளைந்த, வாழ்வுக்குப் புகழாகிய மணம் அளிக்கின்ற அறிவுதனை அளிப்பது தான் கல்வி என்று கூறப்படுகிறதுபோலும்.

கல்வியின் நோக்கம்:

நல்ல அறிவாலும், நல்ல ஒழுக்கப் பண்புகளாலும், நல்ல உடல் ஆற்றலும் உள்ளவராக ஒரு மனிதரை உருவாக்கி, அவரை முழு மனிதராக மாற்றிட உதவி, வழிகாட்டி, பண்படுத்தி, பக்குவமாக வளர்ப்பது தான் கல்வியின் நோக்கமாக இருக்கிறது.

முழு மனிதராக வளர்வது என்றால், உடலாலும், உள்ள உணர்வாலும், ஆழ்ந்த அறிவாலும் சிறப்பாக வளர்வது என்று அர்த்தமாகும்.

கல்வியின் நோக்கம், கற்கிறவர்களுக்கு நிறைய அனுபவங்களை அளிப்பதுதான், கற்றுக்கொண்டிருக்கும் பொழுது தொடர்ந்து பல அனுபவங்களைத் தந்து கொண்டே புதிய அனுபவங்களை உணர்ந்து கொள்ள, பழகிக்கொள்ளும் அறிவை வழங்குவது தான் கல்வியின் நோக்கமாகும்.

கல்விக்கு சில விளக்கங்கள்

1. கல்வி என்றால் பொதுவாக, அறிவு என்றே பலர் கூறி விடுகின்றனர். அதுவே பொதுஜன அபிப்பிராயமாகவும் இருந்து வருகிறது.

2. கல்வி என்பது தனிப்பட்ட மனிதர்களின் திறமைகளையும், கலாச்சாரப் பண்பாட்டையும், நல்லொழுக்கக் குணங்களையும் வளர்த்து, நன்னெறியில் நடத்திட உதவுகிறது என்றும் விளக்கம் அளிக்கிறார்கள் சிலர்.

3. கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட துறையில் பட்டம் பெற்றிடவும், அதற்கேற்ப வேலை பெற்று, சம்பாதித்து வாழ்க்கை நடத்த உதவும் ஒரு முயற்சி என்று கூறுபவர்களும் உண்டு.

4. கல்வி என்பது வாழ்நாளைக் கவலையின்றி ஒட்டிச் செல்ல உதவுகிற ஒரு மோகனமான வாகனமாகும் என்று அழகு படுத்திப் பேசுவோரும் உண்டு.

யார் எப்படி விளக்கம் கூறினாலும், கல்வியானது ஒரு குறுகிய நோக்கத்துடன் மக்களுக்குப் பணியாற்ற வில்லை என்பது மட்டும் உறுதி

ஒவ்வொரு மனிதனையும் சமுதாயத்தின் ஒரு சக்தி மிக்க அங்கமாக ஆக்க, திறம் மிகுந்த சமுதாயத் தூண்களாக உருவாக்கவே கல்வி முயல்கிறது.

தனிப்பட்ட ஒருவரின் சுகம், சுகாதாரம், நலம், நல்ல ஒழுக்கங்கள் இவற்றை வளர்க்கவும், அதே சமயத்தில், ஒரு சமுதாயத்தின் செழிப்பு மிக்க வளர்ச்சியை ஏற்படுத்தவும் இலட்சியப் பணியாக, கல்விதான் தன் பயணத்தை மேற்கொண்டு வருகிறது.வளர்கிறது.

அதனால்தான், கல்வியானது சமுதாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக மதிக்கப்பெற்று வளர்க்கப்பெறுகிறது. அதுவும் மனிதர்களைப் புனிதர்களாக மாற்ற உதவிக் கொண்டு வருகிறது.

சமுதாயத்தில் கல்வி

ஒரு சமுதாயத்திற்கு ஒப்பற்ற பெருமையாக விளங்குகிறது கல்வி என்பதால் தான், சமுதாயத்தில் வளர்ச்சிபெற விரும்புகிறவர்கள், வளர்ச்சி பெற்றவர்கள் எல்லோரும் தங்கள் கொள்கைகளுக்கு ஏற்ப, கல்வியைப் பற்றி விளக்கம் கூறுகின்றார்கள்.

இந்தியாவில் இருந்த பல்வேறுபட்ட சமுதாய சூழ்நிலைகளில், எப்படி எப்படியெல்லாம் கல்வி விவரிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கீழ்வரும் கருத்துக்கள் உங்களுக்குத் தெளிவாக விளக்கும்.

1. “கல்வி என்பது ஆத்மாவின் வளர்ச்சிக்காக மட்டும் உழைக்காமல், அறிவை வளர்க்கவும், அதன் மூலம் மனதைக் கட்டுப்படுத்தி வைக்கின்ற ஆற்றலை வளர்க்கவும் உதவுகிறது.” (இந்தியக் கல்வி முறை).

2. “கல்வியானது ஒரு மனிதரை தன்னம்பிக்கை உடையவராக உருவாக்கி. அதே சமயத்தில் சுயநல மற்ற மனிதராகவும் வாழச்செய்கிறது.” என்கிறது ரிக்வேதம்.

3. கல்வியின் நோக்கமானது மனித உயிர்களுக்கு ஆத்ம விடுதலையை அளிப்பதாகும் (உபநிஷதம்).

4. கல்வியானது ஒருவரை ஒழுக்க சீலராக உருவாக்கி, இந்த உலகத்திற்கு உபயோகமுள்ள மனிதராக வாழ்விக்கும் மேன்மையான பணியை ஆற்றுகிறது என்கிறார் யக்ஞவாக்யா. 

5. சிறந்த ராஜதந்திரியாக விளங்கிய சாணக்கியர் இப்படிக் கூறுகிறார், “கல்வி என்பது ஒருவரை தேகசக்தி உள்ளவராக்கும் சிறப்புப் பயிற்சிகளை அளித்து, தேசப்பற்று உள்ளவராக மாற்றும் மணியான பணியைச் செய்கிறது.”

6. புகழ்மிக்க மதத்தலைவரான சங்கராச்சாரியார் கூறுகிறார். “கல்வி என்பது ஒருவரின் ஆத்மாவை அறிந்து கொள்ள உதவும் ஒப்பற்ற வழிகாட்டி..”

இப்படி, வாழ்வில் மேன்மைபெற்ற மக்கள் தலைவர்கள், மதத் தலைவர்கள், மாண்புமிக்க ஆட்சிப் பொறுப்பாளர்கள் எல்லோரும் கல்வியைத் தாங்கள் விரும்பும் திசைப்பக்கமே இழுத்துச்சென்று விளக்கம் கூறினாலும், ஒரு குறிப்பை மட்டும் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

“கல்வி என்பது அறிவுக்கான பயிற்சி மட்டுமல்ல. அது இதயத்தைப் பண்படுத்தி, ஆத்மாவை ஒழுங்குபடுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, களிப்பூட்டுகிறது.’

இந்த உண்மையான இலட்சியப் பணியினால் தான் கல்விக்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு கிட்டுகிறது.

கல்வியின் சிறப்பு :

தொட்டிலில் தொடங்கி சுடுகாடு செல்லும் வரையிலும் ஒருவருக்கு கல்வி உறுதுணையாக நிற்கிறது.

இல்லங்களில், பள்ளிகளில், சமுதாயச் சந்தைகளில், சந்தர்ப்பங்களை வழங்கும் இக்கட்டான சூழ்நிலைகளில், எல்லாம் கல்வி இடம் பெறுகிறது. அறிவை வளர்த்து விடுகிறது.

மனிதனிடம் தானாக வந்து ஒட்டிக் கொள்ளும் பழக்க வழக்கங்களில் எல்லாமே நல்ல பண்பாடுகளை பயனுள்ள பழக்க வழக்கங்களை தீமை பயக்காத செயல் முறைகளை வளர்த்து, நல்லொழுக்கம், நாணயம், நேர்மை தியாகம் நிறைந்த சீலர்களாக, ஒழுக்கச செல்வர்களாக வாழ்க்கை நடத்தவே கல்வி உதவுகிறது.

ஆகவே, கல்வியானது அறிவைப் பெற்றுக் கொள்ள நிறைய வாய்ப்புக்களை வழங்குகிறது. அதை படிப்பறிவு என்றும், அனுபவ அறிவான பட்டறிவு என்றும் பிரித்துக் கூறுவார்கள்.

பள்ளிகளில் பயில்வது படிப்பறிவு, அத்துடன் பெரியவர்கள் தங்கள் அனுபவங்களைப் புத்தகவடிவில் கொடுத்துச் சென்றதைப் பயில்வது பட்டறிவு.

இப்படிப்பட்ட அனுபவ அறிவை உடற்கல்வியும் அளிக்கிறது. என்கிறார்கள் கல்வி வல்லுநர்கள்,

பொதுக்கல்வியின் இலட்சியத்தை, உடற்கல்வியானது பெரிதும் வளர்த்து, பொதுமக்களுக்கு வழி காட்டுகிறது, என்னும் குறிப்பு, எப்படியெல்லாம் பாெருத்தமாக அமைந்திருக்கிறது என்று தெரிந்து கொள்வோம்.

அதற்கு முன்னதாக, அடுத்து வரும் அத்தியாயத்தில் உடற்கல்வி என்றால் என்ன என்னும் வினாவுக்கு விடை தெரிந்து கொள்வோம்.