உணர்ச்சி வெள்ளம்/எதிர்நீச்சலடித்த இரட்டையர்

எதிர்நீச்சலடித்த இரட்டையர்


பெருந்தன்மையோடு கூடிய பொதுவாழ்வு வெற்றியையன்றி வேறெதையும் தந்திடாது.

அறிவுத் தெளிவுக்கும் வாழ்க்கைப் பணியில் உறுதிக்கும் இவ்விரட்டையர் முன் உதாரணமாகத் திகழ்கின்றனர்.

இவ்விரட்டையரது அறிவாழம் மிக்க புலமையிலும் இவர்களது தருக்க நியதிகளிலும் ஐயப்பாடு என்பது எவருக்குமிருக்காது. இவ்வாறிருப்பினும் அனைவரும் இவர்களைப் பின்பற்றுவதில்லை.

ஆற்றில் எதிர்நீச்சலடித்து சுழல்தனைச் சந்தித்து மேல்நோக்கிச் சென்றுள்ள இவர்கள் அவ்வாறு செய்தது வீர பிரதாபங்களுக்காக அல்ல. அறிவுத் தெளிவோடு தாங்கள் கொண்ட கொள்கைகளில் உறுதியோடு தாங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ள பாதையில் அவர்கள் திடமாகவே சென்றுள்ளனர். எனினும் அவர்கள் வெற்றியையே தழுவி இருக்கிறார்கள்.

ஆற்காடு சகோதார்கள் என்றழைக்கப்படும் இரட்டையர் தமிழகம் தந்த உரம் மிகுந்த வல்லவர்கள். இந்தியாவின் மேதைகள்--உலகறிந்த சான்றோர்-இந்த நூற்றாண்டின் உலக மேதைகளுள் சிலராக மதிக்கப்படுவர்.

இவ்வுலகிலே பெரிய மனிதர் என்ற பெயரெடுக்கத் தாம் கொண்ட கொள்கைகளிலிருந்து விலகிடுபவர் உண்டு. ஆனால் சர். ராமசாமியோ ஓராயிரம் களம் கண்டவர்.

டாக்டர் லட்சுமணசாமி மருத்துவத்திலும், கல்வியிலும் சிறந்தவர். மருத்துவம் மனித உடலைப் பாதுகாக்க--கல்வி மனித மனத்தைப் பாதுகாக்க என்ற வகையில் அவரது பணி பயன்பட்டு வருகிறது. உறுதியான உடலில் தூய்மையானதொரு மனம்--இந்த அவசியத்தை பல்லாயிரவர் உள்ளங்களில் பதிய வைத்தவர் அவர்.

அரசியற் புயலில் அவர் சிக்கிக் கொள்ளவில்லையென்றாலும் தூரத்தே நின்று அரசியலைக் கவனித்து அதை அமைதிப்படுத்துவதில் அவர் ஈடுபட்டார்.

இவ்விரட்டையர் தங்கள் அலுவல் யாவிலும் கடைப்பிடித்த பண்பாடும் நாகரிகமும் தனிச் சிறப்பானவை.

அந் நாட்களில் நடந்த அரசியல் விவாதங்கள் மிக நேர்த்தியானவை. பிரச்சினைகளும்--சாதனைகளுமே விவாதிக்கப்படும். அந்த விவாதத்துக்கப்பால் தோழமை உணர்வே அங்கு மிகுந்திருக்கும்.

இந்நாட்களில் அத்தகைய விவாதங்கள் நிகழ்த்தப்படுகின்றனவா? பிரச்சினைகளைப் பற்றிப் பேச்சு எழுகின்ற நாமே பிரச்சினைகளாக மாறி விடுகிறோம். அந்த அளவுக்கு நாம் குன்றி விட்டோம்.

இத்துணைக் கண்டம் அதன் ஜனநாயக வாழ்வின் இருபதாம் வயதினைக் கடந்து கொண்டிருக்கிறது. சர். ராமசாமி போன்ற பெரியவர்கள் இந்த ஜனநாயக வாழ்வை முறைப்படுத்திட முன் வந்தால்தான் ஜனநாயகம் தழைத்தோங்கும். இல்லையேல் அழிவுப் பாதையை நோக்கி இட்டுச் செல்வதாகவே இருக்கும்.

ஜனநாயகம் என்பதால் சாதாரணத் திறமையுடையவர்கள் அரசியலை வழி நடத்திச் சென்றால் போதுமென்று எண்ணுவதோதோ கூடாது. உரம் மிக்க வல்லவர்கள் தேவை. நடத்தும் ஆற்றல் உள்ளவர்கள் தேவை. எனவே 81 வயதிலும் வலிமையுள்ளவர்களாக 81 வயதாகியும் உடல் உறுதியோடு-81 வயதில் 50 ஆண்டைய செறிந்த அனுபவங்களையும் கொண்ட இவ்விரட்டையரது வழிகாட்டுதல் நமக்குத் தேவை. வருங்காலத் தலைமுறையினரது நன்மை கருதி தங்களது செறிந்த அனுபவங்களை அவர்கள் வழங்கிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் சுயசரிதையை இவர்கள் இருவரும் எழுதிட வேண்டுகின்றேன். அப்படி எழுதப்பட்டால் அது இவ்விருவரது வாழ்க்கையைப் பற்றியதாக மட்டுமிராது. இவர்கள் வாழ்ந்த காலத்தைப் படம்பிடித்துக் காட்டிடும் உன்னதமானப் புகழ்மிக்க அத்தியாயமாக அது விளங்கும்.

"நான் எடுத்துக் கூறும். கொள்கையில் எனக்கு நம்பிக்கை உண்டு. இதில் மற்றவர்களும் நம்பிக்கை வைக்கும் காலம் வரும்வரை நான் காத்திருக்கத் தயார். அந்தக் காலம் வரும்வரை விளைவுகளையும் ஏற்கத் தயார்" என்று கென்னடி கூறியதுபோல அதே உறுதியுடன் சர். ராமசாமி விளங்கி வருகிறார்.

ஆங்கிலக் கல்வியின் அவசியம் பற்றிய அவரது கருத்துக்களை இப்போது இந்தியைந் தாய் மொழியாகக் கொண்டவர்களும், ஏற்றுக் கொள்கிறார்கள். ஆங்கிலத்தின் இடத்தில் இந்தி இத்தனை அவசரக் கோலத்தில் திணிக்கப்படுவது கூடாதென்று அவர்கள் சொல்கிறார்கள்.

இவ்விரட்டையரது வாழ்வு மகத்தானது. மகோன்னதமானது. சூட்டினை ஏற்படுத்தாது. ஆனால் ஒளியினை உமிழும்.

இவர்களது சேவை இன்னும் நாட்டுக்குத் தேவை. சந்தைச் சதுக்கத்தில் வந்து நின்றுதான் மக்களை இவர்கள் வழிநடத்த வேண்டுமென்பதில்லை.

தாங்கள் இருக்குமிடத்துப் பலகணியில் நின்றபடியே இவர்களால் மக்களுக்கு வழி காட்டிட முடியும்.

இவர்கள் நிறை வாழ்வு வாழ்வார்களாக.