உணர்ச்சி வெள்ளம்/ஏழைகளின் இதயத்தலைவர் ஜீவா

ஏழைகளின் இதயத்தலைவர் ஜீவா


அருமைத் தலைவர் ஜீவாவின் புதல்வி உஷா தேவியின் இந்த மணவிழாச் செய்தி பத்திரிகைகளிலே வெளிவரும்போது அந்தச் செய்தியைப் படிக்கின்ற அனைவரும் மண மக்களை வாழ்த்துவார்கள். இந்த மணவிழா தமிழகம் முழுமைக்கும் மகிழ்ச்சி அளிக்கும் மணவிழாவாகும். காரணம், தமிழகத்திலுள்ள எல்லா மக்களின் நன்மதிப்பைப் பெற்று, குறிப்பாக ஏழை எளிய மக்களின் இதயங்களில் இடம் பெற்றவர் ஜீவாவாகும். அத்தகைய ஒப்பற்ற தலைவரின் புதல்வியின் திருமணத்தைத் தமிழகத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் இல்லத்தில் நடைபெற்ற மண விழாவாகக் கருதி மகிழ்வார்கள்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் பெறாத பேற்றை இந்த மணமக்கள் பெற்றிருக்கிறார்கள். காரணம்; இந்த விழாவை பெரியார் அவர்களே முன்னின்று நடத்துகிறார்கள்.

நான்கூடப் பெரியாரிடம் வரும்போது மணமான பின்னர் வந்தேன். எனக்குக்கூட அந்தப்பாக்கியம் கிடைக்கவில்லை.

ஒரு பெரிய குடும்பத் தலைவர் தனது இல்லத்தில் நடைபெறும் விழா நிகழ்ச்சியின்போது அமர்ந்து ஆனந்தப்பட்டுக் கொண்டிருப்பார்."அதோ அவன் என் மூத்தமகன் டாக்டர்! இவன் இரண்டாவது பையன் வக்கீல். அவன் மூன்றாவது பையன் என்ஜினியர்" என்று அவர்கள் ஓடியாடி வேலை செய்யும்போது பக்கத்திலிருப்பவர்களிடம் கூறிப் பூரிப்பார்.

அதே போலத்தான் பெரியார் அவர்கள் இங்கே பூரித்த நிலையிலிருக்கிறார்கள். இந்த மணவிழாவில் பல்வேறு கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் ஓடியாடி வேலை செய்ததைப் பார்த்து எல்லோரும் என் மக்கள்தான்; நம்மாலே பயிற்சி அளிக்கப்பட்டவர்கள்தான் என்று பெரியார் பெருமைப்படுவார்.

இந்தப் பெருமை உலகில் வேறு எந்தத் தலைவருக்கும் கிடைத்ததில்லை. பெரியார் அவர்கள் தமிழ் போல என்றும் இளமையோடு இருந்து எந்தக் குழந்தையும் தப்பிப்போகாமல் -- அவர்கள் எந்தக் கட்சியில் எந்தத் துறையில் இருந்தாலும் அவர்கள் சார்ந்திருக்கின்ற கட்சிக்கு மெய்யாகத் தொண்டாற்றும்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும்--பார்த்துக் கொள்வார்.

என் பொதுவாழ்வில் நான் ஏற்றுக்கொண்ட ஒரே தலைவர் பெரியார். நான் அவரிடமிருந்து பிரிந்து சென்றபோது ஒன்றைக் குறிப்பிட்டேன்.

'நான் புதிய தலைவரைத்தேடி அய்யா அவர்களிடமிருந்து பிரிந்து செல்லவில்லை' என்று குறிப்பிட்டேன். அதே நிலையில் தான் இன்றும் இருக்கிறேன்.

குன்றக்குடி அடிகளார் இங்குப் பேசினார், அவர் எத்தனையோ மணமக்களை வாழ்த்திப்பேசியிருப்பார். ஆனால் அவருக்குத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று எண்ணம் ஏற்பட்டிருக்காது.

அதேபோல அடிகளார் கம்பீரமாகக் காட்சியளிப்பதைப் பார்த்து எந்த வாலிபருக்கும் அவரைப் போல் துறவியாக வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டிருக்காது; அவரவர்கள் உள்ள கொள்கைப்படி நடப்பதும், என்ன நெறிமுறைகள் இருக்கின்றனவோ அவற்றை நிறைவேற்றுவதைக் கடமை யாகக் கொண்டு நடத்துதலும் வேண்டும். நாம் வெவ்வேறு இலட்சியத்தில் சென்றாலும் ஒரு இலட்சியத்திற்கு வருபவர்கள்.

பெரியாரவர்களோடும் மற்றவர்களோடும் தம்முடைய லட்சியத்தை விட்டுக் கொடுக்காது பழகினாலும் தம்மைச் சந்தேகப்படுவதாக அடிகளார் குறிப்பிட்டார்கள். அதை அவர் குறிப்பிட்டபோது பெரியார் அவர்களுடன் அரித்துவாரத்திற்குச் சென்றது நினைவுக்கு வந்தது.

மாலை நேரங்களில் பெரியார் கங்கை நதி தீரத்தில் உலாவச் செல்வார். வெண்தாடிப் பளபளக்க மஞ்சள் நிற சால்வை போர்த்திக் கொண்டு பெரியார் முன்னே செல்வார். அவர் எனக்குக் கம்பளிக் கோட்டு வாங்கித் தராததால் குளிர் தாங்காமல் நான் கைகளை இறுக்கக் கட்டிக்கொண்டு அவர் பின்னாலேயே போவேன்.

இந்தக் காட்சியைப் பார்த்தவர்கள் பெரியார் அவர்களைப் பெரிய சாமியார் என்றும், என்னைச் சின்னச்சாமியார் என்றும் கருதிவிட்டார்கள். பெரிய சாமியாருக்கு இருக்கின்ற சக்தியில் சீடருக்குக் கொஞ்சமாவது இருக்காதா என்று கருதி என் காலிலும் பலர் விழுந்து கும்பிட்டார்கள்.

இங்கே நாங்கள் வேறுவிதமாகக் கருதப்பட்டாலும் அரித்துவாரத்திலிருந்தவர்கள் எங்களைச் சாமியார்களாகவே கருதி விட்டார்கள். அதேபோல் சிலர் சந்தேகப்படுவது இயல்பு.

நெடுந்தொலைவு போன மகன் திரும்பத் தந்தையைப் பார்க்க வரும்போது கையில் கிடைத்ததை வாங்கி வந்து தருவான். அதே போல் இன்று பெரியாரைப் பார்க்க வந்த நானும் ஒரு அன்புப் பரிசை--கனியை--ஏதோ என்னால் இயன்றதைக் கொண்டு வந்திருக்கிறேன்.

சுயமரியாதை இயக்கத் திருமணங்களை நடத்திச் சாதி ஒழிப்புக்காகப் பெரியார் பாடுபட்டு வருகிறார். பகுத்தறிவுத் திருமணங்களும் கலப்புத் திருமணங்களும் நாட்டில் ஏராளமாக நடைபெற்றிருக்கின்றன. இந்தத் திருமணங்களைச் செல்லுபடியாக்கச் சுயமரியாதைத் திருமணச் சட்டம் கொண்டுவரப் போகிறோம் என்ற நல்ல செய்தியை-அன்புப் பரிசை-கனியை பெரியாரிடம் அளிக்கிறேன்.