உணர்ச்சி வெள்ளம்/தமிழகத்தின் அறிவுக் கோட்டம்

தமிழகத்தின் அறிவுக் கோட்டம்


ளுநர் அவர்களே! இணைவேந்தர் அவர்களே! துணை வேந்தரவர்களே! பேராசிரியர் பெருமக்களே இன்று பட்டம்பெற வந்துள்ள இளந்தோழர்களே!

மதுரைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாப்பேருரை நிகழ்த்தும் வாய்ப்பினைப் பெற்றமைக்குப் பேருவகை கொள்கின்றேன்.

இப்பல்கலைக் கழகம் தொடங்கி ஓராண்டே ஆகிறது. இதுவே முதல் பட்டமளிப்பு விழாப் பேருரையாகும். இந்த வாய்ப்பு நான் பெற்றிடச் செய்த பல்கலைக் கழகப் பெரியோர்கட்கு என் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நான்மாடக்கூடலில் நிற்கின்றேன்; நானிலம் போற்றிடும் தனிச் சிறப்பினைப் பெற்றுத் தமிழகத்தின் அறிவுக் கோட்டமாய்த் திகழ்ந்தது மதுரையம்பதி என்ற எண்ணம் தந்திடும், எழுச்சி பொங்கிடும் நிலையில் நிற்கின்றேன்.

தமிழ் வளர்த்த பாண்டியர்களை
எண்ணாத இதயம் எதுவுமில்லை!

இங்கு நின்றிடும் எவருக்கும், அன்றொரு நாள் அறிவாளர் அரண் அளிக்க அரசாண்ட பாண்டியப் பெருமன்னர், தமிழ் வளர்த்து, தமிழர்தம் தனிச் சிறப்பினைக் காத்து புகழ்க்கொடி நாட்டி, தரணி மெச்சக்கோலோச்சி வந்த வரலாற்று நினைவு ஏழாமலிருக்க இயலாது. நெஞ்சு நெக்குருகும் நினைவலைகள் எழத்தான் செய்யும்.

இன்று, நான் இங்கு நின்று பட்டச் சிறப்புப் பெற்றிட வந்துள்ளோரையும் பெரும் பேராசிரியர்களையும் கண்டு களித்திடுகின்றேன்; இங்கன்றோ அந்நாளில் பாண்டியப் பேரரசர் சங்கப் புலவருடன் அளவளாவி, அறிவுப் புனலாடி அகமகிழ்ந்திருந்தனர் என்பதனை எண்ணுகின்றேன். இன்பத் தேன்சுவை நுகர்கின்றேன்.

மனக் கண்ணால் காணுகின்றேன். முதுபெரும் புலவர்கள் அவைநோக்கி, முந்நூறு கல் தொலைவினின்றும், மூதறிஞர், காணீர் தமிழ் நெறியை-- தாரணியோர் மெச்சி ஏற்றிடத் தக்கதோர் நன்னெறியை--ஈரடியில் யான் இயற்றியுள்ள சீரணியை என்றுரைத்த வண்ணம், திருவள்ளுவனார் வந்திடும் காட்சியினை,

தத்தமது ஏடுகளை, வித்தகர் போற்றிடத் தக்கவென விளக்கி, புலவர் பெருமக்கள் பேருரையாற்றிய பெருமிதமிகு காட்சியெலாம் காணுகின்றேன்; காணாதார் எவருமிரார்.

எத்தகைய அறிவாற்றல். என்னென்ன திறனாய்வு, இங்கிருந்தன அற்றைய நாளில்|

இந்தக் கவிதை எம்மான் இயற்றியது என்றியம்பிய சொற்கேட்டும், 'நெற்றிக்கண் காட்டினாலும் குற்றம் குற்றமே' என்றுரைத்த அரிமாப்பெரும் புலவர் நக்கீரர் தெரிகின்றார்; நந்தமிழர் கொண்டிருந்த மாண்பு தெரிகின்றது.

அச்சம் தவிர்த்திடுக! நவநிதியந் தந்திடினும் நந்திக் கிடந்திட இசையாதீர்! வாய்மைதனைக் காத்திடும் வன்மைதனைப் பெற்றிடுக! அதற்காக நெருப்பாற்றில் நீந்திடவும் துணிந்திடுக! யாந்தமிழர் என்பதனை மெய்ப்பித்திடுக! என்றன்றோ அந்நாள் நிகழ்ச்சி நமக்கெல்லாம் அணையிடக் காண்கின்றோம்.

மொழியின் பெயராய் ஓநாய் வேதாந்தமா?

இந்தத் திருநாட்டில் பிறந்திட்ட நாமெல்லாம் ஆன்றோர் அமைத்தளித்த அரு மரபுதனைக் காத்தல் நீங்காத நிற்கடமை என்பதனை உணர்கின்றோம். ஏறுநடை போட்டிடுக! ஏற்றமிகு நிலையதனை இந்நாடு பெற்றிடவே உமதாற்றல் பயன்படட்டும் என்றெல்லாம் புலவர் பெருமக்கள் கூறி நிற்கின்றார்கள்; காண இயலவில்லை. கேட்கின்றோம், அவ்வுரையை.

பாண்டிய நாடிதற்குப் பங்களித்த மாமதுரை, தமிழ் மரபு காத்திட்ட மன்றம் கண்ட மதுரை, தேமதுரத் தமிழோசை திக்கெல்லாம் எழச் செய்த திருமதுரை, வீரப் போராற்றலாம் மட்டுமின்றி அறிவுக்கணை தொடுத்த மாண்பினாலும், பெருமைதனைப் பெற்ற வெற்றிக் கோட்டம். "அந்த நாளும் வந்திடாதோ!" என்ற உணர்ச்சியால் எவரும் உந்தப்படும் நிலைபெறுவர், மாமதுரைப் பதியின் வரலாற்றுச் சிறப்பறியின்!

ஆம்! ஆயின் ஏக்கம் நமக்கெதற்கு? அந்நாட் சிறப்பினை இந்நாளும் கண்டிடலாம். இவரெல்லாம் அதற்கே ஒப்படைத்துள்ளார்கள். இவர் ஆற்றல் துணைகொண்டு, தமிழ் மரபும் தமிழ் மாண்பும் என்றும் ஒளிமயமாய்த் திகழ்ந்திடச் செய்திடலாம் என்றோர் உறுதியினைப் பெறுகின்றேன்; பெறுகின்றேன்; பெற்றிடச் செய்கின்றீர்; பெரும் புலவர்களாம் நீவீர் பட்டமளிப்பு விழாவினிலே பாங்குடனே வந்துள்ள அறிவரசராம் நீவிர்; உமக்கென்ன உரைத்திட உளது? உம் உள்ளம் அஃதறியும். உமது பெரும் பேராசிரியர் கருத்து அளித்துள்ளார்; என் கடன் நீரறிந்ததனை மீண்டும் நினைவு படுத்துவதேயாகும்.

மயில் ஆடுவது பிறர் கண்டு மகிழ!
பட்டம் பெறுவது தொண்டு புரிய!

பட்டம் பெற்றிடுகின்றீர்! பல்கலையில் வல்லுநர் ஆகின்றீர்! பல்கலைக் கழகம் ஈன்றெடுத்த நன்மணிகளாகின்றீர்கள்; ஆம்,ஆயின், இஃது முடிவா, தொடக்கமா? அஃதே கேள்வி. பட்டம் பெற்றுள்ளீர்! பாராட்டுக்குரியீர், ஐயமில்லை ஆயின் பட்டம் எதற்கு? காட்டிக் களித்திடவா? அன்றிப் பணிசெய்திடக் கிடைத்திட்ட ஆணையெனக் கொண்டிடவா? நுமக்கா? நாட்டுக்கா? பொருள் ஈட்டிடவா? நாட்டுப் பெருமையினைக் காத்திடவா எதற்கு இப்பட்டம் பயன்பட இருக்கிறது? அஃதே கேள்வி! விழாத்தந்திடும் மகிழ்ச்சியுடன் இழைந்து நம் செவி வீழ்ந்திடும் கேள்வி!

தான் உண்ட நீரதனை, பன்மடங்கு பெருக்கி, பார் மகிழத் தருவதற்கே, சூல் கொண்டுலவுவது மேகம். அறிகின்றோம்.

தன் தோகைதனை விரித்து கலாப மயில் ஆடுவது தானே கண்டு களித்திடவா? பிறர் காண; பிறர் மகிழ!

தான் காத்து வைத்துள்ள பொற்குவியல் தனைக்கொண்டு, தானேயா அணிகலனைச் செய்து நிலமாது பூட்டிக் கொள்கின்றாள்?--இல்லை-- மற்றையோர் பெற்றிடத் தருகின்றாள்.

ஒளிதனை உமிழ்ந்திடும் திருவிளக்கு எதற்காக? இருளில் உள்ளோர் இடர் நீக்க!

பட்டம் பெற்றிடும் சிறப்புடையீர்! நீவீர், திருவிளக்கு--பொற்குவியல்--புள்ளிக் கலாபமயில்--கார்மேகம்--நாட்டைச் செழிக்கச் செய்திடும் வல்லுநர்கள். இசைபாட மக்கள் உமதாற்றலை ஈந்திட வந்துள்ளீர், இதற்கான அனுமதிச்சீட்டே இந்தப் பட்டங்கள். இத்தகையோரைப் பயிற்றுவித்து அனுப்பிக் கொடுப்பதுவே பல்கலைக் கழகத்தின் தனிச்சிறப்பு; நாட்டின் பொதுவுடமை நீவீர்! இன்று நமக்கென்று பெற்றுள்ள நற்பட்டங்கள் மறந்திடுவோர் அல்லர் நீவிர். எனினும் எடுத்துரைக்க வந்துள்ளேன்--இயம்புகின்றேன்.

எந்நாடாயினும், இடரிலும், இழிவிலும் படாமல் இருளகன்று ஏற்றம் பெற்று இருந்திட வேண்டுமெனில் அந்நாட்டினில் தொடர்தொடராய், அறிவாளர் தோன்றிய வண்ணம் இருந்திட வேண்டும்; நன்று இது, தீது இது, நமதிது, பிறர் தந்ததிது, மரபு இது, மருள் இது என்பதனை ஆய்ந்தறிந்து கூறுவதற்கும் அவ்வழி நடந்து மக்கள் மாண்பினைப் பெற்றிடச் செய்வதற்கும் ஆற்றல் மிக்க அறிவுப் படை எழுந்தபடி இருக்க வேண்டும்! அதற்கான பயிற்சிக் கூடம் வேறெதுவாய் இருந்திட முடியும்? இஃதே அப்பயிற்சிக் கூடம், பல்கலைக் கழகம். நாடு பல்வளமும் பெற்றிடும் நற்கலையைக் கற்றிட அமைந்துள்ள நக்கீரக்கோட்டம்.

1964-66-ஆம் ஆண்டுத் தேசியக் கல்விக் குழுவினர் இதனை வலியுறுத்திக் கூறியுள்ளனர். எவருக்கும் கட்டுப்படாமல், இழுப்பார் பக்கம் சாய்ந்து விடாமல் சிந்தித்து உண்மை. அறிந்து, அறிந்ததனை விளக்கமுடன் எடுத்துரைத்து ஆளடிமையாகாமல், அச்சமற்று நிற்போரை அளிப்பதற்கே பல்கலைக்கழகம் என்ற கருத்துப்பட அக்குழுவினர் கூறியுள்ளனர்.

ஆய்தறிதல் வேண்டும்; அதற்கேற்ற அஞ்சாமை வேண்டும்; இன்றேல், சிந்தனையைச் சிறையிலிட்டுக் கொடுமையைக் கோலோச்சச் செய்வதற்கு உடந்தையானோர் ஆகிவிடுவோம்--என்றுரைக்கிறார்--எச்சரித்திருக்கிறார் பெர்ட்ராண்டு ரசல் எனும் பெருமகனார்.

தமிழ்ச் சான்றோரின் நல்லுரைகளைத்
தரணி அறிந்திடச் செய்வோம்!

ஈராயிரம் ஆண்டுகட்கும் முன்னர் இங்கு அமர்ந்திருந்த புலவோர்கள் கூறிச் சென்றார்கள், இவை போன்ற ஏற்றமிகு நல்லுரைகள் பற்பலவற்றை! இடையில் அவை மறந்தோம், அவ்வலுற்றோம். இன்று அவனியின் பிற பகுதிகளிலுள்ள ஆன்றோர் அதனை அறிவிக்கின்றார்; நமக்குண்டு அந்தக் கருவூலம் நெடுங்காலமாக என்பதனை உணர்கின்றோம்; நாம் தமிழர் என்பதனை அறிகின்றோம்; நானிலம் இதனை அறியச் செய்திடும் தொண்டு புரிந்திட உறுதி கொள்கின்றோம்.

பட்டம் பெற்றிடும் இத்திருநாள் உவகை பெற்றிடும் விழா நாள்; ஐயமென்ன? ஆயினும் உவகை பெற்றிட மட்டுமே அமைந்ததன்று; உறுதி கொண்டிடவும் உள்ளதோர் நன்னாள். நாட்டைக் காத்திடும் நல்ல பணிக்கு நம்மை நாமே ஒப்படைத்திருக்கின்றோம் என்பதனை உணரும் நாளே இந்நாள்.

மதுரைப் பல்கலைக் கழகம் ஓராண்டுப் பருவத்தில் உள்ளது.

நூற்றாண்டு விழா நடத்தி முடித்திட்ட பல்கலைக் கழகங்கள் உள்ளன--நம்நாட்டில்.

பத்தோடு பதினொன்று என்ற முறையினிலே அமைந்ததன்று, மதுரைப் பல்கலைக் கழகம்.

தமிழரின் தனித்தேவை ஒன்றினைக் கருத்திற் கொண்டு துவக்கப்பட்டதாகும் மதுரைப் பல்கலைக் கழகம்

நூறு ஆண்டுகட்கு முன்னர் பல்கலைக் கழகங்கள் துவக்கப்பட்டபோது, நாடு தன்னரசு இழந்து தலை கவிழ்ந்து இருந்தது. மக்கள் மனம் வெதும்பிக் கிடந்தனர்

பல்வேறு துறைகளிலே சீர்குலைவு; எங்கும் அறியாமை மட்டுமென்று; இந்நாட்டினர் ஏதும் அறிந்திட வல்லர் அல்லர் என்ற எண்ணம் கப்பிக் கொண்டிருந்த நிலை; இங்கு எவரும் இதற்கு முன்னர் நினைத்துப் பார்த்திருக்க முடியாத அறிவுக் கலைகளை மேனாட்டார் வகுத்தளிக்கின்றார் என்ற உணர்வு மேலோங்கிய நிலையுடன், பல்கலைக் கழகம் நுழைந்தனர்.

அன்றைய நாட்களில் பயிற்சி தந்திட முனைந்தோரும் பரிதாப உணர்வுடனே பாடம் கற்பிக்க முற்பட்டனர். பிறநாட்டில் என்னென்ன கண்டனர் என்ற வியப்பு உணர்ச்சிக்கே முதலிடம்; நம் நாடு ஏதேது அறிந்திருந்தது என்பது பற்றிய கேள்விக்கு ஒதுக்கிடம்!

இந்நிலையில் வளர்ந்தன, பழம்பெரும் பல்கவைக் கழகங்கள்--ஆண்டான் அடிமைகட்கு அன்பு காரணமாக, அறிவு வழங்கிடவும், வேலைக்கு ஏற்ற ஆட்கள் அமைத்திட்டஇடங்கள் என்று அவை கருதப்பட்டன.

அவற்றினிலே பயிற்சி பெற்று, பட்டம் பெற்ற அறிவாளரில் மிகப் பலரும், நடையாலும், உடையாலும், நாட்டத்தாலும், பிறந்த நாட்டில் வாழுகின்ற வேற்று நாட்டு வடிவங்களாகத் தம்மை ஆக்கிக்கொண்டனர். அதிலே பெருமகிழ்வும் கண்டனர். நெடுங்காலம் இந்நிலை! இன்று அஃது பழங்கதை!!

மதுரைப்பல்கலைக் கழகம், அடிமைத்தளை அறுத்து, ஆளுதற்கு உரிமையும் தகுதியும் பெற்றோம் நாம் என்ற முழக்கமிட்டு விழித்தெழுந்து மக்கள் உலா வந்திடும் நாட்களிலே அமைந்துள்ளது.

"ஒளி படைத்த கண்ணினாய் வா! வா! வா!' என்ற பாரதியின் வீர அழைப்புக் கேட்டு, அணி அணியாய் வீரர்கள் திரண்டு வந்தனர்; பிறகு எழுந்தது இந்தப் பல்கலைக்கழகம்.

நாட்டுக்கு விடுதலை கிடைத்திட்டதுமின்றி, மனத்தளைகள் மெல்ல மெல்ல அறுபட்டிடும் நிலையையும் நாம் கண்டோம்; அந்தச் சூழ்நிலையிலே இப்பல்கலைக் கழகம் கண்டோம். சிந்தனை நமது உரிமை என்ற குறிக்கோளுக்கான கோட்டம் இஃது என்பதனை உணர்கின்றோம்.

மாசு படிந்த மணிபோல
நம் எண்ணக் குவியல் இருக்கிறது

எல்லாம் பிற நாடுகளிலே உள; நம் நாட்டிலே ஏதும் இல்லை என்ற பிச்சை மனப்பான்மை செத்தொழிந்து எமக்கு ஈந்திடும் என்று எந்நாட்டவரும் கேட்டுப் பெற்றிடத்தக்க ஏற்புடைய எண்ணக் குவியல் எம்மிடம் உண்டு; அது மாசுபடிந்த மணிபோல மங்கியதோர் ஓவியம்போல உளது; மாசு துடைத்திடுவோம்; மணி ஒளியைக் காட்டிடுவோம் என்ற எழுச்சியுடன் கூறத்தக்க விழிப்புணர்ச்சி மேலோங்கி உள்ள காலம் இது; அதனைச் செவிலித் தாயாகப் பெற்றுள்ளது இம்மதலை--மதுரைப்பல்கலைக் கழகம்.

எனவே, இதற்கென்று ஒரு தனித்தன்மை, இதற்காக ஓரு தனிப்பாதை இருத்தல் வேண்டும். இந்தப் பல்கலைக்கழகம், தமிழகத்துக்குக் கருவூலந்தன்னை உலகு காணுதற்கான வழிவகுக்கும் கோட்டமாகி, புலிப்பொறித்தான். கயல்பொறித்தான், ஆரியப்படை கடந்தான்--கங்கை கொண்டான், கடாரம் வென்றான் என்றெல்லாம் புல்லரிக்கும் வரலாற்றினைப் படிக்கின்றோமே, அதற்கு ஒப்ப, குறளளித்தார், மேகலை ஒளி தந்தார், அகமும் புறமும் அறிவித்தார் என்று அவனியிலுள்ள நாடுகளில் வித்தகர் மெச்சிடத்தக்க, புது வரலாறு சமைத்திடுதல் வேண்டும்; அதற்கேற்ற அணி வகுப்பைத் திரட்டுதல் இந்தப் பல்கலைக் கழகத்தின் தனித் திறனாய் அமைந்திடுதல் வேண்டும். பாடமுறை, பயிற்சி முறை, தேர்வுமுறை எல்லாமே, இந்தத் தனி நோக்கம் கொண்டிடுதல் மிக நன்று.

உரியவர்கள் இது பற்றி ஆய்ந்தறிதல்வேண்டும். விருப்பம் உரைக்கின்றேன், வடிவம் கொடுத்திடும் பொறுப்பில் உள்ளோர் செய்திடுவர் எனும் ஆர்வம் கொண்டு.

அச்சம் தவிர்த்தல், ஆய்ந்தறிதல், நாட்டுநிலை உயர்த்தல், பிறநாடுகட்கு நம் தனிச்செல்வம் ஈது எனக் காட்டிடல், அளித்திடல், இவை எமது பணி என்று கூறிடுவீர். இந்த நிலை பெற்றோம் என்பதனை அறிவிக்கும் சான்றுகளே, யாம் பெற்றுள்ள பட்டங்கள் என்பதனைச் சொல்லாலும் செயலாலும் காட்டிட வாரீர் எனக் கனிவுடன் அழைக்கின்றேன்.

இவை ஏட்டில் படித்திட இனிப்பவை; விளக்கிப் பேசிட ஏற்றவை; வியந்து கூறிடத் தக்கவை. ஆனால், நடை முறைக்குக் கொண்டு வருதல் எளிதன்று. தொடர்ந்து கடைப்பிடித்தல் அரிது.

அதற்குத் தளராத உறுதியும், மங்காத ஊக்கமும், ஓயாத உழைப்பும், சீரான நோக்கமும், தன்னல மறுப்பும், மிக மிகத் தேவை. பல்கலைக் கழகம் இந்தப் பண்பினைத் தந்திடும்; தந்துள்ளது என்று எண்ணுகிறேன். ஆம்! உமது சீரிய பணியின் மூலம் மெய்ப்பிக்க வேண்டுகின்றேன்.

தேவையற்றவை, தீது தருபவை, பொருளற்றவை. பொருத்தமற்றவை, இவையெல்லாம் பழமையின், பெயர் கொண்டோ நமது உடமை என்ற பாசம் காட்டியோ நெளிந்திடக் கண்டபின், விட்டு வைத்திடாமல் அவற்றினை நீக்கிடும் அறப்போரினைத் தொடுத்திடுதல் வேண்டும்.

பிறநாட்டுத் தேனென்றால்
சுவைக்காமலா இருக்கும்?

அவர் கூறியுள்ளார், ஆகவே அஃது அறிவுடையதாகவே இருந்திடுதல் வேண்டும்--என்று எண்ணி இருந்திடாமல், அவர் உரைத்தது இஃது என்பதற்கு முதவிடம் தராமல் உரைத்துளது யாது என்பதற்கே முதலிடம் தந்து உண்மையெனில், உயிர் கொடுத்தேனும் காத்திடுவோம். அன்று எனில் உயிர் போவதெனினும் எதிர்த்து நீக்கி அறிவுத்துறைப் புரட்சியிலே ஈடுபட வருமாறு பட்டம் பெற்றுள்ள நல்லோரை அழைக்கின்றேன்.

இந்நாட்டுத்தேள், எனின் கொட்டிடின் குளிர்ச்சியா காண்போம்? பிறநாட்டுத் தேன், எனின் பருகிடிற் கசப்போ இருந்திடும்?

எங்கிருந்து கிடைத்திடினும் ஏற்புடையதெனின், எமதாக்கிக் கொள்வோம் என்ற நோக்கம் தேவை; அதனைத் தந்திடவும் அதன்மூலம் பயன் கண்டிடவும் இணைந்து பணியாற்றிட வேண்டும்.

கத்துகடல் மூழ்கி முத்தெடுத்தோர்
தந்தையின் கழுத்திலா கட்டுவர்?

பல்கலைக் கழகங்கள் வளர்ந்துள்ளன, வளருகின்றன. கல்விக்கூடங்கள் பெருகி வருகின்றன. எனினும் இன்றும் மக்கள் தொகையுடன், பட்டம் பெற்றோர் தொகையினை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, எத்தனை சிறிய அளவினது நமது முன்றேற்றம் என்பதனை உணரலாம்.

எனவேதான் நாட்டு நிலை உயர்ந்திட, நல்லோர் மிகப் பலருக்கு கிடைத்திடா வாய்ப்பை பெற்றுள்ள உம்மிடம் மக்கள் நிரம்ப எதிர்ப்பார்க்கின்றனர். நீவீர் இந்நாட்டை சூழ்ந்துள்ள இல்லாமை, போதாமை, அறியாமை, கயமை என்னும் பகையினை வீழ்த்திடப் புறப்படும் முன்னணிப் படையினர்.

பட்டந்தனைக் காட்டிப் பாங்கான வாழ்வு பெற முந்திக்கொள்ளும் நிலையினர் என்ற நிந்தனையை நீக்கிடுக! நீள் வெற்றி பெற்றிடுக! என வாழ்த்துகின்றேன்.

பட்டம் பெற்றிடுவோர் குறிக்கோளற்றுக் கிடந்திடின் நாடு குலையும்; எதிர்காலம் எழில் உள்ளதாக அமையாது. குறிக்கோளற்ற நிலையே மனக்குழப்பம், கொதிப்பு, அதிர்ச்சி, ஆர்ப்பரிப்பு, ஒழுங்கற்ற செயல்கள்: ஊறு விளைவிக்கும் போக்கு, கலகம் விளைவித்தல், கட்டுக்கு உட்பட மறுத்தல் ஆகியவை எழ காரணமாகிறது என்று கருதுகிறேன்.

நம் நாட்டு இளைஞர்களிடம் குறிப்பாக மாணவரிடம் கேடு நிறைந்த இயல்புகள் மிகுந்து விட்டிருப்பதாகப் பலர் கவலை தெரிவித்துள்ளார்கள். நான், நம் நாட்டு இளைஞர்களிடம் குறிப்பாக மாணவரிடம் நம்பிக்கை இழந்துவிடவில்லை; மாறாக அவர்களின் இயல்பிலே அடிப்படையான கோளாறு எதுவும் இல்லை. அவர் முன் குறிக்கோள் சீரிய முறையிலே காட்டப்படாததாலும் அறிவுரை வழங்கிடும் அன்பர்களில் பலரும் தன்னலப் பிடியினிற் சிக்கித் தகாதன செய்கின்றனர் என்பதைக் காண நேரிடுவதாலும் அவர்கள் இயல்பு திரிந்து விடுகிறது--நேர்வழி அடைபடுகிறது--கேடு தரும் முறைகள் இனிப்பளிக்கின்றன--என்று கருதுகிறேன்.

எனவே இளைஞரும் மாணவரும் நல்லியல்புடன் இருந்திட வேண்டுமெனில், மற்றையோர், நமது சொல்லும் செயலும் பொது நலனுக்கு உகந்ததாக அமைந்திடுமென்று பார்த்துக் கொள்வது இன்றைய அவசரத்தேவை என்பதைக் கூறிட விழைகின்றேன்.

அதேபோது மாணவர்கள் தமக்கு அளிக்கப்பட்டுள்ள வாய்ப்பு எத்தனை அருமை மிக்கது என்பதனை உணர்ந்து அதற்கேற்பத் தமது செயலினை வகுத்துக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

தந்தையின் கழுத்திலே பூட்டிடவோ, கத்தும் கடல் மூழ்சி முத்தெடுப்பார். தனக்கென வந்துள்ள தையலன்றோ அதற்கு உரியாள்!

அரைத்தெடுத்துப் பூசி மகிழ்தற்கன்றோ சந்தனம்!--அடுப்பு எரிப்பதற்கோ? பட்டம் பெறுவதும் பயிற்சி பெறுவதும் நாட்டினருக்கு நல்வாழ்வு தந்திட! எனக்கென்ன தருகின்றனர்--ஏன் இந்தத் தாமதம் என்ற கணை தொடுக்க மட்டுந்தானா?--எவரும் அதுபோல் கூறார்.

உம்மிடம் மிகுதியான நம்பிக்கை கொண்டுள்ளோரில் நானும் ஒருவன். புதியதோர் உலகு செய்வோம்--என்று பாடிச் சென்ற பாவலர்--உம் போன்றோரை மனதுட் கொண்டே பாடினார். உம்மிடமின்றி வேறு எவரிடம் தூய தொண்டாற்றும் திறனை எதிர்பார்க்க முடியும்?

மாணவர்களுக்குக் குறிக்கோள்
தெளிவாக அமையவேண்டும்!

குறிக்கோள் தெளிவாக அமைந்திடின் மாணவர்களிடம் மாண்புமிகு செயலினை எதிர்பார்க்க முடியும் என்றுரைத்தேன். இந்தக் குறிக்கோளை மாணவர் பெற்றிடத்தக்க விதத்தில் பாடத் திட்டமும்--பயிற்சி முறையும் - பழகு முறையும் கல்விக்--கூடங்களில் அமைந்திட வேண்டும்.

கல்விக் கூடங்களின் எண்ணிக்கை பெருகி அரசுகளின் வருவாய்த்துறை அதற்கேற்ப அமையாதிருக்கும் நிலையில் கல்விக்கூடங்கள் எவ்விதமான சூழ்நிலையில் இயங்க வேண்டுமோ அவ்விதம் இருந்திடச் செய்வதும் இயலாததாக உள்ளது.

படிப்படியாக இந்நிலையிலே செம்மைப்படுத்த அரசு முனைந்து பணியாற்றி வருகின்றது. ஆண்டு பல ஆகக்கூடும், அடிப்படைத் தேவைகளையேனும் அளித்திட முடிவதற்கு!

அதற்கே பொருள் ஈந்திட வேண்டியுள்ளது. அதுவும், எந்நிலையில் இப்பொருளைப் பெறுகின்றோம்--தருகின்றோம் என்பதனை எண்ணிப் பார்த்திட வேண்டும்.

முழுவயிறு காணாதோர், முதுகெலும்பு முறியப் பாடுபடுவோர், வாழ்வின் சுவை காணார், வலியோரின் பகடைக் காய்கள், ஓடப்பர்--ஆகிய இவரெல்லாம் தருகின்ற வரிப்பணமே, கோட்டையாய், கொடிமரமாய், பாதையாய், பகட்டுகளாய், அமுல் நடத்தும் அதிகாரிகளாய், அறிவு பெற அமையும் கூடங்களாகத் திகழ்கின்றன.

வியர்வை பணமாகிறது--வரியாகப் பெறப்படுகிறது; அதனைக்கொண்டே பல்கலைக் கழகம் முதல் தொடக்கப் பள்ளிவரை கட்டப்பட்டுள்ளன.

எத்தகைய தியாகக் கோட்டமாக இந்நாடு இந்தாளிலுள்ளது என்பதனை, எத்துணை ஏழைமைக்கிடையில் இந்நாட்டு மக்கள் தாம் பெற்றிராத பெரிய வாய்ப்பினை நமக்கு அளிக்கின்றார் என்பதனை மாணவர் உணர்ந்திடின்--அவர் உணர்வர். அவர்களுடைய பொறுப்புணர்ச்சி மிகுந்திடும். ஏற்புடைய செயலில் ஈடுபடுவதே இத்தனை தந்திடும் ஏழையர்க்கு நாம் காட்டும் நன்றியறிதல் என்றறிவர்.'

அது மாணவர் உலகில் புதியதோர் திருப்பத்தைத் தந்திடும்.

கனவு காண்கின்றேனா? இல்லை! மாணவர் நினைப்பு அறிந்து கூறுகின்றேன். எதிர்காலம் அவர்களுடையது. அதனை இருளகற்றதாக்கிவிடுவது அவர்கள் பொறுப்பு. அதற்கான ஆற்றல் மிக்கோர் அவர்கள். இஃது எனது நம்பிக்கை.

ஒவ்வொரு நாட்டிலும், சிறப்பு மிக்க கட்டங்களில் மாணவர்கள் முன்னணியில் நின்று பணி புரிந்தனர் என்பதனை வரலாறு காட்டுகின்றது.

இன்று மாணவர்களாக நீவிர் இருந்திடும் காலம் நமது நாட்டின் புதிய வரலாறு எழுதப்படும் காலமாகும்.

கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி தரக்கூடிய லட்சியங்கள் நம்முன் நிற்கின்றன.

ஆனால், அதே வரிசையில் வசீகரப்பூச்சுகளுடன், மயக்கமூட்டத் தக்க பேச்சுகளையும் குறிக்கோள் என்ற பெயரால் நிற்கவிடுகின்றனர். தெளிந்து அறிதல் வேண்டும்.

நாட்டிலே ஒற்றுமை வேண்டும்--இது குறிக்கோள்--அனைவரும் ஏற்கத் தக்கது; இதன் வெற்றிக்காக அரும்பணியாற்றுவது மாணவர் கடன்.

“நாட்டின் ஒற்றுமைக்காக--உன்மொழி, உன் மரபு அழிந்திடவும் ஒருப்படவேண்டும்; பிற மொழியின் ஆதிக்கத்தை ஒப்புக்கொள்ளவேண்டும்;"--இஃது அறிவுள்ள எவரும் ஏற்க முடியாதது. தன்மானமுள்ள எவரும் எதிர்த்தாக வேண்டியது.

இதனை இலட்சியம் என்றோ திட்டம்
என்றோ கூறுவது, வட்சியம் என்பதற்குக்
களங்கம் தேடுவதாக முடியும்.

நாட்டுப் பொதுச்செல்வம் நாளும் வளரவேண்டும். அதற்கான முறையில் அனைவரும் உழைத்திட வேண்டும்--இஃது எல்லோரும் ஒப்புக்கொள்ளத்தக்க லட்சியம்.

ஆடுகின்ற ஓநாய் கூறுவதுபோல
நாம் நடந்திடக் கூடாது

நாட்டுச் செல்வம் பெருகட்டும்; அது நாலாறு பேர்களிடம் சென்று சிக்கிக்கிடப்பினும் கவலைவேண்டாம் என்றுரைப்பது, லட்சியமாகாது--அதனைக் கேலிக்கூத்தாக்குவதாகும்.

கூடிவாழ்ந்தால் கோடி இன்பம்.--
இனிய எளிய லட்சியம்.

கூடி வாழ்வோம்; உன்னிடமுள்ளது.
எனக்கு, என்னிடமுள்ளது எனக்கு என்ற
முறை வகுத்திடல் கூடிவாழ்வதாகாது.

ஆட்டுக்குட்டியைத் தின்றுவிட்ட ஓநாய் "என்னோடு ஒன்றாக ஆடு இணைந்துவிட்டது. நாங்கள் இணைபிரியாச் சோதரர் ஆகிவிட்டோம்!" என்று கூறுவது போன்ற முறையில் “ஒற்றுமை" வேண்டுவோர் நடந்திடக்கூடாது என்பதனை அறிவுறுத்த வேண்டும்.

பட்டம் பெற்றோரே! உமது தெளிவுரை கிடைத்து மக்கள் இதுபோன்ற விளக்கம் பெற்றிட வேண்டும் என விழைகின்றேன்,

அறியாமை, வறுமை, ஆகியவற்றினை ஓட்டிடும் ஆற்றல்படை திரட்டிடப் பல்கலைக் கழகம் ஏற்ற இடம் என்பதால் இவற்றினை விரித்துரைத்தேன்.

பயிற்று மொழி, பாடமொழி, ஆட்சி மொழி, இணைப்பு மொழி என்ற சொற்றொடர்கள் வேகமாக உலாவிடக் காண்கின்றோம்.

"தாய்மொழி" என்னும் தகுதிக்கு ஈடாகவேனும் எந்தத் தகுதியையும் ஒருமொழி பெற்றிடத் தேவையில்லை.

ஆயினும் நமது தமிழ்மொழி, நமது தாய்மொழி என்பதால் மட்டுமன்று, வளமிக்கது என்பதாலும் எவரும் வியந்து பாராட்டத்தக்கதாகிறது. அந்த வளம் கெடாமலும், மேலும் வளரவுமான செயல்களைச் செம்மையாக்கித் தருவது உமது கடமையாகும்.

தமிழ், ஆட்சிமொழியாக எல்லாத் துறைகளிலும் திகழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்குவதில் வெற்றி பெற்றிட உமது நல்லார்வம் நிரம்பத் தேவை.

உலகுடன் ஒட்டி வாழ்ந்திட, உலகின் அறிவுக் களஞ்சியத்தின் துணைபெற ஆங்கிலமொழியறிவு இன்றியமையாததாகிறது.

இந்தியாவின் பல பகுதிகளுக்கு இணைப்பு மொழியாகவும், இந்தியாவுக்கும் வெளிநாடுகளுக்கும் இணைப்பு மொழியாகவும் ஆங்கிலம் இருந்திடட்டும் என்பதனை நாட்டுப்பற்று அற்றதன்மை என்றும் கூறுவாறுளர். கூறுவார் என்று மட்டுமே குறிப்பிட்டேன். கருதுவார் என்று கூறவில்லை, காரணத்தோடு!

ஆங்கிலம் முன்பு ஆதிக்கம் செலுத்தியவரின் மொழி என்பதாலே, அதனை இணைப்பு மொழியாகக் கொள்வது தேசியத் தன்மானமற்றது என்று கூறுபவர் அந்த ஆங்கில நாட்டுப் பணத்தைக் கடனாகவும் இனாமாகவும் பெற்றுத் தொழில் வளர்த்திட முனைவதை, தேசியத் தன்மானத்தைக் கெடுப்பது என்று கூறிடக் காணோம்.

தொழில் நுட்ப அறிவுபெற்றிட ஆங்கிலேயரின் துணை தேடும்போது, இந்தப் பேச்சு எழக்காணோம்!

மொழி பற்றி மட்டும்தான் இப்பேச்சுப் பேசுகின்றனர்.

எனவேதான், அவர்கட்கு ஆங்கிலம் கூடாது என்ற கருத்தில்லை--கூறமட்டும் செய்கிறார்கள் என்றுரைத்தேன்.

அன்று புறப்பட்டது வேந்தர் படை;
இன்று புறப்படுவது அறிவுப்படை!

ஆங்கிலம் கூடாது என்று கூறுவதுடன், இந்தியே இணைப்புக்கு ஏற்றமொழி என்று அவர்கள் வலியுறுத்தும் போது, கூறுபவரின் உண்மை நினைப்பும் வடிவமும் நன்றாகத் தெரிகின்றன.

இந்தப் போக்கு வெற்றி பெற விடமாட்டோம் என மாணவர்கள் உறுதியுடன் நிற்பதனை அறிந்திருக்கின்றேன்

மொழிப்பற்றின் எடுத்துக் காட்டாகத் திகழும் மாணவர்கட்கு எனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோது, மொழிப் பிரச்சினையிலேயுள்ள சிக்கல்களை, புகுத்தப்பட்டுள்ள சிக்கல்களை, நீக்குவதற்கான முயற்சிகளை மொழிப் பற்றிலே முழு நம்பிக்கை கொண்டுள்ள தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் நம்பிக்கையுடன், என்று கேட்டுக் கொள்கிறேன்.

பல்கலைக்கழகத்தில் பயிலும்காலை வாழ்க்கையின் நீண்ட பெரும்பயணத்திலே, இது பாசறைப்பருவம் என்ற உணர்வுடன் இருந்திடுவதே முறையாகும்.

பட்டம் பெற்றிடும் நண்பர்களே! உம்மிடம் நாடு நிரம்ப எதிர்பார்த்த வண்ணமிருப்பதனை அறிந்து, அதற்கேற்ப உமது செயல்முறைகளை வகுத்துக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

இம்மாமதுரையினின்றும் புறப்பட்ட படைகள். மாநிலம் மெச்சிடும் வெற்றிகளை, முடி மன்னர் நாட்களிலே பெற்றளித்தன என்று வரலாறு கூறுகிறது.

இன்று புறப்படும் படை அறிவுப்படை! இப்பல்கலைக் கழகத்தினின்றும் அமைந்து வெளிக்கிளம்பும் முதற்படை.

இதனை வாழ்த்தி, வரவேற்று பாராட்டி, "சென்று வருக; வென்று வருக!" எனக் கூறிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் நான் உள்ளபடி பெருமிதம் கொள்கிறேன்;

தமிழ் உமது முரசாகட்டும்! பண்பாடு உமது கவசமாகட்டும்! அறிவு உமது படைக்கலனாகட்டும்! அறநெறி உமது வழித்துணையாகட்டும்! உறுதியுடன் செல்வீர்! ஊக்கமுடன் பணிபுரிவீர்! ஏற்ற மிகு வெற்றியினை ஈட்டிடுவீர்! பாட்டுமொழியுடைய நமது தாயகம் வாழ தரணிக்குத் துணை நின்றிடும் தகுதி பெறச் சென்றிடுவீர்! வென்றிடுவீர்!