உணர்ச்சி வெள்ளம்/தமிழுக்குத் தொண்டாற்றியவர்

தமிழுக்குத் தொண்டாற்றியவர்


ல்லாண்டு காலமாகப் பன்மொழிப்புலவரிடம் நெருங்கிப் பழகியவன் என்ற வகையிலும்-அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டை அறிந்தவன் என்ற முறையிலும் பெருமகிழ்ச்சி அடைகிறேன்

ஆசிரியராக இருந்து பணியாற்றிய காலத்தில் இந்தி எதிர்ப்பில் ஈடுபட்ட வரையில் இன்றைய தினம். அவர் தமிழுக்குத் தொண்டாற்றுகின்ற பலவழிகளையும் அறிந்து பாராட்டுகிறேன்.

மற்ற நாடுகளில் அறிவாளர்கள் ஒன்று சொன்னால் அதை அங்கே ஏற்றுக்கொள்வதற்கு ஒருவரோடொருவர் போட்டி போட்டுக் கொள்வார்கள். ஆனால் நமது நாட்டைப் பொறுத்தவரை ஒருவரை அறிவாளியென்று சொன்னால் “என்ன அறிவு" பெரிய அறிவு என்று தன் அறிவைக் காட்டுபவர்கள் இருக்கிறார்கள். வெளிநாடுகளைப் போல் எழுத்துத் துறை--பேச்சுத் துறை--வேறு எந்தத்துறையானலும் உற்சாகமாக ஈடுபடுவது மிகக் கடினம்.

இத்தகைய கடினமான தொண்டை முப்பது முப்பத்தைந்து ஆண்டுகட்கு முன்பிருந்தே அப்பாதுரையார் அவர்கள் தொடங்கி பணியாற்றி வருகிறார்கள்.

அவர் வாழ்க்கை பூஞ்சோலையல்ல--வறுமைச் சூழலிலே தன் குடும்பச் சூழலை அமைத்துக் கொண்டிருப்பவர். அவர் நினைத்திருந்தால் பல்கலைக் கழகத் துணைவேந்தராகும் அளவுக்கு இன்று தன்னை உயர்த்தியிருக்கக் கூடும்; ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. எந்தெந்த விதங்களில்-

தமிழுக்குத் தொண்டாற்றலாம்-எந்தெந்த வழிகளில் தமிழ் நாட்டுக்குப் பணியாற்றலாம் என்று எண்ணி அந்தந்த நேரங்களில் அருந்தொண்டாற்றியவர்.

இசைக் கச்சேரியில் பலவிதமான இசைவகைகளை ஏற்ற இறக்கத்துடன் பாடினாலும் சுதிக்குள்ளே நின்று பாடுவது போல் தமிழ்த் தொண்டுக்குள் நின்று பல துறைகளில் தொண்டாற்றியவர்.

மேல் நாடுகளில் ஒருவர் ஒரு புத்தகம் எழுதினால் அந்த ஒரு புத்தகத்தில் வரும் வருவாயைக் கொண்டே தன் வாழ்நாளைச் செப்பனிடும் அளவுக்கு வசதியிருக்கிறது.

ஒருவர் எழுதிய புத்தகத்தின் வருவாயைச் செலவழிப்பதற்காக அதுவும் ஓராண்டு காலம் ஓய்விலிருந்து அதைச் செலவழிப்பதற்காகத் தென்னமரிக்காவில் சென்று வாழ்ந்தாராம்.

இங்கு ஒருவர் ஒரு புத்தகம் வெளியிட்டால் உடனே வேறு வீட்டிற்குக் குடிபுக வேண்டியதிருக்கிறது, கடன் தொல்லைக்காக!

பன்மொழிப் புலவருக்கு மணிவிழா கொண்டாடுகிறோம்--ஆனால் அவரது கருத்துக்கள் நம்மிடம் இருக்கிறதா என்றால் இல்லை. திரு. வி. கவைப் பற்றிய--மறைமலையடிகளாரைப் பற்றிய குறிப்புக்கள் இல்லை. அவர்களது குறிப்புக்களை மறந்துவிட்டால் மரபு என்பது கிடைக்காது. மரபு என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை மறதியென்று ஆகிவிட்டது. மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் நம்மிடமில்லை.

ஏதேனும் ஒரு புத்தகத்தில் கரிகாலனைப் பற்றியே செய்தி வருகிற இடத்தில் ஒரு நட்சத்திரக் குறியிட்டிருப்பார்கள்.

அதற்கு விளக்கம் கடைசிப் பக்கத்தில் இருக்கும். அதுவும் கரிகாலன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான் என்று சொல்வாரும் உண்டு--கரூரைத் தலைநகராக்கினான் என்று இயம்புவாரும் உண்டு என்று எழுதியிருக்கும்.

இப்படிப்பட்டவற்றையெல்லாம் நீக்கி வரலாற்று ஆசிரியர்களை உள்ளடக்கி கல்வெட்டு மூலமாகவும்--ஏடுகள் மூலமாகவும் உள்ள கருத்துக்களை ஒன்று திரட்டி வரலாற்றை உருவாக்கி தமிழ் நாட்டாருக்கு வழங்கவேண்டும். வெளிநாட்டுக்காரர்கள் யாராவது கேட்டால் இதோ எங்கள் தமிழக வரலாறு என்று கொடுக்க நம்மால் முடியாது.

இங்கிலாந்து நாட்டில் இதேபோல் ஒரு மாநாடு நடந்தால் இதோ எங்கள் வரலாறு என்று காட்ட அவர்களால் முடியும். ஜெர்மன் நாட்டிலே நடந்தால் அவர்களால் காட்ட முடியும். அப்படிப்பட்ட வரலாற்றை நாமும் காட்ட அப்பாதுரையார் போன்றவர்களை வைத்துச் செயல்பட வேண்டும்.

இன்று இந்தி எதிர்ப்பு என்பது எல்லாராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்று. இன்று இந்தி எதிர்ப்பில் தீவிரம் காட்டுவது போலவே அன்றும் தீவிரமாக ஈடுபட்டவர் அலமேலு அம்மையார் ஆவார்கள்.

இந்தி எதிர்ப்பு மறியலைத் தொண்டை மண்டலத்துளுவ வேளாளர் பள்ளிக்கூடத்திற்கு எதிரில், நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க மறியலில் ஈடுபட்ட தியாகியென்று அலமேலு அம்மையாரைக் குறிப்பிட்டால் மிகையாகாது.

எவ்வளவு அலைவீசினாலும் மேல் தளத்திலே நிற்கும் கப்பல் தலைவன் போல அவர் கொளுத்தும் வெயிலையும் பாராது எரிக்கும் சூட்டிலே நின்றுகொண்டிருந்தார். அப்படிப்பட்ட அவர்கள் இன்னும் நீண்ட நெடுங்காலம் வாழ்த்து தமிழுக்கும்--தமிழ்நாட்டுக்கும் தொண்டாற்ற வேண்டும்.