உத்தரகாண்டம்/12
“பதனம். எது பதனம்? யாருக்கு? எப்படி?...”
ஆயி முகம் தெரியாது அவளுக்கு. கிழமாகச் சவுங்கிப் போன அப்பனின் முகம் நினைவில் நிழலாகத் தெரிகிறது. அவளை இரண்டு தோள்களிலும் கால்கள் விழத் தூக்கிக் கொண்டு மாரியம்மன் கோயில் திருவிழாவுக்குக் கூட்டிப்போவார். பெரி...ய காவிரி. அதன் கரை மேல் இருக்கும். இறங்கினால் பரிசல் துறை. கூடைபோல் பரிசல் இருக்கும். அதில் உட்கார்ந்து ஒருநாள் கூடக் காவிரியில் போனதில்லை. திருவிழா ஆடிமாசத்தில் வரும். படையல் போடும் கும்பலைப் பார்த்துக் கொண்டு நிற்பாள். கூட்டம் கோயிலிலா, ஆத்துக்கரையிலா என்று நினைவுத் தெளிவில்லை. அம்மன் தேர் வரும். அய்யா, ஆட்டுத்தலை, மாவிளக்கு, பழம் எல்லாம் கொண்டு வருவார். இந்த நிழல் படங்களும்கூட மங்கும்படி, அவர் ஒருநாள் செத்துப் போனார். சின்னாயி அவளை அதே காவிரியாத்தின் பக்கம் நிறுத்திவிட்டு, “போடி, உங்க மாமன் வூட்டுக்கு?” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். இடுப்பில் ஒரு முழ சீலைத் துண்டு மட்டுமே உடுத்தியிருந்தாள். கரகரவென்று பரிசல் துறையின் பக்கம் இறங்கி நின்றாள். பரிசலில் இருந்து செவத்த அய்யாமார்கள், கோட்டு, கடுக்கன் போட்டவர்கள், பொம்புளைகள் இறங்கி கரைமேல் இருந்த வண்டியில் போனார்கள். நடந்தும் போனார்கள்.
“சேரிப்புள்ள போலிருக்கே? பொழுது எறங்கிப் போச்சே, ஏம்மா நிக்கிற...?” என்று பரிசல்காரர் கேட்டார்.
“எங்கப்பாரு செத்திட்டாரு. எங்க சின்னாயி, ‘நீ மாமவூட்டுக்குப் போயிடு’ன்னு இங்க கொண்டாந்து வுட்டுப் போயிட்டாங்க...” என்று அழுதாள்.
“யாரு உங்கப்பன்...?”
அவளுக்குச் சொல்லத் தெரியவில்லை.
“சின்னாயி அடிக்கும், சூடுவைக்கும்...” என்று பெரிதாக அழுதாள்.
“அடபாவமே?...” அவர் சுற்றுமுற்றும் பார்த்தபோது, இன்னொராள் வந்தார்.
“அதாம்பா, ராயர் பண்ணையாளு. சித்தாதி. குடிச்சிட்டுக் காவாயில வுழுந்து செத்திட்டான். அவம் பொண்ணு போல இருக்கு இது...” என்ற விவரம் சொன்னதும், பரிசல்காரர் அவளுக்குச் சோறு வாங்கிக் கொடுத்து அவர் குடிசையில் தங்க வைத்துக் கொண்டதும் மறக்கவில்லை.
பிறகு அடுத்த நாள் அவர், காலையில் ஆபீசுக்குக் கச்சேரிக்குச் செல்பவர்கள் செல்கையில், பரிசலில் ஓர் ஓரத்தில் உட்கார்த்தி வைத்தார். முதல் நாள் கோட்டும் கடுக்கனும் தலைப்பாவுமாக வந்த பெரியவர், “ஏம்ப்பா சோலை? உனக்குக் கல்யாணமே ஆவல, இது யாரு பொண்ணு?” என்று கேட்டார். அவர் என்ன சொன்னார் என்பதை அவள் கேட்டுக் கொள்ளவில்லை. அவளுடைய கனவு நிறைவேறிக் கொண்டிருக்கிறது. பெரிய மூங்கில் கம்பை உள்ளே விட்டு, அவர் பரிசலைத் தள்ளிக் கொண்டிருந்தார். பரிசலுக்குள் வெறும் ஒற்றைச் சீலைத் துண்டுடன் கையைக் குறுக்கே கட்டிக் கொண்டு நின்று, காவிரியையும் வெள்ளத்தையும், மூங்கில் கம்பினால் தள்ளிச் செல்லும் விந்தையையும் பார்த்துக் கொண்டிருந்தாள். மூங்கிலை எடுத்து உயர்த்தி மறுபுறம் வைக்கும் போது நீர் சொட்டியது. மேலே பட்டபோது எப்படி உடல் சிலிர்த்தது? இந்தப் பயணத்துக்கு முடிவே வராமல், இவருடன் இந்த ஆற்றின் குறுக்கே போயும் வந்தும்... நீள வேண்டும் என்ற கற்பனையில் இருந்தாள். ‘மறுபடியும் சின்னாயி வீட்டுக்கோ, சின்னாயி போல பொம்புளகள் உள்ள வேறு எந்த வீட்டுக்கோ என்னிய அனுப்பிடாதீங்கையா’ என்று பரிசல்காரரின் கால்களைப் பிடித்துக் கெஞ்ச அவள் உறுதி செய்து கொண்டிருந்தாள். அக்கரை வந்து எல்லோரும் இறங்கிச் சென்றனர். கோட்டுக்காரர்கூட இறங்கி நடந்து போனார்.
“எறங்கு புள்ள, உம் பேரென்ன?”
அவள் இறங்குவதாக இல்லை. பேரும் சொல்லவில்லை. பேரென்று அவளுக்கு என்ன இருந்தது? அப்பன் ‘கண்ணுத்தாய்’ என்று செல்லமாகக் கூப்பிடுவான். ‘உங்காயி எட்டுப் பெத்தா, நீ ஒருத்திதாம்மா எனக்கு அழகாயி போட்ட பிச்ச...’ என்று கள்வாடை வீசும் சுவாசம் முட்ட, அணைத்து உச்சிமோந்து பாசத்தைக் கொட்டுவார்.
சின்னாயியோ ஆயிரம் பேதிக்கும், கழிச்சலுக்கும் கூப்பிட்டுச் சாபம் கொடுப்பாள். இவள் பொழுதுக்கும் மண்ணில் தனியாக விளையாடிக் கொண்டிருப்பாள். அப்பன்தான் காலையிலும், பொழுது சாய்ந்த பின்னும் சோறோ கூழோ, எதுவோ கொடுப்பான். அவர் அருமையாக முடிச்சுக்குள் வைத்து வேகவைத்த வள்ளிக்கிழங்கோ, பொட்டுக் கடலையோ கொடுத்தது இப்போதும் கண்களில் நீரை வருவிக்கிறது.
பரிசல் துறையில் நின்றது ‘பெண்’ என்று யாரும் அவளைக் குலைப்பதற்குரிய பொருள் என்று நினைக்கவில்ல. “பொம்புளப்புள்ள அய்யா?” என்று பதனமாகப் பார்க்க, அக்கரையில் வக்கீல் அய்யர் வீட்டில் சேர்த்தார். அவர் காந்தி கட்சி. அவளைப் பின்புறமாகத் தான் பரிசல்காரர் கூட்டிச் சென்றார். மாட்டுக் கொட்டகை, எருக்குழிகள்... வாழை மரங்கள், அவரைப் பந்தல்... இவரும் பின்னாலிருந்து தான் கூப்பிட்டார்.
“ஏம்ப்பா, என்ன விசயம்?...”
மஞ்சட்சீலை உடுத்த சிவப்பாக ஒரு பெண் பிள்ளை. அம்மா... அய்யர் சாதிக்கட்டு. காதுகளில் வயிரத் தோடுகள் மின்னின. மூக்கில் பொட்டுகள் பளபளத்தன. இவர்கள் வீட்டிலா...?
“பரிசக்காரையா, என்னிய இங்கெல்லாம் வுட்டுட்டுப் போகாதீங்க? நா உங்ககூட வாரேன். உங்கக்குக் கஞ்சி காச்சித்தாரேன். ஒங்கக்கு எதுன்னாலும் செய்யிறே...” என்று அவர் காலைப் பிடித்துக் கொண்டாள்.
“யாரப்பா, குழந்தை, உள்ளே வாயேன்?”
“இருக்கட்டும்மா...” என்று சொல்லிக் கொண்டு கொட்டில் கடந்து கிணற்றுக்கரைப் பக்கம் நின்றார்கள்.
“இது... சேரி... குடிபடைச்சாதிங்க. அப்பன் ஆயி செத்து, அநாதியா வந்து நிக்கிது. பொம்புளப்புள்ள அம்மா, காபகம் வந்திச்சி. ஏதோ கொட்டில்ல சாணி சகதி அள்ளிப்போடும். ஒரு நேரம் ரெண்டு நேரம் சோறூத்துங்க. உங்கக்குப் புண்ணியமாவும்...”
“அஞ்சு வயசுகூட இருக்காது போல... பாவமே?...” என்றவள் அருகில் வந்து அவள் கையைப் பற்றினாள். விலாவில் சின்னாயி போட்ட சூடு புண்ணாக இருந்தது. அதில் ஈ வந்து குந்தியது...
“என்னம்மா இது? இது சூட்டுக்காயம் போல... அடாடா... சீக்கோத்திருக்கு?” அவள் கோவென்று பெரிதாக அழுதாள்.
“ரெம்ப பயப்படுதுங்க. பொம்புளப்புள்ள, உங்களுக்குப் புண்ணியமாப் போவுதும்மா, சின்னாயி கொடும, நாளும் தெரிஞ்சவ...”
“நீ கவலப்படாத என் வீட்டுப் பிள்ளையாப் பாத்துப்பேன். எங்க வீட்டுக் கமலி போல பாத்துப்பேன். போயிட்டுவா.” என்று அவனை அனுப்பினாள். இவளுக்குப் பயம் பிடித்துக் கொண்டது. தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள். “சீ... அழாத அழக்கூடாது...” என்று அவள் கண்களைத் துடைத்தாள். சோப்புப் போட்டுக் குளிப்பாட்டினாள், கிணற்றில் நீரிறைத்து ஊற்றி... ஒ! அவர்களுக்குக் கிணறு கிடையாது. மோட்டுவாய்க்கால் கரையில்தான் சட்டி பானைக்கழுவி, துணி அலசி... அப்பன் செத்தபிறகு அவள்தான் எல்லாம் செய்வாள். சின்னாயி காலையில் வயலுக்குப் போனால், மாலையில் அந்த இன்னொரு ஆளுடன் வருவாள். இருவரும் கள் குடிப்பார்கள். சோறு காய்ச்சினால் ஒரு வாய்கூட வராது. கேட்டால் அடிப்பாள். குளிப்பாட்டி, சூட்டுக்காயத்தைப் பஞ்சால் துடைத்து ஏதோ களிம்பு போட்டாள். புண்ணில்படாமல், கால்வரை தொங்கும் கவுன்... பூப்போட்டது. அவளைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கையில் இன்னோர் அம்மா அங்கு வந்தாள்... “என்ன சம்பு? அப்பா ஒத்துப்பரா?” அம்மா திரும்பிப் பார்த்தாள். “உம்? அவர் செஞ்சது எதையும் நான் ஒத்துக்கல!”
துணி கொடுத்து காயத்துக்கு மருந்து போடுகையில் உள்ளிருந்து சமையல்காரர் போலிருக்கிறது, வந்தார்.
“சம்பும்மா, உங்கப்பா பாத்தா ரகளயாகப் போறதே?”
“ஓய், உம்மக்கேக்கல. இனிமே நீர் சமைக்க வரவேண்டாம். நாங்களே சமைச்சிக்கறோம்! சாப்புடறவா சாப்புடட்டும், இல்லாதவா போகட்டும்!” என்றார் கோபமாக
இவளுடைய கத்தலில், மொட்டைத் தலையில் ஒரு உச்சிக் குடுமியும் சந்தனக்குறுக்கும், விசிறி மட்டையுமாகப் பெரியவராகிய அவள் அப்பா கூடத்தில், நடை ஓரத்தில் வந்துவிட்டார்.
“அடி, சம்பு? நன்னாயிருக்கா? கேக்கறேன், வழிவழியா வேதத்யயனம் பண்ணின குடும்பம்டீ, இது?... ஏ, பற மூதேவி! போடி கொல்லப்பக்கம்? எங்கேந்து இங்க கொண்டு விட்டிருக்கான்? எல்லாம் இந்தத் தாமு குடுக்கிற எடம். போடி...!” விசிறிக் காம்புடன் ஓடி வந்த அவரைப் பார்த்து அம்மா சிரித்தார். அவள் மருண்டு ஓடிப்போக முடியாதபடி தன்னுடன் ஒட்டிக் கொண்டாள்.
“கிட்ட வராதீங்க. தீட்டு ஒட்டிக்கும். அப்பா, நீங்க என்ன பண்றேள், வாசப்பக்கம் ரூம்ல மடியா இருந்துக்குங்கோ. நாங்கதா சமைக்கப் போறோம். சமைச்சு சாப்பாட்டை, மடியா, ராகவனக் கொண்டு குடுக்கச் சொல்லுங்கோ!”
“பிராரப்தம்... ஏண்டி சம்பு இப்படி வதைக்கிற?”
“யாரப்பா உங்கள வதைக்கறா இப்ப?... அதான் தாமு, உங்க மாப்பிள, அவனவிட்டு இந்த வீட்ல இதெல்லாம் கூடாதுன்னு சொல்லச் சொல்லுங்கோ, நான் இவளையும் கூட்டிண்டு போயிடறேன்...”
உள்ளே கூட்டிச் சென்று, இலை போட்டு, வாழைக்காய்ப் பொரியலும் பருப்புக் குழம்பும் நெல்லுச் சோறுமாகப் பிசைந்து போட்டாள். தேவதைக் கதைகளை யாரும் அவளுக்குச் சொன்னதில்லை. ஆனால் ஒரு தேவதை அவளுக்குத் தாயாக இருந்து, பாதுகாத்தாள். அன்று சாப்பிட்ட உடனே, பழைய சேலை மடிப்பில் அம்மா படுக்க வைத்ததும் தூங்கிப்போனாள். எத்தனையோ நாளைய ஆதரவற்ற, பயம், வயிற்றுப்பசி, எல்லாம் அந்த தேவதைக் கையால் நீங்கிவிட்டன. அந்த வீட்டில் அவள் பல விஷயங்களைப் புரிந்து கொண்டாள். பெரியவருக்குப் பெண்சாதி முதலிலேயே இறந்துவிட்டாள். இரண்டு மகன்கள், இவள் ஒரு மகள். மகன்கள் இருவரும் படித்து, டில்லி பம்பாய் என்று கல்யாணம் கட்டி வேலையில் இருந்தார்கள். கமலி இவருடைய அண்ணன் மகள். இவளை, பத்து வயசுக்குள், வீட்டில் எடுபிடி வேலை செய்ய வந்த தாமுவுக்குக் கட்டிவிட்டார். தாமுவை அவர்தாம் படிக்க வைத்தார். தாமுவுக்கு அக்கா முறையில் ஓரம்மாள் அங்கே அடிக்கடி வந்து அதிகாரம் செய்வாள்.
கமலி, உள்ளூர் பள்ளிக்கூடத்தில் நாலாவது படித்துக் கொண்டிருந்தாள். தாமு, சம்பகாவின் புருசன், வக்கீல்... வாசல் பக்கம், கலகலவென்றிருக்கும் நடையில் மாடிப்படி. மாடிக்கு யார் யாரோ கட்சிக்காரர்கள் வருவார்கள். சீனு அய்யர் குமாஸ்தா. வீட்டில் பெரிய வில்வண்டி இருந்தது. கிழவர் வாசல் மேல் திண்ணை, கீழ் திண்ணை, முன்பக்க அறை இத்துடன் நிறுத்திக் கொண்டார். கொல்லைப்புறம் போக வேண்டுமானால்தான் காதில் பூணூலை மாட்டிக் கொண்டு போவார். அந்த சமயம் அவள் எங்கேனும் மூலையில் ஒண்டிக் கொள்வாள். அம்மாவைப் பார்க்க, கதரணிந்த இளம்பிள்ளைகள் வருவார்கள். நிறைய புத்தகங்கள் கொண்டு வருவார்கள். கமலி இவளை விடப் பெரியவள். அம்மா இவளுக்கும், தமிழ், இங்கிலீசு எல்லாம் கற்றுக் கொடுத்தாள்.
வக்கீலையா, மாடியில் இருந்து இறங்கி, வீட்டைச் சுற்றிச் செல்லும் சந்து வழியாகவே பின் பக்கம் போவார். அவருக்கென்று குளியலறை ஒன்று இருந்தது. மாரிமுத்து என்ற வண்டிக்காரன் அநேகமாக வீட்டோடு இருந்தான். அவன்தான் அவருக்கு வெந்நீர் போட்டு, துணிதுவைத்து, வண்டியோட்டிக் கச்சேரிக்குக் கூட்டிச் சென்று எல்லா வேலைகளும் செய்தான். கமலியும் அவரும், கூடத்தில் ஒரு பக்கம் படுத்துக் கொள்வார்கள். ஊஞ்சல் பலகையில் அம்மா படுப்பார். விசுபலகை ஒன்று உண்டு. அவளுக்கு அப்போது எதுவும் புரிந்து கொள்ள வயசாகவில்லை. அய்யர் வீட்டு நடைமுறைகளைப் பற்றி எதுவும் தெரிந்திராததால், சாப்பாடு, துணி, அன்பு, புழங்க பெரிய இடம் எல்லாம் கிடைத்த எதிர்பாராத சந்தோச மூச்சு முட்டலில் பழகியபின் இவள் புரிந்து கொண்ட செய்திகள்...
கிழவர் ஒரு நாள் தவறாமல் இவளைப் பார்க்க நேர்ந்து விட்டால், பறப்பீடை, தொலைஞ்சு போடி, திமிரு திமிரு... என்று கத்துவார். அவள் பின்புறம் கொட்டிலில் சென்று ஒட்டிக் கொள்கையில் அம்மா உடனே வந்து விடுவார்... “அவ ஒண்னும் பீடையில்ல. இந்த வீட்டுக்கு நல்லது வந்திருக்கு. கண்ணம்மா, நீ பயப்படாதே! அந்தக் கிழம் இப்படி எதை வேணாச் சொல்லட்டும். உன்கிட்ட வராது...” என்று தேற்றுவாள்.
இவள் வந்து தீட்டுப்பட்ட வீட்டில், அவர் சாப்பிடுவதில்லை. அவருக்கு, தலை மொட்டையடித்த, வெள்ளைச் சீலை அம்மா சாப்பாடு கொண்டு வந்து வாசல் அறையிலேயே கொடுப்பார். அந்தக் கூடத்தில் சாமிபடங்கள், பூசை சாமான்கள், விளக்கு எல்லாம் இருந்தன. எல்லாமும் வாசல் அறைக்குப் போய்விட்டன. சீனு அய்யர்தான் கிழவருக்கும் எடுபிடி. கிழம் கந்து வட்டிக்குக் கடன் கொடுக்கும். ஏழை எளியதுகளின் இரத்தம் உறிஞ்சுவது போல் வட்டி வாங்கும், என்பதெல்லாம் அம்மா அதைத் திட்டும்போது உதிர்ந்த உண்மைகள்.
சுந்தரம் சுந்தரம் என்று ஒருவர் வருவார். அம்மா ராட்டை வைத்து நூல் நூற்பார். அவர் பஞ்சு பட்டை கொண்டு வந்து கொடுப்பார். நூற்ற நூலை சிட்டத்தில் சுற்றுவதை அவள் பார்த்துக் கொண்டே இருப்பாள். அம்மா அவளை எழுதச் சொல்லிவிட்டு, நூற்பார்.
“காந்தி, கடங்காரன், சண்டாளன், இப்படி பரம்பர தர்மங்களை நாசம் பண்ணிட்டானே ?” என் வீட்டில, எனக்குக் கை நனைக்க வழியில்லாம இப்படி அட்டுழியம் பண்றாளே? அம்மா இல்லாத குழந்தைன்னு கண் கலங்காம வச்சிண்டிருந்தேன். பாவி நெருப்பை அள்ளிக் கொட்டுறாளே! ஆசாரிய சுவாமிகள் வராராமா?”
“ஆமா. பிரும்மதானபுரம் சத்திரத்தில் தங்கறாராம். இந்தத் தெரு வழியா நாளைக்கு வறாராம். பூரணகும்பம் குடுத்து உபசாரம் பண்ணனும்னு எங்கண்ணா சொல்லிண்டிருந்தான். பத்து நாள் தங்குவார் போல. இப்பத்தான் விவஸ்தையே இல்லையே? தலை எடுக்காம, எவளானும் என்னைப்போல இருக்கறவா தெருப் பக்கம் வந்தோ எட்டிப்பாத்தோ தொலைக்கக்கூடாது. அப்படி ஒராத்துல பிக்ஷை பண்ணிட்டிருக்கப்ப, ஒரு மூதேவி தெரியாம, அந்தாத்துல வந்துடுத்தாம். பிக்ஷை எடுக்காம போயிட்டாராம்...”
“ஏ ருக்மிணி! இங்க வாடி! ஏற்கெனவே அது ஆடிண்டிருக்கு, நீ கள்ள ஊத்திக் குடுக்கிறியா? வந்து சோத்தப் போட்டுட்டுப் போயச் சேரு? என்னடி பேச்சு?” என்று அம்மா கத்தியபோது அவளுக்கே தூக்கி வாரிப்போட்டது. பாவம், அந்தம்மா...
“அஞ்சு வயசிலும் பத்து வயசிலும் கல்யாணத்தப்பண்ணி வச்சிட்டு, பொண்ணுகள வதைக்கிறது? யாருடி அந்த ஆசாரியன், எதுக்கு இப்படிக் கொலை பாதகம் பண்றான்?...” என்று அம்மா, சம்பு என்றழைக்கப் பெற்ற தெய்வம், காளி அவதாரம் எடுத்தாற்போல் கத்தினாள்.
“இவனுவ வண்டவாளங்களை எடுத்துவிட்டால், பள்ளுப் பறைன்னு ஒதுக்கி வச்சிருக்கிற குடிசைக் குப்பை மேட்டு நாத்தமும் அழுகலும் பரிசுத்தம்னு தோணும். மரியாதையாப் போய்க்கோ?” அந்தம்மா வெலவெலத்து ஒட்டிக் கொண்டாள், சுவரோடு. அவள் அங்கு இருந்தபோது தான் அந்தக் கூடத்தில் பெரிய காந்தி படம், நேரு படம், சுபாஷ் சந்திரபோஸ் படம், எல்லாம் கொண்டு வந்து மாட்டினார்கள். அம்மா மஞ்சள் கதர்ப்புடவை உடுத்திக் கொண்டு, அவளையும் கமலியையும் அழைத்துக் கொண்டு, தெருவில் சென்றால், யாரும் பார்க்க மாட்டார்கள். கதவை அடைத்துக் கொண்டு உள்ளே போவார்கள். தெருக் கோடியில் பெருமாள் கோயில் இருந்தது. அம்மா எந்தக் கோயிலுக்குள்ளும் போனதில்லை. ஒருநாள் கதர்சட்டை அணிந்த சுந்தரம், பிச்சமுத்து, தங்கவேலு எல்லாரும் வந்தார்கள்... எல்லாரும், அம்மா, அவள், கமலி தெருவில் மகாத்மா காந்திக்கு ஜே! வந்தே மாதரம், சுபாஷ் சந்திரபோஸுக்கு ஜே...” என்று கத்திக் கொண்டு போனார்கள். மருதமுத்துதான் பெருங்குரலில் கத்துவான். இவர்கள் ஜே சொல்வார்கள். ஆனால் தெருவில் ஒரு குஞ்சு குழந்தைகூட இல்லை. திருச்சிபோகும் ரயில்பாதை. அதைக் கடந்தால் அங்கே தாலுகா கச்சேரி இருந்தது... ஒருகூரை பிராமணாள் காபி கிளப் இருந்தது. இவர்கள் தாலுகா கச்சேரிக்கு முன் கத்தினார்கள். பக்கத்தில் தான் கமலி படித்த பள்ளிக்கூடம். அன்று பள்ளிக் கூடம் இல்லை.
டவாலி போட்ட சேவகன் வந்து விரட்டினான். ஒரு போலீசுக்காரர் வந்தார்.
“எல்லாம் போயிடுங்கம்மா, ஏ புள்ள முழிய நோண்டிடுவேன்” என்று அவளைப் பார்த்துப் போலீசுக்காரன் சாடையாகப் பயமுறுத்தினான். அவள் அம்மாவின் பக்கம் ஒட்டிக் கொண்டாள். மருதமுத்துவையும் சுந்தரத்தையும் விலங்கு கொண்டு வந்து பூட்டி அழைத்துச் சென்றார்கள். இவர்கள் மறுபடியும் கத்திக் கொண்டே வீடு திரும்பினார்கள். அன்று சாயுங்காலமே கைதானவர்கள் இருவரும் திரும்பி வந்து விட்டார்கள்.