உத்தரகாண்டம்/13
அந்த வீட்டில் அவள் வந்தபிறகுதான் அம்மா, அவர்களுடன் கள்ளுக்கடை மறியலுக்குப் போனார். காங்கிரஸ் பெரியவர்கள் யாரேனும் வந்து சிவன் கோயில் முன் கூட்டம் நடக்கும். தவறாமல் அம்மாவுடன் இவள் போய்விடுவாள். கமலியின் தாய் தந்தையருக்கு, இவள் தங்கள் மகளை இப்படித் தவறான பாதைக்கு இட்டுச் செல்வது பிடிக்கவில்லை. கமலியின் அப்பா, அந்தக் கோடையில் புறப்பட்டு வந்தார். “சம்பு, நீ இப்படி நடப்பது கொஞ்சமும் சரியில்ல. அப்பா கிடக்கிறார். உன் புருசனுக்கு வந்தவளா நடந்துக்க வேண்டாமா? அவன் என்ன ஆனாலும் உனக்குத் தாலி கட்டின புருசன். அவனை நீ மதிக்கணும். என்னமோ உன் வீட்டு மாட்டுக்காரன விட மோசமா நடத்தற?”
அம்மா சமையலறையில்தான் இருந்தார். அவள் அங்கே இருப்பது தெரியாமல் அவர் தணிந்த குரலில் கண்டித்தார்.
“ராமு, இந்த விஷயத்தில் நீ தலையிட வேண்டியது அநாவசியம். இது நான் பிறந்த வீடு. என் தாய் வீடு. இங்கு நான் என் இஷ்டப்படிதான் இருப்பேன். இங்கே குழந்தை இருக்கா. இவளை வச்சிண்டு இதுக்குமேல் பேச விரும்பல. உன் பெண்ணை நீ தாராளமா கூட்டிண்டு போ?”
“...யாரு... இதுதான் அந்தப் பறச்சனியனா?” ஒட்டிக் கொண்டிருந்த அவளை, அடிக்கக் கை ஓங்கினார். அப்போது அம்மா அந்த ஓங்கிய கையைப் பற்றிக் கொண்டார்.
“இத பார் ராமு. உம் பொண்ண நீ கூட்டிண்டுபோ. வேற விவகாரம் பண்ணாதே. வீணா வார்த்தையைக் கொட்டாதே!”
“என்னடி பயமுறுத்தற? உன்ன இந்த நிமுசமே வெளியேத்தி ஜயில்ல களிதிங்க வைக்க முடியும் என்னால! என்ன நினைச்சிண்டிருக்கே! நாளக்கி, இந்தப் பறக்கழுதயே, உம்புருசனக் கைக்குள்ள போட்டுண்டு உன்ன இந்த வீட்ட விட்டு வெறட்டலன்ன என்ன ஏன்னு கேளு! பாம்புக் குட்டிக்குப் பால் வாக்கிற! ஏதோ ஆம்புளக் கழுதயானாலும் பொதி சுமக்கும். இது உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் சாதி! கேட்டுக்க!” என்று கத்திவிட்டு ஒருவாய் தண்ணீர் கூடக் குடிக்காமல் கமலியை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.
அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது. எங்கேனும் ஓடிப்போய் விடலாமா என்று நினைத்தாள். அவள் அழ அழ, அம்மா கண்ணீரைத் துடைத்தாள். ஆனாலும் சாப்பிடப் பிடிக்கவில்லை. படுத்தால் தூக்கம் வரவில்லை. “அம்மா... என்ன எங்கூருக்கே, எங்னாலும் அனுப்பிச்சிடுங்க. என்னால உங்கக்குக் கஸ்டம்- என்னத் திட்னாத்திட்டட்டும். நா உசந்த சாதில பிறக்கல...”
இப்படிச் சொன்னபோது, அம்மா அவளைக் கட்டிக் கொண்டாள். அவளுக்கும் அழுகை வந்தது. அம்மா அழுவதைக் காண முடியவில்லை. எந்நேரமும் அவள் எங்கும் போய் விடாதபடி பாதுகாத்தாள்.
அன்று நூல் நூற்றாள். அறுந்து அறுந்து போயிற்று. அவர்கள் வீட்டில் கையால் ‘கீ’ கொடுக்கும் ஒரு கிராம போன் இருந்தது. என்றைக்கானும் இரவில் அம்மா அதில் பாட்டு வைப்பார். அதில் காந்தி பாட்டு வரும். ‘நம்பிக்கை கொண்டெல்லோரும் கை ராட்டைச் சுற்றுவோம்’ என்று ஒரு பாட்டு வரும். மதிச்சயத்துல குடியிருக்கிறது; மதுரையில் பாலு விக்கிறது. மோரு விக்கிறது...” இந்தப் பாட்டைக் கேட்டால் கமலியும் அவரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். ட்ரியோ டேயன்னா என்று ஆடு மேய்க்கும் பாட்டு வரும்... பிறகு, நாடித்துதிப்பேன் நமசிவாயவே...ன்னு ஒரு பாட்டு...
அன்று அவளைச் சந்தோசப் படுத்த அம்மா பாட்டு வைத்தார். ஆனால் அவளுக்குப் பிடிக்கவில்லை. குப்புறப்படுத்துக் கொண்டு விம்மினாள்.
அந்த நாட்களில்தான் சிவன் கோயில் மீட்டிங்கில் பேச இந்தையா வருகிறார் என்று சுந்தரம் வந்து சொன்னார்.
“நான் நினைச்சால் உன்னை ஜயிலில் தள்ளிக் களிதிங்க வைக்க முடியும்”என்று அண்ணன் சொன்னதிலிருந்து தானோ என்னமோ அம்மாவுக்கு ஒரு பயம் வந்திருந்தது.
“சுந்தரம், அவரை நம் வீட்டுக்குக் கூட்டி வாயேன்? எங்கே வந்து தங்கிருக்கார்?... நடராஜ சுந்தரம் வீட்டிலா?”
“ஆமாம். அவர் சம்சாரமும்கூட வந்திருக்காங்க. அவங்களும் ஜெயிலுக்குப் போனவங்க. கள்ளுக்கடை மறியல் செய்து மூணு மாசம் தண்டனை பெற்று வந்திருக்கிறார்...”
அப்போதுதான் அவர்களை, இந்தப் புதிய பாதுகாவலர்களை அவள் பார்த்தாள், அவர்களுடனேயே வந்துவிட்டாள்.
நல்லவர்களை எல்லாம், கடவுள் ஏன் சோதிக்கிறார்?
ஐந்தாறு வருசங்கள் கூட சம்பு அம்மா பிறகு உயிரோடு இருக்கவில்லை. காச நோய் என்று சொன்னார்கள். போர்க்காலம். இவள், அம்மாவின் அம்மா, பாட்டி, சுற்றம் அகதிகள் என்று இந்த வீட்டில்தான் இருந்தாள். காந்தியோடு எல்லாத் தலைவர்களும் அய்யாவும் சிறையில். குண்டு பயம் என்று ஊரே காலி செய்து கொண்டு சனக்கும்பல் எங்கெங்கோ கிராமங்களில் அடைந்திருந்தது.
அவள் அங்கு வரும்போது ராதாம்மா பிறக்கவில்லை.
சம்பு அம்மாவைப் பார்க்க குரோம்பேட்டை ஆசுபத்திரிக்குப் போன போது, ராதாம்மாவுக்கு நாலைந்து வயசிருக்கும். இவள் வயசுக்கு வந்து, எட்டு கசம் கதர் சிற்றாடை உடுத்து, கல்யாணத்துக்கு நின்ற நேரம். “தாயம்மா, சம்பும்மா ஆஸ்பத்திரில படுத்திருக்காங்களாம், உன்னைப் பார்க்கணும்னு சுந்தரத்துக்கிட்ட சொல்லி அனுப்பியிருக்கா. இப்படியே குறுக்க ஓரெட்டு நடந்து போகணும், வரியா?” பின் கட்டில் புளி கொட்டை எடுத்துக் கொண்டிருந்தவள் ஓடி வந்தாள். அம்மாவும் அவரும் வெளிச் செல்வதைப் பார்த்துவிட்டு, ராதாம்மாவும் “நானும் நானும்” என்று ஓடி வந்தது.
“நீ பாட்டிட்ட இரு. ஜானு, பல்லாங்குழி ஆடச் சேத்துக்க!” என்று சொல்லிவிட்டு, இரண்டு பேரும் கிளம்பினார்கள். சுந்தரம்... அவர் முடிவழுக்கையாகி, அடையாளமே தெரியாமல் மெலிந்து இருந்தார். அவளைப் பார்த்து அடையாளப் புன்னகை செய்தாரே ஒழிய, பேசவில்லை.
தோப்பும் துரவும் குளமும் குட்டையுமாக இருந்த இடங்கள் கடந்து அந்த ஆஸ்பத்திரிக்குப் போனார்கள். காவல் என்று எதுவும் இருந்ததாக நினைவில்லை. ஒரு குன்றின் மேல் ஏறினார்கள். ஓராளிடம் சுந்தரம் அய்யா, ஒரு சீட்டைக் காட்டினார். சாத்துக்குடியும், பிஸ்கோத்தும் அடங்கிய வலைப்பையை அவள் சுமந்து வந்திருந்தாள். ‘காட்டேஜ்’ என்றார்கள்.
கட்டிலில் படுத்திருந்தது... சம்பு அம்மாவா?
வயிரங்கள் பூரிக்க, நெற்றியில் பொட்டுடன் மஞ்சட் கதர் சேலையில் முதன் முதலாக அவள் பார்த்த அந்த சம்பு அம்மாவின் உருவமா இது?...
“அம்மா...!” என்று அவள் அலறிக் கொண்டு அருகில் போனாள். ஆனால், இந்தம்மா அவளை அருகில் செல்லக் கூடாது என்பது போல் தடுத்தாள்.
கண்கள் இருந்த இடத்தில் இரண்டு வங்குகள் தெரிந்தன. முகம் சப்பி முடிகத்திரிக்கப்பட்டு...
உணர்ச்சி வசப்பட்டு அவள் கண்ணம்மா என்று நீட்டிய கை வெறும் எலும்பாக, நரம்பாக இருந்தன. இருமல் வந்துவிட்டது.
இவள் சட்டென்று தாவிப் பற்றிக் கொண்டாள்; நெஞ்சை நீவிவிட்டாள். சளிதுப்பும் மூடிபோட்ட பெட்டியில் இரத்தத்துடன் விழுந்த கோழை...
“அம்மா... அம்மா... அந்த தெய்வத்துக்குக் கண் குருடா...?”
“கண்ணம்மா... என்னைத் தொடாதே, வானாம். சரோஜா... குழந்தை நல்லாருக்காளா ? எத்தனை வயசாச்சு...?”
கிணற்றுக்குள்ளிருந்து பேசும் குரல்.
ஆனால் அவள் விடவில்லை. பேச்சே எழும்பாமல் இவளுக்குத் துயரம் முட்டியது. “சரோ, கண்ணம்மாவுக்கு நல்ல பையனா, உடம்பு உழைக்கும் உழைப்பாளியாக ஒருத்தனைப் பார்த்துக் கல்யாணம் செய்து கொடுத்துடுங்க. கண்ணம்மா, எப்டீருக்கே? படிக்கிறத விட்டுடாதே...”
இவள் எதுவுமே பேசத் தெரியாமல் பிரமை பிடித்தாற் போல் நின்று கொண்டிருந்தாள்.
“கண்ணமங்கலத்துல ஒரு நல்லபையன் இருக்கான். அங்க ஸ்கூல் படிப்பு முடிச்சிட்டு எங்க வீட்டோடு தானிருக்கிறான். தூரத்து உறவு. அவப்பா அந்தக் காலத்தில் சிலோன் தேயிலைத் தோட்டத்துக்கு வேலை செய்யப்போயி, அங்கேயே செத்திட்டார். அம்மா மட்டும் இருக்கா...”
“கண்ணம்மாக்குப் புடிச்சாக் கட்டிக்கட்டும். அவ சம்மதிக்கணும்...” அம்மா எங்கோ பார்த்துக் கொண்டு இதைச் சொன்னார்.
பிறகு, “கண்ணம்மா, நீ போய்ச் சேர்ந்திருக்கும் இடம் பரிசுத்தமான இடம். நா எதச் சொல்றன்கிறத நீயே... தெரிஞ்சிப்ப. ஆனா, நான்தான் மேலானவன்னு திமிருல இருக்கிறவந்தா முக்காவாசி ஆம்புளயும். அந்த ஆம்புளக்கும் ஒழுக்கம், சத்தியம்தான்னு காந்தி மகான்தான் சொல்லிருக்கார்...
இவள் சம்பு அம்மாவின் கையைப் பற்றி அழுத்தமாகத் தன் உணர்ச்சியைக் கொட்டினாள். கை கதகத வென்றிருந்தது.
“பொண்ணாப்பிறந்தவ அவனுவ என்ன செஞ்சாலும் பொறுக்கணும். இல்லேன்னா... இல்லேன்னா... நீ பொம்புள தாண்டி, பொம்புள தாண்டின்னு...”
“சம்பு... வாணாம், வாணாம்மா, அழக்கூடாது...” என்று அம்மா சாத்துக்குடியை நறுக்கி, அங்கே அலமாரியில் இருந்த கண்ணாடியை எடுத்து அழுத்தி சாறு எடுத்தார். அவளே வாங்கி அதைப் பருகச் செய்தார்.
அலமாரியில் இருந்த அட்டைப் பெட்டியை, ஊசி மருந்தை எடுத்துப் பார்த்தார்.
“அம்மா, நா இங்கியே தங்கி அம்மாக்கு வேண்டியதச் செய்யட்டுமா?”
“வாணாம், வாணாம்மா, யாருமே இங்க தங்கக் கூடாது. பத்திரமா வீட்டுக்குப் போங்க. ஒட்டுவாரொட்டி சீக்கு. போங்கம்மா... நீங்க வந்ததே எனக்கு ரொம்ப ஆறுதல். சுந்தரந்தா அப்பப்ப கவனிச்சுக்கறான். எனக்கென்ன வேணும்...? சுதந்தரத்தத்தான் பாக்கமாட்டேன்?” இதற்குள் மூச்சிரைத்து இருமல் வந்துவிட்டது.
யமவாதனை என்றால் இதுதானா...?
வீட்டுக்கு வந்ததும் பின் பக்கம் நச்சுக் கொல்லி சோப்போட்டுத் தேய்த்து அம்மாவும் அவளும் குளித்தார்கள். துணிகளைத் துவைத்து உலர்த்தும் போது அழுகை அழுகையாக வந்தது.
இப்போதும்கூட அந்தத் துயரம் ஆறாத புண்ணாக மேலுக்கு வருகிறது. சாவு வீட்டுக்குச் சென்று வந்தாற் போல் குளித்தார்கள்.
ஒரு மாசத்துக்குள் சம்பு அம்மா இறந்துவிட்டார்கள். சேதியை இங்கே வந்து சுந்தரம் சொல்லவில்லை. ஒரு மாசமான பிறகுதான் தெரிய வந்தது.
அப்போது, இவளுக்குக் கல்யாணம் செய்ய அம்மா அய்யா, ராதாம்மா எல்லோரும் கண்ணமங்கலம் கூட்டிச் சென்றிருந்தார்கள்.