14

யந்தி டீச்சர் கூடைக்காக வரவில்லை. கொட்டுவதை எல்லாம் திறந்து மடையாக வெளியாக்கிய பிறகு, ‘கூடை’ என்ற காரணத்தை முத்தாய்ப்பாக வைத்துவிட்டுப் போயிருக்கிறாள். இங்கேயுள்ள முருகன் கடையில் இப்போதெல்லாம் பிளாஸ்டிக் வயர் கிடைப்பதில்லை. பெரிய சாலை நெடுக நடந்து, ஆஸ்பத்திரிப் பக்கம் முளைத்துள்ள ஒரு நெருக்கடி பஜாரில், ஒயர், மற்றும் பல்வேறு கை வேலைகளுக்கான பொருட்கள் இருக்கின்றன. பெரிய சாக்கடை பக்கத்திலேயே செருப்புக்கடை, போட்டோ ஸ்டுடியோ, காய்கறி மண்டி, தேங்காய்க்கடை, கண்களைப் பறிக்கும் மஞ்சள், கேசரி கலர்களில் ஜாங்கிரி லட்டு வகையறாக்கள் தெரியும் மிட்டாய்க்கடை... சாக்கடைக்குப் பக்கத்தில், ஒரு நரிக்குறத்தி இடுப்பு- முதுகு ஏனையில் ஒரு பெண்ணுடன் சரம்சரமான மாலைகளைத் தொங்க விட்டுக் கொண்டு போகிறாள். அந்த வரிசையில்தான் அந்தக் கடை இருந்ததாக நினைவு. உள்ளே சந்தை... காய்கறி வந்திறங்கும் லாரிகள் ஆக்கிரமிக்கும் நெரிசல். இல்லாதவர் வாங்கும் துணிக்கடைகள்... அங்கேயே தையல் மிசினை வைத்து வாணிபம் செய்பவர்கள்.

அவளுக்கு எதற்கு வந்தோம் என்ற உணர்வே அழிந்து விட்டாற்போல் இருக்கிறது. ஒரு பெண், சாலையில் பலரக வயர்கூடைகளை வைத்துக் கொண்டு வாணிபம் செய்கிறாள்.

“ஏம்மா, கூடைக்கு வயர் எங்கே வாங்கினீங்க?” அவள் இவள் வினாவுக்கு விடை அளிப்பவளாக இல்லை. அவளைச் சுற்றி இருக்கும் கூடைகளை வாங்க வந்தவர்களிடம் பேரம் பேசுவதில் குறியாக இருக்கிறாள்.

“என்னம்மா, ஒரேயடியா எண்பது ரூபா சொல்லுற...? அம்பதுன்னுதான் நான் போன மாசம் வாங்கினேன். தங்கச்சி ஊருக்கு எடுத்திட்டுப் போயிட்டா... சொல்லிக்குடு!” 

“ஒரே விலை. அம்பது ரூபா பை நானும் குடுத்திருக்கிற. இந்த ஒயர பாத்தியா? இருபத்தஞ்சு வருசம் தாங்கும். அப்பிடிப் போட்ட பையி. பிளாஸ்டிக்பை, கேடு கேட்டது, மூணு மாசத்தில புடி புட்டுக்குது, அது அம்பது அறுபதுன்னு விக்கிறாங்க...”

“சரி, எழுபத்தஞ்ச வச்சிக்க!...”

“ஒரு பைசா குறையாது. தொண்ணுறுன்னா தர கட்டுபடியே ஆகும். ரயில் செலவுக்குக்கூட வராத கிராக்கி...”

அந்தப் பெண் மேலும் பார்த்து ஒன்றை எடுக்கிறாள். கைப்பையில் இருந்து ஒரு ஐம்பது ரூபாயும், மூன்று பத்து ரூபாய் நோட்டுகளையும் எடுத்துக் கொடுக்கிறாள். அடுத்தடுத்துப் பை வாங்க வருகின்றனர்.

ஒயர் எங்கே கிடைக்கிறது என்ற வினாவுக்கு விடை தெரியவில்லை. முன்பெல்லாம் கடைகளில் இதே பைகள் மாட்டியிருப்பார்கள். அவர்களிடமே ஒயரும் கிடைக்கும்.

“ஏம்ப்பா, ஒயர்... கூடைபின்னுறது இருக்கா?”

“இப்ப யாரும்மா இந்தக் கூடை எடுத்திட்டுப் போறாங்க? விதவிதமா பிளாஸ்டிக் பை வந்திடிச்சி. அல்லாப் பொம்புளகளும் டுவீலர்ல சர்ருனு வேலைக்குப் போறாங்க? காய்கறி, துணி மணி எல்லாம் ‘கேரி பேக்’ வந்திடிச்சில்ல?” என்று விளக்கம் கூறுகிறான் கடைக்காரப் பையன்.

தள்ளுபடி விற்பனை! ஆடிக்கழிவு... வாங்க, வாங்க என்று பாத்திரக்கடையில் இருந்து அடுக்கடுக்காக ஆட்டு உரல் ‘கிரைண்டர்’களும் குளிரலமாரிகளும் குவித்திருக்கும் கடைகளில் விற்பனைப் பையன்கள் அழைக்கிறார்கள். தெருவில் தலையணையில் இருந்து, போர்வை வரை போட்டுக் கொண்டு விற்பனை நடக்கிறது. ஒவ்வொரு கடையிலும், பொருட்களைக் காட்டவும் பேசவும், இளவயசுப் பெண்கள் தாம் இருக்கிறார்கள்.

இரவு ஒன்பது, பத்து மணி வரையிலும் இவர்கள் வேலை செய்து விட்டு, பதனமாகப் போய்ச் சேருவார்களா? மறுபடி மறுபடி சங்கரியின் முகம் தோன்றுகிறது. வீட்டுக்குள் ஆண் துணை இல்லாத பெண் என்றால், இந்த அளவுக்கு, குடும்பம் இருக்கமாக மக்கள் வசிக்கும் தெருவில் துணிந்து...

சே, நினைக்கப் பொறுக்கவில்லை, வேறு எதுவும் தோன்றவும் இல்லை.

இன்னைக்கு சங்கரி... நாளைக்கு எனக்கோ, என் பெண்ணுக்கோ... என்று நெருப்புக் குரலில் வெந்து வடித்தாளே, பத்து நூறு பிள்ளைகளுக்குக் கல்விப்பணி செய்யும் ஜயந்தி டீச்சர்...

அந்தக் காலத்திலும் இப்படி. அரசப் பொரசலாக, தொடர்பு கற்பிப்பது உண்டு. ஆனால், உண்மையோ பொய்யோ, வித்யாலயத்தில், மருதமுத்து தன்மீது மாசுபட்டுவிட்டது என்ற சொல்லையே தாங்காமல் ரயில் தண்டவாளத்தில் தலை கொடுத்தான். ஓராண் பெண் தொடர்பு, உறவு என்பது, கல்யாணம் என்ற புனிதப் பெட்டிக்குள் வைத்துப் பாதுகாக்கப்படும் விலை மதிப்பில்லாத பொக்கிசம். அதை இப்படிக் காலில் போட்டு மிதித்து சூறையாடுகிறார்களே?... இதை எல்லாம் கேட்கவா, உயிர் வாழ்கிறாள்?...

“என்ன, ஆச்சிம்மா? எங்கே இந்தப் பக்கம்?...”

சட்டென்று நின்று பார்க்கிறாள். “யாரு...?...”

பருமனாக சிவப்பாக, சுருளான செம்பட்டை முடியை அழுந்த வாரிய பெரிய கொண்டை... வயிரங்கள்...

“என்ன, பழமானூர்தெரு பங்களா வீட்டு ஆச்சிதானே? புரியலியா என்ன? குஞ்சம்மா பொண்ணு சவுந்தரம்... பாத்து ரொம்ப நாளாச்சி... பாய் மாமா மவுத்தான சேதி கேட்டு அந்தப் பக்கம் வந்தேன். நீங்க வந்திட்டுப் போனதா சொன்னாங்க. நான் தலைய காட்டிட்டு உடனே காரில வந்திட்டேன். இவ எம் பொண்ணு. ஊர்மிளான்னு பேரு. இவ கல்யாணத்துக்குப் பத்திரிக்கை வைக்கிற சாக்குல கூட வந்து பாக்க முடியல. கல்யாணம் திருப்பதில வச்சுக்கிட்டோம். ஜார்ஜூம் அவள் அம்மாவுந்தா வந்தாங்க...”

“அதுசரி, நீ தி.நகர்ல்ல இருந்தே? அங்கதான இருக்க?”

“இல்லிங்க ஆச்சி. இவங்கப்பா எட்டுவருசமா மஸ்கட்ல இருக்காங்க. நரேந்திரன் இப்பதா படிப்ப முடிச்சிட்டு யு.எஸ். போயிருக்கிறா. நா இப்ப நங்க நல்லூர் பக்கம் வந்திட்ட. எங்க மாமனாரு பெரிய பையன் எறந்தபிறகு ரொம்பப்படுத்திட்டாரு. பையன், பொண்ணு, எல்லாரும் யு.எஸ். போயிட்டாங்க. எங்க ஓரகத்தியாவும் ஸ்கூல் டீச்சரா இருந்தாங்களா, ரிடயர் ஆகி மகனோட போயிட்டாங்க. பிறகு தான் நாங்க இங்க வந்தோம்... நீங்க அதே பங்களாவுலதா ஒத்தைக்கு இருக்கீங்களா? ராதாம்மா, புருசன், மகன் யாருன்னாலும் வந்து பாக்குறாங்களா?”

“ஒரு நா வருவாங்கன்னு நினச்சிட்டிருக்கிறன்...”

“அப்ப... உங்களுக்கும் வயசாச்சில்ல, மகன் கூட போயிரலியா?”

“ஏம்மா, யாருக்கு வயசானா, யாருக்கு என்ன? நீயே இப்ப சொல்ற, புருசன், மகன் எல்லோரும் எங்கேயோ. யாருட்ட கேட்டாலும் தாய் நாட்டு மண்ணத் தட்டிட்டு ஓடுறதிலியே இருக்காங்க. இங்க எங்கவந்த சொல்லு...”

“அதா ஆச்சி, ஆடிக்கழிவுன்னு போட்டிருக்கா. தீவாளி வருது. துணி மணி வாங்கலான்னு வந்தேன். இவ புருசனும் சொன்னாப்புல யு.எஸ்.தா போறா. எல்லா ஏற்பாடும் ஆயிட்டது. முதத் தீவாளி. போகலான்னு சொன்னா. இன்னிக்கு இவளுக்கு லீவு. எங்க வீட்ல சனிக்கிழமதா துணி எடுப்போம்...”

“துணி எல்லாம் எடுத்தாச்சா?...”

“இத, காருக்குள்ள இருக்கு. வாங்களே ஆச்சி, அப்படியே நம்ம வீட்ல வந்து நாலுநாள் இருந்திட்டுப் போகலாம்? ஒத்தைக்குத்தானே இருக்கிறீங்க? எங்கூடவே கூட இருக்கலாம்... ஆனா, நீங்க மகன் கூப்பிட்டுக் கூடப் போகல. அது எப்படியோ போகட்டும், இப்ப என் கூட வாங்க ஆச்சி...”

“நீ இப்படி நடுத் தெருவில நின்னு கூப்பிட்டா நா வருவனா?”

“சரி ஆச்சிம்மா, அப்ப வாங்க, வூட்டுக்குக் காரில போகலாம். அங்க வந்து கூப்புடறேன்...” என்று சவுந்தரம் சிரிக்கிறாள்.

“வானாம். நீங்க பத்திரமாப் போயிட்டுவாங்க. இந்த மட்டும் ஆச்சிய நினப்புவச்சிட்டு விசாரிச்சியே. அதுவே சந்தோசம்...”

“எனக்கு சந்தோசம் நீங்க வந்தாதா...” என்று அவள் கையை வலியப்பற்றி இழுத்து கார்க்கதவை டிரைவர் திறக்க, உள்ளே அவளை உட்காரச் சொல்கிறாள். “ஊர்மி, நீ முன்ன உக்காந்துக்க...”

“என்னம்மா, நீ?...”

“ஒண்ணுமில்ல. காரை விடுங்க மயில்சாமி. இப்படியே பழைய மானூர் ரோடு வழி போயி கிராஸ் பண்ணி, வண்டியக் கொண்டுட்டுப் போங்க!”

சொகுசு வண்டி. உள்ளே குளுகுளுவென்றாகிறது... துணிப்பார்சல்களைத் தள்ளி பின்னால் வைக்கிறாள். பெரிய கார்...

இவள் பாட்டி குழந்தைகளை தாத்தா ரங்கூன் சண்டை வருமுன்பே கப்பலில் ஏற்றி பத்திரமாக ஊருக்கு அனுப்பிவிட்டார். ஆனால், அவர் இந்திய தேசிய ராணுவத்தில் இருந்து கைதாகி, தப்பி வந்து குற்றுயிராக, வந்தவர். அவள் இருக்கும் அந்த பங்களாவாசல் அறையில் உடம்பெல்லாம் கொப்புளங்களும் காயங்களுமாகப் படுத்திருந்த நினைவிருக்கிறது. சம்பு அம்மா இறந்த பிறகு சுந்தரம் இங்கே வந்து தொண்டாற்றினான். உடல் தேறி, அவர் டில்லிக்குச் சென்றார். நன்னிலம் பக்கம் சொத்துபத்தெல்லாம் இருந்தது... எப்படியோ அந்தக் கிளை மறுபடியும் சொந்த மண்ணில் தறிக்காமல்...

சட்டென்று வண்டி ஒதுங்கி நிற்கிறது.

“என்னப்பா?...”

காரோட்டி வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்குகிறார். கண்ணாடியை இறக்கி, சவுந்தரம் பார்க்கிறாள். “எதோ ஆக்ஸிடன்ட் போல இருக்கு போலீசு ஏகத்துக்கு நிக்கிறாங்க?”

பேசாமல் அவள் வீடு திரும்பியிருப்பாள்.

வயிற்றை சங்கடம் செய்கிறது. “யம்மா, கதவத் தொறந்துவுடு; நா எறங்கிக்கிறேன்.”

“கதவைத் திறந்து கொண்டு அவள் முதலில் இறங்க, இவளும் இறங்குகிறாள். நிறைய வண்டிகள் நிற்கின்றன. சாலையின் போக்குவரத்தே நின்று கிடக்கிறது. இருவழியில், ஒரு வழியிலும் போக்குவரத்தில்லை. டிரைவர் வியூகத்துக்குள் புகுந்துவிட்டு வருகிறார்.

“சவுந்தரம் இதத்தானே, பார்க்குகிட்ட வந்திருக்கிறோம். நான் இப்படியே குறுக்க திரும்பி, பொடி நடையாப் போயிடுவேன். இன்னிக்குக் கிளம்பின நேரம் சரியில்ல போல. நீங்க பண்டிகைத் துணி வாங்கிட்டுப் போறீங்க, பதனமாப் போய்ட்டு வாங்க...”

“ஒரு பொண்ணு அடிபட்டுக் கிடக்கு. பிரியாணி பொட்டலங்க சிதறிக்கிடக்கு. கட்சிக் கொடி போட்ட ஆட்டோ நிக்கிது...”

“சரியான ‘ஈவ்டீசிங்’ கேசுப்பா, இந்தப் பொறுக்கிக, ஆட்டோவில பிரியாணிப் பொட்டலத்த வச்சிட்டு, பார்க்குப் பக்கம் நடந்திட்டிருந்த பொண்ணுகளத் துரத்திட்டு கைபுடிச்சி இழுத்திருக்கானுவ. முக்கியமான நபர் போன எடம் தெரியாம நழுவிட்டாகட இருந்த பொறுக்கிக அம்புட்டுக்கிட்டாங்க...”

செவிகளில் விழும் செய்திகள், செவிப்பறையைத் துளைத்து, உணர்வுகளைப் பந்தாடுகின்றன.

இந்த பூமியில் எதற்காக இருக்கிறோம் என்று பலவீனம் ஆட்கொள்கிறது. பட்டப்பகலில் நடுவீதியில் இந்தப் பெண் வேட்டை நடக்கிறது. முன்பெல்லாம் அவள் ஒரு தமிழ் தினசரி வாங்கிப் படித்துக் கொண்டிருந்தாள். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கட்சிமாறும் புண்ணியங்கள், மக்களை ஏமாற்றிப் பதவி பிடிக்கும் சாதுரியங்கள், கட்சி பலம் காட்டும் மாநாடுகள், இவர்களிடையே பந்தாடப்படும் வாக்குறுதிகள், என்ற செய்திகள் தவிர ஆரோக்கியமாக, தெம்பு கொடுக்க, நம்பிக்கை கொடுக்க எந்தச் செய்தியும் இல்லை. மாசம் நூறு ரூபாய் மிச்சம் என்று நிறுத்திவிட்டாள். ஒருபழைய ரேடியோ இருந்தது கையடக்க டிரான்ஸிஸ்டர். காலை நேரத்தில் அதில் செய்திகள் கேட்பாள். வெள்ளிக் கிழமைச் சடங்காக காந்தி பஜனை வரும். அதை எடுத்துக் கொண்டு போன பராங்குசம், ஒரு மிகச்சிறிய டிரான்ஸிஸ்டர், பாட்டரியில் ஓடுவதைக் கொண்டு வந்து வைத்தான். இப்போது அதில் என்ன கோளாறோ, காதடியில் வைத்துக் கொண்டாலும் கேட்பதில்லை. மாடியிலேயே கொண்டு வைத்துவிட்டாள். அவள் நடமாடும் சூழலே செய்திகளாக இருக்கின்றன. இன்று அவள் சாதாரணமாக, யதேச்சையாக, வெளிக்கிளம்பி வந்திருக்கிறாள். எத்தனை செய்திகள்? அவலங்கள்? நடுவீதியில் வேட்டையாடப்பட்ட பெண் யாரோ?

மண்ணாங்கட்டி மூலமாகக் கட்சியில் பிறந்த நாள், இறந்த நாள் விழாக்கள் கொண்டாடப்படும் போது, பிரியாணி பொட்டலங்களே விழாச் சின்னங்களாக மணம் வீசும். ரங்கனும் இந்தப் பிரியாணி விழாக்களில் ஆதாயம் பெறுவான் என்பது அவளுக்குத் தெரியும். மட்டன் குருமா - ஏ.ஒன். பீஃப், ஸுப் ரெடி என்று ரயில் பாதை யோரம் குடிசைக் கடைகளில் எழுதியிருக்கும். வெட்டித் தோலுரிப் பதும் அங்கேயே நடக்கும் என்று சொல்கிறார்கள். இந்த லட்சணத்தில், பசுவதைத் தடுப்புச் சட்டமாம்!

வேகுவேகென்ற அந்தக் குடிசைக் கடைகள், இரத்தம் கருகிப் போன சாக்கடைகள், கறி கொத்தும் கட்டைகள் எல்லாம் கடந்து வருகிறாள்.

கோமாதா குலமாதா... பசுக்களைக் கும்பிட்டுப் பூசை செய்ய வேணும் என்று மடத்து ஆசாரிய சுவாமிகள் இப்போதும் சொல்கிறார். பத்திரிகைகளில் அவருடைய வண்ணப்படங்கள்.

பத்திரிகைக் கடைகளில் தொங்குகின்றன. கோமாதாக்கள், குப்பைத் தொட்டியில்தான் வயிற்றுப் பாட்டைப் பார்த்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. சொந்தக்காரன் இவை கறக்கும் வரை காலையிலும், மாலையிலும் தேடி வந்து கொண்டு போய்க் கரந்து கொள்வான்.

“யாருடீ அந்த ஆசாரியன்? எதுக்குக் கொலை பாதகம் பண்றான்?” என்று சம்பு அம்மாவின் ஆங்காரக் குரல் மின்னல் பாய்ந்தாற்போல் ஒரு கணம் உலுக்குகிறது. வண்டிக்காரன் தங்கவேலு சில நாட்களில் தன் மூன்று நான்கு வயசுப் பிள்ளைகளை அழைத்து வருவான்.

“டேய், முருகா? இங்க வாடா!” என்று அம்மா கூப்பிடுவார்.

“சாப்பிடுறியா?” என்று கேட்பார். எப்போது கேட்டாலும் அழகாக ‘உம்’ என்று தலையசைப்பான். அந்தப் பெருமாட்டிக்கு எந்தக் குழந்தையைக் கண்டாலும் சோறு பிசைந்து ஊட்டும் தாபம் தோன்றும் போலும்! ஒரு பட்டை வெள்ளிக் கிண்ணத்தில் தயிரூற்றிச் சோறு பிசைந்து கொண்டு வருவாள். அவனை ஊஞ்சற் பலகையில் உட்கார்த்தி வைத்துச் சோறூட்டுவாள். “கொழம்பு சோறு வேணுமா?”

அதற்கும் ‘உம்’ என்று தலையசைப்பான். “வயிறு என்னை இடிக்கிறது... உங்கம்மா இன்னிக்கு என்ன குழம்பு வச்சாங்க?” என்று கேட்பாள். தங்கவேலு மூலையில் நின்று பார்த்துக் கொண்டிருப்பான். “மி...மீன்..” என்று வார்த்தை வருமுன் “டேய்” என்பான் தங்கவேலு.

“...இல்ல...மு முருங்கக்காய்க் குளம்பு” என்று பொக்கைப் பல்லைக் காட்டிச் சிரிப்பான். அம்மா அவன் வாயைத் துடைத்துவிட்டு, கன்னம் கிள்ளி முத்தம் கொஞ்சுவாள்.

மரக்கறி உணவு, அப்படி நாகரிகப் பண்பாட்டின் அடையாளமாக இருந்தது.

ஆனால் அதே அம்மாவின் அண்ணன்மார், அப்போது ஆடும் கோழியும் சாப்பிடுபவர்கள் என்ற உண்மை அம்மாவின் சொற்களில் தெறித்துவிழும். “இங்கே நான் தீட்டாக்கி, குலாசாரம் கெடுக்கிறேனாம், பெண்ணைக் கூட்டிட்டுப் போறான்! இவன் வீட்டில பெரிய துரைக்கெல்லாம் ‘தீர்த்தம் பிரசாதம்’ கொடுக்கும் பார்ட்டியப் பார்த்துப் பழகட்டும்?” என்று கடுகடுத்தாள். அந்த புருசன் தாமுவுக்கும் இதெல்லாம் இருந்திருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. கடைசியாகச் சொன்ன சொல்...

‘ஆம்புள பொம்புளய, இவதான்னு ஓங்க முடியாம, நீ பொம்புள பொம்புளன்னு... ஒடுக்கிடுவான்’ என்று தானே சொன்னாள்? இத்தனை படிப்புப் படித்து, வேலை செய்து சம்பாதித்து, என்ன உசத்தி வந்திருக்கு? என்ன மதிப்பு வந்திருக்கு?...

அவள் புருசன்... எத்தனையோ வகைகளில் வேறுபட்டான். எல்லோரையும் போல் வெள்ளையும் சள்ளையுமாகப் போட்டுக் கொண்டு மதிப்பாக இருக்க வேணும், வாழ்க்கையை அனுபவிக்க வேணும் என்ற ஆசைதான். அவன் கிராமத்தில் செய்த அதே வேலையை நகரத்துக்கு வந்தும் செய்கிறான். எட்டாவது தேறியிருக்கிறேன். இந்தப் படிப்புக்கு ஒரு கவுரவ வேலையில்லையே என்று குறைபட்டுக் குடிபழகினான். அது கூடச் சேர்வார் சரியாக இல்லாததனால். ஆனால், அவன், அவளை மறந்து எந்தப் பெண்ணையும் வேறு கண் கொண்டு பார்த்ததில்லை. “என் கண்ணுத்தாயத் தவிர பாக்கிற பொம்புள எல்லாம், தெய்வம் எனக்கு, புள்ளாரு ஏன் கலியாணம் கட்டல? பாக்குற பொம்புள எல்லாம் பெத்த தாயாத் தெரியிறது தாயுன்னு சொன்னார். பொறுக்கிப் பயனுவ...” என்று குடிபோதையிலும் தன்னை வேறு பக்கம் இழுப்பவனை, பெண் சுகம் தேடி, எங்கெங்கோ நுழைபவர்களுடன் மோதிச் சண்டை இழுத்திருக்கிறான்... ஆனால், மகனிடம் அந்த நேர்மையே இல்லை.

இந்த ஒழுக்கச் சூழல் இல்லாமல் இருந்திருந்தால், அவள் புருசனும் ஒரு கால் பிசகி இருப்பானோ?... அவனுக்கு அவள் இந்தக் குடிலில் மீனும் கறியும் சமைத்ததில்லை. அவள் வளர்ந்ததும் பதம் பெற்றதும் மரக்கறி இல்லங்களிலும் சாத்துவீக மக்களிடமும்தாம். எனவே, அவள் கணவன் வேறு உணவு கொண்டாலும், வெளியே இருந்த உறமுறை வீடுகளில் தான் சாப்பிடுவானாக இருக்கும். அவளை அவன் சமைக்கச் சொன்னதில்லை. கடற்படையில் இருந்த ராதாம்மாவின் புருசன் எல்லாம் சாப்பிடுவார்; குடிப்பதும் உண்டு என்று சொல்லிக் கொள்வார்கள். அதையும் அவள் பையன்தான் சொல்லிக் காட்டினான்.

ஆனால், கட்டிய மனைவிக்குத் துரோகம் செய்வதென்பதை அவளால் சீரணம் செய்ய முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=உத்தரகாண்டம்/14&oldid=1022825" இலிருந்து மீள்விக்கப்பட்டது