2

கார்க்கதவு பட்டென்று அறைபடும் ஒசை கேட்கிறது.

கோபம்... கோபம் பாவம்... அது நீசத்தனமான செயல்களுக்கு வழி வகுக்கும். அவளும் கோபப்படுகிறாள்.

“ஏய் ரங்கா? என்ன எழவுடா இது? எதுக்குடா இதெல்லாம் இங்க கொண்டு வந்த?...”

அவன் தலையைச் சொறிந்து கொண்டு நிற்கிறான். சேவாகுருகுல அறங்காவலர் குழுதான் அவனை இங்கு நியமித்திருக்கிறது. அய்யா இறந்தபின், கிராமத்திலிருந்து வந்தவன்தான். இந்தப் புள்ளியைச் சுற்றி இவன் உறவுகள் ஏதேதோ காரணம் சொல்லிக் கொண்டு நகரச்சந்திக்கு வந்திருக்கின்றனர். “இந்த நகரத்தில் குடியிருப்பவர் அதிகமானவர்கள் கிராமங்களில் இருந்து, பல்வேறு காரணங்களுக்காக வந்து வேர்விட்டவர்கள்தா... எங்கப்பாவுக்கப்பா அந்தக் காலத்தில் வியாபாரம்னு வந்தார். டவுனில் மளிகைக்கடை வைத்தாராம். எங்கப்பா, சித்தப்பா அத்தை எல்லோருமே ஊரைவிட்டு வந்து குடியேறினாங்க...” என்று அய்யா படுக்கையோடு விழுந்த நாட்களில் அந்தக் கதை எல்லாம் சொல்வார். பதினாறு வயதில் கல்யாணத்தைப் பண்ணி வைத்து, பையனை மேல் படிப்புக்கு வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கனவு கண்ட அப்பாவைமீறி, அவர் கனவைப் பொய்யாக்கினார். காங்கிரசில் சேர்ந்து கதர் உடுத்தும் விரதம் ஏற்றதும், கள்ளுக்கடை மறியல், தீண்டாமை ஒழிப்பு என்றெல்லாம் மகன் அன்றைய நடைமுறை சட்ட திட்டங்களை உடைத்தார். இந்த வீடு, அவரை மணம் புரிந்த பத்தினி தெய்வத்துக்குச் சொந்தமானது. அந்நாளில் அரிசி மண்டி மொத்த வியாபாரம் செய்த குடும்பத்தின் ஒரே வாரிசு. ரங்கூனில் இருந்து வேர்பற்றிய குழந்தையும் குட்டியுமாக வந்த குடும்பங்களை வரவேற்று ஆதரித்த காலத்தில் கட்டப்பட்ட வீடு. தாயம்மாவுக்கு அப்போது இருபது இருபத்திரண்டு பிராயம் இருக்கும். பானை பானையாகப் பொங்குவார்கள். பெரிய துண்டுகளாகக் காய்களை நறுக்கிப் போட்டு, பருப்புடன் வேக வைத்துக் குழம்பு காய்ச்சுவார்கள். இந்தக் கிணற்று நீரை இரைத்து இரைத்து சந்தோசமாக மனித நேய அநுபவங்களைக் கொண்டாடிய காலம் அது. அம்மாவும் அய்யாவும் சேர்ந்து ஈடுபட்ட பெரிய தொரு கொண்டாட்டம் அது. நெருப்பு எரிந்து கொண்டே இருக்கும். சாதி மதம், ஏழை பணக்காரர் என்று பாராமல் வயிற்றுப் பசியை அவிக்கும் நெருப்பு அது.

ஆனால் இப்போது இவள் மன நெருப்பை அவிக்க எந்த வழியும் தெரியவில்லை.

“நம்ம தாயம்மாவுக்குப் புள்ள பெறந்திருக்கு. முதரெண்டும் பொண்ணுன்னு இருந்திச்சி. இப்ப பையன்...”

நாட்டுப் பிரிவினையின் போது, காந்தி மகான் தன்னந்தனியாகக் கலவரப்பட்டு வெட்டும் குத்துமாக இருந்த இடங்களில் செருப்பில்லாமல் நடந்தாரென்று, அய்யாவும் அங்கெல்லாம் சென்று பார்த்துவிட்டு வந்திருந்தார். சோகமாக இருந்த நாட்கள். சேவா குருகுலத்துக்குள் இருந்த குடிலில் தான் இவள் பெற்றிருந்தாள். கார்ப்பரேஷன் ஆசுபத்திரி மருத்துவச்சி, சிந்தாமணி வருமுன் இவன் பிறந்துவிட்டான்... பத்துப் பதினைந்து நாட்களிருக்கும்... உள்ளே வந்து அம்மா குழந்தையை வெளியில் எடுத்துச் சென்றாள். குடில் வாசலில் அய்யா...

“என்ன பேரு வச்சிருக்கீங்க?”

இவளுக்குக் குரல் செவிகளில் விழுந்தது...

அவள் புருசனும் பக்கத்தில்தான் நின்றிருந்தான்.

“அய்யா, நல்ல பேரா வையுங்க...”

“அதுசரி, நீ முதல்ல, இனிமே காள்ளுசாராயம் பார்க்கிறதில்லேன்று பிரதிக்ஞை எடுத்துக்க... என்ன? பொண்ணுக பிறந்து சம்சாரி ஆனபிறகு பனந்தோப்புக்கள்ளைத் தேடிட்டுப் போக மாட்டேன்னு நினைச்சேன். நாங்களும் இங்க ஒவ்வொரு குப்பமா போயிப் பிரசாரம் பண்ணுறோம். எங்க நிழலிலேயே இருந்திட்டு நீ மொந்தை போட்டுட்டு வரது வெட்கமாயிருக்கு...”

“இனிமே இல்ல சாமி...”

“இந்த இனிமேக்கு உயிர் உண்டா? நந்தனார் சரித்திரம் தெரியுமா உனக்கு? கள்ளுமொந்தைச் சூழலிலே பிறந்து, சிதம்பரம் போகணும்னு கனவு கண்டார். நாளைக்குப் போவேன், நாளைக்குப் போவேம்பாராம். திருநாளைப் போவார்”னு சொன்னாங்களாம். அது போல் உன்னை ‘இனிமே குடிக்காதவர்’னு சொல்லவா?”

“இல்ல சாமி... நிச்சியமா இனிமே குடிக்கமாட்டேன்...”

“எப்படினாலும் நீ குடிக்க முடியாம வழி பண்ணிடுவோம். ஏன்னா, சுதந்தர சர்க்கார் வந்திடும். உடனே மது விலக்குச் சட்டம் நெறிப்படுத்துவோம்!”

“அப்படி வந்திட்டா, எத்தனை ஏழைகள் மனம் குளிரும்?...” அப்போதுதான் ராதாம்மாவின் குரல் கேட்டது.

“அப்பப்பா, குழந்தையை ஏங்கிட்டக் குடும்மா..."

வாணாம்மா, பூக்குழந்தை. எப்படியேனும் துக்கினால் குழந்தைக்கு வலிக்கும். கழுத்து நிற்க நாளாகல...”

“அப்ப நா உக்காந்துக்கறேன். என் மடில வையி...”

இப்போது நினைத்தாலும் தாயம்மாளின் நெஞ்சுருகிக் கண்கள் கசிகின்றன.

“இவனுக்கு ‘மோகன்தாஸ்’னு பேர் வைக்கிறேன்... மோகன்தாஸ்! மோகன்தாஸ்...”

“அய்யா! இது காந்திஜி பேரில்ல, அப்ப?”

“ஆமாம்மா. நம்ம நாட்டுக்கு சுதந்தரம் வந்து, சாதி மதம், பட்டினி, பசி, எல்லாம் ஒழிய, நிறையப் பேர் அவர் போல வளரணும். சுதந்தரம் வந்த பிறகு நாட்டை வழி நடத்த நிறையப்பேர் அவர் மாதிரி வரணும்.

“மோகன்... மோகன்... மோகன்னு கூப்பிட்டா நல்லா இருக்கும்.”

அம்மா புள்ளையை வாங்கிக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்தாள்.” உம்புள்ளைக்கு அய்யா காந்தி பேரை வச்சிட்டார். அவன் அமோகமா இருக்கணும் தாயம்மா!”

‘மோகன்தாசு, மோகன்தாசு, மோகன்தாசு’ என்ற அந்தப் பூஞ்செவியில் தாய் ஒலி எழுப்பினாள்.

ஐந்து மாதம் ஆனபோது, அவள் சமையல் கூடத்து மூலையில் கந்தலில் போட்டுவிட்டு வேலை செய்து கொண்டிருப்பாள்.

மோகன், மோகன்... என்று, பஞ்சமியும் சந்திரியும் கொஞ்சுவார்கள்.

‘மோகன்?’ என்று சத்தமாக ராதாம்மா கூப்பிட்டால் திரும்பிப் பார்ப்பான். அவன் படிக்க வந்த போது, குடில் பள்ளி பெரிய குருகுலப் பள்ளியாக வளர்ந்துவிட்டது...

ஒன்பதாவது படிக்க வெளியே சென்றுவிட்டான்.

அப்போதே பேரை மாற்றிக் கொண்டுவிட்டான். அப்போது புருசன் உயிருடன் இல்லை. எந்த அடிப்படையை அவள் நிலையான தென்று நம்பினாளோ, அது ஆட்டம் கண்டுவிட்டது. பஞ்சமி பள்ளிப் படிப்பு முடித்து, கிராம சேவிகா பயிற்சியும் முடித்து, காஞ்சிபுரம் பக்கம் சேவிகாவாக வேலை பார்க்கையில் கல்யாணமாயிற்று. கிராமத்துப் பையன்தான். ‘எலக்ட்ரிகல்’ வேலை தெரிந்து தொழில் செய்தான். படப்பைப் பக்கம் குடும்பம் வைத்திருந்தார்கள். சந்திரி பள்ளி முடித்து ‘நர்ஸ்’ படிப்புக்குச் சேர்ந்திருந்தாள்.

“அம்மா, தம்பி பேரை மாத்திக்கிடிச்சி!...”

பஞ்சமியும் மருமகனும் தீபாவளிக்கு வருவார்கள் என்று, பலகாரம் சுட மாவரைத்து வந்திருந்தாள் அவள்.

“என்னடீ சொல்ற?”

“ஆமா... இத பாரு, நோட்டுப் புத்தகத்திலெல்லாம் எழுதிட்டிருக்கு!” அவள் துணுக்குற்றுப் பார்த்தாள்.

இளவழகன்... இளவழுதி, இளவரசன்...

“ஸ்கூல்ல பேர் மாத்திட்டானா?”

“தெரியல. ஆனா, அவன் மோகன்தாஸ் காந்தியில்ல. அது மாத்திரம் நிசம்...”

அப்போதே அவள் மருண்டு நின்றாள். ஆதாரக் கல்வியை அடிப்படையாகக் கொண்ட, குருகுலம் பள்ளியில் அவன் படிக்க விரும்பவில்லை. இவர்கள் குடிசை, அந்த வளாகத்தில் தான் இருந்தது. பள்ளி வகுப்புகள் ஏறி ஒன்பது, பத்து என்று வந்துவிட்டது. அங்கேயே சாப்பிட்டுத் தங்கிப் படிக்க, முப்பது பிள்ளைகள் போல இருந்தார்கள். மரத்தடியில் பராங்குசம், மருதமுத்து, சுசீலாதேவி எல்லாரும் வகுப்பெடுப்பார்கள். ஆங்கிலம் தமிழ் இந்தி எல்லாப் பாடங்களும் உண்டு. சுதந்தர இந்தியாவின் குடிமக்களை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் பெரிய தலைவர்கள் அங்கே வருவார்கள். அம்பர் சர்க்காவில் நூல் நூற்று, ஏழைப் பெண்களுக்குத் தொழில் புரிய வசதி செய்திருந்தார். ராதா அம்மாவுக்கு எளிய முறையில் அங்குதான் கல்யாணம் நடந்தது. மருமகன், கப்பலில் போகும் என்ஜினியராக இருந்தார்... ‘சுதந்தர இந்தியாவின் கடற்படையில் வேலை’ என்ற பெருமையுடன் அம்மா சொல்வாள்... பையன் அவள் அதிகார வட்டத்துக்கப்பால் அப்போதே நழுவிவிட்டான். நெடுநேரம் கண்ணாடியின் முன் தலைவாரிக் கொள்வதும் மோவாயில் மீசை அரும்புவதைப் பெருமையுடன் தடவிக் கொள்வதும் வயசுக் கோளாறு என்று பொருட்படுத்தவில்லை. தீபாவளி பொங்கல் என்றால் அய்யாதான் அவர்கள் எல்லோருக்கும் கதர் வேட்டி சேலை சட்டை வாங்கித் தருவார்.

“போம்மா! எனக்கு இந்தச் சட்டையும் அரை டவுசரும் பிடிக்கல. எங்கிட்ட காசு குடு, நான் எனக்குப் புடிச்சதை வாங்கிக்கிறேன்...” இதுதான் முதல் படி. அவன் உயரமாக வளர்ந்த பிறகு வேட்டி, துண்டு சட்டை என்றுதான் வாங்கித் தந்தார். அவன் அவர்கள் முகத்தில் படாமல் நழுவினான்.

அவன் சிகரெட் பீடி குடிப்பதையும், மூச்சுவிடாமல் வசனங்களைப் பேசுவதையும், அவனுக்கென்று ஒரு நண்பர் குழாம் இருப்பதையும் பஞ்சமி புருசன் கந்தசாமிதான் அவ்வப்போது வந்து சொன்னான். பாதி நாட்கள் பள்ளிக்குச் செல்வதில்லை. நாடகம் பார்ப்பது, எழுதுவது, பேசுவது என்று ஈடுபாடு காட்டியதில், ஒன்பதில் தேற வில்லை. அழகரசன் என்று ஒரு பையன் இவனைத் தேடி வருவான். அப்பன் பர்மாவில் இருந்து வந்தவன். இங்கே வந்தபின் கல்யாணம் கட்டி குடும்பமாக இருக்கிறான். தையல் கடை வைத்திருந்தான்.

அவன்தான் கருப்புச் சட்டைக் கட்சி.

அவள் அந்த ராசமணியைத் தேடிச் சென்றாள்.

தேனாம்பேட்டைச் சந்தில் ‘கதிரவன் தையலகம்’ என்று பலகை மாட்டி இருந்தான். ஓட்டுத் திண்ணையில் அவன் மிசின் வைத்துத் தைத்துக் கொண்டிருந்தான். கீழே ஒரு பொடிசு பித்தான் தைத்துக் கொண்டிருந்தான்.

மிசின் ஓட்டத்தோடு, அவன் யாரையோ திட்டிக் கொண்டிருந்தான். அவளுடைய வளாகத்துக்கு வெளியேயுள்ள ‘தமிழ்’ மொழியே அவளுக்குப் புரியாது. ஏனெனில் அவர்கள் கிராமத்தில் இப்படி ‘கீது, கிறாரு’ என்ற மொழி பேசிக் கேட்டதில்லை.

“ஏம்ப்பா, ராசமணி இருக்கிறாரா?”

அவன் நிமிர்ந்தான். அடர்ந்த முடி பின்பக்கம் விழுந்தது. அடர்ந்த மீசை, “ஏம்மே? நாந்தா ராசமணி?”

ஒரு கணம் திகைத்துவிட்டு, “ஏம்ப்பா, நான் தாயம்மா... என்னைத் தெரியல? அப்பாரு சௌக்கியமா? ரொம்ப நாளாயிடிச்சி, உன்னையும் எனக்கு அடையாளம் தெரியல, எனக்கும் உன்னை அடையாளம் தெரியல...” என்றாள்.

“அடே...டே...ஆமாம்! தியாகிவூட்டு வேலைக்காரங்களாச்சே? இளவழகு இப்பதா காஞ்சிவரம் புறப்பட்டுப் போச்சி... உம்புள்ள ஒரு அருமையான நாடகம் எழுதிருக்கு. அத்தப்பத்திப் பேசத்தா, தலைவரு கூப்பிட்டனுப்பிச்சாரு. நாந்தா புதுச்சட்டை தச்சிகுடுத்தேன். போட்டுட்டுப் போயிருக்கு...”

அவளுக்கு அப்போதுதான் புரிந்தது. இது முளை இல்லை, வேர்விட்டு விட்ட பயிர் என்று தெரிந்து கொண்டாள். அவன் குருகுலப் பள்ளியை விட்டு வெளிச் செல்லத் துடித்த காரணம் அப்போது தெரியவில்லை. இந்தக் கதர், பிரார்த்தனை, உடற்பயிற்சி, இந்தி, தமிழ், ஆங்கிலம் என்ற மரத்தடி வகுப்புகள் எல்லாமே பிடிக்கவில்லை. எப்போது முரண்டு செய்யத் தொடங்கினான் என்றே குறிப்பாகச் சொல்ல முடியாது. காலை ஆறு மணிக்கு எழுந்திருக்க மாட்டான். உடற்பயிற்சி ஆசிரியர் மருதமுத்து அவனை வீட்டின் முன் வந்து காதைத் திருகி அழைப்பார்.

“எந்நேரம் துரங்குறான்? எந்திரிடா ?” என்று சந்திரி பாயில் இருந்து தள்ளி உருட்டுவாள். சிற்றப்பன் ஒருவன் அவ்வப்போது காணங் குப்பத்தில் இருந்து வருவான். ரிக்‌ஷா ஓட்டுபவன். குடிகாரன். அவள் புருசனைக் கெடுத்தவனே அவன்தான். “ஏண்டி பொட்டச்சிறுக்கி, முதல்ல பிறந்திட்டா, நீ மகாராணியா? சாண்பிள்ளைன்னாலும் ஆம்புள. அது செத்த நேரம் தூங்கட்டுமே?” என்று அதட்டுவான். இது தாயம்மாளின் செவிகளில் அநேகமாக விழாது. ஏனெனில் அதிகாலையில் எழுந்து அவள் குடிலைச் சுற்றிய இடங்களில் சாணி தெளித்துப் பெருக்குவாள். பத்துப் பசுக்கள் உள்ள கோசாலை இருந்தது. சாணி சுமந்து போட எருக்குழி உண்டு. பால்கறந்து, தயிர், மோர் வேலைகள் இருக்கும். சமையற்கட்டில் அங்கேயே உறையும் மாணவிகளும் ஆசிரியர்களும் வேலை செய்வார்கள். பெரிய கிணறும் இருந்தது. உடலுழைப்பு மிக முக்கியமாகக் கருதப்பட்டது.

ஆனால் அவள் பையன் பிறவியிலேயே யாரேனும் தனக்காக எல்லாம் செய்ய வேண்டும் என்று அடம் பிடித்தான். இந்தி எழுத்துக்களை, பாடங்களை பஞ்சமி எழுதிக் கொடுப்பதும் இவன் கொண்டு போவதுமாக இருந்ததை ஆசிரியர் சுப்பையா கண்டுபிடித்துவிட்டார். பஞ்சமி ஏழிலோ எட்டிலோ படித்துக் கொண்டிருந்தாள். “நீ இரண்டு நாட்களுக்கு, அந்த வகுப்பிலேயே உட்கார்ந்திரு இங்கே வரவேண்டாம்” என்று அவளுக்கு வகுப்பில் நுழைய முடியாதபடி தண்டனை கொடுத்தார். இந்தப் பயலை செமையாக உதைத்து, வகுப்பில் இருந்து அத்தனை பாடங்களையும் எழுத வைத்தார்.

ஆனால் அவனைத் திருத்த முடியவில்லை. காசு எங்கே வைத்தாலும் களவு போயிற்று. அவளுக்கு இவனை அய்யா முன் கொண்டு நிறுத்தத் துணிவு வரவில்லை. அந்தக் கால கட்டத்தில், குடும்பத் தலைவன், இறந்து போன புதிது. அவன் சுதந்தரம் வந்ததும் பெரிதாக எதிர்பார்த்திருந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை.

“சுதந்தரம் வந்திடிச்சில்ல? அய்யா எப்படியும் மந்திரி ஆயிடுவாரு. தாயம்மா, நீதான் எனக்கு இந்தத் தோட்டக் காரன் வேலை இல்லாம, கவுரவமா அவருகிட்ட ஒரு வேலை போட்டுத்தரச் சொல்லணும். சுதந்தரச் சர்க்காரில் ஒரு டவாலி சேவுகன். சிவப்புப்பட்டைவில்லை போட்டுட்டு தலைப்பா கட்டிட்டு நான் நிப்பேன். இத்தினி வருசமா, இந்தக் குடும்பத்துக்கு நானும் உழச்சிருக்கிறேன்...” என்று ஒருநாள் அவன் சொன்னபோது அவளுக்குத் துக்கிவாரிப் போட்டது.

அந்த வீட்டிற்குப் பெரிய பெரிய தேசத்தலைவர்கள் அவளுக்குத் தெரிந்து வந்திருக்கிறார்கள். நாடு அடிமைப்பட்டுக் கிடந்த போது, சிறைவாசம் அநுபவித்தவர்கள்; பெண்டு பிள்ளைகளை மறந்தவர்கள் உனது எனது, சாதி, மதம் என்ற பாகுபாடில்லாமல் அந்த வீட்டை அறச்சாலையாகக் கருதியவர்கள், எல்லோருமே வந்தார்கள். தேசப் பிரிவினை, மகாத்மாவின் மரணம் இதெல்லாமே சுதந்தர சந்தோஷத்தில் பீடித்த கருநிழல்களாகிவிட்டன. தாயம்மாளுக்கு அப்போதெல்லாம் இதைப்பற்றிய விவரங்களோ, உணர்வுகளோ இல்லை. அவர் தேர்தலுக்கு நிற்கவுமில்லை. எந்தப் பதவியையும் ஏற்கவுமில்லை. பதவி ஏற்கவில்லையே தவிர, ஏழை எளியவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் படிக்க வேண்டும், அவர்களுக்காகப் பள்ளிகள் நிறுவ வேண்டும் என்பதற்கெல்லாம் முன் நின்றார் என்பது தெரியும். குரு குலம் பள்ளியில் அவன் படிக்க முரண்டு செய்து ஆறாவதில் தவறியபோது, அய்யாவேதான் அவனுக்குச் சீட்டு சிபாரிசும் கொடுத்து, மாம்பலம் பள்ளிக் கூடத்தில் சேர்த்தார். அப்போதே சம்பளம் இல்லாத இலவசக் கல்வி நடைமுறைக்கு வந்துவிட்டது.

அவள் ராசமணியைப் பார்த்துவிட்டு வந்த சேதி அவருக்குத் தெரிந்திருக்கிறது “ஏம்மா? பையன் நல்லாப் படிக்கிறானா?”

அவள் தலையைக் குனிந்து கொள்ள வேண்டி இருந்தது. குறுகிப் போனாள். சுதந்தரம் வந்து முதல் தேர்தல் வந்து இரண்டாவது தேர்தலும் நடக்க இருந்ததென்று நினைப்பு. இவள் சமையற் கொட்டகையில் வேலை செய்து கொண்டிருக்கையில் யார் யாரோ வருவார்கள்; பேசுவார்கள். நேருவே அய்யாவைத் தேர்தலில் நிற்கச் சொல்லி இருக்கிறார்; நிற்பார் என்றார்கள்.

அந்தக் காலம் அது.

“என்னம்மா, பேசல?...” அவள் எதைச் சொல்வாள்? கதரை விட்டுக் கறுப்பணிந்தது சொல்வாளா? காசு திருடுதல், பொய் பேசுதல், புகை குடித்தல் ஆகிய மூன்று தீமைகளைப் பற்றிக் கொண்டதைச் சொல்வாளா?

“அய்யா, அவனை அனுப்பிச்சி வைக்கிறேன், கண்டிச்சி வையுங்க, உங்க பார்வையை விட்டு அனுப்பிச்சதே சரியில்லய்யா!” என்றாள் நெஞ்சு தழுதழுக்க.

அவர் சிரித்தார்.

“இதே போன்ற தப்புகளை மகாத்மா காந்திகூட அந்தக் காலத்தில் செய்திருக்கிறார். இந்த வயசு அப்படியானது. அவன் வயசில் ‘கோட்டை’த் தாண்டனும்னு ஒரு வேகம் வரும். துடிக்கும் வயசு, தாண்டட்டும். ஆனால் தாண்டுற போதும், ஓடுற போதும் ஒழுக்கம்ங்குற தறி கெட்டுப் போயிடக்கூடாது. அதுதான் தாயம்மா, முக்கியம்...” பையன் தறிகெட்ட தடத்தில் போகிறான் என்று எப்படிச் சொல்வாள்? தறிகெட்ட தடம், பொய், களவு, சூது, கள், புகை...

பதினான்கு பதினைந்து வயசு கட்டுப்படுத்த வேண்டிய வயசு. அப்பன் எடுத்துக்காட்டாக இருக்கவில்லை. அவன் குடித்துவிட்டு வந்ததும் இவள் திட்டியதையும் அவனே அறிந்திருக்கிறான். அம்மாவின் மீதும் சகோதரிகள் மீதும் மதிப்பு இல்லை...

இவள் பேசாமல் நிற்கையில் அவர் தொடர்ந்து பேசியது நினைவில் மின்னுகிறது.

நானும் அந்த வயசில் பெற்றோரை எதிர்த்துப் போனேன். எனக்குப் பதினாறு வயசில், சரோஜாவைக் கல்யாணம் செய்து வைத்தாங்க. அப்ப அவளுக்குப் பன்னிரெண்டு வயசு. சொந்த பந்தமுள்ள குடும்பம்தான். சொத்து பத்து, வியாபாரம்னு சம்பந்தம் பண்ணிட்டாங்க. அவங்களுக்கு இல்லாத உயர்ந்த படிப்பு நான் படிக்கணும்னு சேர்த்தாங்க. ஆனா, அவங்க என்னை மேல் நாட்டுக்குக் கல்வி பயில அனுப்பி வைத்து வெள்ளைக்காரன் மெச்ச பதவி அடையணும்னு நினச்சது நடக்கல. காந்தி வந்திட்டார். படிப்பை விட்டுப் போராட்டம். பிறகு தொடர்ந்து வக்கீல் படிப்பு. சட்ட மறுப்பு, சத்யாக்கிரகம்னு, முழுசுமாக மாறிப் போச்சு. சரோஜாவுடன் பேசியது கூட இல்லை. அவளே, என் வழியைத் தேர்ந்து, கள்ளுக்கடை மறியல், கதர்ப்பிரசாரம்னு போட்டிபோட்டுக்கிட்டு ஜெயிலுக்குப் போனாள். இதெல்லாம் நினைச்சிப் பார் தாயம்மா?...”

“அய்யா, நீங்க எதானும் வழி காட்டுவீங்கன்னா, இப்படிச் சொல்றீங்களே?”

“இல்லே தாயம்மா. எனக்கு இப்ப ஒண்னு புரியிது. விடுதலைப் போராட்டத்தில் யாரும் எங்களைக் கட்டாயப்படுத்தி இழுத்துவிடல. ஆனால், காந்தி மகானின் வாழ்க்கை, சத்திய சோதனை. அந்த காந்தி, அவர் பேச்சு, நடப்பு எங்களையறியாமல், ஒரு தியாக வாழ்க்கையை மேற்கொள்ளச் செய்தது. ஒட்டு மொத்தமாக இந்த தேசத்தின் குரல், சாதி, மத, பாஷை, எல்லாத்தையும் மீறி சுயராச்சியம்னு முழக்கியது இப்ப... அந்த இலக்கு வரு முன்னரே, குரல்களில் பிசிறடிக்கிறது எனக்குத் தெரியிது. பையனைத் திருடினியான்னு கேட்டா எகிறிப்பான். சிகரெட் ஊதுறியான்னு நான் கேட்டாலும் அவன் என்னைத்தான் வெறுப்பான். இந்தப் பள்ளிக் கூடத்திலேயே உணவு ஒழுக்கம், உடற்பயிற்சி, பிரார்த்தனை எல்லாம் எதற்கு?... ஒழுக்கம்ங்கறது வெளில இருந்து வலியுறுத்துவதாக இருந்தால் வராது. அகக்கட்டுப்பாடு வேணும்...”

இப்படிச் சொல்லிவிட்டு அவர் யோசனையில் ஆழ்ந்து விட்டார். தாயம்மாள் கண்களைக் கட்டிக் கொண்டு எங்கோ நிற்பது போல உணர்ந்தாள்.

‘மோகன்தாசு’ என்று வைத்த புள்ளி உயிர் பெற்றதும் தன்னையே அழித்துக் கொண்டது. இந்த ‘இளவழுதி’க்கு சுயம் என்று ஒன்று இருக்கிறதா? இருந்தால் மேலும் மேலும் தப்புகள் செய்திருப்பானா?

வேட்டி விசிறலும் நடை அரவமும் அவளைச் சுய உணர்வுக்குக் கொண்டு வருகின்றன. ரங்கன் பின்புறத்திலிருந்து ஓடி வருகிறான்.

“வாங்க, வாங்க சார்...!”

யாரிவன்? வாட்டசாட்டமாக, வெள்ளை முழுக்கைச் சட்டை, கரை வேட்டி, மேல் வேட்டி, தங்கச்சங்கிலி மோதிரங்கள், நெற்றியில் ஒற்றை நாமம், கிருதா, மீசை.

“அம்மா, வணக்கம்!” என்று குனிந்து அவள் எதிர்பாரா விதமாகக் கால்களைத் தொட்டுக் கும்பிடுகிறான்; ஏதோ ஒரு சென்ட்வாசனை அழையா விருந்தாளியாக மூக்குக்குள் இவன் புகுந்தது போல் நுழைகிறது. “புரவலர் அண்ணாச்சியப் பாக்க வந்தேன். வந்திருக்கிறதா ரங்கன் சொன்னான். சாப்பாடு அனுப்பினேன். வரேன்னு சொல்லி அனுப்பினேன்... அம்மா நலமாயிருக்கிறீங்களா?”

கார் டிரைவர் போலிருக்கிறது. ஆப்பிள், ஆரஞ்சு, மலை வாழை பிளாஸ்டிக் பைளைச் சுமந்து வருகிறான். அவளிடம் அவற்றைக் கொடுக்க, அவள் முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள்.

“அம்மாவைப் பார்க்க வரணும்னு அடிக்கடி என்ன, தினமும் நினைக்கிறதுதான். வேலை நெருக்கடி, முடியல. எங்கம்மா இருந்த நாள்ள, தியாகி அய்யாவைப் பத்தி ஒரு நாக்கூடப் பேசாம இருந்ததில்ல. அவங்க போனப்ப கூட நீங்க வந்திருந்தீங்க. கஷ்டப்பட்டு எங்களை முன்னுக்குக் கொண்டு வந்தவங்க. இப்ப அவங்க ஆசில நல்லா இருக்கிறம். அம்மா பேர் வச்சித்தான் முதல்ல ஆச்சி மளிகைன்னு ஆரம்பிச்சோம். இப்ப புரவலர் அண்ணாச்சிதா, சூப்பர் மார்க்கெட்டையும் ரூஃப் கார்டன் ஒட்டலையும் திறந்து வச்சாங்க. சிவலிங்கம் பயல்கிட்ட அழைப்புக் கொடுத்து உங்களை கூட்டிட்டு வரச் சொன்னேன். நீங்க வரல...”

சுரீலென்று உணர்வில் தைக்கிறது, ஆனாலும் குரலில் காரம் காட்டவில்லை.

“சர்வோதயா தலைவர், ராதாகிருஷ்ணனை அழைச்சிட்டு பார்க்கில் வந்து, அத்தனை ரிக்சாக்காரங்களையும் கூட்டி வச்சோம். அப்ப, அத்தினி பேரும் இனி குடிக்கிற தில்லன்னு சத்தியம் பண்ண வச்சோம். திருட்டுச்சாராயமும், உசந்த ஒயினும் விக்கப்படாதுன்னு உங்கிட்ட சத்தியம் வாங்கணும்னு அந்தப் பெரியவரையும் கூட்டிட்டு உங்க வீட்டுப்படி ஏறி வந்தேன். நினப்பிருக்கா?...”

“ஏம்மா, நினப்பில்ல? அப்படிப் பொய் சொல்ற ஆளில்ல நானு. இந்தக் கடை வைக்க, ஏழுமலை தெருவில, தியாகி அய்யா உதவி செய்துதான் தொடங்கினோம். முதமுதல்ல, உடம்பு முடியாம, ரிக்சாவில வந்து, மஞ்சளும் குங்குமமும், அரிசியும் பருப்பும் வாங்கினாங்க. அதெப்படிம்மா மறக்கும்? அய்யா வளர்த்த தியாகக் கட்சி இன்னிக்கு இல்ல. நீங்க சாராயம் காச்சக்கூடாது, குடிக்கக் கூடாதுன்னு சத்தியம் வாங்கி என்ன பிரயோசனம்? காச்சி வித்து மாமூல் குடுக்கலன்னா போலீசுகாரன் ஏதோ ஒரு பொய்க்கேசைப் போட்டு உள்ள தள்ளுறான். அவன் பொஞ்சாதி ஏங்காலுல தான் வந்து விழுவா. கரிமங்கலம் கிராமம்பூரா போலீசு ஆதரவில்தான் தொழில் நடக்குது. நம்ம புரவலர் அண்ணாச்சி கிட்ட இதெல்லாம் ‘டிஸ்கஸ்’ பண்ணனும்னு தா வந்தேன். அதுக்குள்ள புறப்பட்டுப் போயிட்டாங்க போலிருக்கு?...”

அவள் உறுத்துப் பார்க்கிறாள். ஆனால் பேசவில்லை.

“அப்ப வரேம்மா... வணக்கம்...” வந்தது போல் திரும்பிச் செல்கிறான்.

ரங்கன் பின்னால் வழியனுப்பச் செல்கிறான்.

“அய்யாவப் பார்க்கணும்னு வந்திருக்காங்க. சொல்லி அனுப்பிச்சாங்க. நீங்கதா வந்தவங்களை...” சொல்லத் துணியாமல் தலையைச் சொறிந்து கொண்டு நிற்கிறான்.

“நீ ஒண்ணும் எனக்கு வெளக்கவாண்டாம். டிபன் காரியர் சோத்தை எங்கே கொண்டு போனியோ, அங்கேயே இதெல்லாம் கொண்டுபோ! பாவப்பட்ட சோறு பண்டம் பழம் எதும் இங்கே வாணாம்.”

உள்ளத்தின் ஆழத்தில் எங்கோ நீறு பூத்து அவிந்தாற் போல் கிடந்த பொறி கிளர்ந்து பொறிப் பொறியாய்ச் சுடர்ந்து தகிக்கிறது.

இவன், போலீசு சரியில்லை என்று இழுத்து மூடுகிறான். போலீசு, எங்கிருந்து வந்ததுடா? ஆட்சிக்காரனை மீறிப் போலீசு எதற்குடா, ஏழையை அடித்துக் கள்ளச்சாராயம் காய்ச்சச் சொல்லுறான்? ‘மாமூல்’னு யாருக்கடா வாங்குறான்? படுபாவிகள் சுதந்தர நாள், காந்தி ஜெயந்தின்னு அடுக்கடுக்காக் கொண்டாடுறான்! தாய்க்குலம், அன்னைக்குலம்னு, பேச்சுக்குப் பேச்சு பூசுறான். பாவிக, எத்தினி பொண்ணுங்களைத் தொட்டு சீரழிக்கிறானுவ! அந்தக் காலத்து நாடக மேடைகளில், சுந்தராம்பா, கிட்டப்பா, விசுவநாத தாஸ்னு பாடினாங்க. அப்பவும் போலீஸ் இருந்தது. நாடகக்காரன் குடிப்பான். விடிய விடியப் பாட்டுப் பாடி பேசி நடிப்பான். மேடையில் பெண்ணுங்களைத் தொடக்கூட மாட்டாங்க. அப்படி நடித்த ஜோடிகள் கூட, நிசவாழ்க்கையில் கற்பு விரதம் காத்ததுண்டு... தெரிந்தும் தெரியாமலும், கட்டிய மனைவிக்குத் துரோகம் செய்பவன், மனச்சாட்சியை ஒட்டு மொத்தமாகத் துடைத்தவன்தானே?

புரவலராம், அண்ணாச்சியாம்! யாருக்குப் புரவலர்? புரவலர், புலவர் எல்லாம் ஒண்ணுதானா? என்ன இழவோ, யார் கண்டார்கள்? எல்லாருக்கும் பட்டம்.

“ஆச்சியம்மா?...” இப்படிக் கூப்பிடுபவள் சங்கரிதான்.

“ஒரு வாழஇல தரீங்களா? சம்முகம் வந்திருக்கிறான். ஊருக்குப் போறான். சோறு கட்ட ஒரு எல வேணும்...”

“தரேனே?...”

விடுவிடென்று உள்ளே செல்கிறாள். கிணற்றடி முற்றம் அகலமானது. அதற்கு அப்பால் கழுவும் நீர்வீணாகாமல் இருக்க வைத்த வாழை. மொந்தன், குலை தள்ளி இருக்கிறது. கன்றிலிருக்கும் இலையை இழுத்து, வேலி வழி வந்த ஆடோ மாடோ கடித்திருக்கிறது. எம்பி, கத்தியால் அவளே ஒர் இலையை அரிகிறாள். பால் சொட்டுகிறது.

“மெள்ள... வெள்ள சீல, ஆச்சி. கரை விழுந்திட்டா போகவே போகாது...” சொல்லிக் கொண்டே வாங்கிக் கொள்கிறாள்.

“எதுக்கு இத்தினி பெரிசு? சோறொண்ணும் வாணாம் அத்தைன்னுதா அவஞ்சொல்லுதா. எனக்கு மனசு கேக்கல. இம்புட்டுப் புள்ளயா இருக்கறப்பவே அவம்மா விட்டுப் போட்டு ஆபீசுக்குப் போயிடுவா. புனாவிலதா அப்ப இருந்தம். இப்ப அண்ணனும் மதனியும் டில்லிக்கு அந்தால இருக்காங்க. சம்முவத்துக்கு இங்கதா, பக்கத்துல பொத்தூர்ல இன்ஜினிரிங் காலேஜில எடம் கிடைச்சி, படிப்பு முடிச்சிட்டுப் போறான். ஒட்டி வளர்ந்த புள்ள. இனி செறகு முளச்சி எங்கோ பறந்து போகும்...”

“அண்ணம்புள்ள, பாசமா வச்சிருக்கே. பாசமா இருக்கும்மா, வருத்தப்படாத!” என்று இவள் ஆறுதல் சொல்கிறாள்.

“நானே சொல்லிக்கக்கூடாது ஆச்சி. புனாவிலை இருந்தப்ப எங்கண்ணன் அப்பப்ப சிகரெட் குடிக்கும். பார்ட் டின்னு... அதுவும் உண்டு. மதனி எங்களுக்குக் கேக்காம திட்டுவா. எங்கம்மா படுக்கையோடு கெடந்தா. அப்பா செத்த பிறகு ஆறு வருசம் இருந்தா; எதோ ஆச்சி. நா இங்கியே கெடந்து கழிச்சிடுவ. அஞ்சு வருசமாச்சு, இங்க வந்து. இனி இதா இடம்...”

இவள் இலையை இரண்டாக்கிக் கொடுத்து விட்டு ஊமையாகப் பின் தொடருகிறாள். நடை முடிந்து வாசல் மேல் திண்ணைப் படி இறங்கு முன் சங்கரி திரும்புகிறாள். சிறுகூடு. முன் நெற்றியில் சில நரைமுடிகள் விழுகின்றன. நல்ல சிவப்போ கவர்ச்சியோ இல்லை. நெற்றியில் சிறு குங்குமப் பொட்டும் அதற்குமேல் சிறிது திருநீறும் அவள் மங்கலத் தன்மைக்குச் சாட்சியமாக இருக்கின்றன. ஆனால் கழுத்தில் கயிறு இல்லை. ஒரு மணி மாலையும் ஓரிழைச் சங்கிலியும் தெரிகின்றன. பாஷனில்லாமல் கழுத்து மூடிய ரவிக்கை; நூல் சேலை...

“ஆச்சி, காஞ்சிபுரம் ரோடில, புதிசா ஓர் அம்மன் கோயிலும், ஆசிரமும் கட்டிருக்காங்களாம். ராஜராஜேஸ்வரி அம்பாளாம். அம்பாளின் பதினாறு வடிவங்களை சலவைக்கல் மண்டபத்தில் வைத்து பூசை நடக்குதாம். சுத்தி மரமும் சோலையுமா மனசுக்கு ரொம்ப எதவா, அமைதியா இருக்குதாம். பஸ் போற வழிதானாம். ரேவதி டீச்சர் பௌர்ணமி பௌர்ணமி போயிட்டு வராங்க. அவங்க என்னியக் கூப்பிடத்தான் செய்றாங்க... ஆனா, அவவூட்டுக்காரர் மத்தவங்க கூட நா எப்பிடிப்போக? ஆச்சி, நீங்க வாறீங்களா? ஒருநா போயிட்டு வருவோம்?”

“போலாம்மா, போனாப் போச்சி” என்று வழியனுப்பி வைக்கிறாள்.

சங்கரி, இதே நீளத்தில், பழைய வீட்டில் இருக்கிறாள். இந்தத் தெருவுக்குப் பேரே பழையனுர் தெருதான். இந்தப் பெரிய வீடு அம்மாளின் வழி வந்த சொத்து. அப்போதெல்லாம், சுற்றிலும் எதிரே பனமரங்கள் இருந்தன. மாந்தோப்பு... எல்லாம் ருமானி மாம்பழம். மாந்தோப்பைக் காப்பவர்கள் என்று குடிசை வீடுகள் இருந்தன. பின்னால் ஒரு குளம் இருந்தது. பக்கத்தில் புற்று இருந்தது... எதுவுமே இப்போது நினைவில்லாதபடி மாறிவிட்டது. கோடியில் இப்போது, மூன்றடுக்கில் இந்தப் பதினைந்து வருஷங்களில் வெங்கடேசா பள்ளிக் கூடம் வந்திருக்கிறது. பழைய கடை வீதியில் சுதந்தரம் வந்த வருசத்தில் அய்யா திறந்து வைத்த பஞ்சாயத்துத் துவக்கப்பள்ளி இப்போது, நகராட்சி பெரிய பள்ளிக்கூடமாக இருக்கிறது. எல்லா மூலைகளிலும் இங்கிலீசு பள்ளிக்கூடம் தான். எங்கேயோ பொத்துரு காலேஜ் என்று இன்ஜினிர் படிப்புப்படிக்க சங்கரியின் அண்ணன் பிள்ளையையும் அவளையும் இங்கே குடிவைத்தார். அவள் வாசலில் உட்கார்ந்திருக்கையில் பார்ப்பார். இடப்பக்கம் வயல்களாக விரிந்திருந்த இடங்களை வீடுகளும் ஏதேதோ கட்டிடங்களும் விழுங்கிவிட்டன. இந்த நாலைந்து ஆண்டுகளில் சாலை போட்டுவிட்டார்கள். காலை ஏழரை மணி, எட்டுமணி என்று கல்லூரி பஸ்கள் போகின்றன. பெண் பிள்ளை ஆண் பிள்ளை வித்தியாசம் இல்லாமல் முதுகில் ‘பில்ட்’ போட்ட மாதிரி சுமையை மாட்டிக் கொண்டு பள்ளிக்கு எதிரே நிற்கும். எதிர்ச்சாரியில் வரிசையாகக் கடைகள்- கட்டிடங்கள் இப்போதுதான் முளைக்கின்றன. கடைகள் என்றும், வங்கி வருகிறதென்றும் சொல்கிறார்கள். பள்ளிக் கூடத்தை நடத்தும் பத்மதாசன், தெலுங்கா, தமிழா, கன்னடமா, இந்தியா என்று தெரியாது. பள்ளிக்காகப் பொது இடங்கள் எல்லாவற்றையும் வளைத்துக் கொண்டு விட்டான். மாந்தோப்பு, குடிசைகள் எல்லாம் இல்லை. குளம் இருந்த இடமும் அவர்கள் வசம். புற்றைச் சுற்றி ஒரு கோயில் எடுத்து, பக்திமான் என்று காட்டிக் கொண்டிருக்கிறான்.

இந்த வீட்டு அய்யா படுக்கையோடு இருந்த நாட்களில், காலமாவதற்கு ஒருமாதம் முன்பு வந்தான். கருவலாக, ஒட்டைக்குச்சிபோல இருந்தான்.

கைத்தறித்துண்டும், வாழைப்பழமுமாக வந்தான். பழத்தை வைத்துவிட்டு, ‘நமஸ்காரம்’ என்று பணிந்தான்.

“வாங்க... உக்காருங்க...” என்றவர் மெதுவாகத் தலையணையைச் சரி செய்து கொண்டு உட்கார்ந்தார்.

“எப்பேர்ப்பட்ட தியாகி நீங்கள்? உங்கள் தியாகங்களில் நாங்கள் வாழ்கிறோம்... நீங்கள் இங்கே ஊர் உலகம் தெரியாமல் இருக்கிறீர்கள் என்றறிந்ததும் நான் கண்ணீர் விட்டேன்...”

இப்படிச் சொல்லிக் கண்களைத் துடைத்துக் கொண்டு அந்தக் கைத்தறித் துண்டை, வணக்கத்துடன் அவர் கைகளில் வைத்தான்.

“இதெல்லாம் இப்ப எதுக்கு? நீங்க...”

“சொல்றேன். எங்களுக்குப் பூர்வீகம் கேரளம்னு சொல்லுவாங்க. ஆனால் தாத்தா காலத்தில் மகாராஷ்டிரம் போயிட்டாங்க. தாத்தா, திலகரின் கேஸரியில் இருந்தாராம்... எல்லாரும் போயிட்டாங்க. எங்கம்மா கன்னடம். அவங்கப்பா யுத்த காலத்தில் கன்ட்ராக்ட் எடுத்து நிறையச் சம்பாதித்தாராம். எங்கப்பா அநாதை போல் அவர்கள் குடும்பத்தை அண்டி படிச்சு, மகாத்மா சொன்ன மாதிரி ஜாதி மத பேதமில்லாம வாழனும்னு லட்சியம் வச்சிருந்தார். அந்த நடவடிக்கைக்காகவே, சாதி வெறியர்கள் அவரை ஒரு நல்ல வயசில் வெட்டிப் போட்டுட்டாங்க. எங்கம்மா என்னை அழைச்சிட்டு யு.பிக்குப் போய், மகாதேவி வர்மா தெரியிம்ல? அவுங்க கல்வி ஸ்தாபனத்தில் இருந்து என்னைப் படிக்க வச்சாங்க. எனக்கு இருபத்தொன்றாம் நூற்றாண்டில், இளைஞர்களை அறிவியல் கல்விபெற வாய்ப்பளிக்க நல்ல பள்ளிக் கூடம் வைக்கணும்னு ஆசை. ஆசை என்ன, இலட்சியமே அதுதான். உங்க குருகுல நிர்வாகி, பராங்குசம் எங்க வித்யா பீடத்துக்கு வந்திருந்தார். அவர்தான் இங்கே வந்து நீங்கள் கல்விப்பணி செய்யணும்னு சொன்னார். நான் நேராக இங்கே உங்களைப் பார்க்க வந்திட்டேன்...”

“அப்படியா?... நல்ல கருத்துத்தான். ஆனால் அந்தக் காலத்தில நாங்கள் கல்வி ஒரு மனிதரை, ஒரு குழந்தையை முழு மனிதராக்க வேண்டும்னு நினைச்சோம்...”

“இப்பவும் அதேதான். நான் நேராகக் குருகுலம் ஸ்கூலைப் பார்த்திட்டுத்தான் வரேன். ரொம்ப ஆச்சரியம், அங்கே, இந்தி, இங்கிலீஷ் எல்லாம் சொல்லிக் கொடுக்கிறாங்க. அங்கேயிருந்து போகும் பிள்ளைகள் ஐ.ஐ.டி.க்கு நேராகப் போகும் அளவுக்குக் கல்வித்தரம் இருக்கு.”

ஐயா ஒன்றுமே பேசவில்லை.

“...நான் தொந்தரவு செய்ய விரும்பல. கல்விப் பணிக்கு இந்த இடம் ஒதுக்கித்தரணும். நான் கவர்மென்ட் மூலமா, வேண்டிய ஏற்பாடு செய்ய முடியும். கல்விப் பணிக்கு, தியாகி அய்யா, நன்கொடையாகத் தந்து உதவணும்...”

குரல் தழதழத்தது-

“ஐயாவப்பத்தி, ஒரே வாரிசான அம்மா, அந்த சகோதரியின் மறைவு எல்லாம் கேள்விப்பட்டு உருகிட்டேன். இந்த முழு பாரத நாட்டிலும், இப்படி ஒரு தியாகி இருக்க முடியுமா?”

உள்ளிருக்கும் அழுக்கை, நான்கு நாட்கள் குளிக்காத வியர்வையை மறைக்கத்தான் மருக்கொழுந்து சென்ட்டைப் பூசுவார்கள்? குறிப்பிட்ட ஒரு பத்திரிகை வரும்போதே அந்த சென்ட்மணம் வீசும். ராதாம்மா உடம்பு சரியாக இல்லாத நாட்கள்.

“தாயம்மா, இந்தப் பத்திரிகைக்கு ஏன் இப்படி சென்ட் போடுறான் தெரியுமா?... என்று கேட்பாள்.

“சென்ட் விளம்பரத்துக்கு இதில சென்ட் போடுறானா?”

“இல்ல தாயம்மா. இதில் இத்தனை அழுக்கு குப்பைகள் அச்சாயிருக்கு. அத்தைப் படிக்க இப்படி ஒரு சென்ட்டை போட்டு இருக்கிறாங்க...” இதெல்லாம் இப்போது ஏன் நினைவுக்கு வருகிறது? அறங்காவலர் குழு என்பார்கள். பராங்குசம் வந்து அய்யாவிடம் கையெழுத்து வாங்கிச் செல்வான். பிறர் பார்க்கும் போது மிக மரியாதையாக அவளிடம் நடந்து கொள்வான். அய்யாவும் அவனும் பேசும் போது அவள் கேட்கக் கூடாது என்று கருத்தாக இருப்பான். போகும் போது அவளை உறுத்துப் பார்த்து உறுமுவது போல் கருவிக் கொண்டு செல்வான். அவனுடைய சந்தனக் கீற்றும், காவி வண்ணக் கதர் சட்டையும் அந்த நடப்பின் கபடங்களை மூடும் வேசம் என்று தோன்றும்.

பள்ளிக்கூடம் விட்டு விட்டார்கள் போல் இருக்கிறது. தொங்குபைகள் ஆட, கோழிக்குஞ்சுகளைப் போல் பிள்ளைகளை அடைத்துக் கொண்டு தடதடவென்ற சத்தத்துடன் மோட்டார் சைக்கிள் வண்டி ஓடுகிறது. உதிரிகள் போல் ஆட்டோ ரிக்சாக்களில் சில குழந்தைகள் செல்கின்றன. சொர்ணம் ஒரு பிஞ்சை இடுப்பில் ஏற்றிக் கொண்டு, கையில் புத்தகப்பை, தண்ணீர் குப்பி வகையறாக்களுடன் வருகிறாள். சொர்ணத்தின் புருசன், மாதா கோயில் பக்கச் சந்துக் குடிசைக்காரன். ரிக்சா ஓட்டிக் கொண்டிருந்தான். ஏற்கெனவே அவனுக்கு ஒரு பெண் சாதி இருக்கிறாள் என்று தெரியாமல், இவளையும் சேர்த்துக் கொண்டான். அவன் குடித்தான். இவள் இட்டிலிக்கடை போட்டுக் குடிக்கக் காசு கொடுத்தாள். கரைவேட்டிக் கட்சிகள் ரிக்சாக்காரர் சங்கம் இவனை ஒரு நல்ல குடிமகனாக்கி, தேர்தல் காலங்களில் ஆட்டோரிக்சா வாங்கும் கனவை வளர்த்தன. கைவசம் இருந்த ஓட்டை ரிக்சாவும் பறிபோக, குடித்துக் குடித்துச் செத்தான். நல்ல வேளையாகக் குழந்தை இல்லை...

படி தாண்டிப் போகுமுன் இவளைப் பார்த்துக் கொண்டு திரும்புகிறாள். “அம்மா, கொஞ்சம் குடிக்கத் தண்ணீதாங்க. இந்த வருசம் என்ன இப்படிப் பூமி காயுது, இன்னும் பங்குனியே பிறக்கல...”

இவள் உள்ளே செல்கிறாள். இன்னும் சாப்பிடாமலே நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருந்த உணர்வு பசியாய்க் கிளர்ந்தெழுகிறது. தண்ணீரைச் செம்பில் எடுத்துக் கொண்டு வருகிறாள். குழந்தையைக் கீழே இறக்கி இருக்கிறாள்.

“இந்தாம்மா...”

‘எனக்குத் தண்ணி...” என்கிறது பிஞ்சு.

‘இந்த வெங்கடேசுவரா பள்ளியில் ‘பொடி’ நிறமல்லவா? இது ‘ரோஸ்’ நிறமாயிருக்கு? எந்த ஸ்கூல்?”

“இது குட் செப்பர்டம்மா... நீளப்போயி, செந்தில் ஸ்டோர் பக்கம் சந்துல இருக்கு...”

“அங்கதான மோகன் ஸ்கூல்னு ஒண்ணு இருந்திச்சி?”

“மோகன் வித்யாலயா பெரிசாயி, பார்க் பக்கம் மூணு மாடி கட்டிட்டாங்க. அங்கதான் பல் டாக்டர், கண் டாக்டர், தோல் டாக்டர் எல்லாரும் ஆஸ்பத்திரி வச்சிருக்காங்க. இந்த ஸ்கூல், மின்ன ஜூலி டீச்சர் இல்ல, கான்வென்ட்ல...? அவங்க மருமக நடத்துது...”

“எனக்குத்தண்ணி” என்று பிஞ்சு நினைவு படுத்துகிறது. வெள்ளை ‘ரிப்பன்’ அவிழ்ந்து தொங்க, முடி கட்டையாகப் பிரிந்திருக்கிறது. செம்புத் தண்ணீரில் கொஞ்சம் உறிஞ்சு குழாய்க் குப்பியில் ஊற்றிக் கொடுக்கிறாள். பிறகு, தான் குடிக்கிறாள்.

“வாரேம்மா!” என்று வெண்பற்கள் தெரிய நன்றிச் சிரிப்பு மலரத் திரும்புகிறாள்.

“இந்தப் பக்கம் போற...?”

“அதா... செவந்திபுரம் புத்துக்கோயிலண்ட போகணும்...” மூன்று வயசு நிரம்பாத குழந்தைக்குப் படிப்பு...

“நீ அங்கே வேலை செய்றியா?”

“ஆமாம்மா, இவங்கம்மா போஸ்ட் ஆபீசில வேலை பாக்குறாங்க. வூட்ல இவங்க பாட்டி இருக்கு. புச்சா வூடு கட்டிட்டு வந்திருக்காங்க. நா முன்ன இவங்க ஏழுமல தெருவில் ஸ்கூல் பக்கத்தில இருந்தப்ப வேலை செய்துகிட்டி ருந்தேன். இப்ப இவங்க பொழிச்சலூருக்கு மாத்திட்டாங்க. எனக்கு அங்கேந்து இத்தக் கொண்டாந்து விட்டுட்டுப் போறது கஸ்டமாத்தானிருக்கு. காலம அவங்க பைக்ல ஆபீசுக்குப் போறப்ப ஸ்கூல்ல கொண்டாந்து விட்டுடுவாங்க. இப்ப நாங் கொண்டுவிட்டுவ...”

“அப்பா எங்கே வேலை பண்ணுறாங்க?”

“அவரு சவுதிக்குப் போயிருக்காரு. கிழவிதா வூட்ல...”

“பதனமாப் போய்ச்சேரு...”

அவள் போகிறாள்.

சுதந்தரம் வந்ததும் தேனாறும் பாலாறும் ஒடும் என்று நம்பிய ஏழைகளை நினைக்கிறது மனம்.

நினைப்பில் கஞ்சிக்கான பசியும் அமுங்கிப் போகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=உத்தரகாண்டம்/2&oldid=1022811" இலிருந்து மீள்விக்கப்பட்டது