26


"நீங்க சாப்பிட்டீங்களா, அம்மாஜி?”

“ஆச்சும்மா. நீதான் மாவு பிசைஞ்சு வச்சிட்டுப் போயிருந்தே. அவன் மடமடன்னு ஃபுல்கா பண்ணிப் போட்டுட்டான். உனக்கு பரோட்டா பண்ணி வைக்கிறேன்னான். வாணாம்பா, அவ வந்தா சூடா பண்ணிப்பான்னேன். கேக்கல. பைங்கன் பர்த்தா பண்றேன்னு பண்ணி வச்சிருக்கு பாரு?” இவளுக்கு பக்கத்தில் குடியிருந்தவருக்கு நண்பராக வரும் சிங் குழந்தைகள், மனைவி நினைவு வருகிறது.

“ஏம்மா, இந்தப் புள்ள யாரு?”

அதற்குள் சைகிளில், கேக், மிக்ஸ்சர் வாங்கிய பையுடன் அமர் வந்து விடுகிறான்.

“டபிய்...? ப்ளம் கேக் வேணுமா, செர்ரி கேக் வேணுமா? இவன் தூக்கிப் பிடிக்குமுன் இரு குழந்தைகளும் ஓடி வருகிறார்கள்.

“எனக்கு...! எனக்கு...!”

“தாதிமாக்கு!”

அவள் வாங்கிக் கொள்கிறாள்.

பையில் ஒரு பெட்டியில் இருவகை கேக்குகள் - ஆறு - ஆறு என்று பன்னிரண்டு இருக்கின்றன. ஒன்றை எடுத்து அவள் பெண் குழந்தையிடம் - நித்யா - வாயைக் காட்டுகிறது, அவள் ஊட்டுவது போல் கொடுக்க, பற்றிக் கொள்கிறது. பிறகு பையனுக்கு... இந்தா தம்பி - உன்பேர் அமாரா?... அவனும் வாயில் வாங்கிக் கையில் பற்றிக் கொள்கிறான். “நிசாம்மா?” என்று கூப்பிட்டு அவளுக்கு ஒன்றைக் கொடுக்கிறாள். அவளும் வாயில் வாங்கிக் கொள்கிறாள். பிறகு இன்னொரு துண்டை அநுவின் வாயில் வைக்க, அநு கண்ணீருடன் கையில் எடுத்துக் கொண்டு இன்னொரு துண்டை அவளுக்கு ஊட்டுகிறாள்.

ஆண்டவனே! நீ இத்தனை கருணையுள்ளவனா? இந்தச் சின்னச்சின்ன செய்கைகளில், இவ்வளவு மனநிறைவு கிடைக்குமா?

“இந்தப் புள்ள யாருன்னு சொன்னம்மா?...”

“பக்கத்து இன்ஜீனியரிங் காலேஜ் இல்ல; அதுல புரொபசரா இருக்காரு. இவங்க மாமா கிரணோட நெருங்கிய சிநேகிதர். ஏர்ஃபோர்ஸில் இருந்தார்... அவர் மூலமாத்தான், இந்த இடமே எனக்கு செய்து குடுத்தாங்க..”

“அப்படியா? இவுங்க எத்தினி நாளா இங்க இருக்காங்க?”

“இருக்கும் எனக்கே தெரியாது. பத்து வருசமிருக்கும்னு நினைக்கிறேன். தாயம்மா...?”

குரல் உடைந்து கண்ணீர் வழிகிறது.

“கடைசில ஒரு தீச்சொல்லைச் சொல்லி... நானே என் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக்கிட்டேன். நானே... நானே...”

அவள் குலுங்கும்போது இவளுக்கு ஏதோ புரிகிறது; புரியவுமில்லை.

“நீ என்னம்மா சொல்ற...”

“ஆமாம் தாயம்மா, இனி உங்களுக்கும் எனக்கும் பந்தம் இல்லை. என் குழந்தையை எடுத்திக்கிட்டு நான் போறேன். இனிமே நமக்குள் எந்தத் தொடர்பும் வேண்டாம்... நீங்க என் புருசனும் இல்ல, என் குழந்தைக்கு அப்பாவும் இல்லன்னு கத்தினேன். தாயம்மா, உனக்கு மன்னிப்பே இல்லைன்னு போயிட்டாங்க... அவரை நான் மன்னிக்க மாட்டேன்னேன். அவரு நீ மன்னிக்க வேண்டாம், உனக்கும் மன்னிப்பில்லேன்னு...” குலுங்கிக் குலுங்கி அழுகிறாள்.

தோட்டக்கதவுத் தாழ் அகற்றும் ஒலி கேட்கிறது.

உள்ளே வருபவர்கள், சிங்கும் மனைவியும்...

“பிரணாம் மாதாஜி! ஞாபகம் இருக்குதா? நீங்க கோலம் போடச் சொல்லிக் குடுத்தீங்களே...?”

“அம்மா... தேவா அங்கே வந்திருந்தபோது வருவோமே?...”

அப்ப... அப்ப... அநும்மா... அந்த அவரு...

மீசையைப் பல்லால் கடித்துக் கொண்டு அரும்புப் பற்கள் தெரியச் சிரிக்கும் கோலம் தோன்றுகிறது.

“உங்களுக்கு, மக்க மனுசங்க?...”

“எல்லாம் இருக்காங்க...”

அதற்குமேல் அவள் கேட்கவில்லை. கேட்கவில்லை...

“அநுவுக்கும் புருசனுக்கும் சரியில்லை. அவங்க பிரிஞ்சிட்டாங்க...” சாமியார் சொன்ன சொல்...

“அப்பா, அவர் திடும்னு வந்துட்டார். எனக்கு என்ன பண்ணுவதுன்னு தெரியல. அனுப்பி வச்சேன்...”

“அநும்மா, நிசாவின் அப்பா பேரு என்ன சொன்ன?...”

“கிரண்ணு வீட்ல சொல்லுவாங்க. சூர்ய கிரண் தேவ்னு பேரு. இவங்கல்லாம் தேவான்னு தான் கூப்பிடுவாங்க.”

“சிங்கு, ஏம்மா, உங்க பேரு தெரியல. நீங்கல்லாமும் எனக்கு எதுவும் சொல்லாம இருந்திட்டீங்களே?...”

“எங்களுக்கு எப்படித் தெரியும் மாதாஜி?... அவரே அங்கே வந்து தனியா இடம் பார்த்துக்கிட்டு வந்துதான் சொன்னது...”

“எல்லாம் என் பாவம்...”

“மாதாஜி, நீங்க இப்பவும் இங்கே இருக்கலாம். பக்கத்தில் வந்திருக்கிறீங்க. அநுபஹன் ரொம்ப ஒடிஞ்சி போயிட்டாங்க பாவம்... ரொம்ப... அவங்களுக்கு வந்த மாதிரி கஷ்டம் ஆருக்கும் வராது, வரக்கூடாது...”

நாங்க அந்தப் பக்கம் பைக்ல போவோம், நீங்க சில நாளைக்கு நிப்பீங்க.

“ரொம்ப நன்றி அய்யா. இந்த தேசத்துல, எல்லாம் கந்தலா குளறு படியா மனுச உறவே இல்லாம போகும் போது, நீங்கல்லா இருக்கீங்க. உங்க பய்ய ஓடிப் போயி கேக்கு வாங்கியாந்து வாயக்காட்டி வாங்கிட்டா. நல்லா இருக்கணும்... புது நாத்துங்க. நா இனி அடிக்கடி வருவே...”

“நாங்க வரோம் மாதாஜி.”

அவர்கள் மறுபடியும் வணங்கி விடைபெறுகிறார்கள்.

அவர்கள் சென்றபின், இறுக்கம் தளர்ந்து, மீண்டும் இறுக்கமாகும் உணர்வுகளில் நினைவுகளில் அவள் மிதக்கிறாள்.

“தாயம்மா, எங்கள்ள எந்த பூசை வழிபாடு செய்தாலும் ஒருவரி கடைசியில் வரும். தெரிந்தும், தெரியாமலும் அறிந்தோ அறியாமலோ நான் செய்த பாவங்களை எல்லாம் மன்னித்து விடுங்கள் என்று கடவுளிடம் சரணடைவது போல் இருக்கும். சிறுபிள்ளைகளில் தும்பியைப் பிடித்து சிறகடித்துத் துடிப்பதைப் பார்க்க, பசுங்கன்றின் உடலில் சிறு கல்லை வீசி அதன் உடலில் சிலிர்ப்பலைகள் பரவுவதைப் பார்க்க என்று துன்பம் செய்வார்கள். நானோ...

“தாயம்மா, உங்களுக்குத் தெரியுமோ, என்னேமா? உயர் குலத்துக்கும் ஒரு மனிதரின் நடத்தைக்கும் சம்பந்தமே இல்லை என்று சிறுவயதிலேயே நான் அறிஞ்சுகிட்டேன். என் அம்மா எனக்கு அஞ்சு வயசாக இருக்கும் போதே ‘பிலட்கான்சர்’ வந்து போயிட்டா. என் சித்தியையே அப்பா கல்யாணம் பண்ணிக் கொண்டார். சித்திக்குத்தான் இரண்டு பிள்ளைகள். என் அப்பாவின் தம்பிதான் அந்தக் காலத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸில் சேர்ந்து, சாமியாராகப் போனவர். என் அம்மா மேல் அவருக்கு ரொம்பப் பிரியம். நான் குழந்தையாக இருந்த போது அடிக்கடி வருவார். அவரைக் கண்டால் சித்திக்கும் பிடிக்காது, அப்பாவுக்கும் பிடிக்காது. அப்பாவுக்கு டெல்லி, மேல் தட்டு சமூக-பார்ட்டி, ஆடம்பரம் எல்லாம் பிடிக்கும். அம்மாவுக்கு அந்த வாழ்க்கையில் பிடிப்புக்கிடையாது என்று சித்தப்பா சொல்வார். ஆனால் ரொம்ப நாள் இருக்கல. அப்பா அம்மா செத்துப் போகு முன்பே சித்தியை வீட்டில் கொண்டு வைத்துக் கொண்டிருந்தாராம். எனக்கும் நினைவு இருக்கு. அப்பா குடித்து விட்டு வருவார்... சின்ன வயசிலேயே எனக்கு அந்த சமாசாரம் மனசில் பதிஞ்சுடுத்து. என் வாழ்க்கை பின்னால் இடிஞ்சு போனதுக்கே அதுதான் காரணம்... தாயம்மா...!”

முகத்தை மூடிக் கொண்டு அவள் விம்முகிறாள்.

“அவுரு குடிக்கிறாரு பாட்டில் இருக்கு...”

“அந்த பாட்டில்ல இஞ்சி பூண்டு மிளகு சீரகம் தட்டிப் போட்ட ரசம் குடுப்பேன்...”

பனிப்புகையாய் காட்சிகள்.

“மக்க மனிசா இருக்காங்களா?”

“இருக்காங்க... அந்தச் சிரிப்பில் எதுவுமே தெரியவில்லை. பழகுபவரிடம் அந்தச் சிரிப்பே ஒட்டிக்கொண்டது.”

“சித்தி அவரைக் கல்யாணம் பண்ணின்ட பிறகு, என்னை ஆயாவிடம் விட்டுவிட்டு அவளும் அப்பாவுடன் வெளியே போவாள். அப்பதான் மாமா என்னை நாக்பூருக்குக் கூட்டி வந்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து தங்கவில்லை. அவர் அங்கே ‘இங்கிலீஷ்’ ஹைஸ்கூலில் டீச்சராக இருந்தார். மாமியும் சரஸ்வதி வித்யாலயத்தில், பிறகு, எனக்குப் பத்து வயசான பின் வேலை செய்தார். கிரண் குடும்பம் ஒரு வகையில் மாமிக்கு உறவுதான். கிரண் அப்பா பண்டாரா கார்டைட் ஃபாக்டரியில் வேலையாக இருந்தார். கிரண் ஐ.ஐ.டியில் படித்துவிட்டு, ஏர்ஃபோர்ஸில் சேர்ந்தான். என் தம்பிகள் இரண்டு பேரும் படித்துக் கொண்டிருந்தார்கள். நான் படிப்பு முடித்து, லிட்டரேச்சர் எம்.ஏ. பண்ணினேன். டெல்லியிலேயே பப்ளிக் ஸ்கூலில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்ப, அப்பாவுக்குக் குடியினால், உடம்பு கெட்டுவிட்டது. பி.பி., ஷூகர்... ஏறி, ஒருதரம் ‘மைல்ட்’ அட்டாக்கும் வந்ததால், சித்தி ரொம்பக் கட்டுபாட்டில் வைத்திருந்தாள். அதோடு, பக்தி மஞ்சரியாகி விட்டாள். பெரிய மனிதர் வீட்டு, மேம் சாப்கள், பஜனை செய்வார்கள். ‘கிட்டி பார்ட்டி’ சீட்டாட்டம், இதெல்லாம் தலைநகர் நாகரிகம். கிரண் அப்போது டெல்லியில் இருந்தான். சாதாரணமான பழக்கம், அவனை, சித்தியின் பஜனைக் குழுவில் ஒருத்தனாக அடிக்கடி ஞாயிறு பஜனைகளில் வரச் செய்தது. நல்ல குரல். தமிழ், ஹிந்தி, வெஸ்டர்ன் என்று பாடுவான். எனக்கு மிக ஆச்சரியமாக இருக்கும். நாக்பூர் வாழ்க்கை, எளிய நூல் சேலை வாழ்க்கை. அது ஒரு ‘மிடில் கிளாஸ்’, சாதாரண, பந்தா இல்லாத மனிதர் கொண்டது, எனக்கு அது பிடித்திருந்தது. ஞாயிறென்றால் கிரண் காலையிலேயே வருவான். நாங்கள், கலை இலக்கியம், சினிமா என்று பேசுவோம். ‘பிடிச்சிப் போச்சு, கல்யாணம் பண்ணிடுவோம்’னு தீர்மானித்து, டெல்லியிலேயே நடத்திவிட்டார்கள். அப்ப என் தாத்தா கூட இருந்தார். ஆறுமாசம் கழிச்சுத்தான் செத்துப்போனார்.

“ஆனால், அவருடன் டெல்லி குவார்ட்டர்ஸில் குடித்தனம் பண்ணப்போன பிறகுதான், அந்த வாழ்க்கை புரிந்தது.”

“என்ன சொல்ல தாயம்மா! சாயங்காலம்னு ஒண்ணு வரதே, கிளப்புக்குப் போகத்தான்... என்னைப் போலிருந்த மனைவிகளும் போவார்கள். பார்ட்டி... குடி, கூத்து...

“முதல் நாள் ‘திருமண பார்ட்டி’ கொண்டாட்டமே எனக்கு வெறுப்பாகிவிட்டது. ‘என்னை ஏமாத்திட்டீங்க! சீட், ரோக்’ன்னெல்லாம் கத்தினேன். அழுதேன். வீட்டுக்கு வந்து சித்தியிடமும் அப்பாவிடமும் சண்டை போட்டேன். ‘ரிலாக்ஸ், அது, ராணுவம் கட்டுப்பாடான வாழ்க்கை. பார்டர் ஏரியாவில், அவர்கள் இந்த நாட்டைக் காக்கிறார்கள். உத்தமமான பணி. கிரண் நல்ல பையன். நீ அவனோடு இருந்து மாற்றலாம். எதோ கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக் கொள்வது உள்ளதுதான்...”

கிரண் அன்றே வந்து, அவளைச் சமாதானப் படுத்திக் கூட்டிச் சென்றான். அப்படியும் இப்படியுமாகச் சில மாசங்கள்...

கர்ப்பமானாள். அப்போது பங்களாதேஷ் நெருக்கடி. இவளுக்கு சித்தி வளை காப்பு செய்தாள். பட்டு சரிகை, நகை, எதுவும் இவளுக்குப் பிடிக்காது. அதனாலேயே ராம்ஜி மாமா குடும்பம் அவளுக்குப் பிடிக்கும். அவளுடைய வளைகாப்பு சமயத்தில் அவர் டெல்லி வந்திருந்தார். சித்தி திட்டினாள். “காது மூக்குன்னு ஒரு நகை இல்லை. அந்த காலத்துலதான் கதர் கட்டிண்டு அழுமூஞ்சி மாதிரி இருந்தே, இந்தப் பட்டெல்லாம் நம் நாட்டுதுதானே? காது வளையத்தைக் கழற்றி எறி. உன் அம்மாவின் தோடு, நகை எல்லாம் போட்டுக்கணும்” என்று போட்டாள். அப்ப கூட அழுதேன்.

“ராம்ஜி மாமா, நீங்க சொல்லுங்க! இந்த சமயம் என் சந்தோசம் முக்கியமா, அவங்க சந்தோசமா?”

“ரெண்டும்தான். ஒரு நாளைக்குத்தானேம்மா? ‘விட்டுக் கொடு’ன்னார். அந்த முதல் பிரசவம், ஏழு மாசத்திலேயே குழந்தை பிறந்து தங்கல. கிரண் சண்டிகர்ல இருந்தார். இதே வாழ்க்கைதான். “இனி இல்லைம் பாரு. குவார்ட்டர்ஸ். காலைக்கெடுபிடி... ஒரே மாதிரி சூழல், தடித்த லிப்ஸ்டிக், கையில்லாத ரவிக்கை, பளிரென்ற ஆடைகள், கம்பளிப் பின்னல்கள், பார்ட்டி, டின்னர், அது, இது... எல்லாம். உடனே மறுபடி கர்ப்பம். அப்போது மாமா வந்து நாக்பூருக்கு அழைச்சிட்டுப் போனார். அங்கேதான் ஆஸ்பத்திரியில் இவள் பிறந்தாள். ஓடி வந்தார். சந்தோசமாக, குழந்தையைத் தூக்கினார். “அநு, பழைய கிரண் இல்ல. புதியவன், நான் ஒரு தந்தை, நீ அம்மா”ன்னு கண் கசிந்தார், ‘புதியதோர் உலகு செய்வோம், கெட்ட போரிடும் குணமதை வேறொடு சாய்ப்போம்’ன்னு பாடினார். அந்தக் குரலில் மயங்கிப் போனேன். புதிய நம்பிக்கையுடன், குழந்தையையும் எடுத்துக் கொண்டு, பெங்களுருக்குப் போனேன். மாமாவும் மாமியும் கொண்டு விட்டார்கள். இரண்டு மூன்று நாட்கள், புதிய இடத்தில் எதுவும் தெரியல. சண்டைக்காலத்தில், எல்லைப் புறங்களில் ‘டென்ஷன்’ ஆனால் அதெல்லாம் இல்லாத போதுமா?

“மாலை நெருங்கும்போதே எனக்கு டென்ஷன். இரவு வரும் வரையிலும் அது ஏறி வெடிக்குமளவுக்கு வரும். அழுவேன். திட்டுவேன். குழந்தைக்கு ஒன்றரை வயசு முடிந்த சமயம். ஒருநாள் இரவு குடிச்சிட்டு டூவீலர்ல வரப்ப எங்கேயோ மோதி, தலையில இரத்தக்காயம். கட்டோடு வந்தார். நான் எப்படித் துடிச்சிருப்பேன்னு பாத்துக்குங்க! நான் எந்த முடிவும் எடுக்க வேண்டி இருக்கல. அன்னிக்குத் தான் அப்பா ‘அட்டாக்’ வந்து செத்துப் போன தகவல் வந்தது. சித்திக்கு நான் கிரண் மேல் குற்றம் சாட்டியது பிடிக்கல. எல்லாம் சரியாயிடும். உங்கப்பா, ஒண்னுமில்லாம வீட்டில வச்சிண்டே குடிச்சார். ஒரு அட்டாக் வந்தப்புறம் நானும் எப்படி எப்படியோ வழிக்குக் கொண்டு வந்தேன். இந்தக் காலத்தில் காந்தி சமாசாரம் எதுவும் செல்லு படியாகாது. நிவீணா உன் தலையில் மண்ணள்ளிப் போட்டுக்காதே. சர்வீஸ்ல இருக்கறதுன்னா இப்படி இருக்கத்தான் இருக்கும்...”

“ஆனால், என்னால சகிச்சிக்க முடியல. ஒரு நாள் கண்டபடி திட்டிட்டு, ‘நீ சத்தியத்தை மீறுறவன். எனக்குப் புருசனும், என் குழந்தைக்கு அப்பாவும் வேண்டாம்னு கிளம்பிட்டேன். நாக்பூருக்குப் போனேன். மாமாவின் உபதேசம் பிடிக்கல. அப்ப பவனாரில் வினோபா இருக்கிறார். அங்கே போய் ஒரு மாசம் இருந்தேன். பிரஸ்ஸில் வேலை செய்தேன். பஜாஜின் மனைவி, பெரியம்மா இருந்தார். பிரார்த்தனை, கூட்டு யோகம்... எதிலும் மனசு ஈடுபடல... அங்கேருந்து தான் ராம்ஜியின் குருகுலத்துக்கு வந்தேன்...”

அவள் எங்கோ பார்க்கிறாள்.

“ ‘இன்னும் ஒரே ஒரு தடவை எனக்கு சந்தர்ப்பம் குடு அநு, ஒரே ஒரு தடவை!’ன்னு கெஞ்சினார், நாக்பூர் வந்து. நான் கேட்கல தாயம்மா, கேட்கல... ‘சந்நியாசி’ சித்தப்பாக்கு நான் கடைசி காலத்துக்கு ஒரு கால் கட்டா இருந்தேன் காங்டா குருகுலத்தில் நான் டீச்சராகச் சேர்ந்தேன். இதுவும் படிச்சது... அதுக்கப்புறம்...”

“அம்மாஜி, கஸ்தூரி வீட்டுக்குப் போறேன்றா...!” நிமிர்ந்து பார்க்கிறாள்.

“ஓ... மணி ஆறரை ஆயிட்டுதா? மணி ஆனதே தெரியல... தாயம்மா, உங்களுக்கு இன்னிக்குப் போகனுமா? இங்கே இருங்களேன்?"

இவள் சங்கடப்படுகிறாள். அவள் நினைத்து வந்த இலக்கு இப்போது இன்னும் சிக்கலாக இருக்கிறது. என்றாலும், இப்போது முடிவெடுக்க முடியாது. “நா, நாளைக்குக் காலம வரேன் அநும்மா, அங்க ஆளுவ வந்து மரம் வெட்டிட்டிருந்தானுவ. ஆள்தான் பாத்துக்கறான். நா, உதவாம என்ன செய்யப் போற? கடசீ காலத்துல, அந்தத் தம்பி...”

நெஞ்சு கமறிக் கண்ணீர் தழுதழுக்கிறது.

“சொக்கத்தங்கம். இந்தக் கேடு கெட்ட உலகத்துல, இப்பிடி ஒரு மனிசன் இருக்க முடியாதுன்னு ஆண்டவன் அழச்சிட்டாருன்னு நெனப்பே... விதி... விதிம்மா!... பக்கத்துல தோட்டம் போட்டு கிளி கொஞ்சும். ஒரு நாயி. சக்தின்னு பேரு. வாரா வாரம் பஜனைல வந்து அருமையாப் பாடுவாரு. பானைய வச்சிட்டு தாளம் தட்டுவாரு... உடம்புகென்னு தெரியாத பேச்சேம்மா...!” என்று வருந்துகிறாள்.

குழந்தைகள் டாடா காட்டி விடை கொடுக்க, ‘நாளவரேன்’ என்று சொல்லி வெளி வருகிறாள்.

இருட்டு வரும் நேரம். அவள் சூழலின் நினைவின்றி நடக்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=உத்தரகாண்டம்/26&oldid=1022838" இலிருந்து மீள்விக்கப்பட்டது