27

பின்னால் விடுவிடென்று சத்தம் அவளைத் திரும்பிப் பார்க்கச் செய்கிறது...

“மாதாஜி, பிரணாம். நான்தான்!” தாடி, தலைப்பா... “அமாரின் அப்பா.”

“நான் கூடவரேன். இருட்டிப் போச்சி. வழியில கண்ட கஸ்மலங்கள்...”

அவள் சிரிக்கிறாள். “சிங்கு, நீங்க இந்தத் தமிழெல்லாம் பேசுறீங்க?” அவனும் சிரிக்கும் ஒலி கேட்கிறது. “கஸ்மலம்’ங் கறது சமஸ்கிருத வார்த்தை மாதாஜி. அப்படின்னா அழுக்கு, கச்சடான்னுதான் அர்த்தம். இங்க சென்னை பாஷையில, எல்லாம் இருக்கு. “டாப் கயன்டுபூடும், வெத்ல பேட்டுக்குவ... தெரிமா...!” என்று சொல்லி ரசித்துச் சிரிக்கிறான்.

“அதெல்லாம் வாணாம் சிங்கு, எனக்கு இத்தினி நாள் நீங்க இங்க இருக்கிறதே தெரில... இங்க ஏரி இருந்திச்சி. ஏரிவரையிலும் கூட வருவேன். இந்த வூடு இடிக்கிற சனங்கள்ளாம் அங்கங்க கீத்து மரச்சிட்டு குடி இருக்கும்.”

நாற்றம் வந்து விட்டது. முகத்தை மூடிக் கொண்டு நடக்கிறார்கள்.

ஆட்டோ. இரண்டு சக்கர வண்டிகள் போகின்றன. ஒரு பாரவண்டி பளீரென்று ஒளி காட்டி வருகிறது...

“சிங்கு, நீங்க எங்க கடவீதிக்கா வரீங்க? நீங்க பைக்குல போவீங்கல்ல? நடந்து வாரீங்க?”

“உங்களுக்காகத்தா வாரேன், மாதாஜி. உங்ககிட்டப் பேசணும்னு...”

“அப்பிடியா! அநும்மா பத்தித்தான பேசப் போறீங்க? எனக்கு அங்க ஒண்ணும் சரில்ல, சிங்கு. கடசி காலத்துல இவங்களுக்குத் துணையா இருக்குறதுன்னு முடிவு பண்ணிட்டிருக்கிறன். அவுங்க இன்னைக்கு மரத்த வெட்டுறானுக. நாளைக்கே கடப்பாரைய எடுத்திட்டு வீட்ட இடிக்க வரமாட்டானுவன்னு என்ன நிச்சியம்...? ஆமா, சிங்கு, நிசாப் பொண்ணு புருசன் எங்கே இருக்காரு, இப்பல்லாம் துபாய், சவுதின்னு பணம் சம்பாதிக்கப் போறாங்க, அப்படியா?...”

“அதைச் சொல்லதா வந்தேன். மாதாஜி. அநுகிட்ட எதும் கேட்காதீங்க. மனசு சரியில்லாம ஒரு மாதிரி இருந்து இப்பதா நல்லாயிருக்காங்க. தேவா போனபோது, அவங்க அங்கிளுக்கு நாங்க சேதி அனுப்பினோம். அநுவோட பிரதர்ஸ் ரெண்டு பேரும், யு.எஸ். போயிட்டாங்க. அவங்க சித்தியும் டில்லில இல்ல. கருணானந்த சாமியும் போயிட்டாங்க. நிசா, படிச்சிட்டு, ‘நியூதியேட்டர்’னு, கிராமங்களிலெல்லாம் ‘அவேர்னெஸ்’ கொண்டாரத்துக்காக தெருவோர நாடகம் எல்லாம் நடத்திட்டிருந்திச்சி. அதில ஒரு பிஹாரி பையன்... அவனுக்கும் இதுக்கும் லவ்னு சொன்னாங்க. ஆனா, கல்யாணம் பண்ணல. ஒருநா, பிஹார்லதா, தாகூர் ஆளுங்க நாடகம் நடக்கிறபோதே குத்திட்டாங்க. அநு... டெல்லிலதா இருக்கா... எங்க அங்கில் பாத்து, பென்சன், அது இதுன்னு எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டிருக்காங்க. அப்ப இந்த ஷாக்..” இது நடப்பா, கனவா, எங்கே என்று புரியாது அதிர்ச்சியால் அவளுக்கும் கால்கள் இயங்காமல் உறைகின்றன. சில விநாடிகளில் சமாளிக்கிறாள்... முருகா...!

ரெண்டு புள்ளிங்க...

“அநு, அநு, வளர்ப்புக்கு எடுத்திட்ட பிள்ளைங்க. தீவிரவாதிங்களால அப்பா அம்மாவைப் பறி கொடுத்தப் பச்சைப் பிள்ளைங்க. பஞ்சாபில ஒரு ஸ்தாபனத்து மூலமா இவ வளக்க எடுத்துக்கிட்ட பிள்ளைகள். அநுவும் நிசாவின், அவ லவர் பையன் சுதாகர் எல்லாரும் சேர்ந்து தான் எடுத்திட்டாங்க...”

எதுவும் பேசத் தோன்றவில்லை.

“மாதாஜி, நீங்க வந்திருந்தால் ஆறுதலாக இருக்கும். இப்பவும், நிசா, அந்த அதிர்ச்சிலேந்து மீளல. பீஹாரிங்க, இதையும் தீவிரவாதின்னு, முத்திரை குத்தி அரெஸ்ட் பண்ணிருப்பாங்க. ஆனா, நல்ல வேளையா, அதெல்லாம் நடக்காதபடி, வேற ஸ்தபானங்கள், சுதாகர் கொலைக்காகக் கண்டனம் செய்த இயக்கங்கள் பாதுகாத்திருக்கு. நிக்கலஸ் சாபுக்குத் தெரியும். நிசாவின் குழந்தைகள்னு சொல்லும். புருசன் இறந்திட்டார்னு, சொல்லும். இந்தப் பக்கம் ஒதுக்குப்புறமா இருக்குன்னாலும், நிசா இப்பகூட ஒரு’என்.ஜி.ஒ.’ இயக்கத்துல இருக்கு. இங்க இன்னும் பழகல. நேத்துத்தா எங்கோ, ‘எய்ட்ஸ்’ குழந்தைகளுக்கு ஒரு பராமரிப்பு ஹோம் இருக்குன்னு போயிட்டு வந்தா. அப்பதா உங்களப் பார்க்கச் சொல்லி நான் அனுப்பினேன்...”

வீடு வருகிறார்கள். சிங்கும் வருகிறார்.

“ஏம்மா, காலம போனவங்க... எங்க போறீங்க, யாரு வராங்கன்னு புரியல. வூட்டுக்கு வூடு தீவிரவாதி ஒளிஞ்சிட்டிருக்கிறானான்னு தேடுறாங்க. அன்னைக்கு ஓராளக் கூட்டிட்டு வந்து குசுகுசுன்னு பேசிட்டிருந்தீங்க. சோறு பண்ணிப் போட்டீங்க. அவரு பைய எடுத்திட்டுப் போனாரு. ஆரைத் தேடிட்டு வந்தாரு, எதுக்கு வந்தாருன்னு புரியல. இப்ப இந்த ஆளு ஆரு?...”

சிங்கு பார்க்கிறார். “க்யாஜி? என்னத் தெரியல? பொத்துரி காலேஜில இருக்கிறேன். தேவா சாப் இருக்கிறப் பஜனைக்கு வந்திருக்கிறேன். புரியல?... நா தீவிரவாதி இல்லப்பா?...”

“இல்ல... இல்ல சாரு, ரொம்ப நாளாயிட்டுதா? அதாகப் போகுது பத்து வருசம். வந்திட்டுப் போயிட்டு இருந்தாதான் புரியும்? ஒரு பொண்ணு வந்திச்சி. அதும் ஆருன்னு தெரியல...”

“இது பாரு ரங்கா, அது யாரும் இல்ல. உங்க சேர்மன் அய்யா கிட்ட சொல்லு. அன்னிக்கு வந்தது, சுப்பய்யா. இங்க இருந்த அய்யாவின் தொண்டர். குருகுலத்தில் சேவை பண்ணினவரு. மத்தியானம் வந்தது, அநும்மாவின் மக. போதுமா?...”

“எனக்கொண்ணுமில்லம்மா, நீங்க சொன்னதை அவங்க கிட்டப் போயிச் சொல்றேன். எனக்கென்ன ?...”

“மாதாஜி, நா வரேன். உலகம் எப்பிடியோ போயிட்டிருக்கு. கவலைப்படாதீங்க... வரேன்...”

சிங்கு போகிறார்.

அவள் அந்தப் படங்களைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள். உலகில் எத்தனை விதமான துன்பங்கள்! தலைமுறைகள் தாருமாறாக வளர்ந்திருக்கின்றனவா? சாலையில் போகும் பெண்ணைக் கையைப் பிடித்து இழுத்துக் கொலை செய்துவிட்டு அந்தப் பழியை ஒரு ஏழையின் தலையில் சுமத்திப் பாவத்தைக் கொட்டிக் கொள்ளும் தலைமுறை. ஆட்சிக்காரர்களின் அக்கிரமங்களைப் புரிந்து கொண்டு, உரிமைகளுக்குப் போராட இந்த ஏழைகளுக்கு விழிப்பூட்டுவது பற்றிப் பேசுகிறார்கள். வழக்கமாக நடக்கும் கட்சிக் கூட்டங்களில், ஆனால் கட்சிக்கு எதிர்க்கட்சிகள் மேடை போட்டுப் பேசும் போது இந்தச் சொற்கள் செவியைப் பிளக்கும். இங்கேயும் கூட நாலைந்து ஆண்டுகள் எதிரே மைதானத்தில், ஜனவரி ஒன்றாந்தேதிக்கு முந்தையராவில் ‘கலை இரவு’ என்று நாடகங்கள், பேச்சு பட்டிமன்றம் என்று நடத்தினார்கள். இவளும் பார்த்திருக்கிறாள். தப்பட்டையைத் தட்டிக் கொண்டு சட்டையின் மேல் இடுப்பிலும் தலையிலும் சிவப்புத் துணியைச் சுற்றிக் கொண்டு பாடுவார்கள். நடிக நடிகையர் பேரைச் சொல்லி, அவருக்குப் பொண்ணு பிறந்தா கொண்டாட்டம், இவங்களுக்குப் பொண்ணு புறந்தா கோலாகலம். ஆனா குடிசையிலே குப்பாயிக்குப் பொண்ணு புறந்தா கள்ளிப் பாலும் நெல்லுமணியுமா?ன்னு கேப்பாருக. ஏழையின் முன் கடவுள் ரொட்டி ரூபத்தில தான் வருவாருன்னாரு காந்தி. எங்க கட்சியே ‘பிரியாணி’ப் பொட்டலத்தாலதா வளருது’ம்பான். ஆனால் இந்த நாடகங்கள் நடக்கும்போதே அக்கிரமங்கள் நடக்கும். விழிப்புணர்வு வந்ததாக இவளுக்குத் தெரியவில்லை. இப்படி நாடகம் போட்டு, மக்கள் விழிப்புணர்வு கொண்டு, ஆதிக்கக்காரர்களை எதிர்க்க மக்கள் கிளம்பி விடுவார்களோ என்றுதான் குத்தினார்களா?...

அந்தக் காட்சியைப் பற்றிக் கற்பனை செய்தாலே உடல் சிலிர்க்கிறது. துவளுகிறது. சங்கிரியைக் குலைத்துக் கொலை செய்த பாதகம்...

இந்த மண்ணுக்கே தஞ்சம் என்று வந்திருக்கிறார்களா?

சூது வாதறியாத பெண், தீவிரவாதிகளால் பெற்றோரை இழந்த பச்சைக் குழந்தைகளைக் கை நீட்டி அரவணைத்து வளர்க்கும் பெருங்கருணை, இந்தக் ‘கசுமால’ மண்ணில் பிழைத்திருக்குமா? இவர்களுக்கும் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி உள்ளே தள்ளி விடாதா?

இரவு முழுவதும் உறக்கம் பிடிக்கவில்லை. மண்டை நரம்புக்குள் பல முரண்கள் பிய்த்துப் பிராண்டுகின்றன. பயங்கள், சோகங்கள், இழப்புகள்... ஏன் இப்படி? மண்ணில் விளையாடியது, அப்பனின் தோள் மீது அமர்ந்து திருவிழா பார்த்து, பரிசலில் ஏறிச் சென்றது, சம்பு அம்மா பிசைந்து ஊட்டிய தயிர்ச்சோறு, மொடமொடவென்ற கதர்ச்சீலையணிந்து, ஒரு துணையைக் கைபிடித்தது, பசுமையான தாலி அளித்த பாதுகாப்பு, முதல் பிரசவத்தின் போது, சரோ அம்மாவின் மாமியார் இவளைப் பிடித்துக் குடிலுக்குள் பிரசவம் பார்த்தது, அந்த முதல் அழுகை...

எல்லாமே இன்பமான பொழுதுகள். மாலையில் அந்தக் குழந்தைகள் கழுத்தைக் கட்டிக் கொண்டது, வாயில் ‘கேக்’ வாங்கிக் கொண்டு, அவளையும் ருசிக்கச் செய்தது, எல்லாமே மனசில் பரமசுகம் அளித்த அநுபவங்கள். ஆனால், ஒரு கையகலத்துணிக்குள் பெண்ணுடம்பின் மானத்தை மறைக்கப் போராடும், அபலையாய், மூர்க்க, வெறியர்களின் சூழலில்... சத்தியங்கள்.

எப்படி? எப்படி?... முருகா! முருகா... முருகா... கண்களை மூடித் தூங்க முயற்சி செய்கிறாள். எல்லாவற்றையும் மறக்க வேண்டும்... காலையில் எழுந்து கோபமோ, ஆத்திரமோ படாமல் வீடு துப்புரவாக்க வேண்டும். முருகா, உன்னைக் கூப்பிடுவதைத் தவிர எனக்கு ஒன்றும் புரியவில்லை.

முருகன் சூரனை ‘சம்ஹாரம்’ செய்யப் பிறப்பெடுத்தார். சம்பு அம்மாவுடனும் கமலியுடனும் சிவன் கோயில் முன் நடக்கும் இந்தக் காட்சியைப் பார்ப்பார்கள். சூரனுக்கு ஒவ்வொரு தலையா முளைக்கும். பிறகு, எல்லாம் போகும். மயில் வாகனத்தில் முருகன் அங்கிருந்த வீதிகளில் மட்டும் உலா போவார். இவர்கள் இருந்த தெருவுக்கு வராது. அதனால் சம்பு அம்மா அவர்களை இரவு அழைத்துப் போவாள். அந்த சிவன் கோயில் முன் மைதானத்தில்தான் காங்கிரஸ் கூட்டங்கள் ஏற்பாடு செய்வார்கள்... பத்துப் பேர்கூட இருக்கமாட்டார்கள். பயம் தெரியாது. அவளும் கமலியும் உரத்து வந்தே மாதரம் என்று கத்துவார்கள். கமலி இப்போது எங்கு இருக்கிறாள்?

சிறிது நேரம் கூடக் கண்கள் சோரவில்லை. இப்படி இருந்ததே கிடையாது... வாசலில் அடிச் சத்தங்கள் கேட்கின்றன.

பால்வண்டியா போகிறது? பள்ளிக் கூடத்துக்குப் பக்கத்தில் பிளாஸ்டிக் தொட்டிகளை அப்படியே இறக்குவார்கள். அருகில் சாக்கடை இருக்கும். வீட்டிலேயே மாடு கறந்தார்கள். இப்போது இல்லை. பின்புறம் நாடார் கடை ஆச்சி மாடு வைத்திருக்கிறாள். அவளிடம் தான் இப்போது உழக்குப் பால் வாங்கி தோய்க்கிறாள்... ஏதேதோ எண்ணங்கள் ஓடுகின்றன...

பேசாமல் கண்ணமங்கலம் போனால் என்ன ?... அழகாயி கோயில் இருக்கும். ஆத்தில் குளித்துவிட்டு அங்கேயே ஏதேனும் வேலை செய்து, பொங்கித் தின்றால் என்ன?...

இரவு முழுவதும் புடைத்த நரம்புகள், மண்டை கனக்கச் செய்கிறது ஊர்... கண்ணமங்கலம் எப்படி இருக்கும்? அய்யாவின் மூதாதையர் ஊர். அங்குதான் அவள் திருமணம் நடந்தது. அழகாயி, ஊர்த் தெய்வம். பக்கத்தில் பாமணி வாய்க்கால். அடுத்த பக்கத்தில் காலம் காலமான பண்ணையடிமைகளின் குடில்கள் இருந்தன. ஊர்ப் பெரியதனக்காரர்கள், மேல சாதி என்பவர்கள், ஒரே ஒரு தெருதான் ஐயமார் தெரு என்று ஒன்று இருந்தது.

நாலைந்து வீடுகள் தாம். ஏறக்குறைய அம்பது அம்பத்தைந்து வருசங்கள். அய்யாவின் பங்காளி - வகை, பெரியப்பா மகன் ஒருத்தர் தான் ஊரோடு இருப்பதாக ராஜலட்சுமி சொன்னாள். இது மிக உகப்பாக இருக்கிறது. விட்டபந்தம் - மீண்டும் தொற்றிக் கொள்ள வேண்டாம். வாய்க்கால்; காவேரி முங்கிக் குளித்து, சீலையைத் துவைத்து மரத்தில் கட்டி உலரவைத்துக் கல்லைக் கூட்டி சட்டியில் பொங்கி...

உடனே வண்டியேறிவிட வேண்டும் என்ற கிளர்ச்சியில் அவள் எழுந்திருக்கிறாள். உட்காரும் போதே தலை சுற்றுகிறது.

இதென்ன.. இப்படி? ஆட்சி...!

கையை ஊன்றிக் கொண்டு சமாளிக்கிறாள். இரவு உறக்கமில்லை என்றால், பின் கட்டைத் திறந்து கொண்டு இயற்கை வாதனையைத் தீர்த்துக் கொள்ளக் கழிப்பறை நாடும் தொல்லை வரும். ஆனால் முதல் நாள் அவள் அப்படியே படுத்திருந்திருக்கிறாள். சுவரைப் பற்றிக் கொண்டு விளக்கைப் போடுகிறாள். கதவுத் தாழைத் திறக்கிறாள். வாயில் படியைக் கடந்தாள். தலை கிர்ரென்று சுற்ற, நிலை தடுமாறுகிறது. விழுந்தது நினைவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=உத்தரகாண்டம்/27&oldid=1022839" இலிருந்து மீள்விக்கப்பட்டது