30

ருளே பிரியவில்லை. கன்னியம்மா அவள் கையைப் பற்றி, எழும்பூர் ரயில் நிலையப் படியில் உட்கார்த்தி வைக்கிறாள். எதிரே, எதோ பஸ்கள் உறுமுகின்றன. பயணிகள் ஏறுகின்றனர். தேநீர்க்கடையில் சுருசுருப்பாக வியாபாரம் நடக்கிறது. ஏதேதோ ஊர் பெயர் சொல்லிக் கொண்டு ஆட்களை அழைக்கிறான் ஒரு பையன்.

“ஒரு டீ வாங்கியாரட்டுமா ஆயா?”

“வாணாம்பா, உனுக்கு வாங்கிக் குடிச்சிக்க...”

அவள் எழுந்திருக்கவில்லை. மின் வண்டிக்குச் செல்லும் பாலத்திலும் கீழும் பரபரப்பு. விடிந்து விட்டது. தபதபவென்று கூட்டம். ரயில் பெட்டிகளில் இருந்து இறங்கி ஓடி வருகிறது. திடீரென்று காக்கிச் சட்டைப் போலீசு எங்கிருந்தோ வந்து மொய்க்கிறது. கன்னிம்மா இவளை உள்ளே பெஞ்சியில் கொண்டு உட்கார்த்துகிறாள். பையை அவளிடம் கொடுத்து “பத்திரமா வச்சிக்க, நான் டிக்கெட் எடுத்திட்டு வாரேன், எதனாலும் வாங்கியாரேன். இத நிக்கிற வண்டிதா போவும்கிறாங்க. பத்திரமா இரு...” அவள் போகிறாள்.

சூரியன் பளீரென்று தெரிகிறது.

இந்த நிலையத்தில் நேராகக் கார் உள்ளே வரும். இவள் இப்போது உட்கார்ந்திருக்கும் இடத்தில் கார் வருமா? எதுவும் தெரியவில்லை.

கண்ணமங்கலமா, கிளியந்துறையா?... சம்பு அம்மாவோடு இருந்த பூவனூரா?

எந்த ஊர்? எந்த ஊருக்கு அவள் சீட்டு எடுத்திருக்கிறாள்? கண்ணமங்கலம், ஆத்து மேட்டில், மறுபக்கம் பெரிய வாய்க்கால், வாய்க்கால் மேட்டில் கோயில், முன்புறம் பெரிய மைதானம். பெரிய அரசமரம். வேப்பமரம். மேற்கே ஆற்றுப் படித்துறையில் இதே போல் மரமுண்டு. அங்கே பிள்ளையார் இருப்பார்.

அழகாயி கோயிலை அடுத்து, வாய்க்காலின் மறுபுறம் குடிசனங்களின் ஊர். அதை அழகாபுரி என்றே சொல்வார்கள். அய்யா குடும்பத்துக்குச் சொந்தமான நிலங்கள் அந்தப் பகுதி முழுவதும் இருந்தன. எல்லாவற்றையும், அந்தக் குடிமக்களுக்கே வழங்கி, கீழ்ச்சேரி என்ற பெயரையும் வினோபா அடிகள் வந்த போது மாற்றிவைத்தார்... அந்தக் கோயில் முன் அவர்கள் திருமணம் நடந்தது. அவள் சேரிச்சாதிதான். ஆனால், புருசர் அய்யாவுக்கு உறவுள்ள மேல்சாதி. அந்த இடங்களை ‘சமீன்’போல் ஆண்ட சாதி. எத்தனையோ முறைகள் அழகாயி திருவிழாவுக்கு அம்மாவுடன் அவள் சென்றிருக்கிறாள். அம்மாவின் மறைவுக்குப் பிறகு ஊருக்குச் செல்லவில்லை. அய்யாவும் காலமான பிறகு, அவருக்குச் சிற்றப்பா மகனாகும் முறையில் ராமலிங்கம் என்பவர் வந்தார்.

“தாயம்மாவா? எப்படிம்மா இருக்கே?...” என்றார்.

“ஊரே, நம்ம உறவெல்லாம் காலி, எவனெவனோ கட்சி வந்திருக்கிறா. ஈசுவரன் கோயிலுக்கு ஒருவேளைப் பூசைக்கு வரும்படி இல்ல... அழகாபுரின்னு பேர வச்சி நிலம் நீச்சுக் குடுத்து வாழவச்சாரே, எல்லாம் எடுபட்டு பணம் சம்பாதிக்க, அங்க இங்கேன்னு பூடிச்சி. அவவ சாமி பேரச் சொல்லி, அருவா கத்தி எடுக்கிறானுவ.போன பஞ்சாயத்துத் தேர்தல்ல, ஊரே ரெண்டு பட்டுப் போயிடிச்சி. எதோ இருக்கிற...” என்று சொன்னது நம்பிக்கைக் கனவுகளின் இடையே கரும்புகைத் திரள் போல் நினைவில் உயிர்க்கிறது.

முன்பு, அழகாயி திருவிழாவில், நான்கு மூலைகளிலும் குட்டியறுத்து இரத்தபலி இடுவார்களாம். முத்துக் கருப்பப் பூசாரியின் மீது அம்மன் ஏற, அவர் குட்டியறுத்து இரத்தம் குடிப்பாராம். அவளுக்குத் தெரிந்து அதெல்லாம் நடக்கவில்லை. ஆனால் அந்தப் பூசாரியைப் பார்த்திருக்கிறாள். சந்தனமும் குங்குமமும் தரித்து அவர்களை வரவேற்பார். கோயில் வளைவில் பொங்கல் வைப்பார்கள்... பாட்டு கூத்தெல்லாம் நடக்கும். அந்தப் பூசாரி மகன் சிவசாமி படித்தான். தஞ்சாவூர் தமிழ்க் கல்லூரியில் வேலை பார்ப்பதாக அய்யாவைக் காண வந்தான்.

ஏதேதோ நினைவுகள்.

“பாட்டி! பாட்டி!...”

அவள் திடுக்கிட்டவள் போல் பார்க்கிறாள். ஒரு பெண் போலீசு. கையில் எதையோ பெரிய சோடா உடைப்பான் போல் வைத்து அவளை, அந்தப் பையைத் தடவுகிறாள்.

நிலையம் கொள்ளாமல் கூட்டம். “பையில என்ன வச்சிருக்கிற?...”

அவளுக்கே தெரியாது. திறந்து காட்டுகிறாள். இருண்டு புதிய வெள்ளைச்சேலை, உள்ளாடை, ரவிக்கை, ஒரு கவரில் ஐந்து நூறு ரூபாய் நோட்டுகள்; இன்னொரு பையில், கன்னியம்மாளின் சீலை துணிகள். “எங்கே போற?”

“கண்ணமங்கலம். எம்பேத்தி டிக்கெட் எடுத்திட்டா, சாப்பிட எதானும் வாங்கியாரன்னு போனா...”

வண்டிப் பெட்டிகளில் சாக்குக் கட்டியால் புரவலர், கலைச் செம்மல், நாடு போற்றும் தமிழாளர், அடலேறு, இளவழுதி அய்யா மறைவு... என்று செய்தி எழுதுகிறார்கள். தபதவென்று வெளியே கூட்டம் வாழ்க, வாழ்க என்ற மோதியடித்துக் கொண்டு ஓடுகிறது.

வெள்ளைக் குர்த்தாவும் கால் சட்டையுமணிந்த இளம் பிள்ளை ஒருவனும், அதே போல் உடையணிந்த ஒரு பெண்ணும் அங்கே வருகிறார்கள். “பாட்டியம்மா, இங்க உட்காரலாமா?” பையை மடியில் வைத்துக் கொண்டு அவள் இடம் கொடுக்கிறாள். அந்தப் பையன் அழகாகப் புன்னகை புரிந்து ‘தாங்க்யூ’ என்று நன்றி சொல்கிறான். ஆனால் நெருக்கியடித்து உட்காரவில்லை. “இந்த வண்டிதா விழும்புரம் போவுதா?” என்று கேட்டுக் கொண்ட குஞ்சும் குழந்தையும் சாப்பாட்டுப் போகணியுமாக ஒரு குடும்பம் முன்னேறுகிறது.

நேரமாக ஆக, இவளுக்குக் கவலை மேலிடுகிறது. கன்னியம்மாவைக் காணவில்லையே?

இன்னும் யார் யாரோ இளைஞர், வருகிறார்கள். படித்தவர், படியாதவர், கூட்டம் நெருக்குகிறது. மாடிப்படிகள் அதிரும் கூட்டம். பத்திரிகை, புத்தகம், காபி, டீ, தண்ணீர் வாணிபங்கள் நடக்கும் மேடை.

“ஏம் பாட்டி, உங்க பேத்தி வரலியா இன்னும்?... நீங்க போற வண்டி, அதா அந்த பிளாட்ஃபாரத்திலேந்து போயிடிச்சி...”

“அப்பிடியா? எனக்குத் தெரிலியே? இப்ப வாரேன்னுதா போனா...”

“பணம் குடுத்திருக்கீங்களா?”

“இல்ல தாயி...”

“இப்ப டிக்கெட் இருக்குதா?...”

“இல்லியே?...” அழுது விடுவாள் போலிருக்கிறது.

“ஒரே கூட்டம். எங்கேயானும் மாட்டிட்டிருக்கும். சரி, உங்களுக்கு நா சீட்டு வாங்கிட்டு வரேன். இத வண்டி பொறப்படும். விழுப்புரத்துல எறங்கி மாயவரம் வண்டில போங்க!” அவள் இவளிடம் எதுவும் கேட்காமல், சென்ற மறு நிமிடத்தில்லேயே ஒரு பயணச் சீட்டு வாங்கி வந்து கொடுக்கிறாள். நூறு ரூபாய் நோட்டு-"சில்லறை இல்லையே?...”

“பரவாயில்லை.” என்று அவளிடமுள்ள ஆறு பத்து ரூபாய் நோட்டுகளைக் கொடுக்கிறாள். பிறகு அவளை, அங்கு ஒரு பெட்டியில் ஏற்றி விடுகிறாள்.

போலீசு... பொம்பிளைப் போலீசிடம் இவளுக்கு அநுபவம் இல்லை. பார்த்திருக்கிறாள். போலீசென்றால் அஞ்சி ஒளிந்த நாட்கள், ‘போலீசிடம் புடிச்சிக் குடுத்திடு வாங்க’ என்று சொன்ன கன்னியம்மா, எங்கே? நிசமாக போலீசிடம் புடிச்சிக் குடுத்துவிட்டார்களா? முருகா?

கூட்டம் குஞ்சும் குழந்தையும் இளவட்டமும், பளீர் வண்ணங்களுமாக நெருங்குகிறது. அவள் சன்னலடியில் ரயிலடி மேடையை ஆதூரத்துடன் கன்னியம்மாவுக்காகத் துழவும் கண்களுடன் நிற்கையில் மோதித்தள்ளுகிறார்கள். ‘கக்கூசுக்கு’ப் போகும் வழியில், கொழுக்கட்டைக்குள் அவியும் பருப்பு பண்டம் போல் அடைபட்டிருக்கிறாள். வெள்ளை உடுப்பு-பச்சை சிவப்புக் கொடிக்காரர் விரைந்து அடுத்த பெட்டிக்கு முன்னேறுகிறார்... அதோ கன்னிம்மா...

அவள் எப்பிடித்தாவி ஏறினாள் என்று தெரியவில்லை. ஏறிவிட்டாள். படியில் நிற்கும் நாமக்காரர் அவளை இழுத்து உள்ளே தள்ளிவிட்டார். வண்டி வேகம் பிடிக்கையில் அவள் மனம் இறுக்கம் தளர்ந்து லேசாகிறது “கண்ணு, நீ வந்திட்டியா? என்னிய அந்தப் போலீசுகாரம்மா டிக்கெட் வாங்கிக் குடுத்து ஏத்திவுட்டாங்க. நீ எங்கம்மா போயிட்ட?...”

அவள் குரல் அந்தச் சந்தை இரைச்சலில் எடுபடவில்லை. அந்தச் சன நெருக்கடி வாடையில், அழுத்தத்தில், சுடர் விட்ட மனிதநேயம்... நாமக்காரர் பட்டை நாமம், திருப்பதிப் பெருமாளா? சிக்குவாடை வீசும் ஒரு பெண் இடுப்பில் குழந்தையுடன் இடிக்கிறாள். கக்குசு வாடை, நெடியடிக்கிறது.

கன்னியம்மா எப்படியோ எத்தனையோ பேச்சுக்களை ஏற்று அவளிடம் வந்து விடுகிறாள். ஒரு பெஞ்சியில் துணி விரித்து இரண்டு குழந்தைகளை விட்டிருக்கிறாள். நெருக்கமாக இரண்டு பெஞ்சுகளிலும் மக்கள். கீழே, குண்டான் சட்டி, பெட்டி, பை என்று சாமன்கள். வழியில் ஒரு கொய்யாப்பழக்கூடை இருக்கிறது. ஒரு கைக்குட்டை வியாபாரி, முறுக்கு வாணிபம் செய்யும் பெண் பிள்ளை...

இவர்களெல்லாம் எப்போது எப்படி ஏறினார்கள்?

“ஆயா, இது பாசஞ்சர் வண்டி. பெரி... வண்டில இட்டுட்டு நேரா மாயவரத்துல எறங்கி பஸ்ஸில் போகலான்னு அசுவினி மேடம் சொன்னாங்க. மட்டி, டிக்கெட் எடுத்தே, வண்டி ஒம்பதரைன்னாங்க. அதுக்கு உக்காரன்னு இடம் போடணுமா, தெரியல. வண்டிலியே பாரும்மா, இருக்கும்னாரு, ஒருத்தர். சரின்னு பாத்தா, அந்த வண்டி அந்த பிளாட் ஃபாரத்துல போயிட்டுது. உன்னக் கூட்டிக்காம நா எப்பிடிப் போறது? அந்தக் காசு பூரப் போச்சி. திரிம்ப வந்து வெளில ரெண்டு டிக்கெட் எடுத்தே. உன்னிய போலீசுக்கார அம்மா கூட்டிட்டுப் போறதப் பாத்து, விழுப்புரம் ரெண்டுன்னு டிக்கெட் எடுத்திட்டு ஓடியாரேன்... அசுவினி அம்மா, ஆயிரம் ரூவா குடுத்தாங்க. அஞ்சு நூறு எடுத்து வேஸ்டாக்கிட்ட. பையி பத்திரம்.”

கபடமில்லாமல் இவளும் நடந்ததைச் சொல்கிறாள்.

“தாயி, இந்நேரம் அடிபட்டுச் சாவ இருந்தியே?...”

“போவட்டும். எப்படியோ, வண்டில ஏறிட்டம்?”

வண்டி ஊருகிறது; நிற்கிறது; கூட்டம் ஏறுகிறது பிதுங்குகிறது. இவளை பெஞ்சியில் இருக்கும் பிள்ளைகளை நகர்த்தி, கன்னியம்மா உட்கார்த்தி வைக்கிறாள்.

கீழே, லோலாக்கும் பெரிய மூக்குப் பொட்டுமாக, ஒரு பெண், குண்டானிலிருந்து புளிச்சோறு எடுத்து அட்டைத் தட்டில் வைத்துப் பிள்ளைகளுக்குக் கொடுக்கிறாள்.

இவர்கள் எல்லோரும் எங்கோ கல்யாணத்துக்குப் போகிறார்கள். நாலைந்து இளம் பெண்கள், விடலைப் பிள்ளைகள், நடுத்தர வயசு சம்சாரி- இரயில் பயணத்தின் சந்தோசங்களை அநுபவிக்கிறார்கள்.

ஒரு இரண்டுங்கெட்டான் பிள்ளை உட்கார்ந்த படியே மரச்சட்டம் நனைய, சிறுநீர் கழிக்கிறது.

“அய்ய, இன்னாமா, இதுபாரு, அது வெளிக்கிருந்திருக்கு இப்படியே சோறு வைக்கிறீங்க?”

கன்னியம்மா கத்துகிறாள்.

கைகழுவக் கூட நீரில்லை. ஒன்றரை இரண்டு வயசு இருக்கும். மண்டை தெரியும் முடியை வாரி உச்சியில் கட்டி நாடாவும் பூவும் வைத்து அலங்கரித்திருக்கிறாள். கன்னத்தில் நெற்றியில் கரிய பொட்டுகள்.

பெண்... இக்கட்டான நிலைமைகளை அவளே சமாளிக்கிறாள்.

சட்டியையே கழற்றித் துடைத்தாற் போல் சன்னலுக்கு வெளியே வீசுகிறாள். பிறகு பிள்ளையுடன் கழிப்பறைப் பக்கம் போகிறாள். அங்கே தண்ணீர் கொஞ்சம் வந்திருக்க வேண்டும்.

“தண்ணியே கொஞ்சூண்டுதா வந்திச்சி... வூட்டேந்து புறப்பிடறப்ப இருக்காம, இங்க வந்து அம்மாளக் கஷ்டப் படுத்தலாமா?...”

அதற்கு ஒரு முத்தம்.

அந்த ஆண் பெரியவனாகி இவளை வாழவைப்பானா?

கன்னியம்மா எதையோ நினைத்தாற் போல் சிரிக்கிறாள்.

“எதுக்குமா சிரிக்கிற?...”

“இல்ல, போலீசுக்காரிங்க, மூட்டமுடிச்செல்லாம் தடவினாங்க. நாய வுட்டு மோந்து பாக்க சொன்னாங்க அந்த பிளாட் பாரத்துல. நெனச்சேன். சிரிப்பு வந்திச்சி.”

“இன்னாமோ அவுங்க கடமை. இந்த சனங்க, நம்மைப் போல கபடில்லாம காதுகுத்து, கலியாணம்னு போகுது! என்னியே அவ தடவிப் பாத்தா...”

மனதுக்குள் இந்தக் கூட்டத்தில் குண்டு வைக்கும், குத்தியெறியும் தீவிரவாதி இருப்பானா? ஆனால், எவன் ஒழுக்கம், எவன் ஒழுக்கமில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? பெண்... பெண் குழந்தைதான் வாழ வைக்கிறது. இவளிடம் அந்த ஒட்டு மீசையோ, கிருதா மீசையோ, ‘ஆயா’ என்று பரிவு காட்டவில்லை...

காந்தி மூணாம் வகுப்பு ரயிலில் தான் போவாராம். இப்ப மூணு கிடையாது எத்தனையோ இருக்குதாம். ஆனா, ‘ரெண்டு’ன்னு நிறுத்திருக்காங்க. சாமி நீங்க போயி அம்பது வருசத்துக்குமேல ஆச்சி. இப்ப அருவமாவானும் வந்து இந்தப் பொட்டில பாருங்க சாமி? இந்த தேசம் எப்படி இருக்குன்னு?

விழுப்புரம் வரும் போது பொழுது சாயும் நேரம்.

அடேயப்பா? என்ன கூட்டம்?...

ஒரு மாதிரி இறங்குகிறார்கள். தள்ளுமுள்ளு, அவசரங்கள்...

ஒரே தலைகளாகத் தெரியும் மனிதக் கூட்டம்.

பள்ளிப்பிள்ளைகளின் சீருடைகள்; சல்வார் கமிஸ்கள்; கறுத்த அங்கிகளுக்குள் மூச்சு விடும் வலைகளுடன் துலுக்கப் பெண்கள்... வெள்ளை உடுப்பு கார்டு சுருட்டிய கொடிகளுடன் போகிறார். புரவலர், கலைக்கோ, எழுத்துச் செம்மல், தலைவர், இளவழுதி மறைவு... கறுப்பு எழுத்து அச்சு- நோட்டீசுகள் ஒட்டப் பட்டிருக்கின்றன.

அவன் புகழ் நாடெங்கும் அலையடிக்கும், இரங்கல் பாடும் கட்சிக் கொடிக்கூட்டம்.

அவளை மெள்ள அழைத்துச் சென்று, ஒரு இருக்கை தேடி உட்கார வைக்கிறாள் கன்னியம்மா.

யார் யாரோ போகிறார்கள். அறிமுகமில்லாதவர்கள்; இந்த நாட்டு மக்கள். இவர்களை சத்தியப்பாய் கொண்டு ஒருங்கிணைக்க முயன்றார்.

கன்னியம்மா, ஒரு காகிதத்தில் நான்கு வடைகளும், பிளாஸ்டிக் பை குடி நீருமாக வருகிறாள்.

“இக்குணூரண்டு போண்டா, மூணு பத்து ரூபாங்குறான். அதுக்கு சட்டனி கிடையாதாம். பேமானி!” என்று திட்டிக் கொண்டே அதைப் பை மீது கீழே வைக்கிறாள். ஒரு பிளாஸ்டிக் பையைப் பல்லால் கிழித்துத் தண்ணீரைத் திறக்கிறாள். “ஆயா, கையக் கழுவிக்குங்க...” கொஞ்சம் கையில் விட்டு அவள் முகத்தைத் துடைக்கிறாள்.

“யம்மா, இது குடிக்கிற தண்ணி இல்ல?”

“குடிக்கிறது கழுவுறது அல்லாத்துக்கும் இதுதா. ரயில்ல, அத்தினிகாசு டிக்கெட்டுக்குப் புடுங்கினா, கழுவத் தண்ணி இருந்திச்சா? இப்ப எங்க தண்ணி தேடிட்டுப் போக?... நாலரை மணிக்கு வண்டி இருக்காம். நாம உடனே போகணும். நா வெளியே போயி டிக்கெட் எடுத்திட்டு வர.” அவசர அவசரமாக முடித்துக் கொண்டு, அவள் கையைப் பற்றி அழைத்துச் செல்கிறாள். படி ஏறாமல் இருப்புப் பாதை கடந்து, வண்டியில் ஏற்றி விடுகிறாள். உட்கார இடம் கிடைத்து விடுகிறது. நெருக்கம்தான். சாய்ந்தாற்போல் கண்களை மூடிக் கொள்கிறாள்.

வண்டி எப்போது புறப்படுகிறதென்று தெரியவில்லை. அடிபிடிகள், கூச்சல், நெருக்கங்கள் உறைக்காத ஆசுவாசம்.

இருட்டி இரவாகிவிட்டது. சிதம்பரம், சீர்காழி என்று குரல்கள் கேட்கின்றன. வண்டி எங்கே நிற்கிறது, புறப்படுகிறது என்று அவள் கண்களைத் திறக்கவில்லை “முருகா... நீ நல்லது தா செய்யிவே, என்னிய எப்படிக் கொண்டு போவணும்னு, நீதா நெனக்கிற!...”

“பாவிப் பயலுவ. எழவு சினிமா, ஊரு உலகத்தைக் கெடுத்துக்குட்டிச் சுவராக்குது. ஏதோ படமாம். பத்து ரூபா குடுத்து டாலர் வாங்கி மாட்டிகிட்டு, நூறு இருநூறுன்னு டிக்கெட் வாங்கிட்டு அழியிது. கும்பிகாயுது. ஒழவு, நடவுன்னு புழைக்கத்தண்ணி இல்ல. கட்சிக்காரனுவ கொடி புடிச்சிக்கிட்டு இந்த இளசுகளை அடி வெட்டுன்னு திசை திருப்பறானுவ. நேத்து எவனோ செத்திட்டானாம். அதுக்குன்னு ஒரு பய மண்ணெண்ணை ஊத்திக்கிட்டு எரிய நிக்கிறானாம். அப்பன் ஆயி லபோலபோன்னு அடிச்சிட்டு சாவுக்குப் போவ தாலிய வச்சி துட்டுக் குடுக்கிறா.”

அவள் கண் விழித்துப் பார்க்கிறாள். மூலையில் அரைக்கை வைத்த அழுக்குப் பனியனும் வேட்டியுமாக ஒரு முதியவர் மஞ்சள் பையைப் பிடித்துக் கொண்டு நிற்கிறார். அவர் வாயிலிருந்துதான் சொற்கள் வருகின்றன.

மீண்டும் கண்களை மூடுகிறாள்.

வண்டி கடக்கென்று நிற்கிறது. “அல்லாம் எறங்குங்க, ஏறங்குங்க!”

“இது இனிமே போவாதாம். எறங்கி, பஸ் புடிச்சிப் போகணும். ஏம்மா, எங்க போவணும்?”

“நாங்க புதுக்குடி போயி அப்பால கண்ணமங்கலம் போவணும்?”

“இது புதுக்குடில நிக்யாதா?”

“நிக்கும். ஆனா, இன்னாமோ போராட்டமாம். ரயில் பாதையில் நின்று ராத்திரியில மாறியல் செய்யிறாங்க! போகாதுன்னு கார்டு சொல்லிட்டுப் போறாரு...”

இறங்குகிறார்கள்; பஸ் நிறுத்தத்துக்கு வெளியேறும் கும்பலுடன் கலந்து கொள்கின்றனர். விளக்குகளைச் சுற்றிப் பூச்சிகள்... கன்னியம்மாளின் கையைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டிருக்கிறாள். படி ஏறி இறங்கி வருகையில், எழும்பூரில் கண்ட பையன், அந்தப் பெண், இன்னும் அவர்களைப் போல் நாலைந்து பேர்கள்... இவங்களும் எங்கே போகிறார்கள்? அவர்கள் இந்தியில் பேசிக் கொண்டு முன்னே நடக்கிறார்கள்.

கசகசவென்ற பஸ் நிறுத்தம்.

“ஏம்பா, புதுக்குடி போற பஸ்...”

“இல்ல... நாகபட்ணம், திருவாரூர்” என்று ஏதேதோ பேர் சொல்கிறான். “கும்மாணம் பஸ் போயிடிச்சி. இனி காலம நாலுமணிக்குத்தான்...”

பஸ் நிறுத்தத்தின் பக்கம், இரவு கடைகளில் சொய்யென்று தோசை போடுகிறான். கூட்டம் மொய்க்கிறது. உறுமி விளக்கடிக்கும் பஸ்கள். குடிக்க, கழுவ தண்ணீரில்லை. கீழே சகதியாக ஈரித்த கும்பி அழுக்கு.

கழிப்பறையில் இயற்கைக்கடன்-வெளியேற்ற முடியாத நாற்றம். கன்னியம்மா, அந்தத் தங்கும் கூடத்தில் ஓர் இடம் பிடித்து உட்கார்த்தி வைக்கிறாள். இரண்டு வாழைப்பழம் வாங்கி வருகிறாள். சூடான பால் என்று விரல் நீள தம்ளரில் இனிப்பாகக் கொண்டு வந்து கொடுக்கிறாள். காலையில்... காலையில் போய்விடலாம். “முருகா... இந்த அத்தினி சனங்களையும் கரையேற்று!” கண்களை மூடுகிறாள்.

கன்னியம்மா யாரிடமோ விசாரிப்பது செவிகளில் விழுகிறது.

“கண்ணமங்கலமெல்லாம் போவாதம்மா. புதுக்குடியே போவுதோன்னு சந்தேகம். அங்கெல்லாம் ஒரே கலவரம். பஸ்ஸையே மறித்து நிறுத்தி, வெட்டிப் போட்டுட்டானுவ!...”

புற்றுக்குள் கைவிட்டுவிட்டாளா? பாம்புகள் வந்து சுற்றிக் கொள்கின்றன. கன்னியம்மா ஏதும் பேசவில்லை.

பொழுது நன்றாகவே விடிகிறது. கீழ்வானில் உதயம் சிவந்து, சாலையில் பொற்கிரணங்களைப் படிய விடுகிறது. நம்பிக்கைக் கதிர்கள் அவளை இதமாகத் தடவுகின்றன. ஓரத்து இருக்கை. இருவர் இருக்கை.

“கண்ணமங்கலம் போகுதாப்பா?” குங்குமப் பொட்டளிந்த நடத்துனன், வெளியே இறங்கி வெற்றிலைச் சாற்றைத் துப்புகிறான்.

“புதுக்குடி ரோட்டுல எறங்கிக்க?”

கன்னியம்மாளிடம் இரண்டு பத்து ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொண்டு சீட்டைக் கிழித்துக் கொடுக்கிறான். டிக்கெட்... டிக்கெட்...

“மானரேந்தல், மல்லிகாபுரம் அதெல்லாம் போகாது, நிக்காது. புதுக்குடி ரோட்டுல எறங்கிக்குங்க?”

ஒரு மொட்டைப்பயல் தேநீர் கொண்டு வருகிறான். கன்னியம்மா இரண்டு தேநீர் வாங்குகிறாள்.

பல் விளக்கவில்லை, கழுவவில்லை. தேநீரருந்துகிறாள். கன்னியம்மாளைப் பார்த்துக் கசிகிறாள்.

தாய், தெய்வம். புடம் போட்ட சொக்கத்தங்கம். இவளுக்குத் தனி வழி அச்சம் இல்லை. எந்த முரடனும் எந்தக் காமுகனும் இவளுக்குப் புதிதல்ல... அழகாயியே வந்து இவள் உருவில் அழைத்துச் செல்கிறாளோ?...

புதுக்குடி சாலையில் இறங்குகிறார்கள். வழியில் அசாதாரணமான அமைதி தெரிகிறது. ஓட்டுப் பள்ளிக் கூடச் சுவரில் அசிங்கமான ஆண் பெண் கிறுக்கல்கள் கண்களில் படுகிறது. ஓட்டல், பெட்டிக்கடை, சுவரொட்டி, தட்டிகள் கிழிக்கப்பட்ட கொடும்பாவி எரிக்கப்பட்ட சிதிலங்கள். ஓட்டலுக்குள் இரண்டு போலீசுக்காரர் செல்கின்றனர்.

கண்ண மங்கலம் திரும்பும் வழியில் ஈகாக்கை இல்லை. இவர்கள் நடக்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=உத்தரகாண்டம்/30&oldid=1022842" இலிருந்து மீள்விக்கப்பட்டது