31

ண்ணமங்கலம் கிராமம் என்பது பெரிதில்லை. காலையில் இருந்து உள்ளே வந்து ஊத்தங்கரையோடு சென்று, பிறகு பெரிய சாலையில் பேருந்துகள் செல்லும். அதுவும் முன்பு கிடையாது. இந்தத்தடம் வந்த பிறகு அவள் ஒரே ஒரு தடவைதான் வந்திருக்கிறாள். ராதாம்மாவுக்கு உடல் நலம் இல்லை என்று தெரிந்த பின் அப்படி வந்து, அங்கிருந்து ஒரு மாட்டு வண்டியில் ஊர் வந்தார்கள். அழகாயிக்குப் பூசை வைத்து நேர்ந்து கொண்டார்கள். புதுக்குடிச்சாலையில் இருந்து ஐந்தாறு கிலோ மீட்டர் இருக்கும். முன்பெல்லாம் வழியில் கட்டிடங்கள் இருக்காது. ஒரே சோலையாக இருக்கும். பூவரசு, வாதமடக்கி, வேம்பு எல்லாமே இருக்கும். அழகாயி கோயிலுக்குக் குறுக்கே சென்றுவிடலாம். ஆனால் இப்போது அந்தப் பசுமைகள் இல்லை. ஆளே இல்லாத பன ஓலைக் குடிசைகள், முள் படல்கள் தெரிகின்றன. சாலையில் கண்டாற் போல் ஒரு ஓட்டுப் பள்ளிக் கூடம். துவக்கப்பள்ளி என்று விள்ளுகிறது, பலகை. அதன் இடிந்த திண்ணையில் இரண்டு ஆடுகள் படுத்திருக்கின்றன. ஓர் அடி குழாய். அங்கிருந்து பார்த்தால் பசுமையான வயல்கள் தெரியும். வெள்ளையும் சள்ளையுமாகக் கட்டிடங்களே தெரிகின்றன. தெருவீடுகளை ஒட்டிய கொல்லைகளில், தென்னமரங்கள் மட்டை தொங்கக் காய்ந்திருக்கின்றன. ஈசுவரன் கோயில் கோபுரம் தெரிகிறது. வழியில் ஏதேதோ கடைகள்... சாம்பு, காபித்துள், சரம் சரமாகத் தொங்குகின்றன. அந்த ஒரு கடைதான் திறந்திருக்கிறது. நேராக வாய்க்கால். அந்தப் பாலம் தாண்டினால், ஆற்றுமேடு வரும் வரை தென்னந்தோப்பும், வெற்றிலைக் கொடிக்கால்களும் இருக்கும். ஏதோ வீடுகள், மட்டும் தெரிகின்றன. குடை ஆன்டெனா...

அவர்கள் முன் ஒரு போலீசுக்காரன் வருகிறான். தொந்திதெரிய, நடுத்தர வயசுக்காரன். கையிலுள்ள தடியால் தரையைத்தட்டி, “நில்லுங்க? எங்க வரிங்க?” என்று அதிகாரமாகக் கேட்கிறான். கன்னியம்மா பேசவில்லை.

இவள் யோசனை செய்கிறாள். சட்டென்று, ‘அழகாயி வூட்டுக்கு’ என்று சொல்கிறாள். அதற்குள் கன்னியம்மா சமாளித்து, “ஆ, எங்கத்த வூடு இருக்கு” என்று தொடருகிறாள்.

“அத்த வூடா? ஆரு, பேரு சொல்லு!”

“அதா அழகாயின்னு சொன்னேன்ல; அழகாபுரிப் பக்கம்...”

“அழகாபுரிப்பக்கம் ஆரும் போகக்கூடாது. நடங்க, ஸ்டேஷனுக்கு?”

“ஏய்யா? எதுக்கு நாங்க ஸ்டேஷனுக்கு வரணும்? எங்க மக்க மனுசங்கன்னு இருக்கமாட்டாங்களா? நா வாக்கப் பட்டது இந்த ஊருதா. இது பேத்தி, நாங்க பட்டணத்திலேந்து புறப்பட்டு, ஒரு நேர்ச்சக்கடன்னு வாரோம். இங்கியே தங்குவோம். உங்களுக்கு தியாகி எஸ்.கே.ஆர். தெரியுமாங்க?”

“இதபாரு, இந்தத் கதயெல்லாம் வாணாம். இங்க இப்ப தியாகியுமில்ல, ஆருமில்ல. ஊருக்குள்ள ஆருவரதானாலும் எங்களுக்குத் தெரியணும். நட ஸ்டேஷனுக்கு. கலவரம் நடந்த ஊரு, சேதி தெரியாது?”

“நாங்க என்னப்பா பேப்பர் படிக்கிறது? நேத்து ராத்திரி வண்டிய நடு வழியிலே நிறுத்திட்டாங்க. அங்கேந்து பஸ் புடிச்சி காலம புதுக்குடி வந்தோம். ரயில் பாதையில் தண்ட வாளத்துல நின்னு மறிக்கிறாங்கன்னாங்க. இப்ப பஸ்ஸு ரோட்டோட போவுது. சனங்கள ஏம்பா இத்தினி கஷ்டப்படுத்தணும்?”

“இதெல்லாம், இன்ஸ்பெக்டர்ட்ட வந்து சொல்லு...”

சரி, வெவரம் இல்லாத ஆளாக இருக்கிறான். என்ன கலவரம் நடந்து இவ்வளவுக்கு ஆயிருக்கும்? பட்டணத்தில் தான் துப்பாக்கி, கொள்ளை வண்டி மோதிச் சாவு அன்றாடம் அரங்கேறுது. கிராமத்தில வந்து, தங்கி எதானும் நல்லது செய்யலாம் என்று பசுங்கனவுகளில் மிதந்தாளே?

வாய்க்கால் கரை ஓரத்தில், ஊத்தங்கரை எல்லையில் புதிய போலீசுச்சாவடி இருக்கிறது. கூரைதான். தீயணைப்பு வாளி. சைகிள். எங்கிருந்தோ முளைத்தாற் போல் ஓர் அழுக்குக் கவுனுடன் ஒரு பெண் குழந்தை அவர்களைப் பார்க்கிறது. போலீசுப் பயம் இல்லையோ?

அந்தக் காவலன், மேசையடியில் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் அதிகாரியின் முன் விறைப்பாக வணக்கம் தெரிவிக்கிறான்.

அந்த அதிகாரி இளம் பிள்ளையாக இருக்கிறான்.

“ஸார், இவங்க அழகாபுரிப் பக்கம் வராங்க..”

அவன் அவர்கள் இருவரையும் ஏற இறங்கப் பார்க்கிறான். பிறகு மரியாதையாக, “என்னம்மா? யாரு நீங்க? எங்கிருந்து வந்திருக்கிறீங்க!” இவளுடைய வயதுக்கும், நலிவுக்கும் மதிப்புக் கொடுக்கிறான். அங்கே ஒரு பெஞ்சு இருக்கிறது. “உக்காந்து பேசுங்கம்மா, யாரு நீங்க?”

“தியாகி குடும்பம் அய்யா. காந்தி, நேரு எல்லாம் வந்திருக்காங்க. சரோ அம்மா, காந்தி கிட்ட பேசிருக்காங்க. கலியாணம் பண்ணி, புருசம் பொஞ்சாதியா வாழாம, தேசத்துக்குன்னு செயில் போனாங்க. ஈசுவரன் கோயில் வீதிங்க... அய்யா, அம்மா ரெண்டுபேருக்கும் இதா ஊரு.”

காவலன் இடைமறித்து, “ஏதேதோ கதை சொல்லுதுகள்” என்று அவசரப்படுகிறான்.

“கதை இல்ல, தம்பி நிசம்... தியாகி எஸ்.கே.ஆர். அவுங்க காலத்துலதான் அழகாபுரின்னு பேரு வச்சாங்க. நிலமெல்லாம் வினோபா வந்தப்ப பூதான இயக்கமா, அந்தக் குடிமக்களுக்கே எழுதி வச்சாருங்க... சரோஜினி அம்மா. அவரு அப்பாவுக்கு ஒரே வாரிசு...” கண்கள் கசிகின்றன.

“என்ன பேரு சொன்னீங்க?”

“தியாகி எஸ்.கே.ஆர். சின்னி கிருஷ்ணன் அப்பா, இவுரு பேரு இராம சந்திரன். எஸ்.கே.ஆர்னா எல்லாருக்கும் தெரியும்.”

“நீங்க அவுங்களுக்குச் சொந்தமா? இந்தப் பொண்ணு யாரு..?”

“அவுங்க நிழலை அண்டி, சத்தியக் குடையில் மூணு தலைமுறையா வாழ்ந்தவ. காந்தி சொன்ன பிறகு, வாழ்ந்து பெத்த ஒரே மக போயிடுத்து, அம்மா அய்யா எல்லாம் போயிட்டாங்க. எம் பேத்தி இது. அங்க நாட்டு நடப்பு, மக்கமனுசங்க எதும் புடிக்கல. இத்த ஒரு கலியாணம் கட்டிவச்சே. அவ... பாவி, கூசாம, செய்யாத அக்கிரமமெல்லாம் செய்யிறான. பச்சையா இருக்கிற மண்ணுன்னு வந்தே, இங்கியும் எரிஞ்சி கெடக்கிது... ஒண்ணுமே புரியலங்க...”

“சரி, சரி, அழுவாத இந்த மூட்டைய வாங்கி வையிப்பா. சைகிள எடுத்திட்டுப்போயி, புதுக்குடி ஒட்டல்லந்து பிளாஸ்கில் காபியும் பத்து இட்டிலியும் வாங்கிட்டு ஜல்தி வா!” ஒரு நூறு ரூபாய் நோட்டை வைக்கிறான். சரி என்று மறுபடியும் விறைப்பாக ஒரு வணக்கம். தெரிவித்துவிட்டுப் போகிறான். அப்போதுதான் இன்னும் இரு காவலர்கள் சைகிளில் வந்திறங்கி வணக்கம் தெரிவிக்கின்றனர்.

“பெரிம்மா, நீங்க இருங்க..."

“காபி ஸார்!” என்று வந்த காவலன் பிளாஸ்கைத் திறந்து கிளாசில் ஊற்றி வைக்கிறான்.

“அந்தப் பெரிம்மாக்குக் குடு!” என்றவன், கன்னியம்மாளைக் கூப்பிடுகிறான். “நீ வாம்மா, எங் கூட?” என்று அழைக்கிறான். அவள் எதுவும் கேட்காமல போகிறாள்.

அடபாவி, இட்டிலி காபி வாங்கிட்டுவான்னு நூறு ரூபாத்தாளக் குடுத்திட்டு, அவள மட்டும் எங்கே கூட்டிட்டுப் போறான்? அவள் பதைபதைப்புடன் எழுந்திருக்கிறாள்.

“ஏ கெளவி, உக்காரு! உனக்குத்தா காப்பி. குட்சிக்க!”

“ஐயா எம்பேத்தி அவ. அவள எதுக்கு எங்க கூட்டிட்டுப் போறாரு, உங்க எஸ்.ஐ.? அவள் காபியையும் வெள்ளைச் சீலையையும் மறந்து வெளியே விரைகிறாள்.

ஆனால் அந்தக் காவலன் இவளைப் பற்றிக்கொண்டு வந்து உட்கார்த்துகிறான். “இப்படிக் குந்துங்க. பெஞ்சி போட்டிருக்கில்ல? உங்க பேத்திக்கு ஒண்ணும் ஆவாது; பயப்படாதிய.”

“ஒண்ணும் ஆவாதா? என்னிய இங்க உக்காத்தி வச்சிட்டு...”

மேலே பேசச் சொற்கள் வரவில்லை.

நிலை கொள்ளவில்லை. பார்த்தால் நல்லபிள்ளை மாதிரி இருந்தானே? பாவி? பிணந்தின்னிக் கழுகு கூடப் பார்க்க அழகாகத்தான் இருக்குமோ? அவளுக்குத் துணை நான், எனக்குத் துணை அவள்ன்னு வந்தமே? அழகாயி, இது உனக்கே நல்லாயிருக்கா? நீ இங்க தெய்வமா இல்லியா? ஊரே சூனியம் புடிச்சாப்புல இருக்கு. பஸ்ஸில என்னமோ வெட்டிப் போட்டா, குத்திப் போட்டான்னானுவ...

உடம்பே துடிக்கிறது. அந்தப் பாவத்தில் இருந்து இந்தப் பாவத்துக்கா?

காபியில் ஈ வந்து குந்துகிறது.

அவள் அதையே வெறித்துப் பார்க்கிறாள். கன்னிம்மா, நீதான் அழகாயி. நீ ஆங்காரியாயிடுவ. உனக்காக நான் பயப்படல அழிஞ்சி போயிடுவிங்கடா?...

அவன் மட்டும் தொப்பியைத் தலையில் இருந்து எடுத்துக் கொண்டு குனிந்து உள்ளே வருகிறான்.

இவளுடைய பொங்கல் வெடிக்கிறது.

“ஐயா, எம் பேத்தி எங்க? அவள என்ன பண்ணினிய?... இப்படி நீங்கல்லாம் பொம்புள வெறிபுடிச்சி அலையுற தாலதா நாடு இப்படி ஈரமில்லாத பாலவனமாயிடிச்சி. குடும்பக் கட்டுப்பாடுன்னு, லட்சலட்சமா கருக்கொல பண்ணிப் போட்டீங்க. வெறி அதிக மாயிடிச்சி. அது கொறயல. பூமாதேவி தாங்குவாளா? பாவிங்களா? இந்த மண்ணு, தண்ணி மரம் மட்டை எல்லாம் உங்க ஒழுக்கத்துல தாய்யா துளிக்கணும். அன்னாடம் கொலை, ஆத்தாளே, பெத்தது பொண்ணுன்னா அழிக்கிறா. ரத்தவெறி.”

அவள் கையை அவன் பற்றுகிறான். அழுத்தமாகப் பற்றி உட்கார வைக்கிறான். அவனுக்கும் கை நடுங்குகிறது.

“உணர்ச்சி வசப்படாதீங்க பெரியம்மா. நீங்க சொல்லுற குற்றச் சாட்டுக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது. ஏனுன்னா ஆதிக்கம் செலுத்தும் ஆண்வர்க்கமா பொறந்திருக்கிறேன். உங்க முன்ன வெக்கப்படுறேன், ஆணாப் புறந்ததுக்காக. உங்க பேத்தியால எங்களுக்கு உதவ முடியும். நீங்க காபி குடியுங்க, உங்களைக் கூட்டிட்டுப் போற...”

“எனக்குப் புரியலியே தம்பி, அவ உதவறத என்னாலயும் முடியும். நாந் தப்பாப் பேசிட்ட போல...”

“தப்பாப் பேசல. நாயமாத்தான கேட்டீங்க. இங்கே மூணு நாளக்கு முன்ன ரத்தக்களரி. அழகாபுரத்திலேந்து ஒராம்புள, ஊத்தங்கரை மேச்சாதிப் பொண்ணக் கூட்டிட்டுப் பஸ்ஸிலே போயிட்டான். பஸ்ஸ மறிச்சிப் போட்டு, ஊத்தக்கர ஆளுவ அவங்க ரெண்டு பேரையும் வெட்டிப் போட்டானுவ. தடுக்க வந்தவங்களுக்கெல்லாம் அடி, உதை, பஸ் டிரைவரும் கண்டக்டரும் ஓடிட்டாங்க. ஓடனே அடுத்த நாள், அழகாபுரி ஆளுங்க ராவே புகுந்து ஊத்தங்கரையில அந்த தெருவையே எரிச்சாங்க... போலீசு, நாங்க என்ன செய்ய முடியும்? அழகாபுரில ஒரு தெருவே கைது பண்ணிருக்கிறோம். ஊத்தங்கரைக்காரங்களும்தான்... காபி குடிச்சிக்குங்க... வாங்க...” அவள் அந்தக் காபியை அருந்துகிறாள். பிறகு அவனே அவள் கையைப் பற்றி அழைத்து வருகிறான். வாய்க்காலில் அங்கங்கே முட்செடிகளும், புல்லும் பரவிக்கிடக்கிறது. அதைக் கடந்து அங்கே தெருவுக்குள் நுழைகிறார்கள். எல்லாம் மச்சு வீடுகள்; ஒன்றிரண்டு மாடி வீடுகளாக மாறி இருக்கின்றன. அதைக் கடந்து ஒற்றையாக அரசு கட்டிக் கொடுத்த வீடுகள் ஏழெட்டு தெரிகின்றன. ஒரு வீட்டில் இருந்து யாரோ குழந்தை எட்டிப் பார்த்து விட்டு உள்ளே ஓடுகிறது. ஒரு வீட்டுக்குள் அவளை அவன் அழைத்துச் செல்கிறான். செருப்பில்லாமலே நடந்து பழகிய அவளுக்குக் கால்களில் முள் தைத்தால் வலித்ததில்லை.

குடிசைகளாக இருந்த அழகாபுரி, மச்சு வீடுகளாக இருக்கின்றன. டி.வி. சாதனத்துக்கான உச்சிக் கொடிகள் இருக்கின்றன. உள்ளே... தரையில், பாய்களிலும் கந்தய் சேலைகளிலும் வெட்டுப்பட்டும் குத்துப்பட்டும், தீக்காயப்பட்டும், உடல்கள், சின்ன அறையில் நான்கு பேர். பாதி உயிர் போகும்- போன நிலையில் ஒரு கிழவனுக்கு மூச்சு வாங்குகிறது. ஒரு பிஞ்சுக் குழந்தை. காய்ச்சல் கொதிக்கக் கண் மூடித் துவண்டிருக்கிறது. அதன் தாய், மண்டையில் அடிபட்டுக் கிடக்கிறாள். ஏதோ ஓர் அழுக்குத் துணி இரத்தக்கறையுடன் முடியோடு ஒட்டிக்கிடக்கிறது. பதினைந்து பதினாறு வயசுப் பிள்ளை ஒருவன் கால் ஒடிந்த நிலையில் இருக்கிறான். கிடைத்த துணியைச் சுத்தி இருக்கிறார்கள். கன்னியம்மா, முற்றத்தில் அடுப்பெரிய விட்டு, ஒரு மண் சட்டியில் எங்கிருந்தோ நீர் கொண்டு வந்து சூடு செய்கிறாள். பிறகு, கந்தல் துணிகளை நனைத்து ரத்தக்காயங்களை, அந்தப் பெண் பிள்ளை முகத்தைத் துடைக்கிறாள்.

அவன் ஒன்றும் பேசாமல், அடுத்த வீட்டுக்குக் கூட்டிச் செல்கிறான். அங்கு ஒரு நிறை கருப்பிணி கண் விழிக்காமல் கிடக்கிறாள். ஒரு இளைஞன் கண் விழித்தாலும், பசி, பசி, வலி வலி என்று சாடை காட்ட முடியாமல் முனகுகிறான். கைகள் இரண்டும் கட்டுப் போட்டிருக்கிறான். இரத்த வீச்சம் கப்பென்று மூச்சைப் பிடிக்கிறது. அங்கே ஒரு பெண், நர்சம்மா போல், இரட்டைப் பின்னல் போட்டுக் கட்டிக் கொண்டிருக்கிறாள். இட்டிலியை ஒரு இலையில் வைத்துப் பிய்த்துக் கொடுக்கிறாள்.

“டெட்டால் வாங்கி வரச் சொன்னனே, வரல?...”

“போட்டேன் சார். நாத்தம் இங்கல்ல. வேற பக்கம், பின்னாலேந்து வருது. கோயில் கிணத்திலேந்து தண்ணி கொண்டாந்தார் கான்ஸ்டபிள்.”

“ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போக வண்டி இல்ல. இத இப்ப வரும், அப்ப வரும்ங்கறாங்க... அடிபட்டுக் கிடக்கிற வங்க என்ன சாதி, என்ன ஊரு?...”

“இந்தம்மாதான கவலையாயிருக்குது. குழந்தையின் துடிப்பு வயத்தில் கேக்கல. அதிர்ச்சியா இருக்கிறாங்க. அட்வான்ஸ்ட் ஸ்டேஜ்” அவர் தலையைக் குனிந்து கொண்டு வெளிவருகிறார்.

“உங்க பேத்திய சமயத்தில் கூட்டி வந்தீங்க. நாங்க கலவரத்த அடக்கத்தான் வந்தோம். ஆனா, இந்தப் பாவங்களை எப்பிடி வுட? காக்கிச்சட்டைக்குள்ளயும் மனசு இருக்கு. காக்கி போடாட்டியும் வெறி இருக்கு. சொந்த பந்தம் ஏது என்னன்னு பாராம ஓடுறவங்க ஓடிட்டாங்க. பிடிபட்டுப் போனவங்க, உள்ள. கோர்ட்டு கேசு இருக்கு. ஆனா, இவங்க?...”

அப்போது அங்கே, வயதானவர் ஒருவர், வாயிலில் நிற்கிறார்.

“என்ன, தாயம்மா? நினப்பு இருக்கா?...”

“ஐயா சாமி, இதென்னய்யா கோலம்...?”

“அதெல்லாம் ஒண்ணும் கேக்காதிய. இவுரு எஸ்.ஐ. சொல்லி அனுப்பிச்சாரு, இப்படின்னு வந்திருக்காங்கன்னு. பேத்தியயும் கூட்டிட்டு வந்திருக்கிங்கன்னாங்க. நானும் ஆசுபத்திரிக்கு இவங்களக் கொண்டுட்டுப் போவணும்னு பாக்குற. அவவ... மென்னு முழுங்கறானுவ இருக்கிற லாரி, காரு எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு கட்சித் தலவர் போயிட்டார்னு ஓடுறானுவ...”

அவர் கண்கள் இடுங்க, வியப்புடன் “நீங்க எப்டீம்மா வந்தீங்க?” என்று விசாரிக்கிறார்.

அவள் கையெடுத்துக் கும்பிடுகிறாள். “அதெல்லாம் இப்ப வாணாம் அய்யா. வர்ற வழி எல்லாம் சங்கட்டம். அம்மா வயித்தில இருக்கற குழந்தை, நேரம் வரப்ப எத்தினி சங்கடப்பட்டு வருது? அழகாயி மேல பாரத்தப் போட்டுட்டு வந்தோம். இங்க வந்தது... வெளி உலகக்காத்து, மூச்சு புதுசா வுடுறாப்பல இருக்கு. அய்யா...”

“நா ஒடனே இவன புதுக்குடிக்கு அனுப்பிச்சி, மருந்து கட்டுக் கட்டத் துணி, எல்லாம் கொண்டாரச் சொன்னே. எல்லாரும் கதவப் பூட்டிட்டு ஓடிட்டானுவ புதுக்குடிலகூட தீவைப்பு, அடிதடி...”

குரலைத் தாழ்த்தி “இந்தத் தெருவிலியே, உங்க மகங்கட்சி தாதா ஒருத்தன் இருக்கிறான். போலீசு புடிச்சிட்டுப் போயிருக்கு. வீட்ல பழைய சீலை துணி எல்லாம் தேடிக் கொண்டாந்து போன. ஒரு பொம்புள போலீசு கான்ஸ்டபிள், மல்லிகாபுரம் ஊரு. பொம்புளன்னா, அதுக்கு இயல்பா ஒரு பரிவு, மென்மை இருக்கு. தண்ணி பொதுக் கிணத்துக்கு எவ்வளவு தொலவுக்குப் போகணும்? அந்த காலத்துல வாயக்கால்ல தண்ணி வரும்... ரெண்டு வருச மாச்சி. எல்லா எழவும் அரசியலாக்கிட்டானுவ... நீங்க சொன்னாப்புல சமயத்துக்கு வந்தீங்க...”

மனம் நெகிழ்ந்து போகிறது.

அன்றிரவு கருப்பிணிப் பெண் இறந்து விடுகிறாள். அவள் புருசனும், அவன் தாயும், அவள் சகோதரனுக்கும் சொல்லி அனுப்பி வந்து சேர ஒரு முழு நாளாகிறது. அதற்குள் ஒரு போலீசு வண்டி வந்து, அடிபட்டவர்களை ஏற்றிச் செல்கிறது.

அவளைக் கொண்டு சுடலையில் இறுதிச் சடங்கு செய்வதற்கும் போலீசுதான் முன் நிற்க வேண்டி இருக்கிறது. அவளும் போகிறாள்.

சுடலை, இன்னும் கிழக்கில் இருக்கிறது. முன்பு அங்கே படுகைக்காடு போல் இருக்கும். வாய்க்காலுக்கும், ஆற்றுக்கும் இடையே மூட்டம் தெரியும். இப்போது காடு இல்லை. வாய்க்கால் மூட்டோடு சென்று இறுதி முடித்து ஆற்று மேட்டில் இறங்கி, அங்கே குட்டை போலிருக்கும் தேங்கிய நீரில் குளிக்கிறார்கள். ஈரத்துடன் அவர்கள் வரும்போது, அழகாயி கோயிலின் சுவர் தெரிகிறது. புதிய வண்ணக் கோபுரம்.

முன்பு சுற்றுச்சுவர் கிடையாது. பெரிய திடல் இருக்கும். அதில்தான் பொங்கல் வைப்பதும் உடுக்கடித்துப் பாடும் போதும், கூத்துக்கட்டும் போதும் சனங்கள் கூடி இருப்பார்கள். பின்னாலிருந்த பெரிய வேப்பமரம் இல்லை. வாய்க்காலோரம் இருந்த அரசும் வேம்பும் கூட இல்லை. பிள்ளையார் மட்டும் அநாதையாக இருக்கிறார். அங்காயி சிறைவைக்கப்பட்டாற் போல் சுற்றுச் சுவர், வாயிற் கதவுக்குள் இருக்கிறாள். ஊரே, கோயில் முன் நிற்கக் கால் கழுவ, அவளுக்குத் தெரிந்து, தோண்டப்பட்ட கிணறு, சுற்றுச் சுவருக்குள் சிறைப்பட்டிருக்கிறது. இந்தக்கரைகளில், வீடுகட்ட கடைகால் தோண்டினால் மணல் பரிந்து தண்ணீர் வந்துவிடும். அப்படி உறை இறக்கிய கிணறு...

“அவள் வெளியில் நின்று பார்க்கிறாள்.

சூலத்தை மட்டும், ‘கேட்டுக்கு’ வெளியே யாரோ, அச்சுறுத்துவது போல் நட்டு வைத்திருக்கிறார்கள்.

அப்போதுதான் ஓர் இளைஞர் கூட்டம் அங்கு வருகிறது. எழும்பூர் ரயில் நிலையத்தில் அவள் பார்த்த பெண், இளைஞன். பிறகு மாயவரத்தில் இறங்கி இவர்கள் பஸ்ஸுக்குச் செல்கையில் கூட்டமாகச் சாலையில், முதுகில் சுமைப் பைகளைப் போட்டுக் கொண்டு நடந்தவர்கள்.

அவர்கள் வரும் போதே, வழியில் உள்ள முட்செடிகளை, வாய்க்காலில் படர்ந்த முட்களை அப்புறப்படுத்திக் கொண்டு வருகிறார்கள். ஒருவன் கோயில் முன் நட்ட சூலத்தை அசைக்கிறான். எடுத்து ஒருபுறம் வைக்கிறான்.

“ஆயுத கலெக்ஷன். மூன்று வாள், வேல்கம்பு, இப்ப சூலம்...” என்று கறுப்பாக, உச்சியில் முடி கட்டிக் கொண்டு, கழுத்தில் காமிராவுடன் தெரியும் பெண் இந்தியில் பேசுகிறாள். புரிகிறது.

“காலித்! இத்த நீ தொட்ட, வெட்டிடுவாங்க? அது அப்படியே இருக்கணும்..” என்று சொல்கிறான் போல் இருக்கிறது. ‘காலித்’ என்று பெயருக்குரிய இளைஞன், அந்த சூலத்தைத் தூக்கி ஓங்கி சம்ஹாரம் பண்ணும் பாவனையுடன் பார்க்கிறான்.

“தாயே, அருள்புரி... நாங்கள் இனி அஹிம்சை விரதம் மேற் கொண்டு, இந்த ஆயுதங்களை உன் காலடியில் போடுகிறோம். நீயும் போட்டுவிடு...” என்று ரயிலடியில் பார்த்த பெண் தமிழில் உரக்கச் சொல்கிறாள்.

“என்ன சொல்றா இவ?” என்று மற்றவர் சாடை காட்ட அது, ஆங்கிலம், இந்தி மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகிறது நெஞ்சு நிறைகிறது.

நேராக கன்னியம்மா, கழுவிச் சுத்தம் செய்திருப்பாள் என்று அந்த வீட்டுப் பக்கம் வருகிறாள்.

அந்த வீட்டின் முன், துணிகள் கசக்கிப் போட்டிருக்கிறாள். அவள் வேறு சீலை உடுத்திருக்கிறாள்.

“ஆயா, வாங்க. எங்க குளிச்சீங்க? இத இவங்க பக்கத்து வூடு. உள்ள கிணறு இருக்கு. குளிச்சி, துணியெல்லாம் கசக்கி உலத்திட்டேன். இந்தச் சீல, முன்ன வந்தாங்களே, அவங்க அனுப்பிய மூட்டயில இருந்திச்சி. ஜாக்கெட் அதையே போட்டுட்டேன். உங்களுக்கு ஒரு சீல, ஜாக்கெட் கூட இருக்கு...”

“நப்ப மூட்ட போலீசு டேசன்ல இருக்கு. கன்னிம்மா, அத்தக் கேட்டு வாங்கியாரனும் இல்ல? உன் துணிமணி இருக்கு...?”

“ம்... கேட்டே, அந்த போலீசுகாரரு, அதா நம்ம முதல்ல வெரட்டினாரே, அவுரு “அப்டீல்லாம் தந்திட மாட்டம், அதுக்குள்ள நீங்க வெடிகுண்டு கத்தி வச்சிருக்கீங்களான்னு பரிசீலனை பண்ணிட்டு பிறகுதா தருவம்...”ன்னாரு.”

அந்தப் பக்கத்து வீட்டுக்காரியே அவர்களுக்கு உள்ளே அழைத்து, இலையில் பொங்கிய சோறும் குழம்பும் படைக்கிறாள். “காய் எதும் இல்லம்மா. ஊறுகாய் வேணுமா?”

“வாணாம்மா... இதே நல்லாருக்குது... நீங்கல்லாம் இங்கியே தா இருக்கீங்களா தாயி?”

“ஆமாம்மா. எங்க வூட்டுக்காரர போல்சு புடிச்சிட்டுப் போயிருக்கு. பயம்மா இருக்கு. டி.வி.லயும் சினிமாலியும் காட்டுறாப்புல ஆயிடிச்சி. அந்தப் பைய பெரி படிப்புப் படிச்சா. துபாய்க்குப் போயி, முஸ்லிமாயிட்டான்னு சொல்றாங்க. ஆனா அதெல்லாம் எங்களுக்குத் தெரியலம்மா. வசதிதா. படிச்சிட்ட பயங்க முன்னுக்கு வந்து வசதியாயிட்டாங்க. ஊத்தங்கரையில மேலத்தெரு பொண்ணு, அதும் இதோட பட்டணத்தில படிச்சிச்சாம். அவனக் கட்டுவேன்னு சொல்லிருக்கு. அவப்பா, பெரியப்பா, வியாபாரம், அது நொடிச்சிப் போச்சின்னாலும் வீம்பு. முறைப் பய்யனத்தான் கட்டணும்ன்னிருக்கா. அவ அம்பது சவரன் போடணும்னாளாம். இவுரு வூட்ட வாசல வித்து அவனக் கட்ட நிச்சியம் பண்ணியாச்சி. இவங்க ராவுக்கு ராவே புதுக்குடி போயி, காருல போனாங்கன்னாங்க. ஆளுவ பஸ்ஸில புகுந்து அழகாபுரி ஆளுங்க அஞ்சு பேர வெட்டிப்புட்டாங்க. பொண்ணையும் வெட்டிட்டானுவ...”

அவளுக்குக் கேட்க முடியவில்லை. வாயில் போட்ட கவளம் இறங்க மறுக்கிறது.

இப்பிடி ஒரு சாதிக் கொடுமையா இந்த ஊருல...?

“சாதி எதும் தெரியாமதா இருந்தம் அம்மா. சின்னச் “சாதி, நீ என்னடா?ன்னு வீம்புதான். அன்னிக்குப் படிப்பில்ல, வசதியில்ல. இப்பகூட வசதியில்லாம, பன ஓலக் குடிசயில இருக்குராங்க. தண்ணியில்ல, ஒழவில்ல, பொழப்பில்ல. எடுபட்டுப் போவுதுங்க. கட்டிடம் கட்ட கூலி வேலன்னு. வயசுப் பொண்ணுகள்ளாம் எங்கியோ போயி டவுனில பிழைக்கிதுங்க...தா, காவேரி ஏரிப் பாருங்க! சித்திர வையாசி, மாசி மார்கழி எல்லாம் ஒண்ணுபோலக் கெடக்கு அல்லாம் கச்சிதாம்மா இப்ப”ன்னு முடிக்கிறாள்.

“ஓங்கூட்டுக்காரரு என்ன வேலை செய்தாரு?”

“இஸ்கூல்ல வாத்தியாரு. எங்க மாமா, பெரிய வூட்டு மணியமா இருந்தாங்க. புதுக்குடிக்குப் போய் வருவாரு, பஸ்ல மாட்டிக்கிட்டாரு கேசொண்ணுமில்ல. வுட்டுட்டாங்க. ஆனாலும் கலவரம் முடிஞ்சிச்சி, வந்திருவாங்க...” சாதி, சமயம், கட்சி...

விளக்கு வைக்கும் நேரம். பக்கத்து வீட்டு அகிலாவிடம் எண்ணெய் திரி வாங்கிச் சென்று, கோயிலில் விளக்கேற்றுகிறார்கள். வெளி மாடத்தில் உள்ள அகலில் ஒன்றும், இன்னொன்றைப் பிள்ளையார் முன்பும் கன்னியம்மா ஏற்றுகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=உத்தரகாண்டம்/31&oldid=1022844" இலிருந்து மீள்விக்கப்பட்டது