உமார் கயாம்/29. ஏலத்தில் எடுத்த இசைக் குயில் ஆயிஷா!

29. ஏலத்தில் எடுத்த இசைக் குயில் ஆயிஷா!

அப்பொழுது ஜல்லாலியன் சகாப்தத்தின் ஏழாவது ஆண்டு நடந்து கொண்டிருந்தது. சிரியா தேசத்திலே படையெடுத்துச்சென்ற சுல்தான் மாலிக்ஷா, வெற்றியின் பெருமிதத்துடன் திரும்பி வந்திருந்தார். அந்தப் போரிலே தோற்றுப்போய் பிடிபட்ட அடிமைகளை நிசாப்பூர் அங்காடிச் சந்தையில் அடிமை ஏலம் போடும் கம்பத்தின் அருகில் அடிமை வியாபாரி ஒருவன் ஏலம் போட்டுக் கொண்டிருந்தான். ஏலங் கூவுகிறவன், வெண்கல மணியொன்றை அடித்துக் கொண்டே கூவினான்.

“பிஸ்மில்லா அர்ரஹ்மான் அர்ரஹீம் - அன்பும் அருளும் உடைய ஆண்டவனின் பெயரால் ஏலம் ஆரம்பிக்கப்படுகிறது. குடிமக்களே, கோமான்களே சீமான்களே!” என்று தொண்டை கிழியக்கூவினான். அவன் குரலில் ஒருவேகம் சிறகடித்தது! மானை விலைகூறும் திறமை அது!

பிரபுக்களும், வியாபாரிகளும், கனவான்களும் தனவான்களும் உழவர்களும் குடிமக்களும் தங்களுக்குத் தேவையான எடுபிடி வேலைகளுக்காக அடிமைகளையும், ஆசைக்கிளிகளைத் தேடும் பருவமான்களைப் பிடிக்கக் கோமான்களும் ஏலம் எடுக்க அங்கே வந்து கூடினார்கள். கூட்டம் நெருக்கியடித்துக் கொண்டு கூடியிருந்ததால், ஏலம்போடும் கம்பத்தின் அருகிலே, இடம் ஒதுக்குவது அந்த அடிமை வியாபாரிக்குக் கஷ்டமாக இருந்தது. கம்பத்துக்குப் பின்னாலே அவன் கொண்டு வந்திருந்த அடிமை ஆண்களும் பெண்களும் குழுமி இருந்தார்கள்.

கம்பத்தின் முன்னேயிருந்தமேடையின்மேல் முதல் ஏலப்பொருளாக ஒரு சிறுவனைக் கொண்டுவந்து நிறுத்தினான்.

“பிரபுக்களே! இதோ இந்தக் கிரேக்கப் பையனுக்குப் பதினான்கு வயாதாகிறது. பலம்பொருந்திய உடற்கட்டுள்ளவன். எல்லாப் பற்களும் இருக்கின்றன. நோயும் காயமும் இல்லாத அழகிய உடல், வீணை வாசிக்கப் பழகியவன். இஸ்லாத்திலே சேர்க்கப்பட்டிருக்கிறான். இவனுடைய விலை முப்பது பொன்கள்! யாருக்கு வேண்டும்?” என்று கூவினான்.

யாரும் பதில் சொல்லவில்லை.

“இருபத்தைந்து”

எவரும் கேட்கவில்லை.

“இருபது பொன்கள்!”

“இந்த விலைக்குக் கூர்டியக் குதிரை கூடக் கிடைக்காது” என்று கூறி, அசையாமல் நின்ற அந்தப் பையனின் ஒரு கையைத் தூக்கிக் காண்பித்தான். அவனுடைய இடுப்பிலே சிறிய துணி கட்டப்பட்டிருந்தது. அவனை அப்படியே முதுகுப்புறம் திருப்பிக் காண்பித்தான். உடலிலே எந்தவிதமான பழுதும் இல்லை என்பதைக் கூட்டத்தினருக்குத் தெரியப்படுத்தினான்.

ஆனால், ஏராளமான அடிமைகள் கொண்டு வந்து சந்தையிலே அடிக்கடி விற்கப்படுவதால் விலை குறைந்திருந்தது. இன்னும் போர்க்களத்திலிருந்து வழியில் வந்து கொண்டிருக்கும் அடிமைகள் வந்து சேர்வதற்கு முன்னால், கையிருப்பை விற்றுத்தீரவேண்டிய நிலைமையும் இருந்தது. அந்தக் கிரேக்க அடிமையின் வெள்ளிய தோலின் ஊடே அவனுடைய எலும்பு வரிசை காட்சியளித்தது. அரைப் பட்டினி யாகக்கிடந்த அவன் அவ்வளவு தூரம் மெலிந்திருந்தான். யார் என்ன விலைக்கு வாங்கினாலும் உடனடியாக ஏதாவது தின்னக் கிடைத்தால் போதும் என்றிருந்தது அவனுக்கு.

“குதிரையை இதைக் காட்டிலும் அதிகமான விலைக்கு வாங்கினாலும் பலனுண்டு. இந்தப் பலமில்லாத இளைஞன் எதற்குப் பயன் படுவான்? அவனுக்கு நம் மொழியும் தெரியாது. எடுபிடி வேலைக்குக்கூட இந்த வயதில் இவன் பயன்பட மாட்டானே? பதினொரு பொன் தருகிறேன்” என்று ஒரு பருமனான பாரசீகன் கூட்டத்திலிருந்து முன்வந்தான்.

“பதினொன்றா? ஐயோ அல்லா இந்த மத விரோதி இல்லையில்லை - இந்த முஸ்லிம் இளைஞனுடைய உடலில் நல்ல இளம் ரத்தம் ஓடுகிறது. ஒரு மாட்டின் மதிப்புக்கூட இவனுக்கு இல்லையா? கனவான்களே, வெறும் பதினொரு பான்னுக்கு இவன் விலையாவது உங்களுக்குச் சம்மதந்தானா?”

“இந்தக் கிரேக்கச் சிறுவனைக் காவலுக்கு வைத்துக் கொள்ளலாமென்றால் ஈட்டியைத் தூக்கக்கூடிய பலம்கூட இருக்காது போலிருக்கிறதே! சரி பரவாயில்லை, பனிரெண்டு பொன்கள்!” என்றான் மற்றொரு வியாபாரி.

“பனிரெண்டு பொன் - இரண்டு பணம்” என்று குறுக்கிட்டது இன்னொருவன்.

தன்னுடைய முதல் ஏலமே இவ்வளவு மோசமாகப் போவதை எண்ணி ஏலவியாபாரி எரிச்சல் பட்டான். “நீங்கள் என்ன ஏலம் எடுக்கிறீர்கள்? எனக்குப் பிச்சை போடுகிறீர்களா? என்று ஆத்திரத்துடன் கேட்டான்.”

“பாக்தாதிலே இது மாதிரிச் சிறுவர்கள் பத்துப் பொன்னுக்கும் குறைவாகவே கிடைப்பார்கள். உனக்குத் தானம் கொடுப்பதாகவே நினைத்துக்கொள். பனிரெண்டு பொன் நான்கு பணம்” என்றான் முதலில் கேட்ட பாரசீகத்தான்.

கடைசியாக ஒரு வியாபாரி அந்தச் சிறுவனைப் பதின்மூன்று பொன்னும் மூன்று பணமும் கொடுத்துவிட்டுக் கூட்டிக் கொண்டு போனான். அடிமைகள் வரிசையிலே உட்கார்ந்திருந்த கொலுசு அணிந்திருந்த அபிசீனியாக்காரி, பக்கத்தில் இருந்த பெண்ணிடம், தாங்களும், மிகக் குறைந்த விலைக்கே விற்கப்படக் கூடும் என்று கூறினாள்.

“இப்பொழுது விலை மிகக்குறைந்து போய்விட்டது. ஒரு தடவை சய்யித் என்பவர் என்னை முந்நூறு பொன் கொடுத்து வாங்கினார்” என்றாள் அவள்!

“அம்மா தாயே! அது நீ என்னைப் போல் சிறுமியாக இருந்த காலத்தில் இருந்திருக்கலாம்!” என்று அந்தச் சிறுமி கூறினாள்.

“இந்த ஊர்க்காரர்களைக் காட்டிலும் துருக்கியர்கள் பரவாயில்லை. பேரீச்சம் பழ வியாபாரம் செய்தாலும் இப்படிக் கருமிகளாக இருக்க மாட்டார்கள்” என்று அபிசீனியாக்காரி கூறிவிட்டு, “நூறு பொன்னுக்குக்கூட நீ விலைபோக மாட்டாய்!” என்றாள் கேலியாக.

அயீஷா என்ற அந்தப் பெண் தன் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு யோசித்தாள். அப்படி அவள் கால்களை மடித்து உட்கார்ந்து இருந்ததே ஒரு கவர்ச்சியாக இருந்தது. அவளுக்கு முத்துப்பற்களும் இளமையின் கட்டும் இருந்தது. பாரசீகத்தார் கண்களுக்கு வத்தலாகத் தெரியும் படியான உடல்தான்! இருந்தாலும், அதிகம் மெலிவல்ல; புதுமாதுள மொக்குபோல. அவள் ஹவுரானிலுள்ள பானுசாபா நகரத்தைச் சேர்ந்த அரபியப் பெண். அவளுடைய நிறம் பாரசீகத்துப் பெண்களின் நிறம்போன்ற வெளுப்பில்லாவிட்டாலும் அபிசீனியாக்காரியின் உடையதைப் போலக் கருப்பும் அல்ல. இந்தச் சந்தை ஏலத்துக்கு வராமல் தனி ஏலத்தில் விடப்படுவதாக இருந்தால் யாராவது ஒரு பிரபு அவளை விரும்பி வாங்கலாம். ஆனால்,

அபிசீனியாக்காரி தன் இளம் வயதிலிருந்தே அடிமையாக இருந்தே பழக்கப்பட்டவள். இந்த புத்திளம் அயிஷாவோ அப்படியல்ல. எவனாவது ரொட்டிக் கடைக்காரன் அவளை ஏலத்துக்கு எடுத்து அவளைத் தினசரி ரொட்டி அவிக்கச் சொல்லியும், கடினமான வேலைகளைக் கொடுத்தும் கஷ்டப்படுத்தி, விட்டு அதன் பிறகும் தன் ஆசைக்கிழத்தியாகவும் வைத்துக்கொள்ள நேர்ந்தால்.... அவளுக்கு வருத்தமாக இருந்தது.

“ஆண்டவனே, என்னை அப்படி விட்டுவிடாதே” என்று வேண்டிக் கொண்டாள்.

“பெண்ணே நீ வருத்தப்பட்டு என்ன செய்வது? உன் உடல் உழைப்பை வைத்துத்தான் உனக்கு விலையை வைப்பார்களே தவிர உன் அழகை வைத்து அல்ல. உழைப்புக்கு எந்த விலை மதிப்பு உனக்கு ஏற்படுமோ அதற்கு விற்கப்படப்போகிறாய். இதிலே எந்த விலைக்குப் போனால் என்ன? அடிமை அடிமைதான். காய்ந்த மரத்திலிருந்து கனியா கிடைக்கும்? என்று கூறி ஆயிஷாவின் நெற்றியில் ஆடிக்கொண்டிருந்த குட்டை மயிர்களை ஒதுக்கிவிட்டடாள். “இதோ பார்! அர்மேனியர்கள் இருவரும் இருபது பொன்னுக்குப் போயிருக்கிறார்கள். இது என்ன காலமோ?” என்று வியப்படைந்தாள்.

அயீஷா, முன்னொருமுறை பாக்தாதிலே விற்கப்பட்டிருக்கிறாள். இருப்பினும் பாலைவனப் பகுதியிலே பிறந்த அவளுடைய கடுமையான சுதந்திர வேட்கை அவள் உள்ளத்தைத் துன்புறுத்தியது. தன் முக்காட்டுத் துணியின் ஒரத்தின் வழியாக சுற்றிலும் கூடியுள்ள வாங்குவோர் கூட்டத்தைப் பார்த்தாள். தெருவில் பிறந்த வெறி நாய்கள் என்று வைதாள். பிறகு, எதுவும் பேசாமலே உட்கார்ந்திருந்தாள்.

குதிரையின்மேல் வந்த ஒருவன் கூட்டத்தின் கடைசியில் வந்து நின்றான். அந்தக் கூட்டத்தில் இருந்தவர்களுக்கும் அவனுக்கும் வேற்றுமையிருந்தது. அவனுடைய பாகையின் மத்தியில் பச்சைக்கல் ஒன்று ஒளி வீசிக் கொண்டிருந்தது. அங்கிருந்த அனைவருக்கும் அவன் நன்றாகத் தெரிந்தவனே . மிகுந்த புகழ்வாய்ந்தவனே என்பது அந்தக் கூட்டத்தினர் அனைவரும் மரியாதையுடன் அவனைத் திரும்பிப் பார்த்ததிலிருந்து தெரிய வந்தது. அரசரின் வானநூல் ஆராய்ச்சியாளராகிய நம் உமார்தான்!

அயீஷா அவனைக் கண்டதும், அவன் மிகுந்த அதிகாரமுள்ள அரசாங்கத்து உத்தியோகஸ்தன் என்று எண்ணினாள். அடத்தியான புருவங்களின் கீழே கழுகுப் பார்வையுடைய இரு கண்களும் கடுமையான முகமும் உடைய அவனுக்கு வயது சுமார் முப்பது இருக்கலாம். அயீஷா ஒரு நீண்ட பெருமூச்சு விட்டுக்கொண்டே, எழுந்திருந்தாள்.

“ஏ, பெண்ணே! உட்கார். உன் முறை இன்னும் வரவில்லை!” என்று காவற்காரன் கடுமையாக அதட்டினான். ஆனால், அயீஷாவோ அவன் கைக்குக் கீழே குனிந்து திடீரென்று பாய்ந்து வழியில் இருந்த மனிதர்களை விலக்கிக்கொண்டு மருண்டோடும் மான்போல விரைந்தோடி அந்தக் குதிரை வீரனின் அருகிலே சென்று அவனுடைய குதிரைச் சேணத்தைப் பிடித்துக் கொண்டாள். “ஏழைகளின் பாதுகாவலனே! என்னைக் காப்பாற்றுங்கள் நான் பானு சாபா நகரத் தலைவனுடைய மகள். பாருங்கள் என்னை இந்தப் பொதுச் சந்தையிலே கொண்டு வந்து சாதாரண அடிமைச் சிறுவர் சிறுமிகளோடு ஏலம் போடுகிறார்கள். என்னைத் தாங்கள்தான் காத்து, அருள் புரிய வேண்டும்” என்று அடிபட்ட கிளிபோல விம்மினாள்.

தான் பேசிய அராபிய மொழியை அவன் புரிந்து கொண்டிருக்க வேண்டுமே என்ற வேட்கையோடு அவனைப் பார்த்தாள். முக்காடு கீழே விலகி விழும்படி நழுவ விட்டாள். அவள் உதடுகள் அவனுடைய கருணைக்காக ஏங்கித் துடிதுடிப்போடு அசைந்தன. வேண்டுகோளும் உணர்ச்சியும் கலந்த அவளுடைய கரிய விழிகளை உமார் கண்டான். அவளுடைய அழகிய கழுத்தின் வளைவையும், மெல்லிய தோளின் சதைப் பிடிப்பையும் அளவிட்டான்.

உமார் அவளுடைய மொழியைப் புரிந்து கொண்டான். ஆனால், அந்தக் கன்னங்கரிய விழிகளைக் காணும் போது. அவனுக்கு பத்தாண்டுகளுக்கு முன் இறந்த தன் ஆசைக் காதலி யாஸ்மியின் நினைவு வந்தது, அந்தக் கருவிழிகளில் தன்னுடைய யாஸ்மியின் விழிகளைக் கண்டான். அப்படியே தன்னை மறந்து பித்துப் பிடித்தவனைப்போல் ஆகிவிட்டான்.

ஏல வியாபாரி, கூட்டத்தை விலக்கிக் கொண்டு அவசரம் அவசரமாக வந்தான். அவளுடைய தோளை உலுக்கிக் கொண்டே, “பெட்டைச் சிறுக்கியே; போ! உன் இடத்துக்கு” என்று எரிந்து விழுந்தான். பிறகு, உமாருக்குச் சலாம் இட்டு, “குவாஜா அவர்களே, தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் இந்தச் சிறுக்கியின் குணம் அப்படி” என்றான் ஒருவிதத் தாழ்மையோடு.

அயீஷா, இன்னும் குதிரைச் சேணத்தை விடாமல் பிடித்த பிடியாக நின்று, தன் வழுவழு கன்னத்தை உமாரின் முழங்காலிலே, தேய்த்துச் சாய்த்துக் கொண்டிருந்தாள்.

“அவளுடைய விலை என்ன? எதுவாக இருந்தாலும் அவளுக்காக நான் நூறு பொன் தருகிறேன்!” என்றான் உமார். ஒருவித ஆசைக் கிறுகிறுப்போடு.

ஏல வியாபாரி, குவாஜாவின் பலவீனத்தைப் புரிந்து கொண்டான். இந்த விலையைக் கேட்டதும், மனங்குளிர்ந்து போய் விட்டது. இந்த விலைக்கு எந்த அழகுப் பெண்ணையும் விற்கக்கூடிய சந்தை நிலவரமில்லை என்பதையும் அவன் அறிவான். அப்படியிருக்க இந்தச் சோனியை இந்த லாபத்தோடு நிறைவு காண அவன் மனம் எண்ணவில்லை. பலவீனத்தைப் புரிந்த அவன் லாபம் அடைய வேண்டும் என்ற பேராசை கொண்டான்.

மேடையைச் சுற்றியிருந்த கும்பல் உமாரைச் சுற்றிக் கொண்டது. அந்தக் கும்பலிலே இருந்த தன்னுடைய கையாள்களுக்கு, ஏல வியாபாரி கண்சாடை காட்டினான். கண் சாடையைக் காட்டி அவர்களை விலையை உயர்த்தும்படி உணர்த்திவிட்டுக் கும்பலைப் பார்த்துப் பேசத் தொடங்கினான். “அல்லாவின் திருவருளில் அழியாத நம்பிக்கை கொண்டவர்களே! அழகில் ஒப்பும் உயர்வுமற்ற இந்த இளம் பருவப் பெண்ணுக்கு நூறு பொன்தான் விலையா? மின்னல் கொடி போன்ற இடையும் புள்ளிமான்போல் மருண்டு நிற்க இந்தப்புது மானின் அள்ளும் பார்வையையும் குயில் போன்ற குரலும், புல்புல் பாடகி போன்ற இசை நுட்பம் கொண்டு, துன்பம் நேர்கையில் பூங்கொடியான அவளுக்கு நூறு பொன்தான் பெறுமதியா” என்று நீதிபதியிடம் நியாயம் கேட்பவன் போலப் பொதுமக்களை நோக்கிக் கேட்டான். “இதற்கு மேல் யாரும் கேட்கவில்லையா?” என்று கூறித் தன்னுடைய கையாளை நொக்கினான்.

விலையை உயர்த்தி விடுவதற்காகவே கூட்டத்தின் இடையில் இருந்த அந்த மனிதன், நூற்றுப்பத்துப் பொன்” என்று கூவினான்.

நெடுநேரம் அங்கே நிற்கவும், ஏலம் கேட்டுக் கொண்டிருக்கவும் விரும்பாத உமார் கயாம், “சரி இரு நூறு பொன் தருகிறேன்! பிறகு என் வீட்டிலே வந்து வாங்கிக் கொள். நான் இவளைக் கூட்டிக் கொண்டு போகிறேன்” என்று ஆவேசத்தோடு கூறினான்.

எழுபது பொன்னுக்கு ஏலத்தில் விடுவதே அரிய காரியம். அந்தப் பெண்ணுக்கு இருநூறு பொன் விலை கிடைக்கிறது என்றவுடன், ஏலவியாபாரி திடுக்கிட்டுப் போனான். “மத நம்பிக்கையுள்ள மக்களே நம்முடைய அரும் பெரும் தலைவரான இந்த கனவானுக்கு எவ்வளவு தாராள மனப்பான்மை! எத்தனை தேர்ச்சி எவ்வளவு கலை ஞானம் மிகுந்தவர் என்று பார்த்தீர்களா? இப்பொழுது, பாடும் குயிலான அயீஷா என்ற அடிமைப் பெண்ணை குவாஜா உமார் அவர்களுக்கு இரு நூற்றி. என்று இழுத்தவன் “மீண்டும் கூட இருபது பொன் கொடுத்தால் மசூதிக்கு ஐந்து பொன்னும் மீதிப் பதினைந்து பொன் எனக்கு ஏதாவது சில்லறைச் செலவுக்கும் பயன்படும். தாராள மனப்பான்மையுள்ள பிரபுவே, “இந்தப் பாடும் அழகியைக் கொண்டு செல்லப் பல்லக்கு வேண்டுமா? பாதுகாவலுக்கு ஆப்பிரிக்க அடிமைப் பையன் வேண்டுமா?’ என்று தன் வியாபாரத் புத்தியைக் காட்டத் தொடங்கினான்.

உமார், இவனுடைய பேச்சுக்கெல்லாம் காது கொடுக்காமல் தன் பின்னால் வேறொரு குதிரையில் தொடர்ந்து வந்த வேலைக்காரனைக் கீழே இறங்கச் சொன்னான். அவன் இறங்கியதும், அந்தக் குதிரையின் மேல் அயீஷா ஏறிக் கொண்டாள். சேணத்தில் உட்கார்ந்த பிறகுதான் பிழைத்தோம் என்ற மன அமைதி ஏற்பட்டது. கடைசியில் பேரம் பேசுகையில் ஏதாவது தகராறு வந்து வேறு எவனுக்காவது விற்கப்பட்டு விடுவோமோ என்று கலவரத்தோடு பயந்திருந்தாள். அவள் முகந்தெரியும்படி திறந்திருந்த முக்காட்டை உமார் இழுத்து முடினான்.

அவள், மிகுந்த மரியாதையுடன் தலை குனிந்து கொடுத்தாள். இப்பொழுது, அவள் உமாரின் முழு உடைமையாகி விட்டாள். குதிரைகள் நடக்கத் தொடங்கிய பொழுது, பெருமிதத்துடன் திரும்பி அந்தக் கால் கொலுசு போட்ட அபிசீனியாக் காரியைப் பார்த்துக் கொண்டே சென்றாள் அயீஷா.

“பெண்ணே! நிஜமாகவே, நீ பானுசாபா நகரத் தலைவனுடைய மகள்தானா?” என்று உமார் திரும்பவும் கேட்டான்.

குழைவுடன், தன் பவழ உதடுகளிலே ஒரு சிறு குறுநகையைத் தவழவிட்டபடி அவள் நன்றியுள்ள நாயொன்று தன் தலைவனைப் பார்க்கும் வாஞ்சையுள்ள பார்வையுடன் கொஞ்சலாக உமாரை நோக்கி, “ஐயா, தங்கள் கருணையைப் பெறுவதற்காகப் பொய் கூறினேன். மன்னித்துவிடுங்கள். ஆனால் உண்மையாக நான் நன்றாகப் பாடுவேன்!” என்று விம்மும் குரலில் கூறினாள்.

உமார் ஒன்றும் பேசாமல் தனக்குள் மெதுவாகச் சிரித்துக் கொண்டான்.

அழகிய இந்தச் சிறு பெண் நெஞ்சின் ஆழத்திலிருந்து உண்மை பேசுவதைக் கண்டு ஆனந்தங்கொள்ளும் மகிழ்ச்சிப் புன்னகை புரிந்தான். அதைக் கண்டு அழகி அயீஷாவின் மனம் ஆயிரம் முறை நன்றி கூறிக்கொண்டிருந்தது!

நிசாப்பூரிலிருந்து இரண்டு நாள் பயணம் செல்ல வேண்டிய தூரத்திலே, குன்றுப் பிரதேசத்திலே காசர் குச்சிக் அரண்மனை யிருந்தது. அந்த அரண்மனை மிகச் சிறியதாக இருந்தது. என்றாலும் அழகிய தோற்றத்துடன் விளங்கியது. ஒரு மலைத் தோட்டத்தின் நடுவிலே அமைக்கப் பட்டிருந்த அந்த அரண்மனையின் எதிரில் சமவெளி பரவிக் கிடந்தது. அழகிய நீல ஓடுகள் வேய்ந்த அந்த அரண்மனையில், அயீஷாவுக்கு என்று தனியாக ஓர் அறை கொடுக்கப்பட்டது. அந்த அறையில் இருந்தபடி உப்பரிகைக்குப் போவதற்கும் வழியிருந்தது. அயீஷா அங்கு வந்ததற்கப்புறம் தனிப் பறவையான தன்னிடம் தன்னை விலைக்கு வாங்கிய நாள் முதல் இன்று வரை தன்னுடன் ஒருநாள் கூட இன்பம் அனுபவிக்க வரவில்லையே என்று வியப்பாயிருந்தது!

அதன் காரணமும் அவளுக்குப் புரியவில்லை ஆனால், பிறகு, பரம்பரை வழக்கப்படி ஒரு மாதம் கடந்த பிறகு, அவன் தன்னை அணுகலாமென்று எண்ணி மனத்தை சமாதானப்படுத்திக் கொண்டாள். அந்தக் காலத்தில் அந்தப் பகுதியில் ஒரு அடிமைப் பெண்ணைக் கூடுவதற்குச் சில மதச் சடங்குகள் செய்து ஒரு மாதத்திற்குப் பிறகே கூடுவது வழக்கமாயிருந்தது.

ஆனால், படைவீரர்கள் தங்களிடம் பிடிபடும் பெண்களை அவ்வப்பொழுதே அனுபவித்துப் போரினால் எற்பட்ட இரத்தக் கொதிப்பைத் தணித்துக் கொள்வதும் உண்டு. ஒரு மாதம் வரையில் அவர்களால் காதல் வேகம் தாங்கமுடியாது! வைதிக நம்பிக்கையுடையவர்கள் மட்டும் ஒரு மாதம் சென்ற பிறகே அந்தப் பெண்களோடு சேருவார்கள். உமாரும் அதற்காகத்தான் தன்னிடம் நெருங்கவில்லை என்று அயீஷா எண்ணிக் கொண்டாள்.

முதன் முதலிலே, அரண்மனை முழுதும் சுற்றிப்பார்த்த அயீஷா, அங்கு தன்னைப்போல் வேறு பெண்கள் யாருமே இல்லை என்று தெரிந்து கொண்டு சந்தோஷப்பட்டாள். சுலெய்க்கா என்ற சமையல்காரியை விசாரித்தபொழுது அவள் “தலைவருக்கு வேறு மனைவிகள் யாருமே கிடையாது” என்று சொன்னாள்.

மேலும் “அவர் ஏற்கெனவே திருமணம் செய்து ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு வரும்பொழுது, அவள் வழியிலேயே கொள்ளை நோயால் இறந்து போய்விட்டாள்” என்றும், “சில சமயங்களில் ஆட்டக்காரிகளான பொது மகளிர் சிலரைக் கூட்டிக் கொண்டு வருவார். பிறகு பிடிக்காமல் சிறிது நேரத்திலேயே ஏதாவது பொருள் கொடுத்து வெளியில் விரட்டி விடுவார்!” என்றும் சில சில விவரங்கள் கொடுத்தாள்.

தன்னைப் பொருள் கொடுத்தோ, கொடுக்காமலோ விரட்டிவிடக்கூடாதென்று அயீஷா மனதிற்குள்ளேயே ஆண்டவனைப் பிரார்த்தித்தாள். உண்மையில் அவர் தன்மீது கருணை வைத்தே தன்னை விலைக்கு வாங்கினாராகையால் அந்த ஆடல் மங்கையரின் கதி தனக்கு வராதென்று மனத்தைச் சமாதானப்படுத்திக் கொண்டாள். எல்லாவற்றுக்கும் மேலாக அந்த அரண்மனையை அவளுக்கு மிக மிகப் பிடித்திருந்தது.

உண்மையில் உமார் தன் பழைய காதலியின் நினைவின் ஏக்கப் பிரமையிலேயே அன்போடு வாங்கியிருப்பதை அவள் எப்படி அறிவாள்?

அயீஷாவுக்கு அந்த அரண்மனை மிகவும் பிடித்துவிட்டது. உமாரையும் அவளுக்குப் பிடித்து விட்டதால், அந்த அரண்மனையும் அவளுக்குப் பிடித்துவிட்டது.

அந்த அரண்மனைப் புறத்தில் இருந்த தோட்டத்தில், குளிர்ந்த நிழல் மரங்களின் ஊடே வளைந்து வளைந்து ஓர் ஒடை சென்று கொண்டிருந்தது. அந்த ஓடை, சற்றுத் தூரத்தில் இருந்த சிறு குட்டையில் போய் விழுந்தது. எங்கும் வெள்ளை ரோஜாக் கொடிகள் எழும்பிப் படர்ந்திருந்தன. சுவர்களின் மேல் கூட அவை சுற்றிப் படர்ந்திருந்தன.

தோட்டத்தின் ஒரு மூலையிலே, வனதேவதையின் வஸந்த விஹாரம் போல் ஒரு சிறு கட்டிடம் இருந்தது. ஆயீஷா அங்கே சென்று, பட்டு மெத்தை தைத்த நாற்காலிகளிலே உட்கார்ந்தும், உல்லாசமாக ராணிபோல சாய்ந்து கொண்டும், மனசுக்குப் பிடித்த இனிப்புப் பலகாரங்களைத் தின்றுகொண்டும், வேடிக்கையாக நீருற்றின் நீர்ச் சிதறல்களைக் கவனித்துக் கொண்டும், ஆசைப் பெருமூச்சோடு தன் நகங்களுக்கு மருதோன்றிச்சாயம் பூசிக்கொண்டும் தன்னுடைய பொழுதைக் கழித்து வந்தாள். தான் என்றென்றும் காசர் குச்சிக் அரண்மனையிலேயே இன்பமாக இருக்கலாம் என்றுதான் ஆயீஷா எண்ணிக் கொள்வாள்.

“இந்த அரண்மனை அவருக்குச் சொந்தமான எத்தனையோ அரண்மனைகளில் ஒன்று. நம் தலைவருக்கு, நிசாப்பூரிலேயும், மெரில் நகரத்திலேயும், சுல்தானின் அரண்மனைக்கு அருகிலேயும் அரண்மனைகள் இருக்கின்றன. இவை தவிர, விஞ்ஞான ஆராய்ச்சிக்காக விண் மீன் வீடு என்ற ஆராய்ச்சி வீடு ஒன்றும் இருக்கிறது. அங்கே, தாடி நரைத்த பெரிய பெரிய படிப்பாளிகளிலெல்லாம் தன் தலைவருக்குக் கீழே வேலை செய்கிறார்கள். இவருடைய மேற்பார்வையில் அவர்கள் பெரிய பெரிய புத்தகங்களை உண்டாக்குகிறார்கள்” என்று கலெய்க்கா அபூர்வமாகச் சொன்னாள்.

“ஆ! என்ன, புத்தகங்களா!”

“ஆம்! புத்தகம் என்றால் நம் தலைவருக்குப் பேரீச்சம் பழம் மாதிரி மிகச் சாதாரணம்! அவ்வளவு இஷ்டம். சுல்தானுக்காக அவர் செய்த புத்தகங்களிலே ஒன்று அடையாள முறைக் கணிதம்.”

“அப்படி யென்றால்...?

“அடையாளமுறைக் கணிதம் என்றால் அது ஒரு மாயக் கணக்கு. மேலும், இதுவரை நடந்த விஷயங்களும், இனிமேல் நடக்கப்போகிற விஷயங்களும், ஆண்டவன் மனத்திலே இருக்கிற அத்தனை விஷயங்களும் அறிந்துசொல்லக்கூடிய அறிவு நம் தலைவருக்கு இருக்கிறது. முதிர்ந்த அனுபவமும் வயதும் உடைய உலக அமைப்பாளரான முதல் அமைச்சருக்கிருக்கக்கூடிய அத்தனை அதிகாரங்களும் நம் தலைவருக்கும் உண்டு! நம் சுல்தான் அவர்களுக்குப் படை வீரர்கள் என்றால் மிகப்பிரியம். அதற்கும் மேலாக அவர் விரும்புவது வேட்டையாடுவது. ஆனால், நம் தலைவரிடம் மிகமிக அதிகமான பிரியம் வைத்திருக்கிறார். ராஜாங்க விருந்துகளிலே, படைத் தலைவர்களுக்கும், மேலான இடத்தில் இவருக்கு இடங்கொடுத்துச் சிறப்புச் செய்கிறார்கள்.

போர் படையெடுப்பு, வேட்டை இவற்றிலே ஈடுபடும் மனிதர்கள் மிகுந்த தேகபலம் வாய்ந்தவர்களாயிருப்பார்கள். அவர்கள் பெண்களைத் தங்கள் பொழுது போக்குக்காகவும், பிள்ளை பெறுவதற்காகவுமே பயன்படுத்திக்கொள்வார்கள். அதிகாரம் எவ்வளவு பெரிதோ, அவ்வளவு அழகான மனைவிகளும் அதிகமான மனைவிகளும் அந்த மனிதனிடம் நிறைந்திருப்பார்கள்!

இப்படியாக ஆயிஷா எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது சுலெய்க்கா மேலும் அரசாங்க விருந்துகளைப்பற்றிக் கூறத் தொடங்கினாள். ஆயிஷா, தன் அடுப்படி விவகாரங்களில் தலையிடுவதை விரும்பாத அவள், வந்தது முதல் அடுப்படியில் தலையிட நினைக்கவில்லை என்று அறிந்து கொண்டபடியால், இப்பொழுது மிக தாராளமாகப் பேசத்தொடங்கினாள். “இதோ பார், சின்ன எறும்பின் புற்றிலே ஒரு நீர்த்துளி விழுந்தாலும், அது வெள்ளப் பெருக்காகத் தோற்றமளிக்கும். ஆனால், அங்கே அரண்மனையிலே விருந்து நடக்கும் பொழுது இராட்சதர்களுக்காகப் போவதுபோல மது குடங்குடமாகப் போகும் வறுத்த புறாக்கறியும், மான்கறியும், சோறும், கூழும், பழவகைகளும் அதுவும் இதுவும் எத்தனை எத்தனையோ? அரண்மனை விருந்தென்றால் சொல்லவா முடியும்? எவ்வளவு போனாலும், அங்கே சிறுதுளிபோலத்தான்! நன்றாக விருந்து சாப்பிட்டுவிட்டு, இரவிலே பேசத் தொடங்குகிறவர்கள் விடிந்து நட்சத்திரங்கள் மறைகிற வரையிலே பேசிக் கொண்டே யிருப்பார்கள்!”

“ஆமாம்! பெண்களை விருந்துக்கு அழைக்கமாட்டார்களே? பெண்கள் இல்லாவிட்டால் என்னதான் அப்படி விடிய விடியப் பேசுவார்கள்?”

“அதென்ன அப்படிக் கேட்கிறாய்? பேசுவதற்கா அவர்களுக்கு விஷயமில்லை? என்னென்னவோ கொள்கைகள், கோளங்கள், கீளங்கள் என்று பேசுவார்கள். அதெல்லாம் மிகச் சக்தியுள்ள சொற்கள். என் மூளைக்கு எட்டாத விஷயம்!”

சுலெய்க்கா சொல்லும் இந்த அதிசயமான விஷயங்களெல்லாம் தனக்குப் புரியவில்லை என்கிறபோது, அரசாங்க விஷயங்கள் மூளையைக் குழப்பத்தான் செய்யும் என்று அயீஷா நினைத்தாள்!

பொதுவாகத் தன் இனத்துக்கும்; இந்தப் பாரசீகர்களுக்கும் மிகுந்த வேற்றுமை இருக்கிறதென்பதைத் தெரிந்துகொண்டாள். பாரசீகர்கள் எல்லோருமே அரைக் குருடாக இருக்கும் அரண்மனை வாசல் காவல்காரன் முதல் - அடிக்கடி வெள்ளைக் கழுதையின்மேல் ஏறிவரும் கூனல் முதுகன் வரை - அனைவரும் தாங்கள் வேலை செய்வதைக் காட்டிலும் அதிகமாகத் தூங்குகிறார்கள் - தூங்குவதைக் காட்டிலும் அதிகமாகப் பேசுகிறார்கள் - அந்த வகையிலே இந்த சுலெய்க்காவும் சேர்ந்தவள்தான் - இவர்களையெல்லாம் சவுக்கடி கொடுத்து வேலை வாங்குவதற்கு ஒரு கண்காணி இருந்தால் தேவலை என்று அயீஷா எண்ணினாள்.

அந்தத் தோட்டத்தில் வேலைசெய்வதற்குத் தோட்டக்காரர்கள் மட்டும் இருபதுபேர் இருந்தார்கள்! இருந்தும் அவர்கள் பெரும்பாலும் கூட்டமாக உட்கார்ந்து தோட்ட வேலைகளைப் பற்றியும் தங்களைப்பற்றியும் பேசிக் கொண்டிருப்பார்களே தவிர, வேலை பார்ப்பது இல்லை. அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும் என்பார்கள். ஒருவன் அந்த இடத்தைக் கொத்திப்போடு என்பான், மற்றொருவன் அது என் வேலையல்ல. அகமதுவின் வேலை என்பான். அகமது எங்கே என்றால், உடம்புக்கு முடியவில்லை, வேலைக்கு வரவில்லை என்பான். கொத்திப் போடாவிட்டால், தலைவர் கோபப்படுவாரே என்றால், நானே கொத்துகிறேன், இன்று என்னைத் தொந்தரவு செய்யாதே நாளைக்குச் செய்து விடுகிறேன் என்பான். ஆனால், நாளை அவன் வந்து வேறொருவனை ஏவுவான்.

இப்படியாகப் பேசிப் பேசிக் கழித்துவிட்டுக் கடைசியாகச் சிறிது நேரம் ஏதாவது வேலைசெய்வார்கள். உடனே களைப்பு வந்து விடும். ஒடைக்கரையில் உள்ள குளிர்ந்த மரநிழலில் துண்டை விரித்துப் போட்டுத் தலைக்குக் கையை வைத்துக்கொண்டு தூங்குவார்கள். இவற்றையெல்லாம் இந்தச் சிறுத்தைக் குட்டி உப்பரிகை மேலேயிருந்து பார்த்துக்கொண்டேயிருப்பாள். அயீஷாவை அடிமைச் சந்தையிலிருந்து, அரண்மனைக்குக் கூட்டி வந்த வேலைக்காரன் அவளுக்குச் சிறுத்தைக்குட்டி என்று பெயர் வைத்தான்! ஆகவே வேலைக்காரர்கள் அவளைக் குறிப்பிடும்போது சிறுத்தைக்குட்டி என்றே கூறுவார்கள்.

கவனிக்காமல் கிடந்தாலும் தோட்டத்திலே ரோஜாச்செடி நன்றாக அடர்ந்து படர்ந்து கிடந்தது. அந்தப் படுகையின் நிழலிலே படுத்து அறைகுறையாகத் தூங்குவதிலே அவளுக்கு ஓர் ஆனந்தம். உமார் இல்லாத பொழுது ஆயீஷாவுக்கு இதுவே பொழுது போக்கு:

ஒருநாள், உமாரின் குதிரை தூரத்தில் வரும் பொழுதே, காவல்காரன் தன்னுடைய உத்தியோக உடையையணிந்துகொண்டு, தன் வேலையில் அதிக அக்கறையுடன் நிமிர்ந்து நிற்பதையும், தோட்டக்காரர்கள் அனைவரும் ஏதோ வேலையில் ஈடுபட்டு இருப்பதுபோல் பாசாங்கு செய்வதையும், நோய்வாய்ப் பட்டிருந்ததாகச் சொல்லப்பட்ட அகமது என்பவன் கூட, வேலைசெய்து கொண்டிருப்பதையும், உப்பரிகைமேல் இருந்தபடியே அயீஷா கவனித்தாள்.

கலெய்க்காவும், அடுக்களை அறைக்குள்ளே, குழப்பத்துடன் ஒடியாடி வேலைகளைக் கவனித்தாள். உமார் இல்லாதபொழுது சோம்பிக் கிடக்கும் அந்த வேலைக்காரர்களின் கூட்டம், அவன் இருக்கும்பொழுது, இயந்திரங்கள்போல் ஆடுவதையும் ஓடுவதையும் எண்ணி உலகின் வெளிப்பகட்டான தன்மையைப் பற்றி சிந்தனைசெய்து கொண்டிருந்தாள் அயீஷா உமார் வந்த பிறகு அயீஷாவினால் தோட்டத்திற்குள்ளே போக முடியவில்லை. தன் அறையிலேயும், உப்பரிகையிலும்தான் அவளால் நடமாட முடிந்தது. அப்படி உப்பரிகைக்குப் போகும் பொழுதும், தன் முக்காட்டுத் துணியை முழுக்க முழுக்க இழுத்து முகத்தை முடிக்கொள்ள வேண்டியதாயிருந்தது.

ஏனெனில், உமார் தனியாக வரவில்லை. அவனுடன் ஆறு ஏழு விருந்தாளிகளும் வந்திருந்தார்கள். சிலர் விடை பெற்றுக் கொண்டு போனதும் புதிய சில விருந்தாளிகள் வந்தார்கள். இப்படியாகப் பல வாரங்களுக்கு வரும் விருந்தாளிகளை உபசரிக்கவும் பேசிக்கொண்டிருக்கவுமே சரியாக இருந்தது உமாருக்கு நாட்கள் பலப்பல கடந்து சென்று கொண்டிருந்தன. உமார் தன்னைப்பற்றியே அடியோடு மறந்து போய்விட்டானோ என்று கூட அயீஷா ஐயப்பட்டாள். தன்னுடைய அந்தப் புரத்திற்கு அப்பால் புதுப்புது மனிதர்களுடன் அவன் இருக்கும்பொழுது அவள் அவனுடன் வந்து பேசுவது என்பது இயலாத காரியம்! இஸ்லாமிய பண்பாட்டின்படி அந்தப்புரத்தில் இருக்க வேண்டிய பெண்கள் வேற்று ஆடவர் மத்தியில் வரக்கூடாது. அப்படியே அவசியம் வரவேண்டியதாயிருந்தாலும் சொந்தக்காரியாகவோ உரிமையும் திருமண உறவும் உள்ள பெண்ணாகவோ இருந்தால் தவறில்லை. அயீஷா பாவம், விலைக்கு வாங்கப்பட்ட அடிமைதானே!

கலெய்க்கா மூலம் செய்தியனுப்பித் தன்னைப்பற்றித் தெரிவித்துக் கொள்ளவும் தைரியம் உண்டாகவில்லை. அவர் குதிரையின்மீது வரும் பொழுது உப்பரிகை மேலே நின்று கொண்டிருந்த தன்னைப் பார்த்திருக்கத்தான் வேண்டும். அப்படிப் பார்த்திருந்தாலும் இவ்வளவு நாட்கள் தன்னைப்பற்றி ஏன் ஒன்றும் விசாரித்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை, ஏன் வாங்கினோம் என்று இவளை எண்ணிவிட்டாரோ? மறுபடியும் திருப்பி யாரிடமாவது விற்றுவிட முடிவுசெய்து விட்டாரோ? இப்படி நினைத்துப் பார்க்கிறபொழுது ஆயீஷாவின் நெஞ்செல்லாம் குமுறியது! தன் தலைவிதி எப்படியெப்படி மாறுமோ? யாராரிடம் எல்லாம் மாறிமாறி அடிமையாகச்செல்ல நேரிடுமோ என்று எண்ணுவாள். அப்பொழுது, ஏன் பிறந்தேன் என்று கூட நினைப்பாள். கூண்டுக் கிளிபோன்ற அந்தப்பெண்ணழகி, குளிக்கும்பொழுதும் கூந்தலுக்கு எண்ணெய் தேய்த்துக் கொள்ளும் போதும், நகத்துக்கு சாயம் பூசும் பொழுதும், தனக்குள்ளே ஆயிரமாயிரம் எண்ணிப் புழுங்குவாள்.

உமாரைப் பார்க்கும்பொழுது அவளுக்கு ஏனோ ஒரு வித பயம் உண்டாகியது. அவனுடைய உயர்ந்த நிலையும், அதிகாரத்தின் பெருமையும், அலட்சியப் போக்கும் இதெல்லாம் சேர்ந்து அவளைப் பயமுறுத்தியதோ என்னவோ? என்னதான் நடுக்கம் ஏற்பட்டாலும், மீண்டும் விற்கப்படுவதை அவள் விரும்பவில்லை. தான் முக்காடில்லாமல் இருக்கும்பொழுது, உமார் மட்டும் அவளுக்கு நேருக்கு நேர் எதிரே வரக்கூடிய நிலைமை ஏற்பட்டால். ஒரு நிமிடநேரம் கிடைத்தாலும் போதும், அவன் தன்னைக் கழித்துக்கட்ட நினைக்க முடியாதபடி செய்துவிட முடியும் என்று மனத்தை தேற்றிக்கொள்வாள். தன்னுடைய அழகிலே அவ்வளவு நம்பிக்கை அவளுக்கு இருந்தது.

தோட்டத்தில் உட்கார்ந்து, விருந்தாளிகளும் மற்றவர்களும் பேசிக்கொள்ளுவதையும் இரவு விளக்கேற்றிய பிறகு கூடத்திலே உட்கார்ந்து விருந்துண்ணும் பொழுது பேசுகிற எல்லா விஷயங்களையும், காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு அயீஷா கேட்டாள். தன்னுடைய அந்தப்புரச் சிறைக்குள்ளிருந்தபடியே, சிறுத்தைப் புலியின் காதுகளைப் பான்ற கூர்மையான தன் காதுகளில் படும் விஷயங்களையெல்லாம் மறவாமல் நினைவு வைத்துக்கொள்வாள். நடு நடுவே வந்திருக்கிற ஆட்களின் தோற்றத்தையும் கவனித்துக் கொண்டு, அவர்களுடைய இயல்புகளைப்பற்றி ஆராய்வாள்.

உமாரிடம் வந்தவர்களிலே, தலைநரைத்த அர்மீனிய, வியாபாரி ஒருவன். அவன் பெயர் அக்ரேனோஸ். அவனை, அயீஷா நல்லவனென்று மதித்தாள். அவன் உமாரிடம் தனித்திருந்து பேசும்போதெல்லாம், சுரங்கங்களிலிருந்து கிடைக்கும் நீலக்கற்களைப் பற்றியும், வைரம் வைடுரியம் ஆகியவற்றைப்பற்றியும், ஒட்டகச் சாரிகளிலே ஏற்றிவரும் யானைத் தந்தங்களைப் பற்றியும், ஆயிரக்கணக்கான பொன் இலாபம் கிடைக்கும் நூறாயிரம் வியாபாரங்களைப் பற்றியும் கூறுவான். உமாரின் வியாபார நண்பன் அக்ரோனோஸ் என்றும், விற்பனைசெய்ய வேண்டிய பெருஞ்சொத்துக்கள் பல உமாரிடம் இருக்கின்றன என்றும் அவர்கள் பேச்சிலிருந்து அயீஷா தெரிந்துகொண்டாள். அவளுக்காக அவன் கொடுத்த விலை, பிச்சைக்காரனுக்குக் கொடுத்த செப்புக் காசுக்குச் சமம் என்றும், அவன் செல்வநிலை அவ்வளவு உயர்ந்தது என்றும் அறிந்து கொண்டாள்.

உமாருடைய நண்பர்களிலே இன்னொருவன் ஒரு கவிஞன். இஸ்லி என்ற அவன் நேருக்கு நேர் ஒருவரைப் புகழ்ந்து பேசுவதிலே நிபுணன். அவன் உமாரை எல்லையில்லாமல் புகழ்வான். அரசரின் வான நூல் ஆராய்ச்சியாளர், கணிதம், விண்மீன் ஆராய்ச்சி, இசைக்கலை ஆகிய முத்துறையிலும் ற்றக் கற்றவர் என்றும் பள்ளிக்கூடங்களிலே பயிலும் இஸ்லாமியக் குழந்தைகளெல்லாம் உமாரின் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கின்றனவென்றும் கூறுவான். அவனுடைய வாய்ப் பேச்செல்லாம் உள்ளத்திலிருந்து வராதவை என்றே அயீஷா எண்ணினாள்.

ஒருமுறை மூஇஸ்ளலி, தானே எழுதிய செய்யுள் ஒன்றைப் பாடிக் கொண்டிருந்தான்!

   அழகோவியம் நீ என்
   அருகிலே வந்தாலே
   அறையில் இன்பம் சேருதே - இந்த
   அறையும் சொர்க்கம் ஆகுதே - நல்ல
   அழகுக் காஷ்மீர் போலவே!
   எழில்மதி முகத்தின்
   எதிரில் வராமல் -
   இருக்கும் கரிய கூந்தலே - அது
   என்ன பாவம் செய்ததே - அது
   ஏனோ வெட்கம் கொண்டதே!
   பாவிகள் எல்லாம்
   பாழ்நர கடைதல்
   பாரில் இயற்கையல்லவோ? - இன்பப்
   பால்மதி முகத்தின் பக்கமே . அந்தப்
   பாவக் கூந்தல் இருப்பதேன்?
   அழகோவியம் நீ என்...

இந்தப் பாட்டு அழகாக இருப்பதாகவே ஆயீஷா கருதினாள். மூஇஸ்ளலி ஆவலுடன் உமாரிடம் தன் பாடலைப் பற்றிக் கருத்தைக் கேட்டபொழுது, காசர் குச்சிக் அரண்மனையின் தலைவனான அவன் “சுல்தானின் ஆஸ்தான கவியாக இருக்க நீ தகுதியுள்ளவன்தான் என்பதை இப்பாட்டு எடுத்துக் கூறுகிறது” என்று பதில் கூறினாள்.

கவிஞன் மூஇஸ்ளலி அன்று இரவு அதிகம் குடித்து விட்டு, அருகில் இருந்த வேதாந்தி ஒருவனிடம் கரிய கூந்தல் என்பதற்குப் பதில் சுருண்ட கூந்தல் என்று போட்டிருக்கலாமா என்று தன் கவியைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினான். அந்த வேதாந்தி இருப்பது இல்லாதது உலக அன்பு என்று என்னென்னவோ புதிய புதிய சொற்களையெல்லாம் பயன்படுத்திப் பேசிக்கொண்டிருந்தபடியால் அவன் பேச்சு விளங்கவில்லை. குடித்திருந்த கவிஞன் மூஇஸ்ளலி, ஏதோ வேடிக்கையாகப் பேசுவதாக எண்ணிக் கொண்டு ஆபாசமான கதைகளை யெல்லாம் கூறினான். ஆயீஷாவுக்கு இது சுத்தமாகப் பிடிக்கவில்லை. உமார் பக்கம் திரும்பிக் கவனித்தாள். அவன் இந்த வேடிக்கைகளுக்காகச் சிரிக்கவும் இல்லை; அதை விரும்பிக் கேட்டதாகவும் தெரியவில்லை. வெறுத்ததாகவும் தெரியவில்லை. மூஇஸ்ளலியை அவள் மனதார வெறுத்துச் சபித்தாள்.

அங்கு அடிக்கடி வரும் மற்றொருவன் இந்து மதத்தைச் சேர்ந்தவன். அவன் வருவதும் தெரியாது போவதும் தெரியாது. நிழலைப் போன்ற அமைதியான போக்குடையவன். உமாருக்கு உயிர் போன்ற நட்புடையவன் அந்த இந்தியன் என்று ஆயீஷா அறிந்து கொண்டாள். அஞ்சாத பார்வையுடைய அந்த இளைஞன், தன் தோளிலே ஒட்டக மயிர்க்கம்பளித் துண்டு ஒன்றைப் போட்டுக் கொண்டு, எப்பொழுதும் கால்நடையாக அரண்மனைக்கு வருவான். அவனை அங்குள்ளவர்கள் வேதாந்தி காசாலி என்று கூறுவார்கள். காசாலி என்ற பெயருடைய அவன் ஒருநாள் அருகில் இருந்தவனிடம், உமாருக்கு இருந்த அந்தரங்க ஞானமானது, அவனுடைய பழம்பிறப்பின் காரணமாகத் தொடர்ந்து வந்ததென்றும். தன்னை அறியாமலே உமார் அந்த ஞானத்தைப் பெற்றிருக்கிறானென்றும் கூறினான். காசாலியும் உமாரும் பேசும்போது, இருவரும் தோட்டத்தில் உலவிக்கொண்டே பேசுவார்கள்.

ஆகையால், அவர்கள் பேச்சு முழுவதும் ஆயீஷாவுக்குக் கேட்காது! அரைகுறையாக ஒரு நாள் அவர்கள் பேச்சு காதில் விழுந்தது இதுதான். உமார் சொர்க்கத்தை நாம் அப்படியே பார்க்க முடிந்தால் புதியதோர் உலகத்தை அங்கே காணலாம். இல்லையா? நமது பழைய உலகத்தை உதறித் தள்ளிவிட்டு, இதயம் விரும்பும் அந்தப் புதிய உலகத்தைக் காணலாம்.

காசாலி:- ஆண்டவனுடைய பக்தியில் நாம் முழுக்க முழுக்க ஈடுபடு முன்பே சொர்க்கத்தை மறைத்துக் கொண்டிருக்கும் மாயத்திரை விலகாது! நாம் சொர்க்கத்தைக் காணவேண்டுமானால், பக்தியில் மூழ்க வேண்டும்.

இப்படி அவன் கூறிக் கொண்டிருக்கும்போதே உமார் ஒரு மதுக்குவளையை எடுத்துக் குடிப்பதற்காக வாய் அருகிலே கொண்டு போனான்.

“ஆண்டவனால் பழிக்கப்பட்ட இந்தக் காரியத்தைச் செய்யாதீர்கள்” என்று அந்த இந்து தடுத்தான்.

உமார் அந்த ஒரு குவளை மதுவையும் குடித்து விட்டுத்தான் கீழே வைத்தான். உமார் சிரித்துக்கொண்டே, “நண்பா, மதுவைப் பழிக்காதே! அது ஒன்றுதான் எனக்கு உயிர்; அதுவே எனக்கு நலங்கொடுப்பது” என்றான் உத்வேகத்தோடு.

ஏற்கெனவே, உமார், இந்தக் காசாலி என்ற இந்துவுடன் இப்படி உயிராய்ப் பழகுகிறானே. நம்மைக் கவனிக்காமல் என்று அயீஷா அந்த இந்தியன் மீது பொறாமை கொண்டிருந்தாள். இப்போது உமார், “மதுவே என் உயிர்” என்கிறான். இனி அடுத்து என்ன வருமோ? தனக்குப் போட்டியாக என்று வியப்படைந்தாள்.

காசாலி அதைப் பொருட்படுத்தாமல், தொடர்ந்து மதங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினான். ஏராளமானவை அவற்றில் இருந்தாலும், கடவுள் ஒருவரே! உலகனைத்தையும் உண்டாக்கிக் காத்து அழித்து நடத்தி வரும் இறைவன் ஒருவனே, என்ற கருத்தை வலியுறுத்தியே காசாலி பேசினான்.

“இஸ்லாத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். எத்தனை விதமான பிரிவுகள். மத நம்பிக்கையுடைய வைதிகமுஸ்லிம்கள் ஒரு புறம் வைதிகத்தை எதிர்த்துப் போராடுகின்ற அலி என்று சொல்லப் படுகின்ற வேதாந்திகள் ஒரு புறம்; அல் என்பவருடைய மதவாதத்தைப் பின்பற்றுகின்ற அலியாக்கள் ஒரு புறம்; இவர்களெல்லாம் போக ஏழாவது மாதி என்ற ஒரு தேவதூதர் வருவார் என்று எதிர்பார்க்கின்றவர்கள் வேறு இருக்கிறார்கள். எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், வேறு வேறு பாதையிலே செல்லுகிறார்கள். இந்துக்களிலே ஒரு கதையுண்டு. ஓரிடத்திலே இருட்டறையிலே யானையைக் கட்டி வைத்திருந்தார்கள். அந்த ஊர் மக்களெல்லாம் இருட்டறையில் கட்டி வைக்கப் பட்டிருந்த அந்த யானையைப் பார்க்க வந்தார்கள். அதைத் தடவித் தடவித்தான் பார்க்க முடிந்தது. துதிக்கையைத் தொட்டுப் பார்த்து விட்டு ஒருவன், இது தண்ணிர்க் குழாய் என்றான். இனனொருவன் காது ஒன்றைத் தடவிப் பார்த்துவிட்டு யானை என்றால் விசிறிதான் என்றான். மூன்றாவது ஆள் காலைத் தடவி விட்டுத் துணுக்குத்தான் யானையென்று பெயர் என்று கூறினான். யாராவது ஒருவன் ஒரு விளக்கைக் கொண்டு வந்திருந்தால் உண்மையான யானையை எல்லோரும் நன்றாகப் பார்த்துத் தெரிந்து கொண்டிருக்கலாம்” என்று காசாலி கூறிக் கொண்டிருந்தான்.

“இந்த உலகத்தைச் சூழ்ந்துள்ள அறியாமை இருளைப் போக்கி ஞான ஒளி பரவச் செய்யும் விளக்க எங்கேயிருக்கிறது?” என்று உமார் கேட்டான்.

“வேதாந்திகள் கையில்தான் இருக்கிறது. இருளின் பின் கிடப்பது என்ன என்பதை அவர்களால்தான் காண முடியும்!”

“அந்த வேதாந்திகள் யார்? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? நான் அவர்களைத் தேடிப் பார்த்து விட்டேன். அவர்கள் உலகத்தின் இருளைப் போக்குவதற்குத் தங்கள் படுக்கையை விட்டு வெளியில் எழுந்து வருவதாகவே தெரியவில்லை. அப்படியே வெளியில் வந்தாலும் ஒரு பழைய கதையைச் சொல்லிவிட்டு மறுபடியும் தூங்கப் போய்விடுகிறார்கள். “அவர்களால் உலகுக்கு என்ன பயன்” என்று உமார் தொடர்ந்து கேள்வி கேட்டான். காசாலி பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருந்தான்!