உமார் கயாம்/42. செத்தவன் பேசினான்! பேசினவன் செத்தான்!
ஜம்மி மசூதியிலே கடைசித் தொழுகை நடந்து கொண்டிருந்தது, நூற்றுக்கணக்கான மத நம்பிக்கையாளர்கள் எல்லாம் வல்ல இறைவனான அல்லாவை நோக்கித் தங்கள் பிரார்த்தனைகளைத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.
அந்தக் கூட்டத்தோடு கூட்டமாக ஆண்டவனைத் தொழுது கொண்டிருந்தான் ஓர் அராபியன். கூட்டம் வெளியேறியபோது, அவனும் வெளியேறினான். மசூதிக்குப் பின்புறமுள்ள வீதியில் திரும்பி மூன்றாவது வீட்டிலேபோய்க் கதவைத் தட்டினான்.
கதவோரத்திலே இருந்த ஒரு குருடன், ‘நீயார்’ என்று கேட்டான்.
‘அக்கினி புத்திரனுடைய வீடு இதுதானே?’
‘ஆம்! அக்கினி புத்திரனுக்கும் உனக்கும் என்ன தொடர்பு?’
‘சொர்க்கத்தைக் கண்டுவந்த ஒரு மனிதன் இங்கே இருப்பதாகக் கூறினார்கள்.’
‘சொர்க்கமா, சொர்க்கமா?’ என்று கேட்ட குருடன் பேசாமல் இருந்தான். அவன் எதுவும் பேசாமல் போகவே, அராபியன் கதவைத் திறந்தான். இருட்டிலே வழி தெரியாமல் கையைநீட்டிக் கொண்டேபோன அந்த அராபியன் ஒரு திரை தட்டுப்படவே அதை இழுத்து அகற்றினான். உடனே அவன் முகத்துக்கு நேரே ஒரு மெழுகுவர்த்தி நீட்டப்பட்டது. அந்த மெழுகுவர்த்தியை வைத்திருந்த சாமியார் ஒருவன், அந்த அராபியனை நன்றாக உற்று நோக்கிவிட்டுத் திருப்தியடைந்தவனாக உள்ளே செல்ல அனுமதித்துவிட்டு மறுபடியும் திரையை இழுத்துவிட்டு அங்கேயே நின்று கொண்டான். அராபியன் உள்ளே சென்றான்.
அங்கே இருந்தவர்களெல்லாம் ஒரு திரையை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த இடத்திலே ஒரு சாமியார் நின்று தன்மாரிலே அடித்துக்கொண்டு சுற்றிச் சுற்றி வந்தான். அராபியன் வேடத்திலேயிருந்து உமார் கூட்டத்தை ஒரு பார்வை பார்த்தான். அங்கே யாரும் ‘அர்ப்பணம் செய்தவர்கள்’ இல்லை.
எல்லோரும் நகரத்து மக்களே. அவர்களிலே ஒரு சிலர் அரசாங்கப் படைவீரர்கள் இருந்தார்கள். நாலைந்து முல்லாக்கள் கூட இருந்தார்கள். புதுமையான கருத்துக்களை வெளியிட்டால் மறுக்கும் முல்லாக்கள் இப்படிப்பட்ட மாயமான விஷயங்களை ஆலலோடு காண வந்திருக்கிறார்களே என்று எண்ணிய உமாருக்கு வருத்தமாக இருந்தது.
அந்தத் திரையோரத்திலே ஒரு சாமியார் இருந்து, மறைந்துபோன மாவீரன் ஹூசேனுக்காக மாரடித்துக் கொண்டிருந்தான்.
‘ஹுசேன் எவ்வாறு இறந்தான்? வாளால் வெட்டப்பட்டான். அவன் குருதியைத்தரை குடித்துவிட்டது. ஹூசேனுக்காக ‘அனுதாபப்படுங்கள்! இதோ நான் அவனுக்காக மாரடித்துக் கொள்ளுகிறேன்.’
இப்படி மந்திரம் கூறிக்கொண்டே மாரடித்துக் கொண்டான். கூட்டத்தில் இருந்தவர்களும் அவனோடு ஒத்து மாரடித்துக் கொண்டார்கள். அவர்களும் அந்த மந்திரத்தை உச்சரித்தார்கள். ஒரு சிறு கணப்பிலிருந்து கிளம்பியபுகை அறையிலே ஒரு விதமான வாடையையுண்டாக்கியது.
மாரடித்துச் சுற்றிக்கொண்டிருந்த சாமியார், திடீரென்று சுற்றுவதை நிறுத்திவிட்டு, ‘ஒ! செத்தவன் குரல் பேசுகிறது!’ என்று கூவிக்கொண்டே தன் பின்னால் இருந்த திரையை இழுத்து விட்டான். திரை மறைந்திருந்த இடத்தில் ஒரு சிறு அறை அவர்களுக்குத் தென்பட்டது. அதன் நடுவிலே விளக்குகள் எரிந்தன. அந்த விளக்குகளுக்கு அப்பால் தரையிலே ஒரு பெரிய வெண்கலப் பாத்திரம் இருந்தது. அதிலே பாதிவரை இரத்தம் நிறைந்திருந்தது. அந்த இரத்தத்துக்கு மேலே ஒரு மனிதனுடைய தலை தெரிந்தது.
அந்த தலையோடு நன்றாகச் சிரைக்கப்பட்டிருந்தது. அந்த மண்டையின் கண்கள் முடியிருந்தன, இரத்தத்துக்கு மேலே வெறும் தலையை மட்டும் கண்ட மக்கள் ஆச்சரியத்தால் கூச்சலிட்டார்கள்.
‘அமைதி! அமைதி!’ என்று சாமியார் கூட்டத்தை அடக்கினான்.
அந்தத் தலையின் கண்கள் திறந்து கொண்டன. இடமிருந்து வலம் அது திரும்பிப்பார்த்தது. இந்த பயங்கரக்காட்சியைக் கண்ட கூட்டம் பேச்சு மூச்சற்றுப் பிரமித்துப்போய் இருந்தது.
அந்தத் தலையின் வாயுதடுகள் அசைந்தன. பேசத் தாடங்கின:
‘உண்மையுள்ளவர்களே! கண்ணுக்குத் தெரியாத சொர்க்கத்தின் கதையைக் கேளுங்கள்’ என்று சொல்லித் தான் சொர்க்கத்துக்குப்போன கதையை எடுத்துச் சொல்லியது.
கூட்டத்தில் இருந்த மற்றவர்கள் அதிசயத்தில் மூழ்கியிருந்தார்கள். ஆனால், உமார் ஆராய்ச்சிசெய்து காண்டிருந்தான். குரல், அந்தத் தலையின் தொண்டையிலிருந்துதான் வந்தது.
ஆனால், அந்தத்தலை நிச்சயமாக உயிருள்ள மனிதனுடைய தலையே என்பது அவனுக்கு உறுதியாகத் தெரிந்தது. தந்திரமாக அந்த மனிதனுடைய உடலை மறைத்திருக்கிறார்கள் என்பதும் தெரிந்தது.
முடிந்ததும் அந்த சாமியார் திரையை இழுத்து மறைத்து விட்டான்.
அதிசயம்! அதிசயம்! என்று ஒரு முல்லா கூவினார். அந்த சாமியார் புன்னகையுடன் கூட்டத்தை நோக்கினான்.
‘அத்தாட்சி காட்டு! இது உண்மையில் அதிசயமாக இருந்தால் அத்தாட்சி காட்டு’ என்று ஒரு சிப்பாய் கூவினான்.
‘கம்மாயிரு, அத்தாட்சி இதோ காட்டுகிறேன்!’
எல்லாருடைய கண்களும் தன்னையே நோக்கும்படி சிறிது நேரம் நின்றான். பிறகு திரையை இழுத்தான். நேராக அந்த வெண்கலச் சட்டியின் அருகேசென்று, தன் இருகைகளாலும் அந்தத் தலையின் இருகாதுகளையும் பிடித்து மேலே தூக்கினான். முன்னுக்கு வந்து எல்லோருக்கும் தெரியும்படி அதைத் திருப்பிக்காட்டிவிட்டு மறுபடி சட்டியிலே வைத்தான். அந்தத் தலையைத் தனியே பார்த்தமக்கள்
‘நம்புகிறோம் நம்புகிறோம்!’ என்றார்கள்.
உமார் எழுந்து அந்தத் திரையின் அருகிலே போய் நின்று, தன் கைகளைத் தூக்கி கூட்டத்தை அமைதிப்படுத்திப் பேசத் தொடங்கினான்.
நண்பர்களே! இது அதிசயமல்ல! வெறும் கண்கட்டு வித்தைக்காரனின் தந்திரக் காட்சிகள்! இறந்துபோன மனிதன் பேசுவதில்லை! ஆனால், சற்றுமுன் உயிருடனிருந்து பேசிய மனிதன், நமக்கு அத்தாட்சி காட்டுவதற்காகக் கொல்லப்பட்டுவிட்டான். பாருங்கள் என்று கூறிக்கொண்டே, அந்தச் சட்டியை அப்புறப்படுத்தினான். அந்தச் சட்டிக்குப் பக்கத்திலே தரையிலே ஓர் அகன்ற துவாரம் இருந்தது. அந்த சாமியார் கோபத்துடன் முணுமுணுத்தான், கூட்டம் தள்ளிக் கொண்டு முன்னால் வந்தது.
உமார் ஒரு விளக்கை எடுத்துக் கொண்டு ஒருபுறம் சுவர் ஒரத்திலே கட்டியிருந்த திரையை அகற்றினான். அந்தச் சுவர் வழியாக ஒரு பாதை தென்பட்டது. விளக்குப் பிடித்துக்கொண்டே, அந்தப்பாதை வழியாகக் கீழே இறங்கிச் ஒரு இடத்திலே கால் வழுக்கியது. கீழே குனிந்து பார்த்தால் இரத்தம்.
‘உண்மையைத்தான் கண்டுபிடித்து விட்டீர். ஒய் அராபியரே! இங்கு கொலை நடந்திருக்கிறது!’ என்று கூட வந்த அந்தச் சிப்பாய் கூவினான். இன்னும் பலர் அந்தப்பாதை வழியாக வந்தார்கள். ‘இரத்தம் இருக்கிறது; தலை இப்பொழுதுதான் வெட்டப்பட்டிருக்கிறது; ஆனால், உடலை எங்கும் காணவில்லையே’ என்று சிப்பாய் தேடினான். கையிலிருந்த விளக்கின் வெளிச்சம் ‘அர்ப்பணம் செய்தவர்கள்’ உடையில் இருந்த ஒரு முண்டத்தின் மேல்பட்டது. அந்த முண்டம் படிக்கட்டின் கீழே கிடந்தது. உள்ளேயுள்ள நிலவறைகளிலே புகுந்து பார்த்தபோது, ஓர் அறையிலே ஐந்து முண்டங்கள் கிடந்தன. தலைகளைக் காணவில்லை. ஒரு முல்லா அந்த முண்டங்களின் ஆடையைப் பார்த்து, ‘காணாமற்போன ஐந்து, வணிகர்களின் இவை யென்று அடையாளம் கூறினார். ‘அந்தக் கொலைகார நாய்களைப் பிடியுங்கள்’ என்று கூவினார். கூட்டம் அவர்களைத் தேடியது.
ஆனால், அந்த மாயவாதிகள் இந்நேரம் எங்கே ஓடி ஒளிந்தார்களோ அந்தக் குருடன் மட்டும் ‘கூட்டாளிகளே! என்னை விட்டுவிட்டுப் போகாதீர்கள்!’ என்று கத்திக் கொண்டு வாசற்படியிலே இருந்தான்.
உமாருக்கு அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. உயிர்த்துணையாக இருந்து இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக் கொண்ட அந்த ஜபாரக்கின் சாவு அவன் மனத்தைவிட்டுப் போகவில்லை.