உரிமைப் பெண்/பட்டணம் கை



பட்டணம் கை

து கதையல்ல; பதினைந்து நாட்களுக்கு முன்னே கடந்த உண்மைச் சம்பவம். ஆனால் பட்டணம் கையின் திறமையைத் தங்கள் சொந்த அநுபவத்தில் கண்டவர்களே இதை உண்மை என்று நம்புவார்கள்; மற்றவர்களுக்கு நான் எவ்வளவு வற்புறுத்திக் கூறினாலும் இது வெறும் கட்டுக் கதையாகத்தான் தோன்றும். நீங்கள் எப்படி முடிவு கட்டினாலும் சரி - விஷயத்தை நடந்தவாறே கூறி விடுகிறேன்.

நானும் என் மனைவியும், என் நண்பன் ஒருவனும் அந்தச் சம்பவத்தில் பங்கெடுத்துக்கொண்ட முக்கிய பாத்திரங்கள். இன்னும் இரண்டு மிகப் பிரதானமான பாத்திரங்கள் உண்டு. அவர்களில்லாமல் இந்தச் சம்பவமே நடந்திருக்க முடியாது; இராவணன் இல்லாமல் இராமாயணம் உண்டா? ஆனால் அவர்களே யாரென்று எங்களில் ஒருவருக்கும் தெரியாது; தெரிந்திருந்தாலும் இச்சம்பவத்தின் முடிவே வேறு விதமாக மாறியிருக்கும்.

எங்களுக்கு அவர்களைப் பற்றி ஒன்றும் தெரியாமற் போனாலும், அவர்களுக்கு எங்களைப் பற்றி நன்கு தெரியும் போலிருக்கிறது. அதுவே அன்று நடந்த சம்பவத்திற்கு முக்கியமான சாதகமாயும் அமைந்திருக்கிறது.

எனக்கும் என் மனைவிக்கும் சென்னை புதிது. சமீப காலத்தில்தான் இங்கே குடி வந்தோம். ‘பட்டணத்திலே அறம், பொருள், இன்பம் மூன்றும் கிடைக்கும்; ஆனால் வீடு மட்டும் கிடைக்கவே கிடைக்காது!’ என்று எனக்கு முன்பே கூறியிருந்தார்கள். வீடு கிடைப்பது அவ்வளவு எளிய காரியமா? பட்டணமென்று சொன்னால் மாத்திரம் அது எப்படிச் சுலபமாகக் கிடைக்க முடியும் என்று நான் பெரிய தத்துவ சாஸ்திரி போல நினைத்துக்கொண்டு இங்கு வந்து சேர்ந்தேன். குடியிருப்பதற்கு வீடு தேடி அலைந்தபோதுதான் அவர்கள் கூறிய செங்கல்லும் சுண்ணாம்பும் மணலும் கலந்து உண்டாக்கிய இந்த வீட்டின் அருமை தெரிய வந்தது.

கடைசியில் எப்படியோ ஒரு வீட்டை எற்பாடு செய்துகொண்டு குடும்பம் ஆரம்பித்தேன். ஆரம்பித்துச் சரியாக ஒரு மாதங்கூட ஆகவில்லை; அதற்குள் அந்தச் சம்பவம் நிகழ்ந்துவிட்டது.

ஒரு நாள் மாலை சுமார் மூன்று மணி இருக்கும். ஒருவன், “இது வக்கீல் வீடா?” என்று தெலுங்கிலே கேட்டுக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான். முன் அறையில் மேஜையருகில் நான் அமர்த்திருந்தேன். “இல்லை, இங்கே யாரும் வக்கீல் அல்ல” என்று நான் தமிழில் பதில் சொன்னேன்.

“பக்கத்து வீட்டிலே விசாரித்தேன்; புதிதாக ஒரு வக்கீல் குடி வந்திருப்பதாகச் சொன்னர்களே? அப்பீல் ஒன்று ஹைக்கோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும்” என்று தொடர்ந்து தெலுங்கிலேயே விசாரித்தான்.

“நான் வக்கீல் அல்ல; இந்தப் பட்டணத்திலே பக்கத்து வீட்டுக்காரருக்கு என்ன உத்தியோகமென்றுகூடத் தெரிகிறதில்லை” என்று கூறி நான் அவனை வெளியிலே அனுப்பினேன். அவனும் ஏமாந்தவன்போல் போனான். ‘பாவம் யாரோ ஆந்திர நாட்டுக் கிராமவாசி போலிருக் கிறது; பட்டணத்திலே இடம் தெரியாது அலைகிறான்’ என்று நினைத்து இரக்கப்பட்டுக்கொண்டேன். நாட்டுப் புறங்களிலுள்ள மக்களில் எத்தனையோ பேர் தமக்குள்ளே விணாகச் சச்சரவு செய்துகொண்டு பட்டணத்து வீதிகளிலே வக்கீலையும் கோர்ட்டையும் தேடித் திரிந்து கையிலுள்ள பொருளையும் தொலைத்துக் கஷ்டப்படுகிறார்கள் என்கிற வருத்தமான விஷயம் என் மனத்திலே, எழுந்தது. ஆனால் அதைப் பற்றி நெடு நேரம் சிந்தனை செய்துகொண்டிருக்க நேரமில்லை.

அன்று ஒரு நல்ல இசையரங்கு நடக்க இருந்தது. அதற்குப் புறப்படவேண்டிய யத்தனத்தில் கவனம் செலுத்தலானேன்.

ஐந்து நிமிஷங்கூட ஆகவில்லை; அவன் மறுபடியும் வந்தான். ஆனால் நான் அவனைப் பார்க்கவில்லை; என் மனைவி பார்த்தாள். அவளிடம் என்ன எங்கே என்று விசாரித்தானாம். “இதோ உள்ளே குளிக்கும் அறைக்குப் போயிருக்கிறார்; வந்து விடுவார்” என்று என் மனைவி பதில் சொன்னாள். “அதிக நேரம் ஆகுமா? அவரிடம் அவசர மாக ஒன்று கேட்க வேணும்” என்றான் அவன். அவள் யதார்த்தமாக உட் பக்கம் வந்து என்னிடம் விஷயத்தைக் கூறிவிட்டு மறுபடியும் அவனுக்குப் பதில் கூற முன் அறைக்குச் சென்றாள்.

இதற்குள்ளே பட்டணம் கை வேலை செய்துவிட்டது. மேஜை மேல் நான் சற்று முன்புதான் கழற்றி வைத்து விட்டுப்போன கைக்கடிகாரத்தை அவன் எடுத்து மறைத்துக்கொண்டான். சற்று நேரத்தில் நான் வந்துவிடுவே னென்கிற செய்தியை அவனுக்கு என் மனைவி சொல்லவே அவன் ஏதோ தலை போகிற அவசரம் போல, “மறுபடியும் பத்து நிமிஷத்தில் வந்து அவரைக் கண்டு கொள்கிறேன்; கொஞ்சம் அவசரம்” என்று கூறிவிட்டுக் கிளம்பிவிட்டான்.

நான் திரும்பி வந்ததும் விசாரித்தேன். அந்த ஆசாமி ஏதோ அவசரமாகப் போய்விட்டான்; பத்து நிமிஷத்தில் மறுபடியும் வருவான்” என்று என் மனைவி பதில் கொடுத்தாள்.

பத்து நிமிஷமாயிற்று; அரை மணி, ஒரு மணி ஆயிற்று. திரும்பி வருவதற்கு அவனுக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? நாங்களும் அவன் வரவை எதிர் பார்க்கவில்லை. கடிகாரத்தை மறதியாக வேறு எங்காவது வைத்துவிட்டேன் என்று தேட வேண்டாத இடமெல்லாம் தேடிக்கொண்டிருந்தோம். தேடும்போதே இது பட்டணம் கையின் வேலைதான் என்பது எங்களுக்கு நன்கு புலப்பட்டுவிட்டது. இருந்தாலும் கொஞ்ச நஞ்சம் உள்ள சந்தேகம் தீர்வதற்காக எல்லா இடங்களையும் துருவிப் பார்த்துவிட்டோம்.

நான் அன்று பாட்டுக் கச்சேரிக்குப் போகவில்லை. போலீசில் பிராது கொடுத்தல் முதலிய காரியங்களில் இரண்டு மூன்று மணி நேரத்தைத் தொலைத்துவிட்டு வீடு திரும்பினேன். அதே சமயத்தில் என் நண்பனும் வந்து சேர்ந்தான். அவன் அன்று காலையில்தான் சென்னைக்கு வந்தான். பட்டணம் பார்க்கவேண்டுமென்று அவனுக்கு வெகு நாளாக ஆசை. அதனால் கிறிஸ்துமஸ் சமயத்தில் உள்ள வேடிக்கைகளையெல்லாம் பார்க்கலாமென்று புறப்பட்டு வந்திருக்கிறான். காலையில் சாப்பிட்டுவிட்டுக் கிளம் பியவன் அது வரையில் எங்கெங்கோ சுற்றிவிட்டுவந்தான். வந்தவன் மகிழ்ச்சியோடு, "கைக் கடிகாரம் ஒன்று வாங்க வேண்டுமென்ற சொன்னேனல்லவா? நல்லதாக ஒன்றைக் குறைந்த விலையில் வாங்கிவிட்டேன்” என்று என்னிடம் சொன்னான். “அப்படியா? எங்கே, பார்க்கலாம்” என்றேன் நான்.

கடிகாரத்தை உடனே என்னிடம் காட்ட நண்பன் விரும்பவில்லை. அதை அவன் வாங்கிய பிரதாபத்தை யெல்லாம் ஆதியோடந்தமாக எனக்கு எடுத்துரைத்து விட்டுப் பிறகு காண்பிக்கவேண்டுமென்பது அவனுடைய ஆசை. அதனால், “முதலில் அதை வாங்கிய விதத்தைப் பற்றிச் சொல்கிறேன். பிறகு கடிகாரத்தைப் பார்க்கலாம்” என்றான் அவன்.

“எப்படி வாங்கியிருப்பாய்? எல்லோரையும் போலத் தான் கடையெல்லாம் புகுந்து புகுந்து, ஆயிரத்தெட்டுக் கடிகாரங்களைப் பார்த்துவிட்டுக் கடைசியில் ஒர் ஒட்டைக் கடிகாரத்தை வாங்கி வந்திருப்பாய்” என்று கேலி செய்தேன் நான். “உனக்குத் தெரிந்தது அவ்வளவுதான். நான் அப்புடியொன்றும் செய்யவில்லை” என்று அவன் பெருமையோடு பேசினன்.

“சரி; வாங்கின விதத்தைத்தான் சொல்லேன்” என்று நான் கேட்டேன்.

என் நண்பன் ஆரம்பித்தான்: “நான் சுமார் ஐந்தரை மணிக்குச் சைனா பஜாரில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அடாடா என்ன கூட்டம்! கார்களும், பஸ்களும், டிராம்களும் எத்தனை! எனக்கு அப்படியே பிரமிப்பாய்ப் போய்விட்டது. ஒர் இடத்தில்  அசையாது நின்றுகொண்டு எல்லாவற்றையும் கவனித்தேன்.

“அப்பொழுது எனக்குப் பக்கத்தில் இரண்டு மனிதர்கள் வந்து நின்றார்கள். ஒருவன் தன் கையில் ஒரு கடிகாரத்தைக் கட்டிக்கொண்டிருந்தான். மற்றவன் அதை விலைக்குக் கேட்டான். ஐம்பது ரூபாய் வேண்டுமானால் கொடுக்கிறேன்; அதற்கு மேலே என்றால் எனக்கு வேண்டாம் என்றான் அவன். எனக்குத் தெளிவாகக் கேட்கும் படி அவர்கள் வெளிப்படையாகத்தான் பேசினார்கள்; இரகசியமாகப் பேசவில்லை. அந்தக் கடைவீதி இரைச்சலிலே மெதுவாகப் பேசினால் எப்படிக் கேட்கப் போகிறது?

“இவ்வளவு குறைச்சல் விலைக்குக் கேட்பது நியாய மில்லை; நமக்குள் இருக்கிற சிநேகிதத்தை மனத்தில் வைத்துக்கொண்டு கேள்” என்றான் மற்றவன்.

“இஷ்டமிருந்தால் கொடு; நான் உன்னைக் கட்டாயப் படுத்தவில்லையே?” என்றான் விலைக்குக் கேட்கிறவன்.

விற்கிறவனுக்குக் கோபம் வந்துவிட்டது. ‘அவசரம் ஆபத்திற்கு உன்னையெல்லாம் நம்பினால் இப்படித்தான்; தலையில் மிளகாய் அரைத்துவிடுவாய்; உனக்கும் ஒரு ஆபத்து வராதா? அப்பொழுது பார்த்துக்கொள்கிறேன்’ என்று கடுமையாகப் பேசிவிட்டு அவன் வேகமாக நடந்தான். அவன் எங்கே போனானென்று தெரியவில்லை. சட்டென்று மறைந்துவிட்டான்.

“மற்றவன் அவனைத் தேடிக்கொண்டே அங்கும் இங்கும் அலைந்தான். பிறகு கவலையோடு என்னிடம் வந்து,  ‘ஸார்’, அவன் எந்தப் பக்கம் போனனென்று பார்த்தீர்களா?” என்று கேட்டான்.

“யாரைப்பற்றிக் கேட்கிறாய்?” என்றேன் நான்.

“அவன் என்னுடைய சிநேகிதன்தான். அவனுக்கு இப்போ பணத்திற்கு ரொம்ப அவசரம். அதனாலே தன் கைக் கடிகாரத்தை விற்கவேண்டுமென்று நினைக்கிறான். ஒரு மாதத்திற்கு முன்புதான் 110 ரூபாய் கொடுத்து அதை வாங்கினான், எனக்கு நன்றாகத் தெரியும். இன்றைக்கு எட்டு மணிக்குள் அவனுக்குப் பணம் அவசரமாக வேண்டியிருக்காவிட்டால் அவன் அதை விற்கவே மாட்டான். நான் ஐம்பது ரூபாய்க்குக் கேட்டேன்; அவன் 75 கேட்கிறான். ஐம்பதுக்கு மேல் இன்னும் ஒர் ஐந்து ரூபாய் வைத்தால் பேசாமல் கொடுத்துவிடுவான். அவனை விட்டுவிடக்கூடாது. வேறு யாராவது அந்தக் கடிகாரத்தைத் தட்டிக் கொண்டு போய் விடுவார்கள். அவன் எங்கே போனானென்று தெரியுமா?” என்று அவசரம் அவசரமாகக் கேட்டான்.

“நான் கவனிக்கவில்லையே” என்று பதில் கொடுத்தேன். உண்மையில் அவன் எந்தப் பக்கம் போனானென்று நான் பார்க்கவில்லை. அந்த மனிதன், ‘அடாடா! ஏமாந்து போய்விடும் போலிருக்கிறதே’ என்று கூறிக்கொண்டே ஒரு திக்கில் நடந்தான்.

“நாலு பக்கமும் பார்த்துக்கொண்டே நான் மெதுவாக நகர்ந்தேன். ஒருவன் கண்ணாடி தம்ளர் விற்கிறான்; ஒரு கிழவி, ‘லட்டெல்லாம் ரண்டணா, லட்டெல்லாம் ரண்டணா’ என்ற சாத்துக்குடிப் பழம் விற்கிறாள். பலூன் வியாபாரி ஒரு பக்கம் கீச்சுக் கீச்சென்று சத்தம் செய் கிறான். கண்ணில்லாத கபோதி ஒருவன் ஊதுவத்தி விற்கிறான், பல்லுக்குச்சி ஒரு புறம், பனியன் ஒரு புறம்; இன் னும் ரிப்பன் என்ன, காலண்டர் என்ன, பொத்தான் என்ன, பாச்சைக் குண்டு என்ன,—இப்படிப் பல வகையான சாமான்கள் ஜனங்கள் நடக்கும் குறுகிய பாதையிலேயே விற்கப்படுகின்றன. நகருவதற்குக் கூட இடமில்லை. ஒரே கூட்டம், ஒரே கூச்சல். கிராமத்தில் அமைதியாக இருந்துவிட்டு வந்த எனக்கு இந்த ஆரவாரத்தைக் கேட்டுத் தலைசுற்ற ஆரம்பித்துவிட்டது. கார் சத்தம் வேறு, எதற்கு அப்படிச் சத்தம் போடும் ஹாரன்களை வைத்துக்கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை. பட்டணத்து ஜனங்களுக்குக் காது செவிடோ, என்னவோ. டிராம் சத்தம் வேறு. எனக்கு ஒரே மலைப்பாகப் போய் விட்டது. அதோடு அந்தப் பெட்ரோல் புகை நாற்றம் இருக்கிறதே, அதைத்தான் என்னால் சகிக்கவே முடியவில்லை. தலைவலி எடுத்துக்கொண்டது. இருந்தாலும் பட்டணத்துக் காட்சி ரொம்ப ஜோர்தான். நான் இவற்றை யெல்லாம் பார்த்துக்கொண்டு பத்துப் பதினைந்து கஜ துாரம் போயிருப்பேன்.

“அதற்குள் அந்தக் கடிகாரக்காரன் திரும்பி வந்து சேர்ந்தான். ‘ஸார்’, என்னிடம் பேசிக்கொண்டிருந்தானே, அவன் எங்கே போனானென்று பார்த்தீர்களா?” என்று கேட்டான்.

“எனக்கு எப்படித் தெரியும்? உன்னைத்தான் தேடிக் கொண்டு போனான் அவன்” என்றேன்.

“நீங்கள்தான் பாருங்கள் ஸார்; இந்தக் கடிகாரத்தை அவன் 50 ரூபாய்க்குத் தட்டிக்கொண்டு போகலாமென்று பார்க்கிறான். வாங்கி ஒரு மாதங்கூட ஆகவில்லை. 110  ரூபாயைச் சுளை போலக் கொடுத்து வாங்கினேன். கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணம், இன்றைக்கு எனக்கு எப்படியும் கொஞ்சம் பணம் வேண்டியிருக்கிறது. என்னுடைய நெருக்கடியைத் தெரிந்துகொண்டு லாபமடிக்கப் பார்க்கிறான். இத்தனைக்கும் அவன் எனக்கு வெகு நாளாகச் சிநேகம். இந்தக் காலத்திலே சிநேகிதம் எங்கே இருக்கிறது?” என்று வெறுப்போடு பேசிவிட்டுக் கடிகாரத்தை என்னிடம் கொடுத்தான்.

அழகான கடிகாரம்; சமீபத்தில்தான் வாங்கினது என்பதில் சந்தேகம் இல்லை; அதற்குப் போட்டிருந்த தோல் பட்டை கூடப் பாலிஷ் மங்கவில்லை. எனக்கு அதன்மேல் ஆசை விழுந்துவிட்டது. குறைச்சல் விலைக்குக் கிடைத்தால் லாபந்தானே என்று நினைத்தேன்.

“எனக்கு அதை விற்று விட உனக்குச் சம்மதமா?” என்று மெதுவாகக் கேட்டேன்.

“யாராயிருந்தால் எனக்கென்ன? ரூபாய் 75 கொடுத்தால் யாருக்கு வேண்டுமானலும் விற்கக் தயார். என்ன செய்கிறது? என்னுடைய அவசரம் அப்படி இருக்கிறது!” என்று அவன் விசனத்தோடு பதில் கொடுத்தான்.

“கான் 60 ரூபாய் கொடுக்கிறேன். இஷ்டமா உனக்கு?” என்றேன் நான்.

“என்ன ஸார், நீங்களும் அந்தப் பயலைப் போலப் பேரம் செய்கிறீர்களே? யாராவது இதை அடைமானமாக வைத்துக்கொண்டு 50 ரூபாய் கொடுத்தால் மூன்று நாளில் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவேன். வட்டி வேண்டுமானாலும் கேட்டபடி கொடுப்பேன்” என்றான் அவன்.  “அடைமானம் வாங்கிக்கொள்ள நான் இந்த ஊரல்ல. சுத்தக் கிரயமாக 60 ரூபாய் கொடுக்கிறேன். அதற்கு மேலே அது பொறாது” என்று சாமர்த்தியமாகப் பேசினேன்.

“கொஞ்ச கோம் அவன் என்னுடன் வாதாடினான்; இடையிடையே தன்னுடைய தலைவிதியை நொந்துகொண்டான். நான் பிகுவாகவே இருந்தேன். சரி; உனக்கு இஷ்டமில்லாவிட்டால் வேண்டாம்; வேறு யாருக்காவது விற்றுக்கொள்” என்று கூறிவிட்டு நடந்து காட்டினேன். நான் அடியெடுத்து வைப்பது கண்டு அவன் மடங்கிவிட்டான். என்னை விட்டுவிட்டால் அவனுக்கு ஐம்பது ரூபாய்க்கு மேல் கொடுக்க ஆள் கிடையாதல்லவா? அதனால் அவன் பேசாமல் கடிகாரத்தை எனக்கு விற்றுவிட்டான்.

“எப்படி என்னுடைய வேலை?” என்று கூறிக் கொண்டே என் நண்பன் தான் வாங்கிய கைக் கடிகாரத்தை என்னிடம் காட்டினான். அவன் அதைச் சல்லிசாகத்தான் தட்டிக்கொண்டு வந்திருக்கிறான் என்பது எனக்கு உடனே விளங்கி விட்டது; கடிகாரமும் புதிது தான்; அதன் விலையும் 110 ரூபாய்தான். இவையெல்லாம் எனக்கு நிச்சயமாகத் தெரியும். ஏனென்றால் அது என்னுடைய கைக் கடிகாரந்தான்.

பட்டணத்துக் கையின் வேலை வெகு சுறுசுறுப்பாக நடந்துவிட்டது. எடுப்பதிலேயும் அப்படி, அதைப் பணமாக்குவதிலேயும் அப்படியே.

மூன்று மணிக்கு நடந்த திருட்டைப் பற்றி என் நண்பனுக்குக் கூற வாயெடுத்தேன். ஆனால் சட்டென்று நிறுத்திக்கொண்டேன். யோசித்துப் பார்க்கிறபோது அதைச் சொல்வது உசிதமில்லை என்று பட்டது. என் நண்பன் 60 ரூபாய் கொடுத்து அதை வாங்கியிருக்கிறான். மலிவாக அவனுக்குக் கிடைத்திருக்கிறது. அந்தச் சந்தோஷமாவது இருக்கட்டுமே. விஷயத்தை நான் சொன்னால் அவன் என்னைக் கடிகாரத்தை எடுத்துக் கொள்ளும்படி வற்புறுத்துவான்; அதற்காக அவன் தந்த ரூபாயைப் பெற்றுக்கொள்ளவும் மறுத்து விடுவான். அந்தச் சங்கடமெல்லாம் வேண்டாமென்று நான் மெளனமாக இருந்து விட்டேன்.

ஆனால் ஒரு எச்சரிக்கை மட்டும் அவனுக்குச் செய்தேன். “பட்டணத்தை விட்டுப் போகும் வரையில் கடிகாரத்தை ஜாக்கிரதையாக வைத்துக்கொள். என்னுடைய மேஜை மேலே போட்டுவிட்டு அங்குமிங்கும் போய் விடாதே” என்றேன்.

“மேஜை மேலே வைத்தால் நீ தூக்கிக் கொள்வாயா? அல்லது உன் மனைவி தூக்கிக் கொள்வாளா? உங்கள் மேல் எனக்கு அப்படி ஒன்றும் சந்தேகம் இல்லையே” என்று கேலியாகப் பேசினான் நண்பன்.

நான் பதில் பேசவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=உரிமைப்_பெண்/பட்டணம்_கை&oldid=1535449" இலிருந்து மீள்விக்கப்பட்டது