உலகத்தமிழ்/கோட்டைவிட்ட கோட்டை

7. கோட்டைவிட்ட கோட்டை

ன்னசிப் பாசறையை நாங்கள் விரைவில் மாற்றி விட்டோம்; மாண்புமிகு திரு. மதியழகனை வரவேற்கப் புறப்பட்டோம் வழியில் ஒரூரில் தங்கி, நாங்கள் உணவு உண்டுவிட்டு நேரே விமான நிலையத்திற்கு விரைந்தோம். குறிப்பிட்ட நேரத்திற்குப் பத்து நிமிடம் முன்னரே போய்ச் சேர்ந்தோம். அமைச்சர் வரும் விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக வருவதாக அறிந்தோம். கா த்துக்கிடக்க விரும்பவில்லை. எனவே, நான் ஒட்டலுக்குச் சென்றேன். சிதம்பரநாதன் விட்டிற்குத் திரும்பினார். குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து என்னை மட்டும் அழைத்துக் கொண்டு விமான நிலையத்தை அடைந்தார் நண்பர் நாதன்.

காரை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு, அதற்கெதிரில் இருந்த மீட்டரில் காசைப் போட்டுவிட்டு, விமான நிலையத்திற்குள் சென்றோம்

மாண்புமிகு திரு. மதியழகனும், மாண்புமிகு திரு. பரூக் மரைக்காயரும் என்னையும், நான் அறிமுகப்படுத்திய நாதனையும் கண்டு பெரு மகிழ்வு கொண்டனர். வெளிநாடுகளில் இருக்கும்போது, அறிமுகமான யாராவது நம்மை வந்து அழைத்துப் போவார்களா என்னும் பேராவல் எழும். அது நிறைவேறிவிட்டால் ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லையேது? என்னேப்போன்று பல முறை பிற நாடு சென்று ஏங்கியவர்க்கே இவ்வுணர்ச்சியின் ஆழம் தெரியும்.

அவர்களை அழைத்துக்கொண்டு வெளியே வந்தோம். அவர்களை வரவேற்க நமது துாதுவரகத்திலிருந்து ஒருவர் வந்திருந்தார். உலக சுகாதார சபையில் பெரிய அதிகாரியாக உள்ள இலங்கைத் தமிழர் டாக்டர் சுந்தரம் என்பவரும் வந்திருந்தார். அவரது காரும் சிதம்பரநாதனின் காருக்கு அருகில் இருந்தது.

கார்களுக்கு அருகில் வந்ததும், நாதனின் காருக்கு இடப்புறம் நிறுத்தியிருந்த காரின் சொந்தக்காரர் நாதனிடம் ஏதோ கூறினார்

“ஆ! காசு தீர்ந்து விட்டதா? டிக்கெட் கொடுப்பதற்குமுன் வந்துவிட்டேன். நல்லவேளை; அபராதச் சீட்டு வரவில்லை” என்று படபடப்பாகக் கூறிக் கொண்டே, மீட்டரில் மீண்டும் காசு போட்டார்.

கார் நிற்கும் நேரத்தின் அளவிற்கேற்பக் காசு போட வேண்டும். போட்ட காசு தீர்ந்து விட்ட பிறகும் அங்கேயே நிற்க வேண்டுமானால் மீண்டும் காசு போட வேண்டும், தவறினால் அபராதம் அங்கேயே விதிக்கப்படும். வேறு பேச்சுக்கு இடமில்லை. இரண்டாவது முறை காசு போட வேண்டிய நேரத்தில் அவர் விமான நிலையத்திற்குள் இருந்து விட்டார்.

படபடப்போடு காசு போட்டுக் கொண்டிருக்கையில் திரு. சுந்தரம், அமைச்சர் இருவரையும் தம் காரில் ஏற்றிக்கொண்டிருந்தார். மாண்புமிகு திரு. மதியழகன் காரின் (மன் இடத்தில் அமர்ந்தார். அவர் தமது வலக்கையை மேலே உயர்த்தி வைத்திருப்பதைக் கவனியாமல் கதவைச் சாத்தினார் சுந்தரம்.

‘ஆ! என்று கேட்டதும் விரைந்து கதவைத் திறந்தார். அமைச்சரது வலது கையில் நடுவிரல் காயம் பட்டிருந்தது. அமைச்சர் கோபப்படவில்லை. “விரலில் வேறு பக்கம் அழுத்தியிருந்தால், எலும்பு முறிந்திருக்கலாம்; இவ்வளவோடு விட்டதே!” என்று எங்களுக்கு ஆறுதல் கூறினர்.

விமான நிலைய மருத்துவ நிலையத்தில் மருந்து இட்டு, ஒட்டுப் போட்டுவிட்டுப் புறப்பட்டோம். ஒய்வெடுக்காமல், ஜினிவாவைச் சுற்றி வந்தோம். வெறிச்சோடியிருந்த கடைத் தெருவின் வழியாக ஏரிக் கரைக்குச் சென்றோம். ‘பொங்கு புனலை’க் கண்டு பூரித்தோம்; மலர்க் கடிகாரத்தைக் கண்டு மகிழ்ந்தோம்.

ஜினிவா நகரத்தில் பார்க்க வேண்டிய காட்சிகளுள் ஒன்று மலர்க் கடிகாரம். கடிகார முகம் மலர்ச் செடிகளாலும் புற்களாலும் அமைக்கப்பட்டது. எண்களையும் மலர்களாலேயே அமைத்துள்ளனர். அதன் அடியில், நிலத்தில் பாதுகாப்பாக, கடிகாரக் கருவியை புதைத்து வைத்துள்ளனர். அதோடு சாதாரண கடிகாரத்தில் உள்ளது போல இரண்டு முட்கள் இணைந்துள்ளன. ஒன்று மணி காட்டுகிறது; மற்றொன்று நிமிடத்தைக் காட்டுகிறது. நான், 1951ல் என் மனைவியோடு, ஜினிவா போனபோது இம் மலர்க் கடிகாரத்தைக் கண்டு மகிழ்ந்தேன். அன்று போல், இன்றும் அது பசுமையாகவே இருக்கக் கண்டேன்.

முன்பு உலக நாடுகளின் கழக (League of Nations’) அலுவலகமாயிருந்து, இப்போது ஐக்கிய நாடுகளின் அவைக்குரிய பிராந்திய அலுவலகமாக இருக்கும் பெரிய அழகிய கட்டிடத்தைச் சுற்றிப் பார்த்தோம். அவை மண்டபம், குழு அறைகள் எங்களைக் கவர்ந்தன. அவை மண்டபப் படுதாக்கள் இந்தியப் பட்டால் ஆனவை. அவற்றை இந்தியா ஆதியில், தனது நன்கொடையாக வழங்கிற்று என்று கேள்விப்பட்டுப் பெருமிதம் கொண்டோம்.

அவை மண்டபத்தில் நாங்கள் மட்டுமே இருந்தோம். அவைத் தலைவர் இடத்தில் அமர்ந்து பார்த்தால் என்ன என்கிற குறும்பு எண்ணம் எழுந்தது ஒருவருக்கு. அதன் மாண்பினைக் குறைக்கும்படி கருதக் கூடாது என்று அவரை நெறிப்படுத்தி அழைத்து வந்தார் மாண்புமிகு மதியழகன்.

அன்றிரவு அனைவர்க்கும் நண்பர் சிதம்பரநாதன் வீட்டில் விருந்து சன்ன அரிசிச் சோறும், சாம்பாரும், ரசமும், தயிரும், பூரியும், காய்கறிகளும் ஜினிவாவில் இருக்கிறோமென்பதையே மறக்க வைத்தன. நல்ல சமையல்; நல்லுபசாரம்: விருந்தோம்பலும் பிரமாதம். அவரவர் ஒட்டலுக்குத் திரும்ப நள்ளிரவாகி விட்டது.

அடுத்த நாள் பிற்பகல், மாண்புமிகு மரைக்காயரும், மாண்புமிகு மதியழகனும் ரோமிற்குப் புறப்பட வேண்டும். எனவே முற்பகலில், ஜினிவாவில் சில பகுதிகளைக் காட்டினோம் . பின்னர் விசைப்படகில் அமைச்சர்களோடு ஏரியில் பயணஞ் செய்தோம். அந்த விசைப் படகை ஒட்டியவர் கலகலப்பான பேர்வழி. வாட்ட சாட்டமான சிறுவன் ஒருவன் அப் பயணத்தில் எங்களோடு வந்தான். புகைப்படம் எடுக்க முயன்றோம். வெட்கப்பட்டான். கேப்டன்’ சிறுவனைச் சரிக்கட்டி, எங்களோடு நின்று படம் எடுத்துக் கொள்ளச் செய்தார்.

முந்திய நாள் மலர்க்கடிகாரத்தைக் கண்டபோது, புகைப்படமெடுக்கப் போதிய ஒளி இல்லை. எனவே ஞாயிறன்று எல்லோரும் சேர்ந்து, மலர்க்கடிகாரத்தின் அருகில் நின்று படம் பிடித்துக் கொண்டோம். அமைச்சர் இருவரும் காட்சிக்கு எளியவர், நட்புக்கு இனியவர் என்பதை அங்கிருந்தவர்களே உரைக்க முடியும்.

பிற்பகல் நானும் நாதனும் வெளியூர் போவதாகத் திட்டம் அப்போது நண்பர் சுந்தரம் அமைச்சர்களோடு இருந்து வழியனுப்புவதாக ஏற்பாடு. அதன் படி நண்பர் சுந்தரம் வீட்டிற்கு அமைச்சர்கள் சென்றார்கள். செல்லுமுன் நிதி அமைச்சர் என்னைத் தனியாக அழைத்துப் பேசினார்; உலகப் பல்கலைக் கழகச் சேவையின் பொது அவைக்கூட்டத்தைச் சென்னையில் நல்லபடி நடத்திக்கொடுக்கச் சொன்னார்; அரசினர் வேண்டிய நிதி உதவி செய்யக்கூடும் என்றார்; பாரிசில் சந்திக்கும் போது, நிதி உதவி கோரும் கடிதத்தைக் கொண்டு வரச் சொன்னார்.

நானும் நாதனும் அவரது விட்டிற்குச் சென்று திருமதி நாதனையும் செல்வன் குமாரையும் அழைத்துக் கொண்டு வடக்கு நோக்கி விரைந்தோம். சுவிஸ் நாட்டுப் புறங்களைக் காணவேண்டுமென்பது எங்கள் நோக்கம். அது நிறைவேறிற்று. பல ஊர்களைப் பார்த்துக்கொண்டு சென்றோம். வழியில் ஓரூரில், ஏரிக்கரையோரம் புல் வெளியில் இருந்து பகலுணவு உண்டோம்.

கிச்சிலிப்பழச் சாதம், தயிர்ச்சோறு, உருளைக் கிழங்குப் பொரியல், அப்பளம், ஊறுகாய் பகல் உணவாயின. சாப்பாட்டிற்கு முன்பு, பழச்சாறும் அருந்தினோம். சாப்பாட்டிற்குப் பின், ஐஸ்கிரீம். இத்தனையும் வீட்டிலிருந்து எங்களோடு வந்தன.

லூசேன் என்ற நகரத்தைத் தாண்டி, குருயர் அணைக்குச் சென்றோம். அந்நாட்டின் பெரிய அணை அது. அணையைவிட வழியிலுள்ள ஊர்களும் காட்சிகளும சிறந்தவை.

அணையை விட்டுப் பல கிலோ மீட்டர் சென்றதும் குருயர் என்ற ஊரை அடைந்தோம்.

இவ்வூர் உயர்ந்த மேட்டுப் பூமியில் உள்ளது. மிகத் தொன்மையான ஊர். பழைய கோட்டையொன்று இங்கே இருக்கிறது. அதற்குள் இரண்டு மாடி அரண்மனை. கோட்டையையும் அரண்மனையையும் காண வருவோர் கூட்டம் பெரிது.

ஊரை நெருங்கியதும், ஊருக்கு வெளியே வாகனங்கள் தங்குமிடத்தைக் கண்டோம். அங்கேயே காரை நிறுத்திவிட்டோம். ஏன் தெரியுமா? ‘தங்கள் ஊருக்குள் யாரும் காரில் வந்து தொல்லை கொடுக்கக்கூடாது; வயதானவர்களும் குழந்தைகளும் அச்சமின்றி நடமாட வேண்டும்’ என்பது அவ்வூரார் கருத்தாம். அப்படியே விதித்துவிட்டார்கள்.

‘எங்கள் ஊருக்குள் எந்த மாற்றுக் கட்சியான் தலை காட்டுகிறான் பார்க்கலாம்’ என்று காட்டுக்கால தர்பார் நடத்திய ஊர்த்தலைவர்களைப் பற்றி, நான் சிறுவனாக இருந்தபோது கேள்விப்பட்டதுண்டு. அந்நிலை நினைவிற்கு வந்தது.

ஊருக்குள் நடந்து அதன் உச்சியில் இருக்கும் கோட்டைக்குச் சென்ருேம். ஊர் சிறியது. ஒரே தெரு. இரு மருங்கிலும் பழைய வீடுகள். கோட்டைக்குள் செல்ல நுழைவுக் கட்டணம் உண்டு. அந்த வசூலைக் கொண்டு கோட்டையை நன்கு பராமரிக்கிறார்கள். கோட்டை அமைந்துள்ள இடம் அக்காலப் பாதுகாப்பிற் குத் தக்க இடம். பழைய அரண்மனையைக் காணும் போது, அக்கால மன்னர்களைப் பற்றி எனக்குப் பரிதாபம் ஏற்படும், ஏன்? இன்று நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்க்கும் கிடைக்கும் ஓடுநீர் வசதி, மின்சார விளக்கு வசதி, குளியல் வசதி, அக்கால மன்னருக்குக் கிடையாதே!

இக் கோட்டையின் வரலாறு வேடிக்கையானது. அதற்கு உரிய கடைசிப் பிரபு ஒர் ஊதாரி. கடன் வாங்கிச் செலவு செய்து வந்தான். கடனில் மூழ்கி விட்டான்; கோட்டைவிட்டான். கோட்டை ஏலத்திற்கு வந்தது. செல்வன் எவனோ ஏலமெடுத்தான். பல்லாண்டிற்குப் பின் ஊருக்குக் கொடுத்துவிட்டான்.

இவ்வூர் பாலாடைக்கு, சீஸ்’ஸ்-க்கு நெடுங்கால மாகப் பெயர் போனதாம். அங்குள்ள மாடிக் கட்டடம் ஒன்றின் வயது முந்நூறுக்கு மேல். தெருவின் இரு மருங்கிலும் சிற்றுண்டிச்சாலை. தெருவைக் கூழாங்கற்கள் பதித்து உருவாக்கியுள்ளனர். தெருவைக் கடந்து செல்லும்போது திருமதி நாதனின் புடவையை வியப் போடு பார்த்தனர்.

சிற்றுண்டிச்சாலை யொன்றிற்குச் சென்றோம். உள்ளே சென்று உண்பதைவிட வெளியே இருந்து உண்பதற்கே அங்குள்ளவர்களுக்கு மோகம். நாங்களும் வெளியே, வண்ணக் குடைகளின் நிழலில் அமர்ந்து காப்பியருந்தினோம்.

இருட்டும் வேளையில் புறப்பட்டு ஜினிவாவிற்குத் திரும்பினோம். ஊர் வந்த சேர ஒன்பது மணிக்கு மேலாகிவிட்டது. தும்பும் தூசியும் குறைவாகவும், குளுமை நிறைந்தும் நாள் முழுதும் வீசிய மலைக்காற்று அலுப்பைக் கொடுக்காமல் காத்தது