உலகம் பிறந்த கதை/ஒன்றே குலம்
20. ஒன்றே குலம்
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்றார் திருமூலர். குலம் என்றால் எது? மனித குலம் மட்டுமா? அன்று.
திருமூலர் அவ்வளவில் நிற்கவில்லை. விரிந்த பார்வை கொண்டார். அகன்ற உலகைப் பார்த்தார். உலகில் வாழும் உயிர்களைப் பார்த்தார்; ஊடுருவி நோக்கினார்.
வானிலே பறப்பன கண்டார்; கானிலே திரிவன கண்டார்; ஊர்வன கண்டார்; தவழ்வன கண்டார். புல் கண்டார். பூண்டு கண்டார். எல்லாவற்றையும் ஒன்றாகக் கண்டார்.
எல்லாவற்றிலும் ஒன்றே கண்டார்; யோகக் கண்களால் கண்டார். ஒன்றே குலம்’ என்றார்.
இன்று விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பு திரு மூலம் கண்ட உண்மை இப்போது அறிவியல் ரீதியில் சொல்லப்படுகிறது. அன்று திருமூலர் தம் யோகக் கண்களால் கண்டார். இன்று விஞ்ஞானம்,பூதக் கண்ணாடி மூலம் காண்கிறது.
களிமண் இருக்கிறது. அதைக் கொண்டு எவ்வளவு அழகான மண் பாண்டங்களைச் செய்கிறார்கள்.
பானை, சட்டி, கூஜா இப்படி எவ்வளவோ அழகான பொருள்களைச் செய்கிறார்கள்.
இவை எல்லாம் வேறு வேறாகக் காட்சி தருகின்றன. எனினும் இவற்றின் அடிப்படை எது? களிமண்தானே. களிமண் தான் சட்டியாகவும், பானையாகவும், கூஜாவாகவும் காட்சி அளிக்கிறது. அளித்த போதிலும் அகத் தோற்றத்தில் எப்படி? மண்.தங்கம் இருக்கிறது. அதைக் கொண்டு மிக அழகான சங்கிலி பண்ணுகிறான் நகை வியாபாரி. மோதிரம் செய்கிறான். தோடு அமைக்கிறான். வளையல் செய்கிறான். இவை எல்லாம் வேறு வேறு பொருள்களாகக் காட்சி தருகின்றன.
அவ்விதம் காட்சியளித்தாலும் அடிப்படை எது? தங்கம்! தங்கம் அன்றோ!
இதேபோல, மனிதன், நாய், மீன், மரம் இவை எல்லாம் புறத் தோற்றத்தில் வேறு வேறாகக் காட்சியளித்த போதிலும் அடிப்படை ஒன்றே என்கிறது அறிவியல். அடிப்படை என்ன? ஸெல். ஸெல் என்றால் அறை என்று பொருள்; சிறு அறை. தேன்கூடு அல்லது தேனடை என்று சொல்கிறோமே! அஃது எல்லாரும் அறிந்த ஒன்றே. ஈயை விரட்டி விட்டுத் தேனையும் எடுத்தபின் பார்த்தால் என்ன தெரியும்?
சிறு சிறு அறைகள் தெரியும். ஏராளமாகத் தெரியும். இந்த அறைகளுக்குத்தான் ‘ஸெல்' என்று பெயர்.
இங்கிலாந்து நாட்டிலே ஓர் அறிஞர் இருந்தார். அவர் பெயர் ராபர்ட் ஹூக் என்பது.1665ம் ஆன்டிலே ஒருநாள் அவர் தமது ரசாயன சாலையில் ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தார். பூதக் கண்ணாடி என்று சொல்கிற மைக்ராஸ்கோப் மூலம் பல்வேறு பொருள்களை ஆராய்ந்துகொண்டு இருந்தார். அப்போது அங்கே ஒரு துண்டு 'கார்க்' கிடந்தது.
கார்க் என்றால் நெட்டி என்று பொருள். அதை எடுத்துப் பூதக் கண்ணாடியில் வைத்து ஆராய்ந்தார். என்ன ஆச்சரியம்! அந்த நெட்டித் துண்டிலே ஏராளமான அறைகள் காணப்பட்டன. சின்னஞ் சிறு அறைகள்! அதைப் பார்த்த உடனே ஹூக் என்ன நினைத்தார்? கிறிஸ்தவப் பாதிரிமாரின் படங்களை நினைத்தார். அந்தக் காலத்திலே கிறிஸ்தவப் பாதிரிமாரின் மடங்களிலே சின்னச் சிறு அறைகள் உண்டு; ஏராளமாக உண்டு. அவற்றிற்கு ‘ஸெல்' என்று பெயர். சாமியார்களுக்கு என்று ஏற்பட்டவை அவை.
அம்மாதிரி 'ஸெல்'கள் நெட்டியிலும் இருக்கக் கண்டார் ஹூக், ஆனால் அவர் கண்டது உயிர் உள்ள 'லெஸ்' அல்ல. உயிரற்ற செல். அதன் பிறகு சுமார் 150 ஆண்டுகள் வரை எவருமே இது பற்றிச் சிந்திக்கவில்லை.
1838ம் ஆண்டிலே இரண்டு அறிஞர்கள் இது பற்றி ஆராய்ந்து சொன்னார்கள். அந்த இருவரிலே ஒருவர் பெயர் ஷிலிடன். இன்னொருவர் பெயர் ஷிவான்.
ஷிலிடன் தாவரங்களின் ‘ஸெல்' களை ஆராய்ந்தார். 'ஷிவான்' பிராணிகளின் 'ஸெல்' பற்றி ஆராய்ந்தார்.
இவ் விருவர்தம் ஆராய்ச்சி முடிவே 'ஸெல்' தீயரி எனப்படுவது.
‘ஸெல் தீயரி' என்ன சொல்கிறது? இந்த உலகத்தில் உள்ள உயிர் இனங்கள் எல்லாம் 'ஸெல்' லால் ஆனவை என்று சொல்கிறது. அது மட்டுமா? இல்லை. இந்த 'ஸெல்' எப்படி ஏற்பட்டது? ஒரு ஸெல்லிலிருந்து இன்னொரு ஸெல்! அதிலிருந்து மற்றொரு ஸெல்! இப்படியாக ஒன்றே பல ஆகின்றன என்றும் சொல்கிறது.
வீடு என்கிறோம். அது எதனால் கட்டப் படுகிறது? செங்கல்லினால். வீட்டுக்கு அடிப்படை செங்கல், லட்சக் கணக்கான செங்கல்களை இணைத்து இணைத்து வீடு கட்டி விடுகிறோம். இதே மாதிரி கோடிக்கணக்கான ஸெல்கள் இசைந்து மனித உருப் பெறுகின்றன; மாடாகின்றன. மரமாகின்றன. இன்னும் பல்வேறு உயிர் இனங்களாகக் காட்சித் தருகின்றன.
இந்த உண்மையைத்தான் அன்று திருமூலர் கண்டார். அது யூகம். யோகத்தால் ஏற்பட்டது. இன்று அறிவியல் சொல்கிறது. இது ஆராய்ச்சியில் கண்டது. விஞ்ஞான ரீதியில் ருசுப்பிக்கப்பட்டது.