உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/இனிய சொல்

30. இனிய சொல்

இன்சொல் வழங்குவதால் நாக்கு காயமுறுவதில்லை.

-ஹேவுட்

இன்சொற்களின் விலை அற்பம், ஆனால் அதன் மதிப்போ அதிகம்.

-ஹெர்பர்ட்

பானை கீறலா அன்றா? ஒலியால் அறியலாம். அறிவாளியா, அறிவிலியா? பேச்சால் அறியலாம்,

-டெமாஸ்தனீஸ்

ரூபன்ஸ் என்னும் ஓவியன் ஒரு கோடு கிழித்தால் போதும், அழும்முகம் நகைமுகம் ஆகிவிடும். அதுபோல் நாமும் செய்ய முடியும், நமக்கு ஒரு மொழி போதும்.

-ஆவ்பரி
ஜனங்கள் இறந்தோரைப் பேசுவது போலவே இருப்போரையும் பேசுவார்களானால் எவ்வளவு நன்மையாய் இருக்கும்?
-ஆவ்பரி

மொழிகள் மண்ணுலகின் புத்திரிகள்; செயல்கள் விண்ணுலகின் புத்திரர்கள்.

- ஜாண்சன்

எண்ணங்களுக்கு மொழிகள் எப்படியோ அப்படியே நற்குணத்துக்கு உபசாரம்.

- ஜூபர்ட்

இருட்டறையில் மின்மினி வந்தால் எப்படி அறையில் இருளை மறந்து பூச்சியின் அழகைப் பருகுகிறோமோ, அப்படியே நமக்குத் துன்பம் வந்த சமயம் யாரேனும் இனிய மொழி பகர்ந்தால் நம் துன்பங்களை மறந்து அந்த மொழியின் இனிமையை உணர்கின்றோம்.

-ஆர்தர் ஹெல்ப்ஸ்

★ ★ ★