உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சொல்

31. சொல்

சூரிய கிரணங்கள் போன்றவையே சொற்கள்; அதிகமாக ஒருமுகப்பட்டால் அக்கினியாய்ச் சுடும்.

-ஸதே

நன்றாய்ப் பேசும் ஆற்றல் இன்மையும், நாவை அடக்கும் ஆற்றல் இன்மையும் பெரிய துர் அதிர்ஷ்டங்களாகும்

-லா புரூயர்

சபையில் பேசாத காரணம் என்ன? முட்டாளாய் இருப்பதா, மொழிகள் கிடைக்கவில்லையா? -முட்டாள் ஒருநாளும் நாவை அடக்க முடியாது.

-டிமாரட்டஸ்
பேச வேண்டிய காலம் அறியாதவன் பேச வேண்டாத காலமும் அறியான்.
-பப்ளியஸ் ஸைரஸ்

மனிதனுக்கு மட்டுமே பேசும்சக்தி உளது; அதன் முதல் உபயோகமும் இறுதி உபயோகமும் கேள்விகள் கேட்பதே.

-அர்னால்ட் பென்னட்

இந்த வாக்கியத்தின் பின்னால் ஒரு மனிதன் உள்ளனரா. இல்லையா? இது ஒரு ஆன்மாவைப் பிரதிபலிக்கின்றதா, இல்லையா? இதைப் பொறுத்ததே அதன் ஆற்றல்.

-எமர்ஸன்

மொழிகள் இலைகளை ஒக்கும்; தழை நிறைந்த மரத்தில் சத்துள்ள பழங்கள் இரா.

-போப்

நன் மொழி கூறலும், ஒருவித நற்செயலே ஆயினும் மொழிகள் செயல்கள் ஆகா.

-ஷேக்ஸ்பியர்

மொழிகள் என்பவை அறிவு உபயோகிக்கும் நாணயங்களே யாகும். சர்க்காரிடம் பொருளில்லை யெனில் நாணயங்கள் செலாவணியாகா, அதுபோல் பொருளில்லாத மொழிகளும் பயன்படா.

-கோல்ட்டன்

மொழிகள் சாதனமேயன்றி லட்சியமன்று. கருத்தைக் கூறுவதே நம் நோக்கம். அதற்குரிய ஆயுதமே பாஷை,

-ரெய்னால்ட்ஸ்

நாவன்மை என்பது ஆன்மாவின் இடையீடில்லாத இயக்கமே யாகும். அலங்காரமாய்ப் பேசுவோர் நாவலர் அல்லர். பல சொல் அடுக்கிப் பாமரரை மயக்கப் பழக்கப் படுத்தப்பட்ட நாவினரேயாவர்.

-ஸிஸரோ
கருத்து பழையதாயுமிருக்கலாம். பலர் கூறியதாயுமிருக்கலாம். ஆயினும் அது உயர்ந்த முறையில் அழகாய்க் கூறுபவனுக்கே உரியதாகும்.
- லவெல்

நமக்கு ஆண்டவன் நா அளித்திருப்பது இன்சொல் இயம்புவதற்கே.

- ஹீன்

சிலேடை உபயோகிப்பவர் இருப்புப் பாதையில் கற்களை வைத்து மகிழும் விஷமச் சிறுவர்களை ஒப்பர்.

- ஹோம்ஸ்

வீண்சொற்கள் விஷயங்களை வியர்ந்த மாக்குகின்றன.

-பிஷப் ஆண்ட்ரூஸ்

★ ★ ★