உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி/10. டாக்ஸி–ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அண்ணா அறிவுரை

10. டாக்ஸி–ஆட்டோ
ஓட்டுனர்களுக்கு அண்ணா அறிவுரை

நாட்டில் ஒரு தொழிலிலே ஈடுபட்டுள்ளவர்கள், அதில் நிம்மதி பெறுவது கிடையாது; அடுத்த தொழில்மீது தான் ஆசைப்படுவார்கள்?

பஸ் ஓட்டுபவர் 'லாரி ஓட்டுவதுதான் இலாபகரமானது' என்று நினைக்கக் கூடும்; லாரி ஓட்டுபவர், 'பஸ் ஓட்டுவது பெருமை தரக்கூடியது' என்று கருதுவார்; டாக்சி ஓட்டுபவர்--சொந்தக் கார் ஓட்டுவதை விரும்புவார்; தனிப்பட்டவர்களிடம் கார் ஓட்டுபவர்களுக்கு டாக்சி ஓட்டுவதில் நாட்டம் ஏற்படலாம்!

இப்படி, அவரவர் நினைப்பில் எதுதான் உண்மை?--எல்லாம் இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதைப் போலத்தான்!

ஆகவே, ஒரு தொழிலில் இருப்பவர் வேறு தொழிலில் நாட்டம் செலுத்துவது நல்லதல்ல!

'இந்தத் தொழில் நல்லதா-அந்தத் தொழில் நல்லதா என்று நினைக்காமல்-இந்த டாக்சி ஓட்டும் தொழில் வளரக் கூடியது என்பதை நம்பி-இதிலேயே நீங்கள் இருக்க வேண்டும்; இந்தத் தொழில் நியாயமானது-நிம்மதி தரக்கூடியது என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும்!

அமெரிக்கப் பணக்காரர்கள் வீட்டில் கார் ஓட்டிகளாக வேலை செய்பவர்கள், தாங்களும் சொந்தத்தில் கார் வைத்திருக்கிறார்கள்; தாங்கள் வீட்டிலிருந்து தங்கள் சொந்தக் காரிலேயே வேலைக்குச் செல்கிறார்கள்; தாங்கள் வேலை செய்யும் வீட்டிற்குச் சென்றவுடன்-சொந்தக் காரை அங்கு நிறுத்தி விட்டு, முதலாளியின் காரை ஓட்டுகிறார்கள்; வேலை முடிந்ததும் சொந்தக் காரை எடுத்துக் கொண்டு வீடு திரும்புகிறார்கள்; அதைப் போன்ற வசதி நமது நாட்டில் இல்லை!

செல்வம் கொழிக்கும் அமெரிக்காவில் ஒருவருக்கு மூன்று--நான்கு என்ற விகிதத்தில் கார் இருப்பதாகச் சொல்லப்படுகிறது; பொருளாதார வளர்ச்சி ஏற்பட ஏற்பட இந்தத் தொழிலில் நிம்மதி ஏற்படும்!

நீங்கள் உண்மையிலேயே பலவிதமான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள். உங்கள் பிரச்சினையை மூன்று முறையில் அணுக வேண்டும். ஒன்று - அதிகாரிகளுக்கும் - உங்களுக்கும் உள்ள உறவு; இரண்டாவது - முதலாளிகட்கும் - உங்களுக்கும் உள்ள உறவு; மூன்றாவது - பொதுமக்களுக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பு. இந்த மூன்று தொடர்புகளையும் ஆராய்ந்து பார்த்தால், இருக்கின்ற சிக்கல் தீர வழிபிறக்கும்.

"சமுதாயத்துக்கு எந்தவித ஆபத்தும் இல்லாதபடி பாதுகாப்புடன் ஓட்டக்கூடியவர்கள் டாக்சி டிரைவர்கள்” என்ற எண்ணம் சமுதாயத்தினருக்கு ஏற்பட வேண்டும்.

டாக்சி ஓட்டுபவர்கள் தமதுப ணியை, 'மிகப் பொறுப்பான பணி' என உணர்ந்து பணியாற்றினால், 'சமுதாயத்துக்கு அவர்கள் எவ்வளவு தேவையானவர்கள்' என்பது மக்களுக்குப் புரியும்!

நீங்கள் பொதுமக்களிடம், மரியாதை - பண்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும்.

பொதுமக்களும், டாக்சியில் ஏறியதும், தங்களை விட டாக்சி ஓட்டுபவர்கள் கீழ்த்தரமானவர்கள், என்ற நிலையில் பேசக்கூடாது!

உங்களை நீங்களே பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அதற்குச் சரியான வழி, 'சங்கத்தில் அங்கம் வகிக்காத ஆளே இல்லை' என்கிற அளவில் எல்லோரும் உறுப்பினர்களாக ஆகி, சங்கததைப் பலப்படுத்திக் கட்டிக் காத்து வருவதுதான்!

(1961:ல் தமிழ்நாடு டாக்சி, ஆட்டோ, ரிக்‌ஷா
டிரைவர்கள் சங்கத்தின் சிறப்புக் கூட்டத்தில் அண்ணா)