உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி/22. அவன் கேட்பது வாழ்வு

22. அவன் கேட்பது வாழ்வு

அவன், படைப்புத் தொழிலில் வல்லவன்!
அவன், பிறர் நலம் நாடிடும் நல்லவன்!
அவன், பரிவும் கனிவும் ததும்பும் உள்ளம் உள்ளவன்!
அவன் பகட்டும் பசப்பும் அறியாதவன்!
அவன், சூதும் சூழ்ச்சியும் தெரியாதவன்!</poem>}}
அவன், தான் செய்யும் பணியின் கணக்குப் பார்க்காதவன்!.
அவன், இல்லையேல், அரசு இல்லை! வெற்றி முரசு இல்லை! அணி பணி இல்லை! அமைதி இல்லை! இல்லம், இன்பம், இல்லை! ஏற்றம் என்பதே இல்லை
அவன், அவனிக்கே ஓர் அச்சாணி!
அவன், கரம் பட்டதாலேயே செழுமை காண்கின்றோம்!
அவன், வியர்வை கொட்டியதாலேயே மண், மணம் பெறுகிறது!
அவன், அழித்த காடுகள் பலப் பல!

அவன், அமைத்த பாதைகள் பலப் பல!
அவன், வெட்டிய திருக்குளம் பலப் பல!
அவன் கட்டிய கோட்டைகள் பலப் பல!
அவன், ஆக்கித் தந்ததே அனைத்துப் பொருள்களும்!
அவன், படைப்புத் தொழிலில் வல்லவன்!
அவன் பழிபாவத்துக்கு அஞ்சாதாரிடம் பகடையானான்!
அவன், உழைக்கிறான்; உருக்குலைந்து போகிறான்!
அவன், உழுகிறான்; மற்றவர் உல்லாச புரியில் உலவுகிறார்கள்!
அவன். அறுத்துக் குவிக்கிறான்; மற்றவர் அள்ளிச் செல்கிறார்கள்!
அவன், ஏழ்மையில் உழல்கிறான்; எல்லாச் செல்வத்தையும் ஆக்கி அளித்து விட்டு!
அவன் ஆடை அணி தேடிடவில்லை; ஆடம்பரம் நாடிடவில்லை!
அவன், மேனி அழகு கூடிட, புனைவனவும் பூசுவனவும் தேடிடவில்லை!
அவன், உழைக்கிறான், உழைக்கிறான், உழைக்கத்தானே பிறந்தோம் என்ற உணர்வுடன்
அவன், தன்னைச் சுற்றி சீமானும் பூமானும் உலவிடக் காண்கிறான்; இவர்கள் இந்நிலை பெற்றது எதனால் என்று கேட்டிட முனைகின்றான் இல்லை!
அவன், கண் எதிரே மணி மாடங்கள் தெரிகின்றன; நமக்கு மண் குடிசைதானா? என்று கேட்டிடத் தோன்றவில்லை
அவன், உழைப்பால் உலகை வாழ வைத்திடும். உத்தமன்!
அவன், உழவன்! அவன், பாட்டாளி! அவன், ஏழை!

அந்த ஏழைக்கு ஒரு விழா எடுக்கிறார்கள்! உழவனுக்கு என்று ஒரு திருநாள் நடத்துகிறார்கள்! உழவர் திருநாள்! பொங்கற் புதுநாள்!-என்றெல்லாம் பெயரிடுகிறார்கள்! போற்றுகிறார்கள், நாட்டைப் பொன் கொழிக்கும், பொலிவு பூத்த இடமாக ஆக்கி அளித்ததற்காகப் பெருமைப்படுத்துகிறார்கள். அவன், புகழ் பாடுகின்றனர் கவிஞர்கள்! அவன், இயல்புகளைப் போற்றுகின்றனர் நல்லோர்! அவனை, அரசு கூட வாழ்த்திட முன் வருகிறது! அவன், விழிகளை அகலத் திறந்து பார்க்கிறான், வியப்புடன்! புறக்கணிக்கப்பட்டுக் கிடந்தவனை நோக்கி, புகழ் மாலையுடன் பலர் ஓடோடி வந்திடக்கண்டு, ஈதென்ன புதுமை? இதற்கு என்ன காரணம்? என்னவோ இதன் விளைவு? என்றெல்லாம் அவன் தன்னைத்தானே கேட்டுக் கொள்கிறான்.

அவன் ஏழை-ஆனால் இன்று அவனைப் புறக்கணிக்க அஞ்சுகிறார்கள்! அவன் சிந்திக்கத் தொடங்கிவிட்டானே, சிறுமைப்படுத்தப்படுகிறோம் என்ற உணர்வு கொண்டிடின். சீற்றம் பொங்கிடுமே, அஃது தடுத்திட முடியாத அழிவையன்றோ மூட்டிடும். போகபுரியைத் தகர்த்திடுமே என்று அஞ்சத் தொடங்கிவிட்ட கனதனவான்கள், அவனை மயக்கிட, இனிப்புப் பேச்சுதந்திட முனைகின்றனர். அவன் ஏழை; வெள்ளை உள்ளம் கொண்டவன்; எனவே எளிதிலே அவனை மயக்கிவிடலாம் என்று எண்ணுகின்றனர்!

எல்லாம் உன்னால்தானே!- என்று புகழ்ந்தால், அவன் உச்சி குளிர்ந்துவிடும் என்று எண்ணுகின்றனர்!

உன்னாலன்றோ உலகு என்று உரைத்ததும் அவன் உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளும்; அவன் தனக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளை மறந்திடுவான்; புதிய உற்சாகத்துடன் உழைத்திடுவான்; புதுப்புது செல்வத்தை ஆக்கித் தந்திடுவான் என்று எண்ணுகின்றனர். அவன் ஏழை! எத்தர்கள் அவனை ஏமாளி என்றே தீர்மானித்து விட்டுள்ளனர்!

கந்தனா! கிடாமாடும் அவனும் ஒன்றுதானே!-என்று கேலி பேசி வந்த கனவான், "உழைப்பின் பெருமை" பற்றி அவனிடம் பேசுகிறான்! உலகம் உய்வதே உழைப்போனால்தான் என்று பாராட்டுகிறான். ஏழை, திகைக்கிறான்; இதென்ன என்றும் கேளாத பேச்சாக இருக்கிறதே என்று!

தமிழக அரசு, பொங்கற் புதுநாளை, உழவர் திருநாளாகக் கொண்டாட ஏற்பாடு செய்வது பொதுவாக ஏற்பட்டுள்ள புதிய போக்கின் ஒரு பகுதியேயாகும். உழைப்போரின் உள்ளம் எரிமலையாகி வெடித்திடாதபடி தடுத்திட, தடவிக் கொடுத்திடும் ஓர் முயற்சி! பாட்டாளிகள் உள்ளத்திலே பகை உணர்ச்சி மூண்டெழுகிறது என்று கண்டு கொண்டவர்கள், பாகு மொழி பேசி மயக்கிட எடுத்துக் கொள்ளும் முயற்சி! அவன் ஏழை! ஆனால் அவன் எங்கும் இருக்கிறான்! ஆகவே அவனைப் பகைத்தொழிக்க முடியாது; மயக்கிட முடியும் என்று எண்ணுகின்றனர், அவன் உழைப்பை உண்டு பெருத்திட்ட உல்லாசபுரியினர்.

அவனை மிதித்துத் துவைத்துவந்த நாள் போய், மதித்து மகிழச் செய்திட முயற்சி மேற்கொள்ளப்படும் நாள் வந்திருப்பது, வரவேற்கத்தக்க ஒரு கட்டம்; அஃது போலிகள் நடாத்திடும் நாடகமாக இருந்திடும் நிலையிலேயும், ஏழையைப் புறக்கணித்தபடி இனி இருந்திட முடியாது என்ற எண்ணம் இடம் பெற்றுவிட்டதனை இந்தக் கட்டம் தெளிவாக்கிக் காட்டுகிறது.

இந்தக் கட்டம், இறுதிக் கட்டமல்ல! ஆனால் இந்தக் கட்டம் காணவே, நீண்ட பயணம் நடாத்த வேண்டி இருந்தது; இன்னல் பல ஏற்கவேண்டி வந்தது.

அவன் ஏழை! ஆமாம்! வேறே எப்படி இருக்க முடியும்! என்ன தெரியும் அவனுக்கு! உழைக்கத் தெரியும் மாடுபோல சுமக்கத் தெரியும்; கல்லைப் பிளக்கத் தெரியும்; கட்டை வெட்டத் தெரியும்; குப்பை கூட்டத் தெரியும்; வேறென்ன தெரியும்! அறிவின் துணைகொண்டு செய்திட வேண்டிய பல செயல்கள் உள்ளன; அவன் என்ன கண்டான் அவைபற்றி! அவனுக்கு ஏது அதற்கான தெளிவு பயிற்சி! அவன் பாவம், ஏழை, என்று பரிதாபம் கலந்த ஏளனப் பேச்சு நடத்திவந்தனர் சீமான்கள்! நளினிகள் அந்தப் பேச்சு கேட்டு 'கலகல'வெனச் சிரித்தனர்!

அவன் ஏழை! உழைக்கிறான்; அவனும் பிழைத்திருக்க வேண்டாமா! அவன் ஏழை, ஆனாலும் நமது உடைமை அல்லவா? அவன் உயிருடன், உடல் வலிவுடன் இருந்தால்தானே, உழைக்க முடியும்! அதனால் அவன் வாழ வழி செய்து தரவேண்டியது நமது கடமை'! அவன் உடல் நலம் கெடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டியதும் நமது கடமை! அவன் ஒரு நாலு நாள் படுத்துவிட்டாலோ, அல்லது ஒரே அடியாகக் கண்ணை மூடிவிட்டாலோ, யாருக்கு நட்டம்? நமக்குத்தானே? ஆகவே அவனைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமை! இந்த விதமான 'வியாபாரப் போக்கிலே பேசி வந்த கட்டம் பிறகு!

இப்போது வந்துள்ள கட்டம் அவன் உழைக்கிறான். ஆனால் இப்போது உண்மையையும் உணரத் தலைப்பட்டுவிட்டான்; நம்மாலன்றோ உலகு என்று பேசுகிறான், மெல்லிய குரலில்! நான் இல்லையேல் இங்கு வேறு எதுவும் இல்லை என்று முணுமுணுக்கிறான். ஆகவே அவனை இனியும் புறக்கணிக்கக் கூடாது; அவன் பகையைத் தேடிக்கொள்ளக் கூடாது, பசப்பிட வேண்டும், மயக்கிட வேண்டும் என்ற திட்டம் போட்டிட வேண்டியதாகிவிட்டது.

உழைப்பவனே உத்தமன்! உழைப்பே செல்வம் உழைப்புக்கே எல்லாப் பெருமையும்! உலகம் இயங்குவதே உழைப்பினால்தான்!-என்ற திருப்புகழ் பாடுகின்றனர்.

நமது பெருமை இத்தகையதா? நாம் உழைத்திடுவது கண்டு நம்மை இவ்வளவு உயர்வாகப் பேசுகின்றனரா? மேலும் உழைத்திடின், மேலும் போற்றுவர், வாழ்த்துவர்! என்று பாட்டாளி எண்ணிக்கொள்வான்; மனதிலே எழுப்பிய குமுறலும் அடங்கிப்போகும்; கணக்குப் பார்க்கமாட்டான்; கணக்கு கேட்கவும் மாட்டான்; காலத்தை நமதாக்கிக் கொள்வோம். இரண்டொரு கற்கண்டுத் துண்டுகளை வீசிவிட்டால் போதும் என்று எண்ணி, தன்னலக்காரர் திட்டம் திட்டியுள்ளனர். அந்தக் கட்டம் இது!

கேள்வி ஏதும் கேட்காதிருந்து வந்த ஏழை, இப்போது, எதனால் கேள்வி கேட்கத் தொடங்கினான். ஓயாது உழைத்தும், வாழ முடியாத நிலைபெற்று, கஷ்டப்பட்ட போது, எண்ணம் மனதினைக் கிளறத் தொடங்கிற்று. பசுமையைத் தந்தவன், தன் வாழ்வு வரண்டுபோகக் கண்டபோது, உலகுக்குப் பணம் தேடித் தந்திடும் நம்மாலே நமது வாழ்விலே வரட்சி ஏற்பட ஒட்டாது தடுத்திட முடியாது போய்விட்ட காரணம் என்ன? என்று கேட்கத் தொடங்கினான். அதன் தொடர்பாக, அடுக்கடுக்கான கேள்விகள் கிளம்பின! அதிர்ச்சி தரத்தக்க பதில்கள் கிடைத்தன.

கனியின் சுவையை மலரின் மணத்தை, பூங்காற்றின் நேர்த்தியை இசையின் இனிமையை நாம் கண்டு மகிழ்ந்திட முடியவில்லை...ஆனால்...என்று எண்ணிடலானான். அவன் மனம் எங்கெங்கோ சென்றது பெருமூச்சு கிளம்பிற்று? ஓர் கடுமை நிரம்பிய பார்வை கண்களிலிருந்து புறப்படலாயிற்று!

உழைப்பே செல்வம்! உழைப்பின் பெருமையே பெருமை!- என்று விழா நடத்திப் பேசிடின் ஏழை 'இது போதும்' என்று இருந்து விடுவானா?

உழைப்பே செல்வம்! ஒப்புக் கொள்கிறாய். ஆனால் அந்தச் செல்வம் உழைப்பவனிடம் இல்லையே ஏன்? உழைக்காதவனிடம் போய்க்குவிகிறதே ஏன்? என்று எண்ணிடுவன்! அந்த எண்ணம் ஆபத்தான எண்ணம் என்பர் ஆதிக்கக்காரர்கள்! வந்து தீரவேண்டிய எண்ணம் என்பர் வரலாறு அறிந்தவர்

அந்த எண்ணத்தைத்தான், மெள்ள மெள்ள ஆனால் நிச்சயமாக, ஏழையை மயக்கிடும் நினைப்புடன் விழா நடத்துவோர் ஊட்டிவிடப் போகின்றனர் தம்மையும் அறியாமல்.

உழைப்பின் பெருமை பற்றி இத்தனை உருக்கத்துடன் பேசுகின்றனரே, விழா நடத்துவோர்-விவரம் தெரிந்தவர் அல்லரோ அவர்கள்-ஆயின் உழைப்போன் பெற்றுள்ள பெருமை என்ன, இன்று?

பெருமைதரும் இடமா, சமூகத்தில் இருக்கிறது உழைப்போனுக்கு?

பெருமைக்குரிய உழைப்போனுக்கா ஊராளும் மன்றங்களில் இடம் இருக்கிறது?

உழைப்பே பெருமை என்று பேசுபவர், உழைக்கவா முன் வருகின்றனர்? பேசுகின்றனர்!

உழைப்பின் பெருமையை அவர்கள் உணர்ந்து உரைப்பவரெனில், உழைப்பவன் உருக்குலைந்து கிடக்கிறானே, அவனுக்காக என்ன செய்தனர்?

உடைமையும் உல்லாசமும் சீமான்களிடம்! உழைப்பு எம்மிடம்! எமக்கென்று அவர்கள்விட்டு வைத்துள்ள ஒரே உடைமை, உழைப்பின் பெருமை என்று பேசுகிறார்களே அந்தப் 'பெருமை' மட்டுந்தானே! நியாயமா இது!- என்று கேட்கவைக்கவே விழா பயன்படும்; -- உடனடியாக இல்லையெனினும் மெள்ள மெள்ள.

உழைப்பின் பெருமையை உணர்ந்துள்ள பெரியவர்களே! உழைத்திட வாரீர்!-அந்தப் பெருமையிலே பங்கேற்க வாரீர் என்று ஒருவன், கேலிக் குரலில் அழைப்பு விடுத்திடுவான்!

'உழைப்புதானே, ஐயன்மீர்! பெருமை தருவது! அங்ஙனமிருக்க, உண்டு கொழுத்து உருண்டு கிடக்கின்றீரே, பிறர் உடைமையைக் கவர்ந்திட வழிதேடி அலைகின்றீரே! ஏன்? வந்து உழைத்திடுவீர்! பெருமை பெறுவீர்' – என்றொருவன் கேட்டுவிட்டு, புன்னகை உதிர்த்திடுவான்.

உழைப்பின் பெருமைபற்றித் தானே ஐயா பேசுகிறீர்! உண்மை ஐயா! உண்மை! பெருமை நிரம்பத்தான் இருக்கிறது. பட்ட கடனைத் தீர்த்திட வக்கற்று பதுங்கிப் பதுங்கிச் செல்கிறாயே, நீயும் ஒரு மனிதனா? என்று பக்கிரி கேட்டான். பத்துப்பேர் எதிரில், பட்டப்பகலில், நடுத்தெருவில்! அந்தப் 'பெருமை'யை நான் பெற்றேன்! உழைத்துத்தான் பெற்றேன் அந்தப் பெருமையை!

உழைப்பின் பெருமை எத்தகையது என்பது புரிந்ததய்யா எனக்கு: என் மனைவிக்குக் குலைநோய்; மருந்து பெறச் சென்றேன்; சர்க்காரின் மருத்துவ மனையில்; உழைப்பால் கிடைக்கும் பெருமையைத் தேடிப் பெற்றிடத் தெரியாத உடைமையாளன் ஒருவனுடைய மூன்றாந் தாரம், முத்துப் பல்லழகி வந்தாள், முதுகுப்புறம் அரிப்பு என்றாள்; மூன்று டாக்டர்கள் அந்த மருத்துவ மனையில்; மூவரும் சென்றுவிட்டனர் பெண்மையின் கட்டளைக்கு நடுங்கி. கால் கடுக்க நின்றேன்; கண்ணால் சொன்னான் காவலாளி போகச் சொல்லி; மறுத்தேன்; பிடரியைப் பிடித்து வெளியே தள்ளினான். டாக்டரய்யாவைத் தொந்தரவு செய்யாதே என்று. பெருமை ஐயா! பெருமை! உழைப்பால் வந்த பெருமை! - என்றொருவன் உருக்கத்துடன் பேசிடப் புறப்படுவான்.

வைரம்! வைரம்! அருமையான வைரம்! மணங்கு 25 ரூபாய் வாங்கிட முந்துங்கள்! அருமையான வைரம்!- என்று எங்காவது கூறிடுவாரா ! இங்கு கூவுகின்றனர்! உழைப்பு! உழைப்பு! பெருமைமிக்கது பெருமைமிக்கது! உழைத்திடுவீர்கள்! நாளெல்லாம் உழைத்திடின் நாலணா கூலி! நல்லோரே! வல்லோரோ! உழைத்திடுவீர், பெருமை உழைப்பதுதானே ஐயன்மீர்! பெருமை. சமூகம் முழுவதும் வறுமையின் பிடியில் சிக்கிக் கொள்கிறது.

உழைப்பவனை வஞ்சித்து ஒரு சிலர் செல்வத்தை முடக்கிக் கொள்வது, சமூகத்தையே நாளாவட்டத்தில் பாழாக்கிவிடுகிறது; அதனால்தான், அது சமூக விரோதச் செயலாகிறது.

அத்தகைய சமூக விரோதிகளும், அவர்களுக்கு உடந்தையாக இருப்பதற்கான ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளவர்களும், ஒருநாள் கூடி, உழவர் திருநாள் உழைப்போரின் திருநாள். என்று கொண்டாடுவது, ஏமாந்தவனைச் சேற்றிலே தள்ளிவிட்டு, அவன் மீது சிறிதளவு பன்னீர் தெளிப்பது போன்றதாகும்; புண்ணின் மீது புனுகு பூசுவது போன்றதாகும்; கண்ணைக் குத்திவிட்டு கைக்குக் காப்புப்போடுவது போன்றதாகும். குன்மம் போக்க மருந்து தராமல், அவன் முன் குழல் ஊதி, இனிமையைப் பெறு என்று கூறுவது போன்றதாகும்.

உழைப்பவன் இன்று கேட்பது நீதி! உழைப்பின் பெருமைபற்றிய சிந்து அல்ல! உழைப்பவன் இன்று கேட்பது வாழ்வு பொருளற்ற புகழுரை அல்ல.

அவன் ஏழை! அவன் வாழ விரும்புகிறான்!
அவன் ஏழை! அவன் நீதி கேட்கிறான்!
அவன் ஏழை ! உண்மையை உணர்ந்து கொண்டான்!
அவன் ஏழை ! வாழ்வுக்காகப் போராடுகிறான்.
அவன் ஏழை! உரிமைக் குரல் எழுப்புகிறான்!
அவன் ஏழை! ஆனால் அவன் உழைப்பே, செல்வம் என்பதை அறிந்து கொண்டு விட்டான்.
அவன் ஏழை! விழித்துக் கொண்டு விட்டான்;
அவன் கேட்பது வாழ்வு! ஏமாற்றும் விழா அல்ல!
உரிமைத் திருநாள் காண விழைகிறான், ஊராள்வோர், உழவர் திருநாள் நடத்தி அவனை மயக்கிட முடியாது.

உண்மையான உழவர் திருநாள்; உழுபவனுக்கு நிலம் கிடைத்திடும் நாளே!
நேர்மையான உழவர் திருநாள் நெற்றி வியர்வை நிலத்தில் சொட்டச் சொட்டப் பாடுபடும் உழவன் வாழ்வில் நிம்மதி ஏற்படும் நாளேயாகும்!
அந்நாளே, திருநாள்; பொன்னாள்; உழைப்போர் உண்மையான பெருமையினைப் பெற்றிடும் நன்னாள்.
அந்நாளைக் கண்டிடவே கழகம் விழைகிறது.
அதற்காகப் பாடுபடும் ஆற்றலைப் பெற்றிடவே பணியாற்றி வருகிறது.
அதற்காவன செய்திடவே மக்களின் ஆணையை எதிர்பார்த்து நிற்கிறது.