உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி/24. ஏழையின் புரட்சி

24. ஏழையின் புரட்சி

ன்னர்கள் மணிமுடிகளுக்காகவும், சீமான்கள் மது நிகர் வாழ்வுக்காகவும் போரிட்ட பகுதிகளே பெரிதும் வரலாற்றில் இடம் பிடித்துக் கொண்டிருக்கின்றன!

ஏழை எளியவருக்கு எங்ஙனம் உலகிலே ஒதுக்கிடம் தரப்படுகிறதோ, அது போன்றே வரலாறும், அவர்களை அதிகம் கவனிப்பதில்லை!

கீர்த்திமிக்க மன்னர்கள் நடத்திய, வீரப் போராட்டங்கள்--பிடித்த கோட்டைகள்-வெட்டிய அகழிகள்--அழித்த நகரங்கள்--கட்டிப் பிடித்துவந்த கைதிகள்--வெட்டிக் குவித்த எதிரிகள்--அவர்கள் வீசிய வாட்களின் கூர்மை வாட்கண்ணாரிடம் அவர்கள் பணிந்த காட்சிகள்--அரண்மனைச் சதிகள்--அவைகளின் விளைவுகளான படுகொலைகள்--பட்டமும் பதவியும் பெற்ற சீமான்கள் பாடும் பராக்கு--அவை பெறாதவரிடம் பகைமை-இவைகளையெல்லாம் விரிவாக விளக்கமாக-சுவையும் கலந்ததாக ஆக்கித் தருவதையே வரலாற்று ஆசிரியர்கள் நெடுங்காலம் முறையாகக் கொண்டனர்.

எந்த கோலாகலத்துக்கும் அடிப்படை தரும் மக்களின் எழுச்சி-வீழ்ச்சி பற்றியும் வீரப் போரிட்டு அவர்கள் வெற்றி பெற்றது குறித்தும், இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சில காணக் கிடக்கும்; எனினும் அரண்மனையும்--மாளிகையும்- களமும்--கொலு மண்டபமும் வரலாற்றைத் தமக்கு சொந்தமாக்கிக் கொண்டதால், ஏழையின் கண்ணீரும், பெரு மூச்சும் அதில் இடம் பெறவில்லை!

மாடியில் உலவும் முல்லை சூடிய மங்கையின் எழிலைக் காண்போருக்கு, அந்தக் கன்னி வாழும் கட்டிடத்தின் அடிப்படையின் ஆழம்--அமைப்புப் பற்றி எண்ணிட நேரம்தான் கிடைக்குமா?

மேலும், துதி பாடகர்களும் புகழ் பரப்பும் புலவரும் தான் வரலாற்றுச் சுவடிகளைத் தொகுத்து அளிக்கும் பணியினை மேற்கொண்டனர்--துவக்கத்தில்; எனவே அவர்கள் படை அஞ்சப் போரிடும் மன்னரைக் குறித்தும்--அவன் மனம் உருக ஆடிடும் துடியிடை பற்றியுமே தீட்டிக் காட்டினர்!

எனினும் இன்றுபோல் என்றும் மக்கள் இருந்து வந்தனர்--உழைத்த வண்ணம்--உருமாறிய வண்ணம்!

கண்ணீர் பொழிந்தபடி--பெரு மூச்சுடன்--அடிமைகள் இருந்து வந்தனர்-எடுபிடிகளும் இருந்தனர்!

உழவர் உழன்று வந்தனர். தொழில் செய்வோர் பாடுபட்டு வந்தனர்.

எது செய்து வாழ்வது என்று தெரியாது திகைத்து அலைந்து கொண்டிருந்தவர்களும் இருந்து வந்தனர்.

அவர்களின் மனப்போர் மண்டிலம் ஆண்ட மன்னர்கள் நடாத்திய போர்களைவிட அதிகம்--ஆனால்--வெளியே தெரியாது!

வாழ்வுக்காக அவர்கள் நடத்திய போர்களும் பல--ஆனால் வரலாற்றிலே அவர்கட்கு போதிய இடம் தரப்படவில்லை.

மக்களின் சார்பாகப் பாடுபடும் மாண்பு வளர்ந்துள்ள இதுபோதுதான், வரலாற்றினைப் புதுப்பித்து--மக்களை முன்னால் வைத்து--சம்பவங்களைத்ன்தொகுத்திடும் முறை ஓரளவு வளருகிறது! வளர வேண்டிய அளவு அதிகம் இருக்கிறது!

ஏழையின் மனதிலே நெடுங்காலமாக உருவாகிக் கொண்டுவந்த கோபம், எரிமலை நெருப்பாகக் கக்குவது போல சில வேளைகளில், புரட்சிகளாக மாறின; ஆனால் தெளிவான திட்டம் கிடையாது--கொள்கை வளரவில்லை! 'வேறு வழியில்லை' என்ற போது, 'வெட்டு-குத்து' என்றனர். வெட்டப்பட்டனர்! மாண்டவர் போக மீதமிருந்தோர் மீண்டும் செக்கு மாடுகளாக ஆக்கப்பட்டனர்.

உழைப்பாளிகளின் மனக் குமுறல்கள் வெடித்த சம்பவங்கள் பல நாட்டு வரலாறுகளிலே சிற்சில காணப்படும்; ஆனால் அவைகள் மகா அலெக்சாண்டரின் வெற்றிப் படைகள் கிளப்பிய தூசியால் மறைக்கப்பட்டு விட்டன!

மாவீரர் ஜூலியஸ் சீசரின் வீரவாளின் ஒளி ஏழையின் அழுகுரலை அடக்கிவிட்ட வரலாறு தன் வழக்கமான பகுதியைக் காட்டி--மக்களின் வரலாற்றை மறைத்துவிடும்.

அடிமைகளாக--பண்ணையாட்களாக--பலவித தொழில் செய்பவர்களாக-மக்களில் பெரும்பகுதியினர் இருந்த வரையில்-அவர்கள் எப்போது கொடுமையை எதிர்க்கக் கிளம்பினும்--கொள்கை, திட்டம், கூடிச் செயலாற்றுதல், தொடர்ந்து செயலாற்றுதல் போன்ற முறையைக் கொள்ளவில்லை!

ஊருக்குள் புகுந்த புலியைக் கொல்ல அனைவரும் கையில் கிடப்பதை எடுத்துக்கொண்டு கிளம்புவது போலவே காரியம் இருந்து வந்தது!

தங்களின் நிலை பற்றி எண்ணிப் பார்த்திட--எம்முறையினால் குறைகளைக் களைந்து கொள்ளலாம்--என்று கூடிக் கலந்து பேசி--அதற்கான திட்டத்தை யார் வகுப்பது--யார் திட்டப்படி செயல் நடத்திச் செல்வது? என்பன போன்றவைகளை ஆராய்ந்து முடிவு கட்டத் திறனும், வாய்ப்பும் அப்போது இல்லை! திறத்தை விட வாய்ப்பு இல்லை என்றே கூற வேண்டும். ஏனெனில் ஏழையின் எழுச்சியில் என்றுமே ஒரு வலிவு இருக்கத்தான் செய்தது!

இந்த முறை ஏழைகளுக்குக் கிடைக்க பல நூற்றாண்டுகள் பிடித்தன. இதற்கிடையில் நாடுகளிலே - பல துறைகளிலும், பல்வேறு மாற்றங்கள் நேரிட்டன; வரலாற்று ஆசிரியர்களின் கண்களுக்கு மக்கள் தெரியலாயினர்!

கொடுங்கோலனை விரட்டுவது--செங்கோல் அமைப்பது-- 'எவன் எந்த நேரத்தில் கொடுங்கோலனாகி விடுவானோ' என்ற அச்சத்தால் உந்தப்பட்டு அரசாளும் முறையிலேயே மாற்றம் காண்பது-கோனாட்சியை குடி கோனாட்சியாக மாற்றுவது--ஆட்சி செய்வோருக்கும்-ஆளப்படுவோருக்கும் இடையே தொடர்பு இருக்க வழி வகை காண்பது போன்ற பல மாற்றங்கள் நிகழ்ந்தன. பிறகு மக்களின் பிரச்சினை பற்றிக் கவனிக்கும் சுற்றுச் சார்பும் உருவாயிற்று.

ஆட்சி முறையிலே மட்டுமல்ல--அர்ச்சகர் முறையிலேயும் திடுக்கிடத்தக்க பல மாற்றங்கள் தேவைப்பட்டன; இந்த மாற்றங்கள் இரத்தம் சிந்திப் பெறப்பட்டன.

ஒவ்வொரு மாற்றமும் ஏற்படும்போதும்--கழனியில் உழைப்பவனும்--கல் உடைப்பவனும்--உடலை வாட்டும் வேலை செய்து பிழைப்போனும் 'இனி நமக்கு நல்ல காலம் பிறக்கும்; தொல்லை குறையும்; நலன் கிடைக்கும்' என்று தான் எண்ணிக் கொண்டார்கள். ஆனால் நாட்டுக்கும் நாயகராக யார் வந்தாலும்--அரசாளும் முறையிலே என்னென்ன மாறுபாடுகள் ஏற்படினும்--ஏழையின் வாழ்விலே ஒரு புது மலர்ச்சி ஏற்படவில்லை!--ஏக்கம் அவன் தூக்கத்தைக் கெடுத்துதான் வந்தது; உழைப்பு அவன் உடலையும் உள்ளத்தையும் துளைக்கத்தான் செய்தது. அவன், பாதி மனிதனாகத்தான் இருந்தான்,

இருள் நீங்கவில்லை. சிற்சில சமயங்களில் இருளிலே ஒளிதரும் சம்பவம் தோன்றும். மறையும்; ஒளிதர வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் படைத்தவர் ஓரிருவர் முன்வருவர்; அவர்களால் இருளை அடியோடு விரட்ட முடியவில்லை; ஆனால் இருளிலே ஒளி விழச் செய்தனர்! 'ஒளி நிரம்பிய இடமானால் இன்பம் எத்தனை இருக்கும்' என்று மக்களை எண்ணிடச் செய்தனர்! அவர்களின் பணி மக்கள் வரலாற்றிலே மாண்புள்ள பகுதியாகும்.

இராபர்ட் ஓவன்

இங்கிலாந்து நாட்டில் இது போல், இருளிவே ஒளி காட்ட முயன்ற இராபர்ட் ஓவன் என்பவரின் சீரிய முயற்சி, மக்கள் வரலாற்றிலே சிறப்பளிக்கும் பகுதியாகும்!

வேறு பல நாடுகளைப் போலவே இங்கிலாந்தும், மன்னர்களின் கோலாகலத்துக்கு உறைவிடமாகத்தான் இருந்தது; ஆனால் அரசியல் முறைகளை மாற்றியமைக்கும் உரிமைப் போரைத் திறம்பட நடத்தி வெற்றி கண்டனர்.

'மன்னர் என்றால் மக்களுக்காக ஆட்சி செய்யும் மகத்தான பொறுப்பைத் தாங்க நிற்கும் சின்னம்' என்ற கொள்கை உருவாகியது.

நாடு எக்கேடு கெட்டாலும் கவலைப்படாமல், அரண்மனையில் அட்டகாசம் செய்து வந்த மன்னர்கள்--அண்ணன் தலையை வெட்டி மணிமுடியைப் பறித்துக்கொண்ட முடிதாங்கிகள்--அகப்பட்ட அணங்குகளை அரண்மனைக்கு அழைத்துச் சென்று, அவள் அளிக்கும் இன்பத்தில் சுவை குறைந்ததும்--தலையைச் சீவிவிட்டு--வேறோர் தத்தையை நாடியவர்கள்--பிரபுக்களுடன் கூடிக் கொண்டு கொட்டமடித்தவர்கள்--அவர்களையும் பகைத்துக் கொண்டு உள் நாட்டுப் போர் நடத்தியவர்கள்--மதத் தலைவர்களின் ஆசியே ஆட்சிக்கு அரண்' என எண்ணியவர்கள்--'எமக்கு அவர்கள் ஈடா' என்று எதிர்த்துக் கேட்டவர்கள்--காரணமற்ற போர் புரிந்தவர்கள்--தலைதெறிக்கத் தோற்றோடி வந்தவர்கள்--நல்லவர்கள்--கெட்டவர்கள் - நயவஞ்சகர்கள்--எனும் எல்லாவகை அரசர்களையும், பல்வேறு அரசமுறைகளையும் நாடு பார்த்தாகி விட்டது.

புயல் கிளம்பி, நச்சு மரங்களைச் சாய்த்தன; புதிய நச்சுச் செடிகள் முளைத்திடா வண்ணம், அரசியல் உழவு முறையில் புதிய மாற்றம் காண முயன்றனர்!

இந்த நிலையில் நாடு இருந்த போது, மக்களின் வாழ்விலே இருந்து வந்த இருளைப் போக்கும் சீரிய முயற்சியை "இராபர்ட் ஓவன்" செய்ய முற்பட்டார்!

இராபர்ட் ஓவன் 1771-ம் ஆண்டு பிறந்தார்; 87 ஆண்டு காலம் வாழ்ந்தார்; இருளில் ஒளி காட்டும் சீரிய முயற்சியில் ஈடுபட்டார்--தோற்றார்!

அந்தத் தோல்வி மக்கள் வரலாற்றிலே புதிய மாண்பு அளிக்கும் வலிவைத் தந்தது!

களத்திலே பெற்ற வெற்றிகளும்--மன்றங்களிலே அரசியல் நுட்பமறிந்தோர் பெற்ற வெற்றிகளும் சாதிக்க முடியா மாண்பினை, இராபர்ட் ஓவன் தன் தோல்வி மூலமே சாதித்தார்!

வெற்றி பெற்றிருந்தால் உலகமே புத்துருவம் கொண்டிருக்கும்!

கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பாட்டாளி ஒரு கணம் புன்னகை புரிந்தான்! ஓவன் அளித்த ஒளி, அவன் மனதிலே புதுப்புது எண்ணம் தந்தது! அவனை அனைவரும் அடக்கப் பார்த்தனர்--அறிவுரை கூறினர்-- பொறுமையின் அருமை பற்றிக் கூறினர்; இராபர்ட் ஓவன், அவர்களுக்கு மகிழ்வூட்டினார்--நம்பிக்கை எழச் செய்தார்.

ஒரு மன்னனின் தலையைச் சீவி--வேறோர் மன்னனை நாட்டை விட்டு விரட்டி-இங்கிலாந்து நாடு புயலைக் கிளப்பி--அரசாளும் முறையிலே இருந்து வந்த எதேச்சாதிகாரத்தை ஒழித்துக்கட்ட முனைந்தது; ஓரளவு வெற்றியும் பெற்றது; 'மக்களின் பிரதிநிதிகள் கூடிடும் மாமன்றம் வகுக்கும் முறைப்படி, மன்னன் அரசாளுவது' என்ற நிலை அமைக்கப்பட்டது! நாடு புதியதோர் பொலிவு பெற்றது! வெளிநாடுகளிலே, இங்கிலாந்தின் வணிகர்கள் பொருள் திரட்டினர்! இங்கிலாந்தின் கொடி தாங்கிய கலன்கள், எல்லாக் கடல்களிலும் பெருமிதமாகச் சென்றன!

உலகத்துக்குப் 'புது நாயகர்' என்ற கீர்த்தியைப் பெறுவதற்கான முயற்சியில், நாடு ஈடுபட்டிருந்தது; செல்வம் திரண்டது; பரம்பரைச் சீமான்கள் கிளம்பினர்--வியாபாரக் கோமான்கள் சூதாடியும், சுக போகத்துக்குச் செலவிட்டும் கடனாளியாகி விட்ட பழைய பிரபுக்களின் பண்ணைகளையும், மாளிகைகளையும் விலை கொடுத்து வாங்கிப் புது மெருகு பெற்றனர்! நாட்டின் தொழில் வளமும் பெருகிற்று! பாட்டாளி மட்டும் பழையபடி பெருமூச்செறிந்தபடிதான் இருந்தான்! புது முறை அவனுடைய பழைய நோயைப் போக்கவில்லை! போக்காதது மட்டுமல்ல- நோய் வளரலாயிற்று!

தொழில் உலகப் புரட்சி நடைபெற்றது; செல்வம் திரட்டும் சீமான்கள் சிலரும்--அவர்களிடம் உழைத்து அலுக்கும் ஏழைமக்கள் ஏராளமாகவும் இருந்து வாடும் நிலை ஏற்பட்டது!

உள் நாட்டிலும், வெளி நாடுகளிலும் இங்கிலாந்துப் பொருள்கள்--சிறப்பாக பருத்தி ஆடைகள்--ஏற்றுமதி செய்யப்பட்டன; பல்வேறு நாடுகளிலே அமைக்கப் பட்டிருந்த வியாபாரக் கோட்டங்கள் மூலம் பெரும் பொருள் ஈட்டினர்-தொழிலதிபர்கள்; தொழிலாளர்களோ வறுமையில் வாடினர்!

தொழில்களில் இயந்திரக் கருவி பயன்பட்டதால், உற்பத்தியின் அளவு அதிகப்பட்டது; முதலாளிக்கு இலாபம் குவிந்தது. கைத் தொழிலின்போது தேவைப்பட்ட அளவு தொழிலாளர்கள் தேவைப்படவில்லை; கூலியும் மட்டம், வேலை முறையோ--தொழிலாளர்களைக் கசக்கிப் பிழிவதாகவே இருந்தது!

நாளெல்லாம் ஒரு தொழிலாளி--கைத் தொழில் மூலம் சில கருவிகளைப் பயன்படுத்தி 4880 ஊசிகள் செய்ய முடிந்தது; இயந்திரத் தொழில் முறையின் மூலம்--ஓர் இயந்திரத்தில் ஒரு நாளில் 1,45,000 ஊசிகள் தயாரிக்கப்பட்டன.

இந்த அளவு உற்பத்திக்காகக் கைத்தொழில் முறை மூலம் உற்பத்தி செய்வதானால், 125 தொழிலாளர்களைப் பயன்படுத்தி இருக்க வேண்டும். 125 தொழிலாளர்களுக்கும் கூலி தந்திருக்க வேண்டும்; ஆனால் ஓர் இயந்திரத்தை--சிலரைக் கொண்டு நடத்தச் செய்து, முதலாளி இலாபமடைகிறான்--செல்வம் வாழுகிறது! பரம்பரைப் பிரபு--இந்தப் பணப் பண்ணைச் சீமானிடம்--பயப்படக் கூடச் செய்கிறான்!

கைத் தொழில்முறை இருந்தபோது கருவிகளைத் திறம்படப் பயன்படுத்தும் ஆற்றல் உள்ளவர்களே தொழில் செய்ய முடிந்தது; பெண்களுக்கும் - குழந்தைகளுக்கும் குறைந்த கூலி கொடுத்தால் போதுமானதாக இருந்தது; எனவே, தொழில் அதிபர்கள், 'இது கொடுமை' என்று எண்ணாமல் குழந்தைகளைக் கடுமையாக வேலை வாங்கினர்; 'பெட்டியில் லாபம் சேர்ந்தால் போதும்' என்பதன்றி, வேறு அக்கறை அவர்களுக்கு இருக்க முடியும்?

நூல் நூற்கும் இயந்திரம்--நீராவி விசை இயந்திரம் முருக்கேற்றும் இயந்திரம் போன்ற பல நூதனக் கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டு, தொழில் தரத்தையும் உற்பத்திப் பெருக்கத்தையும் அதிகமாக்கினர்.

இந்த இயந்திரங்களைக் கண்டு பிடித்தவர்கள்--பெரும்பாலும்--ஏழையின் உலகினரே!

இலட்சக் கணக்கில் பணம் செலவிட்டு எந்தச் சீமானும் கண்டுபிடித்ததும் அல்ல!

பாட்டாளியின் உடலிலே கொட்டும் வியர்வை கண்டு கண்ணீர் சொரிந்தவர்கள். 'அவனுடைய சிரமத்தைக் குறைக்கக் கருவிகள் பயன் படாதா என்ற நல்லெண்ணத்தினாலும், மொத்தத்தில், 'உற்பத்தி பெருகிச் செல்வம் வளர்ந்தால் பாடுபடுபவனுக்கு நலம் கிடைக்கும்' என்ற நோக்குடனும், இயந்திரங்களைக் கண்டு பிடித்தனர்; ஆனால். அதனைக் கொண்டு பாட்டாளிகளை மேலும் கசக்கவே முதலாளிகள் முனைந்தனர்!

படிப்பு இல்லை! ஏழைக் குடும்பம்; பதின்மூன்று குழந்தைகள் உள்ள குடும்பம்; அதிலே பிறந்த ரிக்கார்டு ஆக்ரைட் கண்டுபிடித்து தான் நூட்பு இயந்திரம்!

கையால் நூற்பதைவிட, நேர்த்தியாகவும்--அதிக அளவிலும் நூற்கக் கூடிய இயந்திரம்!

கைத் தொழிலிலே ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பாட்டாளியின் வியர்வையைக் கண்டு, ஆக்ரைட் மனம் வேதனைப்பட்டது; 'அவர்களின் துயரைக் களைய வேண்டும்' என்ற எண்ணம் உதித்தது; அவனுக்கு ஓர் ஆராய்ச்சிக் கூடம் கிடையாது--அறிவு தரும் ஏடுகள் கிடையாது. அவன் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டதே-- அய்ம்பது வயதான பிறகு தானாம்.

அவன் தொழில், தலைமயிர் வாங்குவது-சாயம் போடுவது--அதைத் தலைக்குச் சவுரிகளாக்கி விற்பது--இவைகள் தான்!

வறுமைதான் தோழன்! மனைவியோ -- கடிந்துரைப்பாள்! அவன் மனமோ 'நூற்பவர்களின் கஷ்டத்தைப் போக்கி, உற்பத்தியின் அளவைப் பெருக்கவல்ல ஒரு நூதன முறையைக் கண்டுபிடிக்கவேண்டும்' என்பதிலேயே சென்றது!

விதவிதமான பொம்மை இயந்திரங்கள் செய்வானாம்! வறுமையால் வாடிய மனைவி, இந்த வீண்வேலை செய்யும் கணவனிடம் சண்டையிடுவாளாம்! பொம்மைகளை உடைத்தெறிவாளாம்!

கந்தல் உடை! கண்கள், ஏதோ ஒரு வித பித்தம் அவனுக்கு இருப்பதைக் காட்டிற்று! கடைசியில் அவன் இயந்திரத்தைக் கண்டுபிடித்தான்.

(திராவிட நாடு இதழில் அண்ணா எழுதியது)