உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி/27. நம் - இந்தியத் தொழிலாளியின் நிலை

27. நம் - இந்தியத் தொழிலாளியின்
நிலை

லகில் பல்வேறு நாடுகளில் வாழும் மக்கள். நம்மை விடக் குறைவாகவே உழைக்கின்றார்கள்; ஆனாலும், நம்மைவிட வசதியான நல்வாழ்வைப் பெற்றிருக்கிறார்கள்; ஏன் அப்படி?

இங்கிலாந்தில் உள்ள ஒரு தொழிலாளிக்குக் குடியிருக்க சுகாதாரமான வீடு கிடைக்கிறது; அந்த வீட்டில் ஓய்வாக இருக்கும்போது "உலகம் என்ன சொல்கிறது" என்பதைக் கேட்க ரேடியோவும், படித்து அறிய பத்திரிக்கைகளும் இருக்கின்றன!

இரஷ்யாவில் உள்ள ஒரு தொழிலாளியின் மனைவி கற்பிணியானால், குழந்தை பிரசவிப்பதற்கு மூன்று மாதம் முன்பிருந்தே--பிரசவித்து மூன்று மாதம் வரை -- சர்க்கார் செலவிலேயே மருத்துவ வசதிகள் செய்து தரப்படுகின்றன!

இப்படி ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் வாழ்க்கை வசதிகள் கிடைக்கும்போது, நம் நாட்டு மக்களுக்கு இது. கிடைக்காது போவானேன்?

'நம் நாட்டு மக்கள்தான் மிகக் கடினமாக உழைப்பவர்கள்' என்று சொன்னேனல்லவா? அப்படி இருந்தும் அவர்களால் நல்வாழ்க்கையைப் பெற முடியவில்லை என்றால், ஏன்?

நாட்டு மக்கள் இத்தனை உழைத்தும், நல்வாழ்வு பெற முடியாமலிருப்பதற்குக் காரணம், நாடு வளமற்றதா என்றால் அதுவும் இல்லை!

நிலக்கரியும், சுண்ணாம்பும் மட்டும் வைத்துக் கொண்டிருக்கின்ற இங்கிலாந்து -- திராட்சைக் -- கொடிகளை மட்டும் வைத்திருக்கின்ற பிரான்சு -- பால் பண்ணை நடத்தும் டென்மார்க் -- இவை எல்லாம் உலகில் வாழ்கின்றன! மக்கள் செழிப்பான வாழ்வு பெற்றிருக்கின்றனர்!

புகையிலையும், தங்கமும், முத்தும், கரும்பும், இரும்பும், கனியும், நெல்லும் இதர எல்லா வளமும் உடைய நாம் வாழ முடியாமல் ஏன் தவிக்க வேண்டும்?

தங்கம் இருக்கும் நம் நாட்டில் தரித்திரம் இருப்பானேன்? முத்துக் கிடக்கின்றது கடலில்--நம் வாழ்வில் சத்து ஏதுமின்றி வாழ்வானேன்?

கரும்பு, விளைந்தும் நமக்கு வாழ்வு கசப்பானேன்?

இரும்பும் இன்ன பிற கனிப் பொருள்களும் கிடைத்தும், இல்லாமையில் நாட்டவர் இடர்படுவானேன்?

இவற்றை அனுபவிக்கின்ற ஆளுகின்ற உரிமை நம்மிடம் இல்லை என்பதால் தானே!

விருதுநகரில் ஒரு தொழிற்சாலை தொடங்க வேண்டுமானால், டில்லியின் உத்தரவு பெற வேண்டும் என்ற நிலை இருக்கிறதே தானே இருக்கிறது? சூத்திரக் கயிறு டில்லியிடம்

1947-க்குப் பிறகு ஏற்பட்ட நிலையினால் பொம்மலாட்டத்தில் வரும் பொம்மைகள் போல்--டில்லி ஆட்டுவிக்கிறபடி எல்லாம் ஆடுகிற பொம்மைகளாகத் தானே நாம் இருக்க வேண்டியுள்ளது?

தாங்களாக நாட்டவரின் நலம்பேண -- ஏதேனும் காரியங்களைச் செய்ய அதிகாரம் படைத்திருக்க வில்லையே, இங்குள்ள மக்கள்.

-(நம்நாடு 2-7-'66)