உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி/7. அரசு ஊழியர்களுக்கு அண்ணா அறிவுரை
7. அரசு ஊழியர்களுக்கு
அண்ணா அறிவுரை
நானும் உங்களில் ஒருவன்
அரசு அலுவலகங்களில் பணியாற்றும் உங்களுக்கு மனக் குமுறல் நிரம்ப உண்டு; ஊதிய அமைப்பில்--வேலை வாய்ப்புகளில்-முன்னேற்றம் பற்றி உங்களுக்கு குறைகள் இருக்கின்றன என்பதை நான் அறிவேன்; முடிந்தவரையில் நானும், என் நண்பர்களும் அவற்றில் நிச்சயம் அக்கறை காட்டி ஆவன செய்ய முயலுவோம்.
உங்கள் குறைகள் ஏற்கெனவே உள்ள மனக்குறைகள்; நாங்களோ புதிதாக வந்தவர்கள்; எனவே 'அய்யோ--பாவம்' என்ற உணர்ச்சியோடு எங்களை அணுக வேண்டுகின்றோம்.
உங்கள் குறைகளுக்குப் பரிகாரம் தேடி எங்களுக்கு உடனடியாகத் தொல்லை கொடுக்காதீர்கள்! ஒரேயடியாகத் தொல்லை கொடுக்காதீர்கள்!
'மற்ற விஷயமெல்லாம் தெரிகிற இவர்களுக்கு இதுதானா தெரியாது!" என்று எண்ணிடாமல் 'அய்யோ--பாவம்! இவர்களுக்கு இதெல்லாம் தெரியாது; சொல்லிக் கொடுப்போம்' என்ற அந்த எண்ணத்தோடு எங்களை அணுகுங்கள்!
உங்கள் குறைகளை நாங்கள் மெல்ல மெல்ல நிதானமாகத் தீர்ப்போம்; ஆனால் நிச்சயமாகத் தீர்ப்போம்!
அரசு அலுவலகங்களில் பணியாற்றுகிறவர்கள் என்று உங்களை நான் அறிந்திருப்பதை விட உங்கள் வீடுகளில் நான் உங்களைப் பார்த்திருக்கிறேன்!
நான் காஞ்சிபுரம் நகர மன்றத்தில் ஓர் எழுத்தாளனாகப் பணியாற்றியிருக்கிறேன்; அதுவே நீடித்திருந்தால், உங்களைப் போன்றே தொல்லைகளை அனுபவித்துக்கொண்டுதான் இருந்திருப்பேன்!
வெறும் தலைவலி வந்தாலே தாங்க முடியவில்லையே! இந்த அரசு உங்கள் அரசுதான் என்றாலும், வாழ்வில் குறைகள் இருந்தால் வலி நிச்சயம் இருக்கும்!
என்னுடைய முறை, வலி பறந்து போகிறமாதிரி மெல்லத் தேய்கின்ற முறை.
கூடிய விரைவில் எங்களாலே முடிந்த அளவிற்கு உங்கள் குறைகளைக் கவனிப்போம் என்ற உறுதி தருகிறேன்.
(கோட்டை அரசு ஊழியர்களிடையே அண்ணா
ஆற்றிய உரை 6-3-67)
★★★
அரசாங்க அலுவலர்களான நீங்கள் ஆக்கப்பூர்வமான யோசனைகளைக் கூற வேண்டும். எனக்குப் பதவி வந்து விட்டதாகக் கருதி நீங்கள் ஒதுங்குவீர்களானால் பதவி எனக்கு ஒரு நோயாகவே மாறி விடும். ஆகவே, தாராளமாக யோசனைகளைக் கூறுங்கள்.
நீங்களும் நானும் சேர்ந்து செய்ய வேண்டியது நிரம்ப உண்டு; உணவு நெருக்கடியைத் தீர்க்க அரும்பாடு படுங்கள்; தொழில் வளத்தைப் பெருக்குவதில் உங்கள் அறிவாற்றலைப் பயன்படுத்துங்கள். பெருகுகின்ற தொழில் வளத்தின் மூலம் கிடைக்கக்கூடிய செல்வத்தைச் சமுதாயத்திற்கு முழுமையாகப் பங்கிட வழிமுறைகளை வகுத்துத் தாருங்கள். வெறும் செல்வத்தைவிட நிலையான கல்விச் செல்வத்தை எல்லா மக்களும் பெற வழி செய்யுங்கள்.
நம் முன்னாலே இருக்கின்ற பணிகள் மலைபோல் இருக்கின்றன. தனி ஒரு மனிதனாலோ, அவருக்கு துணையிருக்கும் ஏழு எட்டு அமைச்சர்களாலோ ஆகக் கூடிய காரியம் அல்ல இது. நீங்கள் அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டிய காரியம்.
உங்கள் வீட்டு முதல் பிள்ளை
உங்கள் அத்தனை பேருடைய அன்புக்கு அரணாக இருக்கின்ற வரையில் நிச்சயம் நாங்கள் எடுத்த பணியில் வெற்றி பெறுவோம்.
தலைமைச் செயலாளர் அவர்கள் என்னை முதலமைச்சர் என்று கூறினார். உங்கள் அலுவலகத்தைவிட உங்கள் இல்லத்தைப் பற்றியும், உங்கள் இல்லங்களில் உள்ள கஷ்டம் பற்றியும் நான் நன்றாக உணர்ந்திருப்பதால், உங்களின் முதலமைச்சர் என்பதைவிட உங்கள் வீட்டிலுள்ள முதல் பிள்ளை என்று கருதி ஒத்துழைப்புத் தர வேண்டும்.
(கோட்டை ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் அரசு அதிகாரிகள்,
அலுவலர்களிடையே அண்ணா பேசியது.)
🞸🞸🞸
ஆட்சி ஒரு தொடர்கதை--சிறுகதை அல்ல தொழிலாளர்களுக்காகப் பணி புரிகின்றவர்கள் சமுதாயத்தின் மதிப்பைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும்; அவர்கள் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் இருக்க வேண்டும்.
"முதலில் கடமையைச் செய்யுங்கள், பிறகு உரிமையைக் கேளுங்கள்" என்று முன்பு (ஆட்சியில்) இருந்தவர்கள் சொன்னதாகவும், ஆனால் நாங்கள் (தொழிலாளர்கள்) கடமையைச் செய்தும், உரிமையை அவர்கள் தரவில்லை என்பதாகவும் இங்கு கூறப்பட்டது. இந்த முறையில் பேசுவது சரியல்ல. இந்தத் தப்பான முறையைப் பின்பற்ற வேண்டாம். நான் எனது காலத்தில் முடிந்ததைச் செய்வேன். எனக்குப் பின் வருபவர்கள் இயன்றதைச் செய்வார்கள். இது தொடர்கதையே தவிர தனித்தனிச் சிறுகதை அல்ல.
"எங்கள் கோரிக்கைகளை இதோ எழுதித் தந்திருக்கிறோம்; படித்துப் பாருங்கள்! அதில் நியாயம் இருப்பதாக உங்களுக்குத் தோன்றினால், செய்யுங்கள்; இல்லாவிட்டால் வேண்டாம்" என்று இங்கு கூறப்பட்டது. நியாயம் நிச்சயம் இருப்பதால் தான் இவ்வளவு தைரியமாகப் பேச முடிகிறது. ஆனால் நியாயம்கூட அதிக விலை என்றால் அதை வாங்குவது கடினம். என்னிடம் கொடுக்கப்பட்டுள்ள பெட்டிதான் பெரிது. பணம் சிறிது.
மந்திரியே தவிர மந்திரக்காரன் அல்ல
மந்திரி என்றால் மந்திரக்காரன் அல்ல. நீங்கள் வந்து பாருங்கள், உங்கள் பணத்தை இப்படி இப்படிப் பங்கிட்டு வைத்திருக்கிறேன் என்று காட்டுகிறேன். அதிலிருந்து கொஞ்சம் எடுத்து இதற்குப் போடலாம். இதிலிருந்து அதற்கு எடுத்துக்கொள்ளலாம் என்று உங்களுக்கு உண்மை, நியாயம் என்று தோன்றினால் செய்யுங்கள்.
நான் உங்கள் கஷ்டத்தை அறியாதவன் அல்ல; உங்கள் மத்தியிலிருந்து வந்தவன்தான்--எங்கிருந்தோ வந்தவன் அல்ல.
உங்கள் குடும்பம் தழைக்க வேண்டும். உங்கள் குடும்பங்களில் நிம்மதி நிலவ வேண்டும் என்பதே என் ஆசை.
ரூபாய்கக்கு படி அரிசித் திட்டத்தை நான் கொண்டு வந்தபோது, அதிகாரிகள் என்னைக் கோபத்தோடு அல்ல பரிதாபத்தோடு பார்த்தார்கள். 'விபரம் தெரியாமல் செய்கிறானே' என்ற அனுதாபம் அவர்கள் பார்வையில் இருந்தது.
ஏழை மக்களுக்குக் கட்டுபடியாகக் கூடிய விலையில் உணவு வழங்கப்படவில்லையானால், நாட்டில் எந்த நல்ல காரியமும் சரியாக நடைபெறாது எனக் கருதுபவன் நான். அதனால்தான், யாரும் செய்யக் கூடாத காரியத்தை "செய்யக்கூடாது" என்று மற்றவர்கள் சொல்லும் காரியத்தை--ரூபாய்க்கு படி அரிசித் திட்டத்தைச் செய்யத் துணிகிறேன்.
எதிர்காலம் தொழிலாளர்களுக்கே !
எதிர்காலம் தொழிலாளர்களுடையது என்பது அய்யமில்லை. எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய அரசு தொழிலாளர் அரசாகத்தான் அமையும்.
தொழிலாளர்களுடைய கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை நான் ஏற்கிறேன். அக்கறையோடு கவனிப்பேன். உடனடியாகச் செய்யக் கூடியதை உடனடியாகச் செய்வேன். படிப்படியாகச் செய்யவேண்டியதைப் படிப்படியாகச் செய்வேன்.
கல்வித் திட்டத்தின் கீழ் பொது அறிவு போதனை தொழிலாளர்களுக்குக் கல்வி போதிக்கப்படுவதைக் காண மகிழ்ச்சியடைகிறேன். நம் நாட்டில் ஒரு கெட்ட பழக்கம், படிப்பவன் வேலை செய்ய மாட்டான். ஆனால் இந்த நிலை மெல்ல மெல்ல மாறி, தொழிலாளர்கள், தங்கள் வேலை நேரம் போக ஓய்வு நேரத்தில் கல்வியறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிலை வந்திருக்கிறது. இவ்வாறு அவர்கள் கல்வி பெறுவது அவர்கள் தொழிலுக்கே பயன்படும். அதோடும் கூட மற்ற பொது அறிவைப் பெறுவதும் நல்லது. உதாரணமாக அரசாங்க நிதி நிலையைப் பற்றி அவர்கள் தெரிந்து கொள்வது நல்லது. அவ்வாறு தெரிந்திருந்தால் அளவு மீறிய கோரிக்கைகளை எழுப்ப மாட்டார்கள். நாம் கேட்டால்கூட, அவர்கள் எங்கிருந்து தருவார்கள்? என்பது தெரிந்து விட்டால் கேட்கவே மாட்டார்கள்.
ஈர விறகுதான் கிடைத்திருக்கிறது
"மணி என்னாகிறது, இன்னுமா ஆகவில்லை" என்று அடுப்பங்கரைப் பக்கம் திரும்பிப் பார்த்தால் என்ன ஆகும்? "நீங்கள் வாங்கி வந்த ஈர விறகு இலட்சணம் அப்படி; அவசரப்பட்டால் முடியாது; மணி மூன்றாகும்" என்று பதில் வரும்.
அதைப் போல் எங்களிடம் "ஈர விறகு" தரப்பட்டிருக்கிறது. ஊதி ஊதிப் பார்க்கிறோம். பற்றினால் சரி, வேக வேண்டியது வேகும். அவ்வளவு தான் நான் சொல்லுவேன். மற்றதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.
(சென்னை அரசு அச்சகத் தொழிலாளர் கூட்டத்தில், தொழிலாளர்களுக்கான
கல்வித் திட்டத்தில் பங்கு கொண்டு தேர்வு பெற்ற
தொழிலாளர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி
அண்ணா ஆற்றிய உரை)