ஊசிகள்/பக்கம் 36-44

கடவுளைத் தேடி



'இருக்கிறார் கடவுள்
இல்லை கடவுள்?’’
வாதம் பிறந்தது;
மோதல் வளர்ந்தது.

இப்போது,
இல்லை ஒருவர் இங்கே
இருக்கிறார் ஒருவர்
தலைமறை வாக!

போத்தனூர்க் காவலர்
புலனாய் கின்றார்!

நமக்கினி பயமேது?



பஞ்சாப் பீகார்
பகுதியிலிருந்து
கொண்டு வந்த
கோதுமை மூட்டையில்
இரும்புத்துள்கலந்து
இருப்பதாகக்
கண்டு பிடிக்கப்
பட்டதாம்...... நமக்கினி
பயமே இல்லை

எங்கும்
இரும்பு மனிதரை
எதிர்பார்த்திடலாம்.

சிகப்பு விளக்கு எரிகிறது



எச்சரிப்பதிலே
எங்கள்பட்டணப்
பெண்கள் நல்லவர்...
பெரிதும் நல்லவர்!

தொலைவில் வருவோர்
விலகிச் சென்றிட
உதட்டில் சாயம்
ஒளிவிட வருவார்...

உபாயம் தெரிந்தவர்
உடனே தப்பலாம்,
அபாயம் அருகே
வராதீர் என்றே
எச்சரிப்பதிலே
எங்கள் பட்டணப்
பெண்கள் நல்லவர்...
பெரிதும் நல்லவர்.



புரோகிதரே போதும்




“வந்து திரும்ப
வழிச்செல வுத்தொகை
இருநூற் றைம்பது
ஏ.சி வசதி
இருக்கும் விடுதி
சுண்டக் காய்ச்சிய
பசும்பால் முந்திரிப்
பருப்பு முடிந்தால்
முயல்கறி மான்கறி
முக்கியம் பிரியாணி’’



கடிதக் குறிப்பைக்
கண்டதும் ஆசையாய்
புதுமைத் திருமணம்
புரியக் கருதிய
தனபா லனுக்குத்
தலைசுற் றியது;
அவனையும் மீறி
வாய் கத்தியது:



“அம்மா சொன்ன
ஐயரே போதும்.”


உறுமீன் வருமளவும்...


வீர வலசை
விவசாயி போல
மாறு வேடத்தில்
மந்திரி வந்தார்......

ஆட்சித் தலைவர்
அலுவலகத்தில்
உட்கார்ந்திருந்தவோர்
ஊழியரிடம்போய்
விவரம் ஏதோ
வேண்டும் என்றார்;
இரண்டு தாளை
எடுத்து நீட்டினார்.

மாட்டேன் என்றே
மறுத்தார் ஊழியர்.

மந்திரி மகிழ்ந்தார்;
தம்துறை ஊழியர்
நேர்மையை நினைத்து
நெஞ்சங் குளிர்ந்து
சென்றார் வெளியே...



சென்றதும் ஊழியர் -
திருவாய் மலர்ந்தார்...

'பத்து ரூபாய்க்கா
பார்த்துச் சொல்வேன்
அவ்வளவு எளிதாய்?
அலைய விட்டுநான்
அப்புறம் கறப்பேன்
அறுபது எழுபது...’

பழம் நீ அப்பா!



சிறுமலைப் பழம்ஒரு சீப்பும்
பலாப்பழச்சுளைகள்
பத்துப்பன்னிரண்டும்
சிவந்த ஆப்பிள் ஐந்தாறும்
தின்றபின்
மாம்பழம் இங்கே
வரத்தில்லையே
என்று கேட்டவாறு
இருமிக் கனைத்துப்
பாகவதர்கனிந்து
பாடத் தொடங்கினார்:
“பழம்நீஅப்பாபழம்நீ...”

அப்பன் முருகன்
அலறி ஓடினான்.



முதலுக்கே மோசம்





யோகி ஒருவர்,
வெள்ளிக்கிழமை
விடியற் காலம்
தண்ணீரில்தான்
நடக்கப் போவதாய்
விளம்பரம் செய்தார்;
வேண்டிய மட்டும்
காணிக்கை அவர்
காலில் குவிந்தது.

பிறகு
குறித்த நாளில்
குறித்த நேரத்தில்
நீரில் யோகியார்
நிசமாய் விழுந்தார்.
விழுந்தெழுந்து
எழுந்து விழுந்து......
பிறகு தரையில் நடக்கவும்
முடியாது போனார்!



 இளந்தமிழனின் கண்டுபிடிப்பு



ஆர்க்கிமிடீஸ் முதல்
ஐன்ஸ்டீன்வரை
இங்கு
ஆயிரம் ஆயிரமாக
அந்நியர்
கண்டு பிடிப்பு
கணக்கைப் பெருக்கினர்......
ஆயினும்
‘கடன்
அன்பை முறிக்கும்,'
என்றே
உருப்படியாக ஒன்றைக்
கண்டு பிடிக்க
யாரால் முடிந்தது-
எங்கள்
இளந்தமிழனைத் தவிர!

"https://ta.wikisource.org/w/index.php?title=ஊசிகள்/பக்கம்_36-44&oldid=1013716" இலிருந்து மீள்விக்கப்பட்டது