ஊசிகள்/பக்கம் 55-65

(ஊசிகள்/பக்கம் 55-64 இலிருந்து வழிமாற்றப்பட்டது)



இந்தியப் பாதுகாப்புச் சட்டப்படி...



'வெள்ளைத்தாளின்
விலையேற்றத்தை
எப்படித்தடுப்பது?...'

இருக்கவே இருக்கிறது
இந்தியப்
பாதுகாப்புச்சட்டம்-
கற்றை கற்றையாய்க்
கண்டபடி எழுதிக்
கவியரங்கேறும்
கவிகளை உடனே
கைது செய்தால்போதும்
சடசடவென்றே
சரிந்து விழும்!

உயிருள்ள பத்திரிகை





லாரி மோதி
மாடு சாவு
மாடு முட்டிக்
கிழவி மரணம்

கணவன்மனைவியின்
கழுத்தை அறுத்தான்

மருமகன் மாமன்
மண்டையை உடைத்தான்

இவை தாம்
என் தமிழ் இனத்தை மேலே
உயர்த்த வந்த
ஒரேஉயிருள்ள
பத்திரிகையிலே
பளிச்சிடும் செய்திகள்.

பல்லவி



"இறந்த பின்னால்
என்னைப் பற்றி
எழுத வேண்டும்
இயலுமா உம்மால்?"

'இந்த வினாடியே
எழுதத் தயார்நான்......

சத்திரம் வைத்தார்
சாவடி அமைத்தார்
மரங்கள் நட்டார்
தண்ணீர் போட்டார்...
தப்பு ஊற்றினார்'

'அடடா போதும்
அண்டப் புளுகரே!
இனிமேல் நீரே
எனது பரம்பரைச்
சரித்திரப் பண்டிதன்
சம்மதம்தானே?"

மானியம் இழந்த மறுநாள்...

எங்கள்
மாஜி மன்னர்
மானியம் இழந்த
மறுநாள் நண்பகல்
பத்துக் காசைத்
தொலைத்து விட்டுக்
கண்டு பிடிக்கக்
கட்டளையிட்டார்

நானும்
கோடைக்காலக்
கொளுத்தும் வெயிலில்
தேடித் தேடி
அலுத்துப்போனேன்.
கடைசியில்
பையில் இருந்த
பத்துக்காசைக்
கையில் எடுத்துத்
தரையில் போட்டுக்
கண்டு பிடித்ததாய்க் கத்தினேன்.

மாஜி மன்னர்
மகிழ்ந்து போனார்
மானியம் மீண்டும்
வந்ததைப் போல!

சுவைஞர்!



அந்த
நந்த வனத்தில்
கலாப மயிலைக்
கண்ணிமைக்காமல்
பலாப்பழத் தொந்தி
படைத்த ஒருவர்
பார்த்தவாறிருந்தார்......
பக்கம் சென்றுநான்
மயில்மேல் அதிகப்
பிரியமோஎன்றேன்

'ஆர் சொன்னார்? மயில்
கறிமேல் என்றார்

தலை குனிவு?





பாரதச் செல்வனும்
அந்நியச் சிறுவனும்
தத்தம்
தேசப் பெருமை
பேசலானார்......

"எங்கள் நாட்டில்
நாய்கள் பற்பல
குட்டிகள் போடும்...... ”

"எங்கள் நாட்டில்
மட்டும் என்னவாம்?"

"எங்கள் நாட்டில்
பன்றிகள் பற்பல
குட்டிகள் போடும்...... ”

"ஆச்சர்யம் இதில்
என்னவாம்......
அங்கும் அப்படியே!”



"எங்கள் நாட்டில்
கட்சிகள் பற்பல
குட்டிகள் போடும்....."

அந்நிய சிறுவன்
அமைதியாகத்
தலையைக் கீழே
தொங்கப் போட்டான்.

செய்யும் முறை




அவர்
சிவப்பு விளக்குச்
சிறுகதை எழுதிச்
சேர்த்த பணத்தைச்
செலவு செய்வது எப்படி
என்று
சிந்தனைத் தேரில்சென்றார்

பின்னர்
சிவப்பு விளக்குத்
தெருவில் நின்றார்

விசேஷ நிருபர்



சீமான் வீட்டுத்
திருமணப் பந்தல்
பற்றி எழுதுவேன்
பத்தி பத்தியாய்

இரண்டு லட்சம்பேர்
இருக்கத்தக்க
பந்தல் என்பேன்

அதை
மூன்று லட்சம்பேர்
தினமும் காண
வரிசை வரிசையாய்
வருகிறார் என்பேன்.

நான்தான்
வீரமணியின்
விசேஷ நிருபர்

வீரமும் விவேகமும்



வியட்நாம் யுத்தம்
ஏன் நின்றது?

அமெரிக்கப்படை
வீசிய
'நப்பாம்:
குண்டில்
இருந்த பித்தளையைப்
பெயர்த்தெடுத்தே
ஆயுதம் செய்து
விரட்டி அடித்தனர்
விடுதலை வீரர்-
வியட் நாமியர்!

இந்தியாவில்
அமெரிக்கன் ரிப்போர்ட்டர்
ஏன் நின்றது?

இலவசமாய் அதை வாங்கிக்



கடையில் நிறுத்துப்போட்டுக்
கிடைத்தப் பணத்தில்
சோவியத் நாடு'
சந்தாஅனுப்பினர்
எங்கள்
பாரதத்தினர்?

"https://ta.wikisource.org/w/index.php?title=ஊசிகள்/பக்கம்_55-65&oldid=1013724" இலிருந்து மீள்விக்கப்பட்டது