எக்கோவின் காதல்/இரண்டு தந்தி

11
இரண்டு தந்தி

அப்பப்பா, விடுமுறை வாங்குவதற்குள் பெரும் பாடாய்ப் போய் விட்டதே! பெரிய அதிகாரிகளாக ஆகிவிட்டால் மனிதப் பண்பே மாறிவிடுகிறது; மற்றவர்களுடைய நிலையை உணருந் தன்மை அற்றே போய் விடுகிறது; என்னுடைய அவதி என்ன என்பதை அறியாமலேயே 'ஆபீசு வேலை 'ஆபீசு வேலை' என்று அழுதுகொண்டேயிருக்கிறார் 'மானேஜர்' என்று முணுமுணுத்துக் கொண்டே அவசர அவசரமாகக் 'கார்' நிலையத்திற்கு விரைந்துகொண்டிருந்தான் அரங்கசாமி.

அரங்கசாமி காரைக்குடியில் ஓர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் வாலிபன். அவன் மனைவி தேவகி முதற் பிள்ளைப் பேற்றுக்காக அவளுடைய தாயகம் சென்றிருந்தான். முதற் பிள்ளைப் பேறானதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தாள். தேவகி பிள்ளைப் பேற்றால் மிகத் தொல்லைப் படுவதாகவும் அதனால் உடனே புறப்படவேண்டுமென்றும் அரங்கசாமிக்குத் தந்தி வந்திருந்தது. தேவகி மீது உயிரைவைத்திருந்தான் அவன். அதனால் உடனே புறப்பட 'மானேஜரிடம்’ விடுமுறை வாங்குவதற்குப் பட்டபாட்டை நினைத்துக்கொண்டு தான் கார் நிலையத்திற்கு வந்தான். இவன் வந்து சேரும் போது திருச்சிராப்பள்ளி வண்டி புறப்பட்டு விட்டது. அந்த வண்டியில் இடமும் இல்லை . அதனால் அடுத்த வண்டிக்குக் காத்துக்கொண்டிருந்தான்.

உட்கார்ந்திருந்தபொழுது அவன் உள்ளம் ஒரு நிலையில் இல்லை. தேவகியைப்பற்றிய எண்ணமே ஓடிக்கொண்டிருந்தது. நிலையத்தில் வேறு பல ஊர்களுக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருக்கும் கரிவண்டி, 'பெட்ரோல்' வண்டி இவற்றின், இரைச்சலைக் காட்டிலும் அதிகமாக இரைந்துகொண்டிருந்தது அவன் இதயம். பல வண்டிகள் உள்ளே நுழைவதையும், பல வண்டிகள் வெளிக் கிளம்புவதையும், மக்கள் ஓடோடி வந்து நெருக்கியடித்துக் கொண்டு வண்டியில் ஏறுவதையும் பார்க்கப் பார்க்க இவனுக்கு எரிச்சலாக இருந்தது. இவன் எதிர்பார்க்கும் வண்டியைக் காணவில்லையல்லவா; அதனால்தான். 'சனியன், நாம் எதிர்பாக்கும்போது தான் வராது. நாம் சும்மா இருக்கும் போது திருச்சிராப்பள்ளி வண்டி நிமிடத்திற்கொன்றாக ஓடும்' என்று அங்கலாய்த்துக் கொண்டான். வண்டி மணிப்படிதான் ஓடுகிறது. இவனுடைய அவசரம் அப்படி எண்ணும்; படி செய்கிறது. தேவகிக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்று எண்ணுவான். மனம் 'குபீர்' என்னும்' 'சேச்சே, அப்படியெல்லாம் நேராது. ஏன் நாமாக அலட்டிக் கொள்ளவேண்டும்?' என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொள்வான்.

இவ்வாறு எண்ணிக்கொண்டேயிருந்தவன் சலிப்போடு எழுந்து அங்குமிங்குமாக நடந்து பார்த்தான். அப்பொழுதும் 'கார்' வரவில்லை . 'என்னடா இது பெரிய தொந்தரவாய்ப் போச்சு; சனியன் பிடித்த 'மானேஜர்' முன்னாடியே விடுமுறை தந்திருந்தால் இரயிலிலாவது போய்த் தொலையலாம்' என்று எண்ணிக்கொண்டே 'சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தான்.

மாய வாழ்வு சதமாகுமா-மானிடனே நீ
மனததை அலைய விடலாகுமா

என்று ஒரு பிச்சைக்காரி பாடின பாட்டு அவன் செவியில் - வந்து மோதியது. அவனுக்கு அந்த ஓசை பெரிய துன்பத்தைக் கொடுத்தது. அவன் அருமை மனைவி தேவகியைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்கும் போது 'அபசகுனம்' போல இப்படிப் பாடுகிறாளே என்று அவளை வெறுத்தான். ஆனால் அவளுடைய தோற்றம் அவளுக்காக இரக்கம் காட்டச் செய்தது. கிழிந்த கந்தலாடை உடுத்தியிருந்தாள். குலைந்து கிடந்த கூந்தல் அவளுடைய முகத்தில் அசைந்தாடிக் கொண்டிருந்தது. அதை ஒதுக்கிவிட்டுக்கொண்டே பாட்டுப்பாடி ஒவ்வொரு காரிலும் கைகளை நீட்டிப் பிச்சை கேட்டு வந்தாள். இடுப்பில் சுமார் மூன்று வயதுக் குழந்தை ஒன்றும் இருந்தது. அவள் பாடிய பாட்டு, பிச்சை கேட்பதற்காகத்தான் என்றாலும். அந்த ஒலி அவளுடைய இதயத்தைப் பலமாகக் கௌவிக் கொண்டிருந்த சோகத்தின் எதிரொலியாக இருந்தது. அந்தக் காட்சியும் அந்தப் பாட்டும் அரங்கசாமியை, தன் சொந்த வாழ்வைப் பற்றிய நினைவிலிருந்து வேறெங்கோ இழுத்துச் சென்றன. சிந்தனை வீசிக்கொண்டிருந்தது. 'இந்தப் பிச்சை வாழ்வு நம் நாட்டைவிட்டு என்று தொலையுமோ? இதற்கெல்லாம் காரணம் அரசாங்கந்தான். அரசாங்கம் என்ன செய்யும்? அரசாங்கம் எவ்வளவு பிச்சைக்காரர்களைத்தான் கவனிக்க முடியும்? பெரும்பாலும் இன்றைய உலகில் எல்லோருமே பிச்சைக்காரர்களே? ஆனால் ஒவ்வொருவருக்கும் இடையே கொஞ்சம் கொஞ்சம் வேறுபாடு உண்டு. ஒரு சில கொழுத்த பணக்காரர்களைத் தவிர மற்றைய யாவரும் வெவ்வேறு வகையான பிச்சை வாழ்வுதான் நடத்துகிறார்கள். இவ்வளவு பேரையும் அரசாங்கம் எப்படிக் கவனிக்கமுடியும்? நமக்குள்ளே பொருளாதார சமத்துவம் ஏற்பட்டால் ஒழிய இந்தச் சிக்கல் தீராது. அந்தச் சமத்துவத்தைப் படைப்பதற்கும் உரமுள்ள தீவிரக் கருத்துள்ள ஓர் அரசாங்கந்தான் வேண்டியிருக்கிறது” என்று பெரிய அரசியல் வாதியைப் போல எண்ணமிட்டுக்கொண்டே அவளைப் பார்த்தவண்ணமிருந்தான்.

அவளும் ஒவ்வொரு வண்டியாகப் பிச்சை கேட்டுக் கொண்டே வந்தாள். ஒருசிலர் அவளை அதட்டித் துரத்தினர். மற்றும் சிலர் கிண்டல் செய்தனர். 'எடுப்பது பிச்சை - இடுப்பில் இருப்பது பிள்ளை . திருட்டுக் கழுதைகள், சும்மா ஊரை ஏய்க்கிறதுகள்' என்று சிலர் உண்மைகளைக் கண்டுபிடித்தவர்களைப் போலப் பேசினர். ஆனாலும் இரண்டொருவர் இரக்கங்கொண்டு காசுகள் தராமலும் இல்லை. அப்படிக் கொடுப்பவர்களைப் பார்த்துப் பக்கத்திலிருக்கும் 'கனவான்கள்' இவர்களுக்கெல்லாம் கொடுக்கக் கூடாது சார்! மேலும் பிச்சை எடுக்கத்தான் உதவி செய்தவர்களாவோம்' என்று உபதேசத்தில் இறங்கினார்கள்.

அப்போது பலமாக 'ஆரன்' அடித்துக்கொண்டே ஒரு பெரிய கார் ஒன்று நிலையத்துக்குள் வேகமாக நுழைந்தது. சத்தத்தைக் கேட்டு அவளும் ஓடிவந்தாள் அந்தக் காரை நோக்கி. அதற்குள் அதைப் பின் தொடர்ந்து மற்றொரு வண்டியும் மிக வேகமாக நுழைந்தது. ஓடிய அந்தப் பிச்சைக்காரி அந்தக் காரில் அடிபட்டு விழுந்தாள். கையிலிருந்த குழந்தை கடகடவென உருண்டது. அவளுக்குப் பலமான அடி பட்டதால் இரத்தம் பெருக்கெடுத்தோடியது. அவள் மயங்கிக் கிடந்தாள். காரில் இருந்தவர்கள், நிலையத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் எல்லோரும் ஓடி அவளைச் சுற்றி வேடிக்கை பார்த்தார்கள். உட்கார்ந்து கொண்டிருந்த அரங்கசாமியும் ஓடினான். அதற்குள் பக்கத்திலிருந்த போலீசு வந்து கூட்டத்தை ஒதுக்கிக்கொண்டிருந்தது. சிலர் அவளைத் திட்டினார்கள். சிலர் காரோட்டியைப் பேசினார்கள். இன்னும் சிலர் 'அவள் விதி அவ்வளவுதான்' என்று வேதாந்தம் பேசினர். 'பிச்சைக்காரிதானே! போகட்டும், என்ன குடிமுழுகிப்போகிறது' என்று பேசிக்கொண்டனர் சிலர்.

அனாதையான - ஏழையின் உயிருக்கு உண்மையில் இரங்குபவர்கள் எங்கேயிருக்கப்போகிறார்கள்? உயிரில் கூட, பணக்கார உயிர் - ஏழையின் உயிர் என்ற வேறுபாடு உண்டாகிறதே! துன்பம் பணக்காரனுக்கு ஒருமாதிரியும் ஏழைக்கு ஒருமாதிரியுமா வேதனை தருகிறது? எங்குத் துன்பம் தோன்றினாலும் மனிதன் என்ற முறையில் கண்ணோட்டம் செலுத்துவதுதானே மனிதத் தன்மை. ஆனால் அந்தத் தன்மைதான் மறைந்து போய் விட்டதே!

'போலீசு' தான் என்ன செய்யப்போகிறது? அவள் இறந்தாள். 'போலீசு' காரோட்டிக்குத் தண்டனை தரும்; அல்லது விட்டு விடவும் செய்யும். ஆனால் அவளுக்குப்பின் அந்தக் குழந்தைக்குக் கண்காணிப்பு யார்? அதையல்லவா கவனிக்கவேண்டும்! கடைசியில் அதுவும் பிச்சையெடுத்துத் தான் வாழவேண்டும். அந்தக் குழந்தையும் எதிர்காலப் பிரஜை தான் இந்த நாட்டில்! இதைப்போல எத்தனையோ குழந்தைகள் திரிகின்றன. இங்கே இதையெல்லாம் கவனிப்பவர் யார்? இப்படியே போய்க்கொண்டிருந்தால் இந்த நாடு என்னாவது? பிச்சைக்கார நாடாகத்தானே ஆகும்! தனி மனிதன் வாழ்வுதானே கவனிக்கப்படுகிறது. சமுதாயத்தின் வாழ்வை அதன் போக்கைக் கவனிப்பது யார்? அதைக் கவனிக்காத நாடு என்றும் உருப்பட முடியாது; அந்த நாட்டின் எதிர்காலம் சூனியமாகத்தான் இருக்கும்.

அரங்கசாமி அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். 'ஐயோ! பாவம்! சிறுவயதுப் பெண்ணாக இருக்கிறாள். யாரோ அனாதை' என்று எண்ணிக்கொண்டே உருண்டு விழுந்த குழந்தையின் பக்கம் அவன் பார்வையைத் திருப்பினான். குழந்தை அழுதுகொண்டிருந்தது. குழந்தை கையில் ஒரு பழைய 'மணிபர்சு' இருந்தது. அதை மீண்டும் நன்றாக உற்றுப் பார்த்தான். மேல் புறத்தில் சிறு புகைப்படம் ஒன்றும் இருப்பதைப் பார்த்தான். அவன் மனம் 'சுரீர்' என்றது.

மறுபடியும் அந்தப் பிச்சைக்காரியைக் கூர்ந்து பார்த்தான். அப்படியே செயலற்றுச் சிலைபோல நின்று விட்டான். மனம் வெடித்துவிடும் போலிருந்தது. கண்கள் கலங்கி நீர் ததும்பிக் கொண்டிருந்தன. அதற்கு மேல் அவனால் அங்கு நின்றுகொண்டிருக்க முடியவில்லை. திரும்பி வந்து முதலில் உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்துவிட்டான். எங்கிருக்கிறோம் என்பதே அவனுக்குத் தெரியவில்லை . 'சிகரெட்'டைப்' பற்ற வைத்தான். 'சிகரெட்'டிலிருந்து வெளிப்படும் புகை அவன் முகத்தை மறைத்தவண்ணம் சுழன்று சுழன்று போய்க்கொண்டிருந்தது. புகையைப் பார்த்த வண்ணம் இருந்தான். புகைப்படலம் சலனப்படம் போல் அவனுக்குத் தோன்றியது. அதில் பழைய நிகழ்ச்சிகள் ஓடிக்கொண்டி ருந்தன.

உத்தமபாளையத்தில் வேலுச்சாமி என்பவர் பல நிலங்களுக்குச் சொந்தக்காரர். அவருடைய மகன் அரங்கசாமி அரங்கசாமி விடுமுறை நாள்களில் வயலுக்குச் சென்று வருவதுண்டு. நிலங்களைக் கறுப்பணன் என்பவர் மேற் பார்த்து வந்தார். கறுப்பணன் வீடு வயல் பக்கமாக இருந்தது. 'அரங்கசாமி வரும்போதெல்லாம் கறுப்பணன் அன்பாக வரவேற்று உபசரிப்பது வழக்கம். வாரந் தவறாமல் அரங்கசாமியும் வயலுக்குப் போய் வந்தான். அவன் போவதற்கும் காரணம் இல்லாமல் இல்லை . கறுப்பணன் குடிசையில் கட்டிளங் கன்னி ஒருத்தியிருந்தாள். அவள் அவனுடைய தங்கைமகள்; பெயர் பொன்னம்மாள். அவளுடைய உருவ அமைப்பு அரங்கசாமியைக் கவர்ந்தது.

வழக்கம்போல் ஒருநாள் வயலுக்குச் சென்றான் அரங்கசாமி. கறுப்பணன், வீட்டில் இல்லை. பொன்னம்மாள் மட்டும் இருந்தாள். பொன்னம்மாள் அவனை அன்போடு வரவேற்றாள்.

" உன் மாமா எங்கே?” என்றான் அரங்கசாமி.

"தேனிச் சந்தைக்குப் போயிருக்கிறார்” என்று அவள் பதில் சொன்னாள். சொல்லும்போது சிறிது நாணத்தோடு சொன்னாள்.

"தண்ணீர் கொஞ்சம் தருகிறாயா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான் அவன். “கொஞ்ச மென்ன! எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன்” என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்றாள். தண்ணீரைக் கொண்டுவந்து கொடுத்தாள். இவன் தண்ணீரைப் பருகிய பின் குவளையைக் கொடுத்தான். அவள் கை நீட்டி வாங்கினாள். ஆனால் இவன் பிடியை விடுவதாயில்லை. அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றான். அவன் பார்வையில் கலவரம் நிறைந்திருந்தது. பொன்னம்மாள் அவனுடைய கருத்தைப் புரிந்து கொண்டாள். அவள் நாணித் தலைகுனிந்து “இதெல்லாம் நல்லா இருக்குங்களா?” என்று கேட்டாள்.

“எனக்கு நல்லாத்தானிருக்கு” என்றான் அரங்கசாமி. இருந்தாலும் குரல் தடுமாறியிருந்தது.

“இதெல்லாம் மாமாவுக்குத் தெரிந்தால் என்னைக் கொன்று போடுவாரே!” என்றாள் பொன்னம்மாள்.

“மாமாவுக்குத் தெரிந்தால் தானே!” என்று இவன் சொன்னான்.

"தெரியாமலா போகும்? என்றைக்காவது தெரிந்தால்?” என்று அவள் சொன்னாள்.

இப்படி அவள் சொன்னதும் அரங்கசாமிக்குத் துணிவு பிறந்து விட்டது. “என்றைக்காவது தெரிந்தால்' என்று சொல்வதிலிருந்து இவளுக்கும் உடன்பாடு என்பதை அறிந்து கொண்டான்.

"பொன்னம்மா” என்று சொல்லிக் கொண்டே நெருங்கினான். பொன்னம்மாள் பேசாதிருந்தாள். மோனம் சம்மதத்திற்கு அறிகுறிதானே. பிறகு கேட்கவா வேண்டும்! இளம் உள்ளங்கள் இணைந்து விட்டன. ஒருவர்க் கொருவர் உள்ளங்களைப் பரிமாறிக் கொண்டார்கள்.

ஒற்றையடிப் பாதையில் வண்டி வரும் சத்தம் கேட்டது. சத்தத்தைக் கேட்டுப் பிரிந்து விட்டார்கள். பின்னர், தவறாமல் ஒவ்வொரு ஞாயிறு தோறும் இவர்களுடைய இன்ப விளையாட்டு நடந்து கொண்டே யிருந்தது.

அரங்கசாமி காதலில் வெற்றி பெற்றதைப் போலவே தேர்விலும் வெற்றி பெற்று விட்டான். மதுரைக்கு மேல்படிப்புப் படிக்க அனுப்புவதற்கு அவன் தந்தை ஏற்பாடு செய்தார். விடைபெற்றுக் கொள்ளத் தன் காதலியைத் தேடிச் சென்றான் அரங்கசாமி. பொன்னம்மாள் வழக்கம்போல வரவேற்றாள்.

“மாமா சந்தைக்குத் தானே போயிருக்கிறார்?” என்று அரங்கசாமி கேட்டான்.

“ஆமாம்” என்றாள் அவள்.

“பொன்னம்மா! நான் மேல் படிப்புக்காக மதுரைக்குப் போகிறேன். அதுவும் நாளைக்கே” என்று சொன்னான்.

"நன்றாகப் போய் வாருங்கள்” என்றாள். “ என்ன! நான் போவதில் உனக்கு மகிழ்ச்சிதானா, என்று வியப்புடன் கேட்டான்.

“வருத்தம் என்றால் நின்றாவிடுவீர்? உங்கள் அப்பா விடவேண்டுமே? அதுவுமல்லாமல் படிக்கப் போவதை வேண்டாமென்று சொல்லலாமா?” என்று சொன்னாள் பொன்னம்மாள். “ஓ! அப்படியா! சரி சரி; நான் அஞ்சிக்கொண்டே வந்தேன். நான் சொன்னவுடன் ஒரே அடியாக அழுவாய்; உன் அழுகையை நிறுத்திச் சமாதானப் படுத்தப் பெரும் பாடாய்ப் போய்விடும்; எப்படியெல்லாம் சமாதானம் சொல்வது என்றெல்லாம் திட்டம் போட்டுக் கொண்டு வந்தேன். நீ ஒரே வரியில் 'போய்வாருங்கள்' என்று சொல்லிவிட்டாய்! சரி அதெல்லாம் கிடக்கட்டும் எங்கே அந்தப் பாட்டை ஒரு முறை பாடு! கடைசியாகக் கேட்டுவிட்டுப் போகிறேன்” என்றான்.

“பாடினால் என்ன தருவீரோ?” என்றாள் அவள். “பாடுவதற்கு முன்பு கேட்டால் எப்படித் தருவது? பாடிவிட்டுக் கேள்! வழக்கப்படி தருகிறேன். பாடு முன்பே அச்சாரம் வேண்டுமோ?” என்று அவளுடைய கன்னத்தைக் கிள்ளினான்.

“வேண்டாம்; வேண்டாம்! இதோ பாடுகிறேன்” என்று சொல்லி விட்டு அவளும் பாடினாள். பாட்டு முடிந்ததும் “பொன்னம்மா! சினிமாவில் கேட்ட பாட்டுக்களை அப்படியே பாடுகிறாயே! நீ இந்தக் கிராமத்தில் பிறக்காமல் பட்டணத்தில் பிறந்திருந்தால் சினிமாக்காரர்கள் உன்னை 'ஸ்டார்' ஆக்கியிருப்பார்கள்”

"அதெல்லாம் இருக்கட்டும்? நீங்கள் ஊருக்குப் போகிறீர்களே! எனக்கு என்ன கொடுத்துவிட்டுப் போகிறீர்கள்?” என்று கேட்டாள்.

“உனக்கு என்ன வேண்டும்? இவ்வளவு நேரம் தந்தது போதாதா” "அப்பப்பா! சும்மா இதே பேச்சுதான்; இந்தப் பேச்சுக்கு ஒரு முடிவே கிடையாதா," அவனுடைய சட்டைப் பையில் கையை விட்டாள், 'மணிபர்சு' ஒன்று இருந்தது. அதை எடுத்துக் கொண்டு 'இது என்னிடம் இருக்கட்டுமே' என்றாள்.

"வைத்துக் கொள்ளேன் உனக்கில்லாமலா” என்றான். 'பர்சைத் திறந்து பார்த்தாள். ஒரு காசுகூட இல்லை. வெறும் 'பர்சா'க இருந்தது. “பூ! இவ்வளவு தானா! பணம் இருக்குமென்று பார்த்தேன். ஒன்றுமே இல்லையே! உங்கள் காதலும் இந்தப் 'பர்சு' மாதிரி தானோ?” என்று கிண்டல் செய்தாள்.

“என் காதல் வெறும் 'பர்சு' அன்று. மாணிக்கங்களும், இரத்தினங்களும் நிறைந்த 'பர்சு' பழகப் பழகப் பழையதாகிக் கிழிந்துவிடும். என் காதல் என்றும் புது மெருகோடிருக்கும்; பழுது படாது” என்று சொன்னான். சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது வண்டிவரும் ஒலி கேட்டது. கடைசியாக அரங்கசாமி விடைபெற்றுக்கொண்டு சென்றான்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு விடுமுறையில் தனது ஊருக்கு வந்து சேர்ந்தான் அரங்கசாமி. வந்த அன்றைக்கே துடிதுடித்துக்கொண்டு ஓடினான் பொன்னம்மாளைப் பார்க்க. அங்கே கறுப்பணன் இருந்தமையால் ஒன்றும் பேச முடியவில்லை. அவர்கள் பேசாமலும் இருக்கவில்லை . காதலர்கள் பேசுவதற்குக் கண்ணைவிடச் சிறந்த கருவி வேறு ஏது?

ஞாயிற்றுக்கிழமை வந்தது. பொன்னம்மாள் ஆவலோடு அரங்கசாமியின் வரவை எதிர் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனும் வந்தான். ஆனால் அவன் முகத்தில் எப்பொழுதும் காணப்பட்ட மகிழ்ச்சிக் களைகாணப்படவில்லை. பொன்னம்மாள் முகத்தில் புதுவிதமான ஒரு பொலிவு காணப்பட்டது.அரங்கசாமியின் முகத்தைப் பார்த்ததும் அந்தப் பொலிவு சிறிது மங்குவதுபோல் காணப்பட்டது.

“ஏன் ஒரு மாதிரியாய் இருக்கிறீர்கள்” என்று பரிவுடன் கேட்டாள்.

“ஒன்றும் இல்லை” என்று தரையைப் பார்த்த வண்ணம் கவலையோடு பதில் சொன்னான்.

“ஒன்றுமில்லை யென்றால் உம்ம் என்று ஏன் இருக்க வேண்டும்?” என்று அவன் முகத்தைத் தன் பக்கமாக நிமிர்த்தினாள்.

"பொன்னம்மா! அப்பா, கலியாணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறராம்” என்று அரங்கசாமி சொன்னான்.

“அப்பாவுக்கு இது தெரியுமா?” என்று பெருமகிழ்ச்சியுடன் கேட்டாள் பொன்னம்மாள்.

“இது தெரிந்திருந்தால் திருச்சிராப்பள்ளியில் பெண் பார்த்திருப்பாரா?” என்று சிறிது கோபமும் வருத்தமும் கலந்த குரலில் பேசினான்.

"திருச்சிராப்பள்ளியில் பெண்ணா” என்று திடுக்கிட்டு நின்று “அப்படியானால் என் கதி” என்றாள்.

“பொன்னம்மா! நான் என் தாயாரிடம் இப்போது திருமணம் வேண்டாமென்று எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். அப்பா கேட்பதாகக் காணோம். ஒரே பிடிவாதமாக இருக்கிறார். அவருடைய கோபத்தை மீறவும் முடியாதுபோல் தோன்றுகிறது. என்ன செய்வதென்றே எனக்குத் தோன்றவில்லை” என்று சொன்னான்.

“அப்படியானால் நான் என்னாவது? என் மாமாவும் கோபக்காரர்தானே! நான் இப்போது இரண்டு மாதம் தலை முழுகாமல் இருக்கிறேன். இந்த நிலையில் என் வாழ்வு எப்படியாவது மாமாவுக்குத் தெரிந்தால் வெட்டி ஆற்றில் விட்டுவிடுவாரே! அது உங்களுக்குச் சம்மதந்தானா?” என்று அழுது விட்டாள்.

அரங்கசாமி பேசாமலிருந்தான். அவனுக்கும் அவளை அந்த நிலையில் கைவிட மனமில்லை. என்னென்னவோ எண்ணினான். கடைசியாக எங்காவது ஓடி விடலாம் என எண்ணினான். ஓடி என்ன செய்வது? திடீரென்று எங்கே வேலை கிடைக்கும்? வேலையில்லாமல் இருவரும் திண்டாடுவதா என்ற கேள்விகள் குறுக்கிட்டதால் அந்த எண்ணத்தையும் விட்டு விட்டான். கடைசியில் அவன் தந்தைக்குப் பணிவதைத் தவிர வேறு வழியில்லை என்று கண்டான். அதனால் அவன் ஒன்றும் வாய்திறக்கவில்லை. இருந்தாலும் அவன் கண்கள் ஒவ்வொரு சொட்டாக நீரை உதிர்த்துக்கொண்டிருந்தன.

"என்ன பேசாமல் இருக்கிறீர்கள்; இதற்குத்தானா உங்களை நம்பினேன்? என்னையே கலியாணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னீர்களே! இது தான் உங்கள் காதலா? என் காதல் வெறும் மணிபர்சு அல்ல, என்றும் புதுமெருகோடிருக்கும் - கிழிந்து விடாது, என்றீர்களே! இதோ அதற்குள் கிழிந்து விட்டதே! கிழிந்தது மட்டுமல்ல- மீண்டும் தைக்க முடியாத படி சுக்கு நூறாகி விட்டதே! இது தானா காதல் ? உங்களைச் சொல்லிப் பயன் என்ன? என் அறியாமை! பெரியோர்கள் பார்த்துச் செய்திருந்தால் இப்படியாகுமா? என் இளமைப் பருவத் துடிப்பினால் உங்கள் சொற்களை யெல்லாம் உண்மை என்று நம்பி ஏதோ காதல் என்ற பெயரால் நானும் கட்டுப் பட்டுவிட்டேன். நீங்களும் பருவக்கோளாறுகளுக்கு ஆளானீர்கள்! கலியாணத்துக்கு முன்னால் ஏற்படும் காதலுக்கெல்லாம் இந்தக் கதிதான்! இதை எத்தனை சினிமாவில் பார்த்தேன். பார்த்தும் அது படம் என்று உதாசீனம் செய்து விட்டேன். முதலில் கலியாணம், பின் காமம், அதற்குப் பிறகு , தான் காதல் என்பதை இப்போதுதான் அறிகிறேன். அப்படித் தோன்றும் காதல்தான் நிலைபெற முடியும் ! என்பதையும் தெரிந்துகொண்டேன். நாம் இருவருமே, இளமைப் பருவத்தில் தவழ்ந்து கொண்டிருக்கிறோம். எதையும் ஆராயாமல் காதல் என்ற பெயரை வைத்துக் கொண்டு விளையாடி விட்டோம்” என்ற சொற்களையும் கண்ணீரையும் உதிர்த்துக் கொட்டினாள். உணர்ச்சி வசத்தில் அகப்பட்டிருந்த காரணத்தால் அவளையறியாமல் அவள் உள்ளத்திலிருந்து ஏதேதோ கருத்துகளை அள்ளி வீசினான்.

அப்பொழுதும் அவன் பேசவில்லை . அவனால் என்ன பேச முடியும்?

"சரி; உங்கள் விருப்பம் போல் நடந்துகொள்ளுங்கள். இனிமேல் நான் என் மாமா முகத்தில் விழிக்க முடியாது. எனக்கு ஆறு,கிணறு தான் சதம்” என்று சொல்லிக் கொண்டே படுக்கையில் விழுந்து விம்மி விம்மி அழுதாள்.

அரங்கசாமி அப்பொழுதும் அசையாது நின்று கொண்டிருந்தான். வண்டி வரும் சத்தம் கேட்டது. அரங்கசாமி போய்விட்டான். பொன்னம்மாளும் முகத்தைத் துடைத்துக் கொண்டு பின்புறம் சென்று விட்டாள். கறுப்பணன் வந்ததும் “பொன்னம்மா!” என்று கூப்பிட்டான். அவளும் பயந்து கொண்டே வந்தாள். “ஏம்மா, ஒரு மாதிரியாயிருக்கிறே!” என்று கேட்டான். “ஒன்றுமில்லை மாமா! வாந்தி எடுத்து விட்டேன். அதுதான் ஒரு மாதிரியாய் இருக்கிறேன். வேறொன்றுமில்லை” என்றாள்.

அரங்கசாமிக்கு அன்று இரவு முழுதுமே உறக்கம் வரவில்லை. அவனும் உண்மையிலேயே வருத்தப்பட்டான். வேறு வழியோ தோன்றவுமில்லை. கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தான். சரி, விடியட்டும் பார்த்துக் கொள்வோம். திருமணம் அடுத்த ஆண்டில் வைத்துக் கொள்ளும்படி உறுதியாகச் சொல்லி விடுவோம் என்று திட்டமிட்டான். பொழுது புலர்ந்தது. கறுப்பணன் பதறிக்கொண்டே ஓடிவந்தான்.

"என்ன கறுப்பணா! இப்படி ஓடி வருகிறாய்?” என்று அரங்கசாமியின் தந்தை கேட்டார்.

“ராத்திரி சும்மா படுத்திருந்துச்சுங்க; காலையிலே எந்திருச்சுப் பார்த்தேன்; படுக்கையிலே நகைமட்டுங் கெடக்கு; பொன்னம்மாளைக் காணலிங்க! என்ன செய்யட்டுங்க. ஒண்ணுந் தெரியல்லையே!” என்று பதறப் பதறக் கூறினான் கறுப்பணன்.

“அய்யோ! காணவில்லையா” என்று பதைத்து எழுந்தான் அரங்கசாமி.

சுரீர் என்று 'சிகரெட்' சுட்டு விட்டது அரங்கசாமியின் கையில். அப்பொழுதுதான் எங்கிருக்கிறோம் என்ற நினைவு அவனுக்கு வந்தது. அடிபட்டுக்கிடக்கும் பொன்னம்மாளையும் சூழ்ந்து நிற்கும் கூட்டத்தையும் பார்த்தான்.

“ஐயோ! பொன்னம்மா உன் கதி இப்படியா ஆக வேண்டும். உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியது நான்தானே! இந்தப்பழியை எப்படித் தொலைப்பேன்; உன் நினைவு என் குடும்பத்தில் என்றும் நின்று நிலைபெற ஒரே ஒரு வழி இருக்கிறது. என் தேவகிக்குப் பிறக்கும் குழந்தைக்கு உன் பெயரை வைப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் நான்? உன் குழந்தையை இல்லை - இல்லை நம் குழந்தையை நானே வளர்க்கிறேன். நீ என்ன எண்ணிக்கொண்டு இறந்தாயோ” என்று மனத்திற்குள் சொல்லிக் கொண்டிருந்தான்.

திருச்சிராப்பள்ளி வண்டி வேகமாக உள் நுழைந்தது. அந்த வண்டியை நோக்கி விரைந்தான்.' ஆபீசுப் பையன் 'சார் சார்' என்று ஒடி வந்தான்; அரங்கசாமி திரும்பிப் பார்த்தான். தன் 'ஆபீசு'ப் பையன் தான் என்பதையறிந்து பதறிபோய் “என்னப்பா?' என்றான்!

'ஒங்களுக்குத் தந்தி வந்திருக்குங்க' என்று தந்தி ஒன்றைக் கொடுத்தான்.

"தந்தியா!” என்று அவசர அவசரமாகப் பிரித்துப் படித்தான்.

“Dhevahi Expired” என்று எழுதியிருந்த எழுத்துகள் மங்கலாகத் தெரிந்தன் கண்ணீர் நிறைந்த அவன் கண்களுக்கு.