எக்கோவின் காதல்/எக்கோவின் காதல்

எக்கோவின் காதல்


‘அய்யா தபால்!’

விரைந்து வந்து வாங்கினான் எக்கோ. எல்லாக் கடிதங்களையும் படித்துக் கொண்டே வந்தான். ஒரு கடிதத்தை மட்டும் பிரிக்கும் பொழுதே அவன் கண்கள் பளபளவென்று மின்னின. உதடுகள், உள்ளத்திற் பொங்கியெழும் மகிழ்ச்சியைக் காட்டிக் கொண்டிருந்தன. புருவங்களை நெற்றிமேல் ஏற்றிக்கொண்டு, இமைகளைச் சிமிட்டாமல் படித்தான்.

அன்புடையீர்! வணக்கம். உங்கள் பேனாவிலிருந்து வரும் ஒவ்வொரு மைத் துளியும் உண்டாக்கும் எழுத்து ஒவ்வொன்றும் முதலாளித்துவத்தைச் சிதறடிக்கும் அணுக்குண்டு! உங்கள் பேனா முனை வைதீகத்தின் மார்பைப் பிளந்தெறியும் கூரிய ஈட்டிமுனை! இத்தனை நாள்களாக உங்கள் கட்டுரைகள் தாம் விறுவிறுப்பு வாய்ந்தன என்று எண்ணியிருந்தேன். ஆனால் உங்கள் கதைகளும் அப்படியே இருக்கின்றன. சமுதாயத்தில் நெளிந்து கொண்டிருக்கும் ஊழல்களை அப்படி அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றனவே உங்கள் எழுத்தோவியங்கள். உங்கள் எழுத்துகள் என் உள்ளத்தை ஈர்த்து விடுகின்றன. இந்தத் தடவை வெளிவந்த ‘உடைந்த ஒடு’ உங்கள் அறிவின் பரப்பையும் அதன் கூர்மையையும் நன்கு புலப்படுத்துகின்றது.

இங்ஙனம்,
உங்களிடம் அன்புள்ள,
மல்லிகா.

இதைப் படித்து முடித்துவிட்டுக் கைகளைத் தலைப் பக்கம் அணையாக வைத்துக் கொண்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து விட்டான்.

எக்கோ 'புரட்சி’ என்ற இதழில் அடிக்கடி எழுதி வரும் ஓர் எழுத்தாளன். அவனுடைய கட்டுரைகளும், கதைகளும் உயிரோட்டமுள்ளவை. அரசியல் பொருளியல் முதலிய துறைகளில் மனிதன் அடிமைப்படுத்தப்பட்டுக் கிடப்பதை எடுத்துக் காட்டி, எதிர்காலத்தில் நாட்டின் நிலை எவ்வாறிருக்க வேண்டும் - அரசியல் எவ்வாறு வகுக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றிக் காரசாரமாக எழுதப்படும் கட்டுரைகளை, அரசியலில் மாறுபட்ட கருத்தினரும் பாராட்டுவர். சமுதாய அடிப்படையில் எழுப்பிய அவன் கதைகள் வைதீக மனப் பாங்கினரையும் இளகச் செய்துவிடும். அவன் நடையில் தமிழ் கொஞ்சி விளையாடும். இவன் எழுத்து வன்மையைப் பாராட்டிப் பாராட்டிக் கடிதங்கள் வந்து குவியும். அப்படிப் பாராட்டி எழுதுபவர்களிலே மல்லிகாவும் ஒருத்தி. அவள் திருச்சிக் கல்லூரியிலே பயின்று கொண்டிருப்பவள். நல்ல அழகும் பண்பும் உடையவள். அவளுடைய பாராட்டுக் கடிதம் தவறாமல் வாரந்தோறும் வந்துவிடும்.

ஒரு முறை அக்கல்லூரிக்கு எக்கோ அழைக்கப் பட்டிருந்தான். அவன் அங்கே சென்று சொற்பொழி வாற்றியதைக் கேட்ட மல்லிகா அவன் தோற்றத்திலும் ஆணித்தரமான பேச்சிலும் தன் உள்ளத்தைப் பறிகொடுத்து விட்டாள். அதிலிருந்து எக்கோவுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதத் தவறுவதில்லை.

சில நாள்களுக்குப் பிறகு அவளிடமிருந்து வழக்கம் போல் ஒரு கடிதம் அவனுக்கு வந்தது. அதையும் படித்தான்.

அன்புடையிர்! வணக்கம். நான் இத்தனை கடிதங்கள் எழுதியும் ஒரு விடை கூட உங்களிடமிருந்து வரவில்லையே! ஏன்? எழுத நேரமில்லையா? அல்லது என்னைப் புறக்கணிக்கிறீர்களா? புறக்கணித்தாலும் நான் அதைப் பொருட்படுத்தப் போவதில்லை. என்னுடைய குறிக்கோளில் - இலட்சியத்தில் நீங்கள் முக்கிய இடம் பெற்று விட்டீர்கள். உங்களுடைய கொள்கைகளில் எனக்கு மிகவும் நம்பிக்கை இருக்கிறது.

எங்கள் கல்லூரிக்கு அய்ந்து நாள்கள் தொடர்ந்து விடுமுறை வருகிறது. அவ்விடுமுறையில் சென்னைக்கு வருகிறேன்.

உங்கள்
மல்லிகா

படித்து முடித்துவிட்டு ‘இவள் ஏன் நம்மிடம் வர வேண்டும்! ஒருவேளை நம்மிடம் காதல் கொண்டிருப்பளோ!’ என்று எண்ணமிட்டுக் கொண்டே அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். யாரோ மாடிப்படியில் ஏறிவரும் காலடிச் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான். அழகிய இளம் பெண்ணொருத்தி சிரித்த முகத்துடன் வந்து கொண்டிருந்தாள்.

வணக்கம் என்றாள் வந்தவள்.

பதிலுக்கு வணக்கம் செய்துவிட்டு அமருங்கள் என்று சொல்லி இவனும் அமர்ந்தான். அவள் நாற்காலியை இழுத்துக் கொண்டே, ‘என்னை யாரென்று தெரிகிறதோ’ என்றாள்.

‘எங்கோ பார்த்த நினைவிருக்கிறது’ - என்றான் எக்கோ.

‘நான்தான் மல்லிகா’ - என்று தானே தன்னை அறிமுகஞ் செய்து கொண்டாள் வந்தவள்.

‘ஓ, அப்படியா! ஆம்; இப்பொழுதுதான் நினைவுக்கு வருகிறது. நான் உங்கள் கல்லூரியில் பேச வந்த பொழுது முதல் வரிசையில் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்ததை நான் கவனித்திருக்கிறேன்’ - என்று பழைய நிகழ்ச்சியை நினைவு படுத்திச் சொன்னான் அவன்.

‘நீங்கள் தாய்மொழிப்பற்று வேண்டுமென்று அடிக்கடி எழுதி வருகிறீர்களே, எக்கோ என்று ஏன் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?’ என்று ஒரு கேள்வியை எழுப்பினாள்.

‘நான் தாய் மொழிப்பற்றில் இளைத்தவனல்லன். என் உண்மைப் பெயர் ‘எழிற்கோ' இந்தப் பெயரோடு நான் எழுதி வந்த பொழுது என் எழுத்துகளை மக்கள் வரவேற்கவில்லை; புறக்கணித்தனர்; ஊக்குவிப்பாரும் இல்லை; ஒதுக்கினர். ஒதுங்கியிருக்க என்னால் முடியவில்லை. ஆகவே என் பெயரில் முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் சேர்த்து 'எக்கோ' எனப்பெயர் வைத்துக் கொண்டு எழுதத் தொடங்கினேன். அதன் பிறகுதான் என் எழுத்துக்கு மதிப்பும் புகழும் கிடைத்தன. மக்கள் மனம் இன்னும் ‘அடிமையில் மோகம்’ கொண்டுதான் இருக்கிறது என்பதைத்தானே காட்டுகிறது. இது. இதை யுணர்ந்துதான் என்று மடியும் எங்கள் அடிமையில் மோகம்’ என்று கதறியிருக்கிறார் பாரதி - என்று உணர்ச்சி பொங்க விடையளித்தான் எக்கோ.

அவன் பேச்சிலே சொக்கிப் போயிருந்த மல்லிகா, திடீரென்று எக்கோ பேச்சை நிறுத்தியவுடன் ஒன்றும் பேசமுடியாமல் திகைத்து, ஏதாவது பேசியாக வேண்டுமே என்பதற்காக என்னுடைய கடிதங்கள் தங்கட்குக் கிடைத்தி ருக்குமே’ - என்று மீண்டும் பேச்சைத் துவக்கினாள்.

‘ஆம், கிடைத்தன; இப்பொழுதுகூட உங்கள் கடிதத்தைத் தான் படித்துக் கொண்டிருந்தேன்’ என விடையிறுத்தான்.

‘ஏன் என் கடிதங்கட்கு விடை எழுதுவதில்லை? - என்று அவள் கேட்கும்பொழுது உரிமையும் அன்பும் கலந்திருந்தது அந்தக் குரலில். அவள் பார்வையில் சிறிது கூட அச்சமோ நாணமோ தென்படவில்லை. நெடுநாள் பழகியவள் போற் பேசினாள்.

‘ம்ம்....... ஒன்றுமில்லை. எழுத நேரம் இல்லை - என்று பேச்சை விழுங்கினான்.

இதுதான் சமயம் என்று கருதி நேரம் இல்லையா? மனம் இல்லையா?’ - என்று குறுக்குக் கேள்வி கேட்டாள்.

‘மனம் இருக்கிறது; மனம் என்ற ஒன்று இருப்பதாற்றானே மக்கள் நிலையைக் கண்டு வருந்துகிறது - கொதிக்கிறது என் உள்ளம்.’

‘உண்மையில் உங்கள் மனம் மக்கள் நிலையைக்கண்டு கொதிக்கிறதா? அப்படியானால் நானும் மக்களுக்குள் ஒருத்திதானே! ஏன் என் நிலைக்கு உங்கள் மனம் சிறிதாவது ...’ என்று அவள் சொல்லும்போது அவள் முகம் பெரிதும் கலவரம் அடைந்ததுபோல் காணப்பட்டது.

‘என்ன உங்கள் நிலை? யாராயிருந்தால் எனக்கென்ன? நான் மக்களுக்காக - அவர்களுடைய நல்வாழ்வுக்காக என் உயிரையுங் கொடுக்க ஆயத்தமாக இருக்கிறேன். நான் திட்டங்களை மட்டும் தீட்டிக் கொண்டிருக்கும் வெறும் எழுத்தாளன் மட்டுமல்லன், செயலில் இறங்க வேண்டும் என்று விரும்புகிறவன். நான் உண்மையில் மாக்ஸிம் கார்க்கியைப் போன்றவன். இதைத் தற்பெருமை என்று எண்ணிவிட வேண்டாம். அவன் ஒரு சிறந்த எழுத்தாளனாக இருந்ததோடல்லாமல், புரட்சி இயக்கத்தில் பெரிதும் பங்கு கொண்டு பணியாற்றியவன். அவனைப் போலவே நம் நாட்டு எழுத்தாளர்களும் திகழவேண்டும் என்று கனவு காண்பவன் நான். அதனால் உங்கள் நிலையைச் சொல்லுங்கள். உங்கள் பொருட்டு என்னால் இயன்றதை, என் மனமார ......’ என்று அவன் முடிக்கு முன்பு இவள் பேசினாள்.

‘மனமார வாயார என்று வெறும் பேச்சாகத் தானே இருக்கிறது. செயலில் ஒன்றும் இல்லையே’ என்றாள்.

‘என்ன சொல்லுகிறீர்கள்? நீங்கள் பேசுவது ஒன்றும் புரியவில்லையே! நான் தங்கட்கு விடை எழுதாமல் இருந்ததைக் குறிப்பிடுகிறீர்களா?’

‘இதற்குமேல் ஒரு பெண் எவ்வளவுதான் சொல்ல முடியும்? உங்கள் கற்பனை யெல்லாம் எழுத்தளவிற்றானா?’ என்று சிரித்தாள்.

‘உங்கள் எண்ணத்தை - நிலையை இப்பொழுது புரிந்து கொண்டேன். ஆனால், உங்கள் விருப்பம் நிறைவேறுவ தென்பது இயலாத ஒன்றுதான்’.

'ஏன் நிறைவேறாது? நான் உங்களுக்கு ஏற்றவளாகத் தோற்றவில்லையா? அப்படியானால் எங்கள் கல்லூரிக்குப் பேச வந்திருந்த பொழுது என்னையே பார்த்துக் கொண்டிருந்தீர்களே! அது ஏன்? அந்தப் பார்வையில் எவ்வளவு பொருள்களைப் பொதிய வைத்திருந்தீர்கள்! அதை உண்மை என்று நம்பியல்லவா என் உள்ளத்தைப் பறிகொடுத்துவிட்டேன்' என்று சொல்லும்பொழுது கண்கலங்கி விட்டாள்.

'மல்லிகா! ஆம், அது உண்மைதான்; நான் அன்று உன்னைப் பார்க்கும்பொழுது உன் விழிகளும் என் கருத்தைச் சிதறடித்து விட்டன. அதன் பிறகுதான் என் கதைகளிற்கூட அதிக உயிர்ப்பைக் கண்டேன். என் கற்பனையைக் கிளறிவிட்டன உன் கருவிழிகள். ஆனால் என் நிலைக்கு - என் வாழ்வுக்குக் காதல், பொருத்தமாகத் தோன்றவில்லையே! அதனாற்றான் அந்த எண்ணத்தையே விட்டு விட்டேன். நான் திடீரென்று செயலில் - புரட்சியில் குதித்து விடுவேன். அதனால் எனக்குத் துT க்குத் தண்டனை கிடைக்கலாம், அல்லது என் எழுத்துகள் அரசாங்கத்தின் கண்களுக்கு முட்களாகத் தோன்றுவதால் நான் சிறை செய்யவும் படலாம். இந்நிலையில் உள்ள நான், காதல் நாடகத்தில் பங்குகொள்ள எப்படி முடியும்?' என்று பரிவுடன் கூறினான்.

'அன்பரே! உங்கள் கருத்தில் - கொள்கையில் எந்த விதத்திலும் சளைத்தவள் அல்லள் நானும். அதனாற்றான் என் கருத்துக்கேற்ற ஒரு வீரனை - செயலாற்றும் தீரனை நான் தேர்ந்தெடுத்தேன். புரட்சியில் ஆடவர்தாம் மிஞ்சுவர், பெண்கள் அஞ்சுவர் என்பது உங்கள் முடிவா? நாடு பிறனுக்கு அடிமையாகக் கூடாது என்ற எண்ணத்தால் தம் கணவன்மாரைப் போர்க்களம் அனுப்பிய பெண்கள் பிறந்த பொன்னாட்டிலே

தான் நானும் பிறந்திருக்கிறேன். அந்தப் பண்பு என்னிடமும் இருக்கத்தான் செய்கிறது; புரட்சி இயக்கத்தில் நானும் உங்களோடு பணியாற்றுவேன். உங்களுக்குக் கொலைத் தண்டனை என்று கேள்விப்பட்டால் நாட்டிற்காக உயிர்கொடுத்த உத்தமன் மனைவி நான் என்று பெருமிதம் அடைவேன். ஆதலால் என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்; என்னால் உங்களுக்கு உங்கள் கொள்கைக்கு ஓர் இடையூறும் வராது என்று வீரமும் ஏக்கமும் கலந்த குரலில் பேசினாள்.

எக்கோவின் மனம் இளகி விட்டது. தலையைச் சிறிது அசைத்தான்,'ம்ம், சரி' என்று பெருமூச்சு விட்டான்.

அந்த மூச்சு அவளை ஏற்றுக் கொண்டது. அருகில் சென்றாள். கொடி, கொழுகொம்பில் தாவிப் படர்ந்தது. கற்பனைக் குளத்திலே - காதற்கொடியிலே பூத்து மலர்ந்த இரண்டு பூக்கள் ஆனார்கள்.

'மல்லிகா - என்று மெல்லிய குரலில் சொன்னான்.

'எக்கோ - என்ற சொல் அவள் ஆர்வத்தின் அடித்தளத்திலிருந்து வந்தது. 'நான் இப்பொழுதுதான் அந்தப் பெயருக்கு பொருத்தமுள்ளவளாக ஆனேன். மல்லிகை மணக்கத் தொடங்கிவிட்டாள்' - என்ற சொற்கள் அவள் இதயத்திலிருந்து உருண்டோடி வந்தன.

நான்கு நாள் வெகுவிரைவில் ஓடி மறைந்தன. விடைபெற்றுக் கொண்டு சென்று விட்டாள் மல்லிகா.

அவள் சென்ற சில நாளில் அவளிடமிருந்து கடிதம் வந்தது.

புரட்சித் துணைவரே! வணக்கம். நான் வந்ததும் என் அன்னையிடம் நமது பதிவுத் திருமணத்தைப் பற்றிச் சொல்லி விட்டேன். அவளும் தந்தையிடம் சொன்னாள். இருவரும் முதலில் சிறிது வருத்தப்பட்டாலும் எக்கோ எங்கள் மாப்பிள்ளையா என்று மகிழ்ந்து வியந்தனர்.

நீங்கள், வரப்போகும் பொங்கலுக்கு இங்குக் கட்டாயம் வரவேண்டும். என் பெற்றோரும் விரும்புகின்றனர். ஆதலின் உங்கள் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறோம்.

உங்கள் துணைவி
மல்லிகா

அக்கடிதத்தில் கண்டபடி எக்கோ பொங்கலுக்கு முதல் நாள் சென்னையிலிருந்து திருச்சி வந்து சேர்ந்தான். அவனை எல்லோரும் உள்ளன்புடன் வரவேற்றனர். மல்லிகாவின் தோழிகள் பலபேர் வந்திருந்தனர், எக்கோவைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையால். வந்தவர்களுக்குள் ஒருத்தி, ‘மல்லிகா எழுத்தாளர் எக்கோவின் காதலி; இனிமேல் அவளுக்கென்னடி குறைச்சல்! அவள் பேனா முனையில் நடனமாடும் மயில்’ என்று கேலி செய்தாள்.

மற்றொருத்தி ‘நடனம் ஆடும் மயில் அல்லடி அவள், போராடும் புலி!’ என்றாள்.

இவ்வாறு அன்றிரவு வேடிக்கையும் கேளிக்கையுமாகக் கழிந்தது.

காலைக் கதிரவன் செவ்வொளி வீசிக் கொண்டு தோன்றினான். அந்தத் தோற்றம், மக்கள் உரிமைக்குப் போரிட்டு இரத்தந்தோய்ந்த உடலுடன் தோன்றும் வீரனைப் போலக் காட்சி யளித்தது. எக்கோவிற்கு அவன் உள்ளத்தில் ஏதோதோ எண்ணங்கள் மோதி மோதிப் புரண்டு கொண்டிருந்தன.

'எழுந்து வாருங்கள் குளிப்பதற்கு; விரைவில் குளித்து விட்டுப் புத்தாடையை உடுத்திக்கொள்ளுங்கள்; பொங்கலும் அதுவுமாக இன்னும் படுக்கையில் ......' என்று அழைத்தாள் மல்லிகா.

'பொங்கல்! எனக்கா பொங்கல்! மக்களுடைய சமுதாயத்திலே நல்வாழ்வு - புதுவாழ்வு மலரவேண்டு மென்று கனவு கண்டுகொண்டிருக்கும் நானா பொங்கல் விழாக் கொண்டாடவேண்டும்? என் மன அடுப்பிலே மூட்டிவிடப்பட்ட புரட்சித் தீயால் என் இரத்தம் பொங்கிக்கொண்டிருக்கிறது. அதுவே போதும். எங்கு நோக்கினும் வறுமை, பொருளியல் அடிமை, சாதிமத அடிமை இவை குடிகொண்டிருக்கின்றன. மனிதன் வாழ்வதற்கு வீடின்றி, விலங்கொடு விலங்காய் வாழ்கிறான் - மடிகிறான். அறியாமை இருள் முடிக் கவிந்து கொண்டிருக்கிறது. இக்கோரமான காட்சியைக் கண்டு கொண்டு துடிக்கின்ற உள்ளத்திலே பொங்கலுக்கேது இடம்? புரட்சி இதழில் என்னுடைய கட்டுரையைப் பார்க்க வில்லையா நீ? அவ்வாறு எழுதிய நான் விழாக் கொண்டாடுவதா? மனிதன் எப்பொழுது எல்லா உரிமையும் பெற்று மனித வாழ்வு வாழ்கிறானோ அன்றுதான் என் போன்றவனுக்கு விழா! அதற்காகப்பாடுபடுவதே என் முயற்சியாக இருக்கும். நீ வேண்டுமானால் விழாக் கொண்டாடு', என்று தன் உள்ள வேதனையை அப்படியே கொட்டிவிட்டான்.

'இதற்காகவா இவ்வளவு பேச வேண்டும்? வேண்டாமென்றால் வேண்டாம். நீங்கள் விரும்பாததை நான் மட்டுங் கொண்டாடவா? இந்தச் சிறு செயலிலே நான் வேறுபட்டால் நான் எப்படித் தமிழ்ப் பெண்களின் புகழை நிலைநாட்ட முடியும்? நானும் போர்க்கோலத்திற்றான் இருக்கிறேன் - என்று சொல்லிச் சென்றுவிட்டாள்.

அன்று ஒருவருமே பொங்கல் கொண்டாடவில்லை. எப்பொழுதும் போலவே உணவு முறைகள் நடைபெற்றன.

எதையோ எண்ணிக் கொண்டவன் போல விரைவாக மாடியிலிருந்து இறங்கி வந்தான். வந்தவன் ஒரு அறையில் விம்மல் சத்தங்கேட்டு நின்றுவிட்டான்.

‘விழாக் கொண்டாடவில்லை யென்று ஒருவேளை மல்லிகாதான் அழுதுகொண்டிருக்கிறாளோ’ என்று அய்யப்பட்டு மெதுவாகச் சன்னல் வழி உள்ளே கூர்ந்து பார்த்தான். ஓர் இளம் பெண் படுக்கையிற் கிடந்தாள். தலை அவிழ்ந்து கிடந்தது. எளிமையான தோற்றத்தைக் காட்டும் புடவை; நகைகள் இன்றிக் காணப்பட்ட உறுப்புகள்; படுத்த வண்ணமாக விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள் அந்தப் பெண். அக்காட்சி அவன் மனத்தை இளக்கி விட்டது. கதவைத் திறந்துகொண்டு தடதடவென்று உள்ளே நுழைந்தான்.

காலடிச் சத்தங்கேட்டுத் திடுக்கிட்டுத் தலையை மட்டும் நிமிர்த்தினாள். செக்கச் சிவந்திருந்த கண்களிலிருந்து சிதறி ஒடின கண்ணிர்த்துளிகள். உதடுகள் படபடத்தன. இதைக் கண்ட எக்கோ, ‘நீ யாரம்மா? ஏன் இப்படித் தனித்து அழுது கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டான்.

‘அது என் தலை விதி’ - என்று சொல்லிக்கொண்டே விர்ரென்று வெளியே சென்றுவிட்டாள்.

‘விதி! மண்ணாங்கட்டி விதி! விதி, விதி என்று சொல்லித் தானே மக்கள் பாதாளத்தில் அழுத்தப்பட்டுக் கிடக்கிறார்கள். இந்த அறியாமை தொலையும் வரை சேற்றில் நெளிந்து திரியும் புழுவாகத்தான் மக்கள் இருக்க முடியும். எப்பொழுது இவர்கள் விடுதலைப் பறவைகளாகப் பறந்து திரியப் போகிறார்களோ!’ என்று தனக்குத்தானே நொந்து கொண்டு மறுபடியும் மாடிக்குச் சென்றுவிட்டான்.

மல்லிகா, ஏதோ சில தின்பண்டங்களைக் கொண்டு வந்தாள். ‘நல்ல சமயத்தில் வந்தாய் மல்லிகா, அந்த அறையில் அழுதுகொண்டிருந்த பெண் யார்?’

‘அவள் என் தங்கை’

‘அவள் ஏன் அழுதாள்?’

‘அவள் வாழ்கை, பனிப்படலங்களால் சூழப்பட்ட நடுக்க மயமான துன்ப வாழ்க்கை. அதனால் அவள் அடிக்கடி அப்படி அழுதுகொண்டிருப்பாள்’

‘எனக்கொன்றும் விளங்கவில்லையே! உன் தங்கை என்கிறாய்! துன்ப வாழ்க்கை என்கிறாய்! குழப்பமாக இருக்கிறது; சற்று விளங்கச் சொல்’

‘அவள் விதவை’

‘விதவையா?!’ வியப்போடு வெளிவந்தது இந்தச் சொல்.

‘ஆம், விதவைதான். எனக்குத் திருமணம் வேண்டாம், படிக்கவேண்டும் என்று நான் சொல்லிவிட்டதால் என் தங்கைக்குத் திருமணம் செய்தார்கள். ஆனால் அவள் கொஞ்ச நாளில் தாலியை இழந்தாள். அதிலிருந்து இப்படித்தான்!’

‘தாலி! நல்ல தாலி! அந்த அடிமைக் கயிறு கட்டுவதாற்றானே எத்துணையோ பெண்கள் விதவை என்ற இழிந்த பெயரைப் பெறுகிறார்கள். மக்கள் புரிந்தோ புரியாமலோ மீண்டும் படுகுழியில் விழுந்துகொண்டும், விழச் செய்து கொண்டும் இருக்கிறார்களே! இவர்கள் கண்கள் என்றுதான் திறக்குமோ!' என்று தனக்குத் தானே சொல்லிவிட்டு அவளை நோக்கி 'ஏன் அவளுக்கு மறுமணம் செய்யக்கூடாது' என்றான்.

'செய்யவேண்டும் என்றுதான் நான் விரும்பினேன். பெற்றோர் விரும்பவில்லை. மேலும் அவளும் சரியாக ஒப்புக்கொள்ளவில்லை!'

'பார்த்தாயா, மனித சமுதாயம் எப்படியிருக்கிறதென்று! உன் வீட்டிலேயே ஒருபுறம் துன்பத்தைத் தேக்கி வைத்துக் கொண்டு மறுபுறம் விழாக் கொண்டாட நினைக்கிறாய்' என்று வருந்திக் கூறினான்.

'என் பெற்றோர் கூட நான் சொன்னவுடன் ஒப்புக் கொண்டார்கள்; இவள் சரியான உடன்பாடு தெரிவிக்க வில்லையே; அதற்கு நாமென்ன செய்வது?’ என்றாள்.

'நாமென்ன செய்வதா? நன்றாக இருக்கிறது உன் கேள்வி! வீட்டிலே புரட்சி செய்ய முடியாவிட்டால் நாட்டிலே எப்படிப் புரட்சி செய்ய முடியும்? அவள் ஏற்றுக் கொள்ளக்கூடிய முறையில் நீ எடுத்துச் சொல்ல வேண்டும்’.

'நீங்கள்தான் இனிச் சொல்ல வேண்டும்'.

'சரி நானே அதற்கு ஏற்பாடு செய்கிறேன்'

அன்று மாலை எக்கோ, மாடியில் கைகளைப் பின்புறமாகக் கட்டிக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்த வண்ணம் அங்கு மிங்கும் நடந்து கொண்டிருந்தான். மல்லிகா வெளியிற் சென்றிருந்தாள். அவள் தங்கை மாடிக்கு வந்தாள். வருவதைப் பார்த்ததும், 'வாம்மா! உன்னிடம் சில செய்திகள் சொல்ல வேண்டுமென்று எண்ணியிருந்தேன். நீயே வந்து விட்டாய்! உன் மறுமணம் பற்றி நான் ........' என்று சொல்லி முடிக்குமுன் குறுக்கிட்டுப் பேசினாள்.

'என் திருமணத்தில் உங்களுக்கு இவ்வளவு அக்கறை இருக்கிறதா?' என்றாள்.

'என்ன அப்படிக் கேட்கிறாய்! நான் எவரையும் அன்போடு நேசிக்கிறேன். இந்த நாட்டு மக்கள் மட்டுமல்லாமல் - எல்லா நாட்டு மக்களும் தோழர்களாக இருக்கவேண்டுமென்ற கொள்கையுடையவன். அந்த எண்ணம் எங்கும் பரவி ஒளிவிடவேண்டும் என்று எண்ணி உருகுபவர்களிலே நானும் ஒருவன். அப்படிப்பட்டவன் உன்னிடத்தில் மட்டும் அக்கறை கொள்ளாமல் இருப்பானா?' என்று முடித்தான். அவன் பேச்சில் அன்பு குழைந்திருந்தது.

'அப்படியானால் இதோ இதைப் பாருங்கள்' என்று ஒரு கடிதத்தை அவனிடம் கொடுத்துவிட்டு விரைந்து சென்று விட்டாள். அவன் வியப்புடன் பிரித்துப் பார்த்தான்.

'அன்புடையீர்! முதலில் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். ஒரே கொடியில் இரண்டு அரும்புகள் தோன்றின. ஆனால் ஓரரும்பு மலருமுன் கீழே விழுந்து விட்டது. மற்றொன்று மொட்டாகி - போதாகி - மலராகி - தேன் நிறைந்து மணம் வீசிக்கொடியில் சிரித்துக் கொண்டிருக்கிறது. உதிர்ந்த அரும்பு வாடிக்கொண்டிருக்கும் நிலையில், சிரிக்கும் மலரைக் கண்டு நாமும் ஏன் அப்படியிருக்கக்கூடாது என்று பேராசைப்படுகிறது. பக்கத்திலிருந்த முல்லை சொல்கிறது. போடி பைத்தியக்காரி உதிர்ந்த பிறகு நீ எப்படி மலர முடியும்? மனக் கோட்டை கட்டுகிறாயா என்ன? வேண்டுமானால் அதோ இருக்கும் விஞ்ஞானியைக் கேள்! அவர் உதவியிருந்தால் ஒருவேளை மலரலாம்' என்று.

அதன் அறிவுரைப்படி விஞ்ஞானியை அரும்பு மன்றாடி வேண்டுகிறது. விஞ்ஞானியே! உதவும் உள்ளம் உண்டா உம்மிடம்? ஏன்! வெளிப்படையாகச் சொல்லிவிடுகிறேனே.

அக்கா அடிக்கடி உங்களைப் பற்றியே புகழ்ந்து கொண்டிருப்பாள். 'புரட்சி' எந்நேரமும் அவள் கையில் இருக்கும். நான் உங்கள் எழுத்தோவியங்களை ஆர்வத்துடன் படித்து வருவேன். அப்பொழுதெல்லாம் நீங்கள் என் கண்முன் நின்றுகொண்டிருப்பீர்கள். கடைசியில் நீங்கள் எழுதிய 'உடைந்த ஓடு' என் வாழ்வை அப்படியே படம் பிடித்துக் காட்டியது போல் இருந்தது. உடைந்த ஓடாகிய என்னை ஒன்று சேர்த்து உருப்படுத்த உங்களையே அன்று முடிவு செய்து கொண்டேன். ஆனால் நீங்களோ உடைந்த ஓட்டைக் கவனியாமல் பொற்பாண்டத்திற்கு மெருகு கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். உடைந்து ஓடாகியது என் குற்றமா? அந்த ஓட்டினை ஒன்று படுத்த முடியாவிட்டால் இன்னும் இரண்டு நாட்களில் அந்த ஓடு தெருவில் வண்டியின் சக்கரம் ஏறி நூறு சுக்கலாகக் கிடக்கும். இந்த ஓடு இருந்துதான் என்ன பலன்? இது உண்மை.

இங்ஙனம்
உடைந்த ஓடு

எக்கோ படித்து முடித்தான். ஏதோ சொல்ல முயன்றான். அவன் வாயிலிருந்து எந்தச் சொல்லும் வர மறுத்துவிட்டது. தொண்டை கரகரத்தன. ஆனால் அவன் உள்ளம் மட்டும் ஏதோ சொல்லிக்கொண்டுதான் இருந்தது. 'நான் இதற்குத் தானா இங்கு வந்தேன்? இதுதான் பொங்கல் விழாவா? நான் காதல் அளவிலேதானா ஒவ்வொருவர் குறையையும் நிறை செய்யமுடியும்? என் முக்கிய குறிக்கோள் அதுவன்றே. ஏழமையை அதன் பகைமையாகிய சுரண்டல் தன்மையை ஒழித்துக் கட்டுவது தான் என் குறிக்கோள். காதலே குறிக்கோளாக இருந்தாலும் இருவருக்கும் எப்படிக் காதலைப் பகிர்ந்து கொடுக்க முடியும்? அய்யா! என் உள்ளத்தில் வேதனைப் புயலை எழுப்பிவிட்டுச் சென்று விட்டாளே!' இவ்வாறு உழன்றுகொண்டிருந்தது அவன் மனம்.

இரவு, படுக்கையில் இருந்தான் எக்கோ.

'ஏன் இரவு சாப்பிடவில்லை! இந்தப் பாலையாவது அருந்துங்கள்' என்று பாலைக் கொடுத்தாள் மல்லிகா.

படுக்கையிற் சாய்ந்துகொண்டிருந்த எக்கோ அதை வாங்கிக் குடித்தான்.

'ஏன் ஒருமாதிரியாக இருக்கிறீர்கள்?'

'ஒன்றுமில்லை'

மணி பத் தடித்தது. பதினொன்றும் அடித்தது. அவன் அப்படியே சாய்ந்த வண்ணம் என்னென்னவோ எண்ணிக்கொண்டிருந்தான். கடிகாரத்தின் 'டக் டக்' ஒலியைத் தவிர வேறு ஒலியே இல்லை அங்கு. அந்த ஒலி ஒவ்வொன்றும் அவன் சிந்தனையைத் தட்டிக்கொடுப்பது போல் இருந்தது. மல்லிகாவும் அருகில் படுத்திருந்தாள்.

‘என்ன! நான் பேசுவதற்கெல்லாம் சரியான பதிலையே காணோமே! உங்கள் மனம் காதல் நீரற்ற பாலைவனமா என்ன?’ என்றாள். 'ஆம், என் உள்ளம் பாலைவனந்தான். மக்கள் வாழ்வு பாலைவனமாய் இருக்கும்வரை என்மனம் வறண்ட நிலந்தான். அங்குக் காதல் நீரேது? இன்பப் பூக்கள்தாம் எப்படி மலர் முடியும்? அந்த நிலத்தில் மலரைப்பெற விரும்புகிறாய் நீ!'

'இல்லையில்லை; நீர்வளமிக்க சோலையிலேதான் நான் மலரைத் தேடுகிறேன்'.

'நீ நினைப்பது தவறு'

'தவறா? அப்படியானால் என்னை மணந்து கொண்டிருக்க வேண்டாமே' என்று ஊடல் கொண்டவள் போல் விளையாட்டாகக் கேட்டாள்.

'நானா மணந்தேன்? நீயல்லவா என்னை மணந்து கொண்டாய்! நானே மணந்திருந்தாலும் காதலின்பம் ஒன்றுக்காக மட்டும் மணந்து கொள்ளவில்லையே!' புரட்சி இயக்கத்தில் நானும் உங்களோடு பணியாற்றுவேன். என்று நீ சொல்லியதை உண்மை என்று நம்பினேன் அதனால் உனக்குத் துணைவனாகச் சம்மதித்தேன். என் மனத்தில் காதலுக்குத் தலைமையிடங் கொடுத்தால் தியாகத் தீயில் குதிக்கும் பொழுது என் இதயம் பலமாகத் தடுக்கும். அப்பொழுது என் நெஞ்சைப் பிளந்து இதயத்தை எடுத்து நசுக்கிவிடும் ஆற்றல் என்னிடம் இல்லாமற் போய்விடும். போகவே துரோகி - கருங்காலியாகி விடுவேன்' என்று அவன் உதட்டிலிருந்து சிதறி வந்தன இந்தப் பொறிகள். அப்பொழுது அவன் முகம் கருத்துக் காணப்பட்டது. கண்கள் சிவந்திருந்தன. கண்ணில் ததும்பிக் கொண்டிருந்த நீர், துளியாக அவள் மேல் விழுந்தது. துளி, நெருப்பெனச் சுட்டது. நிமிர்ந்து பார்த்தாள்.

'என்ன! இதற்காகவா இப்படிப் பேசுகிறீர்கள்! நான் இளம் பெண்தானே. இயற்கை உணர்ச்சியின் வயமாகிவிட்டேன். இதனால் புரட்சி மனப்பான்மை குன்றியா போய்விடும். ஒரு நாளும் என்னை அப்படி எண்ணாதீர்கள், என்னையும் ஒரு 'கொரில்லாப் பெண்' என்று எண்ணிக் கொள்ளுங்கள்'.

பேசிக் கொண்டிருக்கும் பொழுது கீழே கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. யாரோ கதவைத் திறந்தார்கள்.

'எக்கோ இங்குதானே இருக்கிறார்?' என்று வந்தவர் கேட்டார். இது எக்கோவின் காதிலும் விழுந்தது.

'யார் இங்கே வந்து, இந்நேரத்தில் என் பெயரைச் சொல்வது!' என்று சொல்லிக்கொண்டே விரைவாகக் கீழே இறங்கி வந்தான். வந்து பார்த்ததும் திடுக்கிட்டான். அவர்கள் போலீசு உடையில் வந்திருந்தார்கள். எக்கோவைத் தொடர்ந்து வந்த மல்லிகாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவளுடைய பெற்றோர் என்ன நடக்குமோ என்று மலைத்து நின்று விட்டனர்.

'ஏன் என்னைத் தேடுகிறீர்கள்?' என்றான் எக்கோ.

'உங்களைக் கைது செய்ய உத்திரவு வந்திருக்கிறது' என்று கூறினார் போலீசுத் தலைமை அதிகாரி.

'காரணம்?'

'நீங்கள் 'புரட்சி' என்ற பத்திரிகையில் எழுதிய 'சுடுகாட்டிலே' என்ற கட்டுரை அரசாங்கத்திற்கு முரணானது. அதனால் உடனே கைது செய்யும்படி உத்திரவு வந்துள்ளது' என்று அரசாங்க ஆணையை நீட்டினார்.

அதைப் பார்த்துவிட்டு, 'ஓ, அப்படியா! தயார், புறப்படுங்கள், வருகிறேன்' என்று புறப்பட்டான். மல்லிகா ஓவென்று அலறி விட்டாள். 'ஐயோ! இப்பொழுது தானே என்னென்னவோ சொல்லிக் கொண்டிருந்தீர்கள்; அதன்படியே ஆகிவிட்டதே!' என்று ஓடிவந்து அவன் மார்பிற் சாய்ந்து கொண்டு அலறினாள். அவன் அன்போடு அவளை அணைத்துக்கொண்டான். அவன் தலை மயிர் நெற்றியில் விழுந்து கிடந்தது. அவன் கண்கள் ஒளி மங்கியிருந்தன. 'பாவம், சிறு பெண்! என் காதல் இன்பத்தைப் பெற நினைத்தாள்; அதை இழந்தாள், அதனோடு என்னையும் இழக்கிறாள். அவள் உள்ளம் புண்ணாகத்தானே செய்யும்’ என்று எண்ணிக் கொண்ட வன்போல் 'மல்லிகா; என்று அவள் முகவாய்க் கட்டையைப் பிடித்து உயர்த்தினான்.

அந்த நிலையைக் கண்ட அதிகாரியே மனந்தாளாமல் வருத்தத்துடன் தலையைத் தொங்கவிட்டுக் கொண்டு நின்றார்.

எக்கோ போலீசுச் சேவகனைப் பார்த்தான். சிவப்புத் தொப்பி அவன் கண்களில் பட்டது. சிவப்பு வர வரப் பெரிதாகத் தோன்றியது. அதைப் பார்க்கப் பார்க்க அவன் கண்கள் விரிந்தன. தலையை நிமிர்த்தான். அங்கிருந்து ஏதோ ஓர் ஒளி வந்து தாக்கியது. அவன் மார்பில் சம்மட்டியால் ஓங்கி அடிப்பதுபோல் இருந்தது. உடனே மல்லிகாவைத் தள்ளி நிறுத்தினான்.

'மல்லிகா! நான் யார், நீ யார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். வெறுங்காதலராக மட்டுமிருந்தால் நாம் விளையாட்டுப் பொம்மைகளாகக் காலத்தைக் கடத்திவிடலாம். ஆனால் கொள்கைகக்காக - இலட்சியத்திற்காக ஒன்று சேர்ந்திருக்கிறோம். இதை நினைவில் வைத்துக்கொள்! இனிமேற்றான் நமக்குப் பொங்கல் விழா வரப் போகிறது என்பதை அறிவிக்கும் அறிகுறி இது' என்று உணர்ச்சியுடன் சொன்னான். 'நான் இப்படியாகுமென்று கனவிலும் நினைக்கவில்லை. நீங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு வந்து விடக்கூடாதா' என்று கெஞ்சினாள்.

'மன்னிப்பு! நான் யாரிடம் மன்னிப்புக் கோருவது? என்ன குற்றத்திற்காக மன்னிப்புக் கேட்பது? எழுத்துரிமை பேச்சுரிமை இவற்றைப் பறிக்கும் எதேச்சாதிகாரிகளிடமா மன்னிப்புக் கேட்பது? நான் மன்னிப்புக் கேட்டால், 'எழுத்தில் வீரத்தைக் காட்டிச் செயலில் பின்வாங்கும் துரோகி, மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் எத்தன்' என்று என்னைத் தூற்றுவார்கள்; மல்லிகாவும் கோழையின் மனைவி என்று இகழப்படுவாள். இச்சிறு தண்டனைக்கே கலங்கும் நீ நாளை எனக்குத் துக்குத் தண்டனை தந்தால் மகிழ்ச்சியடையும் தமிழ்ப் பெண்ணாகவா உன்னைப் பார்க்க முடியும்? இப்படிப்பட்ட உன்னை, 'கொரில்லாப் பெண்' என்று எண்ணிக் கொண்டிருக்கிறாயே! இது, உனக்கு மட்டுமின்றி உன் இனத்திற்கே - பெண்கள் கூட்டத்திற்கே இழிவைத் தரும்' என்று கண்டிப்பான குரலில் பேசினான்.

'கொரில்லாப் பெண்! கொரில்லாப்பெண்!' இந்தச் சொற்கள் சுழன்று சுழன்று வந்து அவள் செவியில் மோதின. நிமிர்ந்து நின்றாள். கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

'ஆம், மறந்து விட்டேன்; மன்னிக்கவும். நள்ளிரவு என்றும் பாராமல் கைது செய்ய வருகின்ற அரசாங்கம் நல்ல அரசாங்கந்தான். அதுவும் என்ன குற்றத்தைக் கண்டு பிடித்து விட்டது? மக்கள்நிலை உயர வேண்டும் என்று கூறியது ஒரு குற்றமா? அதைப் பற்றித் தன் கருத்தை எழுதியது ஒரு குற்றமா? இல்லை மக்கள் நிலை உயரக்கூடாது என்று அரசாங்கம் கருதுகிறதா? அப்படிப்பட்ட அரசாங்கந்தான் எதற்கிருக்கிறது? ம்ம், அதை ஏன் நாம் குறைகூற வேண்டும்? மக்கள் உணர்ந்தால் - அறிவுபெற்றால் தானாகவே எல்லாம் மாறுகிறது. சரி, நீங்கள் போகலாம்; மகிழ்ச்சியோடு விடை தருகிறேன். உங்கள் பணியை நான் மேற்கொள்கிறேன். விரைவில் நானும் உங்களைச் சந்திப்பேன். தன் கணவன் குற்றமற்றவன் என்று, முடியுடை வேந்தன் எனவும் பாராது வீரத்தோடு வாதாடிய கண்ணகி என் குலத்தில் பிறந்தவள் தான். மக்கள் மன்றம் இருக்கவே இருக்கிறது. அரசாங்கத்தை அந்த மன்றத்தின் கூண்டிலே நிறுத்துகிறேன். நீதிதேவன் தீர்ப்பளிக்கட்டும் - என்று சொல்லி முடித்தாள். முகம் சிவந்திருந்தது. உதடுகள் துடித்தன.

மல்லிகா! உன் நெஞ்சமும் இரும்பாகட்டும். உங்களுக்குக் காதல் இல்லையா என்று கேட்டாயே! இதோ என் காதல் பலித்துவிட்டது. என் காதல் எல்லாம் நாட்டின் விடுதலை மீதுதான். நாட்டுக்காக உழைக்க வேண்டும் - உழைத்து உழைத்து உருமாற வேண்டும். அதற்காக நான் இரத்தம் சிந்த வேண்டும் - அந்த இரத்தம் மக்கள் வாழ்வு மலர்வதற்கு நீராக வேண்டும். நான் எதிரியால் தாக்கப்பட்டோ, அரசாங்கத்தின் தண்டனை பெற்றோ சாகவேண்டும். அந்தச் சாதல்தான் என்காதல், அந்தக் காதல் பலித்துவிட்டது. அந்தக் காதலிதான் இந்தத் துரதர்களை அனுப்பியிருக்கிறாள். நான் அவளைக் கண்டு பேசி மகிழப் போகிறேன், நீயும் விரும்பினால் அவளை ஒருநாள் வந்து பார்! நான் போகிறேன்’ என்று சொல்லிவிட்டு, அச்சம் ஒரு சிறிதுமின்றி வீரனைப் போலச் செம்மாந்து சென்றான்.

போலீசாரும் அவனுடன் புறப்பட்டுச் சென்றனர்.

மறுநாள் காலை செய்தித்தாளுடன் ஓடி வந்தாள் மல்லிகாவின் தங்கை மஞ்சுளா. 'அக்கா! அக்கா! இதைப் படித்துப் பார்' என்று பதற்றத்துடன் அவள் கையிற் கொடுத்தாள். வாங்கிப் பார்த்தாள் மல்லிகா.

'எக்கோ, அரசாங்கத்திற்கு முரணாக, 'சுடுகாட்டிலே’ என்ற கட்டுரையை எழுதியதற்காக ஆறு மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு, வேலூர்ச் சிறைக்குக் கொண்டு போகப்பட்டார்!

இதைப் படித்ததும் தலை கிறுகிறுத்தது! கடுங்காவல்! எள்ளளவும்

கள்ளமில்லாத என் எக்கோவிற்கா கடுங்காவல்! இத்தகைய கொடுங்கோன்மை சுடுகாட்டிலே புதைக்கப்பட வேண்டிய நாள் நெருங்கிக்கொண்டு தான் இருக்கிறது. அந்த நாள் வந்தே தீரும்! என்று சொல்லிவிட்டுக் கையைக் கட்டிய வண்ணம் அங்குமிங்கும் உலவினாள். ஏதோ முடிவிற்கு வந்தவள் போல் வெளியே சென்றாள்.

மறுநாள் மாலை ஒரே கூட்டம். போலீசு அங்கு மிங்கும் கைத்தடிகளுடன் உலவிக்கொண்டிருந்தது. துப்பாக்கி தாங்கிய படையும் அணிவகுத்து நின்றது. குறித்த நேரத்தில் கூட்டம் தொடங்கப்பட்டது. மல்லிகா எழுந்து நின்றாள். அவள், கூட்டத்தைச் சுற்றிப் பெருமிதமாக ஒரு பார்வை பார்த்தாள். அவள் அப்பொழுது ஒரு படைத்தலைவி போலக் காணப்பட்டாள்.

'தோழர்களே! தோழியர்களே! நாம் எழுத்துரிமையற்ற பேச்சுரிமையற்ற நாட்டிலே வாழ்கிறோம். ஏன் எக்கோ கைது செய்யப்பட்டார்? திருடினாரா? கொலை செய்தாரா? அல்லது கொலை கொள்ளை நடத்தும்படி மக்களைத் தூண்டி விட்டாரா? மனித சமுதாயம் உரிமை பெற்று விளங்கவேண்டும் என்றுதானே எழுதினார். அவர் என் கணவர் என்பதற்காக நான் கூறவில்லை. அவர் எனக்காக மட்டும் எழுதவில்லை. உங்களுக்காக - உங்கள் சந்ததிக்காகத் தான் இன்று சிறையில் இருக்கிறார். இதுமட்டுமன்று, இன்னும் கொலைத் தண்டனை பெறுவதற்குங்கூட ஆயத்தமாக இருக்கிறார். அதை நீங்கள் உணரவேண்டும். உணராவிட்டால் அவர் செய்த தியாகம் விழலுக்கிறைத்த நீராகும். நீங்கள் என்றுமே அடிமையாக வாழப்போகிறீர்களா? நீங்கள் அவ்வாறு வாழ்ந்ததுமன்றி உங்கள் பரம்பரையையும் அடிமையாக்கவே எண்ணிவிட்டீர்களா? என்ன சொல்லுகிறீர்கள்? ஒவ்வொரு நாட்டையும் பாருங்கள்! அதைப் பார்த்த பிறகும் நாம் உணர்வற்றவர்களாக இருப்பது அழகா? நீங்கள் நினைத்தால் - ஒன்றுபட்டால் எக்கோவை வெளிக் கொணரலாம். ஏன்? நாட்டையே எதேச்சாதிகாரத்தின் பிடியிலிருந்து விடுவிக்க முடியும். நீங்கள் ஒவ்வொருவரும் மற்றவரைத் தோழர் என்று எண்ண வேண்டும். அந்த உணர்ச்சி குருதியோடு கலந்து விட்டால் மக்கள் துன்பம் உங்கள் துன்பமாகத் தோன்றும். சிதைந்து கிடக்கும் நீங்கள் சீறி எழுவீர்கள். அந்தச் சீற்றத்திற்கு முன் துப்பாக்கிகள் என்ன செய்ய முடியும்?

'நாட்டு மக்கள் நல் வாழ்வு வாழவேண்டும். அவர்கள் விடுதலைப் பறவைகளாகப் பறந்து திரியவேண்டும். அதற்காக நான் பலியாக வேண்டும்' - இதுதான் எக்கோவின் காதல். அவர் காதலை நீங்கள்தான் ......என்று பேசிக் கொண்டிருக்கும்போது இடையில் அதிகாரி ஒருவர் வந்து மல்லிகாவின் கையில் ஒரு கடிதத்தை நீட்டினார். மல்லிகா அதைப் படித்து விட்டுக் 'கூட்டத்தைக் கலைக்க முடியாது; மன்னித்துக் கொள்ளுங்கள்'; என்று மீண்டும் பேசத் தொடங்கினாள்.

சிறிது நேரத்தில் 'டுமீல்! டுமீல்!' என்ற சத்தங்கள் கேட்டன. கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது. சிதறிச்சென்றனர் மக்கள். ஆனால் ஒரு சிலர் கலைய மறுத்தனர். கண்ணீர்ப்புகை பயன்படுத்தப்பட்டது. மக்கள் திக்குமுக்காடினர். போலீசாரின் கைத் தடிகள் சுழலத் தொடங்கின. குதிரை வீரர்கள் உள்ளே நுழைந்தனர், அடி பொறுக்க முடியாமல் மக்கள் சிதறுண்டு ஓடினர். சிலர் அடிபட்டு விழுந்தனர். சிலர் மேடையில் ஏறினர், அங்கும் தடியடி. பலருக்குப் பலத்த காயம். மேடையில் ஏற்பட்ட நெருக்கத்தால் மல்லிகாவின் அருகிலிருந்த மஞ்சுளா கீழே விழுந்து விட்டாள். தடுமாறிக்கொண்டு எழுந்து நின்றாள். தலையில் பலத்த அடி விழுந்தது. கீழே சாய்ந்து விட்டாள்.

மல்லிகா கைது செய்யப்பட்டாள். மஞ்சுளா மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள் காயமடைந்த மக்களும் எடுத்துச் செல்லப்பட்டனர்.

கூட்டம் நடந்த இடம் இப்பொழுது ஒரே அமைதி! பார்க்க முடியாதபடி சோகம் நிறைந்திருந்தது. இரத்தம் அங்கங்கே சிந்திக் கிடந்தது. ஆனால் அந்த இரத்தத்தின் ஒவ்வொரு துளியும் நாளைக்கு எத்தனை வீரர்களை - தியாகிகளை - எத்தனை எக்கோக்களை - மல்லிகா - மஞ்சுளாக்களை உண்டாக்கப் போகிறது என்று யார் உணரமுடியும்? அந்த இடம் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய இடம் ஆயிற்று என்பது மட்டுமல்லாமல் மக்கள் நெஞ்ச ஏடுகளிலே இரத்தத்தால் எழுதப்பட்ட எக்கோ நகர் ஆயிற்று.