எச்சில் இரவு/அவள் அங்கமும் தங்கம் அவள் பெயரும் தங்கம்

அவள் அங்கமும் தங்கம்
அவள் பெயரும் தங்கம்


வள் ஒரு சேற்றுத் தாமரை; கீற்று நிலா; ஆற்றுப் படகு, ஐந்தெழுத்துக் கதம்பம்; ஆறு கால் வண்டு; ஈர மேகத்தில் தோன்றும் ஏழு நிறங்களைக் கொண்ட வான வில்.

பச்சை வாழை தன் பக்கத்தில் இருந்தால், அப்போது மதிப்பு மிக்க மரகதம் போலவும்; செருந்திப்பூ அருகில் இருந்தால், செம்பொன் போலவும்; மலர்ந்த செந்தாமரை அருகில் இருந்தால், மாணிக்கம் போலவும்; தோற்றம் அளிக்கக் கூடிய ஒரு பளிங்குக் கல் போன்றவள் அந்தப் பரத்தை.

அவள் ஒரு பணப் பெண்!

அவள் ஒரு பருவப் புண்!

அவள் அங்கமும் தங்கம். அவள் பெயரும் தங்கம். தன் தனம் கொடுக்க, பிறரிடம் தனம்.கேட்கும் ஒரு தாய்விலாசக்காரி. தன் தாயின் எச்சிலில் பிறந்து, தன் வாயின் எச்சிலுக்கு விலை கேட்கும் ஒரு வலை மாது.

புலியின் பற்கள் வளைந்திருப்பதால், அது தன் வாயை மூடும் போது, மேல் வாய்ப் பற்களும் கீழ் வாய்ப் பற்களும் நன்றாகப் பொருந்தி பற்றிக் கொள்ளும். அவ்வாறு பற்றிக் கொள்ளும் பற்களை விரைவில் கழற்றுவதென்பது கடினம். அது போலவே, அவளுடைய பார்வைப் பேச்சிலும், வேர்வை வெப்பத்திலும் அகப்பட்டுக் கொண்டவர்கள், அவ்வளவு எளிதில் மீண்டு வர முடியாது.

இளவேனிற் பருவத்தில் ஒரு நாள்.

ஈர நிலா, தன் இரவல் வெளிச்சத்தை வழங்கும் இரவு நேரம். அந்த நாள் முதல் இந்த நாள் வரையில் தன் முழு உடலைக் காட்டாமல், முகத்தை மட்டுமே காட்டி வரும் உருண்டை நிலா, அந்த ஊமை வானத்தில் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது.

நிலா முற்றத்தில் நின்றபடி, அவள் அந்த நிலவை, அந்த அந்தி நிலவைக் கூர்ந்து நோக்கினாள். நோக்கித் தன் விளம்பர விழிகளைத் தொங்கும் நிலவின் மீது தேக்கி…

“நிலவே! நிலவே! சற்று நில்!” என்றாள். அது நிற்கவில்லை. “இங்கே வா! என் இல்லத்திற்கு வா” என அழைத்தாள்.

ஆதி காலத்துச் சீதை அழைத்தும், சூடிக் கொடுத்த கோதை அழைத்தும், வராத வெண்ணிலா, அந்தப் பேதை அழைத்தும் வரவில்லை. மீண்டும் அவள் அந்த நிலவைப் பார்த்து,

“நிலவே! மக்கள் நடந்து செல்லுவதற்கு மண்ணில்தான் பாதைகள் இருக்கின்றன. விண்ணில் பாதைகளே இல்லை. இருந்தால், என் வீட்டுக்கு நீ வராவிட்டாலும், உன் வீட்டுக்கு நான் வந்திருப்பேன்.

கன்னான் உருக்கிய வெங்கலத்தைப் போன்று
காயும் நிலவே!
பூமியின் நிழல் உன் மீது படுகிறது. அதைக் களங்கம் என்கிறார்கள். உன் நிழல், என் தலையின் முன் பக்கம் படுகிறது. அதை முகம் என்கிறார்கள்.

உன் வியர்வைத் துளி, புல்லின் நுனியில் படுகிறது. அதைப் பனித் துளி என்கிறார்கள். என் வாயின் எச்சில் வாலிபர்களின் மீது படுகிறது. அதைத் தேன் துளி என்கிறார்கள்.

நீ இந்த மலையின் முடியில் படுக்கிறாய்.
நானோ பொருள்தருவோர் மடியில் படுக்கிறேன்.
நீ பகலில் பதுங்கிக் கொள்கிறாய்.
நானோ, பகலில் ஒதுங்கிக் கொள்கிறேன்.
நீ, கடலில் குளிக்கிறாய்.
நான், காவிரியில் குளிக்கிறேன்.
நீ, பதினைந்து நாட்களில் பருவமடைந்தவள்.
நானோ, பதினைந்து வயதில் பருவமடைந்தவள்.
உலகில் நீ, எல்லோருக்கும் பொதுவுடமை.
நானும் எல்லோருக்கும் பொதுவுடைமை.
நீ எண்ணெயின்றி எரியும் விளக்கு.
நானோ, எண்ணெய் இருக்கும் வரையில் மட்டுமே எரியும் விளக்கு!

கார் காலத்தில், உழவர்கள் நொச்சி இலையைத் தம் தலையில் சூடிக் கொள்வார்களாம், வெப்பத்திற்காக!

நானோ வாலிபர்களையே போர்வையாகப் போர்த்திக் கொள்கிறேன், வெப்பத்திற்காக.

குரங்கு என்னும் சொல்லுக்கு
வளைந்திருப்பது என்பது பொருள்.
வானரத்தின் உடல் வளைந்திருப்பதால், நாங்கள் அதைக் குரங்கு என்று அழைக்கின்றோம்.

நீ பிறையாக இருக்கும் போது, உன் உடலும் வளைந்து காணப்படுவதால், உன்னைக் குரங்கி என்று ஆராய்ச்சியாளர்கள் அழைக்கின்றனர். இந்த உலகத்தில், நீதான் முதன் முதலில் தோன்றிய வாலில்லாக் குரங்கு.

உனக்கு மட்டும் வாலிருந்திருக்குமானால், இங்கிருக்கும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் போட்டி போட்டுக் கொண்டு உன் வால் பிடிக்க வந்திருப்பார்கள்” என்று, தன் எச்சில் வரலாற்றை அந்த ஈர நிலாவினிடத்தில் அவள் சொல்லிக் கொண்டிருக்கையில், அடுத்த வீட்டுக்காரி ஊசி என்பவள் அப்போது அங்கே வந்தாள். வந்தவள் அவளைப் பார்த்து—

“என்னடியம்மா! உன்னைத் தேடி வந்திருக்கும் வாலிபர்களை வர்ணிக்காமல், வானத்து வெண்ணிலவை வர்ணித்துக் கொண்டிருக்கிறாய்” என்றாள்.

தாசி தங்கம் அவளைப் பார்த்து, “பொன்னைப் பார்க்கும் போது, நகைகளைப் பற்றிய நினைவு நமக்கு வருகிறது. பூவைப் பார்க்கும் போது பூமாலையைப் பற்றிய நினைவு நமக்கு வருகிறது. அது போலவே, இந்த நிலவைப் பார்த்தவுடன், எனக்கு இதன் வரலாறும், என் வரலாறும் நினைவுக்கு வந்தது. அதனால், என் கதையை மிகச் சுருக்கமாகவும், சுவையாகவும் இதனிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். இன்று நான் எழுதிய புதிய கவிதை ஒன்றை இந்தப் பழைய நிலாவிடத்தில் பாடிக் காட்டலாம் என்றிருந்தேன். அதற்குள் நீ வந்து விட்டாய். நான் எழுதிய, புதிய கவிதையைப் படிக்கிறேன். கவனமாகக் கேட்கிறாயா?” என்றாள். அவள் “கேட்கிறேன் சொல்” என்றாள்.

தாசி தங்கம், தான் எழுதிய கவிதையை அவளிடம் படித்துக் காட்டினாள். பாடலைக் கேட்டு, மிகவும் மகிழ்ச்சியடைந்த ஊசி என்பவள், தாசி தங்கத்தை நோக்கி,

“எண்ணல், எழுதல், இலை கிள்ளல், பூத்தொடுத்தல், யாழ் வாசித்தல் ஆகிய ஐந்து தொழில்களிலும், நீ மிகவும் வல்லவள் என்பதை நான் முன்பே அறிவேன். ஆனால், நீ இவ்வளவு அருமையாகக் கவிதை எழுதக் கூடியவள் என்பது எனக்கு இப்போதுதான் தெரிகிறது. கவிச் சக்கரவர்த்தி கம்பன் பாடிய காவியத்திற்குச் சாற்றுக்கவி வழங்கிய தஞ்சை அஞ்சனாட்சியின் மரபில் வந்தவளல்லவா நீ! அதனால்தான் இவ்வளவு அருமையாகப் பாடியிருக்கிறாய்! இந்தா, இந்த முத்து மாலையைப் பரிசாகப் பெற்றுக் கொள்!” என்று கூறித் தன் கழுத்திலிருந்த முத்து மாலையை அவளிடம் கொடுத்தாள். தாசி தங்கம், அந்த முத்து மாலையைப் பெற்றுக் கொண்டு, “இதென்னடி இந்த முத்துமாலை பச்சை நிறமாக இருக்கிறது!” என்று கேட்டாள்.

“இது, நெல்லிலிருந்து பிறக்கும் முத்துக்களால் ஆன மாலை. இதன் நிறம் பச்சையாகத்தான் இருக்கும்,” என்றாள்.

“சிப்பியில்தான் முத்துப் பிறக்கும் என்பார்கள்; நெல்லிலும் முத்துப் பிறக்குமா?” என்றாள்.

நெல்லில் மட்டுமல்ல, சங்கு, மேகம், மூங்கில், சிப்பி, கரும்பு, கொக்கின் தலை, பாம்பின் தலை, மீன் தலை, யானைக் கொம்பு, பன்றிக் கொம்பு ஆகிய பத்திடங்களிலும் முத்துக்கள் பிறக்கும். யானைக் கொம்பின் முத்து, மாடப் புறாவின் முட்டையைப் போல் திரண்டு, வெண்மையாக இருக்கும். மேகத்தின் முத்து, இளஞ் சூரியன் நிறமாயிருக்கும். மூங்கிலின் முத்து, மழைத் துளி நிறமாயிருக்கும். மீன் முத்து, பாதிரிப் பூ நிறமாயிருக்கும். கரும்பின் முத்து, பொன்னிறமாயிருக்கும். மூங்கிலின் முத்தும், அப்படி இருப்பதுண்டு. ஜூலியஸ் சீசர், புரூட்டசின் தாயாகிய செவிலியா என்பவளுக்குத் தமிழ் நாட்டு முத்தாகத் தேடிப் பார்த்து, ஒரு முறை பரிசளித்தானாம். அந்த ஒரு முத்தின் மதிப்பு மட்டும் 47457 தங்க நாணயங்களாம். ஒரு முறை, வள்ளல் சீதக்காதியை நாடி ஒரு புலவர் வந்தாராம். பரிசில் கேட்ட புலவரைக் கண்ட சீதக்காதி “இப்போது உமக்குக் கொடுக்க என்னிடம் எதுவுமில்லை. அதோ என் மனைவி இருக்கிறாள். அவளிடம் கேளுங்கள்” என்று சொல்லவே, அந்தப் புலவர் உடனே வள்ளலின் மனைவியருகில் சென்றார். அப்போது முறத்தில் முத்துக்களைக் கொட்டிப் புடைத்துக் கொண்டிருந்த அந்த அம்மையார், புலவரைக் கண்டதும், முறத்தில் இருந்த முத்துக்களை அவரது மடியிலே கொட்டினாராம். ஏண்டி தங்கம் அப்படி நமக்குப் பரிசு தருபவர்கள் யாரிருக்கிறார்கள்? நம் வீடு தேடி வருபவர்கள், நமக்கு முததுக்களையா தருகிறார்கள்? எச்சில் முத்தங்களைத்தானே தருகிறார்கள்” என்றாள்.

“நம் வீட்டுக்கு வரும் வண்டு வெறியர்கள் என்ன வள்ளல்களா? தர வேண்டியதைத் தந்து நம்மிடம் பெற வேண்டியதைப் பெற்றுச் செல்லும் தந்திரக்காரர்கள்தானே அவர்கள்!” என்றாள் தங்கம்.

“நாம்தான், பிறருக்குப் படுக்கைப் படகுகளாக இருக்கிறோம். நம் குலத்தில் பிறந்த பெண்கள் எல்லோருமே அப்படியா இருக்கிறார்கள்” என்றாள் ஊசி.

“ஒழுக்கத்தோடு வாழும் பெண்கள் பலர், நம்மினத்தில் இன்றும் இருக்கிறார்கள். அன்றும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் இல்லறத்திற்குரியவர்களாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். அச்சுத மங்கலத்துக் கோயிலுக்குரிய தேவரடியாள் ஒருத்தியை, மேற்குலத்தான் ஒருவன் திருமணம் செய்து கொண்டதாகக் குலோத்துங்கனது 11-ஆம் ஆண்டுச் சாசனம் கூறுகிறது. மற்றும், இரண்டாம் இராசராசன் ஆட்சியில், திருவொற்றியூர்த் தேவரடியாளான சதுரள் சதுரி என்பவளை, நாகன்காடன் என்பவன் மணந்து கொண்டதாகவும் மற்றோர் கல்வெட்டு கூறுகிறது” என்றாள் தங்கம்.

“அப்படியா! அந்தக் கல்வெட்டுகள் எங்கிருக்கின்றன? அவற்றை நான் படித்துப் பார்க்க வேண்டும்“ என்றாள் ஊசி.

“அவற்றை நீ பிறகு படித்துப் பார்க்கலாம். முதலில் வீடு தேடி வந்திருக்கும் பார்வையாளர்களைப் பார்க்கலாம் வா” என்று அவளை அழைத்துக் கொண்டு, வீட்டிலுள்ள கூடத்துக்கு வந்தாள்.

கூடத்தில், ஒரு குத்து விளக்கு எரிந்து கொண்டிருந்தது. விலையுயர்ந்த கட்டிலின் மீது, வீணை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இசை, நடனம், நாடகம் முதலிய கலைகளிற் சிறந்த புலமை உடையவனும், ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவனுமாகிய மகேந்திரவர்மன் என்பவன் பரிவாதி என்னும் பெயர் கொண்ட வீணையை மீட்டுவது போல் தீட்டப் பெற்ற வண்ண ஓவியம் ஒன்று சுவரில் மாட்டப் பெற்றிருந்தது. கூடத்துக்கு வந்த இருவரும், வீணை இருந்த கட்டிலின் மீது உட்கார்ந்தனர்.

ஊசி என்பவள் தங்கத்தைப் பார்த்து, “ஏண்டி தங்கம், இதோ எரியும் இந்த விளக்கு, குத்து விளக்கா அல்லது குத்தும் விளக்கா?” என்று கேட்டாள்.

“இது குத்தும் விளக்கல்ல, குத்தும் விளக்காக இருந்தால், நான் இதை விலை கொடுத்து வாங்கியிருப்பேனா?” என்றாள் தங்கம்.

“குத்து விளக்குகளை நாம் விலை கொடுத்து வாங்குகிறோம். நம்மைக் குத்தும் விளக்குகளோ நம்மை விலை கொடுத்து வாங்குகின்றன” என்றாள் ஊசி.

அப்போது, எலி ஒன்று குத்து விளக்கிலுள்ள எண்ணெயில் தன் வாலைத் தோய்த்துத் தன் வாலிலுள்ள எண்ணெயை நக்கிக் கொண்டிருந்தது. அதனைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ஊசி என்பவள், தங்கத்தைப் பார்த்து, “தங்கம் அந்த எலியைப் பாரடி! அது, அந்தக் குத்து விளக்கிலுள்ள எண்ணெயை நக்காமல், தனது நீண்ட வாலை எண்ணெயில் தோய்த்து, அந்த எண்ணெயை நக்குகிறதே, அது ஏன்?” என்று கேட்டாள்.

“ஏனெனில், அந்த எண்ணெய்தான் எலியின் உடம்பில் காமரசத்தை வளர்க்கிறது. இவ்வாறு, எண்ணெயில் தோய்ப்பதற்கு எளிதாக இருக்கும் பொருட்டே, எலியின் வால் மிகவும் நீளமாகப் படைக்கப் பட்டிருக்கிறது” என்றாள் தங்கம்.

“கொக்கோக நுட்பங்களை உன்னிடம் இளைஞர்களும் கற்றுக் கொள்கிறார்கள். இங்கு வரும் எலிகளும் கற்றுக் கொள்கின்றன” என்றாள் ஊசி.

“பார்த்தாயா! பார்த்தாயா! உண்மையைச் சொன்னால், நீ என்னை ஊசி போல் குத்துகிறாயே! இதனால்தான் உனக்கு ஊசி என்று பெயரிட்டார்களா?” என்று கேட்டாள் தங்கம்.

“அடி போடி பைத்தியக்காரி! ஊசி என்று எனக்கு ஏன் பெயர் வைத்தார்கள் தெரியுமா? புதுவைக்கு அருகிலுள்ள கதிர்காமம் என்னும் ஊரில், ஆய் என்னும் தாசி ஒருத்தி இருந்தாளாம். அவளுடைய தங்கை ஊசி என்பவள், மிகப் பெரிய ஏரி ஒன்றை வெட்டினாளாம். ஊசி என்பவள் வெட்டிய ஏரி ஆதலின், அதற்கு ஊசி இட்ட ஏரி என்று பெயரிடப்பட்டது. ஊசி இட்ட ஏரியைத்தான் இப்போது நாமெல்லோரும் ஊஷ்ட்டேரி, ஊஷ்ட்டேரி என்று அழைத்து வருகிறோம். எக்காலத்திலும் பயன்படும் ஏரியொன்றை வெட்டியவளாகிய ஊசி என்பவளின் நினைவாகத்தான் எனக்கு ஊசி என்று பெயரிடப்பட்டதாம்” என்றாள் ஊசி.

அப்போது தங்கம் அவளைப் பார்த்து, “அன்றொரு நாள் நாமிருவரும், ஏழூர் நாட்டுத் தலைநகரிலுள்ள ஏரியில் குளித்தோமே, அந்த ஏரியைக் கற்பகவல்லி, சண்பகவல்லி என்னும் பெயருடைய இரண்டு தாசிகள்தாம் வெட்டினர்களாம். 14-ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட அந்த ஏரியைப் பார்க்கும் போது, அதை வெட்டியவர்களின் வரலாறு என் நினைவுக்கு வருகிறது. அதே நேரத்தில், அவர்களின் முடிவை நினைக்கும் போது என் உள்ளம் வேதனைப்படுகிறது” என்றாள் தங்கம்.

“ஏன்” என்று கேட்டாள் ஊசி.

“அவர்கள் இருவரும் எக்காரணத்தாலோ, வாழ்வில் வெறுப்புற்றுத் தங்கள் பட்டுச் சேலைகளின் முன்தானையைக் கட்டிக் கொண்டு, மற்றப் பகுதியை பிறரிடம் கிழித்துக் கொடுத்து விட்டு, அந்த ஏரியிலேயே வீழ்ந்து, இறந்து போனார்களாம். அவர்கள் வளர்த்த நாயும், அவர்களோடு ஏரியில் வீழ்ந்து இறந்து விட்டதாம்” என்றாள் தங்கம்.

அவள் கூறியதைக் கேட்டதும், “ஐயோ பாவம்” என்று வருந்தினாள் ஊசி.

அப்போது, அவள் வீட்டுக்குக் கவிஞன் ஒருவன் வந்தான். அவனைக் கண்டவுடன், தளர்ந்து போன தாய்க் கிழவி ஓடி வந்து வரவேற்றாள்.

தைப்பதற்கும், மொய்ப்பதற்கும் உரிய இந்த வேளையில், நாம் இங்கே இருப்பது தடங்கலாக இருக்குமெனக் கருதி, தங்கத்திடம் விடை பெற்றுக் கொண்டு ஊசி அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுச் சென்றாள். காம வெறியோடு வந்த கவிஞன் தாய்க் கிழவியைப் பார்த்து,

“தங்கம் எங்கே?” என்று கேட்டான். “தட்டான் தட்டுகின்ற தங்கம், இந்தத் தரையில் இருக்கிறது. நீங்கள் தேடுகின்ற தங்கம் அந்த அறையில் இருக்கிறது” என்றாள் தாய்க் கிழவி.

“நீர் பாய்ச்சுதற்குரிய நிலம், நலமாக இருக்கிறதா?” என்றான் அவன்.

“நலமாகவும் இருக்கிறது. அடிக்கடி அது நனைந்து கொண்டுமிருக்கிறது” என்றாள் தாய்க் கிழவி.

“உங்கள் மகள் தங்கம் உங்களுக்குத் தங்கமாக இருக்கலாம். ஆனால், இங்கு வரும் வாலிபர்களுக்கெல்லாம் அவள் ஒரு வண்ணத் தாமரை. அன்றாடம் விரிந்து குவியும் வெள்ளைத் தாமரைப் பூவில் சரஸ்வதி இருப்பாளாம்!” என்றான் கவிஞன்.

“என் மகள் சரஸ்வதி அல்ல; அவள் ஒரு சரசவதி. அவள் வெள்ளைத் தாமரைப் பூவில் இருக்க மாட்டாள். வெண் பட்டு மெத்தையில்தான் இருப்பாள்” என்றாள் தாய்க் கிழவி.

“அவள் ஒரு பேரழகி! அது மட்டுமல்ல, ஆடல், பாடல் ஆகிய கலைகளிலும் அவள் சிறந்து விளங்கும் சிங்காரி” என்றான் கவிஞன்.

“இத்தகைய சிறப்புகள் அவளிடத்தில் இருப்பதால்தான், இருபதாம் நூற்றாண்டு மாதவி என்று எல்லோருமே அவளைப் பாராட்டுகிறார்கள். அதிருக்கட்டும், தாங்கள் யார்? தங்களுக்கு எந்த ஊர்?” என்று கேட்டாள் தாய்க் கிழவி.

“நான் ஒரு கவிஞன். தேரழுந்தூரில் பிறந்தவன்” என்றான் அவன்.

“தாங்கள் தேரழுந்தூரில் பிறந்தவரா? கவிச் சக்கரவர்த்தி கம்பன் பிறந்த ஊரல்லவா அவ்வூர்?” என்றாள் அந்தக் கிழவி.

“ஆமாம்,
மன்னவனும் நீயோ?
வளநாடும் உன்னதோ?
உன்னை அறிந்தோ
தமிழை ஓதினேன்.

என்று, மன்னனையே எதிர்த்துக் கேள்வி கேட்டவன் அந்த மகா கவி” என்றான் அவன்.

“கம்பன் ஒரு மகா கவி என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அவன், ஒழுக்கத்தைப் பற்றி ஊருக்கெல்லாம் உபதேசம் செய்தானே, அவன் ஒழுக்கத்தோடு வாழ்ந்தானா? ஆஸ்தான கவிஞனுக்குரிய அந்தஸ்தை அவன் காப்பாற்றினானா? இல்லையே! அவனை ஆதரித்து வந்த சடையப்ப வள்ளலோ, அடிக்கடி கரும்புகளைத் தொட்டு வந்தவன். நெம்புகோல் கம்பனோ, பெண்களின் குரும்பைகளைத் தொட்டு வந்தவன். அன்றாடம் அவன் குத்தகை முத்தம் கொடுத்து வந்தவன். மயிலாப்பூரில் வாழ்ந்த திருவாலி என்னும் வள்ளலைப் புகழ்ந்து பாடி, அவன் வழங்கிய பரிசில் பணத்தைக் கொண்டு, தாசி வல்லியின் அங்கத்தில் தங்க நகைகளை அணிவித்து, அன்றாடம் அவள் மடியில் அடை காத்துக் கிடந்தவன் அலலவா அவன். அவன் ஒரு நாள், தாசிப் பெண் ஒருத்தியை இழுத்துக் கொண்டு ஓடி விட்டானாம். ஒரு குளத்திலுள்ள நீரை, ஒரு குடத்தில் எடுத்துக் கொண்டு போக முடியுமேயன்றி, அந்தக் குளத்தையே யாரும் எடுத்துக் கொண்டு போக முடியாது. அது போல், இங்கு வரும் இளைஞர்கள் என் மகளைப் பஞ்சணையில் அழுத்திக் கொண்டிருக்க முடியுமேயன்றி, அந்தக் கம்பனைப் போல், யாரும் அவளை இழுத்துக் கொண்டு போய் விட முடியாது. வேண்டுமானால், அவளுடைய செவ்விதழ்களில் இருக்கும் செந்தேனை எடுத்துக் கொண்டு போகலாம்” என்றாள் தாய்க் கிழவி.

“நான் இங்கு அதற்காகத்தான் வந்திருக்கிறேன்” என்றான் கவிஞன்.

“ஐந்து பொன் கொடுத்தால், நீங்கள் அங்கே போய்த் தேனெடுக்கலாம்” என்றாள் கிழவி.

“நான் ஒரு கால் நடைக் கவிஞன். என் கையில் காசில்லை. என்னிடம் அற்புதமான கற்பனைதான் இருக்கிறது“ என்றான் கவிஞன்.

“பொய் விரிக்கும் இவ்விடத்தில், வெறும் கை விரிக்கும் கவிஞரே! தங்களிடம் கற்பனைதான் இருக்கிறதா? கற்பனை என்பது என்ன தெரியுமா? அது, உருப்படாத கவிஞர்கள் செய்யும் ஓயாத முயற்சி. கலவி என்பது, பணம் கொடுப்பவர்களுக்கு தாசிகள் தரும் பயிற்சி. நீங்கள் முன் பணம் கொடுத்தால், அந்த முன் படத்தைப் பார்க்கலாம். இல்லையென்றால், இப்போதே இவ்விடத்தை விட்டு நீங்கள் எழுந்து போகலாம்” என்றாள் தாய்க் கிழவி.

எதிர்பார்த்து வந்த கவிஞன், ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றான். அவன் சென்ற சிறிது நேரத்திற்குப் பிறகு, ஓர் இளைஞன் அங்கே வந்து, தாய்க் கிழவியை முதலில் சந்தித்தான். தங்கத்தைப் பிறகு சந்தித்தான்.

தாய்க் கிழவி, விளக்கை எடுத்துக் கொண்டு ஓரிடத்திற்குச் சென்றாள். தங்கமும், அவனும் வேறிடத்திற்குச் சென்றனர்.

ஆலிங்கனத்திற்கு உரிய இடம் அந்த இடம்.

அணைப்பதற்கும், இணைப்பதற்கும் உரிய அறை அந்த அறை.

அந்த அறையின் சுவரொன்றில், வசி+சிவ என்றும்; வ+சி+வ என்றும் எழுதப் பெற்றிருந்தது.

அவற்றை அவன் படித்துப் பார்த்து விட்டு “ஏன், இங்கு இவ்வாறு எழுதி வைத்திருக்கிறீர்கள்? இதற்குப் பொருளென்ன?” என்று அவன் அவளைக் கேட்டான்.

“வசி என்றால் தங்கு என்பது பொருள். சிவ என்றால் ஆனந்தம் என்பது பொருள். வ+சி-வ. என்றல், வா+தங்கு+ஆனந்தம் பெறு என்பதைக் குறிக்கும்.

இங்கே வா
என்னிடத்தில் தங்கு
ஆனந்தம் இதோ அனுபவி
என்பதே இதற்குப் பொருள். ‘சிவ சிவ’ என்பது சைவ மந்திரம். ‘வசிவ’ என்பது சரச மந்திரம். ஏழைகள் உணவைத் தேடுகிறார்கள். பணக்காரர்கள் பசியைத் தேடுகிறார்கள். நாங்களோ உங்களைப் போன்ற இளைஞர்களைத் தேடுகிறோம்” என்றாள் தங்கம்.
“நீங்கள் தேடுகிறீர்கள்.
நான் தேடியும் அலையமாட்டேன்.
வந்தாலும் விடமாட்டேன்.”
என்றான் அவன்.
“நான் பகலாகவும்,
பகலில் தாமரையாகவும்,
இரவாகவும்,
இரவில் அல்லிப்பூவாகவும் இருப்பவள்.
நான் ஒரு பானுமதி”
என்றாள் அவள்.

“நீ படிதாண்டாப் பத்தினியுமல்ல,
நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல.”என்றான் அவன்.

“காய்ந்த இறைச்சியையும், புதுத் தயிரையும் உண்ணக் கூடாது. உண்டால் ஆயுள் குறைந்து விடும் என்பார்கள்” என்றாள் அவள்.

“பச்சை இறைச்சியும், பழைய தயிரும் இருக்குமிடம் தெரிந்துதானே நான் இங்கு வந்திருக்கிறேன்” எனறான் அவன்.

மேட்டுக்கும், இரண்டு தொடைகளின் கூட்டுக்கும் தொகை தந்த இளைஞன் தங்கத்தைத் தழுவினான். அவள் தன் உதடுகளால் அவன் உதடுகளைக் கழுவினாள்.

“ஆற்றைக் கண்டவிடத்து அவிழ்த்து உண்னும் உணவை, ‘ஆற்றுணா’ என்பார்கள். அந்தச் சோற்று மூட்டையைத் தோளில் கோத்துக் கொண்டு செல்வதனால், அதனைத் ‘தோட்கோப்பு’ என்றும் சொல்லுவார்கள்” என்றான் அவன்.

“உங்கள் ஆசைப்பசிக்கு நான் ஆற்றுணாவாகப் பயன்படவும், தோளில் கோப்பதற்குரிய தோட்கோப்பாக இருக்கவும் தானே உங்களை இங்கழைத்து வந்திருக்கிறேன்” என்றாள் அவள்.

“கையினால் இதமாக, அதாவது பக்குவமாக எடுப்பதனால், ‘கையிதம்’ என்று பெயர் வந்தது. கையிதம் என்னும் சொல்லைத்தான், இன்று நாமெல்லோரும் ‘காயிதம்’ என்று சொல்லுகிறோம்” என்றான் அவன்.

“பயன்படும் காகிதத்தையும் பக்குவமாக எடுக்க வேண்டும்.
 பருவக் குமரிகளையும் பக்குவமாகக் கையாள வேண்டும்” என்றாள் அவள்.

அவன் அப்போது சிரித்தான்.
அவள் அப்போது விரித்தாள்.
“பேரி யாழுக்கு இருபத்தொன்று நரம்புகள்
மகர யாழுக்கு பத்தொன்பது நரம்புகள்
சகோட யாழுக்குப் பதினான்கு நரம்புகள்
செங்கோட்டி யாழுக்கு ஏழு நரம்புகள்”
என்று சொன்னாள் அவள்.

“ஆதி யாழுக்கோ ஆயிரம் நரம்புகள்” என்றான் அவன்.

“ஆதி யாழ் இப்போது நம் நாட்டில் இல்லையே” என்றாள் அவள்.

“ஆதி யாழ் இல்லா விட்டால் என்ன, அருகில்தான் நீ இருக்கிறாயே!” என்று சொல்லிக் கொண்டே, அவள் உடம்பிலுள்ள பச்சை நரம்புகளையும், பருவக் குரும்பைகளையும் அவன் தடவினான்.

அவன் அங்கே
நின்றான்—இருந்தான்.
அவள் அங்கே
இருந்தாள்—கிடந்தாள்.
அந்த வாடகை வாலிபன்
அவள் மீது படிந்தான்.
அப்போது,
அங்கிருந்த வெளிச்சம் விலகிக் கொண்டது.
அந்த அறைக்குள் முன்பே நுழைந்த
நீண்ட சதுரமான இருட்டில்,
நான்கு கால் நாடகம் நடைபெற்றது.
அவளுக்கு அது—பழைய நாடகம், புதிய ஒத்திகை.

அவனுக்கு அது—நீண்டநாள் ஆசை, நேர்முகத் தேர்வு.

உரையாடலும், பாடல்களும் இல்லாமல் அந்த ஊமை நாடகம் நன்கு நடைபெற்று முடிந்தது.

அவள் அவனைப் பார்த்து “உங்கள் புதிய நாடகத்திற்குப் பெயர் வைக்க மறந்து விட்டீர்களே?” என்று கேட்டாள்.

“நான் இதை மறந்து விடவில்லை. பிள்ளை பிறந்த பிறகுதானே, அதற்கு நாம் பெயரிடுகிறோம். இங்கு நடைபெற்ற நாடகத்திற்கு, இனிமேல்தான் ஒரு நல்ல பெயர் வைக்க வேண்டும்” என்றான் அவன்.

“இரண்டு பேர் மட்டுமே பார்க்கக் கூடிய இந்த நாடகத்திற்கு என்ன பெயர் வைத்தால் பொருத்தமாக இருக்கும்” என்று அவள் கேட்டாள்.

“இந்த நாடகத்திற்குப் ‘பிரபுலிங்கலீலை’ என்று பெயரிடுவதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும்” என்றான் அவன்.

பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், தாம் இயற்றிய நூலொன்றுக்குப் பிரபுலிங்கலீலை என்று பெயரிட்டிருக்கிறாள். நீங்களோ, பிறரறியாமல் நடத்தும் இந்த நாடகத்திறகுப் பிரபுலிங்கலீலை என்று பெயர் வைக்க விரும்புகிறீர்கள். சிற்றின்பச் சிவப்பிரகாச சுவாமிகளே! இந்த நாடகம் இங்கு நாள் தோறும் நடைபெற உங்களைப் போன்றவர்களின் உதவி எங்களுக்கு எப்போதும் தேவை” என்று சொல்லிக் கொண்டே எழுந்தாள்.

அவன் சிரித்தான்.

அவன் சிரிக்கின்றானே என்பதற்காக, அவளும் சிரித்தாள்.