எண்ணித் துணிக கருமம்/கலைஞர் உரை 1

 

நாற்பதாண்டுகள் நான் கட்டிக்காத்த

அண்ணா தந்த கருவூலம்!

உடன்பிறப்பே,

திருச்சியில் 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற தி.மு.க. மாநில மாநாட்டில்; கழகம் தேர்தலில் ஈடுபட்டு ஆட்சி மன்றங்களில் இடம் பெறலாமா? என்ற கேள்வியை முன்வைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு வாக்கெடுப்பு நடத்தினார். தேர்தலில் ஈடுபடலாம் என்பதற்கு மாநாட்டில் கூடியிருந்தோரின் முக்கால் பகுதியினர் வாக்குகள் கிடைத்த காரணத்தால்;

1957 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது பொதுத் தேர்தலில் தி.மு.க. களம் புகுந்தது. அந்தத் தேர்தலில் பாராளுமன்ற வேட்பாளர்களாக நிறுத்தப்பட்ட சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத் அவர்களும், திருவண்ணாமலை தீரர் தர்மலிங்கமும் வெற்றி பெற்றனர். சட்டப் பேரவைத் தேர்தலில் அண்ணா உள்ளிட்ட 15 பேர் வெற்றி பெற்று தமிழக அரசியல் அரங்கையே ஆச்சரியத்தில் ஆழ்த்தினோம்.

அடுத்து 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் காஞ்சித் தொகுதியில் அண்ணா வெற்றி வாயப்பை இழந்தார் எனினும் தி.மு.க. சார்பில் 50 பேர் வெற்றி பெற்று, பிரதான எதிர்க்கட்சியாகப் பேரவையில் அமர்ந்தோம்.

1957 ஆம் ஆண்டு கழகம் பெற்ற வெற்றி; ஆளுங்கட்சியான காங்கிரசுக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணியது என்றால், 1962ல் கழகம் பெற்ற வெற்றி அகில இந்திய அளவில் காங்கிரசுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது எனலாம். கழக வளர்ச்சியை முடக்க என்ன செய்யலாமெனத் திட்டம் தீட்டத் தொடங்கினர் டெல்லிப் பட்டணத்தில்!

அதிர்ச்சியின் அளவைக் காங்கிரசுக்கு மேலும் அதிகப்படுத்தும் விதமாக அப்போது திருவண்ணாமலையில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில், பெருந்தலைவர் காமராசர் அவர்களே நேரடியாக இறங்கிப் பணியாற்றிய நிலையிலும் தி.மு.க. வேட்பாளர் ப. உ. சண்முகம் அவர்கள் வெற்றி பெற்றார்.

இனி தி.மு.க.வை ஒழித்துக் கட்டாமல் விடக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் டெல்லி மேலிடமும் – தமிழகக் காங்கிரஸ் தலைவர்களும் கூடிப் பேசி; கொண்டு வந்தனர் ஒரு சட்டத்தை!

அந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டால்; தி. மு. கழகம் பிரிவினைக் கொள்கையைப் பேச முடியாது – பேசினால் கழகமே இருக்க முடியாது – இப்படி ஒரு சூழ்நிலையில், “சுவரா? சித்திரமா?” என்ற கேள்விக்கு விடை காண ஆழ்ந்த சிந்தனையில் கழகத்தினர் இருந்தபோது; அதுபற்றிய விவாதம் அரசியல் வட்டாரத்தில் சூடுபிடித்துக் கொண்டிருந்தபோது – தி.மு. கழகத்தின் பொதுக்குழு 1963ம் ஆண்டு சூன் திங்கள் 8, 9, 10 நாட்களில் கூட்டப் பெற்றது.

அந்தப் பொதுக்குழுவில் இந்தச் சிக்கலான பிரச்னைக்குத் தீர்வு காண ஆரோக்கியமான விவாதம் நடைபெற வேண்டுமென்று விரும்பிய அண்ணா அவர்கள், அக்குழுவில் அவர் பேச எண்ணியதை முன் கூட்டியே ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தில் தனது கைப்படவே எழுதி வைத்துக் கொண்டார். பொதுக்குழுவில் பேசும்போது பெரும்பகுதி; அவர் தன் கைப்பட எழுதி வைத்திருந்ததை அடிப்படையாக வைத்தே கருத்துகளை அள்ளிப் பொழிந்தார்.

திராவிட இயக்க வரலாற்றிலும் – தமிழக அரசியலிலும் ஒரு திருப்பு முனையாக அமைந்த அந்த பொதுக்குழுவில் அண்ணா பேசுவதற்காக அவரே எழுதித் தயாரித்த அந்த உரையை பொதுக்குழு முடிந்த பிறகு என்னிடம் ஒப்படைத்தார்.

அண்ணாவின் அந்தக் கையெழுத்துப் பிரதியை நாற்பது ஆண்டுகளாகப் பாதுகாத்து வைத்துள்ள நான்; அதனை இப்பொழுது நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிட விரும்புகிறேன்.

அரசியல் வரலாற்றையே மாற்றிய அந்தப் பொதுக்குழுவின் முடிவையும் – அக்குழுவில் அண்ணா நிகழ்த்திய அற்புதமான விளக்க உரையையும் – படித்துணர ஒர் அருமையான வாய்ப்பு; ‘முரசொலி’ வாயிலாக, வருகிற மே திங்கள் 3 ந்தேதி முதல் கழக உடன்பிறப்புகளுக்கும் – அரசியல் ஆர்வலர்களுக்கும் கிடைக்க இருக்கிறது.

அந்தப் பொதுக்குழுவில் அண்ணா ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருப்பது போல பொதுக்குழு உறுப்பினர்கள் நீண்ட நேரம் விவாதித்து அண்ணாவின் வேண்டுகோளுக்கிணங்க மனம் விட்டுப் பேசி அண்ணாவின் கருத்துப்படி தி.மு. கழக சட்ட திட்டப் புத்தகத்தில்; இன்றளவும் இடம் பெற்றுள்ள,

குறிக்கோள்

அறிஞர் அண்ணா வகுத்த குறிக்கோளுக்கு ஏற்ப தமிழகம், ஆந்திரம், கேரளம், கருநாடகம் ஆகிய நான்கு மொழி வழி மாநிலங்களிலும் இந்திய அரசுரிமை ஒருமைத்தன்மை, அரசியல் அமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்கு உட்பட்டு நெருங்கிய திராவிட கலாச்சார கூட்டுறவு நிலவப் பாடுபடுவது; அரசியல் நிர்ணயச் சட்டத்தில் முழு நம்பிக்கையும், பற்றுறுதியும் கொண்டு சமதர்மம், சமயச் சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய லட்சியங்களில் முழு ஈடுபாடும், பற்றும் கொண்டு இந்திய நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றைக் கட்டிக் காப்பது;

கோட்பாடு

அறிஞர் அண்ணா அறிவுறுத்திய கடமை – கண்ணியம் - கட்டுப்பாடு அடிப்படையில், அரசியலில் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து, ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்திடவும்; பகுத்தறிவு அடிப்படையில் மறுமலர்ச்சிக்கான சீர்திருத்தப் பணி ஆற்றிடவும்; பொருளாதாரத் துறையில் வறுமையை வென்று; சமதர்ம அடிப்படையில் எல்லோரும் நல்வாழ்வு பெற வழிவகை கண்டிடவும்; பிறமொழி ஆதிக்கத்திற்கு இடங்கொடாமல் அந்தந்த மாநில மொழிகளை வளர்த்திடவும், அவைகளுக்கான உரிய இடத்தைப் பெற்றுத் தரவும்; மத்திய அரசில் குவிந்து கிடக்கும் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு, மாநிலங்களில் சுயாட்சியும் – மத்தியில் கூட்டாட்சியும் (Autonomy for States and Federation at Centre) உருவாகிடவும் தொண்டாற்றுவது என்று திருத்தப்பட்டு; அதுவே இன்றைக்கும் நமது கழகத்தின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளாக அமைந்துள்ளன.

இந்தத் திருத்தம் தி.மு. கழகச் சட்டதிட்டத்தில் இடம்பெற; அண்ணா ஆற்றிய பொதுக்குழு உரை எவ்வாறு வழிகாட்டுதலாக அமைந்தது எனபதை அவரது கையெழுத்துப் பிரதி வாயிலாக ‘முரசொலி’ வெளியிடுவது; அனைவருக்கும் அரிய வாய்ப்பு.

கழகத்தின் கடந்த கால வரலாற்றையும் – நாம் கடந்து வந்த பாதையையும் – அந்தக் கரடுமுரடான பாதையில் நமது கரம் பிடித்து நமது அண்ணா அவர்கள் எப்படி நம்மை அழைத்து வந்துள்ளார் எனபதையும் உன் போன்றோர்க்கு விளக்கிடவே அண்ணா என் கையில் ஒப்படைத்துச் சென்ற அந்தக் கருவூலத்தை மே 3 முதல் வெளியிடுகிறேன்.

நாம் நடந்து வந்த பாதையை அறிந்துகொள்ள, அண்ணா வழியைப் புரிந்துகொள்ள; நமது குறிக்கோள், கோட்பாடு இவற்றில் தெளிவாக விளங்கி அவ்வாறே செயல்பட இது பயன்படும் என்று நம்புகிறேன்.

அன்புள்ள,

மு. க.

(1.5.2003)

குறிப்பு:–

அண்ணா எழுதித் தந்த உரையடங்கிய அந்த நோட்டுப் புத்தகத்தின் தலைப்பு; “எண்ணித் துணிக கருமம்” என்பதாகும். அதனால்தான் இத்தொடருக்கு அவர் கையெழுத்தையே தலைப்பாகச் சூட்டியுள்ளேன்.