எண்ணித் துணிக கருமம்/கலைஞர் உரை 2

2

உடன்பிறப்பே,

திர்ப்படும் நண்பர்களோ, உடன்பிறப்புகளோ எவராயினும் கேட்கின்றனர்; எப்படி “எண்ணித் துணிக கருமம்” என்ற தலைப்பில் அண்ணா அவர்களே தன் கைப்பட எழுதிய அந்த நோட்டுப் புத்தகத்தை 40 ஆண்டுகள் பாதுகாத்து வந்தீர்கள் என்று!

தமிழில் மட்டுமல்ல; ஆங்கிலத்திலும் அதே கருத்தை அவர் கைப்பட ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதியிருந்தார். அதை என் அன்புக் கண்மணியும், அண்ணாவின் இதயத்தில் சிறந்த இடம் பெற்றவருமான தம்பி முரசொலி மாறனிடம் கொடுத்து வைத்திருந்தார். அதில் சில பக்கங்களை அவர் வீட்டில் கறையான் நுகரத் தொடங்கிய காரணத்தால் அந்தக் கையெழுத்துப் பிரதியை மாறன், முரசொலி அலுவலகத்தில் பத்திரப்படுத்தியிருந்தார். 1991 ஆம் ஆண்டு ஆளுநர் ஆட்சியில் மாற்றுக் கட்சிக் குண்டர்கள் முரசொலி அலுவலகத்தைத் தீக்கிரையாக்கியபோது, முரசொலி பைல்கள், புத்தகங்களுடன் அண்ணாவின் அந்த ஆங்கிலக் கையெழுத்துப் பிரதியும் சாம்பலாக்கப்பட்டுவிட்டது.

அனைத்து ஆபத்துகளையும் தாண்டி என்னிடம் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டதுதான் அண்ணா எழுதிய 301 பக்கங்கள் கொண்ட இந்தக் கையெழுத்துப் பிரதி நோட்டுப் புத்தகம் “எண்ணித் துணிக கருமம்” என்பதாகும்.

இது தி. மு. கழகத்தின் பலம் – பலவீனம் இரண்டையும் ஒளிவு மறைவின்றி அண்ணா அவர்களால் படம் பிடித்துக் காட்டப்படும் நேர்மையான விமர்சனம் என்றே எடுத்துக் கொள்ளலாம்.

அடக்குமுறையேற்கக் கூடிய – தியாகம் செய்யக் கூடிய – இழப்புகளை சந்தித்துத் தீரவேண்டிய எந்தவொரு போராட்டமாயினும்; அதனை அண்ணா அவர்கள்; தன்னுடைய அல்லது தன்னுடன் இருக்கக் கூடிய நாலைந்து பேர்களின் மனத்திண்மையை மட்டும் கணக்கில் கொண்டு அந்தக் களத்தில் அவசரப்பட்டு இறங்குவதில்லை. அவர் தலைமையேற்றிருந்த கால கட்டத்தில் கல்லக்குடி போராட்டம் – குலக்கல்வி எதிர்ப்புப் போராட்டம் – ரயில் நிறுத்தப் போராட்டம் – இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் – விலைவாசி உயர்வு எதிர்ப்புப் போராட்டம் என எத்தனையோ போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன.

ஆனால் பிரிவினைத் தடைச் சட்டத்தை எதிர்த்து ஒரு போராட்டம் நடத்துவதென்றால்; கழகத்தினர் வாழ்வு பறிபோகும் என்பதுடன் கழகமே பறிபோகும் என்ற உண்மையை; எவ்வளவு வலிவுமிக்க வாதங்களை எடுத்து வைத்து அண்ணா கருத்தறிவித்தார் என்பதை இந்த “எண்ணித் துணிக கருமம்!” என்ற அவரது கையெழுத்து உரை தெளிவாக்குகிறது.

“ஆகா! திராவிட நாடு கொள்கையை விட்டு விட்டார்கள், கோழைகள்!” என்று சில கட்சியினர் எள்ளி நகையாடினர். அப்போதும்; காங்கிரஸ் கட்சியின் சார்பில் அமைச்சராக இருந்த பெரியவர் பக்தவத்சலம் அவர்கள்; பிரிவினைக் கோரிக்கையை தி.மு.க. கைவிட்டுவிட்டு; இந்திய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை கொண்டு நாட்டின் ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்பு தர முன்வந்தமைக்காகப் பாராட்டு தெரிவிப்பதாக அறிவித்தார்.

அவரையும் மீறி அவரது காங்கிரஸ் கட்சியினர் – மற்றும் மாற்று முகாமில் இருந்தோர் – தி. மு. க. எடுத்த முடிவு குறித்துப் பழித்தும் இழித்தும் பேசாமல் இல்லை. அவர்களின் நோக்கம் என்ன என்பதை அறிந்திருந்த அண்ணா அவர்கள் அதையும் இந்தக் கையெழுத்துக் கருவூலத்தில் ஆங்காங்கு சுட்டிக்காட்டத் தவறவில்லை.

இந்தக் கருவூலத்தை இவ்வளவு நாள் வெளியிடாமல் இருந்த காரணம் என்ன?

எப்படி இத்தனை நாள் பத்திரப்படுத்தினாய்?

இந்தக் கேள்விகள் நிரம்ப எழத்தான் செய்யும்; எழுகின்றன!

என்னிடம் பத்திரமாக இருக்கும் வேறு சில விஷயங்கள் எல்லாவற்றையுமே வெளியிட்டுவிட முடியுமா? அவை எத்தனை பேருடைய முகத்தை சுளிக்க வைக்கும்; அகத்தை சுருங்க வைக்கும்! அதனால்தான் அவற்றை விடுத்து யாருக்கும் இடர் விளைவிக்காத ஒரு அரசியல் வரலாற்று ஏட்டினை அண்ணாவின் கையெழுத்து கொண்டே நாளை மே 3 ஆம் நாள் முதல் முரசொலியில் வெளியிடுகிறேன்.

இந்தக் கையெழுத்துப் பிரதி நோட்டுப் புத்தகத்தை மத்திய நல்வாழ்வுத் துறை இணை அமைச்சர் தம்பி ராஜாவிடம் நேற்றைய தினம் இரவு காட்டினேன். அண்ணாவின் கையெழுத்துக்களை ஒரு சேர இத்தனை பக்கங்களைப் பார்த்ததும்; அவர் உணர்ச்சிவசப்பட்டு அந்த எழுத்துகளைத் தொட்டுக் கும்பிட்டதும் கண்களில் ஒற்றிக் கொண்டதும் நினைவில் நிலைத்துவிட்ட நிகழ்ச்சியாகும்.

நாற்பதாண்டு காலம் கண் போலக் காத்த இந்தக் கருவூலத்தை இனியும் வெளியிடாமல் இருப்பதா? எப்போது வெளியிடலாம்? என்று என்னைத் துளைத்துக் கொண்டிருந்த கேள்விக்கு; இதனை வெளியிடுவதற்கான உரிய நேரம் இதுதான் என்று விடை கிடைத்தது.

எனவே இப்போது வெளியிடப்படுகிறது. இதனை நமதியக்கப் பயணத்தில் எதிர்ப்பட்ட திருப்பு முனையில் எவ்வளவு திறமையுடன் சமாளித்து விபத்தின்றி கழக வாகனத்தை அண்ணா செலுத்தினார் என்பதற்கு இந்தக் கருவூலமே கண்கண்ட சான்று.

இளைய தலைமுறையினர்க்கு இப்போதெல்லாம் இது போன்ற விஷயங்களை – வரலாற்று உண்மைகளைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் குறைந்து வருவது; நான் எண்ணி வருந்துகின்றவற்றில் ஒன்றாகும்.

இனியாவது கழக உடன்பிறப்புகளும் இளைய தலைமுறையினரும் இழந்துவிட்ட அந்த ஆர்வத்தை – ஒதுக்கி வைத்துள்ள அந்த அக்கறையை – திரும்ப் பெற்று திராவிட இயக்கத்துக்கு எல்லா வகையிலும் அறிவு வளம் சேர்த்திட வாரீர் என அழைக்கிறேன்.

அன்புள்ள,

மு. க.