எண்ணித் துணிக கருமம்/தனிநாடு 2
ஆத்திரம் காரணமாக இந்த அச்சத்தைக்கூடத் துச்சமென்று கருதி, கொடுமை புரிபவர் உண்டு, அவர்களை பொதுமக்கள், ‘ஓட்டுமுறை’யால் விரட்டுகிறார்கள்.
நம்முடைய நிலையோ மிகப் பரிதாபகரமானதாகிறது
ஆட்சியாளர்களின் கொடுமைக்கு ஆளாகிறோம், அது கண்டு பொதுமக்கள் கொதிப்பு அடைகின்றனர்; அந்தக் கொதிப்பை வேறுவகையிலே காட்ட இயலாத நிலையினரானதால், அடுத்த தேர்தல் வரட்டும் என்று காத்துக் கொண்டுள்ளனர், கொடுமையாளரைத் தண்டிக்க; கொடுமைக்கு ஆளான நம்மை ஆதரிக்க! அடுத்த தேர்தல் வருகிற போதோ, நாம் இல்லை, தேர்தலில்! ஏனெனில், பிரிவினை பேசுவோர் தேர்தலுக்கு நிற்பதும் தடுக்கப் பட்டுவிடுகிறது.
பொதுமக்கள் என்ன செய்யமுடியும்?
காங்கிரசாட்சி, நம்மைக் கொடுமைப்படுத்தவும், நமது கழகத்தை அழிக்கவும் திட்டமிடுகிறது, அதேபோது, இந்தக் கொடுமை செய்வதற்காக, தீர்ப்பளிக்கும் உரிமை பெற்ற பொதுமக்களிடம் நாம் முறையிட, நியாயம் கேட்க, நீதி பெற இருக்கும் வழியையும் அடைத்து விடுகிறது.
ஆட்சியிலுள்ளோர் தம்மை எதிர்ப்பவர்களைக் கொடுமை செய்தால், அதனை எதிர்த்து வழக்காடும் நேரம், தேர்தல் காலம்! தீர்ப்பு அளிக்கும் நீதிபதிகள், பொதுமக்கள்!
நமக்கு வழக்காடும் வாய்ப்பும் இல்லை; தேர்தலில் நாம் ஈடுபடுவது தடுக்கப்படுவதால்!
நமக்குத் தண்டனை தரப்படுவது மட்டுமல்ல, எதிர்த்து பொதுமக்கள் மன்றத்தில் வழக்காடும் உரிமையும் பறிக்கப்படுகிறது.
நியாயமா அல்லவா என்று சீர்தூக்கிப் பார்க்கும், வேலையும் பொதுமக்களிடமிருந்து பறிக்கப்படுகிறது.
பொதுமக்கள் நம்முடைய பிரச்சினையைப் பொறுத்தவரையில், நீதிபதிகளாக இருக்கும் உரிமையை இழந்து விடுகிறார்கள்.
இந்த நிலைமை இருப்பதால், ஆட்சியாளர், நம்மை என்ன கொடுமை செய்தாலும், ஏன் என்று கேட்கவும் ஆளில்லை, விசாரனை நடத்த வழி இல்லை, நல்ல தீர்ப்பளிக்கும் உரிமையும் பொதுமக்களுக்குக் கிடைக்கவில்லை.
இந்நிலையில், உள்ளபடி, நாம் கொடுமைப் படுத்தப்படுவது கண்டு, மனம் குமுறினாலும் பொதுமக்கள், ஏதும் செய்ய முடியாது – நமக்காக.
நமக்காக ஏதும் செய்ய முடியாத நிலையில், நம்மிடம் இருக்கும் பரிவும் நமக்குப் பயன்பட முடியாத நிலையில், பொதுமக்கள் செய்யக் கூடியதெல்லாம், கொடுமை செய்து நம்மை அழித்த காங்கிரசுக்கு அடுத்த தேர்தலில் ஓட்டு போட முடியாது என்று கூறுவது ஒன்றுதான்.
நம்மிடம் காட்ட வேண்டிய பரிவு, வேறு யாருக்காவது காட்டப்படும் – அவர்கள் காங்கிரசுக்கு எதிராக கட்சி நடத்துபவர்களானால்.
பொதுமக்கள் காங்கிரசிடம் கொண்டுள்ள வெறுப்பையும், கொடுமைக்கு ஆளான நம்மிடம் கொண்டுள்ள பரிவினையும், பயன்படுத்திக் கொள்ள வேறு சில கட்சிகள் முனையும்.
அந்த முயற்சியில், சில கட்சிகள் வெற்றி பெறவும் கூடும்.
கொடுமைக்கு ஆளான நம்மிடம் பரிவு காட்டுவதன் மூலமும், நம்மை விடுவிக்க முயற்சிப்போம் என்று பேசுவதன் மூலமும், நம்மிடம் பரிவு கொண்ட மக்களின் ஓட்டுகளை அந்த கட்சிகள் எளிதாகப் பெற முடியும்.
வெற்றி, அந்த கட்சிகளுக்குக் கிடைப்பதன் மூலம், நாம் எந்தக் கொள்கைக்காகக் கொடுமைகளை ஏற்றுக் கொண்டோமோ, அந்த கொள்கைகள் வெற்றி பெறுமா என்றால், வெற்றி கிட்டாது; ஏனென்றால், நம்மைக் காட்டி பொதுமக்களிடம் ஓட்டு பெறுபவர்கள், நம்முடைய கொள்கையை, திராவிடநாடு பிரிவினையை ஒப்புக்கொண்டவர்கள் அல்ல; ஒப்பக்கொள்ளவும் மாட்டார்கள்; ஒப்புக் கொண்டால், அவர்களும் தேர்தலில் நிற்க முடியாது; நம்மோடு சிறையில் இருக்க வேண்டும்.
ஆகவே திராவிடநாடு கேட்காத, திராவிடநாடு கொள்கையைக் கொள்ளாத சில கட்சிகள், திராவிடநாடு கேட்பதற்காக, சிறையில் கொடுமைப்படுத்தப்படும்,
தி. மு. கழகத்திடம் பற்று கொண்ட பொதுமக்களின் ஓட்டுகளைப் பெறுகிற, விசித்திரம் ஏற்பட்டுவிடுகிறது.
இது எந்த வகையிலும் நம்முடைய நிலைமையையோ; நம்முடைய திராவிடநாடு கொள்கையையோ, சீராக்காது, பலன் நமக்கு இல்லை. சம்பந்தமில்லாதவர்கள் பலன் பெறுகிறார்கள்.
கொள்கைக்காகக் கஷ்டநஷ்டம் ஏற்கும் துணிவு பெறுவதற்கு எந்த கட்சியினரும் தயாராக இருப்பதற்குக் காரணம், பொதுமக்களின் தீர்ப்பு எப்படியும் நியாயத்தின் பக்கம் இருக்கும் என்ற நம்பிக்கையினால்தான். பொதுமக்களின் தீர்ப்புக்கு ஏற்றபடிதான் ஒரு ஜனநாயக ஆட்சி இயங்க வேண்டும். அந்த தீர்ப்பு அளிக்கும் நாளே, தேர்தல் நாள்.
நமது பிரச்சினையைப் பொறுத்தவரையில் அந்தத் தீர்ப்பு நாள் முறையே இல்லை.
எனவேதான் நாம் இப்போது சந்திக்க வேண்டிய பிரச்சினை, அலாதியானது என்று கூறினேன்.
நாம் இதற்கு முன்பு இப்படி ஒரு பிரச்சினையைச் சந்தித்ததில்லை என்பது மட்டுமல்ல, எந்தக் கட்சியும் இது போன்ற பிரச்சினையைச் சந்தித்ததில்லை.
பல கட்சிகள், அடக்குமுறையைச் சந்தித்திருக்கின்றன; எதிர்த்து நின்றிருக்கின்றன; வெற்றி பெற்றிருக்கின்றன; ஆனால் அவைகள் யாவும் கட்சிகள் மேற்கொண்ட நேரடி நடவடிக்கைகளை ஒடுக்க ஏற்பட்ட அடக்கு முறைகள். கட்சிகளின் அடிப்படைக் கொள்கையை ஒடுக்க அல்ல.
கட்சிகள் மேற்கொண்ட நேரடி நடவடிக்கைகளை ஒடுக்க அடக்குமுறை மேற்கொள்ளப்பட்ட போது, அதனைத் தாங்கிக் கொண்டதால், கட்சியின் மதிப்பும் செல்வாக்கும் உயர்ந்தது. கட்சி, பிறகு தடுக்கப்பட்ட நேரடி நடவடிக்கையை நிறுத்திக் கொண்டு, புதிய வலிவு பெற்று, அடிப்படைக் கொள்கைக்காகப் பணியாற்றவும், வெற்றி பெறவும் முடிந்தது.
எந்தக் கட்சி மீதும் அது கொண்டுள்ள அடிப்படைக் கொள்கைக்காக, அடக்குமுறை வீசப்படவில்லை.
உதாரணம் காங்கிரஸ் கட்சி, சுயராஜ்யம் கேட்பதை தடுக்க எந்தச் சட்டமும் பிறப்பிக்கப்படவில்லை.
சுயராஜ்யம் பற்றிப் பேசுவது சட்ட விரோதமாக்கப்பட்டு, அதற்காக தண்டனைத் தரப்படவில்லை.
சுயராஜ்யக் கொள்கைக்காக ஒரு கட்சி இயங்கக்கூடாது என்று, சட்டம் வரவில்லை.
சுயராஜ்யம் கேட்க, சுயராஜ்ய நோக்கத்துக்காக ஒரு கட்சி இயங்க, சட்டம் உரிமை அளித்தது.
உப்பு காய்ச்சுவது, வரி கொடா இயக்கம், சட்டமறுப்பு, துணிக்கடை மறியல், அன்னிய நாட்டுச் சாமான்களைக் கொளுத்துதல், போன்ற நடவடிக்கைகள், தண்டனைக்குரியனவாக்கப்பட்டன.
சுயராஜ்யம் வேண்டும் என்று பிரசாரம் செய்ய அனுமதி தந்தனர்.
சுயராஜ்யம் கேட்பவர்கள் அந்த இலட்சியத்துக்காக தேர்தலில் நிற்கவும் உரிமை பெற்றனர்.
எனவே காங்கிரசார், நேரடி நடவடிக்கையில் ஈடுபட்டதால், சட்டம் தாக்கிற்றே தவிர, காங்கிரசைச் செயலற்ற தாக்கிவிடவில்லை.
அடக்குமுறைக்கு ஆளானதால் ஏற்பட்ட புதிய செல்வாக்குடன், மூலாதாரக் கொள்கையான சுயராஜ்யத்துக்காகக் காங்கிரஸ் மும்முரமாக வேலை செய்ய வழி கிடைத்தது. அடக்குமுறையால் தாக்கப்பட்ட காங்கிரசிடம் மக்கள் அன்பு காட்டினர், ஆதரவு அளித்தனர்.
அடக்குமுறை நடத்திய ஆங்கில அரசு மீது ஆத்திரம் கொண்டனர்.
தேர்தலில் நிற்கும் உரிமை பறிக்கப்படாததால் அடக்குமுறைக் கொடுமைக்குப் பிறகு, காங்கிரசார் தேர்தலில் ஈடுபட்டபோது, மக்கள் ஆதரவு நிரம்பக் கிடைத்தது. அடக்குமுறை நடத்திய ஆங்கில அரசை வீழ்த்தத்தக்க வலிவு காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்தது.இந்த நிலை, நமக்குக் கிடைக்கவில்லை.
நமது நேரடி நடவடிக்கைகள் மட்டும் தடுக்கப்படவில்லை - மூலாதாரக் கொள்கை தடுக்கப்படுகிறது; மூலாதாரக் கொள்கையுடன் ஒரு கட்சி இயங்குவது தடுக்கப்படுகிறது. மூலாதாரக் கொள்கையை வைத்துக் கொண்டு, தேர்தலுக்கு நின்று, பொதுமக்கள் ஆதரவு திரட்டிக் காட்டும், வழி அடைக்கப்படுகிறது.
பிற கட்சிகள் அடக்குமுறையைச் சந்திக்கவில்லையா; எதிர்த்து நிற்வில்லையா; வெற்றி பெறவில்லையா என்று எண்ணம் தோன்றும்போது, இந்த விளக்கத்தை நினைவிற்குக் கொண்டு வரவேண்டும். மற்ற எந்தக் கட்சிக்கும் ஏற்படாத ஆபத்து, கழகத்துக்கு வருகிறது; கழகத்தின் மூலாதாரக் கொள்கை பேசுவதற்கே உரிமை இல்லை – மறுக்கப்படுகிறது.
அடக்குமுறையைத் தாங்கிக் கொள்ள முடிகிறதா இல்லையா என்பதல்ல, நமக்கு ஏற்படும் கேள்வி - அடக்குமுறையைத் தாங்கிக் கொண்டாலும், நமக்கு நமது மூலாதாரக் கொள்கை பற்றிப் பேசும் உரிமையும், அதற்காக கட்சி நடத்தும் உரிமையும், அதற்காக தேர்தலுக்கு நிற்கும் உரிமையும், கிடைக்குமா, கிடைக்காதா என்பதுதான் கேள்வி.
கம்யூனிஸ்டு கட்சிக்குக்கூட பொதுஉடைமைப் பிரசாரம் செய்யக் கூடாது என்று தடை வரவில்லை – அவர்களின் பேச்சு உரிமை பறிக்கப்படவில்லை – பொதுஉடைமை திட்டத்தின் பேரில் தேர்தலில் நிற்கும் உரிமை மறுக்கப்படவில்லை. சட்ட விரோதமாக வேறு பல செயல்களில் ஈடுபட்டபோது அடக்குமுறை வந்தது.
கம்யூனிஸ்டு கட்சியின் மூலாதாரக் கொள்கைக்குத் தடைவிதிக்கவில்லை.
கம்யூனிஸ்டு கட்சி பலாத்கார முறையை மேற்கொண்டபோது, கட்சி தடை செய்யப்பட்டது; கம்யூனிஸ்டுகள் சிறைப்பட்டனர். கம்யூனிஸ்டு கட்சி இயங்கவில்லை; தேர்தலில் நிற்கவில்லை.
ஆனால் பலாத்கார முறையை நீக்கிவிட்டதாகக் கம்யூனிஸ்டு கட்சி அறிவித்ததும், பாராளுமன்ற முறைப்படி, நாட்டின் சட்டதிட்டத்துக்கு உகந்த முறையில், சாத்வீகமாகப் போராடி, பொதுஉடைமை அரசு காணப் போவதாகக் கூறியதும், கம்யூனிஸ்டு கட்சி மீது இருந்த தடை நீக்கப்பட்டது; பொதுஉடைமைப் பிரசாரம் அனுமதிக்கப்பட்டது. தேர்தலில் நிற்கும் உரிமை தரப்பட்டது.
நமக்கு ஏற்ப்பட்டுள்ள நிலை, முற்றிலும் வேறானது. சட்டம் நமது மூலாதாரக் கொள்கையையே தாக்குகிறது.
பேச்சு உரிமை, அமைப்பு உரிமை, தேர்தல் உரிமை இவற்றைப் பறிக்கிறது. எனவே பிற கட்சிகள் இத்தகைய நிலையில் என்ன செய்தன என்று ஒப்பிட்டு பார்ப்பதிலும் விளக்கம் கிடைக்காது, வழி தெரியாது. நமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை முற்றிலும் மாறானது. இதற்கு ஒப்பாக, எதனையாவது காட்ட வேண்டுமானால் சர்வாதிகார நாடுகளைத்தான் காட்ட முடியும்.
பொதுஉடைமை ஆட்சிமுறையுள்ள, சீனாவில், ரஷியாவில், பொதுஉடைமைக் கட்சி தவிர வேறு கட்சிகள் இல்லை. தடுக்கப்பட்டுப் போய்விட்டன.
பொதுஉடைமை தவிர வேறு கொள்கைகள் கொண்ட கட்சிகள் இயங்க முடியாது. பிரசாரமும் கிடையாது; நடவாது.
பொதுஉடைமைக் கட்சி தவிர, வேறு எந்த கட்சியோ, தனி நபரோ, தேர்தலுக்கு நிற்க, உரிமை கிடையாது; சட்டம் இடம் தராது.
இது போன்று தான் இங்கு, நமக்கு எதிராகக் கொண்டுவரப்படும் சட்டத்தால் ஏற்படும் நிலைமை.
பேச்சு உரிமை, அமைப்பு நடத்தும் உரிமை, தேர்தலில் ஈடுபடும் உரிமை, ஆளுங்கட்சிக்கு மட்டுமே, ரஷியாவில், சீனாவில் இருப்பது போல, புதிய சட்டத்தின் மூலம், நாட்டுப் பிரிவினைப் பிரசாரம், அதற்கான அமைப்பு, அதற்காகத் தேர்தலில் ஈடுபடுவது, என்றுள்ள உரிமைகள் நமக்கு இல்லை என்று சட்டம் ஏற்பட்டுவிட்டது.
தடைமீறி அடக்குமுறையை ஏற்றுக் கொள்வதுதான், வீரத்துக்கு எடுத்துக் காட்டு என்று மட்டும் வாதிடுபவர்கள், வேறுகட்சிகளே கூடாது என்று தடை போடப்பட்டுள்ள நாடுகளில், வீரர்கள், கஷ்டநஷ்டம் ஏற்கக்கூடியவர்கள், பூண்டற்றுப் போய்விட்டனரா? ஏன் அங்கு, அத்தகைய தடைச்சட்டத்தை எதிர்த்து, மீறி, தமக்குப் பிடித்தமான கொள்கை பேச, அதற்கான அமைப்பு இயங்கச் செய்திட, ஒருவரும் முன்வரவில்லை என்பதனை நன்கு கவனித்துப் பார்க்க வேண்டும்.
அடிப்படை தகர்க்கப்படும் விதமான சட்டம் வரும்போது, அதனை மீறுவது, வீரத்துக்கும் தியாகத்துக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ஆகுமேயன்றி, அடிப்படைக் கொள்கை பற்றிய பிரசாரத்தைத் தொடர்ந்து, முறையாக நடத்த வழி காட்டாது. எனவேதான் அடிப்படை உரிமை பறிக்கப்பட்ட நிலையில் இயங்க இயலாது. இயங்க முற்பட்டாலும் பலன் கிட்டாது என்பதனை உணர்ந்து, சர்வாதிகார நாடுகளிலே, கொள்கையாளர்கள் செயலற்றுப் போய்விட்டனர்.
விரல்விட்டு எண்ணக் கூடிய சிலர், தமது உரிமை காத்திட முனைந்தனர் - சிறைப்பட்டனர் – சித்திரவதைக்கு ஆளாயினர் – நாடு கடத்தப்பட்டனர். வணக்கத்துக்குரியவர், வழிபடத்தக்கவர்கள் என்று உலகு பாராட்டும் நிலை பெற்றனர். ஆனால் அதன் காரணமாக, ஆளுங்கட்சி தவிர வேறு கட்சிகளும் இயங்கலாம் என்ற உரிமை கிடைத்துவிடவில்லை.
தியாகிகளின் பட்டியல் நீண்டது; வீரர்களின் பட்டியலில் புதிய பெயர்கள் இணைக்கப்பட்டன.
சீனத்திலும், ரஷியாவிலும் கொள்கைகளையும், கட்சிகளையும் தடுத்துள்ள வேறு அரசுகளிலேயும், உள்ள மக்கள் அத்தனை பேரும், ஆளுங்கட்சியின் கொள்கையை அப்படியே ஏற்றுக்கொண்டார்கள் என்று கூறமுடியாது; மாறுபாடான கருத்து கொண்டவர்கள், சிந்தனையாளர்கள், வேறு கொள்கைகளைக் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்; ஆனால் அவர்களுக்கு பேச்சு உரிமை, அமைப்பு உரிமை, சட்டப்படி தடுக்கப்பட்டுப் போனதால் அவர்கள் செயலாற்ற முடியவில்லை.
தடை என்றால் உடைத்தெறிய வேண்டாமா என்று
கேட்பதலே சுவை காணலாம். மிக எளிதான கேள்வியாகவும் அது காணப்படும்.
ஆனால் சீனத்திலும், ரஷியாவிலும், வேறு கொள்கை வேறு கட்சிகள், ஏன் எழவில்லை? தடை மீறி, இயங்க ஏன் முடியவில்லை? - என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
எகிப்திலே, நாசரின் கட்டளையை மீறி, வேறு கட்சிகள் இயங்க முடியவில்லை. அடிப்படை உரிமையைப் பறித்துவிடும்போது, இயங்கும் சக்தி தானாகப் பறிபோகிறது.
அடிப்படை உரிமையை மீண்டும் பெற்றாலொழிய இயங்கும் நிலை ஏற்பட முடியாது.
14 காரட், பிரச்சினையில் எத்துனை மனக்கசப்பு, எதிர்ப்புணர்ச்சி இருக்கிறது என்பது விளக்கமாகத் தெரிகிறது.
ஆனால், அதைமீறி, 18, அல்லது 22 காரட்டில் நகை செய்யத்தான் போகிறேன், என்ன செய்வதானாலும் செய்து கொள், என்று சொல்ல முடிகிறதா என்றால், இல்லை.
கண்டிக்க முடிகிறது, எதிர்ப்பு தெரிவிக்க முடிகிறது. ஆனால் சட்டத்தை முறியடிக்க முடியவில்லை.
எப்போது முறியடிக்க முடியும்? சட்டத்தை எதிர்த்து, சிறை சென்று, கஷ்டநஷ்டம் ஏற்றுக் கொள்வதால் மட்டும் அல்ல.
புதிய சட்டத்தால் ஏற்பட்ட கசப்புணர்ச்சி காரணமாக, அடுத்த தேர்தலில், பொதுமக்கள், இந்தச் சட்டத்துக்கு யார் காரணமோ அவர்களை வீழ்த்திக் காட்டினால், சட்டத்தை மாற்றிட வழி கிடைக்கும்.
ஆனால், 14 காரட் பற்றி சட்டம் போட்டதுடன், அடுத்துவரும் தேர்தலில் இதற்கு மாறான கொள்கை கூறிக்கொண்டு, ஒருவரும் நிற்கக்கூடாது என்றும் சட்டம் ஏற்பட்டுவிடுமானால், அதிருப்தி கொண்ட மக்கள், அடக்கு முறைக்கு ஆளான மக்கள், பரிகாரம் பெற வழி ஏது?
பரிகாரம் பொதுத் தேர்தலில் கிடைக்கும்.
புதிய சட்டமோ, கழகம் பிரிவினை பேசிக் கொண்டு தேர்தலில் நிற்கக் கூடாது என்று கூறுகிறது. ஆகவே
பரிகாரம் பெற, மார்க்கம் இல்லை.
இந்த நிலை காரணமாகத்தான், சர்வாதிகார அரசுகளில், மாற்றுக் கருத்துகள், மாற்றுக் கட்சிகள் இயங்க இடம் கிடைக்கவில்லை - வீரர்களும் விவேகிகளும் இல்லாததால் அல்ல. வீரர்களும், விவேகிகளும், அந்த நாடுகளை விட்டு வெளியேறி வந்துவிடுவதைக் கூடப் பார்க்கிறோம். பிரிவினை பேசினால் கடும்தண்டனை என்று மட்டும் சட்டம் ஏற்பட்டு, அவர்கள் தேர்தலுக்கு நிற்பது தடுக்கப்படாமலிருந்தால், பிரிவினை பேசி, கடும்தண்டனையைப் பலர் ஏற்றுக்கொண்டு, அதேபோது, அடக்குமுறை ஆட்சிக்கு, தேர்தல் மூலம் முடிவு கட்டிவிட முடியும்.
இந்த வாய்ப்பு நமக்கு இல்லை என்பதனை நாம் மறந்து விடக் கூடாது.
ஆக நாம் தியாகத்தின் பெயரால், வீரத்தின் பெயரால், தடையை மீறினால் நடக்கக் கூடியது எதுவாக இருக்கும் என்றால்,
எல்லையில்லாத, முடிவு இல்லாத, காலவரையரை இல்லாத, பரிகாரம் காண முடியாத கஷ்டநஷ்டத்தை ஏற்றுக் கொண்டு, சிலரோ, பலரோ தங்கள் வாழ்நாளை இதற்கே தந்துவிட்டு, பின்பற்றுவோர் அற்று, மடிந்து போவர்; அவர்களுடன் அந்தக் கொள்கைக்கான முயற்சியும் மடிந்து போகும்.
திராவிடக் கொள்கையைப் பொறுத்த வரையில் அது வெற்றிபெற, நாம் மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து, விரிவாக பிரசாரம் செய்தாக வேண்டும்.
நூற்றுக்கு என்பது பேர், கொள்கையை ஏற்றுக் கொண்டுவிட்ட நிலை அல்ல, இப்போது இருப்பது.
எனவே, இப்போது கொள்கையை அறிந்து ஆதரிப்பவர்களிடம் இருந்து, அடக்கு முறையை எதிர்க்கக் கிளம்புவோர் போக, மீதம் உள்ளவர்கள், அந்தக் கொள்கை பற்றிப் பேசி, வேறு புதிய ஆதரவாளர்களைத் திரட்டப் போவதில்லை.
அவர்களே கூட அந்தக் கொள்கை பற்றிய, நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது.
இந்நிலையில், அவர்கள், தம்மை மறைத்துக் கொள்ளவோ, கொள்கையை மறந்துவிடவோ, அல்லது மாற்றிக் கொள்ளவோ முனைவர். முனையும் போது, கொள்கைக்காக, அடக்குமுறையை ஏற்றுக் கொண்டவர்கள் பற்றிய நினைவும் நாட்டிலிருந்து மங்கி மறைந்துவிடும்.
காங்கிரசு கட்சிக்கு இந்நிலை ஏற்படவில்லையே – அடக்குமுறைகளால் அழிக்கப்பட்டுப் போய்விடவில்லை – தடை விதிக்கப் பட்டதால் தகர்ந்து போய் விடவில்லை – மீண்டும், மீண்டும் கிளம்பிற்று – புதிய வலிவுடன் - புதிய பொலிவுடன்! - என்று வாதிடலாம்.
ஆனால், முதலிலே நாம் உணர்ந்து கொள்ள வேண்டியது, மூலாதாரக் கொள்கைக்கு காங்கிரசுக்கு ஆபத்து ஏற்படாததால், அது, மீண்டும் இயங்க முடிந்தது என்ற பேருண்மையை.
மற்றோர் காரணமும் உண்டு. காங்கிரஸ் மறைக்கப்பட்ட போதும், சிறைபடுத்தப்பட்ட போதும், அந்தப் பெயரில் இல்லாமல், எந்த நடவடிக்கையில் ஈடுபட்டால் தண்டனை கிடைக்குமோ அந்த நடவடிக்கையை மேற்கொள்ளாமல், ஆனால், காங்கிரசினுடைய மற்ற கொள்கைகளை, மூலாதாரமான சுயராஜ்ய திட்டத்தை ஆதரித்துப் பிரசாரம் செய்யவும், சிறைப்பட்ட காங்கிரசாரின் வீரத்தை, தியாகத்தைப் பாராட்டவும், பல துணை மன்றங்கள் மும்முரமாகப் பணியாற்றின.
அதன் காரணமாக, தீபம் அனையாத நிலை ஏற்பட்டது.
அதன் காரணமாக, காங்கிரசின் புகழ் ஓங்கிட வழி கிடைத்தது.
அதன் காரணமாக, மக்களின் பரிவு, காங்கிரசிடம் மேலும் அதிகமாக முடிந்தது. நமக்குள்ள துணை மன்றங்கள் இவ்விதம் இயங்குவன அல்ல.
உத்யோகம் காரணமாகவோ, தொழில் காரணமாகவோ, தி. மு. கழகத்தில் உறுப்பினர் ஆக முடியாதவர்கள், துணை மன்றங்களில் இடம் பெற்று அதன் மூலம், கழகத்துக்கு ஆதரவு தருகின்றனர்.
அவர்கள் தாமாக இயங்கக் கூடியவர்களும் அல்ல; தீவிரமாக நடக்கக் கூடியவர்களும் அல்ல; ஆளங்கட்சியை எதிர்த்து நிற்கக் கூடியவர்களும் அல்ல; சர்க்காருக்கு எதிராகச் செல்லக்கூடியவர்களும் அல்ல.
எனவே கழகம் கலைந்துள்ள போது, கழகச்சார்பாக ஓரளவுக்காகிலும் பணியாற்றும் நிலையும் கிடைக்க வழி இல்லை.
கம்யூனிஸ்டு கட்சி, தடுக்கப்பட்டு இருந்தபோது, பல துணை மன்றங்கள், தொழிலாளர் அணிகள், சட்டத்தின் பிடியில் சிக்காமல், ஓரளவுக்குக் கம்யூனிஸ்டு கட்சிக்கு மக்களின் ஆதரவு கிடைக்கத்தக்க வழி செய்து வந்தன.
வேலை நிறுத்தம், மறியல் போன்ற தீவிர நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு, நெருப்பு அனையாமல் பார்த்துக்கொண்டன.
நமது துணை மன்றத்தினர் அவ்விதமான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடியவர்கள் அல்ல.
எனவே, தடை மீறி கழகத்தினர் சிறைப்பட்டு, கழகம், சட்டம் காரணமாக இயங்காதிருக்கும் போது, வேறு எந்த முயற்சியும், நமக்குச் சாதகமாக, வெளியே நடக்க முடியாது.
மற்றோர் விஷயமும் முக்கியமானது.
காங்கிரஸ் கட்சி நடத்தாவிட்டாலும், தனிப்பட்டவர்கள் நடத்தும் பத்திரிக்கைகளில் மிகப் பெரும்பாலானவை, மூலாதாரக் கொள்கையான சுயராஜ்யம் பற்றி, தொடர்ந்து எழுதி வந்தன. காங்கிரசார் சிறைப்பட்டபோது, இந்த பிரசாரம் குறைந்துவிடவில்லை; வலுவடைந்தது.
சிறைப்பட்ட காங்கிரசாரைப் பாராட்டி, பொதுமக்களின் நன்மதிப்பு அவர்களுக்கும், மூலாதாரக் கொள்கைக்கும் கிடைக்கும்படிச் செய்துவந்தன.
அடக்குமுறை நடத்தும் அரசின் போக்கைக் கண்டித்து மக்கள் மனதிலே அரசுமீது ஆத்திரமும், அருவருப்பும், எதிர்ப்பு உணர்ச்சியும் எழச் செய்தன.
இவைகளுக்கு ஒரே பரிகாரம், காங்கிரசை ஆட்சிப்பீடம் ஏற்றுவதுதான் என்று யோசனை கூறிவந்தன.
தேர்தலின் போது, பொது மக்கள் காங்கிரசை ஆதரித்து, அடக்குமுறை அரசுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று எழுதி, மக்களைத் தயார்படுத்தி வைத்தன.
இதன் காரணமாக, நேரடி நடவடிக்கைக்காகச் சிறை சென்ற காங்கிரசார் விடுதலை அடைந்ததும், வரவேற்கப்பட்டு, பாராட்டப்பட்டு, பொதுமக்களின் ஆதரவு பெற்று, வளர முடிந்தது.
சுயராஜ்யம் எனும் மூலாதாரக் கொள்கை பற்றிப் பேசும் உரிமை இருந்து வந்ததால், புதிய ஆதரவு பெற்று, தியாகி என்ற சிறப்புப் பெற்று வெளிவந்த காங்கிரசார் சுயராஜ்யக் கொள்கை கூறித் தேர்தலுக்கு நிற்கவும், வெற்றி பெறவும், அரசு ஆளவும் அடக்குமுறைகளை அழிக்கவும் வழி கிடைத்தது. நம்மிடம், பத்திரிக்கை உலகம் கொண்டுள்ள பரிவு எப்படிப்பட்டது என்பதை நாம் நன்றாக அறிவோம்.
இருட்டடிப்பு, இட்டுக்கட்டுதல், இழிமொழி கூறல், பழி சுமத்துதல், திரித்துக் கூறல், சிண்டு முடிந்து விடுதல் - இவை அவைகளின் முறை.
நாம் சிறைப்பட்டு, கழகம் செயலாற்ற முடியாத நிலை ஏற்பட்டதும், வரவேற்று, திருப்தி தெரிவிக்கத் துடிக்கும். பொதுமக்களிடம் செல்வாக்கு ஏற்பட முடியாதவிதமான கருத்துகளைப் பரப்பி, நம்மைப் பற்றித் திரித்துக் கூறும்.
மிகக்குறுகிய காலத்திலேயே, நம்மைப்பற்றியும், நாம் கொண்டுள்ள கொள்கை பற்றியும் பொதுமக்கள் மறந்தேவிடக்கூடிய நிலைமையை இந்த இதழ்கள் ஏற்படுத்திவிடும்.
கொள்கைக்காக கஷ்டநஷ்டம் ஏற்கிறார்கள் என்ற அருமையும், அடக்குமுறை ஆட்சி நடத்தும் காங்கிரசின் கொடுமையையும், பொதுமக்கள் உணர்ந்து, எழுச்சி கொள்ளத்தக்க நிலையை பத்திரிக்கைகள் ஏற்படுத்தினால் மட்டுமே, கஷ்டநஷ்டம் ஏற்றுக் கொண்டதினால் கிடைக்க வேண்டிய பலன், கொள்கைக்குக் கிடைக்கும்.
நாட்டிலுள்ள இதழ்கள் இந்த உதவியை நமக்கு அளிக்கப் போவதில்லை. நமது கழக ஏடுகள் மட்டுமே இந்த அரும்பணியாற்றமுடியும்.
ஆனால், இதில் உள்ள சங்கடம் என்னவென்றால், நமது இதழ்கள் கழகத்தின் முன்னனியினர் நடத்துவன.
கழகக்கொள்கையான ‘திராவிடநாடு’ திட்டத்தை வலியுறுத்துவன.
திராவிடநாடு திட்டத்தைப் பிரசாரம் செய்து கொண்டு இருக்க, புதிய சட்டம் இடம் தராது.
இதழாசிரியர்கள், கழக முன்னனியினர் ஆதலால், தடைமீறப்படும் நிகழ்ச்சியில் அவர்கள் பங்கு கொள்வர்; சிறைப்படுவர்; ஆகவே, இதழ்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.
ஆக இருட்டடிப்பும், அதை ஒட்டி நடைபெறும் இடையூறுகளும், நாட்டு மக்கள் மனதைக் கப்பிக்கொள்ளும். மீண்டும் ஒருமுறை நிலைமைகளைத் தொகுத்துப் பார்த்துக் கொள்வோம்.
தடை மீறப்படுகிறது. பலர், சிறைபடுகின்றனர், கழகம் இயங்கவில்லை, தேர்தலில் ஈடுபட வழி இல்லை, பிற இதழ்கள் இருட்டிப்பு செய்கின்றன. நமது இதழ்கள் இயங்க முடியாத நிலை, இதழினர் சிறைப்படுகின்றனர், நம்மைப் பற்றிய நினைப்பு பொதுமக்கள் மனதிலிருந்து துடைத்தெடுக்கப்பட்டு விடுகிறது.
இந்த நிலைமை ஏற்பட்டுவிடுவது தவிர்க்க முடியாதது.
இந்த நிலைமை, அடக்குமுறையை எதிர்த்து நின்ற எந்தக் கட்சிக்கும் ஏற்பட்டதில்லை.
கழகத்தை அறை கூவி அழைப்பது போலவும், கழகத்தவரின் வீர உணர்ச்சி, தியாக உள்ளம் ஆகியவற்றுக்குச் சோதனை ஏற்படுத்துவது போலவும், சர்க்கார் ஒரு தடை சட்டம் கொண்டு வருகிறபோது, இப்படி எல்லாம், அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்துப் பார்த்துக் கூடாது – சீறி எழ வேண்டும், தடை உடைபட வேண்டும் என்று மட்டும் கருதுவது, நாம் கைப்பிடிக்கு அடங்கக்கூடிய மிகச்சிறிய குழுவாக இருந்தாலாவது, பொறுத்துக் கொள்ளத்தக்கதாக இருக்கும்; ஆனால் நாம் மேற்கொள்ளும் போக்கு, மிகப்பெரிய, விரிவாகியுள்ள, காங்கிரசுக்கு அடுத்தபடியாக உள்ள, சில இலட்சம் உறுப்பினர்களையும், பல இலட்சம் மக்களின் நல்லாதரவையும் கொண்ட, பதினைந்து ஆண்டுகள் பல பாடுபட்டு வளர்த்துள்ள, ஒரு பெரிய இயக்கத்தை பாதிக்கக்கூடியது, என்பதை மறந்துவிடக்கூடாது.
நாம் எடுக்கும் முடிவு காரணமாக, எத்தனையோ பேர்களுடைய, வாழ்க்கை நிலையே பாதிக்கப்பட்டுவிடக் கூடும்.
ஆகவேதான், நாம் எடுக்கக்கூடிய முடிவு, பொறுப்பு மிக்கதாக, விளைவுகள் பற்றிய விளக்கம் கண்ட பிறகு எடுக்கக் கூடிய நடைமுறைக்கு ஏற்றதாக, இருக்க வேண்டும்.
முடிவு எடுக்கும் பொறுப்பு ஒரு நூறு பேர்களிடம், கழக அமைப்பு காரணமாக இருக்கிறது.
ஆனால், எடுக்கப்படும் முடிவு, சில இலட்சம் உறுப்பினர்களின் நிலையை பாதிக்கக்கூடியது.
தடை மீறுவது என்ற பொதுவான முடிவு எடுத்துவிடுவது எளிது - பெருத்த ஆதரவு கூறப்படும் - ஆர்வம் காட்டப்படும் - ஐயமில்லை.
ஆனால், எடுக்கப்பட்ட முடிவு, மாற்றார் மதிக்கத்தக்க அளவுள்ள தொகையினரை, அடக்குமுறை யை எதிர்த்திடும் துணிவினர் ஆக்கிட வேண்டும்.
நடைமுறைப்படுத்தும் போது, தொகை மிகக்குறைவாகி விடுமானால், இத்தனை கட்டுக்கோப்புள்ள, இத்தனை இலட்சம் உறுப்பினர்கள் உள்ள கழகத்தில் இவ்வளவு குறைவான தொகையினர்தானா, மூலாதாரக் கொள்கைக்குத் தடை வந்த போது எதிர்ப்பு காட்ட முன்வந்தனர், என்ற பேச்சு கிளம்பும் – ஏளனம் – கண்டனம், தொடரும்.