எண்ணித் துணிக கருமம்/தனிநாடு 1

 

எண்ணித் துணிக கருமம்

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு, இப்போது, ஒரு புதிய, முற்றிலும் தனித்தன்மை வாய்ந்த ஒரு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

பிரிவினைப் பேச்சைத் தடை செய்யும் விதமாக, இந்திய அரசியல் சட்டம் திருத்தப்படுகிறது.

இன்று உள்ள இந்திய அரசியல் சட்டம் , ‘திராவிடநாடு’ கேட்பதற்கான பேச்சுரிமை தருவதாக இருக்கிறது , எனவே பிரிவினை பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க முனைந்தால் , இந்திய அரசியல் சட்டத்தின் பேச்சுரிமையை எடுத்துக் காட்டி வாதிடவும் , வழக்கில் வெற்றி பெறவும் வழி இருக்கிறது.

இது பற்றி சட்ட விற்பன்னர்களைக் கலந்து பார்த்த பிறகே இந்த முடிவுக்கு சர்க்கார் வந்தார்கள்.

இனி , பிரிவினை பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க சர்க்கார் முனையும்போது, பேச்சுரிமையைக் காரணம் காட்டி வாதாட முடியாது.

பிரிவினைக்காக இனிப் பேசும் உரிமை, தனி ஆட்களுக்கும் பலர் கூடிடும் அமைப்புக்கும் இனி கிடைக்காது.

பிரிவினையை நோக்கமாகக் கொண்டு , ஒரு பேச்சு இருக்கவும் முடியாது, ஒரு அமைப்பு இயங்கவும் முடியாது.

மீறிப் பேசினால், என்ன விதமான தண்டணை விதிப்பது , மீறி ஒரு அமைப்பு இயங்கி வந்தால் , அதனை எவ்விதம் கடப்பது அல்லது அதில் உள்ளோர் மீது எவ்விதமான தண்டணை விதிப்பது என்பது பற்றி ஒரு புதிய சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்.

இதுமட்டும் , போதாது என்று எண்ணி , சர்க்கார் இத்துடன் மற்றோர் விதியையும் , சட்டத்தில் புகுத்தியுள்ளனர்.

பிரிவினை பேசுபவர்கள் , தேர்தலுக்கு நிற்க முடியாதபடி தடுப்பது இந்த விதியின் நோக்கம் .

திராவிடநாடு பெற நான் பாடுபடுபவன் என்று கூறிக்கொண்டு யாரும் தேர்தலுக்கு நிற்க அனுமதி கிடைக்காது.


தேர்தலுக்கு நிற்க விரும்பும் போது , அவர்களைத் தேர்தல் அதிகாரியே கேட்பார் - திராவிடநாடு பிரிவினை உமது திட்டமா என்று . ஆம் . என்று சொன்னால் , தேர்தலுக்கு நிற்க அனுமதி கிடைக்காது ; மறுக்கப்பட்டு விடும் .

ஆக இந்தப் புதிய சட்டம் ,

  1. திராவிடநாடு பிரிவினைக்கான பிரச்சாரத்தைத் தடுக்கிறது.
  2. திராவிடநாடு பிரிவினைக்காக ஒரு அமைப்பு , கட்சி இயங்குவதைத் தடுக்கிறது.
  3. திராவிடநாடு பிரிவினைப் பிரச்சனையை வைத்து தேர்தலுக்கு நிற்க முடியாதபடியும் செய்து விடுகிறது.

சுருக்கமாகச் சொல்வதானால் , இந்தப் புதிய சட்டம் , திராவிடநாடு பிரிவினைப் பிரசாரத்தையும் , அந்தப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள தி.மு. கழகத்தையும் , அழித்து விட முனைகிறது.

தி.மு.கழகம் பிரிவினைப் பிரசாரமும் செய்ய இடம் இல்லை.

தி. மு. கழகம், சட்டமன்றம், பாரளுமன்றம் சென்று இடம் பெறவும் வழி அடைக்கப்பட்டு விடுகிறது

திராவிடநாடு பெறும் வழி என்ன என்பது பற்றி நாம் யோசித்த போது,

வேட்டுமுறையா?

ஓட்டு முறையா?

என்று பார்த்ததில் எல்லாக் காரணங்களையும் சீர்தூக்கிப் பார்த்து, திராவிடநாடு பெற

ஓட்டு முறை

மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முடிவு செய்தோம்—அதன்படியே வேலை செய்து வந்ததில் கடந்த பொதுத்தேர்தலில்

34 இலட்சம்

வாக்காளர்களின் ஆதரவு பெற்றோம். 1967 தேர்தலில், நமக்குக் கிடைக்கக்கூடிய ஓட்டுகள் இரட்டிப்பு ஆகக் கூடும் என்ற நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம்.

நாம் நம்பிக்கைக் கொண்டிருப்பது மட்டுமல்ல, பிற கட்சிகளும், நிலைமைகளைக் கவனித்து, அடுத்து வரும் பொதுத்தேர்தலில், தி. மு. கழகம் மிகப்பெரிய அளவு வெற்றி பெறும் என்று கூறுகின்றன.

தி. மு. க ஆளுங்கட்சி ஆகிவிடக்கூடும் என்று கூறுவாரும் உளர்.


புதிய சட்டத்தின் விளைவாக, இந்த எண்ணங்கள் யாவும் மண்ணாகிப் போகின்றன.

பிரிவினைக் கொள்கையுடன் ஒரு அமைப்பு இயங்கவும் வழி இல்லை, அந்தக் கொள்கையுடன் தேர்தலுக்கு நிற்கவும் அனுமதி இல்லை.


ஆக, பிரசாரம், அமைப்பு, சட்டமன்றத்தில் இடம் பெற்றல் கிடைக்கத்தக்க ஓட்டுமுறை எனும் யாவும், ஒழிக்கப்பட்டுவிட சட்டம் வந்திருக்கிறது.


வேட்டுமுறையை முன்பே ஒதுக்கிவிட்டோம்.

வேட்டுமுறையை மேற்கொள்ள என்றும் ஒருப்படப் போவதில்லை.

ஓட்டுமுறை மேற்கொண்டோம். அதிலே படிப்படியான முன்னேற்றம் கண்டோம். அடுத்துவரும் தேர்தலில், மிகப்பெரிய பலன் கிடைக்கும் என்று நம்புகிறோம் - இந்நிலையில் ஓட்டுமுறையும், சட்டத்தால் பறிக்கப்பட்டுப் போகிறது.


தி. மு. கழகத்தை ஒடுக்க, பிரசாரம் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத்தக்க சட்டம் கொண்டு வர சர்க்கார் முயற்சிப்பார்கள் என்று நாம் எதிர்பார்த்தவர்கள் –அடக்குமுறையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உறுதியைத் தெரிவித்தவர்கள்.

அத்தகைய அடக்குமுறை ஏற்பட்டு, பலர் தம்மைப் பலி கொடுத்துக் கொள்வதன் மூலம், கொ உரம் பெறும், மக்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும், அடக்குமுறையை ஏற்றுக் கொள்வோரிடம் பாசம் கொண்டு, பல இலட்சக் கணக்கானவர்கள் தி. மு. கழகத்துக்கு ஆதரவாளர்கள் ஆவர், அவர்களின் ஆதரவினால், தேர்தலில் தி. மு. கழகம், வெற்றி மேல் வெற்றி பெறும், அந்த வெற்றிகளின் மூலம், தி. மு. கழகக் கொள்கைகளுக்கு, நாட்டு மக்கள் தந்து வரும் ஆதரவு எப்படி வளர்ந்து வருகிறது என்பதனை உலகம் உணரும், உலகம் உணருவதால் எற்படும் நிலைமை, அரசினரின் அடக்கு முறைப் போக்கிலே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும், என்பது நமது எண்ணம்; நமது விளக்கம்.

அரைக்க அரைக்கச் சந்தனம் மணக்கும் என்றும் அடிக்க அடிக்க பந்து எழும்பும் என்றும் நாம்

சொன்னதன் பொருளும் இதை ஒட்டித்தான்; அடக்குமுறைக் கொடுமையை ஏற்றுக்கொள்ள ஏற்றுக்கொள்ள, கொள்கையிடம் மக்கள் காட்டும் ஆதரவு பெருகும், அதன் காரணமாக கழகம் செல்வாக்குப் பெறும், அந்தச் செல்வாக்கு காரணமாக, திராவிடநாடு கொள்கை வெற்றி அடையும் என்பதுதான் பொருள்.

சந்தனம், அரைக்கப் படாமல், நெருப்பில் வீசப்படுமானால், கிளம்பிடும் மணம் பயன் தருவதாக அமையாது.

இப்போது கொண்டு வரப்பட்டுள்ள சட்டம், சந்தனத்தை அரைப்பதாக அமையவில்லை, சந்தனக்கட்டையை நெருப்பில் எறிவதாக அமைகிறது.

இயங்கும் ஒரு அமைப்பு இருக்க இடம் தரவில்லை, சட்டம்.

இப்போது உள்ள அமைப்பு மட்டுமல்ல, இனி எப்போது, எவர் கூடி, இதற்காக ஒரு அமைப்பு ஏற்படுத்தினாலும், அந்த அமைப்பு, சட்டத்தின் காரணமாக அழிக்கப்படும்.

நாம், அடக்குமுறையை எதிர்த்து நிற்பது என்ற உறுதி காட்டியபோது, நமது கழகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஒடுக்க சட்டம் வரும் என்று எதிர்பார்த்தோம் — இப்போது வந்திருப்பதோ, கழக நடவடிக்கையை ஒடுக்குவது அல்ல, கழகத்தின் மூலாதாரக் கொள்கையை, கழக அமைப்பை, கழகம் தேர்தலில் ஈடுபடுவதை — இம்மூன்றையும் ஒடுக்கிவிடுவதாக அமைந்திருக்கிறது.

கழகத்தைத் தடை செய்ய ஒரு சட்டம் வந்திருந்தால் கூடப் பரவாயில்லை — ஏனெனில், தடை செய்யப்பட்ட கழகம், சில ஆண்டுகளோ, பல ஆண்டுகளோ, ஆன பிறகு, மீண்டும் இயங்க வழி ஏற்படக்கூடும்.


ஆனால், இப்போது வந்திருக்கும் சட்டம்,

பிரிவினை பேசும்போதெல்லாம் தண்டனை. பிரிவினைக்காக ஒரு அமைப்பு ஏற்படுத்தும் போதெல்லாம் தண்டனை. பிரிவினைக்காக, தேர்தலில் நிற்க விரும்பும் போதெல்லாம் அனுமதி மறுப்பு,

என்ற முறையில் இருக்கிறது.


இந்த முழுவடிவத்தையும் முழுப்பொருளையும் நன்கு அறிந்த பிறகே, என்ன செய்வது என்பது பற்றி யோசிக்க வேண்டுமேயன்றி, தடைச் சட்டம் வந்திருக்கிறது, உடைத்தெறிவோம் என்று எண்ணிக் கொள்வதிலே, பொருள் இல்லை, பலன் கிடைக்காது, பொறுப்பானதாகவும் அத்தகைய போக்கைக் கருத முடியாது.


வந்திருக்கும் நிலைமை, தி. மு. கழகம்,தடைச் சட்டத்தை மீறுவதன் மூலம், பிரிவினையைப் பேசலாம், ஒரு முறை – கடைசி முறை என்ற அளவில்!

பிரிவினைக்காகத்தான் இந்த அமைப்பு என்று கூறி, அதன் காரணமாக அதில் உள்ளவர்கள் பேரில் நடவடிக்கை எடுத்தும், கழக இதழ்கள், இடங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தும் சர்க்காராக கழகத்தை உடைத்தெறிய இடம் ஏற்படச் செய்யலாம். ஆனால் மீண்டும் ஒரு அமைப்பு எழாது; எழ வழி கோலியதும், இதே நிலை அதற்கும்.

தேர்தலில், பிரிவினை இடம் பெறச் செய்ய இயலாது.


வேறுவகையிலே இதைக் கூறுவதானால், கடைசி தாக்குதல் – தீரமான போர் – இறுதி - என்ற முறையில், கட்டங்கள் அமையும்.

சட்டத்தை எதிர்த்துத் திராவிடநாடு பிரிவினைக்காகப் பேசியவர்கள், அமைப்பு நடத்துபவர்கள், சிறையி லிருந்து வெளிவரும் வகையில் வெளியே

பிரிவினைப் பிரசாரம் இருக்காது. பிரிவினைக் காெள்கைக்கான அமைப்பு இயங்காது.

சிறையினின்று வெளிவந்ததும், அவா்கள் மீண்டும், பிரிவினைப் பிரசாரம் செய்ய பிரிவினைக் கொள்கைக்காக அமைப்பு ஏற்படுத்த, முனையலாம். முனைந்ததும் மீண்டும் சட்டம் குறுக்கிடும், மீண்டும் சிறை; மீண்டும் வெளியே,

பிரிவினைப் பிரசாரம் இருக்காது.

பிரிவினைக்கான அமைப்பு இயங்காது.


தண்டனை ஐந்து ஆண்டுகள் என்று கணக்குக்காக வைத்துக் கொண்டு பாா்த்தால், பிரிவினைப் பிரசாரம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருநாள், நடத்தப்பட வழி ஏற்படும்.

பிரசாரம் என்று, இதனைக் காெள்ளமுடியாது; தடையை மீறுதல், என்றுதான் பொருள்படும்.

பிரசாரம் என்பது, தொடா்ந்து நடத்தப்படுவது; விட்டுவிட்டு அல்ல; சில ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்ல.

பிரசாரம் என்பது, விளக்கம் – எதிா்ப்புக்கு மறுப்பு – புதிய மனமாற்றம் ஏற்படுத்துவது – ஆதரவு திரட்டுவது – என அமைவது சில ஆண்டுகளுக்கு ஒருமுறை தடை மீறப்படும் நிகழ்ச்சியாக இருப்பது, பிரசாரம் அல்ல.

இதனையும் நாம், மறந்துவிடக்கூடாது.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை, ஒரு தடவை, பிரிவினை பேச வாய்ப்பு கிடைக்கும் அளவுக்குக் கூட, தோ்தலில் நிற்க வாய்ப்பு கிடைக்காது.


ஆக, முன்பு எடுத்துக் காட்டியபடி, சட்டத்தை எதிா்த்து நிற்பது என்றால், கடைசி கட்டத்துக்கு நாம், நமது மனதைத் தயாராக்கிக் கொள்ளவேண்டும்.

கழகம் அழிக்கப்பட்டுப் போவது

பற்றி, நாம் நமது மனதுக்குச் சாந்தி தேடிக் கொள்ள வேண்டும்.

ஓட்டு முறையை மேற்கொள்வது என்பது பற்றிய நம்பிக்கை பறிக்கப்பட்டு வருவதற்கு இடம் தரவேண்டும்.

சுருங்கச் சொன்னால், தனி ஆள், தற்கொலை செய்து கொள்ள சில நிலைமை காரணமாக ஒரு முடிவுக்கு வருவது போல; தி.மு.கழகம் தன்னைத்தானே அழித்துக் கொள்ள முன் வரவேண்டும்.

அதன் காரணமாகவும் அதற்குப் பிறகும்,

நாட்டிலே பெருங்கொந்தளிப்பு ஏற்படலாம்.

தி.மு. கழகம் புதிது புதிதாக அமைக்கப்படலாம்

தடை மீறி, பிரிவினைப் பிரசாரம் செய்தபடி இருக்க, தொடர்ந்து, பல ஆண்டுகளுக்கு கொள்கையாளர் கிளம்பியபடி இருக்கலாம்.

கிளர்ச்சிகள் வலிவு பெற்று, சர்க்காருக்குச் சங்கடம் ஏற்பட்டு, அவர்களே தடைச் சட்டத்தை ரத்து செய்யலாம்.

என்ற பல கூறத்தோன்றும்; பலர் கூறுவர்; சிலர் கூறுகின்றனர்.

இவைகளெல்லாம் நடைபெறும் என்று எதிர்பார்த்து, இப்போது, தடைச் சட்டத்தை எதிர்த்து நிற்பது என்பது, மனதுக்குத் தெம்பு தரும், ஐயம் இல்லை; ஆனால் இவை நடைபெறாவிட்டால், இவை நடைபெறும் என்று நம்பிக் கொண்டு தெம்பாக, சிறை சென்றவர்கள், மனம் உடைந்து வெளியே வருகிற நிலைமை ஏற்பட்டு விடுமானால், தாங்க முடியாத வேதனையாகிவிடும்.

இவைகள் நடைபெற வேண்டுமானால், முதலில் பொதுமக்கள் மனதில் கொந்தளிப்பும், நம்மைப் பற்றிய உருக்கமும் ஏற்படத்தக்க அளவுக்கு, தடைச்சட்டத்தை எதிர்த்து நீண்டகாலச் சிறைவாசத்துக்குத் தம்மை உட்படுத்திக் கொள்ளக் கூடியவர்களின் தொகை,

ஒரு இலட்சம் அல்லது, மிகக்குறைவான கணக்கே போதும் என்று எடுத்துக் கொண்டாலும்

50000 வேண்டும்.

இவ்வளவு பேராகிலும் கடுஞ்சிறைவாசத்தைப் பல ஆண்டுகள் மேற்கொள்ள முன்வருகின்றனர் என்றால்தான், தடைச்சட்டத்தை மீறுவதற்கு ஒரு மதிப்பு கிடைக்கும்; மக்களிடம் நம்மைப் பற்றிய உருக்கமும், சர்க்கார் பற்றி கசப்பும் கொந்தளிக்கும்.

இந்த எண்ணிக்கை கிடைக்க வழி இருக்கிறதா?

இந்த எண்ணிக்கை கிடைக்கத்தக்க விதத்தில், திட்டமிட தோழர்களைத் திரட்ட, தேவைப்படும் காலம் கிடைக்குமா?

இதற்கான முயற்சியில் முக்கியமானவர்கள் ஈடுபட முனையும்போது, சர்க்கார் அவர்களைச் சும்மா விட்டுவைக்குமா?


தடையை மீறுவது எப்படி, தண்டிக்கப்படத்தக்க குற்றமாகிறதோ, அதே போல, தடையை மீறச்சொல்லி, ஆர்வம் காட்டுவது, பிரசாரம் செய்வது, தோழர்களைத் திரட்டுவது, ஆகியவைகளும் குற்றமேயாகும்.

இதற்குத் தேவைப்படும் காலம் நமக்குக் கிடைக்கத்தக்க முறையில் சர்க்கார் இருந்துவிடும் என்று நான் கருதவில்லை.

என்னைப் பொறுத்தவரையில், குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கை கிடைப்பதே }} இயலாது என்பதுதான் இப்போது என் எண்ணமாக இருந்துவருகிறது.

ஆர்வக்குறைவு, கஷ்டநஷ்டம் ஏற்பதிலே தளர்ச்சி, கொள்கையிலே பிடித்தமற்ற போக்கு, என்னிடம் பற்றுக் குறைவு – இவை அல்ல, பெரும்பாலானவர்கள், கடுந்தண்டனை ஏற்கத் தயங்குவதற்கான காரணங்கள்.

நமது கழகத்தில் ஈடுபடுபவர்களில், மிகப்பெரும்பாலானவர்கள் ஏழைகள், நடுத்தர வகுப்பினர், சிறுகடை நடத்துவோர், மாத ஊதியம் பெறுவோர், தினக்கூலிகள் — இப்படிப்பட்டவா்கள்.

இவா்கள், உழைத்துத்தான் தத்தமது குடும்பத்தைக் காப்பாற்றித் தீரவேண்டியதில் இருக்கிறது.

இவா்கள் சில ஆண்டுகள் சிறையில் இருந்தாலும், தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளக் கூடிய நிலையில் அந்தக் குடும்பங்கள் இல்லை.

அப்படிப்பட்ட குடும்பங்களைக் காப்பாற்றும் பொறுப்பு ஏற்றுக்கொள்ளும் நிலையில், கழகமும் இல்லை.

சில தோழா்களின் மறைவால், குடும்பம் கதியற்றுப் போகும்போது, கைகொடுத்து உதவ, கழகம் இப்போது எடுத்துக் கொள்ளும் முயற்சியே, வரவர கடினமானதாகி வருகிறது.

காங்கிரஸ், திலகா் அவா்கள் நிதி போன்றவைகளைத் திரட்டி வைத்துக்கொண்டிருந்தாலும், பொிய புள்ளிகள் காங்கிரசுக்குப் பக்கபலமாக இருந்தாலும், சிறை சென்ற தோழா்களின், குடும்பம் பாதுகாப்புக்காக ஓரளவு பண உதவி செய்ய முடிந்தது.


சிறையிலே தாங்கள் கஷ்டப்பட்டாலும், குடும்பம் சலசலத்துப் போகவில்லை என்ற நினைப்பு, சிறையிலுள்ளோருக்கு, மனநிம்மதியைக் கொடுத்தது.

அன்றாடம் பாடுபட்டுப் பணம் பெற்றுக் குடும்பத்தைக் காப்பாற்றித் தீரவேண்டியவா்கள் அல்ல, டாக்டா், வக்கீல், வாணிபக் குடும்பத்தினா், நிலச்சுவா்தாா் ஆகியவா்களே பெரும்பாலும், நீண்ட காலச் சிறைவாசம் ஏற்றுக்கொண்டனா்.


நமது கழகத்து நிலைமை அவ்விதம் இல்லை. நீண்ட காலச் சிறைவாசத்தின் காரணமாக, பல குடும்பங்கள் சிதறுண்டு போய்விடக்கூடும்.

ஏதாகிலும் ஓரளவு உதவியாவது திரட்டித்தர வழி கிடைத்தாலும், அதனைச் செய்ய, கழகம் இல்லை; ஏனெனில், சட்டம் காரணமாக கழகம் இயங்கப் போவதில்லை. சிறைக்கும், தமது குடும்பங்கள் பற்றிய கவலையற்ற மனப்போக்குக் கொள்பவர்களாக கிடைக்க வேண்டும். கிடைப்பார்களா?

கிடைப்பார்கள் என்று ஆர்வம் காரணமாகக் கூறுபவர்கள், கிடைக்கவில்லை என்பதை அனுபவத்திலே காண்பார்களானால், மனம் உடையும் நிலை பெறுவர், கொள்கையிலே அவநம்பிக்கை ஏற்படும், பொதுவாழ்வு என்பதன் மீதே அருவருப்பு ஏற்படும், பொதுமக்களிடமே வெறுப்பு கொள்வர்.


கிடைக்கத்தக்க விதமாக நமது கழக அமைப்பு இல்லை என்பதை உணரும் போது, திடுக்கிட நேரிடும், ஆனால் நிலைமை அதுதான் – அதனை மறைத்துப் பயன் இல்லை. புண்ணை புனுகு கொண்டு மறைத்தல் கூடாது.

இந்த என் எண்ணம் வலிவு பெற்றதற்குக் காரணம், ஜூலை போராட்டம், எனக்குத் தந்த கசப்புள்ள அனுபவமாகும்.

நான் திருப்தி அடையத்தக்க விதத்தில் நிலைமை அமையவில்லை என்பதை நான் மறைக்க விரும்பவில்லை.

முன்கூட்டித் திட்டமிடாதது, போதுமான முன்னேற்பாடுகள் செய்து கொள்ளாதது, ஜூலை கிளர்ச்சியிலே நாம் கண்ட சரிவுக்கு ஓரளவு காரணம் – உணருகிறேன்.

ஆனால் நிச்சயமாக தண்டனை சில மாதங்களுக்குத்தான் என்று திட்டவட்டமாகத் தெரிந்திருந்த நிலையிலும், கிளர்ச்சியிலே ஈடுபடும் ஆர்வமும், சிறையிலே அடைபட்டுக் கிடக்க ஒருப்படும் மனப்பாங்கும், எவ்வளவு குறைவாக இருந்தது என்பதை எண்ணிப் பார்க்கும்போது, நீண்டகாலச் சிறைவாசம் மேற்கொள்ளும் துணிவுடனும், குடும்ப நிலைபற்றி கலங்காத போக்குடனும், ஐம்பதனாயிரம் பேர் அல்ல, ஐந்து ஆயிரம் பேராகினும் கிடைப்பார்களா என்பதில் எனக்கு மிகுந்த ஐயப்பாடு – அதனை நான் மறைக்க இயலவில்லை – மிக முக்கியமான நேரத்தில் அதனை மறைப்பது தீதும் கூட.

குறைந்தது 50 ஆயிரம் பேராவது, தடையை மீறினால், கழகமே அழிக்கப்பட்டுப் போனாலும், வரலாறு சிறப்பானதாக அமையும், மதிப்பு மங்காது.

எண்ணிக்கையும் குறைந்து, கழகமும் கலைந்து போனால் காலத்துக்கும், இழிநிலை, பழிச்சொல் நமக்கெல்லாம். என்னமோ என்று எண்ணிக் கொண்டிருந்தோம், இவ்வளவுதானா, தி. மு. க? என்று எங்கும் ஏளனம் கிளம்பும்.

சிறையில் உள்ளவர்கள் இதனையும் தாங்கிக் கொண்டு, கழகம் கலைவதையும் பார்த்துக் கொண்டு, மீண்டும் பணியாற்றும் மனநிலை பெற முடியும் என்று நான் எண்ணவில்லை. இந்நிலையில் பிரிவினைப் பிரசாரம் நின்றுவிடுவது, கழக அமைப்பு கலைந்து போவது, தேர்தலில் ஈடுபட வழி இல்லாது போவது என்பது மட்டும் அல்லாமல், சிறை சென்றவர்கள், பிறகு, செயலற்றுப் போய்விடும் பரிதாபகரமான நிலைமையும் ஏற்பட்டுவிடும்.

எண்ணிக்கை மிகவும் குறைந்து போனால், தடை மீறும் நிகழ்ச்சிக்கு மதிப்பு இல்லாது போவதுடன், பொதுமக்கள் மனதில் ஒரு உருக்கமோ, கொந்தளிப்போ, ஏற்படாது.

எத்தனையோ நிகழ்ச்சிகளிலே இதுவும் ஒன்று என்ற அளவிலும், எத்தனையோ கொடுமைகளை காங்கிரஸ் செய்கிறது, அதிலே இதுவும் ஒன்று என்ற முறையிலும், பொதுமக்கள் ‘தடை மீறல் நிகழ்ச்சி’ பற்றிப் பேசுவார்கள், வேறு பரிந்து பேச முற்பட மாட்டார்கள்.

இப்போது நாம் யோசித்த வரையில், ஏற்படக்கூடிய நிலைமை எப்படி இருக்கும் என்பதை நினைவுபடுத்திக் கொள்வோம்.

தடைச்சட்டம் அமுலுக்கு வருகிறது

மீறிச்சிலர், பிரிவினைப் பிரசாரம் செய்கிறார்கள், சிறை செல்கிறார்கள். கழக அமைப்பு கலைகிறது

சிறை செல்லாதவர்கள் கழகத்தை விட்டு விலகுகிறார்கள்.

சிறையில் அடைபட்டவர்கள், வேறு பலர் தடை மீறவில்லையே என்ற வருத்தத்தைச் சுமந்து கொண்டு இருக்கிறார்கள். கழகம் கலைந்து போன நிலையில், பிரிவினை பேசுவோர் கிடைக்காத நிலையில், சிறையிலிருந்து வெளி வருகிறார்கள்.

மனம் உடைந்த நிலையில் இதில் பலர் பொதுவாழ்வுத் துறையை விட்டே விலகிக் கொள்கிறார்கள்.

மிகச்சிலர், மீண்டும் பிரிவினை பேசி, சிறை செல்கிறார்கள்.


பொதுவாழ்வுத்துறையில் கழகம் இல்லை.

பொதுவாழ்வுத்துறையில் பிரிவினை பற்றிய பிரசாரம் இல்லை.

திட்டமிடாமல், விளைவு பற்றிய கணக்கு எடுக்காமல், மனித இயல்பினை ஆராயாமல், கழகத் தோழர்களின் மனப்பாங்கினை கவனிக்காமல், தடை மீறினால் ஏற்படக்கூடிய நிலை இது.


இனி, பொதுமக்கள், கிளர்ச்சி நடத்தி, சர்க்காரின் போக்கை மாற்றத்தக்க நிலைமை ஏற்படுத்துவார்களா என்பதனைக் கவனிக்கலாம்.

ஒரு இலட்சம் பேராவது சிறைப்பட்டால், பொதுமக்கள் மனம் கொந்தளிக்கும் என்று குறிப்பிட்டேன்.

இந்தக் கொந்தளிப்பு பொதுமக்களிடம் ஏற்பட்டால்

  1. அலைஅலையாகப் பலர் தடைமீறக் கிளம்பலாம்.
  2. கண்டனக்கிளர்ச்சிகள் நடத்தலாம்; கலகம் விளையலாம்.
  3. ஆட்சியாளர்களைப் பதவியில் இருந்து கீழே இறக்க முனையலாம்.

இவை நடைபெறலாம் என்று நினைக்கும் போது, சுவையாக இருக்கிறது – இருக்கும்.

ஆனால் பொதுமக்கள் - என்று நாம் இப்போது குறிப்பிடுவது யாரை? என்றால்

தடையை மீற வேண்டும் என்ற துடிப்பு கொண்டவர்கள் போக,

மீதமுள்ளவர்களில், வேறு கட்சிகளில் ஈடுபடாத, பொதுத்துறையில் நாட்டம் செலுத்துகிற மக்களை.


இவர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் – இயல்பு எவ்விதம் அமையும் என்பதனையும் கணக்கிட்டு அறிய வேண்டும்.

குடும்பக்கவலையற்று பல ஆண்டு சிறைவாசம் ஏற்க 50 ஆயிரம் பேர்கள் கிடைப்பது கடினம், அதற்கான திட்டமிட நேரம் இல்லை, சர்க்கார் விட்டு வைக்காது என்ற கருத்துடைய நான், தடையை மீற நமக்குப் பிறகு – அலை அலையாக மக்கள் முன்வருவர், என்பதனை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை.

இப்போது அந்த எழுச்சி, ஆர்வம் எழாதிருக்கலாம், ஆனால் நாமெல்லாம் சிறைப்பட்ட பிறகு, ஆர்வம் கொழுந்துவிட்டுக் கிளம்பும் என்று கூறுவார்களானால், நான் அதனை எங்கனம் ஏற்றுக் கொள்ளத் துணிவு பெற இயலும்?


பொதுமக்களின் மனம் நெகிழத்தக்க அளவுக்காகிலும், நம்மில் பல ஆயிரவர் சிறை சென்றால்;

கண்டனக் கிளர்ச்சிகள் நடத்தலாம்.

கலகம் எழலாம்.

நம்மிடம் பற்று கொண்ட சிலர், வெளியே இருந்தால் மட்டுமே, இது கூட ஏற்பட இயலும்.

ஏற்படும்போது, அது மாபெரும் புரட்சியாகி, ஆட்சி கவிழ்க்கப்படும், என்றெல்லாம் எண்ணி என்னை நானே ஏமாற்றிக் கொள்ளத் தயாரில் இல்லை.

கிளர்ச்சிகள் நடக்கும் – கண்டன ஊர்வலம் — கடை அடைப்பு போன்றன.

தடியடி, துப்பாக்கிப் பிரயோகம் என்ற முறைகளைச் சர்க்கார் மேற்கொள்ளும்.

சில மணி நேரத்தில் நிலைமை கட்டுக்கு அடங்கியதாக அறிவிக்கப்பட்டவிடும். கண்டனக் கிளர்ச்சியை ஒடுக்க, சர்க்கார் மேலும் சில கொடுமைகளை மேற்கொள்ளும், அந்தக் கொடுமைகளைத் தாங்கிக் கொள்ள இயலாத நிலையில், கிளர்ச்சி நடத்தினோர் ஓய்ந்து போவர்.

இவ்வளவுதான் நடைபெறக்கூடும் — இதற்கும், நம்மிடம் பற்றும் பாசமும் கொண்ட சிலராவது, நம்மோடு சிறைக்கு வந்துவிடாமல், வெளியே இருந்தால்.

இல்லையென்றால், செய்தி படித்து, வருத்தம் கொண்டு, பொதுமக்கள்; திகைத்துப்போய் நிற்பர்; செயலாற்ற முனையமாட்டார்கள்.

இவைகளை விட


அலை அலையாகத் தடை மீறுவதைவிட, கண்டனக் கிளர்ச்சிகள் நடத்துவதைவிட பொதுமக்கள், ஆட்சியில் உள்ளவர்களை கீழே இறக்கும் காரியத்தைச் செய்ய முடியும்.

ஒவ்வொரு மனக்கசப்பு ஏற்படும்போதும், பொதுமக்கள், இந்த எண்ணம்தான் கொள்கிறார்கள் — பதவி கிடைத்துவிட்டதால் ஆட்டமெல்லாம் ஆடுகிறார்கள் – இருக்கட்டும் – இருக்கட்டும் – அடுத்த தேர்தல் வரட்டும் – இவர்களை கீழே இறக்கி விடுகிறோம்! – என்று பேசுகிறார்கள்.

இது சட்டப்படி அனுமதிக்கப்பட்டுள்ள உரிமை.

இதனைச் செய்வதில் பொதுமக்கள் சிறைவாசக் கொடுமையைப் பெறப்போவதில்லை - எனவே தீரமாகப் பணியாற்றக்கூடும்; வெற்றி கிட்டக்கூடும்.

பொதுவாழ்வுத்துறைக்கென அமைந்துள்ள இலக்கணமே இதுதான் – கொடுமைகளை எதிர்த்து கஷ்டநஷ்டம் ஏற்பவர்கள் சிலர் – அவர்கள் தமக்காக கஷ்டநஷ்டம் ஏற்றனர் என்பது அறிந்து, உருகி, அவர்களிடம் ஆதரவு காட்டவும், அவர்களை கொடுமைக்கு ஆளாக்கினோரிடம் வெறுப்பு கொள்ளவும், பல்லாயிரவர், அவர்கள் தமக்குச் சட்டப்படி கிடைக்கும் உரிமையைப் பயன்படுத்தி, தேர்தலில் கொடுமையாளர்களை விரட்டி விடுவது – இதுதான் பொதுவான நடைமுறை.

பொதுமக்களுக்கு, நம்மிடமோ, நாம் கூறும் கொள்கையிடமோ, பற்றும் பாசமும் இருந்தால், இது ஏற்படக்கூடும்.

கொடுமையான சட்டம் இயற்றி, நியாயமான உரிமைகளுக்காகப் போராடுபவர்களைச் சிறையிலிட்டு வாட்டினால், பொதுமக்கள் மனம் கொதித்து, அடுத்தத் தேர்தலில், தம்மை வீழ்த்திவிடுவார்கள் என்ற அச்சமே, கொடுமை செய்யும்போதெல்லாம் ஆட்சியாளர்களுக்கு ஏற்படுகிறது.