எதிர்பாராத முத்தம்/பாடல் 3


3

பூங்கோதை—பொன்முடி

பூங்கோதை வருகின்றாள் புனிதையோடு!
பொன்முடியோ எதிர்பாரா விதமாய், முத்து
வாங்கப் போ கின்றான் அவ் வழியாய் ! வஞ்சி,
வருவோனைத் தூரத்தில் பார்த்தாள்; அன்னோன்
பூங்கோதை யா என்று சந்தே கித்தான்!
போனவரு ஷம்வரைக்கும் இரண்டு பேரும்
வாங்காத பண்டமில்லை; உண்ணும் போது
மனம் வேறு பட்டதில்லை. என்ன ஆட்டம்!

அத்தான் என் றழைக்காத நேர முண்டா!
அத்தை மகளைப்பிரிவா னாஅப் பிள்ளை !
இத்தனையும் இரு குடும்பம் பகையில் மூழ்கி
இருந்ததனை அவன் நினைத்தான்; அவள் நினைத்
                                              [தாள்!
தொத்துகின்ற கிளிக்கெதிரில், அன்னோன் இன்
                                            [பத்
தோளான மணிக்கிளையும் நெருங்க-மேலும்
அத்தாணி மண்டபத்து மார்பன் அண்டை
அழகிய பட்டத்தரசி நெருங்க லானாள்!

"என்விழிகள் அவ்விழியைச் சத்திக்குங்கால்
என்ன விதம் நடப்ப" தென யோசிப்பாள் பெண்;
ஒன்றுமே தோன்றவில்லை; நிமிர்ந்தே அன்னோன்
ஒளிமுகத்தைப் பார்த்திடுவாள்; குனிந்து கொள்
                                           வாள்?

சின்னவிழி ஒளிபெருகும் ! இதழ் சிரிக்கும்!
திருத்தமுள்ள ஆடைதனைத் திருத்திக்கொள்வாள்!
"இன்னவர் தாம் என் அத்தான்” என்றே அந்த
எழிற் புனிதையிடம் விரல் சுட்டாது சொன்னாள்!

பொன் முடியோ முகநிமிர்த்து வானி லுள்ள
புதுமையெலாம்காண்பவன் போல்பூங்கோதைதன்
இன்பமுகம் தனைச் சுவைப்பான் கீழ்க்கண்ணாலே,
‘இப்படியா’ என்று பெரு மூச்செறிந்தே,
"என் பெற்றோர் இவள் பெற்றேர் உறவு நீங்கி
இருப்பதனால் இவனளென்னை வெறுப்பாளோ, நான்
முன்னிருந்த உறவுதனைத் தொடங்கலாமோ
முடியாதோ" என்று பல எண்ணி நைவான்.

எதிர்ப்பட்டார்! அவன் பார்த்தான்; அவளும்
                                      [பார்த்தாள்
இரு முகமும் வரிவடிவு கலங்கிப், பின்னர்,
முதல் இருந்த நிலைக்குவர, இதழ் சிலிர்க்க,
முல்லைதனைக் காட்டி, உடன்மூடி, மிக்க
அதிகரித்த ஒளிவந்து முகம் அளாவ,
அடிமூச்சுக் குரலாலே ஒரே நேரத்தில்
அதிசயத்தைக் காதலொடு கலந்த பாங்கில்
"அத்தான்" "பூங்கோதை" என்றார்!நின்றார்
                                     [அங்கே

வையம் சிலிர்த்தது. நற் புனிதை யேகி
மலைபோன்ற நீர்க்குடத்தை ஒதுங்கிச் சென்று
‘கையலுத்துப்போகு' தென்றுமரத்தின் வேர்மேல்
கடிதுவைத்தாள்; "அத்தான் நீர் மறந்தீர் என்று
மெய்யாக நான் நினைத்தேன்" என்றாள்.
                                           [அன்னோன்,.
வெடுக்கென்று தான் அணைத்தான் " விடாதீர்"
                                            [என்றாள்
கை இரண்டும் மெய்யிறுக, இதழ்நி லத்தில்
கனஉதட்டை ஊன்றினான், விதைத்தான்முத்தம்!

உச்சிமுதல் உள்ளங்கால் வரைக்கும் உள்ள
உடலிரண்டின் அணுவனைத்தும் இன்பம் ஏறக்,
கைச்சரக்கால் காணவொண்ணாப் பெரும்பதத்தில்
கடையுகபட்டும் பொருந்திக் கிடப்ப தென்று
நிச்சயித்த மறுகணத்தில், பிரிய நேர்ந்த
நிலைநினைத்தார்; "அத்தான்” என்றழுதாள்!
                                           [அன்னோன்"
"வைச்சேன் உன்மேல்உயிரைச் சுமந்துபோவாய்!
வரும்என்றன் தேகம். இனிப்பிரியா" தென்றான்!

"நீர்மொண்டு செல்லுபவர் நெருங்குகின்றார் ;
நினைப்பாக நாளைவா" என்று சொன்னான்.
காரிகையாள் போகலுற்றாள் குடத்தைத் தூக்கிக்
காலடி ஒன்றெடுத்து வைப்பாள் திரும்பிப் பார்ப்
                                             [பாள்!
ஓரவிழி சிவப்படைய, அன்னோன் பெண்ணின்
ஒய்யார நடையினிலே சொக்கி நிற்பான்!
"தூரம்"எனும் ஒருபாவி இடையில் வந்தான்,
துடித்ததவர் இரு நெஞ்சும்! இதுதான் லோகம்!