எதிர்பாராத முத்தம்/பாடல் 4


4

அவன் உள்ளம்


அன்று நடுப்பகல் உணவை அருந்தப்
பொன்முடி மறந்து போனான் ! மாலையில்

கடைமேல் இருந்தான் ; கணக்கு வரைதல்,
இடையில் வந்தோ ரிடம்நலம் பேசுதல்,

வணிகர் கொண்டு வந்த முத்தைக்
குணம் ஆராய்ந்து கொள்முதல் செய்தல்,

பெருலா பத்தொடு பெறத்தகும் முத்து
வரின், அதைக் கருத்தொடு வாங்க முயலுதல்,

ஆன இவற்றை அடுத்ததாள் செய்வதாய்
மோனத்திருந்தோன் முடிவு செய்து,

மந்தமாய்க் கிடந்த மாலையை அனுப்பி
வந்தான் வீடு ! வந்தான் தந்தை !

தெருவின் திண்ணையிற் குந்தி
இருவரும் பேசி யிருந்தனர் இரவிலே!

“விற்றுமுதல் என்ன ? விலைக்கு வந்த முத்திலே
குற்றமில்லையே ? நீ கணக்குக் குறித்தாயா?”
என்று வினவினான் தந்தை. இனியமகன்,
“ஒன்றும்நாள் விற்கவில்லை; ஓர்முத்தும் வாங்க
                                        [வில்லை;:
அந்தி வியாபாரம் அது என்னமோ மிகவும்
மந்தமாயிற்“ றென்றான். மான நாய்க்கன் வருந்திக்,
“காலையிலே நீ போய்க் கூடையைத்திற! நான் அவ்
வேலனிடம் செல்கின்றேன்“ என்று விளம்பினான்.
“நான் போய் வருகின்றேன் அப்பா! நடைச்சிரமம்
ஏன் தங்கட்“ கென்றான் இனிதாகப் பொன் முடி
                                        [யான்!!
“இன்றுநீ சென்றதிலே ஏமாற்றப்பட்டாய்; நான்
சென்றால் நலமன்றே“ என்றுரைத்தான் சீமான்;
“தயவுசெய்து தாங்கள் தடை செய்ய வேண்டாம்;
வெயிலுக்கு முன் நான் போய் விடுவருவேன்“
                                        [என்றான்.
“வேலன் முத்துக் கொடுக்க வேண்டும்; அதுவன் றிச்
சோலையப்பன் என்னைவரச் சொல்லி யிருக்கின்
                                         [றான்;
ஆதலினால், நான் நாளை போவ தவசியம். நீ
ஏதும் தடுக்காதே” என்று முடித்தான் தந்தை!
ஒப்பளில்லை! மீறி உரைக்கும் வழக்கமில்லை!
அப்பா விடத்தில் அமுதை எதிர்பார்த்தான்!
அச்சமயம் சோறுண்ண அன்னை அழைத்திட்டாள்
நச்சுண்ணச் சென்றான் நலிந்து.