எனது நண்பர்கள்/நான் கண்ட வ.உ.சி
திருவாளர் வ.உ. சிதம்பரம்பிள்ளை அவர்கள் தமிழ் நாட்டுத்தேசபக்தர்களுள் ஒருவர். தேசபக்தர் என்றாலே திரு. பிள்ளை அவர்களைத்தான் குறிக்கும். நாட்டின் மீது அவருக்குள்ள பற்று உள்ளபடியே அளவைக் கடந்தது எனக் கூறலாம்.
பெரியார் காந்தியடிகளுக்கு முன்பே திரு. பிள்ளை இந்தியாவில் தேசபக்தராக விளங்கியவர். லோகமான்ய பால கங்காதர திலகர் அவர்களின் அரசியல் மாணவர் ஆவர். காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவில் தொண்டு செய்திருந்த காலத்திலேயே திரு. பிள்ளை அவர்கள் இந்தியாவில் தேசத்தொண்டு செய்தவர்கள்.
பலமுறை சிறை சென்றவர்கள். அவர் செய்த குற்றமெல்லாம், இந்நாட்டின்மீதும் மக்களின்மீதும் அன்பு கொண்ட ஒன்றுதான். இக்காலத்தில் சிறைக்குச் செல்ல விரும்புவோர் பலருக்கு நன்கு தெரியும், முதல் வகுப்பும் முந்திரிப்பருப்பும் அல்வாவும் ஆரஞ்சுப் பழமும் கிடைக்குமென்று. அந்தக் காலத்தில் அனைவருக்கும் தெரியும் செக்கிழுத்துச் சீரழியவேண்டுமென்பது. கற்கள் உடைபடச் செய்யவேண்டும்: இன்றேல் பற்கள் உடைப்பட்டு விடும். குத்துவதெல்லாம் நெல்லாக இருக்கும்; உண்பதெல்லாம் களியாக இருக்கும். இக்காலம் சிறைக்குச் சென்றவர்கள் போற்றுதலும் பூமாலையும் பெறுகிற காலம். அக்காலம் தூற்றுதலும், துயரமும் பெறுகின்ற காலம். முடிவாகக் கூற வேண்டுமானால், எல்லாச் சாதியினரும் சிறைக்குச் சென்றவர்களை வெறுத்துச் சமூகத்தில் ஒதுக்கி வைத்த காலமது எனக் கூறலாம். அப்படிப் பட்ட காலத்தில்தான், திரு. பிள்ளை அவர்கள் சிறை: புகுந்தார்கள்; செக்கும் இழுத்தார்கள். களைப்பு மிகுதியினால் குடிக்கத் தண்ணிர் கேட்டுத் தண்ணிர் பெறாமல் சவுக்கடியையே பெற்றார்கள். சில நாட்கள் அல்ல; பல ஆண்டுகள். நாட்டுப் பற்றுக் காரணமாக உயிர் போகும் வேதனையைப் பெற்று வாடிவதங்கி வருந்த உழைத்தவர்கள் திரு. பிள்ளை அவர்கள் ஆவர்.
படிப்பு இல்லாமல் தேசத்தொண்டு செய்யப்போனவரல்லவர் அவர்; அக்காலத்திலேயே கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றவர்கள். தொழிலில்லாமல் தேசத்தொண்டு செய்யப் புறப்பட்டவர் அல்லர் அவர். வழக்குரைஞர் தொழில் செய்து கொண்டிருந்தவர். வருமானமில்லாமையால் தேசபக்திக்காட்டப் புறப்பட்ட வக்கீல்களைச் சேர்ந்தவர் அல்லர் அவர்; தொழிலில் நல்ல வருமானத்தைப் பெற்று வந்தவர். புகழுக்கும், பெருமைக்கும் ஆசைப்பட்டுப் பொதுத் தொண்டு செய்யப் புறப்பட்டவர் அல்லர் அவர். எவ்வளவு கத்திப் பேசினாலும் இந்துவும் சுதேசமித்திரனும் ஏழுஎட்டு வரிகூட எழுதா அக்காலத்தில் தேசத்தொண்டு செய்து வந்தவர். அவரது அருஞ்செயலையும், பெருங் குணத்தையும், உள்ளத் துய்மையையும், உழைப்பின் சிறப்பையும் விளக்க இதை விட வேறெதுவும் கூறவேண்டியதில்லை.
உயர்ந்த அறிவாளிகள் உயிரோடிருக்கும்போது, அவர்களைச் சிறிதும் மதியாமல், அறிவைப் போற்றாமல், செயலை வாழ்த்தாமல், நடத்தையைப் பின்பற்றாமல், வருந்தும்போது ஒருவேளை உணவுக்கும் வழி செய்யாமல், மாண்டபிறகு மணிமண்டபம் கட்டுவதும், காலடிபட்ட மண்ணை எடுத்துக் கண்களில் ஒத்துவதும் மாண்டாயோ மன்னவனே என மாரடித்து அழுவதும், படம் திறப்பதும், பாக்கள் பாடுவதும், பூமாலை சாற்றிப் போற்றிப் புகழ்வதும் ஆகிய பழக்கத்தைக் கொண்ட இப் பாழாய்ப்போன தமிழ்நாட்டில்தான் திரு. பிள்ளை அவர்களும் பிறந்தார்கள்; அதனாலேயே அவர்களும் இக் கூற்றுக்கு இலக்கானார்கள்.
இன்னும் ஒருபடி தாண்டி, வாழ்ந்தபோது வைது கொண்டிருந்தவர்கள் மாண்டபிறகு மாறி நாட்டிற்கு அவர் பெயரும், ஊருக்கு அவர் சிலையும் வேண்டுமென, ஊருக்கு முன்னே ஓடோடி ஆலோசனைகறும் மக்களுள்ள இத்தமிழ் நாட்டிலே திரு. பிள்ளை அவர்கள் பிறரால் வையப்பெறாமலும் வாழ்த்தப் பெறாமலும் வாழ்ந்துவந்தது ஒரு சிறப்பேயாகும்.
திரு. பிள்ளை அவர்களின் பேச்சு இரத்தக் கொதிப்பையும் நரம்புத் துடிப்பையும் மட்டும் அல்ல, எலும்புகளையும் உருகச் செய்யும். உணர்ச்சி கலந்த அரசியல் ஆவேசப் பேச்சுக்கள் திரு. பிள்ளை அவர்களோடு மறைந்து ஒழிந்தன.
வெள்ளையர் கப்பல்கள் துரத்துக்குடியிலிருந்து கொழும்புக்குச் செல்லும் கட்டணத்தை உயர்த்தித் தமிழ் நாட்டு வர்த்தகத்திற்கே கேடு விளைவித்தன. இதனையறிந்த பிள்ளை அவர்கள், அவர்களோடு போராடியும் நியாயத்திற்கு இணங்க மறுத்ததனால், அவர்களோடு போட்டியிட்டுத் தானே ஒரு கப்பலை ஒட்டித் தமிழ்நாட்டு வணிகத்திற்குத் தொண்டு செய்தார்கள்.
அவர் ஒரு தொழிலாளர் தலைவர். தொழிலாளர் போக்கைத் தொடர்ந்து போகும் தலைவராயில்லாமல் தொழிலாளரைத் தன் போக்கில் நடத்திச் செல்லும் தலைவராயிருந்தவர்.
அவர் ஒருமுறை சிறை சென்றபோது, தூத்துக்குடி இரயில்வே நிலையமும், சர்க்கார் கட்டடங்களும் தூள் தூளாக்கப்பட்டன. நெருப்புப் பொறிகளும் பறந்தன. அரசாங்கமே நடுங்கி அஞ்சுகின்ற அளவுக்கு அவர் ஓர் வீரமனிதராகக் கருதப்பட்டார்.
அவருடைய தமிழ்ப் பற்றுத் தமிழ்நாட்டிலே நன்கு மதிக்கப் பெற்றிருக்கிறது. அதுதான் “திருக்குறள் வ. உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு’’ என்பதாகும். இது இன்னும் நம்மிடையே இருந்து கொண்டு அவர்களையும் அவர்களது தமிழ்ப்பற்றையும் நினைப்பூட்டி வருகிறது.
திரு. பிள்ளை சிறையிலிருப்பார். வீட்டிலிருந்து செய்தி வரும். வருகின்ற செய்தி “குழந்தைக்குத் துணியில்லை; உணவுக்கு வழியில்லை” என்றிருக்கும். கண்கள் கலங்கும்; மனம் கலங்காது. இத்தகைய செய்திகள் பலவற்றை அரசாங்க அதிகாரிகள் அவரிடம் அனுப்பி வைப்பார்கள். காரணம் எந்த வகையிலானும் மன்னிப்பைப் பெற்று, விடுதலை பெற்று அவர் வெளியேற வேண்டும் என்பதுதான். இருமுறை ஆயுட்காலத் தண்டனை; அந்தமான் தீவுக்கு நாடு கடத்தும் தண்டனைகளைப் பெற்று, செக்கிழுத்து வாடி வதங்கி அடைத்துப்போன காதுகளுக்கு, இச்செய்திகள் எட்டும். மடிவதில் மனம் கொண்டாரேயன்றி மன்னிப்பில் மனம் கொள்ளவில்லை.
ஒரு நாட்டுத் தலைவன் மனைவியையும் மக்களையும் காப்பாற்றத் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாமையினால், அவர்கள் முன்வந்து உதவி செய்யவில்லை. அவர் வாழ வகையின்றி வருந்தினார். இப்படிப்பட்ட மக்களுக்காகச் சிறை புகுந்து, செக்கிழுத்து மடிவதும், தன்னை நம்பியுள்ள மனைவி மக்களை இப்படிப்பட்டவர்களிடம் உயிரோடு ஒப்புவித்து, அவர்களையும் மடியச் செய்வதும் நியாயமாகுமா?’ என்று சிறையில் பல ஆண்டுகள் எண்ணி எண்ணி வருந்தி நொந்தார். கடைசியாக ஒரு நாள் நீதிமன்றம் அவருக்கு விடுதலை அளித்தது. மீண்டும் வழக்கறிஞர் தொழிலை நடத்தினார்கள். திரு. பிள்ளை அவர்களோடு சேர்ந்து நான்கு கூட்டங்களில் பேசியிருக்கிறேன். நான் பேசும் சில ஊர்களுக்கும் அவர்கள் வந்திருக்கிறார்கள். தமிழுக்காக அவர்மீது எனக்கு அளவு கடந்த அன்பு உண்டு. அதற்காகவே என்மீது அவருக்குப் பற்றுதல் உண்டு. தமிழ் ஒன்றே எங்களைப் பிணைத்தது.
அரசியலிலே நாங்கள் இருவரும் மாறுபட்ட கொள்கையுடையவர்கள்; மாறுபட்ட இயக்கங்களைச் சார்ந்தவர்கள். ஒருநாள் தட்டப்பாறையில் சந்தித்து “உங்களைப்போன்றவர்கள் ஜஸ்டிஸ் கட்சியை விட்டுக் காங்கிரஸ் கட்சிக்கு வந்து சேரவேண்டும்” எனக் கூறினார்கள். எனது இளமை முறுக்கினாலும், இரத்தத் திமிரினாலும் அவர்களைக் கடுமையாகத் தாக்கிக் கடுஞ்சொற்களைக் கூறிவிட்டேன். இன்றைக்கு நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆயின என்றாலும், இன்றைக்கும் அது என் உள்ளத்தைச் சுடுகின்றது. அச் சுடுசொல் :–
“தங்கள் அறிவும், திறமையும், உழைப்பும், தமிழர் நலனுக்குப் பயன்படாமல், அறியாமையின் காரணமாகப் பிறர் நலனுக்குப் பயன்படுகிறது. அத்தவற்றை நானும் செய்யவேண்டுமா?” என்பதுதான். இதற்காக அவர்கள் எனக்களித்த தண்டனை, அவர்களின் வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்று, பலமணி நேரம் நிலைமையை விளக்கி, எனது கருத்தை மாற்றி, அவர் தவறு செய்யவில்லை என மெய்ப்பித்ததுதான். பொதுவாக அவர் உள்ளத்தைத் திறந்து காட்டி, தம்முள்ளத்தே மறைத்து வைத்திருந்த பலசெய்திகளையும் கூறிக் கண் கலங்கினார்கள். வருந்தினேன். எனது வலக்கையால் அவரது கண்ணீரைத் துடைத்ததுதான் இன்றைக்கு ஆறுதலாக இருக்கிறது. அவர் கூறிய செய்திகளை வெளியிடும் காலம் இன்னும் வரவில்லை. அவரது மனைவியார் என் வயிற்றிற்கு ஒருவேளை உணவளித்தார்கள். அவரோ என் அறிவுக்குப் பலநாள் உணவையளித்தபின் மறைந்தார்கள். அவர் அளித்த உணவு “எவரையும் வையாதே; வைவது தமிழனின் பண்பல்ல—பிறரை வைவதுதான் முன்னேறும் வழி என்று எண்ணாதே. எவன் முன்னேறினாலும் வைபவன் முன்னேற முடியாது என்பதை நம்பு, தவறு என்று கண்டால் தீமையற்றச் சொற்களால் அச்சமற்றுக் கூறு” என்பதுதான்.
திரு. பிள்ளை அவர்களின் அறிவுரையும் அறவுரையுமாகிய இது எனக்குப் பயன்பட்டது. உங்களுக்கும் பயன்படுமா? முயலுங்கள்.
நான் சிலருடைய திருவடிகளை நினைத்து அடிக்கடி வணங்குவேன். திரு. பிள்ளை அவர்கள் திருவடிகளும் அதில் சேர்ந்ததுதான். காரணம் பொய் பேசுவதில்லை என்பதை வாழ்நாள் முழுவதும் ஒரு கொள்கையாகக் கொண்டு உண்மையையே பேசி வந்தார்கள். அதுமட்டுமல்ல, உயிர் போகும்வரை ஒழுக்கத்தைக் கையாண்டு வந்த ஒரே தலைவர் அவர் என்பதினாலுமே யாம்.
வாழ்க வ. உ. சி. புகழ்.
வாழ்க அவர் பிறந்த நாடு.