எனது நண்பர்கள்/பண்டிதமணி மு. கதிரேசஞ் செட்டியார்
மு. கதிரேசஞ் செட்டியார்
“சைவமும் தமிழும் தழைத்தினிதோங்குக’’ என்பது. தமிழ்ச் சான்றோர் வாக்கு. இக்காலத்தில் இவ்வாறு: கூறுபவர்களைக் காண்பதே அரிதாயிருக்கிறது. அக்காலத்தில் இவ்வாறு கூறுவது மட்டுமல்ல செய்து கொண்டும் இருந்த சான்றோர்களில் பலர் நகரத்தார் சமூகத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் செய்துவந்த, கல்வித் தொண்டும், சமயத் தொண்டும் கணக்கிலடங்காதவை. அத்தகைய சமூகத்தில் பிறந்த பெருமகனே பண்டிதமணி மு.கதிரேசஞ் செட்டியார்.
கடந்த நூற்றாண்டில் தமிழகத்தில் பிறந்த தமிழ்ப் புலவர் பெருமக்களில் காரைக்குடி சொக்கலிங்க ஐயா அவர்களும் ஒருவர். அவர்களின் மாணாக்கர்களில் ஒருவரே பண்டிதமணி மு. கதிரேசஞ் செட்டியார் அவர்கள். செட்டியார் நாட்டில் பலவான்குடியில் ரா.ம.கு. ராம. இராமசாமிச் செட்டியார் என்ற சிவநேசச் செல்வம் ஒருவர் இருந்தார் சிவநேசன் என்ற பத்திரிக்கை ஒன்றை நடத்தி சிவநேசர் திருக்கூட்டம் ஒன்றையும் நடத்தி வந்தார். அதன் ஆண்டு விழா ஒன்றில் தலைமை வகித்தவர் கொரடாச்சேரி வாலையானந்த சுவாமிகள். அக் கூட்டத்தில் சொற்பொழிவாற்றியவர்கள் மூவர். அந்த மூவரில் இருவர் காரைக்குடி சொக்கலிங்க ஐயாவும் பண்டிதமணி கதிரேசஞ் செட்டியாரும் ஆவர். மூன்றாவது ஆள் நான் தான். ஆளுக்கு ஒரு மணி நேரப் பேச்சு.
காரைக்குடி சொக்கலிங்க ஐயாவுக்கு தலைப்பு “மணி வாசகர்”. பண்டிதமணி மு. கதிரேசஞ் செட்டியார் அவர்களுக்குத் தலைப்பு “திருவாசகம்”. எனக்குத் தலைப்பு “மணிவாசகரும் திருவாசகமும்”. ஏறத்தாழ மூவருக்கும் ஒரே தலைப்பு. இது நடந்த ஆண்டு குறிப்பாகக் கூற முடியவில்லை. என்றாலும், இது ஐம்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்பது மட்டும் உறுதி. அப்போதுதான் பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் அவர்களை முதன் முதலாக ஒரே மேடையில் பேச்சோடு கண்டு மகிழும் பேறு எனக்குக் கிடைத்தது.விழா முடிந்த பிற்கு அவர்களின் நல்லாசியையும் பெற்று திரும்பினேன்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு திருச்சி உய்யக் கொண்டான் திருமலையில் திருக்கற்குடிச் சிவனடியார் திருக்கூட்டத்தின் ஆண்டு விழாவுக்கும் நாங்கள் இருவரும் அழைக்கப்பட்டிருந்தோம். தலைவர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரையா அவர்கள். மாலை ஆறு மணி. நானும் நாட்டாரையாவும் கோவில் திருக்குளத்தில் வழிபாடு (அனுட்டானம்) செய்து கொண்டிருந்தோம். பின்னால் பண்டிதமணி அவர்களும் வழிபாடு செய்வதற்காகக் கையில் கோலை ஊன்றித் தட்டுத் தடுமாறிக் குளத்தின் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தார்கள். அவர் நடந்து வந்து கொண்டிருந்த இடத்தில் ஒரு படி இல்லாததைக் கண்டு, நாட்டாரையா அவர்கள் செட்டியாரை நோக்கி, அங்கு “படியில்லை படியில்லை” என்று இரு முறை கூறி எச்சரித்தார்கள். அதற்குப் பண்டிதமணி மிகப் பொறுமையாக, “ஏனய்யா! இப்படி சிவன் கோவிலுக்கு வந்தும் படியில்லை என்று கூறுகிறீர்கள்” என்றார்கள். அந்தச் சிலேடைச் சொல்லைக் கேட்டு நாங்கள் இருவரும் பெருநகைப்பு நகைத்து மகிழ்ந்தோம்.
பண்டிதமணி மு.கதிரேசஞ் செட்டியார் அவர்கள் பெரும் புலமை வாய்ந்த பேரறிஞர். அவரது ஆழ்ந்த தமிழ்ப் புலமையும் சைவ சமயப் புலமையும் கலந்த அவரது சொற்பொழிவு கேட்போர் உள்ளத்தைக் கிறுகிறுக்கச் செய்யும்.
அவர் ஒரு பரம்பரைத் தமிழ்ப் புலவர், கல்லூரியிற் பயிலாதவர். அவர் ஒரு பட்டதாரியும் அல்லர். இப்போது சிலருக்கு அரசு வழங்கியிருப்பதைப்போல அவருக்கு டாக்டர் பட்டத்தையும் அரசு வழங்கியதில்லை. என்றாலும் அவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பெரும் பேராசிரியராக இருந்து தமிழ்ப் பணி புரிந்து வந்தார்.
இன்று தமிழில் டாக்டர் பட்டம் பெற்று தமிழ்ப் பணி புரிகின்ற புலவர்கள் பலர். இவர்களில் பெரும்பான்மையோர் பண்டிதமணி அவர்களிடம் பயின்ற மாணவர்களுடைய மாணவர்கள். அதாவது பேரன் மரபினர்.
அவரது சமயத் தொண்டைப் பற்றியும், தமிழ்த் தொண்டைப் பற்றியும் என்னிடம் பாராட்டிக் கூறிய பெருமக்கள் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரையா அவர்களும், பசுமலை நாவலர் டாக்டர் சோமசுந்தர பாரதியார் அவர்களும் ஆவர். பண்டிதமணி அவர்களைப்பற்றி நானாக அறிந்திருந்ததைவிட, இந்தப் பெருமக்கள் மூலம் அதிகமாக அறியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
எதிர்பாராவிதமாக ஒருநாள் திருச்சியில் கையில் கோலை ஊன்றித் தட்டுத் தடுமாறி என் இல்லத்தின் மெத்தைப் படிகளின் மீது ஏறி என்னைப் பார்க்க வந்த பண்டிதமணி அவர்களைக் கண்டு, ஒருபுறம் மகிழ்ச்சியும் மறுபுறம் அதிர்ச்சியும் அடைந்தேன். பிறகுவந்த செய்தி என்ன? நான் ஏதாவது செய்ய வேண்டுமா? என வினவினேன். அதற்கு அவர், “ஒன்றுமில்லை சும்மா பார்த்துப் போகலாம் என்று வந்தேன்” என்றார். பல முறை முயன்றும் அவர் வந்த செய்தியை என்னால் அறிய முடியல்லை. கடைசியாகக் கேட்ட பொழுது சும்மா பார்த்துப் போகலாம் என்றுதான் வந்தேன் என்ற விடையே கிடைத்தது; என்னால் அதை நம்ப முடியவில்லை.
‘ஏதாவது வந்த செய்தியிருந்தால் தயவு செய்து சொல்லுங்கள்’ என்று நான் கேட்டபொழுது, அவர் சிறிது அழுத்தமாக ஏதாவது வேலையிருந்தால்தான் வரவேண்டுமா? கம்மா வந்து பார்க்கக் கூடாதா?’ என்று என்னையே இரண்டு கேள்விகளைக் கேட்டு, “நான் வருகிறேன்” என்று நடக்கத் தொடங்கினார். எனக்கு இது பெரும் வியப்பைத் தந்தது.
பிறகு நானும் அவரோடு கீழே இறங்கி வந்து, “நீங்கள் இங்கேயே இருந்து, வந்த செய்தியை அறிவித்திருக்கலாமே! நான் கீழே வந்து பார்த்து மகிழ்ந்திருப்பேனே” எனக் கூறினேன். “அந்தத் தொந்தரவை உங்களுக்குக் கொடுக்க விரும்பவில்லை; நான் புறப்படுகிறேன். வேறு ஏதாவது வேலை இருக்கும்போது திரும்ப வருகிறேன்” என்று நடக்கத் தொடங்கினார். நான் பயந்து போய், அவரைக் கட்டாயப்படுத்தி உட்காரவைத்து, எனது மனைவி மக்களோடு அவரது திருவடிகளில் வணங்கி திருநீறு பெற்று மகிழ்ந்தோம். அந்த, நாள் என் கடைசி மகன் பிறந்த முப்பதாவது நாள்.
பண்டிதமணி அவர்கள் என் இல்லத்திற்கு வந்து சென்றதன் நினைவாக, அவரது திருப்பெயரை என் கடைசி மகனுக்கு வைத்து மகிழ்ந்தோம். இப்போது என் கடைசி மகன் கதிரேசனுக்கு வயது 42.
பண்டிதமணி அவர்கள் எங்களை அன்போடு வாழ்த்தி விட்டுத் திரும்பிச் செல்லுகிற நேரத்தில், இப்பொழுதாவது தாங்கள் வந்த செய்தியை நான் அறியலாமா?” என்று நான் வினவியபொழுது, பண்டிதமணி அவர்கள் ‘என் பேச்சில் உங்களுக்கு நம்பிக்கையில்லை என்று, தெரிகிறது நான் சும்மா பார்த்துப் போகலாம் என்று தான் வந்தேன். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்கள் உங்களைப் பற்றியும் உங்களுடைய தொண்டுகளைப் பற்றியும் அடிக்கடி என்னிடம் கூறுவார்கள். நான் திருச்சிக்கு வேறு வேலையாக வந்தேன். தங்களைப் பார்க்காமல் போவது நல்லதல்ல என்று எண்ணியே பார்க்க வந்தேன். எனக்கு ஆகவேண்டிய வேலை ஒன்றும் உங்களிடமில்லை. அதற்காகத் தேடி வரவுமில்லை. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பார்த்ததில் எனக்கு அதிக மகிழ்ச்சி. உங்களைப் பார்த்து மகிழ்ந்த இச் செய்தியை நான் பசுமலை நாவலர் சோமசுந்தரம் அவர்களிடம் சொல்லி மகிழ்வேன்” எனக் கூறிச் சென்று விட்டார்கள்.
என் வாழ்நாட்களில் பெரும்பேறு பெற்று மகிழ்ச்சியடைந்த நாட்கள் சில. அவற்றில் ஒன்று பண்டிதமணி அவர்கள் ஒரு வேலையுமின்றி, என் இல்லத்திற்கு வந்த நாளும் ஒன்று.
அதன்பிறகு பண்டிதமணி அவர்களைப் பல்வேறு தடவைகளில் பல்வேறு இடங்களில் சந்தித்து உரையாடியும் மகிழ்ந்திருக்கின்றேன். இன்று என் போன்றவர்களிடம் தமிழ்ப்பற்றும் சமயப்பற்றும் சிறிதாவது காணப்படுமானால் அது பண்டிதமணி அவர்களின் அருந்தொண்டுகளினால் விளைந்தவையாக இருக்கும்.
வாழட்டும் பண்டிதமணியின் தொண்டு!
வளரட்டும் பண்டித மணியின் புகழ்!!