எனது நாடக வாழ்க்கை/இருபெரும் கலைஞர்கள்

இரு பெரும் கலைஞர்கள்


ஒருநாள் பாலக்காட்டில் இராமாயணம் நடந்தது. கே. ஆர். இராமசாமி வழக்கம்போல் ஆஞ்சநேயராக நடித்தார். அருமையாக பாடினார். முற்பகுதிக் காட்சிகள் முடிந்தன. இனி ஆஞ்சநேயர் கடல் தாண்டி இலங்கைக்குச் செல்ல வேண்டும். அவ்வாறு தாண்டுவதற்கு அப்போதெல்லாம் வெறும் அட்டையில் செய்த அனுமாரை இழுப்பது வழக்கமில்லை இராமசாமியே மேலிருந்து தொங்கும் நான்கு வளையங்களில் கை கால்களை துழைத்துக்கொண்டு கடலைத் தாண்டுவார். பார்ப்பதற்குப் பிரமிப்பாக இருக்கும். அன்று இராமசாமி அங்கதன் ஜாம்பவான் முதலிய வானர வீரர்களிடம் விடைபெற்றுக் கொண்டு கடல் தாண்டப் புறப்பட்டார். “ராம ராம ராம சீதா” என்ற வானர வீரர்களின் ராம நாம கோஷம் ஒலித்துக் கொண்டிருந்தது. இராமசாமி உள்ளே வந்தார். குதிரை ஏணிமேல் ஏறித் தொங்கிக் கொண்டிருந்த நான்கு வளையங்களில் கைகளையும் கால்களையும் நுழைத்துப் பாய்ந்து செல்வது போல் ஒரு கையையும் காலையும் முன்னல் நீட்டிக்கொண்டு போஸ் கொடுத்தார். எதிர்ப்புறமிருந்து குறுக்கே கட்டப்பட்டிருந்த கம்பியை இழுத்தார்கள். கம்பிகள் மிகச்சிறியவை. சபையோர் கண்ணாக்குத் தெரியாது. ஆகையால் இராமசாமி பாய்ந்தபடியே கடலைத் தாண்டி எதிர்ப்புறம் செல்லும் போது ஒரே கரகோஷம். திரை விடப்பட்டது. மீண்டும் குறுக்குக்கம்பியை முன்னிருந்த இடத்திற்கே இழுத்தார்கள், கம்பி மேடையின் நடுவே வந்ததும் மேலே கட்டப் பட்டிருந்த குறுக்குக் கம்பி படாரென்று அறுந்து விட்டது. ஆஞ்சநேயர் அப்படியே கீழே விழுந்தார். எல்லோரும் பதறிப் போய் ஒடினோம். நல்ல வேலையாகக் கீழே வரிசையாகக் கட்டப் பட்டிருந்த கூர்மையான மரத் துண்டுகளோடு கூடிய அலைகளின் மேல் விழவில்லை. இரு அலைகளின் நடுவே விழுந்தார். குப்புற

விழுந்ததால் மார்பில் பலத்த அடி. அப்படியே தூக்கிப் போய் மின்சார விசிறியின் கீழே படுக்க வைத்தோம். சோடா கொடுக் கப்பட்டது. ஆஞ்சனேயரின் உடை ரோமம் போல் தோன்று வதற்காக அடுக்காகத் தைக்கப்பட்டு, மெத்தை போன்றமைக்கப் பட்டிருந்ததால். அபாயும் எதுவும் ஏற்படவில்லை. இரண்டொரு நிமிடங்களில் சமாளித்துக் கொண்டார். நாடகம் தொடர்ந்து நடைபெற்றது.

இளம் நடிகர் எஸ். வி. சுப்பையா

கலைமாமணியென இன்று நம்மால் போற்றப்பெறும் நடிகர் எஸ். வி. சுப்பையா அப்போது கம்பெனியில் இருந்தார். 1939 இறுதியில் திருச்சிராப்பள்ளியில் இருந்தபோதே அவர் எங்கள் குழுவில் சேர்ந்தார். நன்றாகப் பாடுவார். பல்வேறு நாடகங் களில் சிறிய வேடங்களைப் புனைந்து வந்தார். சிவலிலா மதுரை யில் தொடர்ந்து நடைபெற்றபோது, சிவபெருமானைக் கால் மாறி ஆடச்சொல்லும் அபிஷேகப் பாண்டியனாக நடித்தார். நடிகர்கள் ஏராளமாக இருந்ததால் பெரிய வேடங்களைத் தாங்கி நடப்பதற்குரிய வாய்ப்பு அப்போது அவருக்குக் கிடைக்கவில்லை. அன்று அவர் புனைந்த பாத்திரங்களிலே குறிப்பிடத்தக்கதாக இருந்தது கர்ணன். ஆம், மகாபாரதம் மாதக் கணக்கில் தொடர்ந்து நடைபெறும் நாடகமாகஇருந்தது. அதில் சுப்பையா கர்ணனாக நடித்தார், குந்தியும் கர்ணனும் சந்திக்கும் காட்சியில் மிக உருக்கமாக நடித்தார். சபையோரை மட்டுமல்ல. உள்ளிருந்த எங்களேயெல்லாங்கூடக் கண்கலங்க வைத்தார். அவரை மேலும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பினை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தோம்.

அடக்கம் நிறைந்த ஆர். எம். வீரப்பன்

இப்போது சத்யா மூவீசின் அதிபராக விருக்கும் ஆர். எம். வீரப்பன் அவர்கள் அப்போது எங்கள் நாடகக் குழுவில் இருந்தார். அடக்கமான இளைஞர். யாரோடும் வம்புக்குப் போக மாட்டார். சின்னச் சின்ன வேடங்கள் புனைவார். அவருடைய கையெழுத்து அந்தச் சிறு வயதிலேயே அழகாக இருந்தது. எனவே எங்கள் கணக்குப்பிள்ளை ஏ. டி. தர்மராஜூ ஆர்.எம்.வீரப்பனைக் கணக்குகள் எழுத நன்கு பயன்படுத்திக் கொண்டார். கணக்குப் பிள்ளையோடு அவர் எழுதிக் கொண்டிருப்பதை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். இந்தப் பையன் நல்ல நிர்வாகி யாக வருவான் போல் தோன்றுகிறது. என்று அன்றே கணக்குப் பிள்ளையிடம் கூறினேன். ஆர். எம். வீரப்பனுக்கும், எஸ். வி. சுப்பையாவுக்கும் மிகுந்த நட்பு. இருவரும் எப்போது பார்த்தாலும் நெற்றியில் திருநீற்றோடு தான் காட்சியளிப்பார்கள். சுப்பை யாவைவிடப் பெரியவர்கள் சிலர், என்னப்பா, நீதான் பண்டா ரமாப் போயிட்டே வீரப்பனையும் பண்டாரமாக்கிடா தேப்பா” என்று வேடிக்கையாகப் பேசுவார்கள்.

கே. ஆர். இராமசாமிக்கும், எஸ். வி சுப்பையாவுக்கும் எந்நேரமும் தகராறுகள். பிரண்டு இராமசாமிக்கும் இதில் பங்குண்டு. இதற்குக் குறிப்பான காரணம் எதுவும் சொல்ல இயலாது. நாடகக் கம்பெனிகளில் இதுபோன்ற சண்டைகளும், சமரசங்களும் சாதாரண நிகழ்ச்சிகள். இரண்டு நடிகர்கள் சண்டை போட்டுக் கொள்வார்கள். இறுதியில் சண்டை முற்றி ஒருவரைக் கம்பெனியிலிருந்து விலக்கப்படுவார்; விலகுவதற்குச் பூசல் வளர்ந்துவிடும். ஒருவர் விலக்கப்படுவார். விலக்குவதற்குக் காரணமாயிருந்த நடிகரே அவரைப் போய் வழியனுப்பி விட்டுக் கண்கலக்கதோடு திரும்புவார். இத்தகைய நிகழ்ச்சிகள் எத்தனை எத்தனையோ எங்கள் கம்பெனியில் நடைபெற்றுள்ளன.

இரு இராமசாமிகளும் ஒரே கட்சி

கே.ஆர்.இராமசாமியும், பிரண்டு இராமசாமியும் கம்பெனியின் பழைய நடிகர்கள். இவர்களுக்குப் பெரியண்ணாவிடம் மிகுந்த செல்வாக்கு. சுப்பையா தன்னை ஏதேதோ கெட்ட வார்த்தைகள் சொல்லி ஏசிவிட்டதாக கே. ஆர். இராமசாமி பெரியண்ணாவிடம் புகார் செய்தார். பெரியண்ணா சுப்பையா வைக்கூப்பிட்டு விசாரித்தார். சுப்பையாவின் பதில் அடக்கமாக இல்லை. பெரியண்ணாவுக்குக் கோபம் மூண்டது.

“குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தலரிது”

என்று வள்ளுவர் கூறயிருக்கிறாரல்லவா? இதற்கு இலக்கியமாக விளங்குபவர் பெரியண்ணா. அவ்வளவுதான், சுப்பையாவுக்கு நல்ல அடி. ஒவியர் தேவராஜய்யர். கணக்குப்பிள்ளை தர்மராஜு யார் யாரோ குறுக்கே வந்து தடுத்தார்கள். பயனில்லை. பலமாக அடித்த பிறகுதான் ஒய்ந்தார் அண்ணா. அப்போது இரவு மணி ஏழு. அன்று ஸ்ரீ கிருஷ்ண லீலா நாடகம். நான் கொட்டகையை அடுத்த ஒரு வீட்டில் குடியிருந்தேன். இரவு 8-30 க்குத் தியேட்டருக்கு வந்தேன். சுப்பையா என்னிடம் வந்தார். “என் மீது ஒரு குற்றமும் இல்லை. கறுப்பு இராமசாமியும், சிவப்பு இராமசாமியும் கோள் மூட்டியதால் பெரியண்ணாச்சி என்னை அநியாயமாக அடித்து விட்டார்” என்றார். அவர் உடம்பில் அடிபட்ட காயங்கள் இருந்தன. நான் அவருக்கு ஆறுதல் கூறினேன். இதே போன்று தம்பி பகவதி, எஸ். வி. சகஸ்ரநாமம் போன்றவர்களெல்லாம் கூட அடி வாங்கியவர்கள் தாம் என்று கூறி அவரைச் சமாதானப்படுத்த முயன்றேன். இரு இராமசாமிகளையும் பெரியண்ணாவிடம் புகார் கூறியதற்காகக் கடிந்து விட்டு வெளியே சென்றேன்.

நள்ளிரவில் சென்ற கலைஞர்

சுப்பையா சோகமே உருவாக ஒருபுறம் உட்கார்ந்திருந்தார். இரவு மணி 9. இன்னும் அரைமணி நேரத்தில் நாடகம் தொடங்க வேண்டும். அன்று நாடகத்தில் சுப்பையாதான் வசு தேவர். அவரோ வேடம் புனையவில்லை. முதல் காட்சியிலேயே வசுதேவர் வரவேண்டும். இரண்டொருவர் சுப்பையாவிடம் போய் இன்னும் வேடம் புனையவில்லையா?’ என்று கேட்டார்கள். அவர் வேடம் புனைய மறுத்து விட்டார். சுப்பையா வசு தேவர் போட மறுக்கிறார் என்று சொல்லி எனக்கு ஆள் வந்தது. பகவதி அன்று கம்சன், கே. ஆர். இராமசாமியும், பகவதியும் மாறி மாறிப் போடுவார்கள். அன்று பகவதியின் முறை. பகவதி கம்சன் வேடத்தோடு வந்து, வேடம் புனையும் படியாகச் சுப்பையாவிடம் கூறினார் போல் இருக்கிறது. சுப்பையா அவரிடமும் மறுத்து விட்டார். ஒப்பனை அறையில் ஒரே ரகளே. சுப்பையா வேடம் புனைய மறுப்பதாகப் பெரியண்ணாவிடம் சொல்ல ஆள் போய் விட்டதாக அறிந்தேன். எனக்கும் தகவல் வந்தது. நான் வந்து சுப்பையாவிடம் எவ்வளவோ சொன்னேன். அவர் ஒரே பிடிவாதமாக வேடம் புனைய மறுத்து விட்டார். உடனே நான் கே. ஆர். இராமசாமியை வசுதேவர் போடச் சொல்லி விட்டு சுப்பையாவையும் அழைத்துக் கொண்டு அருகிலுள்ள என் விட்டிற்குச் சென்றேன். கிருஷ்ணலீலாவில் எனக்கு வேடம் இல்லையாதலால் நிறைய நேரம் கிடைத்தது. வேடம் புனையாததற்காகப் பெரியண்ணா மீண்டும் வந்து அடிப்பார் என்பதைச் சுப்பையா நன்றாக அறிவார். ஆனாலும் அவருக்கு அசட்டுப் பிடிவாதம் ஏற்பட்டிருந்தது. மேலும் அடிபடவும், வேடம் புனையாததன் விளைவுகளை ஏற்கவும் சுப்பையா சித்தமாக இருந்தார். நான் சுப்பையாவுக்கு அறிவுரைகள் கூறினேன். என்னத்தான் இருந்தாலும் வேடம் புனைய மறுத்தது தவறு என்பதை அவருக்கு உணர்த்தினேன். பெரியண்ணாவின் கோபத்தை நன்கு உணர்ந்தவன் நான். விடிந்தால் சுப்பையாவுக்கு என்ன நேருமோ என்று எனக்கு அச்சமாக இருந்தது. சுப்பையா மேற்கொண்டு கம்பெனியில் இருக்கவும் விரும்பவில்லை. இரவோடிரவாக அவரை ஊருக்கு அனுப்பி விடுவது நல்லது என எனக்குத் தோன்றியது. அவரும் என் யோசனையை ஏற்றார், கையிலிருந்த சிறு தொகையை அவரிடம் கொடுத்தேன். அன்றிரவே அவரைப் பாதுகாப்பாக. ஊருக்கு அனுப்பிவைத்தேன். எல்லோரும் சுப்பையா தானாகவே ஒடி விட்டதாக எண்ணினார்கள். நானே அவரை அனுப்பினேன் என்பது பெரியண்ணாவுக்குக் கூடத் தெரியாது.

கலைமாமணி கே. பி. கேசவன்

ஒருநாள் பழம் பெரும் கலைஞர் கே. பி. கேசவன் மனோகரா நாடகம் பார்க்க வந்திருந்தார். நாடகம் முடிந்ததும் உள்ளே வந்து என்னைப் பாராட்டினார். தன் இல்லத்திற்கு ஒருநாள் விருந்துண்ண வர வேண்டுமென்று அழைத்தார். அழைப்பினை ஏற்று ஒலவக்கோட்டிலுள்ள அவரது இல்லத்திற்குத் தம்பி பகவதி, சிவதாணு, கே. ஆர். இராமசாமி ஆகியோருடன் நானும் சென்றிருந்தேன். மலர்ந்த முகத்துடன் எங்களே வரவேற்றார் கேசவன். கம்பெனியின் பழங்கால நிகழ்ச்சிகளைப் பற்றி வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். விருந்துண்ட பின்னும் பேச்சு முடியவில்லை. நாடகம் இருந்ததால் விடைபெற்றுக் கொண்டு திரும்பினோம்.

கே. பி. கேசவன் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் சிறந்த நடிகர்களிலே ஒருவர். நன்றாகப் பாடவும் திறமை வாய்ந்தவர். அவரது ஆற்றல்மிக்க நடிப்பினை ஏற்கனவே நான் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். 1934இல் நாங்கள் விருத்தாசலத்தில் இருந்த போது மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியார் கூடலூர் முத்தையா தியேட்டரில் பம்பாய் மெயில் நாடகம் நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது எங்கள் கம்பெனியிலும் பம்பாய் மெயில் முக்கிய நாடகமாக இருந்ததால், கே. பி. கேசவனின் பம்பாய் மெயில் நாடகத்தைப் பார்க்க ஆசைப்பட்டேன். எங்களுக்கு நாடகம் இல்லாத நாளில் இதற்காகவே கூடலூர் சென்றேன். பம்பாய் மெயில் நாடகம் பார்த்தேன். நாடகத்தில் கே. பி. கேசவனின் அபாரமான நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. நாடகம் முடிந்ததும் அவர் வருகைக்காகக் காத்திருந்து நேரில் சந்தித்தேன். மனமாரப் பாராட்டி விட்டு விருத்தாசலம் திரும்பினேன். கே. பி. கேசவனின் பம்பாய் மெயில் நடிப்பைப் பார்த்தது எனக்குமிகவும் பயனுடையதாக இருந்தது. அதன் பிறகு நான் நடித்த பம்பாய் மெயிலில் புதிய மெருகுடன் நடித்தாக எல்லோரும் பேசிக் கொண்டார்கள்.

திரைப்பட உலகில் கே. பி. கேசவன் நடித்த பதி பக்தியும் இரு சகோதரர்களும் இன்னும் கூட என் நினைவிலிருந்து அகல வில்லை. தமிழ் நாடக உலகை விட்டு அவர் விலகிய வெகு காலத்திற்குப் பிறகுகூட, தமிழ்நாடு சங்கீத நாடக சங்கத்தின் சிறந்த நாடக நடிகருக்குரிய விருதினை அவருக்கு வழங்கவேண்டுமென்று, நான் ஆர்வத்தோடு பரிந்துரைத்தேன். கே.பி. கேசவன் சென்னை க்கு வந்து சங்கத்தின் விருதினைப் பெற்றுக் கொண்டபோது, அப்படியே அவரைக் கட்டித் தழுவிக் கொண்டேன்.

கலைவாணர் கடிதம்

சென்னையிலிருந்து கலைவாணர் கிருஷ்ணன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். கே. ஆர். இராமசாமியை சிவசக்தி என்னும் படத்தில் கதாநாயகனுக நடிக்க ஏற்பாடு செ ய்திருப்பதாகவும் அவரை அனுப்புவதால் கம்பெனிக்குத் தொந்தரவு எதுவும் இல்லை யென்றால் பெரியண்ணாவிடம் கூறி அனுப்பிவைக்க வேண்டு, மென்றும் பெரியவரின் ஒப்புதல் இருந்தால் இதனுள் இருக்கும் கடிதத்தை இராமசாமியிடம் கொடுக்கலாம் என்றும் எழுதப் பெற்றிருந்தது. உள்ளே இராமசாமிக்கு ஒரு கடிதமும் இருந்தது. நான் மிகுந்த மகிழ்ச்சியோடு கடிதத்தைப் பெரியண்ணாவிடம் காட்டினேன். என். எஸ். கே. இராமசாமிக்கே நேராக எழுதாமல் எனக்குக் கடிதம் எழுதியதற்காக அவரைப் பாராட்டினார் அண்ணா. “இராமாசாமி தாராளமாகப் போய் நடிக்கட்டும்; அவன் திரைப்படத்தில் நடித்தால் நமக்குத்தானே பெருமை! எப்பொழுது தேவையோ அப்பொழுது அனுப்பலாமென்று நான் சொன்னதாகக் கிருஷ்ணனுக்கு எழுது” என்றார். அண்ணா சொன்னபடியே கலைவாணருக்கு எழுதினேன். கடித்ததையும் இராமசாமியிடம் கொடுத்தேன். இராமசாமிக்கு ஒரே மகிழ்ச்சி. அண்ணாவின் அனுமதியோடு கலைவாணருக்குக் கடிதம் எழுதினார். நாலைந்து நாட்களில் உடனே புறப்படும்படியாகக் கலைவாணரிடமிருந்து தந்தி வந்தது. அன்றிரவே இராமசாமி சென்னைக்குப் புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டது. எல்லோருடைய அன்புக்கும் பாத்திரமாக இருந்த கே. ஆர். இராமசாமி கண்கலக்கத்துடன் விடைபெற்றுச் சென்னைக்கு சென்றார்.

மயங்கி விழுந்தேன்

அப்போது மயில் ராவணன் தொடர்ச்சியாக நடந்து வந்தது. நான் அதில் இராமர் போடுவது வழக்கம். சிறிய வேடம் அது. இராமசாமி ஆஞ்சநேயராக நடிப்பார். அவர் போன அன்று நானே ஆஞ்சநேயராக நடிக்க நேர்ந்தது. அதுவரை மயில் ராவணன், இராமாயணம் ஆகிய நாடகங்களில் நான் ஆஞ்சநேயர் பாத்திரத்தை ஏற்றதே இல்லை. அதுமட்டுமல்ல; சுக்ரீவனாகவோ, வாலியாகவோ கூட நடித்ததில்லை. குரங்குகளுக்குரிய உடையை அன்றுதான் முதலாவதாகப் புனைந்தேன். ஏப்ரல் மாதம் அது. உள்ளே ஒரே புழுக்கம். ரோமம் போன்று அடுக்கடுக்காக வைத்துத் தைக்கப்பட்ட அதிகக் கனமாக உடையைப் போட்டேன். தலையில் குல்லாவையும் வைத்துக் கட்டினேன். அதன்மேல் கிரீடத்தை வைத்தேன். உடலுக்குள் காற்று புகுவதற்கு வழியே இல்லை. வியர்வை கொட்டியது. துடைக்கவும் இயலவில்லை. இரண்டு காட்சிகளில் நடித்தேன். மின்சார வெளிச்சம் மேடையில் மேலும் வெப்பத்தை உண்டாக்கியது. ஏதோ தலை சுற்றுவது போலிருந்தது. அவ்வளவுதான். மயங்கி விழுந்து விட் டேன். காரணம் எல்லோருக்கும் புரிந்தது. என் உடைகளைத் தளர்த்தி மின்விசிறியின் கீழே படுக்கவைத்தார்கள். ஐந்து நிமிடங் களுக்குப் பிறகுதான் நினைவு வந்தது. எப்படியோ ஒருவகையாக நடித்து நாடகத்தை முடித்தேன். மறுநாள் இந்தச் செய்திகளை யெல்லாம் இராமசாமிக்கு விவரமாக எழுதினேன். உன்னுடைய அருமையும் பெருமையும் இப்போது முன்னைவிட அதிகமாகப் புரிகிறது. உனக்கு அடுத்தபடியாக உன்னுடைய வேடங்களைப்புனைய தகுதியுடையவனுக இருந்த சுப்பையா கம்பெனியை விட்டு விலகு வதற்கு நீயே காரணமாக இருந்தாய். இப்போது நீயும் விலகிக் கொண்டாய். நான்தான் உன் வேடத்தைப் போட்டுக் கொண்டு அவஸ்தைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தேன். ஏறத்தாழ ஐந்து மாத காலம் பாலக்காட்டில் நாடகம் நடத்திவிட்டு ஈரோட்டுக்குப் பயணமானோம்.