எனது நாடக வாழ்க்கை/வருங்காலத் தமிழர் தலைவர்

வருங்காலத் தமிழர் தலைவர்


நாடகங்களைப்பற்றி மேலே தொடருமுன் பேரறினார் அண்ணா அவர்களோடு எனக்கேற்பட்ட பெருமைக்குரிய ஒரு தொடர்பினே இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ஆம், பாலக்காடு முகாமில் தான் இது நடந்தது. அறிஞர் அண்ணா அவர்களின் திராவிட நாடு இதழ் காஞ்சீபுரத்திலிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. குமாஸ்தாவின் பெண் அல்லது கொலைகாரியின் குறிப்புகள் என்னும் பெயரில் அண்ணாவின் முதல் நவீனம் வாரந் தோறும் அதில் வெளியாயிற்று. அதனை நாங்கள் தொடர்ச்சி யாகப் படித்து வந்தோம். அடிக்கடி நான் அண்ணாவுக்குப் பாராட்டுக் கடிதங்களும் எழுதினேன். பாலக்காடு வந்த சமயம் அந்தத் தொடர் கதை முடிவு பெற்றிருந்தது. அதனை நூல் வடி வில் வெளியிட விழைந்தார் அண்ணா. கதை நாங்கள் நடித்த நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதால் முறைப்படி அனுமதி பெற்றுக் கொள்ளுமாறு வேண்டினேன். அதன்படி அனுமதி கோரிக் கடிதம் எழுதிய அண்ணா, அத்தோடு நாவலுக்கு நானே ஒரு முன்னுரை எழுத வேண்டுமென்றும் கேட்டிருந்தார். இதனை எனக்குக் கிடைத்த பெரும் பேருகக் கருதினேன். 30. 1. 1943 இல் அண்ணாவின் முதல் நாவலுக்கு நான் எழுதிய முன்னுரை இது.

“தோழர் சி. என். அண்ணாதுரை அவர்கள் வருங்காலத் தமிழர் தலைவர். இன்று தமிழகத்தில் சிறந்த எழுத்தாளர்கள் என்று புகழப்படும் ஒரு சிலரில் தோழர் அண்ணாதுரை அவர்கள் முன்னணியில் நிற்பவர். இவரது ஆராய்ச்சி நிறைந்த ஆணித் தரமான சொற்பொழிவைக் கேட்க, கொள்கையில் வேறுபட்ட கூட்டத்தினரும் குழுமி நிற்பர். இவரது அழகிய உரைநடையை “கவிதை நடை” என்றே கூறலாம். இந்த நடைச் சித்திரத்தைக் நண்டு வியந்த தமிழறினார் பலர். இன்று தோழர் அண்ணாதுரை

அவர்களே “அடுக்குச் சொல் வீரர்” என அடைமொழி கொடுத்து அழைக்கின்றனார். இவரது எழுத்தின் வேகம் படிப்பவர் மூளையைப் பண்படுத்தி, புதைந்து கிடக்கும் பகுத்தறிவைத்துருவி எடுக்கும் தன்மை வாய்ந்தது. எந்த இலக்கியமும் மனித சமூகத்திற்குப் பயனளிக்கும் பான்மையதாய் இருக்க வேண்டுமென்பதை தோழர் சி. என். ஏ. அவர்கள் நன்றாய் அறிந்தவர். அதன்படியே தொண்டாற்றியும் வருபவர்.

இவரது உள்ளச் சோலையிலேயே பூத்த நறுமண மலர்தான் “குமாஸ்தாவின் பெண் என்ற கொலைக்காரியின் குறிப்புக்கள்.”

உயிருள்ள சித்திரம்; அறிவுக்கு விருந்து: கற்பனே ஒவிய மல்ல; இன்று நம் கண்முன் நிகழும் காட்சி.

எங்கள் நாடக குமாஸ்தாவின் பெண் ணின் பிற்பகுதியை தமது கருத்திற்கேற்பச் சிறிது மாற்றி எழுத, தோழர் சி. என். ஏ அவர்கள் விரும்பினார். ஆவலுடன் அனுமதி அளித்தோம்; தமது ‘திராவிட நாட்டில் வெளியிட்டார், படித்தோம். இவ்வரிய சித்திரத்தை வரைய எங்கள் ‘குமாஸ்தாவின் பெண்’ திரையாக இருந்தது என்பதை யெண்ணும் போது உண்மையிலேயே பெருமையடைகிறோம்.

தமது உள்ளத்தில் குமுறிக் கொண்டிருக்கும் உணர்ச்சிப் பெருக்கின, தோழர் அண்ணாதுரை அணை போட்டுத் தடுத்து, சந்தர்ப்பம் நேரும் போதெல்லாம் வாரியிறைத்திருக்கிறார் கதையில் —

"கன்னியாக இருக்கையில் காதல் கொண்டு, அது கணியாததால் வெம்பிய வாழ்வு பெற்று, விதவையாகி விபசார வாழ்க்கையிலே ஆனந்தம் பெற, ஆசை நாயகனைப் பெற்று, அவனது துரோகத்தால் துயருற்று அவனேக் கொன்ற காந்தாவின் கதை இதுவே”

என்று தோழர் அண்ணாதுரையே இக்கதைச் சுருக்கத்தை, அழகாகக் கூறி முடிக்கிறார். வெறும் கதையை ரசித்தால் போதாது. அதனுள் பொதிந்து கிடக்கும் உண்மையை உணர வேண்டும்.

கதாபாத்திரங்களின் மனோ நிகழ்ச்சிகளைச் சித்தரிப்பதில் தோழர் சி. என். ஏ. எவ்வளவு திறன் படைத்துள்ளார் என்பதை

காந்தா நெ. 1-க்கும் காந்தா நெ. 2-க்கும் நடக்கும் தீவிரப் போராட்டத்தின் மூலம் அறிந்து கொள்ளாலம். பன்முறை. படித்துச் சுவைக்க வேண்டிய கட்டம் இது. கதையின் ஜீவநாடி.

விதவை நிலையடைந்த காந்தாவின் உள்ளம் எப்படியிருக்கிறது பாருங்கள்!

“நான் விதவையானேன்; சகுனத் தடையானேன்; சமுதாயத்தின் சனியனனேன்; என் இளமையும் எழிலும் போகவில்லை; கண்ணாெளி போகவில்லை; நான் அபலையானேன்; அழகியாகத் தானிருந்தேன்; தாலி யிழந்தேன்; ஆனால் காய்ந்த தளிர் போலிருந்தேனேயன்றி சருகாக இல்லை... வாடாத பூவாக இருந்தேன். ஆனால் விஷவாடையுள்ள மலரென்று உலகம் என்னைக் கருதிற்று. அது என்னுடைய குற்றமா?... எங்கள் ஏழ்மை யைக் கண்டு உதவி செய்ய முன்வர யாருமில்லை; எனக்குத் தக்கவனத் தேடித்தர ஒருவரும் வரவில்லை; என் வாழ்வு கொள்ளை போவதைத் தடுக்க யாரும் வர வில்லை. எல்லாம் முடிந்து நான் விதவையானதும், என் விதவைத் தன்மை கெட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ளும்படி செய்ய, உபதேசிக்க, உற்றார் வந்தனார். அவர்களுக்கிருந்த கவலை எல்லாம் குலப்பெருமைக்குப் பங்கம் வரக்கூடாதென்பது தான். என்னைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. எனக்கு வீடே ஜெயில்; அப்பா அம்மாவே காவலாளிகள், உறவினார் போலீஸ்; ஊரார் தண்டனை தரும் நீதிபதிகள். இது உலகம் எனக்குண்டாக்கி வைத்த ஏற்பாடு; இதற்காகவா நான் பிறந்தேன்?”

என்று கேட்கிறாள் காந்தா. இது கதையில் காந்தா சொல்வதல்ல. கோடிக்கணக்கான இளம் விதவையர் உள்ளத்திலிருந்து எழும் கூக்குரல்.

பக்கம் பக்கமாக எழுதிப் படிப்பவர்களுக்கு அலுப்பை உண்டாக்காமல் விஷயத்தைச் சுருக்கி இனிய நடையில் தோழர் சி. என். ஏ. அவர்கள் சொல்லும் எழிலைப் பாருங்கள்!

“அவரிடம் (கிழவரிடம்) பணம் இருந்தது. ஏழ்மையில் நெளிந்துகொண்டு நானிருந்தேன். கிடாபோல்

வளர்ந்தவளை எவனுக்காவது பிடித்துக் கட்டி வைக்காமலிருக்கலாமோ வென்று கேட்க ஊரிலே பல பித்தர்களிருந்தனார்; எத்தகைய பொருத்தமும் தட்சணை தந்தால் சரியாக இருக்கின்றதெனக் கூறும் சோதிடர் சிலர் இருந்தனார். உலகில் எது இல்லை? பளபளப்பான தோலைப் போர்த்துக் கொண்டிருக்கும் பாம்பு இல்லையா? எப்படியோ ஒன்று என் கழுத்தில் தாலி ஏறிற்று”

கசப்பு மருந்தைக் கனியுடன் கலந்து கொடுப்பது போல் நகைச் சுவையுடன் நல்லுணர்ச்சி யூட்டுவது தோழர் அண்ணாதுரையின் தனிப் பண்பு. கீழ்வரும் வாக்கியங்களைப் படித்துப் பாருங்கள்.

“சீதாவுக்கு ராமு என்ற ஒருவன் மேல் ஆசை; அவனுக்கோ கோயில், குளம், பூஜை, புத்தகம் முதலியவற்றிலே ஆசை; அவளையும் கல்யாணம் செய்து கொண்டு அவன் கோயிலுக்குப் போவதை எந்தக் கடவுள் வேண்டாமென்று கூறிவிடுமோ தெரியவில்லை!...... எந்தக் கோயிலிலும் தேவியிருக்க, நாம் ஏன் கல்யாணம் வேண்டா மென்று சொல்ல வேண்டுமென்று ராமு யோசிக்கவில்லை.”

என்கிறார் தோழர்.

காந்தாவின் மீது ராமு கடைக்கண் செலுத்தவில்லையாம்: இதைக் காந்தா உதாரணத்துடன்,

“அவரோ பக்தர்களின் பாடலைக் கேட்டுக் கேட்டு மெளனமாக இருக்கும் பழக்கம் கொண்ட தேவன்போல் என் கண்களின் வேண்டுகோளைக் கண்டு, அசையா உள்ளங் கொண்டவராகவே யிருந்தார்”

என்று அழகாய்க் கூறுகிறாள்.

நினைத்ததைக் கொடுக்கும் ‘கற்பகவிருட்சம்’ ‘காமதேனு’ என்பன போன்ற நைந்துபோன பழைய உதாரணங்களுக்கு, அண்ணாதுரையின் கற்பனையில் எழுந்த புதிய உதாரணம்,

மிராசுதாரர் அவளுக்கு ‘அலாவுதீனின் தீபமானார்’ என்பது இலக்கியச் சுவைக்கு ஒர் எடுத்துக் காட்டு.
“நான் தொட்டு விளையாட முடியாத பருவம் என் கிட்ட வரமுடியாத வயது ... அவன் என்ன செய்தான் தெரியுமோ? யாரது புதிதாக இருக்கிறதே என்று நான் பார்த்தேனே இல்லையோ, ஒரே தாவாகத் தாவி என் நெஞ்சிலே புகுந்து கொண்டான். அந்த உருவம் எதிர் வீட்டு வாசற்படியண்டைத் தானிருந்தது; ஆனால் நெஞ்சிலே சித்திரம் பதித்து விட்டது.”

இந்தச் சொற்றொடரை “வசன கவிதை” என்று ஏன் கூறக் கூடாது?

வாசகத் தோழர்கள் மேற்போக்காகக் கதையைக் படிக்கக் கூடாதென்பதற்காகச் சிலவற்றை எடுத்துக் கூறினேன். காகித விலையேற்றம் கையைப் பிடித்து நிறுத்துகிறது. கடைசியாக தான் கூறுவது ஒன்றே. எழுதியவர் பால் கொள்கை காரணமாகவோ, தனிப்பட்ட முறையிலே விரும்பு வெறுப்புகளிருந்தால் அவற்றையெல்லாம் ஒரு புறம் மூட்டை கட்டி வைத்து விட்டுப் படிக்கத் தொடங்குங்கள் - இது போன்ற பல கதைகளைத் தமிழருக்களிக்குமாறு மனமார வாழ்த்துங்கள்”

நான் இந்த முன்னுரையினை எழுதிய அந்தநாளில் அண்ணாவுக்கு அறிஞர் என்ற அடைமொழி இல்லை. அவர் நாடகாசிரியராகவும் வரவில்லை. நடிகராகவும் மேடையேறவில்லை. எழுச்சி மிக்க தலையங்கங்களையும் சில திறனாய்வுக் கலைக் கட்டுரைகளையும் தவிர அதிகமான கட்டுரைகளோ கதைகளோகூட எனக்குத் தெரிந்தவரையில் எழுதாத காலம் அது. இந் நிலையில் அவரை வருங்காலத் தமிழர் தலைவர் என்று எழுதினேன் நான். எப்படி எழுதினேன்? ஏன் எழுதினேன்? நானா எழுதினேன்? இல்லை. இல்லை. இறைவன் என்னை எழுத வைத்தான். ஆம், அதுவே உண்மை. தெய்வ வாக்குப் பலித்தது!