எனது நாடக வாழ்க்கை/என் திருமணம்



என் திருமணம்

8- 4- 41இல் மதுரையில் ‘இராமாயணம்’ நாடகம் தொடங்கினோம். அடுத்துக் குமாஸ்தாவின் பெண் தொடர்ந்து நடைபெற்றது. நாடகம் தொடர்ந்து நடைபெறும் சமயத்திலேயே மதுரை சென்ட்ரல் டாக்கீசில் குமாஸ்தாவின் பெண்படமும் திரையிடப்பட்டது. நாடகம், படம் இரண்டுக்கும் நல்ல பெயரும் புகழும் கிடைத்தன.

எங்கள் மனப்படி படம் சிறப்பாக வெளிவரவில்லை, என்றாலும் தமிழ் மக்களின் பாராட்டுக்குறித்தான படமாக இருந்தது. தமிழகத்தின் சிறந்த பத்திரிக்கைகளெல்லாம் படத்தைப் பாராட்டி எங்களுக்கு நல்வாழ்த்துக் கூறின. அறிஞர் அண்ணாவும் விடுதலையில் ஒருஅருமையான மதிப்புரை எழுதியிருந்தார் “நல்ல ஸ்டூடியோவும் திறமையான டைரக் ஷனும் இருந் திருந்தால் ‘குமாஸ்தாவின் பெண்’ இந்தியாவின் சிறந்த படங்களில் ஒன்றாக விளங்கியிருக்கும்” என்று பம்பாயின் பிரபல ஆங்கிலப் பத்திரிக்கையான ‘பிலிம் இந்தியா’ விமர்சனம் எழுதியிருந்தது. பாராட்டுக்கு முக்கிய காரணம் கதையமைப்புத்தான் குமாஸ்தாவின் பெண் படத்தினால் கம்பெனிக்குத் தமிழ்நாட்டில் நல்ல விளம்பரம் கிடைத்தது. எங்கள் உழைப்புக்குக் கிடைத்த லாபம் அதுதான் என எண்ணி மன நிறைவு பெற்றோம்.

புராணப் படங்கள் ஒரளவு தோல்வியடைந்தாலும் போட்ட பணத்திற்கு மோசமில்லை. சமூகப் படங்கள் அப்படி யல்ல; பெரும் வெற்றி பெற்றால்தான் சிறிதாவது லாபம் கிடைக்கும். இதுதான் அன்றைய நிலை. இனி, எவருடைய கூட்டுறவுமின்றிப் படம் பிடிக்க முடிந்தால் அதில் ஈடுபடுவது;

எ. நா-24

இல்லையேல் இந்தப் படத்துறையே நமக்கு வேண்டாம் என்று எண்ணினோம். படமும் நாடகமும் ஒரே சமயத்தில்பல வாரங்கள் மதுரையில் ஓடியதால் எங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை. நல்ல காலம் பிறந்ததாகவே கருதினோம். வெற்றிக் களிப்பில் வருவாய் முழுதும் செலவிட்டுச் சிவலீலாவுக்குப் புதிய காட்சிகள் தாயாரித்தோம்.

இனிக்கும் இராமாயணம்

சிவலீலாவைத் தயாரிக்க உதவியாக ஸ்ரீகிருஷ்ணலீலா தொடர்ந்து 50 நாட்கள் நடைபெற்றது. சம்பூர்ண ராமாயணமும் தொடர்ச்சியாக நடந்தது. அது இரவு 9 மணிக்குத் தொடங்கி மறுநாள் விடிய 6 மணிவரை நடைபெறும் நாடக மாதலால் இடையே ஒரு நாள் ஒய்வு விட்டு மறுநாள் நடை பெற்றது. இராமாயணத்திற்கு மதுரையில் ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கான மக்கள் இடமின்றித் திரும்பிச் சென்றனார். அன்று நடைபெற்ற இலக்கியச் சுவையும் இசைச் சுவையும் நிரம்பிய இராமாயணத்தை இன்று நினைத்தாலும் உள்ளமெல்லாம் இனிக்கிறது! நடிகர்களின் பட்டியலைப் பாருங்கள். கலைஞர் ஏ. பி. நாகராஜன் சீதை, கலைமாமணி எம். எஸ் திரெளபதி மாயா சூர்பநகை; சங்கீதமேதை சங்கரநாராயணன் தசரதர்; பிரண்டு ராமசாமி விசுவாமித்திரர்; நடிகமணி டி. வி. நாராயணசாமி இலட்சுமணன்; தம்பி பகவதி இராவணன், நடிப்பிசைப் புலவர் கே. ஆர். இராமசாமி அனுமார் இராமர் நான், நகைச்சுவைச் செல்வன் டி. என். சிவதாணு தொடக்க முதல் இறுதிவரை பல நகைச்சுவை வேடங்கள். திருவாரூர் சீனிவாசன் பரதன். இவருடைய பரதன் நடிப்பைக் கண்டு தோழர் ஜீவானந்தமும் அறிஞர் அண்ணாவுமே கண்ணீர் விட்டிருக்கிறார்களென்றால் இவர் நடிப்பின் சிறப்புக்கு வேறென்ன நற்சான்று வேண்டும்?

திருமண ஏற்பாடுகள்

சிவலீலா தொடங்குமுன் எனக்குத் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. நாகர் கோவிலிலும் திருவனந்தபுரத்திலும் என் ஒன்றுவிட்ட அண்ணா திரவியம் பிள்ளையுடன் சென்று முன்பே நாலைந்து பெண்களைப் பார்த்தேன். அவர்களில் எவரும் என் மனதுக்குப் பிடிக்கவில்லை. இப்போது புதிய நாடகத்தயாரிப்பில், தீவிரமாக ஈடுபட்டிருக்கும் இந்த நேரத்தில் நான் திருமணம் செய்து கொள்ள உண்மையில் விரும்பவில்லை. என்றாலும் பெரி யண்ணா விருப்பத்தை மறுக்காது ஒப்புக் கொண்டேன். சேலத்திலுள்ள எங்கள் நண்பர் திரு பஞ்சகதம் செட்டியார் சேலம் செவ்வாய் பேட்டையில் ஒரு பெண் இருப்பதாகவும், அவள் எனக்குப் பொருத்தமான பெண் என்றும் பெரியண்ணாவிடம் சொன்னதாக அறிந்தேன். சேலம் பெண்ணைப் பார்த்து வருவதற்காகத் தான் பெரியண்ணா என் ஒப்புதலை அறிய விரும்பினார் என்பது புரிந்தது. நான் இசைவு தெரிவித்ததும் பெரியண்ணா சேலம் போய் பெண் பார்த்துவர முடிவு செய்தார். அண்ணாவின் விருப்பற்திற்கு இணங்கினேன் என்றாலும் வடமொழி மந்திரங்கள் சொல்லாமல் தமிழ்த் திருமண முறையிலேயே எனக்குச் சடங்குகள் நடைபெற வேண்டும் என்பதை வற்புறுத்தினேன். இதைப் பெரியண்ணாவிடம் நேராகச் சொல்ல எனக்குத் துணிவு வரவில்லை. அண்ணா திரவியம் பிள்ளையவர்களிடம் அழுத்தமாகச் சொன்னேன். “அதற்கென்ன, அப்படியே செய்யலாம்” என்றார் அவர். நான் சேலம் மாப்பிள்ளையாக வேண்டும் என்பதில் மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டார் எங்கள் பஞ்சநதம் செட்டியார்.

புதுமனை புகு விழா

நாகர்கோவிலில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் மதுர பவனம் புதுமனை புகுவிழா 9-7-41இல் மிகச் சிறப்பாக நடை பெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக நானும் கே. ஆர். இராமசாமியும் சென்றிருந்தோம். என். எஸ். கே.யின் விருப்பத்திற்கிணங்க மேலும் ஒருநாள் அவர் இல்லத்தில் தங்கினோம். மதுர பவனம் திறப்பு விழா நடைபெற்ற அதே தேதியில் சேலம் செவ்வாய்ப் பேட்டையில் பெரியண்ணா எனக்குப் பெண் பார்த்ததாக அறிந்தேன். 11-7-41 இல் நானும் சகோதரர் இராமசாமியும் பாளையங்கோட்டை வந்து தங்கை காமாட்சி வீட்டில் தங்கினோம். என்னை உடனே அவசரமாகப் புறப்பட்டு வரும்படி மதுரையிலிருந்து சின்னண்ணா தந்தி கொடுத்திருந்தார். மறுநாட் காலை நானும் இராமசாமியும் மதுரை வந்து சேர்ந்தோம். சேலத்தி லிருந்து பெரியண்ணா எனக்கொரு கடிதம் எழுதியிருந்தார். பெண்ணைப் பார்த்ததாகவும், நானும் வந்து பார்த்தால் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார். சேலம் பஞ்சநதம் செட்டியார் வீட்டில் தங்கியிருப்பதாகவும் கடிதத்தில் கண்டிருந்தது. நான் உடனே என் திருமணம் தமிழ் மண முறை யில் நடை பெறவேண்டும் என்பதை வற்புறுத்தி, அதற்கான காரணங்களையும் விளக்கிப் பெரியண்ணாவுக்கு நீண்ட கடிதம் எழுதி அவசரத் தபாலில் போட்டேன். சின்னண்ணா விரும்பியபடி அன்றிரவே நானும் எங்கள் நண்பர் எம். கே. கிட்டுராஜூவும் பெண் பார்த்து வரச் சேலம் புறப்பட்டோம்.

தமிழ்த் திருமணம்

மறுநாள் சேலம் வந்து சக்தி பிலிம்ஸ் நிர்வாகி நண்பர் சீனிவாசன் இல்லத்தில் தங்கினேன். நான் சேலம் வருவதற்குள் பெரியண்ணா மதுரைக்குப் புறப்பட்டு விட்டார். முதல்நாள் நான் பெரியண்ணாவுக்கு அனுப்பிய அவசரக் கடிதம் பஞ்சநதம் செட்டியார் வீட்டுக்குச் சென்றபோது கிடைத்தது. அதை வாங்கி மீண்டும் ஒருமுறை படித்தேன். இந்தக் கடிதத்தைப் பார்த்தால் பெரியண்ணாவின் மனம் ஏதேனும் புண்படுமோ என்ற ஐயம் தோன்றியது. உடனே கடிதத்தைக் கிழித்தெறிந்து விட்டேன். பெண் வீட்டார் சார்பில் சில நண்பர்கள் வந்திருந்தார்கள். “தமிழ்த் திருமண முறையில் சடங்குகள் நடப்பதற்கு பெண் வீட்டார் சம்மதிப்பார்களா?” என்று கேட்டேன். அவர்களில் எனக்கு மிகவும் நெருங்கிய பிராமண நண்பர் ஒருவர், “ஏன் வட மொழிமீது உங்களுக்கு வெறுப்பா?” என்று கேட்டார். நான் மிகுந்த அடக்கத்தோடு, வடமொழியாகிய சமஸ்கிருதத்தின் மீது எனக்குச் சிறிதும் துவேஷம் இல்லை. ஆனால் நான் தமிழன். என் திருமணம் என்னுடைய தாய்மொழியாகிய தமிழில் தேவாரத் திருமுறைகளை ஓதி நடைபெறவேண்டும். இதுவே என் கொள்கை என்றேன். பிறகு நண்பர் சிரித்துக்கொண்டே, “அதெல்லாம் உங்கள் விருப்பம்போல் நடக்கும். பெண்வீட்டார் தடையொன்றும் சொல்லமாட்டார்கள்” என்றார்.

மைத்துணியின் வரவேற்பு

14-ஆம் தேதி முற்பகல் பெண் வீட்டிற்குச் சென்றேன் பெண்ணுக்குத் தந்தையார் இல்லை. தாயும், தாயோடு பிறந்த, மாமனும் இருந்தார்கள். பெண்ணின் உடன் பிறந்தவர்களான ஒரு சகோதரனும் இரு சகோதரிகளும் என்னை வரவேற்றார்கள். பெண்ணின் தங்கை சரஸ்வதி ஒரு தூண் அருகில் நின்று கொண்டு புன்னகையோடு என்னை கும்பிட்டாள். அவளுடைய அழகிய தோற்றத்தையும் வசீகரத்தோடு என்னை வணங்கி நின்ற பாங்கினேயும் பார்த்து நான் முதலில் இவள்தான் பெண் என்று நினைத்துக் கொண்டேன். என்னுடன் வந்த நண்பர் இவள் பெண்ணின் தங்கை சரஸ்வதி. பெண் இன்னும் சிவப்பாகவும் அழகாகவும் இருப்பாள்” என்று காதில் ஒதினார். உடனே பெண்ணின் தங்கை சரசு “அக்கா உள்ளே இருக்கிறாள். வெளியே வரக் கூச்சப்படுகிறாள். நீங்கள் உள்ளே போய்ப் பார்க்கலாம்” என்றாள். அவளை எனக்கு நிரம்பவும் பிடித்தது. நான் உடனே “உன்னைப் பார்த்ததே போதும். அக்கா உன்னை விடஅழகு என்று நண்பர்சொல்லுகிறார். உள்ளேபோய் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை” என்று சொல்லிவிட்டு எழுந்தேன். உடனே அவள் பதற்றத்தோடு, “இருங்கள், காப்பி சாப்பிட்டு விட்டுப் போகலாம்” என்று உள்ளே ஓடினள். உள்ளிருந்து சிரிப்பொலிகேட்டது. அருகில் இருந்த என் நண்பர் “பெண்தான் சிரிக்கிறாள்” என்று மெதுவாகச் சொன்னார். நானும் சிரித்தேன், சிற்றுண்டி பரிமாறப் பட்டது. விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டோம். மறுநாள் மதுரை வந்து சேர்ந்தேன். பெண்ணின் தமையனும் பெரியண்ணாவுடன் பேசுவதற்காக என்னோடு மதுரைக்கு வந்தார்.

திருமணம் நடந்தது

16-ஆம்தேதியன்று திருமணம் உறுதிசெய்ப்பட்டது. பிறகு ஏற்பாடுகள் விரைவாக நடந்தன. 20ஆம் தேதி காலை சேலம் செவ்வாய்பேட்டையிலுள்ள பெண்வீட்டில் நிச்சயதார்த்தம் நடை பெற்றது. பெரியண்ணா, சின்னண்ணா தம்பதிகள், தங்கைகாமாட்சி அண்ணா திரவியம்பிள்ளை முதலியோர் இதில் கலந்து கொண்டார்கள். அவர்கள் சேலத்திலிருந்து திரும்பியதும் கம்பெனி மானேஜர் திரு ஆர். கே. மூர்த்தி என்னிடம் வந்து தமிழ்த் திருமணம் நடத்த எல்லோரும் இசைந்துவிட்டதாகக்கூறினார். ஆனால் உண்மையில் நான் எண்ணியபடி நடைபெறவில்லை. திருமணத்திற்கு இரண்டு நாட்களின் முன்பே புரோகித முறைப்படி தான் திருமணம் நடைபெறும் என்ற செய்தியினை நான் அறிந்தேன். என் வேண்டுகோளை யாருமே பெரியண்ணா காதில் போடவில்லை என்ற உண்மை அப்போதுதான் எனக்குத்தெரிந்தது. அவரிடம் இதைச் சொல்ல அஞ்சி அனைவரும் மெளனம் சாதித்து விட்டார்கள் என்பது புரிந்தது. நானும் பெரியண்ணாவின் மனம் புண்படும்படி எதுவும் நடந்து விடக்கூடாது என்று கட்டப்பாட்டுக்கு அடங்கினேன். புரோகித மறுப்புப் பெரிதா? சகோதரப்பாசம் பெரிதா? என்ற மனப் போராட்டத்தில் சகோதர பாசமே தலைதுாக்கி நின்றது; வென்றது!

4-7-1941 இல் மதுரை இராமநாதபுரம் சேதுபதி மன்னார் மாளிகையில் சேலம் செவ்வாய்பேட்டை செல்வி மா. மீனாட்சிக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. ஆம்! புரோகித முறைப்படி வட மொழியில் மந்திரங்கள் ஒதித்தான் மாங்கல்யம் சூட்டினேன். என் அன்புக்கும் பெருமதிப்புக்குமுரிய நாதசுர வித்வான் குளிக்கரை திரு. பிச்சையப்பா அவர்கள் குழுவினார் நாதசுர இன்னிசை பொழிந்தார்கள். வேய்ங்குழல் மாமன்னார் டி. ஆர். மகாலிங்கம் அவர்களின் புல்லாங்குழல் கச்சேரி மாலையில் விமரிசையாக நடந்தது.

ஏற்கனவே மனஸ்தாபம் காரணமாக விலகியிருத்த மாமா திரு. செல்லம்பிள்ளை என் விருப்பத்திற்கிணங்க திருமணத்திற்கு வந்திருந்து, வாழ்த்தினார். காரைக்குடியியில் ஏற்பட்ட சம்பவத்தினால் கம்பெனிக்கு வராதிருந்த கலைவாணர் என். எஸ் கிருஷ்ணனும் தம் மனைவி மதுரம் அம்மையாரோடு வந்து கலந்து கொண்டார். கருத்து வேற்றுமையால் பிரிந்திருந்த இவர்களெல்லாம் மீண்டும் ஒற்றுமையுணர்வோடு வந்து உறவாடிக் களிக்க என் திருமணம் காரணமாக இருந்தது குறித்து நான் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தேன். திருமணத்தையொட்டி சேலம் சென்று, மறுவீடு மற்றும் சடங்குகள் எல்லாம் முடித்து, மதுரைக்குத் திரும்பி, புதிய நாடக வேலைகளில் ஈடுபட்டேன்.