எனது நாடக வாழ்க்கை/குமாஸ்தாவின் பெண் படம்

குமாஸ்தாவின் பெண் படம்!


குமாஸ்தாவின் பெண் படப் பிடிப்பு 31-7.40இல் கோவை பிரிமியர் சினிட்டோனில் தொடங்கப் பெற்றது. மறு நாள் கோவை ராஜா தியேட்டரில் நாடகமும் ஆரம்பமாயிற்று. அடுத்து, குமாஸ்தாவின் பெண் நாடகத்தை, நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் தலைமையில் தொடங்கினோம்” நாடகத்தைப் பாராட்டிய அவர் படமும் வெற்றி பெற வேண்டு மென்று வாழ்த்தினார்.

எங்கள் குமாஸ்தாவின் பெண் படப் பிடிப்பைப் பற்றிச் சொல்வதென்றால் அது ஒரு மகாபாரதமாகும். கதை, சீனரியோ டைரக்ஷன்,நடிகர்கள், பின்னணி, இசை இவையெல்லாம்.எங்கள் பொறுப்பு. ஸ்டுடியோ நிருவாகம் மூர்த்தி பிலிம்ஸைச்சேர்ந்தது. பெண் நடிகையர் எம். வி. இராஜம்மா, டி. எஸ். இராஜலட்சுமி, சகுந்தலா, இரண்டொருவரைத் தவிர எம். எஸ். திரெளபதி உட்பட எங்கள் நடிகர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்களாதலால் ஒத்திகை முதலிய வகைகளில் தகராறு வராது; கோவையில் மூன்று மாத காலம் நாடகம் ஆடிக்கொண்டே படப்பிடிப்பையும் முடித்து விடலாம் என்பது எங்கள் திட்டம். ஆனால் நடந்தது வேறு. படப்பிடிப்பு நடந்த பிரிமியர்சினிடோன் ஸ்டுடியோவின் அன்றைய நிலை நைந்து போன பழைய வேட்டியைப் போன்றது தொட்ட இடமெல்லாம் கிழியும். ஒரு புறம் தைத்தால் மறுபுறம் பிய்த்துக் கொள்ளும், அப்பப்பா! எவ்வளவு தகராறுகள்! எத்தனை மனஸ்தாபங்கள் !! ஸ்டுடியோ தொழிலாளர்களின் திடீர் வேலை நிறுத்தங்கள்; எடுத்த பிலிம் சுருணையை அடிக்கடி கழுவுவதற்கு ‘ஐஸ்’ இல்லாத தொல்லை; வெளிக் காட்சிகளைப் படமெடுக்க அடிக்கடி சவுண்ட் ட்ரக்” வெளி வர முடியாத நிலைமை. டெலி போன்’ இருந்தும் பேச முடியாத பரிதாபம். இப்படி எத்தனே, எத்தனையோ தொல்லைகள்!

ஒய்வின்றி உழைத்தோம்

‘ரீ டேக்’ எடுக்காத படமென்றுதான் எங்கள் படத்தைச் சொல்ல வேண்டும். ஏன் தெரியுமா? எடுத்த படத்தை உடனே போட்டுப்பார்க்க வசதியில்லை. ஒருவகையாய் சரிப்படுத்தி ‘ரஷ் பிரின்ட்’ போட்டுப் பார்க்க முயல்வோம். அதற்குள் ‘செட்டிங்’ மாறிவிடும். இதனால் அவசியம் என்று கருதப்பட்ட கட்டங்களைக் கூட மறுமுறை எடுக்கவில்லை. எப்படியாவது மானம் போகாமல் படம் முடிந்தால் போதும் என்ற நிலையிலேயே படத்தை முடித். தோம். எங்கள் மூன்று மாதத் திட்டத்தில் படம் முடியவில்லை. கோவை முடிந்து கள்ளிக்கோட்டை, பாலக்காடு ஆகிய ஊர்களில் நாடகத்திலும், படத்திலுமாக ஒய்வின்றி உழைத்தோம். அவ்வாறு உழைப்பதிலேயே இன்பம் கண்டோம், நாங்கள் நடிகர்களாக இருந்தமையால்தான் படம் முடிந்தது என்று சொல்லலாம். பட அதிபர்களுக்கு மட்டும் எங்கள் நிலை ஏற்பட்டிருந்தால் படப்பிடிப்பை விட்டுவிட்டு ஓடியிருக்க வேண்டியதுதான். இது தற்புகழ்ச்சியல்ல. உண்மை.

இயக்குநர் கே. வி. சீனிவாசன்

குமாஸ்தாவின் பெண்படம் எடுப்பதற்கு சீனரியோ தயாரித்ததோடு அஸோஸியேட் டைரக்டராகவும் இருந்துபடத்தை முடிப்பதற்கும் பெருந்துணையாக இருந்தவர் கே.வி.சீனிவாசன், இவர் எங்கள் கம்பெனியின் பழைய நடிகர் என்பதை முன்பே கூறியிருக்கிறேன். படம் நல்லமுறையில் வெளிவர இதயபூர்வமாக உழைத்தவர்களில் இன்று பிரபல டைரக்டர்களாக விளங்கிக் கொண்டிருக்கும் கிருஷ்ணன்-பஞ்சு இவ்விருவரையும் குறிப்பிட வேண்டும். பஞ்சு படத்திற்கு எடிட்டராகவும் கிருஷ்ணன் ‘லேபரட்ரியின்’ முதல்வராகவும் இருந்து அவ்வப் போது எங்களுக்கு அரிய யோசனைகளைக் கூறி ஒத்துழைத்தார்கள். நடிகர்கள் அனைவரும் தங்கள் சொந்தப்படம் என்ற உணர்விலேயே நடித்தனர்.

பூலோக ரம்பை படப்பிடிப்பு முடிவு பெறாத நிலையிலேயே குமாஸ்தாவின் பெண் படப்பிடிப்பு வேலையும் தொடங்கியதால் இருபடங்களிலும், அத்துடன் நாடகங்களிலும் நடிக்கவேண்டிய, நெருக்கடி எனக்கு ஏற்பட்டது.

உதட்டுக்கோபமும், உள்ளத் தூய்மையும்

ஒருநாள் பூலோகரம்பை படப்பிடிப்பின்போது சென்ட்ரல் ஸ்டுடியோவில் கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன்; அப்போது குமாஸ்தாவின் பெண்ணில் நடிக்கத் தம்மை அழைக்காதது பற்றி அவர் மிகுந்த வேதனைப்பட்டார். “மேனகா, பாலாமணி படங்களில் நானும் நடிக்க வேண்டுமென்று நீங்களே பட அதிபர்களை வற்புறுத்தி அழைத்தீர்கள். சொந்தப் படம் எடுக்கும் இப்போது மட்டும் என்னை அழைக்காதது ஏன்?” என்று கேட்டார். நியாயமான கேள்விதான். இதற்கு நான் எப்படிப் பதில் அளிக்க முடியும்? ஒரு முறை குமாஸ்தாவின் பெண் படப் பிடிப்புக்கு அவர் வந்தால் பெரியண்ணாவோடு ஏற்கனவே ஏற்பட்டிருந்த மனத் தாங்கல் தீருமென எண்ணினேன். வரும்படியாக வற்புறுத்தி அழைத்தேன். என் அழைப்பை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, கொஞ்சம் கோபத்தோடு பேசினார். “குமாஸ்தாவின் பெண் படக் கதைதானே உங்களுக்குச் சொந்தமானது. அதிலுள்ள டைரக்டரின் நகைச்சுவைக் காட்சியை வேறு யார் எடுத்தாலும் உங்களால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார்.

“ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்?” என்றேன் நான்.

“அந்தக் காட்சியை நானே உங்கள் படம் வருவதற்குமுன் எடுத்து வெளியிடப் போகிறேன்” என்றார்.

அவருடைய இந்தப் பதில் எனக்குச் சிறிது வேதனையைத் தந்தது என்றாலும் நான் எதுவும் பேசாமல் மெளனமாக இருந்தேன். அவரே மேலும் பேசினார். “கண்டிப்பாக டைரக்டரின் நகைச்சுவைக் காட்சியை நான் எடுக்கத்தான் போகிறேன்"

என்று மீண்டும் அழுத்தமாகக் கூறினார். தொடர்ந்து நான் பூலோகரம்பை படப்பிடிப்பில் கலந்துகொண்ட போதெல்லாம் இதை நினைவுப் படுத்திக் கொண்டே இருந்தார். எனக்கு அச்ச மாகத்தான் இருந்தது. ஒரு நாள் நான் சின்னண்ணாவிடம் கலைவாணர் கூறியதைத் தெரிவித்தேன். உடனே அவர் சிரித்துக் கொண்டு, “நம்மைப் பாதிக்கும் வகையில் என். எஸ் கிருஷ்ணன் எதையும் செய்வானென்று நான் நினைக்கவில்லை. நாம் படத் திற்குக் கூப்பிடவில்லையே என்ற கோபத்தில் ஏதோ பேசலாம்; இதெல்லாம் உரிமையோடு வரும் கோபம் ஆனால் நம்மைப் பொறுத்தவரை தவறான காரியம் எதுவும் நடைபெறாது’ என்றார். அவர் சொன்னபடியேதான் நடந்தது. இறுதிவரையில் கலைவாணர் உதட்டளவில் கோபத்தை வைத்துக் கொண்டிருந்தாரே தவிர அவரது உள்ளம் துய்மையாகதான் இருந்தது என்பதைப் பின்னால் உணர்ந்தேன்.

பாலக்காடு முகாமில் குமாஸ்தாவின் பெண் ‘அவுட்டோர்’ காட்சிகள், பெரும்பாலும் கல்பாத்தி ஆற்றிலும், பாலக்காட்டைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் எடுக்கப்பட்டன. பூலோக ரம்பை படப்பிடிப்பு முடிந்து விட்டது. குமாஸ்தாவின் பெண்ணில் சில சில்லரைக் காட்சிகளே எடுக்க வேண்டியிருந்தன. டைரக்டர் பி. என். ராவ் இருபடங்களையும் இயக்கி வந்ததால் இயன்றவரை முழுமையாக ஒத்துழைத்தார்.

இந்து முஸ்லீம் கலவரம்

படப் பிடிப்பு வேலைகள் முடிந்து விட்டதால் கம்பெனி மதுரைக்குச் சென்றது. நான் குழுவினரை வழியனுப்பிவிட்டு கோவை சென்றேன். எனக்கு மட்டும் இரண்டொரு நாள் படப்பிடிப்பு இருந்தது. குழுவினர் மதுரைக்குச் சென்ற மூன்றாம் நாள், மதுரையில் பலத்த இந்து முஸ்லீம் கலவரம் நடப்பதாகப் பத்திரிக்கையில் படித்தேன், பெரியண்ணாவின் கடிதமும் வந்தது. மதுரையில் கலவரம் நடப்பதால் நாடகம் சினிமா முதலிய கேளிக்கைகளை யெல்லாம் தடை செய்திருப்பதாகவும் ஒரு மாத காலம் இராஜபாளையத்தில் நாடகம் நடத்த முடிவு செய்திருப்பதாகவும் எழுதியிருந்தார். என் மனம் கவலைப்பட்டது. வட

நாட்டில்தான் இப்படியுள்ள கலவரங்கள் அடிக்கடி ஏற்படுவது வழக்கம். இந்துக்களும் முஸ்லீம்களும் அண்ணன் தம்பிகள்போல் வாழும்தமிழ்நாட்டிலும் இப்படியொருநினைவு ஏற்பட்டுவிட்டதே என்று மிகவும் வருந்தினேன். கம்பெனியைப் பொறுத்தவரை இது எதிர்பாராத நஷ்டத்தையே அளித்தது.

நாலேந்து நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டு இராஜபாளையம் வந்து சேர்ந்தேன். இராஜபாளையத்தில் சற்றும் எதிர் பாராத வகையில் முதல் நாடகம் இராமாயணத்துக்கு நல்லவசூலாயிற்று. தொடர்ந்து குமாஸ்தாவின்பெண் நாடகம் நடந்தது. அதற்கும் சிறந்த வரவேற்பு.

இராஜபாளையம் நல்ல ரசிகர்கள் நிறைந்த இடம். குமாஸ்தா இராசாமி ஐயராக கம்பெனியின் பழம் பெரும் நடிகர் சிவகங்கை நடராஜன் நடித்தார். மிகச் சிறந்த நடிகர் இவர். உருக்கமாக நடிப்பார். வறுமை நிறைந்த தமது குடும்பத்தைத் தவிக்கவிட்டு ஐயர் மரணமடையும் காட்சியில் நானே உள்ளேயிருந்து அழுவேன். அவையோரும் கண்கலங்குவார்கள். இக்காட்சியில் பெரும்பாலும் சபையோரின் ரசனையை நான் உள்ளிருந்தபடியே, எங்கள் ரகசியத் துளைகளின் வழியாகப் பார்ப்பது வழக்கம். இராஜபாளையம் ரசிகர்கள் இக்காட்சியில் தேம்பித் தேம்பியழுதார்கள். குமாஸ்தாவின் பெண் 20 நாட்கள் நடந்தன.

மதுரைக் கலவரம் ஒருவாறு அடங்கி விட்டதாகவும் தகவல் கிடைத்தது. இராஜபாளையம் நாடகத்தை முடித்துக் கொண்டு மதுரை வந்து சேர்ந்தோம்.